புதன், 7 நவம்பர், 2018

நம்பிக்கைப் பூ :- புதுவை இரத்தினதுரை

மாரிமழை பொழியும்.
மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.

மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.

குன்றிக் குரல் நடுங்கி
குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான‌
புதுவாழ்வின் புலர்வுதினம்.

புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.

தாயழுதால்
அம்மா தளராதே
எனுமொற்றைச்சொல்லே
துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.

பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர‌
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ...!!!

ஈழத்துக் கவிஞர்
"புதுவை இரத்தினதுரை"

ஓவியம்:
கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக