தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜ புயலின் பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் வைக்கவிரும்புகிறோம்.
இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் 50க்கும் மேற்பட்ட உயிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மரங்கள், மான்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான காட்டுயிர்களை இழந்திருக்கிறோம். பறவைகள், கால்நடைகள் என பேரிழப்பை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள், குறிப்பாக தென்னை விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் தங்களின் படகுகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். புயல் பாதித்த 7 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்களாகும், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க 5 வருடங்களாகும் என்கின்றன தரவுகள்.
வர்தா, ஒக்கி, தானே என கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த தீவிர புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன. இவ்வளவு இழப்புகளை தொடர்ச்சியாக தமிழகம் சந்தித்துவருவதற்கான காரணங்கள் என்ன?
புயல்கள் குறித்த தரவுகள்:
இந்தியா, குறிப்பாக தமிழகம் வெப்பமண்டல பிரதேசம். இந்தியாவின் கிழக்கு கடற்கரைதான் அதிகமான புயல்களை சந்தித்துள்ளது. 1890 முதல் 2002ஆம் ஆண்டுவரை 304 புயல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரை சந்தித்துள்ளது. மேற்கு கடற்கரை 48 புயல்களை சந்தித்துள்ளது. இவை மாறும் என்கிறது ஐ.பி.சி.சி அறிக்கை. வடக்கு இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரித்துவருவதால் மேற்கு கடற்கரையும் அதிக அளவில் புயல்களை சந்திக்குமென்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
கஜ புயல், கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய பத்தாவது புயலாகும். இந்த ஆண்டின் 13வது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தை தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54. புயல்களை சந்தித்தவகையில் ஒடிஷா (98), ஆந்திரா (79), மேற்கு வங்காளம் (69) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த படியாக தமிழகத்திற்கு நான்காவது இடம். 1890-2002 காலகட்டத்தில், 54 புயல்களை சந்தித்த தமிழகம் கடந்த 16 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 10 புயல்களை சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. அதாவது வருடத்திற்கு 0.49 புயல்கள் என்று இருந்த சராசரி கடந்த 16 ஆண்டுகளில், வருடத்திற்கு 0.63 என உயர்ந்துள்ளது.
வெப்ப மண்டல நாடுகளை தாக்கும் புயல்களில் 10% இந்தியாவை தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 76% இந்தியாவிலும், வங்கதேசத்திலும் ஏற்படுகின்றன. அத்தோடு இந்தியாவில் வாழக்கூடிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு புயல்களால் பேரழிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
புயல்கள் ஏற்படுத்தும் பேரழிவுகள் மட்டுமல்லாமல், "புயலால் கொண்டுவரும் கடல்மட்ட உயர்வு" (storm surge) கடந்த 100 ஆண்டுகளில் 30 முறை பேரழிவுகளை கொண்டுவந்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் பிலிபைன்ஸ் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய "டுட்டு" சூறாவளியின் மீதம்தான் தமிழகத்தை தாக்கி பேரழிவை ஏற்படுத்திய "கஜ" புயலாக மாறியது. சூறாவளி வலுவிழந்து செல்லும் நேரங்களில் வெப்பமான கடலை அடைந்தால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக, தீவிர புயலாக மாறும். கஜ புயல் இப்போது கரையை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்று மீண்டும் புயலாக மாறி லட்சத்தீவுகளை தாக்கலாம் என்று வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கஜ புயல் இறுதிவரை கரையை கடக்கும் இடம் குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியவில்லை, இவ்வாறு கணிக்கமுடியாமல் போவது அரிதிலும் அரிதானது என்கிறது இந்திய வானியல் ஆய்வு துறை. இந்த வருடம் ஒடிசாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்திய "திட்லி" புயல் கரையை கடந்தபிறகு தன்னுடைய பாதையை மாற்றியது அதனால் பேரிடருக்கு தயாராக இல்லாத மாவட்டங்களுக்கு புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 62 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வெப்ப மண்டல பகுதிகளின் வானிலையை அவதானிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கையில், காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய "நிச்சயமற்ற" தன்மை இந்த பிரச்சனையை அதிகரிக்கும். இந்தியாவிற்கென்ற தனித்துவமான "காலநிலை மாதிரிகள்" இல்லாதது இந்த சவாலை அதிகப்படுத்துகிறது.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வேறு நாடுகளின் மாதிரிகளை வைத்து நம்முடைய பருவத்தை/காலநிலையை கணிப்பது முழுமையாக இருக்காது. இந்த பிராந்தியத்திற்கென்றே பிரத்தியோகமாக உள்ள சில கூறுகள், அதாவது பருவநிலையில் விளைவுகளை/தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளின் குறித்த விவரங்கள் அல்லது பங்களிப்பு விகிதங்கள் முழுமையாக மேற்குலக மாதிரிகளில் இருக்காது.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், வெப்பசலனங்கள், இந்தியப்பெருங்கடலில் உள்ள டைபோல் (IOD), பெருங்கடல்கள்- அலைகள்- வளிமண்டலம் இவற்றிற்கு இடையே நடைபெறும் பரிமாற்றங்கள் (Ocean‐Waves‐Atmosphere (OWA) exchanges) இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த முழு தரவுகளும் தற்போது நாம் பயன்படுத்தும் மாதிரிகளில் இருக்காது.
கடந்த மாதம் தென்கொரியாவின் இஞ்சேன் நகரத்தில் வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி அறிக்கையை தொடர்ந்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. உலகப்புகழ் பெற்ற "நேச்சர்" இதழில் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் ஏற்படும் புயல்கள் சூறாவழிகளில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற வகையில் ஆய்வை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், புயல்கொண்டுவரக்கூடிய மழையின் அளவு 33% அதிகரிக்கும் என்கிறது. இத்தோடு மட்டுமல்லாமல் புயலின் தீவிரத்தன்மை அதிகரித்து அதன் வேகம் 46 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று அச்சமூட்டுகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன?
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
அழிவுகள் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் உள்ள வைக்கோல்போர்போல் அழிந்துவிடும் என்கிறது குறள்.
புயல் நம்மைத் தாக்கும் என்று அறிவித்த பிறகு மக்களை வெளியேற்றுவது, நிவாரண முகாம்கள் அமைத்து மக்களுக்கு உணவு வழங்குவது மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிடையாது. வருடத்தின் முக்கால்வாசி நாட்களில் புயலின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை செய்துவிட்டு, மீதமிருக்கும் நாட்களில் புயலை அல்லது பேரிடரை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அறிவுடைமையாகாது.
நாம் என்ன செய்ய வேண்டும்:
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழகம் மட்டும் இதை செய்தால் போதுமா என்கிற கேள்வி நிறைய மக்களிடம் உள்ளது. உலகமும் செய்யவேண்டும், தமிழகமும் செய்யவேண்டும் என்பதுதான் பதில்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தை புயல் தாக்கிவருகிறது, இது ஆண்டிற்கு ஒருமுறை என மாறும், பிறகு ஆண்டிற்கு இரண்டு என்று வரும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து வளங்களும் பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படும். வேறு எந்த மக்கள் நல திட்டங்களும் செய்யமுடியாது.
கடந்த ஆண்டில் மட்டும் இயற்கை பேரிடர்களால் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 1.5% இழந்துள்ளது, வளர்ச்சி என்கிற கோட்பாட்டில் நாம் செய்ததின் விலையை நாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். சென்னை வெள்ளத்தால் 80,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு, கேரளா வெள்ளத்தால் 40,000 கோடி இழப்பு, இப்போது கஜ புயலால் பல்லாயிரம் கோடிகள் இழப்பு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும்?
1076 கி.மீ கடற்கரைகொண்ட தமிழகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1. கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழுமையான நிவாரணம்/அரசு வேலை வழங்கவேண்டும்.
2. தமிழக அரசு 8 வழிச்சாலைக்கு இடங்களை கையகப்படுத்தும்போது ஒரு மரத்திற்கு 40,000-50,000 வரை இழப்பீடு தருவோம் என்று அறிவித்திருந்தது. இப்போது தென்னை விவசாயிகளும், பாக்கு விவசாயிகளும் தங்களுடைய முழு வாழ்வாதாரங்கள் இழந்து நிர்கதியாக உள்ளார்கள், அவர்களுக்கு 8 வழிச்சாலைக்கு அறிவித்த அதே நிவாரணத்தை அளிக்க வேண்டும்.
3. புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் வாங்கியுள்ள கடன்கள், கூட்டுறவு வங்கி, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கிகள், தனிநபர்கள் என யாரிடம் கடன் வாங்கியிருந்தாலும் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், அந்த மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள கல்வி கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும்.
நீண்டகால நடவடிக்கைகள்
(6 மாதம் முதல் இரண்டு வருடத்திற்குள் செய்யவேண்டியவை)
1. தமிழகத்திற்கென
பிரத்தியோகமான காலநிலை மையம் அமைக்கப்படவேண்டும். அந்த மையம் தமிழகத்தின் காலநிலை கொள்கைகளை வடிவமைத்து திட்டங்கள் தீட்டும் மய்ய நிறுவனமாக, அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். இனிமேல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்குமான "நோடல் ஏஜென்சி"யாக இந்த மய்யம் இருக்கவேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் காலநிலை மாற்றத்தை மையப்புள்ளியாக வைத்தே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
2. தமிழகத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையங்கள், அணு மின்நிலையங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெரிய துறைமுகங்கள், கடற்கரையோரம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பெட்ரோலிய மண்டலங்கள் என அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்
3. ஏற்கனவே செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், அனல் மற்றும் அணு மின்நிலையங்கள் படிப்படியாக குறைக்கப்படவேண்டும். தமிழகத்தை முழுமையாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களால் இயங்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்
4. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் கைவிடப்படவேண்டும்
5. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் எந்த எந்த இடங்களில் சதுப்பு நிலங்கள் இருந்தனவோ அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்; சதுப்புநிலத்தில்தான் தான் அலையாத்திக்காடுகள் வளரும், புயல்களின் தீவிரத்தை மட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அவற்றிற்கு உண்டு.
6. அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி பொதுப் போக்குவரத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படவேண்டும். தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள 8வழி/6வழி சாலை திட்டங்களை கைவிடவேண்டும்.
7. இந்தியாவிற்கென காலநிலைச் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள், கடல் ஆய்வாளர்கள், காட்டுயிர் செயல்பாட்டாளர்கள் என அரசு நிர்வாகத்திற்கு வெளியே இருக்கும் முக்கியமான நபர்களைக் கொண்டு குழு அமைத்து அவர்களின் ஆலோசனையின் படி திட்டங்களை தீட்டவேண்டும்.
Arumai .Thanks. In addition, we have to cultivate palm 🌴 trees and bamboo trees besides of the sea shore and also inside Tamil nadu. Otherwise we have to struggle like this Kaja's distraction . Awake TN.
பதிலளிநீக்கு