சனி, 18 ஏப்ரல், 2020

வீட்டு வைத்தியமும் நாட்டு வைத்தியமும் தமிழ் மருத்துவமே! : கவிஞர் குட்டி ரேவதி

நிறைய நண்பர்கள் சித்த மருத்துவதை நூல்கள் வழியாக எப்படிக்கற்றுக் கொள்வது என்று ஆர்வத்துடன் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நிறைய அரிய சித்தமருத்துவ நூல்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். சித்தமருத்துவத்தின் பாடத்திட்டம், அதன் தத்துவமும் தமிழ் இலக்கியமும் நம் சமூக வரலாறும் குழைந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. முதல் நூலே, ‘தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத்துவ வரலாறும்’. இந்த நூல் வாசிக்கக் கொஞ்சம் அலுப்பான நூல். நிறைய வைதீகக் கலப்பு உள்ள நூல். ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த நூல் திருத்தி எழுதப்படவேண்டும் என்று விரும்புவேன். அதற்கு ஓர் இயக்கமே தேவை. அரசு முன்வரவேண்டும். பெருங்கூட்டத்திற்கே பணிகள் தரப்படவேண்டும். சித்த மருத்துவத்தின் தத்துவத்திற்கும் இதில் அத்தத்துவத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சனாதன விடயங்களுக்கும்  எந்தப் பொருத்தமுமில்லை, பொருளுமில்லை.

நம் மருத்துவம் என்பது  வீட்டிலிருந்தே தொடங்கப்படவேண்டும். நாட்டுவைத்தியம், வீட்டு வைத்தியம் என்று சொல்லப்படுபவை, சித்த மருத்துவத்தின் தொடக்கநிலை கல்வி போல.  நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு வீட்டிலும் பெண்களோ முதியவர்களோ ஒரு பத்து மருந்துகளேனும் அறிந்து வைத்திருப்பார்கள். சுக்கு, வெற்றிலை, மஞ்சள், கடுக்காய் என்று சொல்வார்கள். இவற்றை வழக்கத்தில் வைத்துக்கொள்வதும், நடைமுறையில் செயல்படுத்துவதுமே தமிழ்மருத்துவப் புரிதலின் தொடக்கம்.

சித்தமருத்துவக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் உயரிய, மிக நெடிய செய்முறை விதிகள் கொண்ட மருந்துகள், நெடுங்கால நோய்களுக்கான மருந்துகள் என்று சொல்லலாம். மூலிகைகளே நம் நாட்டின் செல்வங்கள். நம் நாட்டில் அங்கும் இங்கும் மலைகள் தோறும் ஆற்றுப்படுக்கைகள் தோறும் சமவெளிகளிலும் வயல்வெளிகளிலும் அவ்வளவு அரிய மூலிகைகள் வாழ்கின்றன. ஒரு மூலிகையை அறிவதும் அதை நம் வீட்டில் வைத்திருப்பதும் அதை நம் உணவாக்கிக்கொள்வதும், மருந்தாகப் பயன்படுத்த அறிந்திருப்பதும் நம் சிறந்த அறிவுப்புலத்தில் சேர்வன.  ஒரு சித்தமருத்துவர் நோயாளிக்கு என்ன மாதிரி மருந்துகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ‘வேர் பாரு, தழை பாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு’, என்ற தத்துவத்தைத் தான் கொள்ளவேண்டும். எளிய மருந்துகளில் தொடங்கி அவை செயல்படவில்லையென்றால் தான் கடினமான பற்ப செந்தூரங்களை நோக்கி நகரவேண்டும் என்பதே உத்தி. அதிலும், வேர் மருந்துகள் மருந்து மூலப்பொருட்களைச் சத்தாக மாற்றிவைத்திருப்பவை. அங்கிருந்து தொடங்கி மூலிகைத் தழை, சமூலம், பின்பே பற்ப, செந்தூரங்கள். மூலிகைகளை அறிந்துவைத்திருப்பது ஓர் அகராதியைத் தன்னிடத்தே கொண்டிருப்பது போல.

ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து சிறந்த மருத்துவ முறைகள் அறிந்துவைத்திருப்பதும், மூலிகைகளின் பயன்களை அறிந்து வைத்திருப்பதுமே தமிழ் மருத்துவத்தின் மீதான உண்மையான நாட்டதின் தொடக்கம். இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் உடலை நுட்பமாக அறிந்து வைத்திருத்தலும் அவசியம். தன் அன்றாட வாழ்க்கை முறை, எந்த உணவு தன் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, எந்த நடவடிக்கை தன் உடலுக்குப் பொருந்தாது போன்றவற்றைத  தனக்குத்தானே அறிந்து வைத்திருந்து ஒழுகுவது.  தன் உடலுக்கு மருத்துவர் என்பது அவசரங்களின் போதும், நீண்ட கால நோய்களின் போதும் தாம் தேவைப்படுவது. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாமல், சளி, காய்ச்சல், வயிற்றுத் தொல்லைகள், சிறிய காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி மாதிரியான மருத்துவச் சேகரிப்பைத் தன் வசமே வைத்திருக்கவேண்டும். உடல் வளர்த்தோர், உயிரும் வளர்த்தோரே.

மேற்சொன்னதே வீட்டு வைத்தியம். நாட்டு வைத்தியம் என்று பரம்பரைப் பரம்பரையா சித்தமருத்துவப்பயிற்சியைச்  சொல்கிறோம். எலும்பு முறிவு, சுளுக்கு, குழந்தைகள் வைத்தியத்திற்கு எங்கள் ஊர்ப்பக்கம் வைத்தியரை வீட்டிற்கு அழைப்பார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடலுக்கு எண்ணெய்த் தேய்த்துவிடுவது, பெண்களுக்கு மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டால் சரி செய்வது என்று பரம்பரை வைத்தியர்கள் நீண்ட நெடுங்காலமாக நம் மருத்துவ மரபை, மருத்துவப்பண்பைக் காப்பாற்றி வருகிறார்கள். செங்கல்பட்டில் ஒரு களஆய்விற்காகச் சென்றிருந்த போது, ஒரு மருத்துவச்சி அந்த ஊரில் இருக்கும் 90 பெண்களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாராம். எல்லாமே சுகப்பிரசவம். பிரசவ காலத்திலேயே என்னென்ன சாப்பிடவேண்டும், என்னென்ன ஒழுக்கங்களைப் பின்பற்றவேண்டும் என்ற ஆலோசனைகளை எல்லாம் வழங்குவாராம்.

என்றாலும், சித்தமருத்துவத்தைத் தொழில்முறை வடிவமாகவும் சீரிய கல்வித்திட்டமாகவும் மாற்றியதில் இந்த நாட்டுவைத்தியர்கள் தாம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். மைய நீரோட்டத் துறையையும் பாரம்பரியத்துறையையும் இணைத்து முறைப்படுத்துவதற்கு நாம் எல்லோருமே தமிழ் மருத்துவம் குறித்தப் பெரிய விழிப்புணர்வைப் பெறவேண்டும். ஒரு மூலிகையின் மருத்துவ அறிவைப் பெற்றிருப்பதைக் கூடப் போற்றிக் கொண்டாட வேண்டும். சிறிய சிறிய தொட்டிகளில் அழகிற்காகச் செடிகள் வளர்க்காமல், அரிய மூலிகைகளை அன்றாட மருத்துவப்பயன்பாட்டிற்கு ஏற்ற மூலிகைகளை வளர்க்கத் தொடங்கவேண்டும். அடிப்படையான விழிப்புணர்வு, நடைமுறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும்.

மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பது ஆங்கில மருத்துவத்திற்குத்தான் பொருந்தும். நம் பருவங்கள், கால நிலை மாற்றங்கள், திணைகளுக்கேற்ற மூலிகைகளைக் கொண்ட மருந்துகள், உணவுகள், வாழ்க்கை முறை என்று மிக கவனமாக தமிழ் மருத்துவர்கள் மருத்துவச் சிந்தனைகளைத் தொகுத்திருக்கின்றனர். மருத்துவம் மற்றும் உடல் நலன் குறித்த மிகுந்த அச்சமூட்டும் மன உளைச்சல்களோடும் வலிகளோடும் நோய்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கைமுறையிலிருந்து நாம் எல்லோரும் விடுபடவேண்டும்.

செங்கல்பட்டு திருமுக்கூடலில்  உள்ள விஷ்ணு கோவிலில் பதின்னொன்றாம் நூற்றாண்டின் மருத்துவக்கல்வெட்டு காணப்படுகின்றது. நெல் தானமாக வழங்கப்பட்ட ஒரு மருத்துவரையும் அவர் சிகிச்சை வழங்க ஏதுவான பதினைந்து மருத்துவப்படுக்கைகளையும் கொண்டதைச் சொல்கின்றது. தேவைப்படுகின்ற மூலிகைகளைச் சேகரித்து வந்து மருந்து தயாரித்தோருக்கும் நெல் வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றது. ஆசிரியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மாணவர்கள் பற்றிய  விவரமான குறிப்புகளைத் தருகின்றது. எல்லா காலத்திலும் நம் மருத்துவம் என்பது தனிமனிதன், வீடு, அரசு, பொதுவாழ்வு என்று எல்லாவற்றோடும் நீக்கமறக் கலந்து தான் இருந்திருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி,
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

மரு.உமேரா: சித்த மருத்துவப் பெண் ஆளுமை :- மரு.வி.விக்ரம் குமார்

சித்த மருத்துவத்திற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் பெண் சரவெடி இவர்! திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாபுதூர், சவ்வாது மலையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் அரசு சித்த மருத்துவராகப் பணி புரிகிறார்! மலைப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

ஒரு ஆண் மருத்துவர் களத்தில் இறங்கி வேலை செய்வதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய விஷயமில்லை!. திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பின்பும், தனது மகனையும் கவனித்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்கிறார் எனும் போது, இவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, இல்லை பாராட்டாமல் இருப்பதுதான் முறையா!

மலைவாழ் மக்களின் உடல் நலனை மேம்படுத்த, அவர்களுக்கான சித்த மருந்துகளை அவ்வப்போது முகாம் வைத்து மருத்துவம் பார்த்து சேர்ப்பது... சித்த மருத்துவ உரை நிகழ்த்துவது... சில நேரங்களில் போக்குவரத்து இல்லாத மலையின் குக்கிராமப் பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து அவர்களைக் கவனித்துக் கொள்வது... எனச் சிறப்பாய் செயல்படுகிறார் மரு.உமேரா!

இவரது கணவர் நவீன மருத்துவர். அவரின் துணையோடு ஒருங்கிணைத்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கனவோடு செயல்படும் இளம் சித்த மருத்துவர்! உங்கள் கனவு நிச்சயம் ஈடேறும் உமேரா!...

மலைப்பகுதிதானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தினமும் தவறாமல் சித்த மருத்துவத்திற்குப் பங்களிக்கிறார்... மலைப்பகுதியில் இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளிப்பது, முடிந்த உதவிகளைச் செய்வது என விடாமல் செயல்படுகிறார்!

நானும் இவரும் சித்த மருத்துவம் குறித்து அவ்வப்போது நிறைய விவாதிப்பதுண்டு... இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி! சகோதரனாகக் கூறுகிறேன்... உங்கள் எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் நிறைய சாதிப்பீர்கள் சகோதரி!

இவரோடு தொலைபேசியில் உரையாடும் போது, இவரது பேச்சின் வீரியமும் ஆக்கமும் நம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமையும்!

மூலிகைகள் குறித்து... சித்த மருத்துவம் குறித்து... சித்த மருத்துவ அரசியல் குறித்து விவாதிக்கும்போது இவரது எண்ணங்கள் நேர்த்தியாக இருப்பதை உணர முடியும்!...இப்போதைய சூழலில் சித்த மருத்துவத்திற்கான வாய்ப்பு குறித்து நாங்கள் விவாதித்ததில் நிறைய புதிய விஷயங்கள் தோன்றின... செயல்படுத்துவோம்!...

இவரது சேவை... அந்த மலைக்கிராம மக்களுக்குப் பேருதவி புரியும்... இவரது சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!...

மரு.உமேரா... போற்றப்பட வேண்டிய பெண் சித்த மருத்துவர்!

-மரு.வி.விக்ரம் குமார், எம்.டி.,(சித்தா)
அரசு சித்த மருத்துவர்.
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

பறிபோன தமிழரின் வானியல் கணிய மரபு: மருத்துவர் கீதா மோகன்


சித்திரை ஒன்று என்றாலே, எல்லோரும் இது திரிபுப் புத்தாண்டு என்றும்; இல்லை, தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு.

புதிய ஆண்டு எதைக் கணக்கீடு செய்து வைத்திருப்பார்கள் என்ற சர்ச்சை இன்னும் பல காலம் நீடிக்கவே செய்யும்.
நமக்குத் தமிழ் மேல் பற்றும் புரிதலும் ஏற்பட்டு விட்டால் இந்த மாதிரி குழப்பங்களே வாராது..

சூரியனின் சுழற்சி, தையில் வடசெலவை அதாவது வட பகுதியைச் சுற்ற ஆரம்பித்த காலத்திலிருந்து, மீண்டும் அதே பகுதியை அடையும் வரை உள்ள கால அளவுதான் எனப் பலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறேன்..
ஆனால், எனக்கு நீண்ட வருடங்களாக இதை எப்படி கணக்கில் தமிழர்கள் கொண்டு வந்திருக்க முடியும்? என எனது தேடலில் எனக்குக் கிடைத்தவற்றை மட்டும் பகிர்கிறேன்.. விவாதத்திற்காக அல்ல..

தமிழர்கள் தன் மரபில் ஒரே நாள்காட்டியைத்தான் உபயோகித்தனர். ஆனால், நடைமுறைக் கணக்கில் மூன்று கணக்கீடுகளை வைத்திருந்தனர்.
ஒன்று, வருட கணக்கு அல்லது மழைக்கான கணக்கு.
இரண்டாவது, விவசாயக் கணக்கு. அதாவது, விதைத்தால் எத்தனை நாளில் பலன் கிடைக்கும்? தமிழ்நாடு மழை மறைவுப் பிரேதசம் என்பதால், என்ன மழையை எப்படி உபயோகிக்கலாம் என்பதற்கான விவசாய கணக்கு..
மூன்றாவது, பயன் கணக்கு. அதாவது, லாபக் கணக்கு. விளைந்த வேளாண் பொருள்கள் பற்றியும் அதைச் சேமித்து அடுத்த பட்டத்திற்கான விதைச் சேகரிப்பு போன்றவற்றுக்கான கணக்கு..
இப்போது புரியும் என நம்புகிறேன்.

முதலில், சித்திரை ஒன்று வரும். மழையை எதிர்பார்த்து காற்றின் வேகத்தை வைத்து இந்த வருடம் மழை எப்படி வரும்? அதன் கோள் நிலைகள் என்ன என்பதைக் கணக்கீடு செய்வதற்காக அமைத்த கணியம் சித்திரைக் கணியம்..
சித்திரை ஒன்றில் பஞ்சாங்கப் பாடலைப் படிப்பது கணிய மரபில் இருந்துதான் வந்தது..

அடுத்து, தென் செலவில் ஆரம்பிக்கும் காலத்தில் தெற்கே அடிக்கிற காற்றை வைத்து ஆடிப்பட்டம் தேடி விதைத்த விவசாயக் கணக்கு..

அடுத்து, தை மாதம் விளைந்த பொருள் வீடு வந்ததும், கதிரவனுக்கு நன்றி சொல்லி அடுத்த பருவம் வரை பொருளைப் பத்திரப்படுத்தியதின் அதற்கான கணக்கீடு..

சரி, சித்திரை ஒன்று ஏன் வருடமாகக் கணித்தார்கள்.?

சூரியன் உச்சம் என்ற நிலையை அப்போதுதான் வந்தடையும்..
சூரியன் மேழ ஓரையில் உச்சம் என்ற பகுதியை வந்தடைந்தால் தான் 360 டிகிரி கணக்கீட்டை எடுத்துக்கொள்ள முடியும்..

சுறவத்தை அதாவது மகர ஓரையில் சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தில் வரும் போதுதான் தை பிறக்கிறது. அதுவும் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் தான் தை மகள் பிறக்கிறாள். அப்படியிருக்க அதுவும் முழுநட்சத்திர நுழைவுப் பாதை கிடையாது..
மேலும், உத்திராடத்தைச் சங்கப் பாடல்களில் விழுவநாள் என்றும் குறிப்பிடுவதை காணலாம்..

மேழத்தில் உச்சத்தை ஆளும் சூரியனைச் சிலப்பதிகாரம் உச்சிக்கிழான் என்று குறிப்பிடுகின்றது.
காரணம், சித்திரை பிறந்து பத்து நாட்களில் சூரியன் நடு வானில் உச்சியில் செங்குத்தாக நிற்கும். அதற்கு நேராக ஒரு குச்சியை நடுவர். அதற்கு விழுவன் குச்சி என்று பெயர். அந்தக் குச்சியைச் சுற்றிலும் விழும் கதிர் நிழல்களைக் கணக்கில் கொண்டு சூரியன் ஒவ்வொரு ஓரையிலும் நகர்வதைக் கணக்கிட்டுக் கொண்டனர்..

அப்படி நகரும்போது வடபகுதியில் விழும் நிழலை வைத்து வடதிசை நோக்கி சூரியன் நகர்கிறது என்றும், தென் திசை நோக்கி நகர்கிறது என்றும் கணித்தனர்..

இவ்வாறாக, ஞாயிறு மண்டலத்தை வெட்டும் இரு விழுக்களைக் கணித்தனர். ஒன்று, மேழவிழு. மார்ச் 21 ஆம் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்..
தொல்வானியலரான கணியர்கள் இந்த நிழல்களை விழியை வரைந்து விழுக்களாகக் குறித்து வைத்திருந்தனர்.

விழியில் இருந்து பிறந்த விழு பின்பு விசு என்னும் சமஸ்கிருதமாக மாறியது.
இன்றளவும் சேரநாட்டில் சித்திரை ஒன்றாம் தினத்தை விசுக்கனியாகக் கொண்டாடுவதை நாம் பார்க்கலாம்..
விசு என்னும் சமஸ்கிருதச் சொல்லின் வேர் தமிழ்தான் என ஆய்வாளர் சுந்தர் ராசு கூறுகிறார்.

சூரியன், மேழம் என்ற உச்சப்பகுதிக்குள் நுழைவதை, மேழ ஓரைக்குள் விழும் விழுவத்தை மேழவிழுவம் என்றும், மாவிழுவம் என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர்.
இதைத்தான் மகாவிசுவம் என்று சமஸ்கிருத மொழியில் கூறப்படுகிறது.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோணமீன்போல
மலர்தலை மன்றத்து...
மேழகத் தகரோடு சிவல்விளையாட என்ற பட்டினப்பாலை பாடல் வரிகளைக் காணலாம்.

மேழப்பகுதிக்கு வரையாட என்ற தமிழ்ப்பெயரும் உண்டு. வரையாட என்றால் தமிழில் உச்சப்பகுதி என்று பொருள். மலையின் உச்சியில் உள்ள ஒரு வகை ஆட்டின் வகையை வரையாடு என்று குறிப்பிடுவதைக் காணுங்கள்.
இந்த வரையாட என்ற வார்த்தையிலிருந்து வரு என்ற வார்த்தை உருவாகியிருக்கலாம்.
அதிலிருந்து வருடம் என்ற வார்த்தையும் பிறந்திருக்கும்.
ஏனெனில், சூரியன் மேழம் என்ற உச்சப்பகுதியை நுழைந்தவுடன் பூமியின் தரைப்பகுதியில் வெப்பம் அதிகமாகும்.
இயற்கையாகவே தரையில் வெப்பம் அதிகமானால் கடல் பகுதியில் குளிர்மைக்காற்று வீசும்.
இந்த மாறுபாடுகள் நடந்த பின், கத்தரி வெயில் காலம் கடந்த பின் தென்மேற்குப் பருவக்காற்று காலம் ஆரம்பிக்கும்.
கத்தரி நட்சத்திரம் பற்றிய விரிவான குறி்ப்பைப் பிறகு காணலாம்.

வைகாசியில் சாரல் மழை என்று சொல்லுவார்கள்.
வைகாசி பிறந்ததும் நெய்தல் நிலமான குமரி முனை மற்றும் பொதிகை மலையில் வீசும் காற்றினால் தென்மேற்குப் பருவமழை உருவாகிறது..
நெய்தல் நிலத்துக்குரிய கடவுளாக வருணனை வைத்திருப்பதன் காரணமும் இதுவே.

நாடோடிகளாக வந்தவர்களுக்குத் தொல்வானியல் அறிவு எங்கிருந்து வந்தது? என யாரும் சிந்திக்காமல், ஆரியத்திரிபு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தமிழனின் தொல் அறிவியலான வானியிலை இன்று சோதிடமாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று, மரபு மருத்துவம், சித்த மருத்துவம் இன்று ஆயுள்வேதம் என்ற பெயரில் உபயோகித்து வருகிறோம்..

தொல் வானியலறிவை முற்றிலும் சிதைந்த நிலையில் கற்பனைக் கதாபாத்திரங்களாக நமக்குக் கிடைக்கிறது. உண்மையான பகுத்தறிவுக் சிந்தனையாளர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனதில் எழும் கேள்வியாலும், ஏற்கனவே உள்ள ஒடுக்கு முறையாலும் உண்மையான வருடக் கணக்கைத் திரித்தல் எனக் கூறிவிடுகிறோம்.
உண்மையில் புவியின் ஒவ்வொரு சுழற்சியும் நமக்கு விழாக்களாகவும்,
சந்திரனின் சுழற்சியை விரத நாள்களாகவும் இருப்பதற்குப் பின்னால் கணியத் தொடர்பும் நிச்சயம் இருக்கிறது.

கீதா மோகன்,
சித்த மருத்துவர் மற்றும் வானியல் கணியம் பற்றிய ஆய்வாளர்.
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்முறை: கவிஞர் குட்டி ரேவதி

சித்தமருத்துவத்தில் என்னை மிகவும் ஈர்த்தவை, அதன் மருந்துச் செய்முறைகள் தாம். இரசவாதம் என்று சொன்னால் எவ்வளவு உங்களுக்கு வசீகரமானதொரு கற்பனை தோன்றுகிறதே அதற்குச் சற்றும் குறைவில்லாதவை, சித்தமருத்துவத்தின் மருந்துச் செய்முறைகள். தமிழகத்தின் முக்கியமான இரு மருத்துவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இருவருக்குமே அவர்களின் மருந்துத் தொழிற்சாலையில் பெரிய அளவில் லேகியம், தைலம், பற்பம் செய்யும் மருத்துவராகவே பணியாற்றினேன். கல்லூரியில் மருந்துச்செய்முறையில் அதிக வல்லமையுடைய பெண் மருத்துவப்பேராசிரியர் ஒருவருடனேயே எப்பொழுதும் சுற்றித்திரிந்து மருந்துகள் செய்யக் கற்றுக்கொண்டேன்.

மூலப்பொருட்களிலிருந்து நிறைய கவனமான செய்முறைகள் வழியாக அவை மருந்தாக மாறும் தன்மையை இரவும் பகலும் உடனிருந்து கவனிப்பது என்பது சொல்லொணா இன்பமும் அருமையும் கூட்டும் அனுபவம்.  சமைக்கவே தெரியாத நான், பிற்காலங்களில் மருந்துகள் எல்லாம் செய்யக் கற்றுக்கொண்ட பின்பு, ஒரு தக்காளி ரசத்தைக் கூட மருந்தென எண்ணிச் சமைக்கத்தொடங்கினேன்.

சித்த மருந்தின் செய்முறைக்கு வருவோம். சித்தமருந்துகளின் செய்முறைகள் மிகப்பெரிய வேதியியலாகவே அமைந்துள்ளது. தமிழ் மருத்துவர்கள், தாவரங்கள், தாதுப்பொருட்கள்(Mineral Origin), உலோகங்கள் (Metal Origin), நடமாடும் உயிர்கள் ஆகிய நான்குவகை மூலப்பொருட்களிலிருந்து மருந்துகளைத் தயாரித்துள்ளனர்.

உப்புகள் - 15, உபரசங்கள் - 20, பாடாணங்கள் (இயற்கை 32 + செயற்கை 32) - 64, உலோகங்கள் 12, மூலிகைகள் 1008  இவையே சித்தமருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள். இவை தமிழ் மருத்துவத்தின் அறிவியல் திறனை உறுதிப்படுத்துகின்றன. இந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, 32 அகமருந்துகளும், 32 புறமருந்துகளும் செய்யக் கற்றுக்கொண்டிருக்கின்றனர் தமிழ் மருத்துவர்கள்.

அகமருந்து, உள்ளுக்குக் கொடுக்கப்படுவது. புற அருந்து, வெளிப்பிரயோகத்திற்கானது.  அடை, இலேகியம், உட்களி, உருக்கு, எண்ணெய், கட்டு, கடுகு, களங்கு, கற்கம், கற்பம், குடிநீர், குருகுளிகை,குழம்பு, சத்து, சாறு, சுண்ணம், சுரசம், சுவைப்பு, சூரணம், செந்தூரம், தீநீர், தேனூறல், பற்பம், நெய், பக்குவம், பதங்கம், பிட்டு, மணப்பாகு, மாத்திரை, மெழுகு, வடகம், வெண்ணெய் ஆகியவை அகமருந்துகள். இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு நெய்யை எடுத்துக்கொள்வோம். பிறப்புவகையில், 12 வகை. கொதி நெய், உருக்கு நெய், புடநெய், தீநீர் நெய், சூரியப்புட நெய், மண் நெய், மர நெய், சிலை நெய், நீர் நெய், ஆவி நெய், சுடர் நெய், பொறி நெய் என்பன.
இந்தப்பன்னிரண்டு வகையையும் முடி நெய், குடி நெய், பிடி நெய், தொளை நெய், சிலை நெய் என்ற ஐந்து வகைக்குள் அடக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மருந்து வகையும் அவற்றின் செய்முறைக்கு ஏற்பவும், பயன்படுத்துமுறைக்கு ஏற்பவும் வகைப்பட்டுக்கொண்டே போகும்.

புற மருந்துகளாவன: அட்டை விடல், அறுவை, உறிஞ்சல், ஊதல், ஒற்றடம், கட்டுதல், கலிக்கம், களி, களிம்பு, காரம், கீறல், குருதி வாங்கல், கொம்பு கட்டல், சலாகை, சீலை, சுட்டிகை, தொக்கணம், நசியம், நாசிகாபுராணம், நீர், பசை, பற்று, பீச்சு, புகை, பூச்சு, பொட்டணம், பொடி, பொடி திமிர்தல், முறிச்சல், மை, வர்த்தி, வேது.

இன்று தற்கால மருத்துவத்தில் இருப்பது போலவே தமிழ் மருத்துவத்தின் அடிப்படை நெறிகளும் இருந்திருக்கின்றன. மருந்துப்பொருட்களின் குணமறிதல் (Pharmacognosy), ம்ருந்துகளைக் கையாளுதல் (Pharmacy), நோய்க்கேற்ற மருந்துகளைத் தரும் மருந்தியல் (Pharmacology).

புடமிட்டுத் தயாரிக்கப்படும் உப்பு, சுண்ணம், செந்தூரம், பற்பம் போன்றவற்றைச் செய்து நம் சில தலைமுறைகள் வரை அதன் மருத்துவ வீரியம், ஆற்றல் குறையாமல் பயன்படுத்தலாம். அதாவது, நான் இன்று செய்து வைக்கும் ஒரு மருந்து, என் பேத்தி, கொள்ளுப்பேத்தி தலைமுறை  வரை நோய்தீர்க்கப் பயன்படும் சொத்து. உயில் போலவே, இம்மருந்துகளையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு எழுதி வைத்துவிட்டுச் செல்லலாம்.

மணிக்கணக்கில் மூலிகைச்சாறு இட்டு அரைப்பது, கவனமாகப் புடமிடுவது, தைலத்தின் பக்குவம் தவறாமல் காய்ச்சி எடுப்பது, ஒவ்வொரு மூலிகையிலும் இருக்கும் அகநஞ்சை, புறநஞ்சை நீக்க எப்படி சுத்திகரிப்பது என்பது போன்ற நூற்றுக்கணக்கான, தனித்த செய்முறைகள் எல்லாம் இவற்றில் அடங்கும். மருந்தின் காலக்கணக்கு மிக மிக முக்கியம். மருந்தைச்செய்வதிலும் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவிலும், மருந்தை எடுத்துக்கொள்ளும் காலத்திலும்.

மருந்துகள் சரியான பயனைத்தர, மருந்துகளைச் சரியாகச் செய்வது முக்கியம் என்பது தமிழ் மருத்துவக் கல்வியில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.

வேறு எந்த மருத்துவத்திலும் இப்படி மருத்துவரே மருந்துகள் செய்யக் கற்றுக்கொள்வதில்லை. குறிப்புச்சீட்டு எழுதிக்கொடுத்தால் போதுமானது. ஆயுர்வேதம் கூட, பிற்காலத்தில் தான் அதுவும் சித்தமருத்துவத்தின் பகுதியைத் தான் அந்த மருத்துவத்தால் பின்பற்றமுடிந்தது.

கவிஞர் குட்டி ரேவதி,
14.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /

தமிழ்ச் சித்த மருத்துவத்தின் வேத வடிவமே ஆயுர்வேத மருத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


சித்தமருத்துவத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் இடையிலான வேறுபடுகளும்,  ஏற்றத்தாழ்வும் சமூகமும் அரசும் இணைந்து உருவாக்கியவை. ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை, வேதமயமாக்கப்பட்ட சித்தமருத்துவம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது எல்லாவகையிலும், சித்தமருத்துவத்தை உள்வாங்கிச் செரித்துக்கொண்ட ஒரு மருத்துவமுறை.

ஓகக்கலை என்பது தான் பின்னாளில் யோகக்கலை என்று ஆயிற்று. யோகக்கலை என்றால் நமக்கு ஏற்படும் ஈர்ப்பு, ஓகக்கலை என்ற நம் சொந்தக்கலை மீது  உண்டாவது இல்லை. அதே போல, வர்மம் என்பதும் தமிழ் மருத்துவத்திற்கே உரிய சிறப்புக்கலை. இரசவாதமும் அவ்வாறே.

மருந்துச் செய்முறைகளில் உலோகத்தாதுக்களையெல்லாம் ஆயுர்வேதம் ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எடுத்துக்கொண்டது.  என்றாலும், மிகவும் நுட்பமான உயரிய செய்முறைகளைக் கோரும் கட்டு, களங்கு, மெழுகு, சுண்ணம் போன்றவை இன்னும் இன்றும் ஆயுர்வேதத்தில் கிடையாது. கட்டு என்பது உலோகங்களை இழைத்துப் பயன்படும் மருந்து வகையாக மாற்றுவது. இது ஒரு சாதாரண முறை அன்று. வேதியியல் முறை, நீண்ட மருந்துச்செயல்முறை. இரசவாத முறை. பக்கவிளைவுகள் இல்லாத வைத்திய முறை. நுண்ணியச் செயல்பாடுடையதாக மருத்துவ மூலப்பொருட்களை மாற்றுவது.

நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்ட லாகாப் பொருள் என்ப - தொல்காப்பியம் - 51

நோய் அல்லது துன்பம் என்பது பிறரால் எடுத்துக் காட்ட இயலாத பொருட்களுள் ஒன்றென்பதும், நோயென்பது எங்கும் எவ்விடத்தும் இலங்குவது என்பதும் காப்பியருடைய கொள்கை. இவ்வாறு தொல்காப்பியர் வழங்கும் முன்னரே நோய் பற்றிய கொள்கைகளும், தீர்க்கும் கோட்பாடுகளும் நம்மிடையே இருந்திருக்கின்றன.

ஆற்றல் நோய், அவல நோய், அருநோய், இன்னா நோய், உள் நோய், சுரந்த நோய், காழும் நோய், தணியா நோய், துன்ப நோய், துஞ்சா நோய், தொடர் நோய், படர்மணி நோய், பசப்பு நோய், பாயல் நோய், பிரிதல் நோய், பைதல் நோய், மருளறு நோய், மயங்கு நோய், விளியா நோய், வெப்ப நோய் என்ற சொற்கள் நம் இலக்கியங்களான நற்றிணை, கலித்தொகை நெடுகவும் காணப்படுகின்றன.

இந்திய அளவில் ஆயுர்வேதத்திற்கு இருக்கும் செல்வாக்கு, சித்தமருத்துவத்திற்கு இல்லை. காரணம் என்று எளிதாகச் சொல்லவேண்டுமென்றால், இயல்பாகவே மக்களுக்கு வெள்ளைத்தோலும் கருப்புத்தோலும் என்றால்  சட்டென்று வெள்ளைத்தோல் மேல் ஏற்படும் ஈர்ப்பு போன்றதே. ஆயுர்வேதம் சமஸ்கிருத மொழிமயமாக்கப்பட்ட தமிழ் மருத்துவம். அது எல்லா நிலைகளிலும் இடம் கொடுத்து இடம் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டதே அன்று அது அதுவே உருவானது அன்று, தானே உயர்ந்தது அன்று. சித்தமருத்துவத்தில் காணப்படும் சிறந்த கலை நுணுக்கங்களோ, நோய் அறியும் உத்திகளோ அந்த மருத்துவத்தில் இன்றும் கிடையாது.

வணிக ரீதியான நுகர்வுப் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல் அது மாற்றியமைக்கப்பட்டு, விடுமுறை போல ஓய்வுக்காலம் போல மக்கள் ஆயுர்வேதம் நோக்கிக் கேரளா சென்று தங்கி நிறைய தொகை செலவு செய்வதைப் பெருமையாகக் கருதுவதை நாம் அறிவோம். எப்போதுமே, காப்பியடித்தலுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுப்பது போல் தான் இதுவும்.

ஒப்பனை துறையை தன் வசப்படுத்திக்கொண்டு நவீன உலகத்தின் வர்த்தகச்சந்தையையும் தன்னுடையதாகக் கபளீகரம் செய்து கொண்டது ஆயுர்வேதம். ஆனால், அடிப்படை மருந்து செய் சமன்பாடுகள், மருத்துவ மூலப்பொருள்கள் எல்லாமே சித்தமருத்துவத்தினுடையவை. நாம் நமக்கானதை நமக்காகச் சரியாகப் பயன்படுத்தாதபோது, ஓர் அறிவு மரபு இப்படிச் சின்னாபின்னாமாகுவது இயல்பே.

ஆங்கில மருத்துவத்தில் பக்கவிளைவுகள் (Side Effects) முரண்பாடுகள்  (Contraindications) உடன் தான் ஒவ்வொரு மருந்தின் விவரத்தையும் சந்தையில் வெளியிடுகிறார்கள். ஆனால், அதுகுறித்து நாம் எந்தச் சந்தேகமும் எச்சரிக்கையும் கொள்வதில்லை. சித்தமருத்துவம் பற்றி எல்லோரும் அறிந்தோராய் அதன் பக்கவிளைவுகள் குறித்துப் பேசுகிறோம். 'பக்கவிளைவு', என்ற சொல்லே ஆங்கிலமருத்துவத்தினால் நம் வாயில் புரளும் ஒன்று.

அறுவை சிகிச்சை வரை சித்தமருத்துவத்தில் உண்டு. ஆனால், அதைச் செயல்படுத்தவதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பையும் பயிற்சியையும் வழங்கும் உள்நோக்கத்தை மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டிருக்கவில்லை.

சித்தமருத்துவம் என்றால் தமிழன் உலகிற்குக் கொடுத்த கொடை என்போம். ஆயுர்வேதம் என்றால் வேத காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டது என்று, சித்தமருத்துவத்தைச் சென்ற நூற்றாண்டின் கொடை ஆக்கிவிடுகிறோம். ஏதோ, தமிழருக்குச் சென்ற நூற்றாண்டில் தான் தமிழ் மொழி பிறந்தது போல.

நேற்று என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, ‘நீங்க நிலவேம்புக் குடிநீர் குடிச்சீங்களா?’, என்று கேட்டார். என் வீட்டில் சில அடிப்படையான தமிழ் மருந்துகளை எப்பொழுதும் வீட்டில் பின்பற்றுவோம், வைத்திருப்போம். ரிஷிகாவிற்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஆடாதோடை மணப்பாகு எப்பொழுதும் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. என் தம்பி வெளிநாட்டிற்குச் சென்ற போது நான் சொல்லாமலேயே, நிலவேம்புக்குடிநீர்ச் சூரணம் சிலவற்றை எடுத்துச் சென்றிருந்தது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.  சித்தமருத்துவம் வெறுமனே மருந்து அன்று. அது நம் வாழ்நெறியாகவும், நம் அன்றாடைத்தை உடலைப் பாதுகாக்கிற நம்முடன் உறைகிற மூதாதையாக மாறவேண்டும் என்பதே என் உள்நோக்கம்.

கவிஞர் குட்டி ரேவதி,
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /

திங்கள், 13 ஏப்ரல், 2020

சித்த மருத்துவ நூல்களே தமிழின் மைய இலக்கியம்: கவிஞர் குட்டி ரேவதி


தமிழ் மருத்துவ இலக்கியத்தை இங்கே ஒரு பதிவில் வரையறுத்துவிட முடியாது. என்றாலும் அவை என்ன மாதிரி பதிவுகளாக இருக்கின்றன என்பதை இங்கே கொஞ்சம்  தொட்டுக்காட்டிவிட  விரும்புகிறேன்.

தமிழ் மருத்துவ இலக்கியம் என்பது இதுவரை கண்டறியப்பட்டுச் சேகரிக்கப்பட்ட 3000 சித்தமருத்துவச் சுவடிகளை உள்ளடக்கியது.

பெரும்பாலான நூல்கள் அகத்தியர் 12000, போகர் - 7000, மச்சமுனி - 800, சட்டமுனி - 3000 என்பனவாய் சித்தமருத்துவர்களான அகத்தியர், போகர், மச்சமுனி, சட்டமுனி, கொங்கணர், கோரக்கர் ஆகியோர் பெயர்களிலேயே வழங்கப்படுகின்றன.

பதிப்பிக்கப்பட்ட நூல்களில் குறிப்பிடப்படும் சில நூல்கள் மறைந்து போயிருப்பதையும் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு, தேரையர் யமக வெண்பா என்ற நூலில் குறிப்பிடப்படும் பிற மருத்துவ நூல்களும் மேற்கோள் நூல்களும் நிறைய இன்று நம்மிடம் இல்லை.

நாங்கள் படிப்பதற்கு எங்களிடம் இருக்கும் நூல்களை விட, அதாவது இங்கே சித்தமருத்துவர்களுக்குப் பாடத்திட்டத்தில் வழங்கப்படும் நூல்களை விட எண்ணற்ற நூல்கள் புழக்கத்தில், வாசிப்பிற்கு, மருத்துவத்திற்கு இருந்திருக்கிறது. ஆங்கில ஆட்சியின் போது, பிரிட்டீஷார் தமிழ் மருத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு நிறைய நூல்களைத் தங்களின் History of Medicine நூலகச் சேகரிப்பிற்குக் கொண்டு சென்றதாக அறிகின்றேன். இங்கே ஆய்வு மேற்கொள்ள விரும்பும் சித்தமருத்துவர்கள் அங்கும் சென்று நூல்களை வாசிக்கையில் தான் ஆய்வுகள் முழுமையாகும்.

நிறைய நூல்கள் அவை இயற்றப்பட்டிருக்கும் பாக்களின் வகையிலேயே வழங்கப்படுகின்றன. தேரையர் வெண்பா, குணவாகட வெண்பா, சட்டைமுனி தாழிசை(தாழிசைச் செய்யுள்), அகத்தியர் விருத்தம் (ஆசிரிய விருத்தப்பாக்கள்), மச்சமுனி கலிப்பா, கருவூரார் நொண்டிச்சிந்து, யூகிமுனிவர் வாகடக்கும்மி, அகத்தியர் பள்ளு, அகத்தியர் வைத்திய காவியம், பதார்த்தகுண சிந்தாமணி, அகத்தியர் வைத்திய சூடாமணி, யூகி வைத்திய சிந்தாமணி, புலத்தியர் வைத்திய சதகம். குறள் வெண்பாவைப் போலவே வழங்கப்படும் ஒளவைக்குறளும் உண்டு.

சூத்திரம், நிகண்டு, மூலிகை நூல்கள், குழந்தை மருத்துவம் தொடர்பான நூல்களும் உண்டு. இதில் சூத்திரம் என்பது தமிழ் மருத்துவத்தின் மறைபொருள்களைக் குறிப்பிடும் நூலாகும். நிறைய பெயர்கள் மொழி வளமைத் திறனால், வேறு அர்த்தம் தொனிக்கச் சொல்லப்பட்டிருக்கும்.  அகத்தியர் காவியச் சுருக்கம்  ஒருபாடலாலும்  மச்சமுனி சூத்திரம் 800 பாடல்களாலும் ஆனது. அகத்தியர் குழம்பு, அகத்தியர் வல்லாதி என்று முக்கியமான சித்தமருந்துகளின் பெயரால் ஆன நூல்களும் உண்டு. சரக்குவைப்பு நூல்கள் என்று குறிப்பிடப்படுபவை முக்கியமானவை.

மருத்துவத்திற்குப் பயன்படும் மருத்துவ இயற்கையான மூலப்பொருட்களே சரக்கு. இயற்கையான பாடாணங்களைக் கொண்டு செயற்கைப்பாடாணங்களை ஆக்கும் வழிமுறைகள் சொல்பவை.  இயற்கைப்பாடாணங்கள் - 32, செயற்கைப்பாடாணங்கள் - 32. இந்தச் செயற்கைப்பாடாணங்கள் செய்முறை தமிழ் மருத்துவர்களுக்கு மட்டுமே உரிய கலைத்திறன் என்று சொல்லவேண்டும்.

கலைஞான நூல்கள் என்ற வகை நூல், அறிவு நூல் என வழங்கப்படுகிறது. வர்மநூல்கள் மொத்தம் 116 இருப்பதாக அறிகிறோம். கால்நடை மருத்துவ நூல்களும் தமிழ் மருத்துவ இலக்கியத்தில் அடங்கும்.

உண்மையில், தமிழ் இலக்கியப் பரப்பின் பெரும் பகுதியை   தமிழ் மருத்துவ இலக்கியங்களே   எடுத்துக்கொள்ளும். தமிழ் இலக்கணமும் இலக்கியக் கல்வியும் தமிழ் மருத்துவத்தை அறிய முக்கியமாகையால், தமிழ் மருத்துவம் இலக்கியத்தில் இன்னும் சிறப்புடைய துறையாகிறது. தமிழ் இலக்கிய அறிவைப் புகட்டாமல், தமிழ் மருத்துவ அறிவைப் புரிய வைத்துவிட முடியாது. அறிவுக்கலையின் செம்மையான வடிவமாக இது திகழ்வதால், இதை ஒரு சமூகத்தில் புகட்டாமல் நவீனத்தையோ மறுமலர்ச்சியையோ எட்டமுடியாது.
நூற்றுக்கணக்கான சான்றோர்களின் அறிவும், உழைப்பும், அக்கறையும் நிறைந்த நூல்களுடன் இத்துறை திகழ்வதும் இதன் சிறப்பு.

நான் இங்கே தொட்டுக்காட்டியுள்ளது மிக மிகக்குறைவே. இது ஒரு கடல், இதுவே தமிழின் மைய இலக்கியம்.

கவிஞர் குட்டி ரேவதி
13.04.2020.

/ ஏர் இதழ் / 13.04.2020/

சனி, 11 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தின் தத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


எடுத்த எடுப்பிலேயே சித்தமருத்துவத்தைப் பொதுமக்களும், மற்ற மருத்துவர்களும் நிராகரிக்க முதன்மையான காரணம், தமிழ் மருத்துவத்தின் அடிப்படையான தத்துவத்தை, அது இயங்கும் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான்.
இயன்றவரை எளிமையாகவும் நேரடியாகவும் இங்கே விளக்க விரும்புகிறேன்.

ஐம்பூதத் தத்துவம் என்பதுதான் தமிழ் மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம், அண்டமும் பிண்டமும் ஒன்றே, அறிந்துதான் பார்க்கும்போதே என்கிறது சட்டமுனி ஞானம் நூல். இப்பாடலிலிருந்து இத்தத்துவத்தை நேரடியாக உள்வாங்கிக் கொள்ளலாம். என்றாலும், நுணுகி நுணுகி அறியப்போகையில் தமிழ் மருத்துவம் என்பது  ஓர் அகண்ட துறையாகவும் நுண்ணிய அறிவையும் சிந்தனையையும் கோரும் துறையாகவும் இருக்கிறது.

மருத்துவர் என்போர் மட்டுமே மனித உடலைப்பற்றி அறிந்திருந்தால் போதுமானதில்லை என்று சொல்வேன். அவரவர் உடலை அறியும் திறனையும் அறிவையும் பெற்றிருந்தால்தான் பிணி இன்றி நீண்ட நெடுங்காலம் வாழ முடியும்.

இந்தச் சிந்தனை நம் மண்ணில் ஐயாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி வருகிறது என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்கள்.

 'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
 இருதிணை ஐம்பால் இயல்நெறி     வழாஅமைத்
 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும்'
 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனச்சொல்லும் தொல்காப்பியம் தொன்மையான பதிவாகிறது.

எப்படி இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனதோ, அதேபோல் இந்த உலகின் உயிர்களும் மனித உயிருடலும் ஐம்பூதக் கூட்டுச்சேர்க்கையால் உருவானவை. ஆக, இந்த உடலுக்கு ஐம்பூதச் சேர்க்கையினால் உருவான மருந்துகளே நோயைத் தீர்க்கவல்லன என்று கண்டறிந்தனர் தமிழ் மருத்துவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஐம்பூதச் சேர்க்கையற்ற மருந்துகள் உடல் நோயைத் தீர்க்க உதவா.

உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால், மண் என்று ஐம்பூதக்கூறிலிருந்து எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர் உண்டாகிறது. நீரிலிருந்து உதிரம், மஞ்ஞை, உமிழ் நீர், நிணம், விந்தும்; தீயிலிருந்து பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கமும்; காற்றிலிருந்து போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதலும்; ஆகாயத்திலிருந்து ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனையும் உண்டாகின்றன.

மருந்துப் பொருட்களில், இந்தப் பஞ்சபூதக்குணங்கள் சுவையாக இடம்பெற்றிருக்கின்றன. இவை வெறுமனே நாக்கினால் உணரப்படும் சுவை மட்டுமன்று. ஒவ்வொரு மூலிகையின் வீர்யமாகவும் அறியப்படுபவை. அதாவது, இனிப்பு என்பது மண் + நீர் என்ற இரண்டு பஞ்சபூதக்கூறும் சேர்ந்து உருவாவது. புளிப்பு, மண்ணும் தீயும். உவர்ப்பு நீரும் தீயும். கைப்பு, காற்றும் ஆகாயமும். கார்ப்பு தீயும் காற்றும். துவர்ப்பு மண்ணும் காற்றும்.

மனிதனின் நோய்களுக்கு வருவோம். நோய்க்கூறுகளைப் பற்றி அறியும்போதும் ஒவ்வொரு நோயும் ஐம்பூதச்சேர்க்கையில் நிகழும் எத்தகைய கோளாறுகளால் வருகின்றன என்ற ஆழமான ஆய்வும் விளக்கமும் கிடைக்கிறது.

நோயைக் கண்டறியும் தமிழ் மருத்துவர்களின் யுத்திகள் எண்வகைத் தேர்வு எனப்படுகின்றன. நாடி ஸ்பரிசம் நா நிறம் மொழி விழி மலம் மூத்திரம் இவை. இதில் நாடி சிறப்பான முதன்மையான உத்தியாக இருக்கிறது.

வாதம், பித்தம், கப நாடிகள் கொண்டு உடம்பில் உருவாகியிருக்கும் நோய்கள் அறியப்பட்டு அதைச் சரி செய்யும் பஞ்சபூதச் சேர்க்கை கொண்ட மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்துப் பொருள்களில் இவ்வாறு வெவ்வேறு பஞ்சபூதத்தன்மை கொண்டவையாக மருந்துப் பொருட்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மூலிகைப் பயன்பாடுகள் காலங்காலமான மரபினாலும் தொடர் நுண்ணறிவுச் செயல்பாட்டினாலும் வருவது. எதை எந்நோய்க்கு எவர்க்குக் கொடுப்பது என்பதில் மிகவும் விரிவான ஆளுகை இருக்கிறது. மரபார்ந்த அறிவையும் இலக்கியங்களையும் தொகுத்தே  ஐந்தரை ஆண்டு கல்வித்திட்டமெனத் தமிழ் மருத்துவத்திற்கு வகுத்திருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்துறைக்கு இருக்கும் சமூக, அரசு ஆதரவுகூட தமிழ் மருத்துத்துறைக்குக் கிடையாது. இலக்கியத்துறையே மெலிந்து மொழித்துறை ஆன கதை வேறு. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் தமிழ் மருத்துவமும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதை உணர்ந்தால் தான் தமிழ் மருத்துவத்தைப் போற்ற முடியும்; பயன்பெறமுடியும்.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல என்று புறநானூறு சொல்கிறதே.

திருக்குறள் மருந்து என்னும் தனித்த அதிகாரத்தைக் கொண்டு மருத்துவத்தை விளக்குகிறது.
சங்ககாலம் யூகி என்னும் மருத்துவச் சித்தரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.  மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார், ‘ஆருயிர் மருத்துவி’, என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பெண்பாலார் மருத்துவராக இருந்திருக்கின்றனர். சங்க இலக்கியத்தைத் தொடர்பவர்களால் தமிழ் மருத்துவத் தத்துவத்தைப் புரிந்துகொள்வது எளிது.

எப்படி சங்க இலக்கியங்கள் நூற்றுக்கணக்கில் தொகுதிகளாக இருக்கின்றனவோ, நவீன இலக்கியங்கள் எப்படி தொகுதிகளாக இருக்கின்றனவோ, அவ்வாறே தமிழ் மருத்துவ இலக்கியங்கள் பெரிய தொகுதி. தமிழ் மொழி வரலாற்றில் பெருங்கால ஓட்டத்தைச் சொல்லும் அருங்கலைச் சொற்களைக் கொண்டவை; தனித்தவை.

மருத்துவம் குறித்த எல்லாமும் வழி வழியாகப் பாதுகாக்கப்படும் வண்ணம் பாடல்களாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
மூலிகை என்னும் ஐம்பூதச் செல்வங்களை, ஐம்பூதக் கலவையால் ஆன மனித உடலின் பிணி தீர்க்கும் ஐம்பூதச் சமன்பாடுகளை வகுத்தவர்கள் தமிழ் மருத்துவர்கள் என்று சொல்ல வேண்டும். இதில் பொழுதுகளும் சேரும், ஐந்திணைகளும் சேரும். தாது, சீவப்பொருட்களும் சேரும். இப்படி மனிதனை இந்த அண்டத்துடன் இணைத்துப் புரிந்து கொண்டதுடன், அதை ஒரு கருத்தியலாக நீண்ட நீண்ட காலம் இலக்கியங்களாலும் வாழ்வு நெறிகளாலும் போற்றியவர்களே தமிழ் மருத்துவர்கள்.

சங்க இலக்கிய அறிவும் மொழிபால் பற்றும் தமிழ் மருத்துவத்தைப் புரிந்து கொள்வதை இன்னும் எளிதாக்கிவிடும். தமிழ் இலக்கிய நுகர்வே தமிழர் வாழ்நெறியை நிலைப்படுத்துகிறது.

தமிழர்கள் எங்கெங்கு சென்றாரோ, அங்கெல்லாம் இலக்கியத்தின் வாழ்நெறியினைப் போலவே, தமிழர் தம் மருத்துவப் பண்பாடும் வேரூன்றியிருக்கிறது.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து’
என்று ஆகியிருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி
11.04.2020