கதை என்ற உடனே தொல்காப்பியத்தை முதல் நூலாக எடுத்து விளக்குவதும், தொல்காப்பிய நூற்பாவின் வழியே ஆராய்ச்சி செய்யும் மரபும் ஒருவகை மாதிரியாகத் தமிழ் நாட்டார் ஆய்வின் தொடக்கப்புள்ளியாக இருந்துவருகிறது. நாட்டார் வழக்காறுகளை ஆய்வு செய்யும் பொழுது, தமிழ் இலக்கண இலக்கியங்களை முதன்மைப்படுத்திச் சான்றுகாட்டி விளக்குவது என்பது நாட்டார் வழக்காறுகள் குறித்த ஆய்விற்குப் பொருத்தமாக இருக்குமா? என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
நாட்டார் வழக்காறுகளைச் சேகரித்து ஆய்வு செய்யும்போது “பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும் / பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்” எனும் தொல்காப்பிய வரிகளை உதாரணம் காட்டி நாட்டார் கதைகளை விளக்கிச் செல்வதைப் பார்க்க முடிகினறன. ஆனால், நாட்டார் கதைகள் மேற்சொன்ன இலக்கணமரபிற்கு அப்பாற்பட்டும் அமைந்திருக்கின்றன. நாட்டார் கதைகள் வாய்மொழியாகப் பரவலாக்கம் பெறக்கூடியன; எழுத்திலக்கிய மரபிற்கும் காலத்தால் முந்தியதாகும்.
இன்றைய சூழலில், நாட்டார் வழக்காறுகளை எழுத்தாக்கம் செய்யப்பட்டாலும், அவை வாய்மொழி மரபாகப் பரவலாக்கம் பெறக்கூடியன. இப்பண்புநிலை நாட்டார் கதைகளுக்கும் பொருந்திப் போகக்கூடியதாகும். நாட்டார் கதைகளுக்கு இரண்டு அடிப்படைப் பண்பு உண்டு. ஒன்று, காட்சி. மற்றொன்று, கற்பனை. இவைகள் இரண்டுமே குழந்தைகளின் கதைவெளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தை கதைசொல்லியாக உருவாகுதல் என்பது, தான் கேட்ட கதைகளிலிருந்தும் உருவாகின்றது. மேலும், குழந்தைகள் காணும் காட்சிகளைக் கற்பனைவழி சொல்ல முற்படும் போது கதைகள் பிறக்கின்றன.
ஒரு குழந்தைக்கு எடுத்துரைக்கும் கதையின் தோற்றம் புனைவு வெளியோடும் கற்பனையோடும் பயணமாகிறது. பிரபஞ்சத்தை அறிதலின் பொருட்டு கதை தோற்றம் கொள்கிறது. குழந்தைகள் கதை சொல்லியாகும் போது கதைக்குள் பாசாங்கு இருப்பதில்லை. கதை மொழிதலில் உலாவும் குழந்தைமனம் அறியாமையை அறியச் செய்வதற்காகவே மையம் கொள்கிறது. கதையை வாய்வழியாகச் சொல்லப்படுவதும், காதுகள் வழியாகக் கேட்கப்படுவதுமான பரிவர்த்தனை வாய்மொழி மரபாகவே நீடிக்கும்போதுதான் ஒரு கதை பல கதைகளாகப் புனையப்படுகிறது. அவை எழுத்தாக்கம் கொடுக்காத வரைக்கும் கதைகள் பல ரூபமெடுக்கின்றன. குழந்தைகளுக்குப் பிறர் கதை சொல்வதும், குழந்தைகளே கதைசொல்லியாவதுமான கிராமியச்சூழலில் வளரும் குழந்தைகள் கதைவிருப்பிகளாகவே வளர்கிறார்கள்.
முதன்முதலில் பெண்தான் குழந்தைக்குக் கதைசொல்லத் தொடங்குகிறாள். முதல் கதைசொல்லியான ஆதிப் பெண்ணிடமிருந்தே கதை உருக்கொள்கிறது. பெண் வயிற்றில் உருவாகும் கருவினைப்போலவும், நிலத்தில் முளைத்து வரும் ஒரு விதையைப் போலவும் வானத்திலிருந்து வரும் மழையைப் போலவும் கதை பிறக்கிறது.
தாயின் வயிற்றில் உண்டான குழந்தைக்குத் தொப்புள் கொடி வழியாக உணவு செல்வதுபோல தாய்பேசும் கதையும், தாய்பேசும் சொற்களும் குழந்தைக்குச் செல்கிறது. தாயின் கருவறையில் கேட்ட கதைகள் குழந்தை பிறந்து வளரும் சூழ்நிலைகளில் கதையைக் கேட்டுக்கொண்டே வளர்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அக்குழந்தைக்கு இவ்வுலகத்தைப் பாடல் வழியாகவும், கதை வழியாகவும் அறிமுகப்படுத்துகிறார். அக்குழந்தையும் கதை வழியாகவே இவ்வுலகத்தைப் பார்க்கிறது. உலகத்துப் பொருட்களின் மீதான கேள்விகளும் கதைக்குள் பொதிந்திருப்பதைக் கதைசொல்லிகள் அவிழ்க்கப்படாத முடிச்சுகளை அவிழ்த்து, குழந்தை மனதிற்குப் புதிரை விடுவிப்பது போல கதைசொல்லிகள் கதைகளைச் சொல்லி வருகிறார்கள். கதைசொல்லிகள் பலர் ஒவ்வொரு கிராமங்களிலும் குழந்தை மனதோடும் கதைகளோடும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தனக்குத்தெரிந்த கதைகளைச் சொல்வதற்குக் காதுகளைத் தேடுகிறார்கள். ஆனால் இன்றோ, வயோதிகமான கதைசொல்லிகள் ஊரின் மந்தையில் குழந்தைகளை வரவழைத்துக் கதைபேசிய காலம் மலையேறிப்போய்விட்டது. இப்போது வயோதிகமான தாத்தாவோ, பாட்டியோ பேரன் பேத்திகளுக்குக் கதைசொல்லி வருகிறார்கள். இவர்களிடம் கேட்ட கதைகளைக் குழந்தைகள் ‘இது என் தாத்தா சொன்னகதை என்றும், இது எங்க பாட்டி சொன்னகதை’ என்றும் தன்னோடு பழகும் மற்ற குழந்தைகளுக்குக் கதைசொல்லியாகுகிறார்கள். இப்படி, கதைகளைக் கேட்டுக்கேட்டு குழந்தைகளின் கதைவெளி இப்பிரபஞ்சத்தில் படர்கின்றன.
குழந்தைப் பருவத்தில் இருந்து சிறார் பருவம் வரை கதைசொல்லும் கதைசொல்லிகள் காடு, மலை, வயல், கடல் எனப் பல நிலவெளியில் வாழ்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கிராமங்களிலும் பல்லாயிரம் கதைசொல்லிகள் உலாவிக் கொண்டே இருக்கின்றனர். இக்கதைசொல்லிகள் கதைகளின் வழியாக, காடுகளையும் வயல்வெளிகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் மரம் செடிகொடிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் சுமந்துகொண்டே அலைவுறுகிறார்கள்.
கதையின் வரலாறு முழுவதும் பார்த்தோமென்றால், அவை நீதி சொல்வதைக் கடந்தும் வாழ்வியலின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் ஒரு கதைக்குள் கொண்டு வருவது. ஒரேநாளில் கதை நிகழ்ந்து முடிவடைவதல்ல. கதைகளுக்குள் பல ஆயிரம் நிகழ்வுகளைக் கற்பனைச் சிறகு வழியாகப் பறக்கச் செய்கின்றன. கதைகளில் வரும் சொற்கள் சிறகுகள் முளைத்துப் பறக்க உதவுகின்றன. கதைகள் காட்டும் உலகம் மிக விரிந்த தளத்தில் செல்லக்கூடியது. அவை ஏழு மலை தாண்டி, ஏழு வனாந்தரம் தாண்டி, ஏழு கடல் தாண்டிச் செல்ல வைக்கின்றன. கண்புலனுக்குள் அகப்படாதவைகளையும் அகப்பட வைக்கும் கதைகள் ஏராளம். கதைகளில் விரியும் கற்பனையை அளவிட முடியாதவையாகவும் அமைவதுண்டு.
கதைகளைக் கேட்பதற்கு என்று குழந்தைமனம் வேண்டும். ஒவ்வொரு சிறார்களும் கதைகளைக் கேட்டுத் தூங்குவது இன்றைய சூழலில் குறைந்து வருகின்றன. கதைகளின் வழியாக நாம் குழந்தைகளைக் காக்க வேண்டிய தேவையும் உள்ளன. நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களில் இருந்து குழந்தைகளை மீட்கக் கதைகள் உதவும். கிராமங்களின் மூதாதையரிடமிருந்து உதிரும் வாய்மொழிக் கதைகள் இன்றைய தலைமுறைக்கான கதைகளும் நாளைய குழந்தைகளின் வாழ்வியலுக்கானதாகவும் இருக்கின்றன.
மனம், உடல் இவைகளின் வளர்ச்சி சார்ந்த இயக்க சக்தியைக் கதைகளிலிருந்து பெறமுடியும். ஒரு கதை வெறும் நீதியை மட்டும் சொல்லிச்சென்றால் இவ்வுலகில் பல நீதிமான்கள் உருவாகியிருப்பார்கள். கதைகள் வழியாகப் பெறப்படும் நீதிக்கு அப்பாற்பட்டு கதை சொல்லிகள் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கதையைக் கேட்கும் காதுகளும் நியாயங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்காமல் கடந்து செல்கின்றன. கதைகளின் வழி அவிழ்க்கப்படாத முடிச்சுக்களிலிருந்து பல கதைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கதைகளுக்கு எந்த நிலையிலும் மரணமே இல்லை. கதைசொல்லிகள் கதைகளின் வழியாக பெயரற்றுப் போகிறார்கள். இங்கு கதைசொல்லிகள் எனும் பொதுமைப் பெயரிலே வாழ்ந்துகொண்டு இருப்பதைப்போல, புதுப்புது கதைசொல்லிகள் புதுப் பிறப்பெடுக்கிறார்கள். இதுதான் நாட்டார் கதைகளின் சிறப்பு.
கதை சொல்லுதல் எனும் உறவாடுதல் வழியாக எப்பொழுதும் தொடர்கின்றன. ஒரு குழந்தையிடம் இவ்வுலகம் எப்படி உருவானது? என்று கேட்டால் அடுத்தகணமே அக்குழந்தை கதைசொல்லியாகி விடுகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அந்தக் குழந்தையிடம் ஆயிரம் கதைகள் உருவாகும். இந்த உலகத்தில் மலைகள் எப்படி உருவாகின? இயற்கை வளங்கள் எப்படித் தோன்றின? என்று கேட்டால் அதில் இருந்து பல கதைகள் சொல்வார்கள். மலை எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்துத் தங்கியது? எனும் வினாவோடு கதை தொடங்குகிறது. மலைகளுக்கு முன்பெல்லாம் சிறகுகள் இருக்குமாம். அதனால் மலைகள் ஓர் இடத்திலிருந்து நிலைத்துத் தங்காமல் சிறகுகளை வைத்துக்கொண்டு பறந்து கொண்டே போகுமாம். மலைகள் ஓரிடத்தில் நிலைத்து இருந்தால் தான் எல்லோருக்கும் பயன்படும் என்று மனிதர்கள் நினைத்து அந்த மலையில் இருக்கக்கூடிய சிறகுகளை வெட்டுகிறார்கள். வெட்டப்பட்ட மலைகள் ஆங்காங்கே அப்படியே நின்று விடுகிறது. ஒரு சில மலைகள் பறந்துபோய் கடலுக்கு அடியில் ஒழிந்து கொள்கின்றன. ஒழிந்துகொண்ட மலைகள் ஒரு சில நேரத்தில் எட்டிப்பார்க்கும். கடல் மட்டத்திற்கு மேல் நம்மை வெட்டுவதற்கு வெளியில் நின்று கொண்டிருப்பார்கள் என்று அவ்வப்போது கடலுக்கு அடியில் ஒழிந்திருக்கும் மலைகள் எட்டிப்பார்ப்பதுண்டு. இவ்வாறு மலை பிறந்த கதையைக் குழந்தை உலகிலிருந்து பார்க்கலாம்.
நிலா,சூரியன் எவ்வாறு வானத்திற்குச் சென்றன? ஏன் ஆமை முதுகின் மேல் ஓடுகள் உடைந்து இருக்கின்றன? இப்படி எத்தனை எத்தனை வினாக்களுக்குக் கதைகளில் விடைகளைத் தேடுகிறார்கள் குழந்தைகள்.
குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மட்டும் கதைகள் உருவாக்கவில்லை. குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது கூட கனவுலகில் கதைகளை அசைபோட்டுப் பார்க்கிறார்கள். எழுந்து குழந்தைகள் கனவில் கண்ட கதைகளைச் சொல்லவும் முற்படுகிறார்கள். ஒரு சில குழந்தைகள் சொல்கிறார்கள். ஒரு சில குழந்தைகள் மறந்து விடுகிறார்கள். அப்படி குழந்தைகள் சொல்லக்கூடிய கதைகளில் குழந்தைகளுக்கான நியாயங்களைத் தேடுகிறார்கள். ஒரு குழந்தை சொன்ன ஒரு கதையில், ஒரு நாய் ஒரு குழந்தைக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. அது எப்படிப்பட்ட நாய் என்றால் நான்கு கால்களை உடைய நாயல்ல. ஒரு கால் மட்டும் ஊனமான நாய். நாய்கள் விற்கும் கடைக்கு நாய் வாங்கச்சென்ற போது, அந்த ஒரு கால் ஊனமான நாயை எவருமே வாங்கிச் செல்லவில்லை. அந்த நாயோ மிகவும் கவலைப்படுவதுண்டு. கடைக்குச் சென்ற ஒரு குழந்தையோ எனக்கு இந்த நாய்தான் வேண்டும் என அழுகின்றது. இதைத்தான் நான் வளர்ப்பேன் என்று அந்தக் குழந்தை ஊனமான நாயை அதிக விலைக்கு வாங்கிச் செல்கிறதாம். இந்தக்கதை ஒரு குழந்தையிடம் இருந்து உருவான கதைதான். குழந்தையின் பேரன்பின் அரவணைப்பைக் காட்டக்கூடிய நாயின் கதையா அல்லது இதுதான் நல்லது; இது கெட்டது என்று இவ்வுலகத்தின் கற்பிதங்களும் நியாயங்களும் யார் உருவாக்கினார்கள்? இந்தக் கற்பிதங்களையும் நியாயங்களையும் குழந்தையின் மனவெளி கதையின் வழியாக உடைத்தெறிகின்றன.
குழந்தைகளைக் கதை கதைக்க விடுங்கள். அப்பொழுதுதான் ஒரு குழந்தையிடமிருந்து கதைகள் பிறக்கும். குழந்தையின் அறிவும் புரிதலும் விசாலமடைகின்றது. குழந்தைமனத்தின் மூலம் பிறந்த கதைகள் உயிர்பெற்று இப்பூமியில் உலாவுகின்றது.
கதைகளின் வழி கற்றல் நிகழ்வு சிறுவயதில் இருந்தே தொடங்குகிறது. பள்ளிக்குச் சென்று கற்பதற்கு முன்னதாக ஒரு குழந்தை நாட்டார் வாய்மொழிக் கதைகளின் வழியாக நினைவாற்றலை வளர்க்கக்கூடிய கற்றல் செயல்பாட்டின் ஆரம்பநிலையைக் கதைவழிக் கற்றுக்கொள்கிறது. கதை சமயோஜித புத்தியை வளர்க்கிறது. கதைகேட்கும், கதை சொல்லும் குழந்தைக்கு மனன சக்தியும் உருவாகிறது.
ஒரு கதையில், எறும்பும் உள்ளானும் நண்பர்களாக இருப்பதாகக் கதை தொடங்குகிறது. ஒரு நாள் எறும்பு இறந்துவிடுகிறது. இறந்தபின்னர் எறும்பைப் புதைத்துவிட்டு, உள்ளான் சோகமாக ஆல மரத்தடியில் அமர்ந்து இருக்க, அங்கு வந்த எருமை மாடு கேட்கிறது. என்ன சோகமா இருக்க? அது ஒரு பெரிய கதை என்று கூற, என்ன என்று எருமை மாடு கேட்க, ‘என் நண்பர் எறும்பு செத்துருச்சு. அதனாலதான் சோகமா இருக்கேன். என்று கூறகிறது உள்ளான். இப்படி இக்கதையில் எறும்பு, உள்ளான், எருமைமாடு, ஆலமரம், பறவை, மீன்கள், மீனவன், மீனவனின் மனைவி, மீனவனின் மகன், பள்ளி ஆசிரியர், பள்ளித்தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியரின் மனைவி இப்படி இப்படித் தொடரும் கதாபாத்திரங்களின் உரையாடல் நிகழ்கின்றன. இந்தக் கதையில் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், ஒவ்வொரு நபரும் வந்து கேட்பதற்கு அதைச் தொடர்ச்சியாகச் சொல்லும் முறையைப் பொருத்திப் பார்க்கக்கூடிய கேட்டல் திறனைக் கதைக் கேட்போர் பெறுகிறார்கள். அதாவது இக்கதையில் தொடர்ச்சியாக வரக்கூடியவை. கதை கேட்போர், இதற்கு அடுத்ததாக இதுதான் வரும் என்று சரியாக யூகித்துச் சொல்லக்கூடிய திறமை பெறுகிறார்கள். இது கற்றல் கேட்டல் திறன் சார்ந்ததாக அமைகிறது. அதாவது எறும்பு செத்து, உள்ளான் மொட்டை எடுத்து, எருமைமாடு கொம்பு ஒடுஞ்சு, ஆலமரம் பட்டுப் போயி, கொக்குக்கு கண்ணு போயி, ஆத்துத் தண்ணி கலங்கிப் போயி, மீனெல்லாம் மயங்கி மிதக்க, மீனவன் வலையைப் பிய்க்க, மீனவன் பொண்டாட்டி சட்டிபானைய ஒடைக்க, மீனவனோட மகன் சிலேட்ட ஒடைக்க, இப்படி கதை தொடர்ந்து கொண்டே போகும். வினா விடை என்கிற தன்மையில் இக் கதை அமைந்துள்ளது. இதுபோன்ற பல கதைகள் கிராமங்களில் வழங்கி வருவதைப் பார்க்க முடியும். இதே போன்று ‘சித்தெறும்பு சித்தெறும்பு செத்தாயோ’ (ஒருசில வட்டாரங்களில் ‘சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ’ என்று கதை வழங்கி வருகிறது) என்கிற கதையும் கேட்டல் திறனை வளர்க்கக் கூடியதாக அமைகிறது.
குழந்தைகளின் மனதையும் அறிவையும் வளமைப்படுத்தும் தன்மைகளில் அமையும் குழந்தைகளுக்கான கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வதும், குழந்தைகளைக் கதைசொல்ல வைப்பதும் கிராமங்களில் கூட அரிதாகி வருகின்ற இன்றைய சூழலில், கதைகள் வழி குழந்தைகளை வளப்படுத்த வேண்டியதும் அவசியம்.
குழந்தையின் மனவெளியில் விரியும் இவ்வுலகம் பாசாங்குகள் அற்ற வார்த்தைகளை உதிர்ப்பதும், அவைகள் வயோதிகக் கதைசொல்லிகளின் வாழ்வோடு ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன. ஒவ்வொருவரும் கதைசொல்லிகளாக ஆகும்போது குழந்தை போலும் வயோதிகரைப் போலும் உருமாறி மெல்லிய சிறகில் பறக்கும் பறவையாகிறோம். நாட்டார் கதைகளில் விரியும் குழந்தைகளின் வெளி அப்படிப்பட்டது தான்.
*
ம.கருணாநிதி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.625 514.
*
/ஏர் இதழ் வெளியீடு/ 05.06.2020/