திங்கள், 4 மே, 2020

இருள் வாழ்வுக்கு ஒளிகாட்டிய தாய் விளக்கு: அன்பு தவமணி

அம்மா என்ற சொல் இந்த பூமிப்பந்தில் மிக முக்கியமானது. இந்த அர்த்தத்தில் வெவ்வேறு உச்சரிப்பில் பல்வேறு நாடுகளில் சொற்களில் கையாளப்பட்டாலும், அங்கு அந்தச் சொற்களுக்கு இருக்கக்கூடிய உறவு முறைகளுக்கும் தமிழகச் சூழலில் இருக்கக்கூடிய அம்மா, தாய், தாய்மை என்ற உறவுகளுக்கும் உள்ள பந்தம் கண்டிப்பாக வேறுபாடு உடையதாகதான் இருக்கும்.

அம்மா என்ற சொல் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறதோ அல்லது இருந்ததோ என்று தெரியவில்லை. ஆனால், என்னைப் பொருத்தவரை வித்தியாசமானதாகவும்; விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணங்களும் பல்வேறு உண்டு.

நான் சிறுபிள்ளையாக இருக்கும் காலந்தொட்டே அம்மாவின் மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஏற்பட்டது. ஏனென்றால், நான் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மாலை நேரத்தில் வீட்டுப்பாடம் செய்தாயா? என்று கேட்பார்கள். அப்போது வீட்டில் மண்ணெண்ணைத் தீபம்தான். அந்தத் தீபத்தில் இருந்து வரும் புகையும், இரவு நேரம் படிப்பதும் எனக்குப் பிடிக்காது. அதுபோக, ஆறரை ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் இருந்தது. அதனால், என்னவோ தெரியவில்லை அம்மாவைப் பிடிக்காமல் போனது.

தொடக்கக்கல்வி முடிந்தபிறகு, ஆறாம் வகுப்புப் படிப்பிற்காக நகரத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் ஊர்ப் பக்கத்தில் உள்ள ஒத்தக்கடையிலும் மேல்நிலைப்பள்ளி இருந்தது. ஆனால், என்னை மதுரை நகரத்தில் உள்ள இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். என் விருப்பத்துக்கு மாறாக விடுதியில் வேறும் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அதற்குக் காரணமும் என் அம்மாதான். அங்கிருந்தும் தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் வழங்கவில்லை. என்னோடு சேர்ந்து என் ஊரைச் சார்ந்த உறவினர்கள் நாலு பேர் படித்தார்கள். ஏதோ ஒரு வழியில் ஆறாம் வகுப்பு கடந்துவிட்டேன். ஏழாம் வகுப்பில் என் உறவுக்காரர்கள் விடுதியை விட்டு நின்று விட்டார்கள். நான் எவ்வளவோ என் தாயிடம் மன்றாடினேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீ எப்படியானாலும் விடுதியில்தான் இருக்க வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தி விட்டார். நானும் வேறு வழியில்லாமல் விடுதியில் இருந்தேன். அப்பொழுது என் உறவினரிடம், நீங்கள் ஊரிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி வரும்போது என் வீட்டிலிருந்து எனக்குச் செலவுக்குப் பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுவேன். அவர்கள் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ அல்லது மறந்தோ என எனக்குத் தெரியவில்லை. பணம் வாங்காமல் வருவார்கள். இதுவும் என் தாயின் மீது வெறுப்பைக் காட்டியது.

இப்படியே, எட்டாம் வகுப்பும் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் பாதி படித்து அரையும் குறையுமாக வீட்டுக்கு வந்தும் போயுமாக இருந்து பயணப்பட்டேன். அப்பொழுதே எனக்கும் என்னுடைய தாய்க்கும் முரண்கள் ஆரம்பித்தது எலியும் பூனையுமாக. ஒருவழியாகப் பத்தாம் வகுப்பை முடித்து நான் படித்த இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் நான் கேட்ட பாடப் பிரிவான அறிவியல் பிரிவு கிடைக்காத காரணத்தால், ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டேன். இங்கு தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், பிரச்சனை வேறு விதமாக எனக்கும் என் அம்மாவுக்கும் உருவானது.

என் பள்ளியில் படிக்கக் கூடிய இன்னொரு மாணவ நண்பர் வீட்டைத் தாண்டித்தான் என் அம்மா கடைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அந்த நண்பர் அவர் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து சத்தமாகப் படிக்கும் பழக்கம் உடையவர். அவரைப் பார்த்து வந்த பிறகு, உன் உடன் பயிலும் நண்பர் எவ்வாறு படிக்கிறார்? நீ படிக்கவில்லையே என்று எனக்குப் பலவிதமான நெருக்கடிகளையும் சிரமங்களையும் கொடுப்பதாகவே நான் உணர்ந்தேன். அந்த மாணவன் நண்பர்தான்.

ஒருவழியாகப் பன்னிரண்டாம் வகுப்பு கடந்த பின்பு, என்னுடைய அம்மாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கர்ப்பப் பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரொம்பத் திண்டாட்டம் ஆன அந்தச் சூழ்நிலையில், எனக்கு கோவாபரேடிவ் என்ற ஒரு படிப்புக்கும், ஓர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி, தமிழ்ப் பாட பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருந்தபோது, ஒரே நாளில் எனக்கு அழைப்பு வந்தது. அம்மா கோவாபரேடிவ் போ என்றார்கள். அப்போது எனக்கும் அவருக்கும் சண்டைதான். கல்லூரிக்குத்தான் போவேன் என்ற எனக்கு, என்னுடைய பெரியப்பா அவர்கள் அழைத்துக்கொண்டு கல்லூரியில் பிஎஸ்சி ஜீவாலஜி சேர்த்துவிட்டார்கள். இரண்டு நாள் படித்தேன். ஆங்கிலவழிக்கல்வி எனக்கு ஏறவில்லை. வீட்டுக்கு வந்து விட்டேன். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அந்த நேரத்தில்தான் கல்லூரிப் பேராசிரியர்களின் மாபெரும் போராட்டம் ஒன்று நடந்தது. பல்கலைக்கழக மானியக்குழுவை எதிர்த்து என்று நினைக்கிறேன். அது முடிந்த பிறகு வெயிட்டிங் லிஸ்டில் எனக்குத் தமிழ் அனுப்பியிருந்தார்கள். உடனே போய் பழைய கட்டணத்தை மாற்றி தமிழ்ப் பட்டப் படிப்பில் இளங்கலை சேர்ந்து கொண்டேன். அங்கேயும் விடுதி வாழ்க்கைதான். இப்படி தொடர்ச்சியாக நான் வீட்டுக்கு ஒரே ஒரு ஆணாக மட்டும் பிறந்த என்னோடு வேறு பிள்ளைகள் கூட இல்லை. அப்படி இருந்தும் நான் ஊரில், வீட்டில் இல்லாமல் வெளியில் படித்த நாட்கள்தான் அதிகம்.

நிறைய பேர்கூட என் முன்னால் வைத்தே என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறார்கள். பிள்ளையைப் பெற்றுவிட்டு வெளியில் வைத்துப் படிக்க வைக்கிற உனக்கு, உன் மகன் மீது பாசம் இல்லையா என்று. அப்பொழுது அவர் என்ன நினைத்தார்? என்ன பதில் சொன்னார்? என்று கூட எனக்கு இப்போது நினைவிலில்லை. இப்படியே போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கல்லூரிப் படிப்பு ஒரு வகையில் முடிவடைந்தது.

அதன் பின்பு, கல்வியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றும், ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்ட முடியாத சூழலில் பல்கலைக்கழகத்தை நோக்கி பயணப்பட நேர்ந்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தேன் நான். எனக்கு முன்பாக ஒரு நபர் சிபாரிசு மூலமாக முந்திக் கொண்டு சென்றுவிட்டார். என்னோடு கதவு அடைக்கப்பட்டது. அந்த முதுகலைத் தமிழ்ப் படிப்புக்கு வேறு வழியில்லாமல் போனது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பைப் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் துவங்குகிறேன்.

அதன் பிறகு, நான் பயணப்பட்ட வாழ்க்கை முறைகள் வேறு. அது ஒரு காலம். நான் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் ஒட்டுமொத்தமாக இருட்டாய் இருக்கிறது. ஆனால் நான் நடந்து வந்த பாதை மட்டும் என்னவோ வெளிச்சமாகத் தெரிகிறது. காரணம், ஒருவேளை பத்து மாதம் இருட்டில் வயிற்றில் வைத்திருந்த காரணத்தால் என்னவோ, ஒட்டுமொத்தமாக என் வாழ்க்கையின் வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறார் அம்மா.

ஆம், ஓர் அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியப் பணியில் இருக்கிறேன்.

நான் கடந்து வந்த பாதை மட்டுமே வெளிச்சமாக இருக்கிறது. தெரு விளக்கு இல்லாத ஊரில் பிறந்த எனக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்தைத் தந்தது என் தாய் மட்டுமே. ஆனால், நான் நேரடி வாழ்க்கையில் இன்றுவரை எலியும் பூனையுமாகத்தான் இருந்து வருகிறேன். அது என்னவோ தெரியவில்லை. ஆனால், வெளி உலகில் அவர் என்னை விட்டுக் கொடுத்ததில்லை, நான் அவரை விட்டுத் தந்ததும் இல்லை. ஆனாலும், இதுவரையிலான நேரடி வாழ்க்கை எலியும் பூனையுமாகவே வாழ்ந்து வருகிறோம்.

என்னைப் பொருத்தவரை, இந்தத் தொப்புள்க் கொடி உறவு தொடர்ந்து கொண்டேதான்  இருக்கும்; ஓடிக் கொண்டேதான் இருக்கும்; உறைந்து போகாது. அன்பின் எள்ளளவும் குறையாது உயிர் போகும் வரை.

அன்பு தவமணி
04.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 04.05.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக