நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் என்பது, என்னுடைய தந்தையின் ஊர் அல்ல. என் தாய் பிறந்த மண்ணில் தான் நான் பிறந்ததில் இருந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
தமிழ்ச் சமூகத்தில் ஒருவருக்குப்
பிறந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து போவது என்பது மிகவும் துயரமான சம்பவம். அதை ஏற்றுக் கொள்ள ஒவ்வொருவருடைய மனமும் மறுக்கத்தான் செய்யும். அந்த வகையில், என் தந்தைக்கு எப்படி இருந்ததோ என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் அந்த இடத்தை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள் என்றால், அது உடலிலிருந்து உயிர் பிரிவதற்குத்தான் சமம்.
இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். குறிப்பாக, நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு நடந்ததையே கொள்ளலாம். இதுபோன்று பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும், வறுமையின் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் நிறைய மக்கள் தான் பிறந்த இடத்தை விட்டுப் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய மன நிலையை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிறப்பிடம் பற்றிய ரணம் இருக்கத்தான் செய்யும்.
அந்தவகையில், என்னுடைய பிறந்த ஊரில் இருந்து எனக்கு நிகழ்ந்த பிரிவு என்பது கொஞ்சம் விசித்திரமானது. அதனால் என்னவோ எனக்கு அந்த நெகிழ்வான தருணம் என்பது இல்லாமல் போய்விட்டது.
இன்னொரு வகையில், நாம் வாழும் நாடு என்பதும் தாய்நாடு, நாம் வாழும் பூமி என்பது தாய் பூமி, நம் பூமியில் ஓடும் நதிகள் என்பது பெண்பாற் பெயர்களாகவே உள்ளது .
இப்படி நம் சமூக அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் நீங்கள் வாழ்வது தந்தையின் ஊராக இருக்க வேண்டும். சொத்து என்பதும் ஆண்களுக்கு வழங்கப்படும். சமூக அமைப்பும் ஆணாதிக்கச் சமூகமே. இது ஒருபுறம் இருக்க, எனக்குக் கிடைத்த வாய்ப்போ என் தாய் பிறந்த ஊரிலேயே நான் பிறந்து இருக்கிறேன்.
அதனால் எனக்கு அப்பா பிறந்த ஊர், அந்த ஊரின் மீதான நாட்டம், ஈர்ப்பு, பிடிப்பு என்று ஏதும் பெரிய அளவில் இல்லை.
ஒருவேளை, நான் தந்தை ஊரில் பிறந்து இருந்து, அங்கு கொஞ்ச காலம் வாழ்ந்து இருந்து, அதன் பிறகு தாய் ஊருக்கு வந்திருந்தால் எனக்கு அந்த வலியும் வேதனையும் எல்லோருக்கும் போல எனக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு நகரத்திற்கு அழைத்துச் சென்றதுதான் அப்பாவைப் பற்றிய பெரிய அளவிலான நினைவு. அப்போ எனக்கு 10வயது . அதற்கு முன்பு வரை அவரைப்பற்றித் தெரியவில்லையா என்ற கேள்வி எழும். அப்படி என்றால் தெரியும். எப்படி தெரியும் ?
அவர் வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்த்து வரக்கூடியவர். ஒரு வாரம் அல்லது10 நாள் என்று வேலை பார்ப்பவர். விவசாயம் எந்தெந்த ஊர்களில் நடக்கிறதோ, அங்கெல்லாம் கதிர் அடித்த பிறகு அந்த வைக்கோல்களைக் கட்டி மாட்டு வண்டிகளில் கேரளாவிற்கு ஏற்றி விடும் வேலை. வேலை முடிந்து பாரம் ஏற்றிய மாட்டுவண்டி மூலமாக மதுரை வழியாக வரும்போது அவர் இறங்கி வீட்டிற்கு வருவார்.
எனக்கு ஆறு ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் உள்ளதால், நான் அவர் வரும்போது உறங்கி விடுவேன். அதன்பிறகு உள்ளூரிலும் அவருக்கு வேலை இருக்கும். உள்ளூர் கதிர் அடிப்புக் காலங்களில் அப்பொழுது அவர் காலையில் என் தலைமாட்டில் 10 பைசா 20 பைசா என்று எனக்குச் செலவுக்கு வைத்துவிட்டு வேலைக்கு 5 மணிக்கே சென்றுவிடுவார். நான் எழுந்து ஆவலுடன் தலையணையைப் புரட்டுவேன். அந்த 10 பைசா 20 பைசாவா என்ற தொகை தான் என் முக மலர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். அதுதான் அவர் மீது நான் செலுத்தும் பாசமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் மாலை வெளியூர் சென்று வரும்போது சில சுவராசியமான நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது.
அவர் வரும்போது கதவு திறக்கும் சத்தம் கேட்கும். ஏதோ ஒருவகையான அரைகுறை முழிப்பு. அதன் பிறகு பக்கத்தில் அமர்ந்து பெயர் சொல்லி அழைத்து எழுந்திரு எழுந்திரு என்றும் கூப்பிட்டு, இந்தா புரோட்டா சாப்பிடு என்பார். அப்பொழுதெல்லாம் பாலித்தீன் கவரில் தனியாக சால்னா வாங்கக்கூடிய பழக்கம் இல்லை. கடையிலேயே இலையில் புரோட்டாவைப் பிச்சுப் போட்டு அதில் சால்னாவும், அதற்குள் ஒரு ஆம்பளைட் வைத்து கட்டித் தருவார்கள். அதை என் முகத்திற்கு முன்னால் திறக்கும்போது அந்த வாடை என்னை எழுப்பி விடும். அதன் பிறகு அரைத் தூக்கத்தில் அந்த புரோட்டாவைத் தின்றிருக்கிறேன். அதன் பிறகு அவர்கள் வாயைக் கழுவி விட்டு தண்ணீர் கொடுத்து அப்படியே தூங்கவைத்த நாட்கள் அதிகம். அதை காலையில் கேட்பார்கள். நான் சாப்பிட்டதுகூட எனக்கு நினைவில் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்லித்தான் அதை நான் தெரிந்து இருக்கிறேன்.
புரோட்டா வாங்கி வராத காலங்களில் அதிகமாக எனக்குக் கிடைத்த தின்பண்டம் மிச்சர். அந்த மிக்சர் நான் சாப்பிடும் நேரமும் இதேபோல அரைத்தூக்கம்தான். அதைச் சாப்பிடும்போது காரம் அதிகமாக இருக்கும். அதனால் அதை அள்ளி ஒரு டம்ளரில் போட்டுக்கொண்டு அதில் பச்சைச் தண்ணீரை ஊற்றி, அதன் பிறகு அதைப் பிழிந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ற நாட்கள் ஏராளம். சில நாட்கள் ஞாபகம் இல்லாமலேயே தின்று இருக்கிறேன். இதையும் மறுநாள் காலையில் எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார்.
சில காலங்களில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மார்கழி மாதம் கிட்டத்தட்ட எனக்கு ஏழு எட்டு வயதில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவதை வழக்கமாகக் கொண்ட அவர், எனக்கும் அந்த மாதிரியான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தினார்கள். அப்போது விரதம் இருக்கக் கூடிய ஒரு வழக்கம் இருந்தது.கட்டுப்பாடுகள் கடுமையானதாக இருக்கும். பெண்கள் குறிப்பாக அம்மாகூட வீட்டுத் தூரமான காலங்களில் கொடுமையான முறையில் அவர்கள் வழி நடத்தப் பட்டார்கள்.
எனக்கு இந்தக் காலங்களில் கிடைத்த ஒரு சுவையான நிகழ்வு, அனுபவம் என்னவென்றால், ரோட்டுக் கடையில் எனக்குத் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு எங்க அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் ஒரு அய்யர் கடை.
பூரிக் கிழங்கு என்றால் ஒரு அலாதிப்பிரியம். நான் போய் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற சுதந்திரமும் எனக்கு இருந்தது. இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அந்த இரண்டு மாதகாலம் அவ்வாறு இருந்ததால் எனக்கு அவர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், தாயைவிட தந்தை மீது எனக்கு ஏற்பட்ட பிரியங்கள் இந்த வகையில்தான்.
அதன் பிறகு, ஆறாவது பள்ளியில் சேர்த்து, பின்பு விடுதியில் சேர்த்து விட்ட பிறகு, அவருடைய பணி நின்று விட்டது. என் கல்விப்புலம் சார்ந்த ஒட்டுமொத்த கவனிப்பும் என் தாய் சார்ந்தே ஆகிவிட்டது. அதனால் என்னவோ தாயின் மீது வெறுப்பும், தந்தையின் மீது பாசம் என்று ஒரு இரு மைய நிர்வாகமாக மாறிப்போனது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் காலங்களில் எப்போதாவது ஒரு நாள் வருவது போவது என்று இருந்ததன் காரணமாக, நான் வரும் நேரத்தில் அவர் வேலைக்குச் செல்வதும், அவர் இருக்கும் நேரத்தில் நான் கல்லூரி பல்கலைக்கழகங்களில் விருப்பமாக என் வாழ்க்கை மாறிப் போனது. அவர் மீது நேரடியாக இல்லாமலும் மறைமுகமாகப் பாசம் ஏராளமாக இருந்து வந்தது. தற்போது அவருடனே இருந்து நெருங்கி வாழ்ந்து வரும் போது தான் தெரிகிறது, என் தாய் அவரோடு எவ்வளவு சிரமப்பட்டு குடும்பம் நடத்தியிருக்கிறார் என்று.
சிறுவயதில் என்னை என் தாய் கட்டுப்படுத்திவிட , பன்மடங்கு நான் அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. இது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது. நான் குழந்தையாக இருக்கும்போது அவர் செய்ய வேண்டியது இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் பிறந்த ஊரான சொந்த ஊரைப் பற்றிப் பெரிதாக இங்கே இன்னும் சொல்லவில்லை. அங்கு தந்தையுடன் பிறந்த மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். பிறகு அவருக்குச் சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருக்கிறார்கள். ஒரு பத்து குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு எப்போதாவது மாசிமாதம் நடக்கக்கூடிய திருவிழாவிற்கும், அந்த ஊரிலேயே நடக்கக்கூடிய அனைத்து சமூகம் சார்ந்த திருவிழாவிற்கும் நான் எப்போதாவது செல்வதுண்டு. அந்த மாதிரி ஒன்று இரண்டு முறை சென்ற நிகழ்வு நினைவிலிருக்கிறது.
நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் பள்ளி விடுதியில் இருந்து நானாகவே முதல்முறையாக அந்த ஊருக்குச் செல்கிறேன். இரவு நேரம். அதுதான் எனக்கு வெளியூருக்கு என்ற தனிப் பயணம். எனக்கு அதில் ஒரே ஒரு பதட்டம் தான். பயமில்லை. நாம் போகிற பேருந்து அந்த ஊரைக் கடந்து போகும்போது| அப்போ அந்த இறங்கும் இடத்தைத் தவற விட்டு விட்டோம் என்றால், வேறு இடத்துக்குக் கொண்டு சென்று விடுவார்கள். திரும்புவதற்குக் காசில்லை என்ற அந்தப் பதட்டம் தான். அதனால் நான் ரொம்ப முனைப்பாக வெளியில் பார்த்துக் கொண்டும், அந்த நடத்துனரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டும் சென்றேன்.
மறுநாள், என் பெரியப்பா மகன் அவர்களிடம் வாங்க கடை பக்கம் போவோம் என்று அழைத்து விட்டுச் சென்றேன். அந்தக் கடையில் டீ போடுவதற்கு முன்னால் இந்தப் பையன் யார் என்று கேட்டார்கள். அப்போது என் அண்ணன் இவன். என் உறவுக்காரன் என்று சொன்னான். பிறகு எனக்கு அங்கு ஒரு தேநீர் வழங்கப்பட்டது. அவனுக்கும் வழங்கப்பட்டது. இரண்டும் பீங்கான் டம்ளர். அதன்பிறகு மற்றவர்களுக்குச் சில்வர் டம்ளரும் கொடுக்கப்பட்டது. குடித்த பின்பு நான் வேண்டுமென்றே அந்த டம்ளரை கீழே போட்டு உடைத்து விட்டேன். அந்தக் கடைக்காரன் பதறி, ஏன் உடைத்தாய்? நீ எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?என்று கேட்டபோது, என் அண்ணன் பொறுங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சமாதானப்படுத்தினார். மறுபடியும் அந்தக் கடைக்காரர் யார் இந்தப் பையன் என்று கேட்டபோது, என் சித்தப்பா பையன் என்று சொல்லி, என் தந்தையின் புனைப்பெயரைச் சொன்னான். அதற்கு அந்தக் கடைக்காரர், நினைத்தேன்; கண்டிப்பாகச் செய்வான். இவன் செய்வான் என்றார்.
இந்த ஊரைவிட்டு 15 வருடம் என் தாயின் ஊரில் இருந்தாலும், அவ்வப்போது அவர் அந்த ஊருக்குச் சென்று வந்திருக்கிறார். அப்பொழுது எல்லாம் தெரியாது, அவர் அங்கு வாழ்ந்த வாழ்க்கை என்ன என்று. அவரைப் பற்றிய கதைகள் அங்கு ஏராளமாக இருந்தது. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு புரட்சியாளர் போல போர்க்குணமிக்க மனிதராக அங்கு வாழ்ந்திருக்கிறார். நான் சிறுசிறு சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.
எதிர்காலத்தில் எனக்குள்ளும் என்னை அறியாமல் இந்தப் போர்க்குணம் வந்து இருக்கலாம். எந்த வகையில் என்று தேடினால் அது இந்த வகையில் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
அன்பு தவமணி
07.05.2020.
/ ஏர் இதழ் வெளியீடு / 07.05.2020 /
ஓவியம்:
திரைக்கலைஞர் பொன்வண்ணன்