செவ்வாய், 20 நவம்பர், 2018

புயல் பாதிப்புகள் - கள ஆய்வறிக்கை : - மே பதினேழு இயக்கம்.

கஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின்  முதல் நிலை அறிக்கை.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் முதற்கட்ட அறிக்கையினை வெளியிட்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் முடங்கிக் கிடக்கும் தமிழக அரசின் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினை அம்பலப்படுத்தியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட வலியுறுத்தியும், கஜா புயல் பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவித்திட வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கத்தினால் இன்று(19-11-2018) மாலை சென்னையில் நடத்தப்பட்டது.

அதில் பத்திரிக்கையாளர்களிடம் அளிக்கப்பட்ட முதல்நிலை அறிக்கை:
-----------------------------
புதுக்கோட்டையில் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் மே பதினேழு இயக்கம் கண்டறிந்த உண்மைகள் பின்வருமாறு. அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. வீடுகள் சூறையாடப்பட்டு, மக்கள் செய்வதறியாது  சாலைகளில் ஒரு குடம் நீருக்காக அலைந்து திரிகின்றனர். தமிழக முதல்வரும், அமைச்சர்களும் புயல் பாதிப்பு பற்றி கூறுவதற்கும், கள யதார்த்ததிற்கும் துளியும் சம்பந்தமில்லையென்பதை எங்களது கள ஆய்வில் கண்டறிந்திருக்கிறோம்.

பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் சென்று பார்வையிடவில்லை:

வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின் போது மக்கள் அனைவரும் சொன்ன ஒரே செய்தி, ”கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட ஒரு அரசு அதிகாரியும் கூட புயலினால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து எங்கள் தேவைகள் குறித்து கேட்டறியவில்லை” என்பதே. புயலுக்கு அடுத்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் மக்களை சந்திக்காததால், அதிகாரிகள் தங்கள் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யக் கோரியும், தங்களது உடனடி அன்றாட தேவைகளை நிறைவேற்றக் கூறியும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நவம்பர் 18-ம் தேதியான நேற்று, இன்னும் தங்களது பகுதிகளில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யாத சூழலில், தங்களது பகுதிகளில் ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத பேரிடரை எதன் அடிப்படையில் ‘பெருமளவு பாதிப்பில்லை’ என முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஊடகங்களில் குறிப்பிடுகின்றனர் என்ற கோபமான கேள்வியுடன் பெரும்பாலான இடங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆய்வின் போது ஆலங்குடி, செருவா விடுதி, ஒட்டங்காடு, பாப்பநாடு பகுதிகளில் மேற்சொன்ன காரணத்திற்காக நேற்று சாலை மறியல் நடைப்பெற்றது.

ஆய்வு தொடங்கிய புதுக்கோட்டை-பேராவூரணி சாலையின் வம்பன் பகுதியிலிருந்தே காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிற தங்களை அரசின் நிர்வாக அதிகாரிகள் வந்து சந்தித்து தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியக் கோரி போராடும் பொழுது, அரசின் நிர்வாக அதிகாரிகள் யாரும் வராமல்  காவல்துறை படையினர் மட்டும் வந்து “ஏன் போராடுகிறீர்கள்?” என மிரட்டுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மிரட்டுவதற்கு அரசின் காவல்துறை கட்டமைப்பினால் இயலும் போது, இப்பொழுது உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர வேண்டிய நிர்வாக கட்டமைப்பு அப்பகுதிகளில் இயங்காததை நேரடியாக பார்க்க முடிந்தது.

அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் மட்டும் தங்களால் இயன்ற மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கள நிலை:

18-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் பெரும்பாலான  இடங்களில் மக்களாலும், சில இடங்களில் அரசினாலும் முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களை இணைக்கும் பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள், கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு சாலைப் போக்குவரத்து  சீர் செய்யப்பட்டுள்ளது.
எங்குமே மின்சாரம் இல்லை. மின்சாரமில்லாத காரணத்தினால் வீடுகளிலுள்ள மின் மோட்டார்களும், பொதுக்குழாய் விநியோகத்திற்கான நீரேற்று நிலையங்களும் இயங்காததால் மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர். சமைப்பதற்கு, குளிப்பதற்கு போன்ற அத்தியாவசிய தண்ணீர் தேவைக்காக குடத்துடன் அலைகின்றனர். மின்சாரமில்லாத இரவுகளை கடப்பதென்பது அனைவருக்கும் பெரும் துயரமானதாய் இருக்கிறது.

வாய்ப்புள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் அளவில் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்து, தங்களில் யாரோ ஒருவரின் மின் மோட்டார்களை மட்டும் இயக்கி எல்லோரும் நீரை பெற்றுக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் ஒரு பொது இடத்தில் வாடகை ஜெனரேட்டர்களைக் கொண்டு குறைந்தபட்சம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பாதுகாப்பாக இரவை கழித்திட முயலுகின்றனர்.

ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் 30-40% வரையே கான்கீரிட் வீடுகள். பெரும்பாலானவை ஒட்டு வீடுகள் மற்றும் கூரை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. அவைகளில் தற்போது தங்க முடியாத நிலை இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் பேரிடர் கால தங்கும் முகாம் அமைக்கப்படவில்லை.

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள், எரிபொருளை முதல்நிலை, இரண்டாம்நிலை நகரங்களுக்குச் சென்று வாங்குவதற்காகவே சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. சீரற்ற போக்குவரத்து சூழலில் 20 கிமீ அலைந்து திரிகின்ற சூழலிலும் கூட, 18-ந் தேதி வரையிலும் பாதிக்கப்பட்ட பெரும்பலான  பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படவில்லை.

தங்கள் வீடுகளிலுள்ள மின் மோட்டார்கள், பொதுக் குழாய்கள் இயங்காததால் மழை நீர் தேங்கியுள்ள பொது நீர் நிலைகளையே குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். தொற்றுநோய் பரவக்கூடிய பருவமான பனிக்காலமாக இருப்பதாலும், புயலினால் இறந்துபோன கால்நடைகளாலும் தொற்றுநோய் பரவுக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.

பிரதான பிரச்சனை:

முதல்கட்டமாக நீர், எரிபொருள், மின்சார தேவையென்பதே மக்களின் பிரதான பிரச்சனையாகி இருக்கிறது. இதிலிருந்து மீண்ட பிறகுதான் மக்கள் தங்களது உடைமை பாதிப்புக் குறித்த அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வர்.

அரசு உடனடியாக செய்ய வேண்டியவை:

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மின்வாரிய ஊழியர்கள் தற்போது இயங்கும் வேகத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக குறைந்தது 15-20 நாட்கள் ஆகும். அதுவரையும் எல்லா ஊராட்சிகளுக்கு ஜெனேரேட்டர் ஏற்பாடு செய்வது முதற்பணியாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் ஒரு ஜெனரேட்டரும், அது இயங்குவதற்கான எரிபொருளையும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நியாய விலைக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கமான அரிசி, பருப்பு, சக்கரை, சமையல் எண்ணெய் மட்டுமல்லாமல் குடிநீர், பால் பவுடர், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நிவாரணம் வழங்கப்பட்டு, தங்களது சேதமடைந்த வீடுகள் சரிசெய்யப்படும் வரை வீடுகளில் தங்க வசதியில்லாத மக்களுக்கு தங்குவதற்குரிய பொது முகாம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறியவை முதல்கட்டமாக உடனடியாக செய்யப்பட வேண்டியவை. ஆனால் இவை மட்டுமே போதுமானதல்ல, இவை பாதிப்பிலிருந்து மக்கள் தற்காலிகமாக மீள்வதற்கு மட்டுமே பயனளிக்கும். உயிர்சேதம் குறித்தான ஆய்வுடன் சேர்த்து, உடைமை, வாழ்வாதார பாதிப்பு குறித்த ஆய்வும் அதற்கான மீட்பு நிவாரணமும் முழுவீச்சில் தொடங்கப்பட வேண்டும். மேற்கூறிய முதல் கட்ட மீட்புப் பணிகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மே பதினேழு இயக்கம் கஜா புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கள ஆய்வினையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. கள நிலவரங்களையும், இழப்பு குறித்த விவரங்களையும், அரசின் மீதான மக்களின் கேள்விகளையும் என அனைத்தையும் தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் ஆய்ந்து வெளிக்கொண்டு வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு
9884072010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக