வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழ்ச் சித்த மருத்துவத்தின் வேத வடிவமே ஆயுர்வேத மருத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


சித்தமருத்துவத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் இடையிலான வேறுபடுகளும்,  ஏற்றத்தாழ்வும் சமூகமும் அரசும் இணைந்து உருவாக்கியவை. ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை, வேதமயமாக்கப்பட்ட சித்தமருத்துவம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது எல்லாவகையிலும், சித்தமருத்துவத்தை உள்வாங்கிச் செரித்துக்கொண்ட ஒரு மருத்துவமுறை.

ஓகக்கலை என்பது தான் பின்னாளில் யோகக்கலை என்று ஆயிற்று. யோகக்கலை என்றால் நமக்கு ஏற்படும் ஈர்ப்பு, ஓகக்கலை என்ற நம் சொந்தக்கலை மீது  உண்டாவது இல்லை. அதே போல, வர்மம் என்பதும் தமிழ் மருத்துவத்திற்கே உரிய சிறப்புக்கலை. இரசவாதமும் அவ்வாறே.

மருந்துச் செய்முறைகளில் உலோகத்தாதுக்களையெல்லாம் ஆயுர்வேதம் ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எடுத்துக்கொண்டது.  என்றாலும், மிகவும் நுட்பமான உயரிய செய்முறைகளைக் கோரும் கட்டு, களங்கு, மெழுகு, சுண்ணம் போன்றவை இன்னும் இன்றும் ஆயுர்வேதத்தில் கிடையாது. கட்டு என்பது உலோகங்களை இழைத்துப் பயன்படும் மருந்து வகையாக மாற்றுவது. இது ஒரு சாதாரண முறை அன்று. வேதியியல் முறை, நீண்ட மருந்துச்செயல்முறை. இரசவாத முறை. பக்கவிளைவுகள் இல்லாத வைத்திய முறை. நுண்ணியச் செயல்பாடுடையதாக மருத்துவ மூலப்பொருட்களை மாற்றுவது.

நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்ட லாகாப் பொருள் என்ப - தொல்காப்பியம் - 51

நோய் அல்லது துன்பம் என்பது பிறரால் எடுத்துக் காட்ட இயலாத பொருட்களுள் ஒன்றென்பதும், நோயென்பது எங்கும் எவ்விடத்தும் இலங்குவது என்பதும் காப்பியருடைய கொள்கை. இவ்வாறு தொல்காப்பியர் வழங்கும் முன்னரே நோய் பற்றிய கொள்கைகளும், தீர்க்கும் கோட்பாடுகளும் நம்மிடையே இருந்திருக்கின்றன.

ஆற்றல் நோய், அவல நோய், அருநோய், இன்னா நோய், உள் நோய், சுரந்த நோய், காழும் நோய், தணியா நோய், துன்ப நோய், துஞ்சா நோய், தொடர் நோய், படர்மணி நோய், பசப்பு நோய், பாயல் நோய், பிரிதல் நோய், பைதல் நோய், மருளறு நோய், மயங்கு நோய், விளியா நோய், வெப்ப நோய் என்ற சொற்கள் நம் இலக்கியங்களான நற்றிணை, கலித்தொகை நெடுகவும் காணப்படுகின்றன.

இந்திய அளவில் ஆயுர்வேதத்திற்கு இருக்கும் செல்வாக்கு, சித்தமருத்துவத்திற்கு இல்லை. காரணம் என்று எளிதாகச் சொல்லவேண்டுமென்றால், இயல்பாகவே மக்களுக்கு வெள்ளைத்தோலும் கருப்புத்தோலும் என்றால்  சட்டென்று வெள்ளைத்தோல் மேல் ஏற்படும் ஈர்ப்பு போன்றதே. ஆயுர்வேதம் சமஸ்கிருத மொழிமயமாக்கப்பட்ட தமிழ் மருத்துவம். அது எல்லா நிலைகளிலும் இடம் கொடுத்து இடம் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டதே அன்று அது அதுவே உருவானது அன்று, தானே உயர்ந்தது அன்று. சித்தமருத்துவத்தில் காணப்படும் சிறந்த கலை நுணுக்கங்களோ, நோய் அறியும் உத்திகளோ அந்த மருத்துவத்தில் இன்றும் கிடையாது.

வணிக ரீதியான நுகர்வுப் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல் அது மாற்றியமைக்கப்பட்டு, விடுமுறை போல ஓய்வுக்காலம் போல மக்கள் ஆயுர்வேதம் நோக்கிக் கேரளா சென்று தங்கி நிறைய தொகை செலவு செய்வதைப் பெருமையாகக் கருதுவதை நாம் அறிவோம். எப்போதுமே, காப்பியடித்தலுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுப்பது போல் தான் இதுவும்.

ஒப்பனை துறையை தன் வசப்படுத்திக்கொண்டு நவீன உலகத்தின் வர்த்தகச்சந்தையையும் தன்னுடையதாகக் கபளீகரம் செய்து கொண்டது ஆயுர்வேதம். ஆனால், அடிப்படை மருந்து செய் சமன்பாடுகள், மருத்துவ மூலப்பொருள்கள் எல்லாமே சித்தமருத்துவத்தினுடையவை. நாம் நமக்கானதை நமக்காகச் சரியாகப் பயன்படுத்தாதபோது, ஓர் அறிவு மரபு இப்படிச் சின்னாபின்னாமாகுவது இயல்பே.

ஆங்கில மருத்துவத்தில் பக்கவிளைவுகள் (Side Effects) முரண்பாடுகள்  (Contraindications) உடன் தான் ஒவ்வொரு மருந்தின் விவரத்தையும் சந்தையில் வெளியிடுகிறார்கள். ஆனால், அதுகுறித்து நாம் எந்தச் சந்தேகமும் எச்சரிக்கையும் கொள்வதில்லை. சித்தமருத்துவம் பற்றி எல்லோரும் அறிந்தோராய் அதன் பக்கவிளைவுகள் குறித்துப் பேசுகிறோம். 'பக்கவிளைவு', என்ற சொல்லே ஆங்கிலமருத்துவத்தினால் நம் வாயில் புரளும் ஒன்று.

அறுவை சிகிச்சை வரை சித்தமருத்துவத்தில் உண்டு. ஆனால், அதைச் செயல்படுத்தவதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பையும் பயிற்சியையும் வழங்கும் உள்நோக்கத்தை மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டிருக்கவில்லை.

சித்தமருத்துவம் என்றால் தமிழன் உலகிற்குக் கொடுத்த கொடை என்போம். ஆயுர்வேதம் என்றால் வேத காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டது என்று, சித்தமருத்துவத்தைச் சென்ற நூற்றாண்டின் கொடை ஆக்கிவிடுகிறோம். ஏதோ, தமிழருக்குச் சென்ற நூற்றாண்டில் தான் தமிழ் மொழி பிறந்தது போல.

நேற்று என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, ‘நீங்க நிலவேம்புக் குடிநீர் குடிச்சீங்களா?’, என்று கேட்டார். என் வீட்டில் சில அடிப்படையான தமிழ் மருந்துகளை எப்பொழுதும் வீட்டில் பின்பற்றுவோம், வைத்திருப்போம். ரிஷிகாவிற்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஆடாதோடை மணப்பாகு எப்பொழுதும் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. என் தம்பி வெளிநாட்டிற்குச் சென்ற போது நான் சொல்லாமலேயே, நிலவேம்புக்குடிநீர்ச் சூரணம் சிலவற்றை எடுத்துச் சென்றிருந்தது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.  சித்தமருத்துவம் வெறுமனே மருந்து அன்று. அது நம் வாழ்நெறியாகவும், நம் அன்றாடைத்தை உடலைப் பாதுகாக்கிற நம்முடன் உறைகிற மூதாதையாக மாறவேண்டும் என்பதே என் உள்நோக்கம்.

கவிஞர் குட்டி ரேவதி,
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /

2 கருத்துகள்:

  1. ஆயுர்வேத மருத்துவம் என்றாலே அது சித்த மருத்துவம்தான். ஆயுர்வேதம் என்று ஒரு மருத்துவப் பிரிவே கிடையாது. சித்தமருத்துவத்தில் மரம், செடி, கொடி, புல், பூண்டு, கிழங்கென தாவர வகைகள் அனைத்தையும் பயன்படுத்தி மருத்துவம் செய்தலும் மண், கல், இரசம், கனிமக் கலவைகள் என பயன்படுத்தி மருத்துவம் செய்தலும் தொட்டு, தட்டி, தடவி, நோக்கி, போக்கி மருத்துவம் செய்தலும் ஊர்வன பரப்பன ஓடுவன நீந்துவன நிற்பன என விலங்கின உயிரிகளைப் பயன்படுத்தி மருத்தவம் செய்தலும் வாழும் நிலம் சார்ந்தும் தொழில் சார்ந்தும் மருந்துக்கான கச்சாப் பொருட்களை மருந்து வடிவங்களை தேர்வு செய்து மருந்துகளை பொடி கசாயம் லேகியம் எண்ணெய் மெழுகு என உருவாக்கி உள்ளுக்கும் வெளியேயும் என மருந்து தந்து உடம்புக்கு மருந்தும் உள்ளத்துக்கு சடங்கும் செய்து தீர்க்கும் அத்தனைக் குணக்கூறுகளையும் கொண்டதுதான் சித்த மருத்துவம். போதாதென்று சூத்திரங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் தமிழ்ச்சித்த மருத்துவர்கள். அந்த தமிழ்ச்சூத்திரங்களை மொழிபெயர்த்தும் மொழிபெயர்க்க முடியாதவைகளை அப்படியே அவர்தம் வசதியாக எழுதிக்கொண்டு அழித்துவிட்டும் விலங்கினங்களை அதாவது நான்வெஜிட்டேரியன் மருந்துகளை பயன்படுத்தாது மற்ற எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டு அதனை ஆயுளுக்கான வேதம் ஆயுள்வேதம் ஆயுர்வேதம் என்று சொல்லிக் கொள்வதால் ஆயுர்வேதத்தை நாம் தனி மருத்துவ செறிவாகக் கொள்ள இயலாது. ஆயுள்வேதம் இல்லை அது சித்தமருத்துவமே.

    பதிலளிநீக்கு