வெள்ளி, 16 நவம்பர், 2018

கலைச்சொல்லாக்கம் தூய தமிழில் முடியுமா? :- தோழர் தியாகு

மூலமுதல் தூய தமிழாக்கம் குறித்துத் தோழர்கள் சிலர் தேவையற்ற அச்சம் கொண்டுள்ளனர். தூய தமிழில் கலைச் சொல்லாக்கம் இயலாத ஒன்று அல்லது கடினமானது என்று இவர்கள் அஞ்சுகின்றனர். அறிவியல் பழகாதவர்களுக்கு அறிவியலே கடினம்தான். இயற்கை அறிவியல் என்றாலும் சரி, குமுக அறிவியல் என்றாலும் சரி, அதனை ஒரு கவளம் சோறு போல் விழுங்கி விட்டுப் போக முடியது, அல்லது ஒரு மிடக்குத் தண்ணீர் போல் குடித்து விட்டுக் கிளம்ப முடியாது. குமுக அறிவியலின் ஒரு கூறுதான் மார்க்சியப் பொருளியல். அந்தப் பொருளியலின் முதற்பெரும் படைப்புதான் மூலமுதல். இப்படி ஒரு நூலை மார்க்ஸ் தமது தாய்மொழி ஆகிய ஜெர்மனில் எழுதினார். அது ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கப்பட்டு, ஆங்கிலத்திலிருந்துதான் தமிழுக்கு வந்தது, வருகிறது.

மூலமுதலைப் படிக்க விரும்புகிற வாசகர் அறிவியல் ஆர்வமுள்ளவராக, குறிப்பாகக் குமுக அறிவியல் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். இது வரை இல்லையென்றால் இனியாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். மூலமுதலின் உள்ளடக்கத்தை கார்ல் மார்க்சே இயன்ற வரை எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளார் என்பதுதான் என் கருத்து. ஆனால் அறிவியலை ஓர் எல்லைக்கு மேல் எளிமைப்படுத்த இயலாது, கூடாது.

மூலமுதலைத் தமிழாக்கம் செய்கிற பொறுப்பு என்பது அதற்கு உரையெழுதும் வேலையன்று. வேண்டுமானால் அதைத் தனியாகச் செய்யலாம். எந்த மொழிபெயர்ப்பும் மூலத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதே போது இலக்கு மொழியின் தன்மையை உள்வாங்கி அழகாகவும் இருக்க வேண்டும். மூலத்தின் ஆசிரியரே இலக்குமொழியும் அறிந்து எழுதியிருந்தால் கிட்டக் கூடிய அழகை மொழிபெயர்ப்பில் காட்ட முயல வேண்டும். சிறந்த மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாகவே தெரியக் கூடாது என்பதுதான் மொழிபெயர்ப்பாளனின் உச்சக் குறிக்கோள். நெருங்க நெருங்க விலகி விலகிப் போகும்படியான குறிக்கோள். உண்மைக்கும் அழகுக்குமான தீராத முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சிதான் மொழிபெயர்ப்புக் கலை என்பேன்.

கலைச் சொற்களைத் தூய தமிழில் வடிக்க முடியாது என்ற அச்சம் ஒரு காலத்தில் அறிஞர்களிடையே நிலவியது. ஒருசிலருக்கு இப்போதும் அந்த அச்சம் மிச்சமுள்ளது. இந்த அச்சம் இவர்களிடமிருந்து பாமரர்களுக்கும் (அறிவியலர் அல்லாதார்) பரவியுள்ளது. தமிழில் சொல்ல வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களும் கூட தூய தமிழ் வேண்டாம் என்கிறார்கள்.

அறிவியல் அக்கறை கொண்ட எவரும் தூய்மையைக் கண்டு மிரள்வது பொருத்தமில்லை. தூய உணவு உண்ண வேண்டும், தூய உடை உடுத்த வேண்டும். வீடு தூய்மையாக இருக்க வேண்டும். நீர் தூய்மையாக இருக்க வேண்டும். காற்று தூய்மையாக இருக்க வேண்டும், எல்லாமே தூய்மையாக இருக்க வேண்டும் என்னும் போது மொழி தூய்மையாக இருக்க வேண்டாமா? ஆடை என்றாலே தூய ஆடைதான்! தமிழ் என்றாலே தூய தமிழ்தான்! ஆடை அழுக்காகி விட்டால் துவைத்துக் கட்டுவதில்லையா? தூய்மை செய்வதில்லையா? அதே போல் தமிழ் வரன்முரையற்ற பிறமொழிக் கலப்பால் அழுக்காகிக் கிடப்பதால்தான், தமிழையும் தூய்மை செய்ய வேண்டியுள்ளது. கந்தையனாலும் கசக்கிக் கட்டச் சொல்லிக் கொடுத்தது நம் தமிழல்லவா?

எடுத்த எடுப்பில் முடியுமா? முடியாதா? என்ற கேள்வியே தவறு. தேவையா? தேவையில்லையா? என்றுதான் முதலில் கேட்க வேண்டும். அறிவியலைத் தமிழில் சொல்லத் தேவை இருக்கிறதா? இல்லையா? மார்க்சியத்தைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டுமா? வேண்டாமா? தேவைதான், வேண்டும்தான் என்றால், முடியுமா? முடியாதா? முடியும் என்றால் எந்த அளவுக்கு முடியும்? முடியாது என்றால் எந்த அளவுக்கு முடியாது? என்று பேசலாம்.

எல்லாமே தமிழில் அடக்கம் என்ற இறுமாப்பு நமக்குத் தேவை இல்லை.  தமிழில் இல்லாதவற்றைப் பிற மொழிகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவும், அவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் துணிவும் நமக்கு வேண்டும். ஐன்ஸ்டீனும் டார்வினும் மார்க்சும் தமிழில் இல்லை, அவர்களையும் தமிழுக்குக் கொண்டுவந்துதான் தமிழ்க் குமுகம் அறிவுவளம் பெற முடியும் என்பதில் மறுப்புக்கிடமில்லை. ஆனால் அவ்வளவு கனமான அறிவியலைச் சொல்லும் திறம் தமிழுக்குண்டா? என்று ஒருசில தமிழர்களே ஐயுறுகின்றனர். தமிழுக்குண்டு என்று தயங்கித் தயங்கி ஒப்புக் கொண்டாலும் தூய தமிழுக்குண்டா? என்று வீடு கட்டுகின்றனர். அதாவது தமிழில் சொல்லலாம், அத்தமிழ் மணிப்பிரவாளமாக இருக்கட்டும், அல்லது தமிங்கிலமாக இருக்கட்டும், அல்லது வரிவடிவத்தில் மட்டும் தமிழாக இருக்கட்டும், பொருளடக்கத்தில் ஆங்கிலம் அல்லது சமற்கிருதமாகவே இருக்கட்டும் என்று தமிழுக்குக் கொஞ்சம் மனமிரங்கிப் பேசுகின்றனர்.

எங்கெல்லாம் உடனே தமிழால் ஒரு செய்திக்கு முழு நீதி செய்ய முடியவில்லையோ, அங்கெல்லாம் பிற மொழியின் துணைநாடுவதை அடியேன் இழிவாகக் கருதவில்லை. ஒரு மொழியில் பிறமொழி கலப்பதற்கு ஆதிக்கம், திணிப்பு அல்லாத வேறு காரணிகளும் உண்டு என்பதையும் ஒரு மொழி பிற மொழிச் சொற்களையும் வடிவங்களையும் உள்வாங்கித் தன்னைச் செழுமையாக்கிக் கொள்ள வேண்டிய தேவையையும் நான் மறுக்கவில்லை. தனித்தமிழ் இயக்கம்தானே தவிர ’தனித்து அமிழ்’ இயக்கமன்று என்று முனைவர் இளவரசு சொன்னதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

மார்க்சோடு பக்கம் பக்கமாய்ப் பழகிச் செல்லும் போது தூய தமிழாக்கம் என்பதில் என் மனத்திட்பம் உறுதிப்படவே செய்கிறது.

இதற்கிடையில் கலைச் சொல்லாக்கத்தில் தூய தமிழின் நற்பயன் உணர்த்த ஒவ்வொன்றாகச் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். முதலில் இயற்கை அறிவியலில் பூதியல் (இயற்பியல்) துறையை எடுத்துக் கொள்வோம். நானும் பேருக்கு இந்தத் துறை மாணவன்தான். Saturation என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் உப்பைக் கரையுங்கள். இன்னும் இன்னும் என்று கரைத்துக் கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் உப்பு கரையாமல் நின்று விடும். நீங்கள் என்ன செய்தாலும் கரையாது. இந்த நிலைக்குத்தான் saturation என்று பேர். அந்தக் கரைசலுக்கு saturated solution என்று பேர். இதற்கு மேல் கரையாது என்ற கட்டத்துக்கு saturation point என்று பேர். இதையே பொருளியலில் சந்தை இதற்கு மேல் ஒரு சரக்கை ஏற்காத நிலையை saturation என்று குறிப்பிடுவதுண்டு.

நான் படிக்கும் காலம் வரை saturation என்பதை பூரிதம் என்றுதான் ’விஞ்ஞான’ பாடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். பூரிதம், பூரிதக் கரைசல். பூரித நிலை என்றுதான் படித்தோம். பூரிதம் உண்மையிலேயே தமிழ்தானா? அதன் வேர்ச்சொல் யாது? என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பூரிதத்தைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் பூரிதம் பூரிதம் பூரிதம் என்று உருப்போட்டால் போதுமே! ஐயகோ தமிழ்! ஐயகோ அறிவியல்!

எப்போது மாறியதோ, இப்போதெல்லாம் saturation தெவிட்டு நிலை ஆகி விட்டது. இது தூய தமிழ்! குழந்தைக்குக் கூட விளங்கும்! தமிழில் படிப்பதன் முழுப் பயனும் இப்போதுதான் கிட்டும்.

தூய தமிழ் சொல்லாக்கத்தால் அறிவியல் மேலும் அழகாகிறது; மேலும் தெளிவாகிறது. மூலமுதல் தூய தமிழாக்கம் அதனை அறுதியிட்டுரைப்பதாக இருக்கும்.

அறிவியல் தமிழின் நற்பயனுக்கு மேலும் சான்றுகள் எடுத்துக்காட்ட ஆர்வமுள்ள தோழர்களை உரிமைகொண்டு அழைக்கிறேன்.

எழுத்தோவியம்:
ஓவியர் நித்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக