சனி, 9 மே, 2020

குதிரை வீரன் அழகம்மாள் காதல்: உள்ளூர்க் கதை வழக்காறும் வரலாறும்:- உதியன் பெருஞ்சேரலாதன்

உலகம் இருக்கும் வரை காதல் இருந்து கொண்டே இருக்கும்;காதல் இருக்கும் வரை உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதற்கு எங்களூர் எல்லைச் சாமிகளே சாட்சி.
அவர்களைப் பற்றியகதை அதைத்தான் வரலாறாய்ச் சொல்கிறது.

அப்படித்தான், குதிரைப்படை வீரனுக்கும் செல்வச் சீமாட்டியாக வளர்ந்துவந்த அழகம்மாளுக்கும் காதல் அரும்பத் தொடங்கியது. அழகம்மாள் அழகில் மட்டும் அல்ல; சகல அந்தஸ்திலும் ஏழு அண்ணன்மார்கள் புடைசூழ வளமான வாழ்வை வாழ்ந்து வந்தவள்.

நாடாண்ட மன்னவனுக்குச் சேவகம் செய்யும் குதிரை வீரன் ஒருவன் அழகம்மாள் வாழும் வீதியில் தினமும் சென்று வருவது வாடிக்கை தான். அளவான உயரம்... அடுக்கடுக்கான கட்டுடம்பு.... கொண்டையிட்ட தலைமுடி. கூடவே ஒரு வேட்டை நாய். இப்படித்தான் அந்தக் குதிரை வீரன் காட்சியளித்தான்.

கலைந்த கூந்தலைக் காயவைக்க மாடியில் தோழிகளோடு உலாவரும் அழகம்மாளின் கண்களுக்குக் குதிரை வீரனின் தோற்றம் கண்ணுக்குள் புகுந்தது....
அதோடு மட்டுமல்ல; பருவப் பெண்ணல்லவோ அழகம்மாள். அவளைப் பாடாய் படுத்தியது குதிரை வீரனின் நினைவு. காதல் அவஸ்தை அனைத்தையும் பெற்று ஆண்டாளாகவே மாறினாள் அழகம்மாள்.

தோழியைத் தூது விட்டாள்... துயரத்தை முதன் முதலில் சந்தித்தாள். காதலைக் குதிரைவீரன் ஏற்கவில்லை. மறுமுறை தூது விட்டால் அழகம்மாள்.... குதிரைவீரன் நேரில் பார்க்க வருகிறேன் என்று தோழியிடம் கூறி விடைபெற்றான்.

மறுநாள் மாலை வேளை, அந்த வனப்பகுதியில் அவளைச் சந்திப்பதாக மடல் கொடுத்தான் குதிரை வீரன். மடல் கிடைத்த மகிழ்ச்சியில் அழகம்மாள் அதிக அழகானாள். நந்தவனத் தோழிகள் புடைசூழ நர்த்தனம் புரிந்தது. குதிரைவீரன் வருகை புரிந்தார். குதிரை, உடைவாள், நாய் இவற்றுடன்....

அழகம்மாள் இந்திரலோகத்து இளவரசியாய் அழகின் கொடையாய் ஒய்யார நடை பயின்று நாணத்துடனும் மடத்துடனும் முகம் மறைத்து நிலாப் பெண்ணாய் முகம் காட்டினாள். குதிரை வீரனுக்குப் பெருமகிழ்ச்சி.. அழகை ஆராதனை செய்கின்றான் தன் கண்களால். முடிவு செய்துவிட்டான் குதிரைவீரன். வாழ்ந்தால் இவளுடன் மட்டுமே என முடிவாகிவிட்டது.

அவளிடம், என்னுடன் வந்துவிடு என்றான். அவளும் சம்மதித்தாள். குதிரையில் வைத்துக் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதியை நோக்கி குதிரை ஏறிச் செலுத்தினான். குதிரை வீரன், அழகம்மாள் உடன் கூடவே நாயும் விரைந்து ஓடி வந்தது.

இளைப்பாறவும் ஓய்வெடுக்கவும் வெங்கலக் குறிச்சிக் கண்மாய்க்குள் இருவரும் தஞ்சம் ஆனார்கள். நாணல்கள் சூழ்ந்த இடம். நாட்டுக் கருவேல மரங்கள் அரணாகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து இருவரும் துயில் கொண்டனர்.

அப்போது, சாரட் வண்டியில் இருந்து இறங்கி ஓடி வந்த ஏழு பேரும், அழகம்மாளையும் குதிரை வீரனையும் கண்டறிந்தனர். அவிழ்ந்திருந்த கூந்தல் பூமிக்குக் குடை  விரித்து இருந்த கார் கூந்தலைப் பிடித்து அரிவாளால் ஒரே வெட்டு. குடைசாய்ந்தாள் அழகம்மாள் பூமியில். அலறித் துடித்தான் குதிரைவீரன். உடைவாளை எடுத்து எழுவரையும் காயப்படுத்தினான். அழகம்மாளின் உடன்பிறந்தவர்கள் என்பதற்காகவே உயிருடன் தப்பிப் பிழைத்தார்கள் அவர்கள்.

குருதி ஓடிய நிலையில் மயங்கிக் கிடந்த அழகம்மாளைத் தன் தோளில் கிடத்திக்கொண்டு ஆட்கள் உள்ள இடத்தை நோக்கி ஓடிவந்தான் குதிரை வீரன். கண்மாய்க் கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனைக் கண்டு அலறியபடி தண்ணீர் கேட்க, அவனோ பயந்து தண்ணீர் இல்லை என்று ஆட்டின் பாலைக் கொடுக்க முன்வந்தான். பால் அருந்திய நிலையில் அழகம்மாள் இடையனை நோக்கி உன் குலம் வாழ்க என்றாள் கண்ணீர் மல்க...காதலனைக் கட்டி அணைத்து முத்தம் இட்டு மடிந்தாள்அழகம்மாள்.

தன் உடைவாளை எடுத்து, குதிரையையும் நாயையும் வெட்டிச் சாய்த்துவிட்டு, தன் உடைவாளை நெஞ்சில் சொருகினான் குதிரைவீரன்.

சாதி மதம் பார்க்கும் காதல் கொலைஞர்கள் அந்தஸ்தும் பார்த்தார்கள் அழகம்மாளின் காதலில் ...

வன் கொலையாய் மரணித்த அழகம்மாளும் குதிரை வீரனும் ஊரைக் காக்கும் எல்லைச் சாமிகளாயினர் என்ற உள்ளூர்க் கதை, காலங்காலமாக வழங்கி வருகின்றது.

காதலர்கள் வாழவில்லை; காதல் சாகவில்லை என்பதை, எல்லைச் சாமிகளாக மக்கள் வழிபடும்  குதிரைவீரன் அழகம்மாள் பற்றிய வழக்காற்றுக் கதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

//ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெங்கலக் குறிச்சி ஊராட்சி, வெங்கலக் குறிச்சியில் அமைந்துள்ள அழகம்மாள் கோவில் கதை.//

-உதியன் பெருஞ்சேரலாதன்.
09.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 09.05.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக