செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழைத் தாழ்த்தும் நாகசாமிகள் விவாதத்திற்கு வரத் தயாரா? :- மொழியியல் அறிஞர் மா.சோ.விக்டர்.



“இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒத்துக் கொள்ளமாட்டார்கள், சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலி கொண்ட சொற்களை அளந்து பார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதல் சொற்களை, அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பினும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுகள், எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை, இங்கு மங்கும் படிக்கும் போது தெளிவாகத் தெரியும்.” - வீரமா முனிவர்.1

300 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் பற்றி, வீரமாமுனிவர் எழுதி வைத்த குறிப்பு இது!

“தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தில் எனது பணிகள் என்பது, கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல”.

“எனது கருத்தே அல்ல: திருக்குறள் வேதங்களிலிருந்து வந்தது” என்று நான் தெரிவித்ததாக, ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வையல்ல. எனக்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்தாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப் பெரிய அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லிஸ், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தக்கத்தில், பகவத் கீதையை, திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ் அறிஞர்களின் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி, மு.க. ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலகத் தமிழ் அறிஞர்கள் மத்தியில், அவர் தமிழ் மொழி குறித்து தனது அறியாமையை வெளிபடுத்திவிட்டார்.”

- தினமணி, 08.03.2019.

மேற்கண்ட மறுப்பு அறிக்கை, தமிழ்நாடு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

திரு. மு.க. ஸ்டாலினுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என்ற மிகப்பெரிய உண்மையை, திரு. நாகசாமி கண்டுபிடித்துவிட்டார் எனலாம். திருக்குறள், பகவத் கீதையின் வழி நூல் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்கள் கூறியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட அறிஞர்களில் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மட்டும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டவர். மற்றவர் அனைவரும், கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் கூறிய செய்திகளை, திரு. நாகசாமி தெரிவிக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பாதிரியர் பெஸ்கி, அந்தணர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு, திரு. நாகசாமி அவர்களுக்கு பொருந்தும். பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், தம் வாழ்நாளில் படைத்துள்ள 36 நூல்களில், திருக்குறள், பகவத்கீதையின் வழிநூல் என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுப் பொய்யைக் கூறி, திரு. நாகசாமி, இல்லாத சான்றுகளை, இருப்பதாகக் கூறுகிறார்.

எல்லிஸ், ஜி.யு.போப் ஆகிய இரு ஐரோப்பியர்களும் தமிழின்பால் பற்று கொண்டவர்கள். கால்டுவெல்லைப் போல், சமற்கிருதத்தால் தமிழ் வளம் பெற்றது, சமற்கிருதத்தின் உதவியின்றி, தமிழால் தனித்தியங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாகப் பதிவுகள் இல்லை. எல்லிஸ், திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தாதவர்.

திரு. உ.வே. சாமிநாதய்யரைப் பற்றி முரண்பாடான செய்திகள் உள்ளன. ‘தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் போற்றப்படும் திரு. உ.வே.சா வின் மறு பக்கம் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்றனர். புறனானூற்றுப் பாடல் ஒன்றில், மூலத்தையே அவர் திருத்தியிருப்பது, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 2.

‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்று நூலில், பெருமாள் கோயில் இருப்பதால், அரியலூர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1830களில், ஆங்கிலேயர் வெளியிட்டுள்ள கெசட்டில், அரி என்ற சொல்லுக்குப் பனைமரம் என்றும், பனை மரங்கள் மிகுந்திருந்ததால், அவ்வூர், அரியலூர் என்று சொல்லப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவை வணங்கி வந்த நடைமுறை, சங்க காலத்திலேய இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “படைத்தோன் மன்ற அப்பண்பிலான்” என்ற புறநானூற்று வரியில் உள்ள, படைத்தோன் என்ற சொல்லுக்கு, பிரம்மன் என்று உரையெழுதியுள்ளார். இவ்வுலகில் படைத்ததாகக் கூறப்படும் இறைவன் பண்பில்லாதவன் என்று, பக்குடுக்கையார் சாடுகிறார். பண்பில்லாத கடவுளாக, பிரம்மனை திரு. உ.வே.சா கூறுகிறாரா என்று தெரியவில்லை.

‘பிள்ளையார் வணக்கம்’ சங்க காலத்திலேயே இருந்தது என்று மற்றொரு உண்மைக்கு மாறான தகவலை, திரு. உ.வே.சா முன் வைக்கிறார். உ என்ற எழுத்து பிள்ளையாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார் 5. தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தைக் கொச்சைப்படுத்தும் விளக்கம் இது!

தமிழ் இலக்கியங்கள், உலகம் என்ற சொல்லை முதன்மைப்படுத்தியே, தொடங்குகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால இலக்கியங்கள் வரை இந்நடை பொருந்தும்6. பிற்காலத்தில், உலகம் என்ற சொல்லைச் சுருக்கி, உ என்ற எழுத்தை மட்டும், தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். பிள்ளையார் வணக்க முறை, பல்லவர் காலத்திலிருந்து தொடங்குவதாக வரலாறு கூறுகிறது.

முரண்பாடான செய்திகளைத் தரும் திரு. உ.வே.சாவை, திரு நாகசாமி, தன் கருத்துக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று, ஆய்வுகள் மலர்ந்து, உண்மைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. திரு. நாகசாமி, பழைய சிந்தனை களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால் தான், தமிழ் மொழியின் தொன்மையையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், வெளி நாட்டவரும் தமிழர் வரலாற்றையும் தமிழையும் ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதையொக்கும்” என்று தேவநேயப் பாவணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒருமொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ்மொழியையும், தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு அழைத்திருப்பவர்களும் அவ்வாறே என்க.

ஒரு தொல்லியலாளருக்கு, பன்முகத் திறமைகள் வேண்டும். சுவர்களில் உள்ளவற்றை தூசி தட்டி, படித்துப் பார்ப்பது மட்டும் தொல்லியலாளரின் பணியன்று. தமிழரின் பல்லாண்டுக்கால வரலாற்றை, கி.மு. 500 ஆண்டுகளில் சுருக்கி, அதனை அரசாங்க ஒப்புதலோடு பதிவு செய்தவர், திரு. நாகசாமி அவர்கள். இடைக்காலக் கல்வெட்டுகளையே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைப் பணியாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது.

பனிக்காலம், பனி உருகல் காலம், கண்டப் பெயர்ச்சி, நிலத்தடித் தட்டுகளின் பெயர்ச்சி, ஆழிப்பேரலைகளுக்கான தோற்றக் காரணங்கள் பற்றிய செய்திகள் எவையும் தமிழ்நாட்டுத் தொல்லியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும், தமிழ் மொழியின் மூலம், வேர் போன்ற நுட்பமான துறை களிலும் நாகசாமிக்குப் பயிற்சி இல்லை.

ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், யூப்ரடீஸ் - தைகிரீஸ் சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிறேய மொழி இலக்கியங்களில், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.

இவ்விலக்கியங்களில், பழந்தமிழர் வரலாறு பொதிந்து கிடப்பதை, தொல்லியலாளர்கள் அறிய முயற்சிப்பது மில்லை. கிணற்றுத் தவளைகள் போல், கடந்த 100 ஆண்டுகளாக, சொன்னவற்றையே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் தொல்லியல் துறையை, பின்னோக்கித் தள்ளிச் சென்ற பெருமைகளுக்கு உரியவர் திரு. நாகசாமி.

அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே. சமற்கிருதத்திலிருந்தே தமிழ் மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற தமிழரல்லாதவர்கள் தாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மொழி, வரலாறு பற்றி ஆய்வு செய்த திரு. நாகசாமி, சமற்கிருத மொழியின் தோற்றக்காலம் பற்றி, விளக்க முன்வருவதில்லை. தமிழின் தொன்மையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அரைவேக்காட்டு அறிவுடன், திரு. நாகசாமி கூறும் செய்திகளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. திரு. நாகசாமியை விட, திறமை மிக்க, அறிவு சார்ந்த வரலாற்று மொழியில் துறை சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் உள்ளனர் என்பதை, திரு. நாகசாமி மறந்துவிட வேண்டாம்.

தமிழ்ச் சொற்களால் கி.மு.2000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு கமுக்க மொழி. மன்னர்களுக்கும், பிற்காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இக்கமுக்க மொழி பற்றிய செய்திகள் மேலை நாகரிகங்களிலும் காணப் படுகின்றன 7.

சிந்து வெளி நாகரிக மறைவுக்குப் பின் தோன்றிய வட்டார அரசுகள், தங்கள் ஆவணங்களை, கமுக்க மொழியில் பதிவு செய்து வைத்திருந்தன. அடுத்தடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த ஊணர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்களின் மொழிகள், இக்கமுக்க மொழியில் கலந்தன. தொடக்கத்தில் ஆரியர்களுக்கு இம்மொழி பற்றிய தெளிவு இருந்ததில்லை. பிற்காலத்தில் அக்கமுக்க மொழிகளுடன் கலந்து, பிராகிருதம் என்ற மொழி உருவாயிற்று8.

பிராகிருதம், கிரேக்கர்களின் வருகைக்குப் பின், சமற்கிருதமாக உருப்பெற்றது. சமற்கிருதம் (SAMSKRU) எனத் திரிந்தது. ஆங்கிலத்தில் சான்ஸ்கிரீட் எனப்பட்டது. கிரேக்கர்களின் வருகைக்கு முன் அம்மொழிக்கு, கீர்வாணம் என்ற பெயர் இருந்ததாக, சிவத்தியாநாநந்த சுவாமிகள் தனது, ரிக்வேத சம்ஹிதை என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் 11. அக்கால அளவுகளில், சமற்கிருதத் துக்கான வரிவடிவம் கண்டறியப்படவில்லை.

சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய் மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல் வெட்டு, முதன் முதலில் அறியப் படுகின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே, வாய் மொழியாகச் சொல்லப்பட்ட வேதங்கள் உள்ளிட்டவை, எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் செய்திகள் பற்றியெல்லாம், திரு நாகசாமி உள்ளிட்ட தொல்லியலாளர்கள் வாய் திறப்பதில்லை.

வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று பலர் கூறுவதுண்டு. வேதங்களே தமிழில்தான் எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. இந்தியர்களுக்கு, ஆரியர்கள்தாம், அறிவியல், கணக்கியல், வானியல் போன்ற வற்றைக் கற்றுத் தந்தனர். தமிழரும் அவர்களிடமிருந்தே கற்றனர் என்று திரு. நாகசாமி கூறி வருகிறார்.

இதற்கு மாறான செய்தியை, சமற்கிருத அறிஞர், மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார் 12. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வானியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், அவர்கள் பஞ்சாபில் குடியேறுவதற்கு முன்பே (4000 - 2500), இந்தியப் பழங்குடிகள் அவற்றை அறிந்திருந்தனர் என்றும், அச்செய்திகளையே, 1400 - 1000 ஆண்டுகளில் வேதத்தில் இணைத்துக் கொண்டனர் என்றும், ஆரியர்கள் கூறிவரும் பொய்யைப் போட்டு உடைக்கிறார். மோனியர் வில்லியம்ஸ்

வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்து வடிவம் பெற்றன என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10 ஆவது அதிகாரமான புருஷ சூக்தம், கி.பி 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழி நடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறு பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் 13. இவற்றுக் கெல்லாம், தொல்லியலாளர்கள் மறுப்போ, விளக்கமோ கூறுவதில்லை.

முன்னர் சொல்லப்பட்ட செய்திகளுடன், எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட காலங்களில், அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப புதிய செய்திகளையும் இணைத்துள்ளனர். அவ்வாறுதான், மனுவின் சட்டங்கள், வங்காள ஆளுநரும், நடுவர் மன்றத் தலைவருமான வில்லியம் ஜோன்சிடம், மூலத்தை விட, விரிவாக இணைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கி.பி.1780களில் தான் மனுவின் சட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றன.

மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப் பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட, மூலக்கதையோடு பல கிளைக் கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத்கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றுகளும் இல்லை.

கருத்தியல் முரண்பாடுகளும் மிகுதியாக உள்ளன. “உலகில் சாதிக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்போது, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்து, அக்கட்டமைப்பைத் தகர்த்தவர்களை அழிப்பேன். ஏனெனில், சாதிக் கட்டமைப்பையும் வர்ணாசிரம தர்மத்தையும் உருவாக்கியவன் நான்தான்,” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. சாதியமைப்பை, பகவத் கீதை நேர்மைப்படுத்துகிறது. திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிறது. அன்பைக் கற்பிக்கும் திருக்குறள், அழிவுகளை நேர்மைப்படுத்தும் பகவத் கீதையின் தழுவல் என்பது, அறியாமையின் உச்சகட்டம்!

பகவத் கீதை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனக் கூறப்படும் செய்திகளை மறுத்து, அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது என இதுவரை, திரு. நாகசாமி விளக்கம் தரவில்லை. தமிழரின் போர் முறைக்கு மாறுபட்டு, போர்களில், சூழ்ச்சி, வஞ்சித்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும், உறவுகளைக் கொல்வது கூட தவறில்லை என்றும் பகவத் கீதை கூறுவதை அனைவரும் அறிவர்.

திருக்குறள், கி.மு.31 ஆண்டுகளில் எழுதப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா (Seneka), திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற் கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால்,கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப் படுகின்றது. இச்செய்திகளையெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார்.

இலங்கையில், கொழும்புக்கு தென்கிழக்கேயுள்ள ஓரிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் மற்றும் பொருட்களை கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், அவ்வெலும்புக் கூடுகள், கி.மு. 37000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மக்களுடையது எனக் கண்டறியப் பட்டுள்ளது 14. தமிழரின் தொன்மையை விளக்கும் சான்று இது!

எவ்வகையிலும் பகவத் கீதையினின்றே கருத்துகளைப் பெற்று திருக்குறள் எழுதப்பட்டது என்பதற்கானச் சான்றுகளை, திரு.நாகசாமி வெளியிடட்டும். 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் கூறியதையே நான் எடுத்துக் கூறினேன் என்று தப்பிக்க முயல வேண்டாம். தொடக்கத்தில் வீரமாமுனிவர் கூறியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூற, அந்தணர்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற கூற்றினை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றியும் அந்நிறுவனம் அளிக்கும் 5 இலக்கம் பணத்துடனான விருது பற்றியும் திரு. மு.க. ஸ்டாலின், தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தேர்வுக் குழுவினின்று திரு. நாகசாமியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கருத்து வரவேற்கத் தக்கது மட்டுமில்லாமல் பாராட்டத் தக்கதும் கூட எனலாம்.

செம்மொழி நிறுவனத்தில் அளிக்கப்படும் விருதுகள், மற்ற விருதுகளைப் போல் முரண்பாடுகளைக் கொண்டவையே. மத்திய அரசின் ஆட்சியிலுள்ளவர்கள் விரும்பியவர்களுக்கே தொல்காப்பியர் விருதுகள் அளிகப்படுகின்றன. மற்ற விருதுகளையும் போல், தகுதி வாய்ந்த தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாட்டில். திரு. ஐராவதம் மகாதேவன் தலைமையில், சிந்துவெளி நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. திரு. மகாதேவனின், மாணாக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர், கட்டுரை படித்தனர். அக்கட்டுரையில், சிந்துவெளி மொழியில், தமிழ்ச் சொற்களை விட, கன்னடச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன என்று படித்தனர். பார்வையளர்கள் திகைத்துப் போயினர்.

செம்மொழி மாநாட்டில், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப்பட்டது. இக்கட்டுரைகளை வடித்துக் கொடுத்த திரு. ஐராவதம் மகாதேவனுக்கு, தொல்காப்பியர் விருது, செம்மொழி நிறூவனத்தால் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர், நிதி காப்பாளர், பதிவாளர் ஆகிய மூன்று பேருமே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர். இந்நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியில்தான் நடை பெற்றது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று, திமு.க அரசு காங்கிரஸ் அரசுடன் போராடிப் பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டு, விழாக்களும் எடுக்கப்பட்டன. இத்தகுதிச் செய்தியை அறிவித்த மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழ் மொழியின் வரலாறு, 1000 ஆண்டுகள் பழமையுடையது என்று கூறினார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் தோன்றவே, 1500 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள் என்றார். (செயகாந்தன், தமிழை நாய்மொழி என்று கூறி, பின்னர் சிங்க மொழியென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்). மீண்டும் எதிர்ப்புகள் தோன்றவே, தமிழுக்குத் தொடர்பில்லாத ஆ.ராசா என்ற அமைச்சர், மாந்தவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பை வரவேற்று, ஆண்டுக் கணக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இந்த ஆணை கிடைத்ததே போதும் என்றும் அறிக்கை விட்டார். திரு. கருணாநிதி அவர்களால் விளக்கம் தர இயலாத நிலையில், ஆ. ராசா விளக்கமளித்தார். முதற்கோணலே, அடுத்தடுத்த கோணல்களுக்கு மூலமாக அமைந்தன.

திரு. கருணாநிதியை, தலைவராகக் கொண்டு, செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறி செயலலிதா முதல்வராக வந்துவிட்டால், தலைவர் பதவி அவருக்குப் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாக, பதிவுச் சட்ட வரைவுகள் பலமுறை திருத்தப் பட்டன. இவற்றை எவரும் சொல்லி நான் எழுதவில்லை. தொடக்கத்தில், 5 ஆண்டுக்காலம், அந்நிறுவனத்துக்குச் சென்று வந்தவன் நான். உண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை, மாந்த வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கே உரியது. திரு. கருணாநிதி, தமக்குக் கீழ் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று இரு குழுக்களை அமைத்துக் கொண்டார். அக்குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களில் எவரும் தமிழஞர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் திரு. கருணாநிதியின் அன்பிற்குரியவர்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும், 20 கோடிகள் அளவில் தொகைகள் வந்தன. அத்தொகை, எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

தமிழ் மொழியை ஆய்வு செய்வதில், சரியான திட்டமிடல் இல்லாததால், திட்டம் தீட்டத் தகுதியானவர்கள், அங்கு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடிகளை, டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் காங்கிரஸ் அரசு செம்மொழித் தகுதிகளை வழங்கியது. அழகிப் போட்டியில் அனைவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டதை ஒப்பு நோக்குக. மலையாளம், செம்மொழித் தகுதியுள்ள மொழியென்பதை, திரு. ஐராவதம் மகாதேவன் தான் கேரள அரசுக்கு எழுதிக் கொடுத்தார்.

தமிழுக்குத் தலையையும், கன்னடத்துக்குத் தோளையும், மலையாளத்துக்குக் கைகளையும் காட்டியவர் திரு.மகாதேவன். இவருக்கு மட்டும் செம்மொழி நிறுவனம் ஆய்வுக்காக பல இலட்சம் கொடுத்தது. செம்மொழி நிறுவனம் ஒரு குழுவின் சொத்தாகவே மாறிப்போனது.

பாரதிய சனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே தொடர்ந்தது. தம் பங்குக்கு பல உதவிகள் செய்தனர். விருதுகள் வழங்கினர். தி.மு.க. முற்றிலுமாக அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. திரு. கருணாநிதியுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்த திரு. நாகசாமி பற்றி, திரு. ஸ்டாலினுகுத் தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் எவ்வாறு தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றி வளர்ப்பதாக உறுதி கூறி ஆட்சிக்கு வந்து, ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் வளமை சேர்த்தது.

இன்று, திரு. ஸ்டாலின், திரு. நாகசாமியை எதிர்ப்பது, பா.ஜ.க.வை குற்றம் கூறுவதற்காக மட்டுமே என்க. ஆரியத்தைத் தமிழகத்தின்று அகற்றியே தீருவோம் என்றவர்கள், பின்னர் எவ்வாறு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள் என்பதை நாடறியும்.

பண்டாரம், பரதேசிகள் என்று கூறியவர்கள், பின்னர் நண்பர்களானர்கள். கூடாநட்பு கேடாய் முடியும் என்றவர்கள், பின்னர் தோழமை கொண்டனர். திராவிடம் பேசும் திரு. ஸ்டாலினும், தேசியம் பேசும் திரு. நாகசாமியும், அரசியலுக்கான அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ எப்பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் இரண்டு தேசியக் கட்சிகளும், தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவதைத் தவிர, இன்று வேறு வழிகள் இல்லை.

திரு. நாகசாமி, நூல்களையும், அறிக்கைகளையும் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, சமற்கிருதம், தமிழ், பகவத் கீதை, தமிழர் வரலாறு, ஆரியர் வரலாறு பற்றி, பொதுமக்கள் மத்தியில் அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையான விவாதத்துக்கு முன் வரவேண்டும். திரு. நாகசாமியின் பொய்யான, கற்பனையான, ஒரு சமூகத்தை உயர்த்தும் உள்நோக்கம் கொண்ட பிதற்றல்களை, தமிழறிஞர்கள் சந்திக்கக் காத்திருக்கின்றனர்.

ஒன்று அவர் விவாதமேடைக்கு வரவேண்டும் இல்லையேல், இதுபோன்ற வரலாற்றுத் தொடர்பற்ற கற்பனைச் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், அரைகுறைகளை வேண்டுமானால் வளைத்துக் கொள்ளலாம், அறிஞர்களை வளைக்கவோ, தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ இயலாது என்பதை, திரு. நாகசாமியும், அவரை ஆய்வாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிற தேசிய கட்சியும், உணரவேண்டும். நெய்யும் மெய்யும் வெளிப்பட்டே தீரும் என்ற பாவாணரின் மொழியில், இதனை உணர்த்த விரும்புகிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்றும், தமிழே உலக மொழிகளுக்கு மூலம், வேர் என்றும், உலக அரங்கில் உறுதியாக நிறுவப்படும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக் கிறது!"

அடிக்குறிப்புகள்:-
===============
1. வீரமாமுனிவர் அருளிய சதுரகாதி, பதிப்பாசிரியர், டாக்டர்.சூ. இன்னாசி, வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம், பாளையங்கோட்டை, 1979, முன்னுரை, பக். XVII-XVIII..

2. குரவன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, பார்ப் பார் என்ற சொல்லைத் திணித்துவிட்டதாக, எல்லிசின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, பேரா.ப. மருதநாயகம் பதிவு செய்துள்ளார்.

3. DISTRICT GAZETTIER, TRICHINOPOLY,1830.

4. புறநானூறு, 194, பக்குடுக்கை, நன்கணியார்.

5. என் சரித்திரம் அரியலூர் மாவட்டப் பண்பாட்டுப் பேரவை.

6. ஏம வைகல் எய்தின்றால் உலகே - பெருந்தேவனார், குறுந்தொகை.

நீர் நின்று அமையாது உலகம் போல - நற்றிணை, முதல் பாடல்.

தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகெ - அகநானூறு, கடவுள் வாழ்த்து.

மண் திணிந்த நிலனும் - புறநானூறு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - முருகாற்றுப்படை

மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக் காஞ்சி.

உலகெலாம் ஓதற்கரியவன் - திருமுறை - என விரியும்.

7. Special Language: The professional and secret language practiced by the scribes, appear in both Egypt and Mesopotamia. It was even more difficult for more than a few to mester these skills. - Dictionary of the Bible,P.779.

8. Pragrit: The Languages other than Sankrit, that apoken and written in North India. Monier Williams, Introduction in his Dictionary, P.XX.

9. Sankrit: Perfectly constructed Speech. - Ibid, P.XX

10. குறி: குறி அறிந்தோரே - தொல்காப்பியம்.

11. சிவத்தியாநாநந்தர், ரிக்வேத சம்கிதை, இராயப் பேட்டை, 1938, முன்னுரை.

12. Rig Veda: The Oldest of its (Vedas) hymns being assigned by some who rely on certain astronomical calculations to a period between 4000 and 2500 B.C., before the settlement of the Aryans in India and by others who adopt a different reckoning to a period between 1400 B.C.- 1000 B.C., when Aryans had settled down in Punjab.
Monier Williams, A Sanskrit - English Dictionary, P.1015.

13. Dr.B.R.Ambetkar, “Who is Sutra?”

14. தகவல் மற்றும் படங்கள், அமெரிக்காவின் நவேடா மாநிலம், கர்சான்சிட்டி, மாநிலத் தலைமை, நூலகத்திலிருந்த, The Encyclopedia - anthropology, Vol.VII, என்ற நூலிலிருந்து, கட்டுரை ஆசிரியரால் எடுக்கப்பட்டது.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மார்ச் 16 – 31 இதழ்)

===============================
கண்ணோட்டம் இணைய இதழ்
===============================
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
===============================