புதன், 21 நவம்பர், 2018

அணங்கின் ஒப்பாரி :- இரபீக் ராசா

ஈ கடிக்காம 
எறும்பு கடிக்காம வளத்த;
பட்டாடை இல்லனாலும் 
பழச உடுத்தி அழகு பாத்த.

கேட்டதெல்லாம் வாங்கித் தருவ;
முடியலன்னா மறைஞ்சு அழுவ.
ஊருகண்ணுபடும்னு 
யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட.

ஆளான அன்னிக்கி 
அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு 
மறச்சு வைக்க,
யாருக்கும் தெரியாத நேரமா 
கிட்ட வந்து கூப்ட்ட.

குனிஞ்ச தல நிமிராம 
உன் முகத்த பாத்த எனக்கு தெரியும் 
என்ன பாத்து ஏன் கலங்கினேன்னு.

கலர்சட்டைய கைவிட்ட;
கடைத்தீனிய எனக்குத் தந்த.
மாராப்புக்குத் துணி வாங்கித் தருவ;
மறைவிடத்துக்கும் சூசசகமா வாங்கிடுவ.

எம்புள்ள போல வருமான்னு 
ஒன்னுமில்லாத என்னய 
தூக்கிவச்சிப் பேசுவ.
உன் முகத்த பாத்து வளந்த எனக்கு
உன்னப்போல தெரிஞ்ச 
அவனைப் பிடிச்சு போச்சு.

என்ன சொல்லப் போறேன்னு 
நெஞ்சுல பயம் இருந்தாலும்,
பாத்து வளத்த பிள்ளைக்கு 
பாதகமா செஞ்சிடுவன்னு நெனச்சு
அவன் முகத்துல உன்னைப் பாத்து பூரிச்சுப்போனேன்.

எந்த சாதி என்ன சனம் 
இன்ன இனம்னு தெரிஞ்சப்ப 
நீ ஆடின ஆட்டத்தப் பாத்து 
பயந்துபோனேன்.

சின்னவயசுல 
கொடைக்காரி கோயிலுல 
சாமி ஆட்டத்தப் பாத்து அலறுனப்ப 
நீ அமத்துனது 
நினைப்புல வந்து போச்சுப்பா.
கொடைக்காரி ஆடுனான்னு 
நம்பினேன்.

கொடைக்காரி மேல 
நீ கொண்ட கோபந்தான் 
ஆவேசத்துல வந்துச்சுன்னு 
இன்னிக்கு நான் புரிஞ்சுகிட்டேன்.

பிறப்பு தந்த ராசா உன்ன விட்டு 
கழுத்துப் புருசனோட ஓடுனேன்.

இளவரசன் கதயும் 
கவுசல்யா நிலமயும் 
கண்ணுல வந்து ஆடுச்சு.

நம்ம அப்பா அப்படிச் செய்யாதுனு 
பெத்தவன் கத தகப்பனா நெனச்சு 
ஓடிப் போனேப்பா.

வயித்துப்பாட்டோட  
வயித்துப் புள்ள சலிச்சுப்போகவும் 
பிரிஞ்சு கெடந்த சொந்தமெல்லாம் 
சேந்துகூடி வாழ்வோமுன்னு 
பாதகத்தி நெஞ்சு 
ஏங்கித் தவிக்கயில,
வா தாயி சேருவோம்னு 
கூட்டிட்டுப் போனயே
நம்பித்தான வந்தோம்;
நட்டாத்துல தூக்கிப் போட்டுட்டியே.

உங்குருத்து என்னை மிதிச்ச
வயித்துல இருந்த எங்குருத்து 
என்ன பாவம் பண்ணுச்சுப்பா?

கூட வாழ்ந்த எம்மவராசன 
கூட்டிட்டுப்போயி எரிச்சிட்டயேப்பா.

நம்பி கும்பிட்ட சாமியும் வரல
நாட்டுச்சாமி கூட்டுச்சாமி 
எதுவும் வரல.

பெத்த சாமி கொல பாதகம் செய்யயில 
மத்த சாமிகள நம்பி என்ன செய்யனு 
முடிஞ்ச மட்டும் கெஞ்சுனனே
கும்புட்டுத் தொழுதனே
கும்பி வத்த அழுதனே.

கண்ணீரக் கண்டும் 
கருணை உனக்கு வரலயே;
கொட்டும் ரத்தம் பாத்தும் 
உன் மனசு மாறலயே.

பெத்த புள்ள துடிச்சனே
கத்திக் கதறி விழுந்தனே
செத்துப்போச்சா 
ஒன் மனசு செத்துபோச்சா.

வித்துட்டயா வச்ச பாசம் வித்துட்டயா
ஒழுகின கண்ணீர 
ஓடி வந்து தொடச்ச கையாலயே
ஓங்கி ஓங்கி அடிச்சியே,
ஒழுகுறது உன் இரத்தம்னு
மறந்துட்டியா மறந்திட்டியா 
மறத்துப் போக வச்சிட்டியா?

ஓடுற தண்ணியில 
உசுர முடிச்சு வீசிட்டயே.
தண்ணியப் பாக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ள வருவேனே 
என்ன செய்வ?

ஒரு பாவம் அறியாத எம்புருசன் 
என்ன தப்பு செஞ்சுச்சு?
அது வம்சத்த கருவுலயே சிதச்சிட்டயே
இனி உன் வம்சம் தழைக்குமா?

கொடைக்காரி சாபத்தால 
உன் குலம் முழுகிப் போச்சுதுன்னு சொல்வாக.
கொடைக்காரிக்குத் தொணயாக 
நானும் போறேன் 
உன் வம்சத்த கருவறுக்க.

கருக்கொண்ட 
என் கர்ப்பவாசலில் கொட்டும்
செந்தூமையின் இளஞ்சூடு 
பெருந்தீயா பத்தி எரிய
பிடி சாவம்.

செத்தாலும் தீராத என் நெஞ்சாவி 
சத்தியமாஉன்ன ஒத்த ஒருத்தரயும் விடமாட்டேன்; விடமாட்டேன்.

கருக்கொண்ட என் தூமைய 
தீட்டுன்னு நீ நெனச்ச 
உன் சாதி
சல்லி சல்லியா நொறுங்கட்டும்.

உஞ்சாதி குறி தூமையக் கண்டாலும் எழும்பாம வேகட்டும்.

என் குலமறுத்த உன் சாதிவன்மம் கருவில்லாம தவிக்கட்டும்.

ஆல் அரசு வேம்பு கருகி போகட்டும்;
பூ பிஞ்சு காயி கனி அத்தனையும் 
வெம்பிப் போகட்டும்.

மண்ணு தரிசாயி காத்து அனலாயி
நீரு தூந்துபோயி 
சர்வ நாச நெருப்பு பரவட்டும்.

உன் சாதிக்குறிகள் 
அதில் கருகாமல்
ஆணவச்சாதி லிங்க அடையாளமாகத் தொங்கட்டும்.

நிலம் அதிர 
ஆடி வரேன் 
பாடி வரேன் ஆரணங்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக