திங்கள், 25 மார்ச், 2019

சுளுந்தீ: தமிழ்த் தேசிய சமூக வரலாற்றின் ஆகச் சிறந்த ஆவணம் :- இரெங்கையா முருகன், ஆய்வறிஞர்.

சுளுந்தீ :
மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின்
18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.
:- ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்.

உள்ளூர் வரலாறுகளையும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் வரையறைகளையும், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் காலத்தின் அரசியலில் ஊடாட்டமான இருண்ட பகுதிகளையும் தனது அயராத உழைப்பால் இனவரைவியல் வரலாற்று நாவலாக சுளுந்தீ அனலாகப் பட்டையைக் கிளப்புகிறது.

சித்தமருத்துவம் தமிழகத்தில் தொலைக்கப்பட்ட வரலாறும், பண்டுவர்களான நாவிதர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்தை வகித்தனர் என்பதும், தமிழ்ப் பூர்வக் குடிகளுக்கும் அரசாண்ட வந்தேறிக் குடிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை,சமாதானம், குடிமுறையிலிருந்து குல நீக்க முறைக்கும் உள்ள பிரத்யேகக் கூறுகளையும் அலசி ஆராய்கிறது சுளுந்தீ.

நாட்டுப்புற வழக்காறுகள், பக்கத்துப் பக்கம் தடுக்கி விழுந்தால் ஆய்வுப் பூர்வமாகப் பழமொழி மற்றும் சொலவடைகளை சமூகத்தோடு இயைந்த பார்வைகளும், ஆனந்த வருட பஞ்ச காலக் குறிப்புகள் தமிழில் இந்த அளவுக்குப் பதியப்படவில்லை.

புளியமரம் வந்த வரலாறு, வண்ணார் சமூகத்தாரின் வெள்ளாவியில் துணிகளை வைப்பதில் கூட வர்ண பேதம், கிணறு தோண்ட பூதம் வந்த கதை, கழுதை குறித்த சுவாரஸ்யமான சமூகக் கதையாடல்கள், தமிழ்ச் சமூகத்தில் மடங்களுக்கும் அரசுக்கும் உள்ள நுட்பமான தலையீடுகள், மயிருக்குள் நுழைந்திருக்கும் நுட்பமான சாதி வேறுபாடுகள், ஏராளமான சித்தா மருத்துவக் குறிப்புகள், மறைந்து கொண்டிருக்கும் வயதான பெண்கள் அணியும் தண்டட்டி அணிகலண், பழனி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் பகுதி சார்ந்த மக்கள் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்று இனவரைவியல் நாவல்.

இந்த நாவல் பல்கலைக் கழக வளாகப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய புத்தகம்.

சுளுந்தீ :மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின் 18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.

செவ்வாய், 19 மார்ச், 2019

நிலம் பூத்து மலர்ந்த நாள் : சுதாகர்

சர்வ நிச்சயமாக மனோஜ் குரூர்க்கு கடமை பட்டிருக்கிறது சங்கப் பழம்பெருமை பேசித்திரியும் தமிழ் இலக்கிய உலகம்.

அறிந்த அனைவரும் வெளிப்படுத்தியது போல் நாம் செய்திருக்க வேண்டிய ஒன்றை, நம்மிலும் சிறப்பாக சகோதரன் செய்துவிட்டார்.
நிலம் பூத்து மலர்ந்ந நாள்' கே.வி.ஜெயஶ்ரீயால் நிலம் பூத்து மலர்ந்த நாளாகிருக்கிறது வம்சியின் வழி.

கபிலர்- பாரி, அவ்வை-அதியமான், பரணர்-நன்னன் இவர்களின் கதையை ஒரு பாணர் குடும்பத்தின் தகப்பன், மகள் மற்றும் மகன் வழி வாசகனுக்கு நேரடியாக சொல்லப்பட்ட நாவலே நிலம் பூத்து மலர்ந்த நாள்.

ஒரு பாணர் கூட்டம் தன் பசி தீர்க்கவும் இளமையில் கூட்டத்தைவிட்டு வெளியேறிய தன் மகன் ஒருவனை கண்டடையவும் தாய்நிலம் விட்டு புகழ் விரும்பும் அரசர்களை தேடித் தொடங்குகிறது நாவலோடு தன் பயணத்தை.

நாவல் மூன்று காதையாக சொல்லப்படுகிறது. முதல் காதை கொலும்பன் தன்கதை வழி பாரியினுடையதையும், பின் அவன் மகள் சித்திரையின் வழி அதியமானுடையதையும், இறுதியில் தேடிவந்த மகன் மகிலன் வழி நன்னன் கதையையும் என்பதாக.

பாணர் குடியை சார்ந்த சாமான்ய மக்கள் மூவரின் வழி பெரும் புலவர் மூவரையும் அவர்கள் பாடி, காலத்தில் நிலைக்கப்பெற்ற சங்க அரசர்கள் மூவரையும் இன்று நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் மனோஜ்.
வாசகனுடன் நேரடி உரையாடல் வழி சொல்லப்பட்ட ஒரு நாவல் ஆகையால், இதன் வேகம் கட்டற்ற காட்டாற்றின் வேகத்துடன் வாசகனை தன்னோடு இழுத்துச்செல்கிறது.

சங்க கால நிகழ்வுகளாக பாடல்கள் வழி நாம் அறிந்த அனைத்து செய்திகளையும் அதன் பின்புலங்களுடன் காட்சிகளாக நம்முன் விவரிக்கிறார் மனோஜ்.எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நாமறியாத மறுபுறம் ஒன்றுண்டு என்பதே நாவலின் அடிநாதமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

நன்னன் மீது விழுந்த கொலைப்பழிக்கு பின்னுள்ள மகிலனின் சுயநல அரசியல், பாரியின் அழிவில் கபிலரின் பாடல்களின் பங்கு என நாம் புதுப்பார்வையை அறிகிறோம்.
நாவலில் விவரிக்கப்பட்டுள்ள நிலக்காட்சிகள், இயற்கையின் கூறுகள் விரிவான விஸ்தரிப்பாக இல்லை, இருப்பினும் அதன் இன்மை வாசகனின் கற்பனைத்திறனுக்கு வழிவிடுகிறது.

மனித வாழ்வின் வரலாறு என்பது கதைகளே. சம்பவங்களின் சேர்மானமே கதை. கதைகளின் தொகுப்பே நாவல்.அந்த வகையில் கண்ணிகளை மிக சிறப்பாக கையாண்ட நாவல் இது.மொழிபெயர்த்த நாவலா எனும் ஐயம் ஏற்படுகிறது, அந்தளவிற்கு ஜெயஶ்ரீ அவர்களின் உழைப்பை தந்துள்ள படைப்பு, நிச்சயம் நன்றிக்குரியவர்.
குறிப்பாக நாவல் முழுமையும் உள்ள உவமைகள் ஒரு சுகானுபவம் வாசகனுக்கு.

ஒளிப்படம் : நித்தியன்

நிலம் பூத்து மலர்ந்த நாள் : இலட்சுமி கோபிநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள். மிக நெடு நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நூல் உள்ளுக்குள்ளே வந்து உட்கார்ந்து...

சங்க இலக்கியப்பாடல்களின் வாயிலாக ஒரு சங்கத் தமிழ் வரலாற்றை, புதினமாக முன்வைக்கிறார் ஆசிரியர் மனோஜ் குரூர். என்ன ஒரு அற்புதமான முயற்சி. பெரும்பான்மையான தமிழ் படைப்பாளிகளுக்கும் தமிழ் அரசியல் செய்பவர்களுக்கும் வந்தேரி என்று பிறரைத் திட்டுவதற்காக மட்டுமே தமிழ் தேவையாயிருக்கிறபோது மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட திரு,மனோஜ் குரூருக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்தது என என்னால் ஆச்சரியத்திலிருந்து அகலவே முடியவில்லை. மொழி பெயர்த்த திருமதி.ஜெயஸ்ரீ மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர். 

இந்த நூலின் காலத்தையும் கதைக் களத்தையும் புரிந்து கொள்ள நாம் தமிழில் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் படிக்க வேண்டியதில்லை. எட்டாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை நாம் படித்த தமிழ் சங்கப் பாடல்களை கொஞ்சம் நினைவில் கொண்டாலே போதும் ஏனையவற்றை இந்த நூலே பார்த்துக் கொள்ளும்.

கதையின் நகர்வில் இரண்டு இடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இந்தக்கதை, கதை மாந்தர்களின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இடையில் அதியமான் போருக்குப் புறப்படும் காட்சி அப்போது வீரர்களுக்கான விருந்தில் அதியமான் மதுவை அருந்த முற்படுகையில் ஒரு மூதாட்டியின் குரல் அவனைத் தடுக்கிறது. அந்த மூதாட்டியாக அவ்வை வருகிறார். உண்மையில் அவ்வையின் அந்த அறிமுகத்தில் நான் அப்படியே சிலிர்த்துப் போனேன். நமக்கெல்லாம் சிறிது நேரமேனும் அவ்வையோடு வாழ்ந்துவிட்டு வரும் பேறு கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த நூலாசிரியர்கள்( மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்) வாயிலாக நமக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றொரு நிகழ்வு இந்தக் கதையின் நாயகி ஒரு படைவீரனைக் காதலிக்கிறாள். இருவரும் வேறு வேறு நாட்டை இனத்தை சேர்ந்தவர்களே. அவன், அவளை சிறிது பிரிந்து தன் நாட்டிற்குச் சென்று திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் செல்கிறான். அவள் காத்திருக்கையில் அவளது கூட்டத்தார் தாங்கள் இருக்கும் இடம் விட்டு வேறு இடம் செல்ல முடிவு செய்கிறார்கள். அவள், அவன் அங்கேதான் வருவான் என்பதற்காக வர மறுக்கிறாள். அப்போது என் மனது அவளது கூட்டத்தார் அவளை என்ன செய்யப் போகிறார்களோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
( பழகிய புத்தி) ஆனால் அந்தக் கூட்டத்தின் தலைவன் அவளிடம் வந்து எங்களுக்கு நீ அவனோடு பழகுகிறாய் என்றும் அவனுக்காகத்தான் வர மறுக்கிறாய் என்றும் தெரியும். ஆனாலும் நாங்கள் வேறு இடம் போகத்தான் வேண்டும். உனக்காக நாங்கள் அவன் வரும்வரை இங்கேயே உன்னோடு இருக்கிறோம் அவன் வந்த பிறகு நீ அவனுடன் செல். பின்னர் நாங்கள் இங்கிருந்து வேறு இடம் செல்கிறோம் என்று சொல்கிறார். அவளது தாய் கூட அவளது முடிவிற்குக் குறுக்கே நிற்கவில்லை. முக்கியமாக நீ எப்படி அவனை நம்பிப் பழகினாய் அவன் உன்னை ஏமாற்றிவிட்டால் நீ என்ன செய்வாய் உன் வாழ்க்கை என்ன ஆகும்?. நம் குடும்ப சமூக மரியாதை கவுரவம் எல்லாம் என்ன ஆகும் என யாரும் கொக்கரிக்கவில்லை. உனக்கு அப்படி என்ன வீட்டார் அறியாமல் மற்றொரு ஆணுடன் பழக்கம் வேண்டியிருக்கிறது என அவளைக் குதறவில்லை. ஏன் அறிவுரை கூட சொல்லவில்லை. அதை மிக இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  அவனே அவளைத் திருமணம் செய்து பின்னர் வேறு ஒரு பெண்ணோடு அவளறியாமல் வாழ்கிறான்.

இதை அறிந்த அவள் கூட்டத்தார் அவளிடம் அதை எடுத்துச் சொல்லி எங்களோடு வா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். அப்போதும் கூட நீயாகத்தானே ஏமாந்தாய் என ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆக, சங்க காலத்தில் பெண்களின் விருப்பம் என்பது தன் குடும்பத்தையோ கூட்டத்தையோ சார்ந்து இல்லை. பெண் ஆளுமைகள் அரசர்க்கே அறிவுரை கூறுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். கற்பைப் போலவே களவும் ஒரு ஒழுக்கமாகப் பார்த்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் எப்போது பெண் என்பவள் ஒரு உணர்வுள்ள ஜீவன் என்பதைத்தாண்டி ஒரு கைப்பொருளாய் மாறிப்போனாள் என்பதுதான் புலப்படவில்லை.( பொள்ளாச்சி உட்பட பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.)

இப்படி எவ்வளவோ......என் எண்ணத்தில் உள்ளதெல்லாம் எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது.
நான் எப்போதும் நூலை வாசிப்பதன் முன்னர் முன்னுரை வாசிப்பதில்லை. நூலை வாசித்த பின் முன்னுரை பொருந்துகிறதா எனப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நூலை வாசித்து முடித்த போது இது ஒரு கால இயந்திரம் என்றே எனக்குத் தோன்றியது. அதையே திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் தன் முன்னுரையில் எழுதியிருந்தார்.

திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு நூல் என்பதை முற்றிலும் மறக்கடிக்கக்கூடிய வகையிலானது. கிட்டத்தட்ட மூல ஆசிரியரே தமிழில் எழுதியது போல இருக்கிறது.

இந்த நாவல் நமக்கு பல கதவுகளைத் திறந்து விடுகிறது. நாம் கொண்டாட வேண்டிய நாவல். இதை அழுத்தமாய் பரிந்துரைத்த தம்பி சுதாகருக்கு என் அன்பும் நன்றியும்.

வெள்ளி, 15 மார்ச், 2019

மார்க்சிய இயங்கியல் நோக்கில் தனித் தமிழ் இயக்கம்: தோழர் தியாகு



இயங்கியல் நோக்கு என்றால் என்ன?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்திவ்வுலகு
(குறள் 336 – நிலையாமை)
என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் திருக்குறளின் மெய்யியல் கொள்கை. இது நிலையற்ற வாழ்வை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சாவைச் சொல்வது மட்டுமன்று. ஒருவன் நேற்று இருந்தது போலவே இன்றும் இல்லை. இன்றிருப்பது போலவே நாளையும் இருக்கப் போவதில்லை என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். மனிதர்க்கு மட்டுமல்ல மற்ற அனைத்துக்கும் கூட இது பொருந்தும். எதுவுமே நேற்றிருந்தது போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப் போவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாத விதி. இதுதான் இயங்கியலின் (dialectical) அடிப்படைக் கொள்கை.

உலக அளவில் புதுமக்கால இயங்கியலின் தந்தை என்று எர்னெஸ்ட் எகல் எனும் செருமானிய மெய்யியல் அறிஞரைச் சொல்வார்கள். கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் எகலின் இயங்கியலைத் தமதாக்கிக் கொண்டார்கள். ஆனால் எகலின் இயங்கியல் கருத்துமுதற்கொள்கை சார்ந்த இயங்கியலாக இருந்தது. அவரது இயங்கியலை மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதற்கொள்கையோடு இணைத்து, பொருள்முதல் இயங்கியலை நிறுவினார்கள். அதனை சமூக மாற்றத்துக்குப் பொருத்தினார்கள்.

நான் ஈண்டு இயங்கியல் என்று குறிப்பிடும் போதெல்லாம் பொருள்முதல் இயங்கியலையே, அதாவது மார்க்சிய இயங்கியலையே சொல்கிறேன்.
தனித்தமிழியக்கத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம், சொல்கிறேன். யாவும் மாறுகின்றன என்று சொன்ன எகலிடம் அவரின் இளம் மாணவர்கள் கேட்டார்கள்: ஐயா, எல்லாம் மாறும் என்றால் பிரஷ்யப் பேரரசும் மாறிப்போய் விடும்தானே? எகல் அதை மறுத்தார். இயக்கம் என்பது பிரம்மத்தின் செயல். பேரரசு பிரம்மத்தின் உலகியல் வடிவம், பிரம்மம் மாறாதது, எனவே மாமன்னராட்சியும் மாறாதது என்று சொல்லி விட்டார். இதை ஏற்க மறுத்தவர்கள்தாம் இளம் எகலியர்கள்.

பிரஷ்யப் பேரரசு போலத்தான் ஒவ்வொரு பேரரசும்! பிரித்தானியப் பேரரசு தன்னை அப்படித்தான் சொல்லிக் கொண்டது, எண்ணிக் கொண்டது, மக்களையும் அவ்வாறே எண்ண வைத்தது. இப்போது இந்தியப் பேரரசும் இதைத்தான் செய்கிறது. பிற்போக்கான வல்லாற்றல்கள் தம்மை நிலைபேறுடையவையாகக் கருதிக் கொள்வதோடு, மற்றவர்களையும் அவ்வாறே நம்ப வைக்கப் பார்க்கின்றன.

இயற்கையும் மனிதக் குமுகமும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பது போல் சிந்தனையும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. பிற்போக்கானவை மாறுவதால்தான் முற்போக்காகின்றன. முற்போக்கானவை என்றால் இனி மாறத் தேவையில்லை எனக் கருதி விட வேண்டாம். முற்போக்கானவை மாறாமல் தேங்கி விட்டால் பிற்போக்கனவை ஆகி விடும். இந்தக் கோணத்தில் பார்க்கும் போது சிந்தனை மரபுகளும் அவற்றுக்கான இயக்கங்களும் கூட மாறிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்க வேண்டும்.

இது தனித்தமிழியக்கத்துக்கும் அது முன்னிறுத்தும் கொள்கைகளுக்கும் எவ்வாறு பொருந்தும் என்று சற்றே எட்டிப் பார்க்கும் முயற்சிதான் எனதுரை.
எல்லாக் கொள்கைகளும் மக்களுக்கு அறிமுகமாவது குருதியும் தசையுமாகத்தான். மார்க்சிய இயங்கியல் என்றதும் அதன் ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும், பிறகு லெனினும் நம் நினைவுக்கு வருவார்கள், ஆனால் தனித் தமிழியக்கம் பற்றி அவர்களிடம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழே தெரியாது. ஆனால் தமிழ் தெரிந்த மார்க்சியர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மார்க்சியர்கள் என்பதாலேயே அவர்களிடமிருந்து வருவதெல்லாம் மர்க்சியமாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என்ற எச்சரிக்கையோடு அவர்களைக் கருதிப் பார்க்கலாம்.

தனித்தமிழியக்கம் குறித்து, அதன் தோற்றம் குறித்து நாம் படித்திருக்கும் இரு கதைகளிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

கதை ஒன்று: ஒருநாள் மறைமலையடிகளும், அடிகளின் மூத்த மகள் நீலாம்பிகை அம்மையாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது, அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள,

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்
உயிர் மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேன்

என்ற பாடலைப் பாடினாராம். அவ்வளவில் அடிகள் கூறினாராம்:

“நீலா, இப்பாட்டில் தேகம் என்ற வடசொல்லை நீக்கி, அவ்விடத்தில் அதற்கு விடையாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லிருக்குமானால், அவ்விடத்தில் செய்யுள் ஓசை இன்பம் பின்னும் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதால் தமிழ்தன் இனிமை குன்றுகிறது. அத்துடன் நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அப்பிறமொழிச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம்மருமை தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன. இவ்வாறே அயல்மொழிச் சொற்களை ஏராளமாக நம் மொழியில் கலந்து ஆண்டதால் நூற்றுக்கணக்கான வட சொற்களும் அயல்மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன. அதனால் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் மறைந்தே போயின.”

இது கேட்ட மகள் நீலாம்பிகை தந்தையாரைப் பார்த்து, “அப்படியானால் இனிமேல் நாம் அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வமுடன் கூறினாராம்.

மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்ற தந்தையார், சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் எனவும், தாம் நடத்திய ஞானசாகரம் என்னும் வெளியீட்டை அறிவுக்கடல் எனவும், சமரச சன்மார்க்க நிலையம் என்ற தம் மாளிகைப் பெயரைப் பொதுநிலைக் கழகம் எனவும் மாற்றிக் கொண்டாராம். அத்துடன் தம்பி திருஞான சம்பந்தத்தை அறிவுத் தொடர்பு என்றும், மாணிக்கவாசகத்தை மணிமொழி என்றும், சுந்தரமூர்த்தியை அழகுரு என்றும், தங்கை திரிபுரசுந்தரியை முந்நகரழகி என்றும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி அழைத்தாராம். அடிகளும் மகளும் எழுதும் போதும் பேசும் போதும், இது தமிழா அயல்மொழியா என்று ஒவ்வொரு சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்துச் சற்றும் வழுவாது தனித் தமிழில் எழுதியும் பேசியும் வந்தனராம். இப்படித்தான் தனித்தமிழியக்கம் தோற்றம் பெற்றது என்று சொல்வாருண்டு.

கதை இரண்டு:
தமிழகப் பொதுமை இயக்கப் பெருந்தலைவர்களில் ஒருவரான தோழர் ப. சீவானந்தம் தனித்தமிழில் பற்றுக் கொண்டு தம் பெயரை உயிரின்பன் என்று மாற்றிக் கொண்டாராம். ஆர்வத்தோடு மறைமலை அடிகளைப் பார்க்கப் பல்லவபுரம் சென்றாராம். வீட்டு வாசலில் அழைப்பு மணிப் பொத்தானை அழுத்த, உள்ளிருந்து “யார் போஸ்ட்மேனா?” என்று குரல் கேட்டதாம். தனித் தமிழியக்கத்துக்காரர்கள் வடமொழி நீக்கத்தில் காட்டும் ஆர்வத்தை ஆங்கில நீக்கத்தில் காட்டுவதில்லை என்றெண்ணி வெறுத்துப் போய் விட்டாராம். உயிரின்பனைக் கைவிட்டுப் பழையபடி சீவானந்தமே ஆகி விட்டாராம்.

இந்த இரண்டு கதைகளும் கற்பனையன்று, உண்மை என்றே கொள்வோம். நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பார்களே, அது போலத்தான் இதுவும். நியூட்டன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த போது மரத்திலிருந்து ஆப்பிள் விழக் கண்டார். ஆனால் அது அவர் தலையில் விழவில்லை. அது ஏன் மேல்நோக்கி எழாமல் அல்லது பக்கவாட்டில் செல்லாமல் நிலம்நோக்கி விழ வேண்டும் என்ற வினா அவருள் எழுந்தது. ஈர்ப்பு விசையைக் கண்டறிய இதுவும் ஒரு தூண்டுதல் ஆயிற்று. இது வரை உண்மை. ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்ச்சியால்தான் ஈர்ப்பு விதியை அவர் கண்டறிந்தார் என்பது சரியன்று.

மறைமலையடிகள் – நீலாம்பிகை உரையாடல் குறித்து, “தனித்தமிழியக்கத்தின் தோற்ற நிகழ்ச்சி சுவாரசியமானதாகவும், நாடகபாணி நெறிபட்டதாகவும் அமைகின்றது” எனக் கருதும் அறிஞர் சிவத்தம்பி, “மறைமலையடிகள் இத்தகைய நாடக நிலைப்பட்ட முறையில் தனித்தமிழியக்கத்தைத் தோற்றுவித்தாரென்று கூறுவதிலும் பார்க்க, பல காலமாக உள்ளத்துள் அறிவுசெல் நெறியில் கருவிட்டு உருப்பெற்று வளர்ந்து வந்த ஒரு கருத்து மேற்குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இயக்கப் பரிமாணம் பெற்றது எனக் கூறுவதே பொருத்தமானதாகும்” என்று முடிவு செய்கிறார். தனித்தமிழ் இயக்கம் குறித்த சிந்தனை அடிகளாரிடம் பரவியிருந்தாலும், இயக்கமாக உருப்பெறுவதற்கு நீலாம்பிகை அம்மையாரிடம் நிகழ்த்திய உரையாடலும் காரணம் என்பதை சிவத்தம்பியிடமிருந்து அறிய முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச் சூழலில், தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார் என்பதே சிவத்தம்பியின் பார்வை.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் போலவே தனித்தமிழ் இயக்கப் பிறப்புக்கும் அடிப்படைக் காரணம், உடனடிக் காரணம் இரண்டும் உண்டு என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தனித்தமிழியக்கத்தை முழுக்க ஏற்றவர் அல்லவென்றாலும் அவ்வியக்கத் தோற்றம் பற்றிய அவரது பார்வை வரலாற்று இயங்கியல் நோக்கில் அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

தோழர் சீவானந்தம் ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு தனித்தமிழியக்கம் குறித்து இறுதியாக ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பார் என்பதும் நம்பக்கூடியதன்று. தமிழ்நாட்டு மார்க்சியர்களில் சீவானந்தம் சற்று மாறுபட்டவர் என்று கருதப்பட்டாலும், தனித்தமிழியக்கம் குறித்து அவர்களிடமிருந்து அடிப்படையிலேயே மாறுபட்ட ஒரு பார்வை அவருக்கிருந்ததா என்பது ஆய்வுக்குரியது. இந்தியத் தேசியத்துக்குள் ஒடுங்கி விட்ட தமிழக மார்க்சியர்களின் பார்வைதான் சரியான மார்க்சியப் பார்வையா என்பதும் கூட ஆய்வுக்குரியதே.

மொழித் தூய்மைக்கான இயக்கம் தமிழுக்கு மட்டுமே உரித்தானதன்று. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து இவ்வாறான முயற்சிகள் நடைபெறவே செய்தன. இவை குறித்து மார்க்சியப் பேராசான்கள் என்ன கருதினார்கள் என்று பார்க்க வேண்டும்.
கார்ல் மார்க்சின் தாய்மொழியான ‘டொச்’ எனும் செருமன் மொழியில் இலத்தீன் மற்றும் கிரேக்கச் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. போப்பாதிக்கத்தை எதிர்த்து புரொட்டஸ்டண்ட் சமயத்தை நிறுவிய மார்டின் லூதர் இம்மொழிக்கலப்பை எதிர்த்தார். கார்ல் மார்க்சும் பிறமொழிக் கலப்பை எதிர்ப்பவராகவும் மொழித் தூய்மையை வலியுறுத்துகிறவராகவும் இருந்தார். மார்க்ஸ் தமது மூலமுதல் (தஸ் கேபிட்டல்) நூலுக்கான ஆய்வுகளை பிரித்தானியாவில் மேற்கொண்டவர்; பொருளியல் அறிவியலில் அவருக்கு முன்னோடிகளான ஆதாம் சுமித், டேவிட் ரிக்கார்டோ போன்றோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள்; மார்க்ஸ் ஆண்ட ஆய்வுத் தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தன; இத்தனையையும் மீறித்தான் அவர் தமது பெரும்படைப்பாகிய தஸ் கப்பிடல் (மூலதனம் அல்லது மூலமுதல்) நூலைத் தமது தாய்மொழியாகிய செருமன் மொழியில் எழுதினார். அந்த அறிவியல் அம்மொழியில் போதிய வளர்ச்சி பெறாத நிலையில் கலைச் சொற்களுக்கிருந்த கடும் தட்டுப்பாடு பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். மார்க்ஸ் செருமன் மொழியில் மூலமுதல் படைத்தார் என்பது மட்டுமல்ல, இயன்ற வரை பிறமொழிக் கலப்பில்லாமலே அதைச் செய்தார். தவிர்க்க முடியாதவாறு வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்த நேரிட்ட போதும் அதற்காக வருத்தப்பட்டார். சில புதிய கருத்தாக்கங்களை வெளியிடும் இன்றியமையாத் தேவை கருதி இலத்தீன் மொழியிலும் கூட புதிய தொடர்களைப் புனைந்தார். இவ்வாறான பிறமொழி உட்கலத்தலை அரிதிலும் அரிதாகவே அவரிடம் காண முடியும்.

உருசிய மொழியில் செருமன், பிரெஞ்சு மொழிகள் அளவின்றிக் கலந்து கிடந்தன. தமிழர்களின் வடமொழி மயக்கம் போல், ஆங்கில மயக்கம் போல், உருசிய மேட்டுக் குடியினர் பிரெஞ்சு மயக்கம் கொண்டலைந்தனர். உலோமொனசோவ், அலெக்சி தோல்ஸ்தோய் போன்ற அறிஞர்கள் உருசிய மொழித் தூய்மையை வலியுறுத்தியவர்கள். உருசிய மொழியில் தலைசிறந்த புரட்சி இலக்கியராகத் திகழ்ந்த மக்சிம் கார்க்கி மொழித் தூய்மைக்கான போராட்டத்தை பண்பாட்டுக் கருவிக்கான போராட்டமாகவே மதித்தார். புரட்சித் தலைவர் இலெனின் பிறமொழிக் கலப்பை உறுதியாக எதிர்த்தவர்.

“நாம் உருசிய மொழியைக் கெடுக்கிறோம். தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றையும் தவறாகப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிறமொழிச்சொற்கள் என்னை எரிச்சலுறச் செய்கின்றன” என்று கூறிய இலெனின் “உருசிய மொழிச் சிதைப்பிற்கு எதிராகப் போர் தொடுக்க இது உரிய நேரமல்லவா?” என்று கேட்டார்.

எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிக் கலப்பைத் தவிர்ப்பதில் குறியாய் இருந்த இலெனின் “மக்களிடத்தில் இலத்தீன் கலப்பின்றி எளிய முறையில் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
தேசியக் குமுகாயத்தின் ஆக்கக்கூறுகளில் முதன்மையானது மொழி. தொடர்பு ஊடகம், சிந்தனையூர்தி என்பதையெல்லாம் காட்டிலும் மொழிதான் குமுக வாழ்வின் ஊடகம். மனிதன் குமுகப் பிராணி என்பதால் மனிதனை மனிதனாக்குவது மொழி. மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு பற்றிப் பேசும் எங்கெல்சு “கை என்பது உழைப்பின் உறுப்பு மட்டுமல்ல, உழைப்பின் படைப்புமாகும்” என்பார். அதே போல் மொழியும் குமுக வாழ்வின் கருவி மட்டுமன்று, குமுக வாழ்வின் படைப்புமாகும். மனிதர் மொழியைப் படைத்தார், மொழி மனிதரைப் படைத்தது என்று நான் சொல்வதுண்டு. ஆதிமனிதக் கூட்டம் ஒவ்வொன்றிலும் ஓசைகளாகப் பிறந்து, தெளிந்த ஒலிக்குறிப்புகளாக உருப்பெற்று, திசைமொழியாக வளர்ந்து, ஒலிவடிவத்தோடு வரிவடிவமும் பெற்று மொழி முழுமையடைகிறது. இது மொழிப் பிறப்பின் இயங்கியல். குலம் அல்லது பழங்குடியை ஒன்றாக்கும் காரணிகளில் குருதியுறவோடு மொழியும் சேர்ந்து கொள்கிறது. அருகருகிலான பழங்குடிக் குலங்கள் ஒன்றுகலந்து அவற்றின் திசைமொழிகள் ஒரே மொழியாக ஒன்றுகலக்கும் போது, குருதியுறவுக்கு மாற்றாக ஒரு பொதுமொழியே குமுகாயத்தை ஒன்றாக்கும் முதன்மைக் காரணி ஆகிறது. மொழிவழிக் குமுகாயமே தேசிய இனத்தின் கருநிலை எனத்தகும். மொழியோடு ஆட்சிப்புலமும் பண்பாடும் பொருளியல் பிணைப்பும் சேர்ந்து வரலாற்றுப் போக்கில் நிலைபெறும் போது தேசிய இனம் மலர்கிறது.

இந்தத் தேசிய இன உருவாக்கம் அயற்குறுக்கீடற்றதாக அமையும் போது பேச்சு மொழி, எழுத்து மொழி, வட்டார மொழி, கலை மொழி போன்ற பன்முகங்கள் வெளிப்பட்டாலும் பிறமொழிக் கலப்புக்கு வாய்ப்பு அரிது. ஆனால் வெவ்வேறு மொழிவழிக் குமுகாயங்கள் ஒன்றுகலந்து ஒரு தேசிய இனமாக உருப்பெறும் போது அதன் பொதுமொழி ஒரு கலவைமொழியாக அமைந்து காலப்போக்கில் அதுவே ஒரு தனிமொழியாக நிலைபெறுகிறது.

பிரெஞ்சு, ஸ்பானியம் போன்ற மொழிகளின் கூறுகளை உள்ளிணைத்துக் கொண்டு பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செயல்வழியில் அமெரிக்க ஆங்கிலமாக மருவிற்று.

தென்னாப்பிரிக்காவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய வெள்ளையர்கள் (ஆங்கிலேயர்கள் அல்லர்) செருமனி, ஆலந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழிகள் புதிய
வாழ்க்கைச் சூழலில் ஒன்றுகலந்து ஆப்பிரிக்கான்ஸ் என்ற புதிய மொழி தோன்றியது. ஆப்பிரிக்கான்ஸ் பேசிய வெள்ளையர்கள் ஆப்பிரிக்கனர்கள் எனப்பட்டனர்.

இந்த நேர்வுகளில் மொழிக்கலப்பு என்பது வரலாற்றுப் போக்கில் இயல்பாக நிகழ்வுற்று, மானிட வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் கருவியாயிற்று.

ஆனால் மொழிக் கலப்பில் மற்றொரு வகை ஒடுக்குமுறையால் பிறந்து ஆதிக்கத்துக்குக் கருவியாகிறது. இது நலம்பயக்கும் கலப்பன்று, கேடு செய்யும் கலப்படம் எனலாம்.
தமிழில் ஏற்பட்ட பிற மொழிக்கலப்புகள் அடிப்படையில் அயலாதிக்கத்தினால் ஏற்பட்டவை.

ஆரியர்களால் வடமொழியும் ஆங்கிலேயர்களால் ஆங்கிலமும் தமிழில் கலப்புற்றன. இந்தி, பாரசீகம், உருது, தெலுங்கு போன்றவற்றின் கலப்பும் அரசியல் மேலாதிக்கத்தின் துணையோடு நிகழ்ந்ததே. தமிழில் பிறமொழிக் கலப்புக்கு எதிரான போராட்டம் என்பதன் சாரம் வேற்றின ஆதிக்கத்துக்கான எதிர்ப்பாகவே இருந்துள்ளது. ஆகவே தனித்தமிழியக்கம் என்பது வெறும் மொழிசார்ந்த முயற்சி என்பதற்கும் மேலே, இறுதிநோக்கில் தமிழின விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

வல்லாதிக்க எதிர்ப்புத் தேசியங்களுக்குள்ள சனநாயக உள்ளடக்கம் பற்றி இலெனின் பேசினார். இவ்வகையில் இந்தியத் தேசியத்துக்கும் தமிழ் மக்களை வல்லாதிக்க எதிர்ப்புக்கு அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களும் பாவலர்களும் எழுத்தாளர்களும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து – முதன்மையாக வடமொழி, ஆங்கிலக் கலப்புகளை எதிர்த்து – தமிழ்மொழித் தூய்மைக்காக உழைத்தார்கள். அந்த அளவில் அவர்களது முயற்சியில் தமிழ்த் தேசியமும் விதையாக உள்ளிருக்கக் காணலாம். பாரதியார், திரு.வி.க., போன்றவர்களின் உருவில் வெளிப்பட்ட தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசியத்தின் சனநாயக உள்ளடக்கம் என்பது அயலாதிக்க எதிர்ப்புக்கு இணையாக உள்ளாதிக்க எதிர்ப்பையும் கோரி நிற்கிறது. இங்கேயும் மொத்தத்தில் பிறமொழிக் கலப்பு ஆதிக்க ஆற்றல்களின் தேவையாகவும், மொழித்துய்மைக்கான முயற்சிகள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் போரட்டத்தின் கூறாகவும் அமைகின்றன. ஆக, நாட்டு விடுதலைக்காக முனைந்து நின்றவர்களைப் போலவே, சமூக விடுதலையில் நாட்டம் கொண்டிருந்தவர்களும் பிறமொழிக் கலப்புக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்களாக விளங்கினார்கள்.

தந்தை பெரியார் கொள்கையளவில் தனித்தமிழியக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், செயலளவில் அவ்வியக்கத்துக்குத் துணைநின்றவர். சுயமரியாதையைத் தன்மதிப்பாக மாற்றிக் கொள்ளா விட்டாலும், தாம் நிறுவிய ஏடுகளுக்குக் குடியரசு என்றும் விடுதலை என்றும் பெயர் சூட்டியவர். பெரியாரை விடவும் பெரியார் வழிவந்த பலரும் — பொன்னம்பலனார், பாரதிதாசன் போன்றோர் — தனித்தமிழ்த் துடிப்புடன் விளங்கினார்கள். தனித்தமிழியக்கத்தை நிறுவி வழிநடத்திய மறைமலை அடிகளின் சைவப்பற்று அனைவரும் அறிந்ததே என்றாலும், அவரோடு பெரியார் தமிழ் மீட்பு முயற்சிகளில் இணங்கியும் இணைந்தும் செயல்பட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போரில் தமிழர் தலைவர் பெரியாரின் தலைமையில் அடிகளாரும் பிற தமிழறிஞர்களும் அணிதிரன்டதும், அப்போராட்டத்தின் உச்சப்புள்ளியாக, பெரியார், சோமசுந்தர பாரதியாருடன் சேர்ந்து மறைமலை அடிகளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியதும் தன்மதிப்புக்கும் தனித்தமிழுக்குமான இயக்க உறவின் சான்றுகள்.

இந்தியத் தேசியமும், தமிழ்த் தேசியமும், சமூக நீதி என்னும் குமுக அறமும் ஆகிய குறிக்கோள்கள் அதனதன் வரலாற்று வரம்புகளுக்குள் தனித்தமிழியக்கத்துக்கான புற அடிப்படைகளாக அமைந்தன என்று சொல்வது தனித்தமிழியக்கத்தின் மொழிசார் அகவரலாற்றை மறுப்பதோ மறைப்பதோ ஆகாது. பாவாணர் சொல்கிறார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

சுருங்கச் சொல்லின் இதுதான் தனித் தமிழியக்கத்தின் அகவரலாறு. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவாணர் – தனித்தமிழ் மலைத் தொடரின் உயர்முகடுகள் என்ற இந்த வரிசையில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தனித்தமிழியக்க வளர்ச்சியின் புற ஏரணத்துக்கும் அக ஏரணத்துக்குமான இயங்கியல் உறவை மார்க்சியம் பற்றி நிற்கிறது.
தனித்தமிழியக்கத்தைக் குமுகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆய்வு செய்த அறிஞர்களில் கைலாசபதியும் கா. சிவத்தம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். கைலாசபதி சொல்கிறார்:

“இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ள அறிவியல், சட்டம், ஆட்சித்துறை, வணிகவியல் தொடர்பான் பல கலைச் சொற்பட்டியல்களை ஆராய்ந்தால், கலைச்சொல்லாக்கத்தில் தனித்தமிழியக்கம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தோன்றுகிறது. மறைமலையடிகள் தமிழும் அவரால் தாக்குறப்பெற்றவர்கள் தமிழும் இக்காலத் தமிழ்மொழியில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.”

இதே கைலாசபதி இப்படியும் சொல்வார்: “தொல்சீர்த் தமிழைக் காப்பதோடு தமிழை வடமொழிக் கலப்பில்லாததாகவும் ஆக்க வேண்டும் என்ற வேதாச்சலத்தின் முயற்சி இரட்டைப் பிற்போக்கானது. அது செயற்படுத்த முடியாத ஒரு பணி.”

சிவத்தம்பி சொல்வார்: “மறைமலையடிகள் தமது பிராமண எதிர்ப்பியக்கத்தைத் தமிழின் தொன்மையான தூய்மையைக் கெடுக்கும் ஒரு சமூக சக்திக்கெதிரான ஓர் இயக்கமாகவே கொண்டாரென்பது தெரிய வரும். பிராமண எதிர்ப்பியக்கமானது திட்டவட்டமான ஓர் அரசியல் இயக்கமாக முகிழ்த்துக் கிளம்பிய பொழுது, அந்த அரசியல் சக்தியின் வளர்ச்சிக்கு இவரது கருத்து, செயல், நடவடிக்கைகள் உதவின. இத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கும் போது தனித்தமிழியக்கம் பழமையைப் பேணும் ஓர் இயக்கமாகவே தொழிற்பட்டது என்பது தெரிய வரும்.”

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் அறிவும் உழைப்பும் போற்றுதலுக்குரியவை என்பதில் நமக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் தனித்தமிழியக்கம் பற்றிய அவர்களின் தீர்ப்பில் அவர்கள் பெரிதும் வலியுறுத்தும் சமூக அறிவியல் பார்வையைக் காணவில்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொல்சீர் தமிழை மீட்கவும் காக்கவும் வேண்டும் என்பது மட்டுமன்று, காலத்தின் தேவைகளுக்கேற்ப வளர்க்கவும் வேண்டும் என்பதுதான் தனித்தமிழியக்கத்தின் நிலைப்பாடு, இந்தப் பணியை அது வெற்றிகரமாகச் செய்தும் உள்ளது. கலைச்சொற்களைத் தமிழாக்கும் போது தொன்மைத் தமிழ் எப்படியெல்லாம் துணைக்கு வரும் என்பதற்கு சொல்லாய்வறிஞர் அருளியாரின் கலைச்சொல் அகரமுதலி ஓர் அரும்பெரும் எடுத்துக்காட்டு.

மொழிமீட்புக்கும் மொழிக்காப்புக்கும் மொழிவளர்ச்சிக்குமான இயங்கியல் உறவை கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களால் காண முடியவில்லை எனத் தோன்றுகிறது. தனித்தமிழியக்கம் தேவையற்ற பிறமொழிக் கலப்பை வன்மையாக எதிர்க்கும் போதே, தேவை கருதிப் பிறமொழிச் சொற்களையும் தொடர்களையும் தமிழ் மரபு கெடாமல் தன்வயமாக்கிக் கொள்ளத் தயங்குவதில்லை. தனித்தமிழ் இயக்கம் என்பதைத் “தனித்து அமிழ் இயக்கம்” எனப் புரிந்து கொள்ள வேண்டாம்! பேராசிரியர் இளவரசு ஒரு முறை இப்படிக் கூறியதாக நினைவு!

தமிழில் பிறமொழிச் சொற்களைச் சிறும அளவில் ஆளும் தேவை என்பது நிலைபேறுடையதன்று. காலப்போக்கில் விரைந்து அவற்றையும் தூய தமிழாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். அப்படிச் செய்யும் போதே கலை-அறிவியல் வளர்ச்சி காரணமாய் வேறுசில பிறமொழிச் சொற்கள் வந்து சேரலாம். அவற்றையும் தூயதமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி தொடரும். அதாவது தனித்தமிழ் என்பது முடிந்த முடிவன்று. இயங்கியல் நோக்கில் அது தொடர்ச்சியான செயல்வழி. தமிழ்க் குமுக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான செயல்வழி.

பாய்ந்தோடும் உயிராறு தனித்தமிழ் இயக்கம். அதனைத் தேங்கிய குட்டையாகப் பார்ப்பது இருவிதமான பிறழ்வுகளுக்கு வழிசெய்கிறது. ஒன்று, பிறமொழி வாயிலாகக் கிடைக்கும் அறிவுச் செல்வத்தை உள்வாங்கித் தமிழைச் செழுமைப்படுத்தும் தேவையை மறுத்து, எல்லாம் தமிழில் உள்ளது என்ற குருட்டு இறுமாப்பு. இரண்டு, எல்லாவற்றையும் தமிழால் வெளிப்படுத்த முடியும், முடியுமாறு தமிழர்களால் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளாமல், பிறமொழிகளை நத்திக்கிடக்கும் அடிமைக்குணம். இந்த இரு பிறழ்வுகளையும் மார்க்சியம் உறுதியாக மறுதலிக்கிறது. இந்தப் பிறழ்வுகளைக் களைந்து தனித் தமிழியக்கத்தை தமிழ் நலன் கருதியும் தமிழர் நலன் கருதியும் முன்னெடுத்துச் செல்ல இயங்கியல் நோக்கு நமக்குதவும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமகன் என்றாலும் தனித்தமிழை ஏற்றவரல்லர். “ஏழை வேலைக்காரனைப் பார்த்து ‘சோறு தின்றாயா? என்று கேட்கலாம். கனவானைப் பார்த்து ‘போஜனமாயிற்றா? ‘நிவேதனம் ஆயிற்றா?என்று கேட்பதும், துறவிகளைப் பார்த்து ‘பிக்ஷை ஆயிற்றா? என்று கேட்பதும் சம்பிரதாயங்கள் என்று உ.வே.சா. சொல்வது அவரது குமுகக் சார்பை மட்டுமின்றி, இதற்கு நேர்மாறான தனித்தமிழின் குமுகச் சார்பையும் சுட்டி நிற்கிறது.

“வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வர மாட்டேன் என்கிறது என்று சங்கரச்சாரியார் கூறியதையும் இப்போதைய நிலவரத்தையும் ஒப்புநோக்கினால் போதும், தனித்தமிழியக்கத்தின் வெற்றி புலனாகும். அவர் காலத்திலேயே வானொலி கேட்டுத் தொலைக்காட்சி பார்த்திருப்பார். நீசர்களும் ஏறும் பேருந்து ஏறினாரா, தெரியவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியாரும் பேராயக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி ஐயரும் மட்டுமல்ல, நாமக்கல் கவிஞரும் வையாபுரிப் பிள்ளையும் ம.பொ.சி.யும் கூட தனித்தமிழியக்கத்தின் தேவையை மறுக்கவே செய்தார்கள். வடமொழிக் கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வடமொழிக் கலப்பு ஒரே நாளில் நிகழ்ந்ததன்று என்பதால் கலப்பு நீக்கமும் ஒரே நாளில் நடந்து முடிந்து விடாதுதான்.

ஆனால் அதற்கு முயற்சி, நீண்ட முயற்சி, விடாப்பிடியான முயற்சி தேவை. இந்த அறிஞர்கள் முயற்சிக்கு மாறாக முயற்றின்மையில் மூழ்கிக் கிடந்தார்கள். முயற்சியில் ஈடுபடும் மற்றவர்களையும் பழித்துரைத்தார்கள். தனித்தமிழ் திடுமென்று வானின்று குதித்ததன்று என்பதால்தான் இயக்கம் தேவைப்படுகிறது. பிறமொழி மயக்கம் என்ற நோய்க்கு மருந்து தனித்தமிழ் மயக்கம் அன்று, தனித்தமிழ் இயக்கமே என்பதில் தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தெளிவுண்டு.

“சுவாமி வேதாசலம் (மறைமலையடிகள்) சம்ஸ்கிருத எதிர்ப்பாளரே தவிர ஆங்கில எதிர்ப்பாளரல்ல என்று தோழர் பாலதண்டாயுதம் சொல்வது தனித்தமிழியக்கம் பற்றிய முழுமையான பார்வை ஆகாது. பாலதண்டாயுதம் சம்ஸ்கிருத எதிர்ப்பாளரும் அல்ல, இந்தி எதிர்ப்பாளரும் அல்ல, ஆங்கில எதிர்ப்பாளரும் அல்ல என்று நம்மாலும் சொல்ல முடியும். இந்திய மயக்கத்தாலும் தமிழியத்தின் பால் எதிர்ப்பாலும் வழிதவறிப்போன பொதுமை இயக்கத்தின் தடுமாற்றம்தான் பாலதண்டாயுதத்திடமும் வெளிப்படுகிறது.

தனித்தமிழியக்கத்தின் மீதான குற்றாய்வுகளைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் தக்க விடையளிக்கிறார் முனைவர் கு.திருமாறன் (நூல்: தனித்தமிழியக்கம். இக்கட்டுரைக்கான தரவுகள் பெரும்பாலும் இந்நூலிலிருந்து பெற்றவையே.)
மார்க்சியர்களாக அறியப்பட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் தனித்தமிழியக்கம் பற்றிய பார்வையில் சற்றே மாறுபட்டு நின்றவர் தோழர் சீவானந்தம்தான். தனித்தமிழியக்கத்தைப் பிற்போக்கானது என்று முத்திரையிடும் பொன்னீலனின் பார்வைக்கு சீவா உதவ மாட்டார். சீவா சொல்கிறார்:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ் மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழிவெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக் கூடாது…. கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான எளிய தமிழிலே, எளிதாகப் புரியக் கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டுவருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப் போக்கு சரியே.

சீவா சொல்வது சரியே! ஆனால் மார்க்சிய நோக்கில் இது முழுமையானதன்று. வர்க்கப் போராட்டம், அதன் வடிவங்களான சனநாயகப் போராட்டம், தேசிய இனவுரிமைப் போராட்டம் ஆகியவற்றின் பின்புலத்திலும், மொழித் தூய்மைக்கான நீண்ட நெடிய முயற்சியின் இயல்புத் தொடர்ச்சியாகவும் தனித்தமிழியக்கத்தை நிறுத்திப் பார்க்க விடாமல் அவரைத் தடுத்தது எது? இந்தியத் தேசிய மயக்கமும் இந்தியத் தேசியத்துக்கு மாறான ஒவ்வொன்றின் பாலும் அவர் கொண்ட காழ்ப்பும்தானே?


(தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ்த் தேசம்)
thozharthiagu.chennai@gmail.com