புதன், 28 நவம்பர், 2018

தென்னை மறு நடவு எனும் சூது :- குமார் அம்பாயிரம்

பழைய டெல்டா கரைதனில் புகழ்ச் சோழன் காலத்தில் சுந்தரர் விகிர்தேஸ்வர் மேல் பாடியுள்ள பதிகத்தில், வெப்பத்தினால் உதிர்ந்த மூங்கிலின் முத்துக்களும், ஏலம்,இலவங்கம்,தக்கோலம்( வால் மிளகு),இஞ்சி ஆகியவை அடர்ந்து வளர்ந்த சிற்றாறின் கரை மேல், தாழை,மா,புன்னை,ஞாழல்,குருகத்தி, ஆகிய மரங்களின் மேல் குயில்கள் கூவும் கூவலைக் கேட்டு அஞ்சுகின்ற தன்மையுடையது மான்கள் என எழுதிச்செல்கிறார் சதகத்தில். இது பத்தாம் நூற்றாண்டு பாடல்.

இங்கே, தென்னை டெல்டாவிலோ தமிழக நிலப்பரப்பின் வேறெந்த நிலவியலிலோ இந்த நிலத்திற்கான மரமாக இருந்ததில்லை.  இருந்ததற்கான ஆதரமும் இல்லை. மேலும், அவை பிற்காலத்தில் நவீன காலத்தில்
தன் அடிப்படை உரிமைகளைக்
கேட்க வைப்பதை மறக்கடிக்கும்
பணப்பயிராகத் தென்னை இங்கே
தோட்டக் கலைத் துறையினரால்
பரிந்துரைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

முப்போகமும் நாற்போகமும் நெல் விதைத்த விவசாயி
காவியிரில் கால்வாயில் தண்ணீர் கேட்பார்; கடைமடை வரை அது வரவேண்டுமென்பார். கொடி பிடிப்பார்; கோசம் இடுவார். இது பகுதி விவசாயிகளின் கதை.

தென்னையை வளர்த்தா இளநீரு; பிள்ளையை வளர்த்தா கண்ணீரு.
தென்னையை வச்சவன் சாப்பிட்டுச் செத்தான், பனையை வச்சவன் பாத்துச் செத்தான். இவையெல்லாம் பழமொழிகளா? பழமொழிகளின் தோற்றத்திலான விளம்பரங்கள்.

சுய தண்ணீர்க் கால்வாய் உரிமைகளைக் கேட்காத ஒரு நிலத்தொகுதியை, மக்களின் நினைவுகளை நிலத்தில் இருந்து பணப்பயிர்; மரப்பயிர் எனும் மோகம் காட்டி அழித்தொழிப்பதே தென்னை நடவின் திட்டம்.

முன்னே சொன்னார்கள். ஓலையில கீத்து பின்னலாம்; ஓலைக் குச்சியில தொடப்பம் கட்லாம்னு. மென் தொடப்பம் வந்திட்டு;ஓலைக்குப்பதில் கூலிங் ஷீட் வந்திட்டு.

பதக் குட்டையில் அழுகுகிறது
ஓலைகள். நம் நிலப்பரப்பிற்கு டெல்டா பகுதிகளுக்கு ஒவ்வாதான
மரப்பயிர்களைப் பரிந்துரைத்து,
இன்று இப்படி ஒரு இடர் வரும்போது அதை எதிர்கொள்ளும் திறன் பற்றிய அறிவின்றி, முறிந்த தென்னைகளுக்குப் பதில்  மீண்டும்
தென்னையே வழங்குவோம் என்பது, இருண்ட வாழ்வில் இன்னும் இருள் சூதுதானே கவ்வும்.

தோழர் குமார் அம்பாயிரம் அவர்களது பதிவு.

செவ்வாய், 27 நவம்பர், 2018

மாவீரர் நாளும் மானுடப் பண்பாடும் :- குணா கவியழகன்


நவம்பர் 27 தமிழர்கள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம்  உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு நாளாக இந்த நாள் உருப்பெற்று நிற்கிறது. அர்ப்பணத்தை மகோன்னதப் படுத்துகின்ற மானுடப் பண்பாடாக அறிமுகமாகி நிற்கிறது. தமிழரின் விடுதலை அரசியல் பாதையில் உயிர் ஈகம் செய்தவர்களை இருளில் ஒளியேந்தி வணங்குகிறோம். அவர்களின் அர்ப்பணத்தை இருள் சூழ்ந்த எம் இன வாழ்வுக்கான ஒளியாக கொள்கிறோம். மாவீரத்திற்கும் மகா தியாகத்திற்கும் உரித்தான நாளாக இந்நாளை மகிமைப் படுத்தி, எமது மனப் பண்பாட்டையும்  உயர்த்திப் பிடிக்கின்றோம். கால நதியில் கரைந்திடாது இந்நாளையும் இப்பண்பாட்டையும் காப்போம் என உறுதிகொள்கிறோம். அது எமக்கு ஒளியாகும் என்று நம்பிக்கையும் கொள்கிறோம்

மாவீரர்களுக்கு உறவுடையோரே, உற்றவர்களே, உரித்துடையோரே !

உங்கள் தீரா துயரமும், உறவிழந்து நிற்கும் உங்கள் வாழ்வின் துயர்ப் பாடுகளும் இழைக்கப்பட்ட வஞ்சக அரசியல் குறித்து நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது; இரத்தக் கண்ணீரையே தந்து நிற்கிறது. மாவீரர்களை நெஞ்சில் சுமக்கும் அதே நேரம், உங்களை எம் தலையில் சுமக்க வேண்டும். அது ஒன்றே தக்க செயல். அதுவே தர்மமும் அறமுமாகும். அந்த அறத்தை ஏந்தியவர்களோ வாழ்வின் கடை நிலையில் காவல் வைக்கப்பட்டிருகிறார்கள். அந்த அறம் அறியாதவர்கள் முடி சூடப்பட்டிருகிறார்கள். செய்வதற்கு ஏதுமின்றி வல்லமை பறிக்கப்பட்ட எம் கரங்களை உம்முன் கூப்பி நிற்கத்தான் முடிகிறது. எம் தலைகளை உங்கள் முன் குனிந்து கொள்கிறோம். தயவுடன்  எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வணக்க நாள் உங்கள் வாழ்வுக்கும் மதிப்பளிகின்ற மகா திருநாளே.  காலச் சக்கரம் ஒருபோதும் தரித்து நிற்பதில்லை. ஒருநாள் அது எங்கள் திசை நோக்கி தன் சுழற்சியை தொடங்கலாம். உங்களுக்காய் ஒரு நல் விதியை இயற்ற கால வெளி தன் கதவுகளைத் திறக்காலாம். அப்போது எம் கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.

அன்புள்ளவர்களே !
விடுதலை என்பது அடையப் பெறும்வரை நடை போடவேண்டிய  காலப்பயணம்.  விடுதலையை அவாவுதலே அந்த பயணத்திற்கான ஆன்ம பலம். அது ஒன்றே சுதந்திரத்திற்கான இயங்கு சக்தி. அந்த ஆன்ம பலத்தை, அந்த இயங்கு சக்தியை கொண்டு காலப் பயணம் செய்யாத எந்தத் தேசமும், எந்த மக்கள் சமூகமும் விடுதலை பெற்றதாய் உலக சரித்திரம் பதிவு செய்யவில்லை. சரித்திரத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இந்த மானுட வரலாறு முன்னேறிவந்திருக்கிறது. தேசங்களுக்கும் மக்கள் சமூகங்களுக்கும் அதுதான் விதி. இந்த இயங்கு விதிக்கு விலக்கானது என்று சரித்திரத்தில் எதனையும் காண முடியவில்லை. விடுதலையை அவாவுதல் என்ற சுதந்திரத்திற்கான இந்த இயங்கு விதியைக் கடைபிடிக்காத எந்த மக்கள் சமூகமும் அதை அடைந்துவிட முடியாது. அதற்கான தகுதியையும் பெற்றுவிட முடியாது.

இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தடுமாறி நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன. விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையை மாயை அகற்றி  உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு   வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப் படுத்துக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்திற்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விடுதலைக்கு தலைமை தாங்க முடியாது. தக்க அரசியல் இயக்கத்தை கட்டிவளர்க்கவும் முடியாது. அறிவு அர்ப்பணம் அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத்தந்துவிடவும் முடியாது. அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தலைமைத்துவமாகவும் இருக்க நியாயம் இல்லை. இவை இறக்குமதி சனநாயக நாசகரப்  பொறிமுறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.

ஒரு காலம் ஐரோப்பாவில் உருவாகிய பேரரசுகள் எங்கள் ஆதிபத்தியத்தையும் அரசுரிமையையும் விழுங்கிக் கொண்டன. அவை தமக்கு இசைவான அரசியல்படி புதிய இறைமை எல்லைகளை உருவாக்கின. இறுதியாக ஆண்ட பிரித்தானிய பேரரசு  தமிழர்களின் இறைமை உரிமையை தமது புவிசார் நலனுக்கு இசைவான தரப்புகளிடம் கையளித்து நவகாலனித்துவ முறைமைக்குள் புகுந்து கொண்டது. இந்த அரசுரிமைமையை பெற்றுக்கொண்டவர்கள் தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும் கூட்டு வாழ்வையும் கருவறுக்கும் நாசகார அரசியலை முன்னெடுத்தனர். இதனால் பலியானது இலங்கைத் தீவின் தமிழ்மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமூகமும் தான். சிங்கள பெரும்பான்மை மக்கள் இதை கண்டுணர தவறினர். மேற்குலக தலைமை கொண்ட புதிய நவ தாராளவாத  அரசியல் போக்கிலும் இதுதான் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது.
அன்று இந்த விதியிலிருந்து நசுக்கப்படும் தமிழ் மக்களின் சுதந்திரம் வேண்டி தந்தை செல்வா விடுதலை அரசியலை முன்னெடுத்தார். அகிம்சைப் போராட்டத்தை விடுதலை அரசியலுக்கான வழிமுறையாக வகுத்துக்கொண்டார். தமிழ் பேசும் மக்கள் இந்த விடுதலை அரசியலின் பின்னால் அணிதிரண்டனர். அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அது அரச வன்முறையால் தோற்கடிக்கப்பட்டது. அகிம்சை என்பது இந்த அநாகரிக இறக்குமதி சனனாயக முறையில் மதிக்கபடாது போனபோது அது காலாவதியாகிப்போன முறைமை என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

பின், தலைவர் பிரபாகரன் அப்போதைய உலகப் புறநிலையில் செல்லுபடியான விடுதலை அரசியலாக ஆயுதப் போராட்ட முறைமையை முன் வைத்தார். விடுதலை அரசியலின் காலப்பயணம் ஆயுதப் போராட்டத்தின் வழியே முன்னேறியது. மக்கள் அணிதிரண்டு போராடினர். அளப்பெரிய ஈகங்களைப் புரிந்து முன்னேறினர்.  முடிவாக பெரும் வெற்றியை ஈட்டி இலங்கை அரசை செயலிழக்க வைத்தனர். இந்த பூமி பந்தில் தமிழர்க்கு இத்தீவில் ஒரு நாடு உருவாகுவதையோ அல்லது சமத்துவ உரிமையோடு சமாதான வாழ்வோடு   இலங்கை என்ற நாடு முன்னேறுவதையோ தமது நலனுக்கு எதிராகக் கண்ட சக்திகள் கூட்டாக சதிசெய்து தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தியை அழித்தன.

உலகின் பெரும் சக்திகளும் அவற்றின் உயர் இராணுவ தொழில் நுட்பமும் இந்த போரில் பங்கெடுத்தன. பெரும் மக்கள்  அழிவின் மூலம் இந்த தீவின் அரசியலில் தலையிட்டு தமது வல்லாதிக்கப் போட்டிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டன. இத்தீவில் என்றைக்குமாக நிலைகொள்ள அவை இரகசிய திட்டத்தை வகுத்தன. இந்த நாசகார அரசியலை துரதிஷ்டமாக சிங்கள தலைமைத்துவம் புரிந்துகொள்ள தவறியது. விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் இந்த நாசகார அரசியலுக்கு பலியாகி, இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழாக்கும் தீர்மானத்தை எடுக்க விரும்பவில்லை.

உலக சக்திகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகளின் கையில் இரண்டு தெரிவுகள்தான் மீதமிருந்தன. ஒன்று புலிகள் இயக்கத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவது. மற்றையது இலங்கை என்ற நாட்டின் எதிர்காலத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை தவிர்ப்பது. ஒரு விடுதலை அரசியலை முன்னெடுக்கும் அமைப்பின் அறம் என்ற வகையில் இரண்டாவது தீர்மானத்தையே விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துக் கொண்டது. இலங்கைத் தீவின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்டு தமிழர்களின் உரிமையையோ வாழ்வையோ கண்டெடுக்க முடியாது. அது அறத்திற்கு அப்பாற்பட்டது. அரசியல் அயோக்கியத்தனமானது. இலங்கயின் அனைத்து குடிமக்களுக்கும் ஆபத்தானது. இதுதான் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. அவர்களோடு ஒத்துழைக்காத இந்த நிலைப்பாட்டின்  விளைவாகவே  தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தி அடியோடு அழிக்கப்பட்டது. ஆயினும் இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் நிகழ இருந்த அழிவு  காக்கப்பட்டது. இதுதான் கடந்தகாலத்தின் மெய். இதுதான் சத்தியம்.

இந்த சத்தியத்தை இலங்கையின் மக்கள் சமூகங்கள் இன்னும் கண்டுணரவில்லை. அதை கண்டுபிடித்து சொல்ல  புலமையாளர்களும்  தலைவர்களும் தயாராக இல்லை. அந்த புலமையும் அவர்களிடம் இல்லை. அந்த நேர்மையும் இல்லை. அவர்கள் இனவாதம் என்னும் மனச்சிக்கை அறுத்து வெளிவர முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் அரசியல் எவருக்கோ சேவகம் செய்யும் துர்விதியை கொண்டிருக்கிறது.

என்றோ ஒரு நாள் வரலாறு இந்த சத்தியத்தை மீட்டெடுக்கும். இலங்கையின் மக்கள் சமூகங்கள் உண்மை உணர்ந்து விழித்துக் கொள்ளும்.  வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை.  அதுவரை தமிழினம் சிங்கள பேரினவாத அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். விடுதலையை அவாவுதல் என்ற ஆன்ம சக்தியை சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக  கொண்டிருக்கவேண்டும். காலாவதியாக்கப்பட்ட ஆயுத போராட்ட அரசியலுக்கு பின்னான காலத்தை,  இதுவரையான விடுதலை அரசியலிலிருந்து வழுவாது  வழிநடத்த புதிய பாதையை, புதிய முறைமையை  வகுக்க வேண்டும். அதற்கு தகுதியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

விடுதலை எனும் காலப்பயணத்தில் அதுவரையான இந்த தளர்ச்சியைக்  கடக்க மாவீரரின் அர்ப்பணத்தை நெஞ்சில் இருத்திக் கொள்வோம். அர்ப்பணத்தை மகோன்னதவப் படுத்தும்  இந்தப் பண்பாட்டை கட்டிக் காப்போம்.  ஒளிமயமான இத்தீவின் எதிர்காலத்தையும் இன்று  ஏந்துகின்ற ஒளிகொண்டு காண்போம்.

இவ்வண்ணம்
குணா கவியழகன்
எழுத்தாளர்.

சனி, 24 நவம்பர், 2018

தமிழக அரசின் வனக் கொள்கையும் ஆபத்தும்:- ச.பாலமுருகன்.

நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு  வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சமயம் கடந்த 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. வனத்தையும் அதன் இயற்கை வளங்களையும் ஆங்கிலேய அரசாங்கம் சொத்தாக பாவித்தது. அதன் அடிப்படையில் வனத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த சமயம் உருவாக்கிய வனக்கொள்கை உதவியது. வனத்தில் வாழ்ந்து அந்த வனத்தை நிர்வகித்து வந்த பழங்குடி மக்கள் உரிமைகளை அதன் பின்னிட்டு இழந்தனர்.

தமிழகத்தைப் பொருத்து 2015 ஆண்டு கணக்கெடுப்பின் படி 26,345 சதுர மைல்கள் வனத்தின் பரப்பளவு. இது நிலப்பரப்பில் 20.26 சதவிகிதம். இவற்ரில் காப்புக்காடுகள் பெரும்பாலானவை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வரையறை செய்யப்படாத நிலப்பகுதியும் இதில் அடங்கும்.  வனம்
இயற்கையின் பெரும் கொடை மட்டுமல்ல. அது அடிப்படை வாழ்வாதாரத்தின் அடிப்படை. கானுயிர்கள் ,மனிதர்கள் என பலரின் வாழ்க்கை இணைந்த பகுதி வனம்.
காலணி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முதல் வனக்கொள்கையானது  காலணி ஆதிக்க நலனையும் அந்த ஆட்சிக்கு தக்கபடி வன சுரண்டலையும் அனுமதித்த்து. நாடு விடுதலையடைந்த பின்பு 1952 ஆண்டு இரண்டாவதாக விடுதலை இந்தியாவின் வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. பழைய காலணி ஆதிக்க சிந்தனை மற்றும் வனத்தையும் பழங்குடி மக்களையும் சுரண்டும் வகையிலும் மேலும் கூடுதலாக வனத்துறையின் தயவில் பழங்குடி மக்கள் வாழ நிர்பந்திக்கப்பட்ட அவலம் நிகழ்ந்த்து.
பின்னர் 1988 ஆண்டு வனத்தின் பரப்பு குறைந்து வருவதாகவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் ,வனத்தின் பாரம்பரியத்தையும்  மண் அரிப்பை தடுக்கவும், நீர் பிடிப்புப் பகுதியில் உள்ள ஆறு மற்றும் குளங்களின் பராமரிப்பு , பாலை வனங்களின் பரவலை தடுத்தல், சமூக காடுகள் என்ற   நோக்கங்களை முன் வைத்து உருவாக்கப்பட்ட்து.  ஆனால் பழங்குடி மக்கள் வனத்திலிருந்து அன்னியப்படும் வகையில் செயல்பாடுகள் அமைந்தன. கானுயிர் பாதுகாப்பு என்பது வெறும் வனத்துறை சார்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. பழங்குடிகள் அன்னியப்படுத்தப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். வனத்துறையினர் மற்றும் கானுயிர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நிகழ்ந்த இந்த தொடர்  அச்சுறுத்தல்களின் வெளிப்பாடாய் உச்சநீதிமன்றத்தில் பழங்குடிகளை வெளியேற்றினால்தான் வனம் பாதுகாக்கப்படும் என கருத்து முன் வைக்கப்பட்ட்து. அதன் விளைவாய்  பழங்குடிகளை வன நிலங்களிலிருந்து வெளியேற்றும் நிகழ்வும் நடந்தேறியது. நாடு முழுவதும் பழங்குடிகள் போராட்ட்த்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இப் போராட்ட்த்தில் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியான  பாதிப்புகளை அறிந்த பின் மத்திய பழங்குடி நலத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் இந்தியாவில் பழங்குடி மக்களுக்கு வரலாற்று அநீதி நிகழத்தப்பட்டதாக கூறியது. அதன் தொடர்ச்சியாக சமூக சனநாயக ,பழங்குடி செயல்பாட்டாளர்களின் தொடர் முயற்சியால் 2006 ஆண்டு வன உரிமைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட்து. பாரம்பரியமாக மூன்று தலைமுறை நிலத்தில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு மற்றும் வனத்தில் வாழும் பிற மக்களுக்கு அதிகபட்சம்  நான்கு ஹெக்டேர் விவசாய பூமி வழங்க சட்டம் வகை செய்தது.

இச் சட்டம் இதற்கு முன்பு இருந்த வனச்சட்டங்களின் படி வனத்தினை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகளுக்கு மாற்றாக கிராம சபை என்ற கூட்டு சமூகம் வனத்தை நிவகிக்கும் அதிகாரத்தை வழங்கியது. அரசுதுறைகளால் வனம் பாதுகாக்கப்படவில்லை என்பதால் சமூகம் இணைந்து வனத்தையும் அதன் பாரம்பரிய சூழலை பேண வழிவகைசெய்தது. இதனால் இந்த சட்ட்த்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் மு8ட்டுக்கட்டை போடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் இந்த சட்டம் 2016 வரை நடைமுறைக்கு வராமல் வனத்துறையினர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி சட்ட்த்தின் பயன் நிறைவேற்றுவதை தடுத்து வைத்தனர். தமிழகம் வெறும் ஒரு சதவிகித பட்டாக்கள் கூட வன உரிமைச்சட்ட்த்தின் படி இன்றளவும் வழங்கவில்லை.

இச் சூழலில் சமூகத்தில் மாறி வரும் அரசியல், பொருளாதார நிலைகளில் கடும் முதலாளியம் (crony capitalism) என்ற அரசாங்கத்தினை நடத்துவதிலிருந்து அதன் ஆட்சியாளர்களை மற்றும் அதிகாரிகளை தீர்மாணிக்கும் வரை அணைத்தையும் கர்பரேட் கம்பெனிகளின் இசைவு கீழ் நடைபெறும் இன்றைய சூழலில் 2018 ஆண்டுக்கான வனக்கொள்கையினை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை முடிவானது கடந்த 2016 ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு  பழங்குடி செயல்பாட்டாளர்களால் எதிர்ப்பை எதிர்கொண்ட வனக்கொள்கையின் மறு வடிவமே இந்த புதிய வனக்கொள்கை.

வனத்தை இயற்கையின் காப்பு என்ற கொள்கை நிலைபாட்டிற்கு எதிராக வனத்தை வனிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடலும், வனசூழலை பணமதிப்பில் மதிப்பிடுவதில் துவங்குகின்றது இந்த வரைவுக் கொள்கை.மேலும் வனத்திற்காக ஒரு வன கழகத்தையும், வனச்சூழல் தகவல் அமைப்பை  உருவாக்குவது என்றும் இக் கொள்கை உள்ளது. கடந்த 1988 ஆண்டு இருந்த வன காப்பு மற்றும் பழங்குடிகள் மற்றும் வனத்தில் வசிப்போரின் வாழ்வாதாரன் என்ற கோட்பாடுகளுக்கு பதிலாக வன உற்பத்தி (forest production) என்ற கொள்கையினை வெளிப்படுத்துகின்றது. காட்டினை சார்ந்து உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக காடு பார்க்கப்படுகின்றது. தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி (industrial plantation) என்ற உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பதும் சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் அச்சுறுத்தலான யூக்கலிபிட்டஸ் என்ற தைல மரம் மற்றும் நெட்டுலிங்க மரங்களை வளர்த்து தொழிற்சாலைகளுக்கு தருவது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 வனத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து எதையும் குறிப்பிடாத வகையிலும் உள்ளது. மேலும் வன மக்களின் தேவைகளை பாதிக்கின்ற வகையில் தொழிற்சாலைகளுக்காக எதும் செய்யக்கூடாது என்ற பழைய கொள்கை கைவிடப்படுகின்றது. வன உரிமைச்சட்டத்தின் படி அமைக்கப்பட்ட கிராம சபையின் செயல்பாடுகள் புதிய வனக்கொள்கையால் முடக்கப்படும் அபாயம் உள்ளது. 
வனத்தை பழங்குடி மக்களும் வனம் சார்ந்த பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்களும் நிர்வகிப்பதற்கு பதிலாக அரசு மற்றும் தனியார் பங்கேற்ப்பு (public private partnership) என்ற கொள்கை முன் வைக்கப்படுகின்றது. இது வனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் வெளிப்பாடு. பொதுத்துறை நிருவன்ங்கள் தனியார் மயமாக்கம் செய்யப்படும் முன் இந்த கோட்பாட்டைச்சொல்லியே தனியார் மயம் துவங்கும் என்பதே வரலாறு. கடந்த காலங்களில் நடைமுறையில்  வனத்துறையின் செயல்பாடுகளால் தோல்வியடைந்த கூட்டு வன நிர்வாகம்(join forest management ) என்ற கோட்பாடும் தனியார் உடன் இணைத்து முன் வைக்கப்படுகின்றது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த வனக்கொள்கையானது இன்றளவும் வரைவு நிலையில் உள்ளது. மத்திய பழங்குடி அமைச்சகம் இந்த வரைவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் மேலும் பல பழங்குடி இயக்கங்கள் வனத்தை வெறும் இலாப நோக்கில் பார்க்கும் இந்த கொள்கை முடிவால் வனமும் அதை சார்ந்த மக்களின் நலனும் பறிக்கப்படும் என்றும் அரச வன்முறைகளைக்கொண்டு அடக்கி ஒடுக்கி தனியார் கம்பெனிகள் ,கார்பரேட்டுகள் மக்களையும் வாழ விடாமல் ,வனத்தையும் அழித்துவிடக்கூடும் என அஞ்சுகின்றனர். தங்களின் எதிர்ப்பை பகிர்ந்துள்ளனர்.

மத்திய அரசின் வனக்கொள்கையை ஒட்டி ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் மாநில வரைவுக் கொள்கையினை உருவாக்கவேண்டும். ஆனால் மத்திய அரசின் கொள்கையே இன்னும் முடிவாகவில்லை. மத்திய அரசு வனக் கொள்கையானது முடிவாகா நிலையில் அவசரமாக தமிழக அரசு 2018 ஜீன் மாதம் தனது மாநில வனக் கொள்கையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு காட்டும் இந்த அவசரம் மத்திய அரசாங்கம் முடிவு செய்யாத கொள்கையினை மாநில அரசுகளை விட்டு நிறைவேற்றிக்காட்டும் கார்பரேட் தந்திரம் என பழங்குடி செயல்பட்டாளர் சி.ஆர்.பிஜாய் போன்றோர் கருதுகின்றனர்.

  இது முற்றிலும் முரணானது. இந்த கொள்கையானது புலிகள் காப்பக பகுதியிலிருந்து பழங்குடி மக்களையும் பிற மக்களையும் அப்புறப்படுத்தப்போவதாக கூறுகின்றது. இது வன காப்புச்சட்டத்தில் கானுயிர் பூங்கா அமைப்பதற்கான அடிப்படையாக  குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களும், விலங்குகளும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சூழலை உருவாக்குவது என்ற கோட்பாடுக்கு எதிரானது. மேலும் வெறும் ஒரு சதவிகிதம் கூட வன உரிமைச்சட்ட்த்தை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, வன உரிமைச்சட்ட்த்தின் வழி  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் கார்பரேட் கம்பெனிகளின் இலாபத்திற்க்காய் அவர்களின் வாழ்வாதரத்திலிருந்து விரட்டப்படுகின்றனர். சொந்த மக்களின் மீது அரசு போரை நடத்துகின்றது. நாடு முழுவதும்  தனியார், கார்பரேட் இலாபத்தை முன்னிருத்தும் கொள்கை சமூக அமைதிக்கும் சனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல்.

 சமூக,சனநாயக, பழங்குடி ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கவனம் கொள்ளவேண்டும். வாழ்வாதாரம் இழக்கப்படும் மக்கள் மண்ணிலிருந்து விரட்டப்படும் சோகம் கொடுமையானது.  சனநாயக சமூகத்தில் வனத்தை  பாதுகாப்ப்பது மிக அவசியம். அது வனத்துறை அல்லது அரசு தலையீடுகளால் சாத்தியமில்லை. பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மக்கள் அதன் சமூகம் நிர்வகிக்கும் வகையில் வனத்தை சனநாயகப்படுத்துவதில் உள்ளது.

வியாழன், 22 நவம்பர், 2018

புயலைச் செயற்கையாய் உருவாக்கும் அதிபயங்கர வானிலை ஆயுதம்:- சிறீ மணிகண்டன்


மனிதனின் நாகரீக வளர்ச்சி இதுவரையில் காடு, மலை, நதி, உயிரினங்கள் என இயற்கையை மட்டுமே அழித்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது அவன் அடைந்துள்ள அதீத நாகரீக அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தையே அழிக்கவல்லது.

ஆம், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம். “சவூதி அரேபியாவில் ஓரிரு மாதங்களுக்கு முன் செயற்கை முறையில் மழை வரவைத்து வெற்றி கண்டனர்”, என் நண்பன் பெருமையாக பேசிக்கொண்டிர்ந்தான். நான் இடையில் மறித்து “அதிநவீன அறிவியல் கண்டுப்பிடிப்பு இயற்கைக்கு மட்டும் அல்ல மனித இனத்திற்கே ஆபத்து என்று நம்மாழ்வார் கூறியுள்ளார்” என்றேன் என் அருமை நண்பன் செந்தமிழில் வாழ்த்திவிட்டு சென்றார்

சரி ….. ஹார்ப் பற்றிய சிந்தனைக்கு செல்வோம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலுள்ள HAARP ஆராய்ச்சி மையம் – படம் news.uaf.edu

ஹார்ப் (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும். இது வானிலை மாற்றம் மற்றும் ஒரு மின்காந்த போரை நிகழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது. இதுசார்ந்த விளக்கத்தில் ‘உயர் அதிர்வெண் செயல் சூரிய உதய ஆராய்ச்சி திட்டம் என்று அழைக்கப்படும் ஆயுத வகை ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, ஹார்ப் ஆனது  ஒட்டத்தக்க மின்காந்த காற்றின் மூலம் மேல் வளிமண்டலத்தை தாக்குகிறது’ என்கிறது.

இந்த ஹார்ப் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பெர்னாட் ஈஸ்டுண்ட் என்ற அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி, சில இடங்களில் மழைபொழிவு அதிகமாக இருப்பதையும் சில இடங்களில் கடும் வரட்சி நிலவுவதையும் கண்டு வருந்தினார். வானிலையின் இந்த ஓரவஞ்சனையை மனிதனால் மாற்றியமைக்க முடியாதா என்று கனவு கண்டார். ஏன் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பக் கூடாது என்று ஒரு கேள்வி எழுப்பிக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார். அவரது ஆராய்ச்சி வெற்றிபெற்றது. ஆனால் தனது அடிப்படை ஆராய்ச்சி எதிர்காலத்தில் ஒரு அதிபயங்கர ஆயுதமாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

நம்முடைய வளிமண்டலம் பல அடுக்குகளைக் கொண்டது. அவற்றில் அயனோஸ்பியர் எனப்படும் அயனி மண்டலம் நமது தகவல் தொழில்நுட்பத்துக்கும், மழை மேகங்களைக் காப்பதற்கும் அரணாகவும் அடிப்படையாகவும் விளங்குகிறது. அத்தகைய அயனி மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அனுப்பவோ அல்லது புதிய மேகங்களை உருவாக்கவோ முடியும் என்று பெர்னாட் கண்டுபிடித்தார். வான் இயற்பியல் துறையில் வியத்தகு சாத்தியங்களுக்கு வித்திட்ட இவரது ‘ஹார்ப்’ கண்டுபிடிப்பின் சக்தியை வெகுசீக்கிரமே புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இதன் முழுக் கட்டுப்பாட்டையும் தனது பாதுகாப்புத்துறையின் கீழ் கொண்டு வந்தது.

வானிலை ஆராய்ச்சித்துறையின்கீழ் சென்றிருக்க வேண்டிய ஹார்ப் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடும் ஆராய்ச்சியும் அமெரிக்க வான்படை மற்றும் கடற்படையின்கீழ் சென்றதால் சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி துருவ ஆரம்பித்தனர். தற்போது இவர்கள் வெளிப்படுத்திவரும் விஷயங்கள் உலக நாடுகளை உறைய வைத்திருக்கின்றன. மழையில்லாமல் வரண்டு கிடக்கும் இடத்துக்கு மழை கொடுக்கலாம் என்ற ஒரு மனிதநேய கண்டுபிடிப்பு, ஒர் அதிபயங்கர ஆயுதமாக மாறியிருப்பதாக கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப் ஆராய்ச்சி மையத்தில் 180 ஆண்டெனாக்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஈ.எல்.எஃப் என்று அழைக்கப்படும் மிகக்குறைந்த அலைவரிசை மூலம் மின்காந்த அலைகளை உருவாக்கக்கூடிய ஆண்டெனாக்கள். இவற்றின் அசுர சக்தியை புரிந்து கொள்வது எளிது.

இவை ஈ.எல்.எஃப் என்று அழைக்கப்படும் மிகக்குறைந்த அலைவரிசை மூலம் மின்காந்த அலைகளை உருவாக்கக்கூடிய ஆண்டெனாக்கள் – படம் ompilation11.com

உலகின் பெரிய வானொலி நிலையம் ஒன்று 50 கிலோவாட் சக்தியை பயன்படுத்தி தனக்கான மின்காந்த அதிர்வலைகளை வளி மண்டலத்தில் ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொண்டால், ஹார்ப் அண்டெனாக்கள் 3.6 மில்லியன் வாட் சக்தியை பயன்படுத்தி மின்காந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்பும் திறன் கொண்டவை. ஒரு வானொலி நிலையம் ஏற்படுத்தும் அதிர்வலைகளைவிட இது 7500 மடங்கு அதிகம்.

ஹார்ப் ஏற்படுத்தும் மின்காந்த அதிர்வலைகளை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு பருவநிலை மாற்றத்தையும் ஒரு நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் எந்த நாட்டின் செயற்கைக் கோள்களையும் இந்த ஹார்ப்பின் சக்தியால் முடக்கமுடியும்.  எந்தவொரு நாட்டின் மீதும் அல்லது தாக்குதல் தேவைப்படும் ஒரு பகுதியில் இடைவிடாமல் பல நாட்கள் மழைபெய்யச் செய்யமுடியும்.

ஆனால் உங்கள் மீது வானிலை வழியாக ஒரு போர் தொடுக்கப்பட்டது என்று நீங்கள் உணரும் முன்பே வெள்ளத்திலோ, புயலிலோ சிக்கிகொள்ளும் கொடூரத்தை ஹார்ப் நிகழ்த்தி முடித்துவிடக்கூடும்

ஜப்பானை நிலைகுலையச் செய்த சுனாமியை அமெரிக்கா ஹார்ப் தொழில்நுட்பம் வழியாக் தொடுத்த தாக்குதல் என்பதாக விவாதிக்கப்பட்டாலும், அமெரிக்கா அதை ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் வல்லரசுகளின் கையில் கிடைத்திருக்கும் ஹார்ப் ஒரு அதிபயங்கர வானிலை ஆயுதம்!

நாம் இயற்கைக்கு எதிராக போக போக இயற்கை நம்மை அழித்தே தீரும்.

இயற்கையை காப்போம்.

/ HAARP என்னும் அழிவாயுதம் /
3 Aug 2017
Sri Manikandan.

நன்றி:
https://roar.media/tamil/main/features/haarp/


புதன், 21 நவம்பர், 2018

அணங்கின் ஒப்பாரி :- இரபீக் ராசா

ஈ கடிக்காம 
எறும்பு கடிக்காம வளத்த;
பட்டாடை இல்லனாலும் 
பழச உடுத்தி அழகு பாத்த.

கேட்டதெல்லாம் வாங்கித் தருவ;
முடியலன்னா மறைஞ்சு அழுவ.
ஊருகண்ணுபடும்னு 
யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட.

ஆளான அன்னிக்கி 
அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு 
மறச்சு வைக்க,
யாருக்கும் தெரியாத நேரமா 
கிட்ட வந்து கூப்ட்ட.

குனிஞ்ச தல நிமிராம 
உன் முகத்த பாத்த எனக்கு தெரியும் 
என்ன பாத்து ஏன் கலங்கினேன்னு.

கலர்சட்டைய கைவிட்ட;
கடைத்தீனிய எனக்குத் தந்த.
மாராப்புக்குத் துணி வாங்கித் தருவ;
மறைவிடத்துக்கும் சூசசகமா வாங்கிடுவ.

எம்புள்ள போல வருமான்னு 
ஒன்னுமில்லாத என்னய 
தூக்கிவச்சிப் பேசுவ.
உன் முகத்த பாத்து வளந்த எனக்கு
உன்னப்போல தெரிஞ்ச 
அவனைப் பிடிச்சு போச்சு.

என்ன சொல்லப் போறேன்னு 
நெஞ்சுல பயம் இருந்தாலும்,
பாத்து வளத்த பிள்ளைக்கு 
பாதகமா செஞ்சிடுவன்னு நெனச்சு
அவன் முகத்துல உன்னைப் பாத்து பூரிச்சுப்போனேன்.

எந்த சாதி என்ன சனம் 
இன்ன இனம்னு தெரிஞ்சப்ப 
நீ ஆடின ஆட்டத்தப் பாத்து 
பயந்துபோனேன்.

சின்னவயசுல 
கொடைக்காரி கோயிலுல 
சாமி ஆட்டத்தப் பாத்து அலறுனப்ப 
நீ அமத்துனது 
நினைப்புல வந்து போச்சுப்பா.
கொடைக்காரி ஆடுனான்னு 
நம்பினேன்.

கொடைக்காரி மேல 
நீ கொண்ட கோபந்தான் 
ஆவேசத்துல வந்துச்சுன்னு 
இன்னிக்கு நான் புரிஞ்சுகிட்டேன்.

பிறப்பு தந்த ராசா உன்ன விட்டு 
கழுத்துப் புருசனோட ஓடுனேன்.

இளவரசன் கதயும் 
கவுசல்யா நிலமயும் 
கண்ணுல வந்து ஆடுச்சு.

நம்ம அப்பா அப்படிச் செய்யாதுனு 
பெத்தவன் கத தகப்பனா நெனச்சு 
ஓடிப் போனேப்பா.

வயித்துப்பாட்டோட  
வயித்துப் புள்ள சலிச்சுப்போகவும் 
பிரிஞ்சு கெடந்த சொந்தமெல்லாம் 
சேந்துகூடி வாழ்வோமுன்னு 
பாதகத்தி நெஞ்சு 
ஏங்கித் தவிக்கயில,
வா தாயி சேருவோம்னு 
கூட்டிட்டுப் போனயே
நம்பித்தான வந்தோம்;
நட்டாத்துல தூக்கிப் போட்டுட்டியே.

உங்குருத்து என்னை மிதிச்ச
வயித்துல இருந்த எங்குருத்து 
என்ன பாவம் பண்ணுச்சுப்பா?

கூட வாழ்ந்த எம்மவராசன 
கூட்டிட்டுப்போயி எரிச்சிட்டயேப்பா.

நம்பி கும்பிட்ட சாமியும் வரல
நாட்டுச்சாமி கூட்டுச்சாமி 
எதுவும் வரல.

பெத்த சாமி கொல பாதகம் செய்யயில 
மத்த சாமிகள நம்பி என்ன செய்யனு 
முடிஞ்ச மட்டும் கெஞ்சுனனே
கும்புட்டுத் தொழுதனே
கும்பி வத்த அழுதனே.

கண்ணீரக் கண்டும் 
கருணை உனக்கு வரலயே;
கொட்டும் ரத்தம் பாத்தும் 
உன் மனசு மாறலயே.

பெத்த புள்ள துடிச்சனே
கத்திக் கதறி விழுந்தனே
செத்துப்போச்சா 
ஒன் மனசு செத்துபோச்சா.

வித்துட்டயா வச்ச பாசம் வித்துட்டயா
ஒழுகின கண்ணீர 
ஓடி வந்து தொடச்ச கையாலயே
ஓங்கி ஓங்கி அடிச்சியே,
ஒழுகுறது உன் இரத்தம்னு
மறந்துட்டியா மறந்திட்டியா 
மறத்துப் போக வச்சிட்டியா?

ஓடுற தண்ணியில 
உசுர முடிச்சு வீசிட்டயே.
தண்ணியப் பாக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ள வருவேனே 
என்ன செய்வ?

ஒரு பாவம் அறியாத எம்புருசன் 
என்ன தப்பு செஞ்சுச்சு?
அது வம்சத்த கருவுலயே சிதச்சிட்டயே
இனி உன் வம்சம் தழைக்குமா?

கொடைக்காரி சாபத்தால 
உன் குலம் முழுகிப் போச்சுதுன்னு சொல்வாக.
கொடைக்காரிக்குத் தொணயாக 
நானும் போறேன் 
உன் வம்சத்த கருவறுக்க.

கருக்கொண்ட 
என் கர்ப்பவாசலில் கொட்டும்
செந்தூமையின் இளஞ்சூடு 
பெருந்தீயா பத்தி எரிய
பிடி சாவம்.

செத்தாலும் தீராத என் நெஞ்சாவி 
சத்தியமாஉன்ன ஒத்த ஒருத்தரயும் விடமாட்டேன்; விடமாட்டேன்.

கருக்கொண்ட என் தூமைய 
தீட்டுன்னு நீ நெனச்ச 
உன் சாதி
சல்லி சல்லியா நொறுங்கட்டும்.

உஞ்சாதி குறி தூமையக் கண்டாலும் எழும்பாம வேகட்டும்.

என் குலமறுத்த உன் சாதிவன்மம் கருவில்லாம தவிக்கட்டும்.

ஆல் அரசு வேம்பு கருகி போகட்டும்;
பூ பிஞ்சு காயி கனி அத்தனையும் 
வெம்பிப் போகட்டும்.

மண்ணு தரிசாயி காத்து அனலாயி
நீரு தூந்துபோயி 
சர்வ நாச நெருப்பு பரவட்டும்.

உன் சாதிக்குறிகள் 
அதில் கருகாமல்
ஆணவச்சாதி லிங்க அடையாளமாகத் தொங்கட்டும்.

நிலம் அதிர 
ஆடி வரேன் 
பாடி வரேன் ஆரணங்கா.

செவ்வாய், 20 நவம்பர், 2018

புயல் பாதிப்புகள் - கள ஆய்வறிக்கை : - மே பதினேழு இயக்கம்.

கஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின்  முதல் நிலை அறிக்கை.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் முதற்கட்ட அறிக்கையினை வெளியிட்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் முடங்கிக் கிடக்கும் தமிழக அரசின் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினை அம்பலப்படுத்தியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட வலியுறுத்தியும், கஜா புயல் பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவித்திட வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கத்தினால் இன்று(19-11-2018) மாலை சென்னையில் நடத்தப்பட்டது.

அதில் பத்திரிக்கையாளர்களிடம் அளிக்கப்பட்ட முதல்நிலை அறிக்கை:
-----------------------------
புதுக்கோட்டையில் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் மே பதினேழு இயக்கம் கண்டறிந்த உண்மைகள் பின்வருமாறு. அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. வீடுகள் சூறையாடப்பட்டு, மக்கள் செய்வதறியாது  சாலைகளில் ஒரு குடம் நீருக்காக அலைந்து திரிகின்றனர். தமிழக முதல்வரும், அமைச்சர்களும் புயல் பாதிப்பு பற்றி கூறுவதற்கும், கள யதார்த்ததிற்கும் துளியும் சம்பந்தமில்லையென்பதை எங்களது கள ஆய்வில் கண்டறிந்திருக்கிறோம்.

பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் சென்று பார்வையிடவில்லை:

வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின் போது மக்கள் அனைவரும் சொன்ன ஒரே செய்தி, ”கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட ஒரு அரசு அதிகாரியும் கூட புயலினால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து எங்கள் தேவைகள் குறித்து கேட்டறியவில்லை” என்பதே. புயலுக்கு அடுத்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் மக்களை சந்திக்காததால், அதிகாரிகள் தங்கள் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யக் கோரியும், தங்களது உடனடி அன்றாட தேவைகளை நிறைவேற்றக் கூறியும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நவம்பர் 18-ம் தேதியான நேற்று, இன்னும் தங்களது பகுதிகளில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யாத சூழலில், தங்களது பகுதிகளில் ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத பேரிடரை எதன் அடிப்படையில் ‘பெருமளவு பாதிப்பில்லை’ என முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஊடகங்களில் குறிப்பிடுகின்றனர் என்ற கோபமான கேள்வியுடன் பெரும்பாலான இடங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆய்வின் போது ஆலங்குடி, செருவா விடுதி, ஒட்டங்காடு, பாப்பநாடு பகுதிகளில் மேற்சொன்ன காரணத்திற்காக நேற்று சாலை மறியல் நடைப்பெற்றது.

ஆய்வு தொடங்கிய புதுக்கோட்டை-பேராவூரணி சாலையின் வம்பன் பகுதியிலிருந்தே காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிற தங்களை அரசின் நிர்வாக அதிகாரிகள் வந்து சந்தித்து தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியக் கோரி போராடும் பொழுது, அரசின் நிர்வாக அதிகாரிகள் யாரும் வராமல்  காவல்துறை படையினர் மட்டும் வந்து “ஏன் போராடுகிறீர்கள்?” என மிரட்டுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மிரட்டுவதற்கு அரசின் காவல்துறை கட்டமைப்பினால் இயலும் போது, இப்பொழுது உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர வேண்டிய நிர்வாக கட்டமைப்பு அப்பகுதிகளில் இயங்காததை நேரடியாக பார்க்க முடிந்தது.

அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் மட்டும் தங்களால் இயன்ற மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கள நிலை:

18-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் பெரும்பாலான  இடங்களில் மக்களாலும், சில இடங்களில் அரசினாலும் முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களை இணைக்கும் பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள், கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு சாலைப் போக்குவரத்து  சீர் செய்யப்பட்டுள்ளது.
எங்குமே மின்சாரம் இல்லை. மின்சாரமில்லாத காரணத்தினால் வீடுகளிலுள்ள மின் மோட்டார்களும், பொதுக்குழாய் விநியோகத்திற்கான நீரேற்று நிலையங்களும் இயங்காததால் மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர். சமைப்பதற்கு, குளிப்பதற்கு போன்ற அத்தியாவசிய தண்ணீர் தேவைக்காக குடத்துடன் அலைகின்றனர். மின்சாரமில்லாத இரவுகளை கடப்பதென்பது அனைவருக்கும் பெரும் துயரமானதாய் இருக்கிறது.

வாய்ப்புள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் அளவில் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்து, தங்களில் யாரோ ஒருவரின் மின் மோட்டார்களை மட்டும் இயக்கி எல்லோரும் நீரை பெற்றுக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் ஒரு பொது இடத்தில் வாடகை ஜெனரேட்டர்களைக் கொண்டு குறைந்தபட்சம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பாதுகாப்பாக இரவை கழித்திட முயலுகின்றனர்.

ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் 30-40% வரையே கான்கீரிட் வீடுகள். பெரும்பாலானவை ஒட்டு வீடுகள் மற்றும் கூரை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. அவைகளில் தற்போது தங்க முடியாத நிலை இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் பேரிடர் கால தங்கும் முகாம் அமைக்கப்படவில்லை.

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள், எரிபொருளை முதல்நிலை, இரண்டாம்நிலை நகரங்களுக்குச் சென்று வாங்குவதற்காகவே சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. சீரற்ற போக்குவரத்து சூழலில் 20 கிமீ அலைந்து திரிகின்ற சூழலிலும் கூட, 18-ந் தேதி வரையிலும் பாதிக்கப்பட்ட பெரும்பலான  பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படவில்லை.

தங்கள் வீடுகளிலுள்ள மின் மோட்டார்கள், பொதுக் குழாய்கள் இயங்காததால் மழை நீர் தேங்கியுள்ள பொது நீர் நிலைகளையே குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். தொற்றுநோய் பரவக்கூடிய பருவமான பனிக்காலமாக இருப்பதாலும், புயலினால் இறந்துபோன கால்நடைகளாலும் தொற்றுநோய் பரவுக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.

பிரதான பிரச்சனை:

முதல்கட்டமாக நீர், எரிபொருள், மின்சார தேவையென்பதே மக்களின் பிரதான பிரச்சனையாகி இருக்கிறது. இதிலிருந்து மீண்ட பிறகுதான் மக்கள் தங்களது உடைமை பாதிப்புக் குறித்த அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வர்.

அரசு உடனடியாக செய்ய வேண்டியவை:

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மின்வாரிய ஊழியர்கள் தற்போது இயங்கும் வேகத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராக குறைந்தது 15-20 நாட்கள் ஆகும். அதுவரையும் எல்லா ஊராட்சிகளுக்கு ஜெனேரேட்டர் ஏற்பாடு செய்வது முதற்பணியாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் ஒரு ஜெனரேட்டரும், அது இயங்குவதற்கான எரிபொருளையும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நியாய விலைக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கமான அரிசி, பருப்பு, சக்கரை, சமையல் எண்ணெய் மட்டுமல்லாமல் குடிநீர், பால் பவுடர், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நிவாரணம் வழங்கப்பட்டு, தங்களது சேதமடைந்த வீடுகள் சரிசெய்யப்படும் வரை வீடுகளில் தங்க வசதியில்லாத மக்களுக்கு தங்குவதற்குரிய பொது முகாம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறியவை முதல்கட்டமாக உடனடியாக செய்யப்பட வேண்டியவை. ஆனால் இவை மட்டுமே போதுமானதல்ல, இவை பாதிப்பிலிருந்து மக்கள் தற்காலிகமாக மீள்வதற்கு மட்டுமே பயனளிக்கும். உயிர்சேதம் குறித்தான ஆய்வுடன் சேர்த்து, உடைமை, வாழ்வாதார பாதிப்பு குறித்த ஆய்வும் அதற்கான மீட்பு நிவாரணமும் முழுவீச்சில் தொடங்கப்பட வேண்டும். மேற்கூறிய முதல் கட்ட மீட்புப் பணிகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மே பதினேழு இயக்கம் கஜா புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கள ஆய்வினையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. கள நிலவரங்களையும், இழப்பு குறித்த விவரங்களையும், அரசின் மீதான மக்களின் கேள்விகளையும் என அனைத்தையும் தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் ஆய்ந்து வெளிக்கொண்டு வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு
9884072010

திங்கள், 19 நவம்பர், 2018

இந்தப் புயல் ஏன் வந்தது; இனி என்ன செய்ய வேண்டும் :- பூவுலகின் நண்பர்கள்.



தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜ புயலின் பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் வைக்கவிரும்புகிறோம்.

இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் 50க்கும் மேற்பட்ட உயிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மரங்கள், மான்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான காட்டுயிர்களை இழந்திருக்கிறோம். பறவைகள், கால்நடைகள் என பேரிழப்பை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள், குறிப்பாக தென்னை விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் தங்களின் படகுகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். புயல் பாதித்த 7 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்களாகும், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க 5 வருடங்களாகும் என்கின்றன தரவுகள்.

வர்தா, ஒக்கி, தானே என கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த தீவிர புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன.  இவ்வளவு இழப்புகளை தொடர்ச்சியாக தமிழகம் சந்தித்துவருவதற்கான காரணங்கள் என்ன?

புயல்கள் குறித்த தரவுகள்:

இந்தியா, குறிப்பாக தமிழகம் வெப்பமண்டல பிரதேசம். இந்தியாவின் கிழக்கு கடற்கரைதான் அதிகமான புயல்களை சந்தித்துள்ளது. 1890 முதல் 2002ஆம் ஆண்டுவரை 304 புயல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரை சந்தித்துள்ளது. மேற்கு கடற்கரை 48 புயல்களை சந்தித்துள்ளது. இவை மாறும் என்கிறது ஐ.பி.சி.சி அறிக்கை. வடக்கு இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரித்துவருவதால் மேற்கு கடற்கரையும் அதிக அளவில் புயல்களை சந்திக்குமென்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
கஜ புயல், கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய பத்தாவது புயலாகும். இந்த ஆண்டின் 13வது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தை தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54. புயல்களை சந்தித்தவகையில் ஒடிஷா (98), ஆந்திரா (79), மேற்கு வங்காளம் (69) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த படியாக தமிழகத்திற்கு நான்காவது இடம். 1890-2002 காலகட்டத்தில், 54 புயல்களை சந்தித்த தமிழகம் கடந்த 16 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 10 புயல்களை சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. அதாவது வருடத்திற்கு 0.49 புயல்கள் என்று இருந்த சராசரி கடந்த 16 ஆண்டுகளில், வருடத்திற்கு 0.63 என உயர்ந்துள்ளது.

வெப்ப மண்டல நாடுகளை தாக்கும் புயல்களில் 10% இந்தியாவை தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 76% இந்தியாவிலும், வங்கதேசத்திலும் ஏற்படுகின்றன. அத்தோடு இந்தியாவில் வாழக்கூடிய மக்கள் தொகையில்  மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு புயல்களால் பேரழிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
புயல்கள் ஏற்படுத்தும் பேரழிவுகள் மட்டுமல்லாமல், "புயலால் கொண்டுவரும் கடல்மட்ட உயர்வு" (storm surge) கடந்த 100 ஆண்டுகளில் 30 முறை பேரழிவுகளை கொண்டுவந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் பிலிபைன்ஸ் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய "டுட்டு" சூறாவளியின் மீதம்தான் தமிழகத்தை தாக்கி பேரழிவை ஏற்படுத்திய "கஜ" புயலாக மாறியது. சூறாவளி வலுவிழந்து செல்லும் நேரங்களில் வெப்பமான கடலை அடைந்தால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக, தீவிர புயலாக மாறும். கஜ புயல் இப்போது கரையை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்று மீண்டும் புயலாக மாறி லட்சத்தீவுகளை தாக்கலாம் என்று வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

கஜ புயல் இறுதிவரை கரையை கடக்கும் இடம் குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியவில்லை, இவ்வாறு கணிக்கமுடியாமல் போவது அரிதிலும் அரிதானது என்கிறது இந்திய வானியல் ஆய்வு துறை. இந்த வருடம் ஒடிசாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்திய "திட்லி" புயல் கரையை கடந்தபிறகு தன்னுடைய பாதையை மாற்றியது அதனால் பேரிடருக்கு தயாராக இல்லாத மாவட்டங்களுக்கு புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 62 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வெப்ப மண்டல பகுதிகளின் வானிலையை அவதானிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கையில், காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய "நிச்சயமற்ற" தன்மை இந்த பிரச்சனையை அதிகரிக்கும். இந்தியாவிற்கென்ற தனித்துவமான "காலநிலை மாதிரிகள்" இல்லாதது இந்த சவாலை அதிகப்படுத்துகிறது.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வேறு நாடுகளின் மாதிரிகளை வைத்து நம்முடைய பருவத்தை/காலநிலையை கணிப்பது முழுமையாக இருக்காது. இந்த பிராந்தியத்திற்கென்றே பிரத்தியோகமாக உள்ள சில கூறுகள், அதாவது பருவநிலையில் விளைவுகளை/தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளின் குறித்த விவரங்கள் அல்லது பங்களிப்பு விகிதங்கள் முழுமையாக மேற்குலக மாதிரிகளில் இருக்காது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், வெப்பசலனங்கள், இந்தியப்பெருங்கடலில் உள்ள டைபோல் (IOD), பெருங்கடல்கள்- அலைகள்- வளிமண்டலம்  இவற்றிற்கு இடையே நடைபெறும் பரிமாற்றங்கள் (Ocean‐Waves‐Atmosphere (OWA) exchanges) இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த முழு தரவுகளும் தற்போது நாம் பயன்படுத்தும் மாதிரிகளில் இருக்காது.

கடந்த மாதம் தென்கொரியாவின் இஞ்சேன் நகரத்தில் வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி அறிக்கையை தொடர்ந்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. உலகப்புகழ் பெற்ற "நேச்சர்" இதழில் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் ஏற்படும் புயல்கள் சூறாவழிகளில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற வகையில் ஆய்வை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், புயல்கொண்டுவரக்கூடிய மழையின் அளவு 33% அதிகரிக்கும் என்கிறது. இத்தோடு மட்டுமல்லாமல் புயலின் தீவிரத்தன்மை அதிகரித்து அதன் வேகம் 46 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று அச்சமூட்டுகிறது.     

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

அழிவுகள் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் உள்ள வைக்கோல்போர்போல் அழிந்துவிடும் என்கிறது குறள்.

புயல் நம்மைத் தாக்கும் என்று அறிவித்த பிறகு மக்களை வெளியேற்றுவது, நிவாரண முகாம்கள் அமைத்து மக்களுக்கு உணவு வழங்குவது மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிடையாது. வருடத்தின் முக்கால்வாசி நாட்களில் புயலின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை செய்துவிட்டு, மீதமிருக்கும் நாட்களில் புயலை அல்லது பேரிடரை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அறிவுடைமையாகாது.

நாம் என்ன செய்ய வேண்டும்:

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழகம் மட்டும் இதை செய்தால் போதுமா என்கிற கேள்வி நிறைய மக்களிடம் உள்ளது. உலகமும் செய்யவேண்டும், தமிழகமும் செய்யவேண்டும் என்பதுதான் பதில்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தை புயல் தாக்கிவருகிறது, இது ஆண்டிற்கு ஒருமுறை என மாறும், பிறகு ஆண்டிற்கு இரண்டு என்று வரும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து வளங்களும் பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படும். வேறு எந்த மக்கள் நல திட்டங்களும் செய்யமுடியாது.

கடந்த ஆண்டில் மட்டும் இயற்கை பேரிடர்களால் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 1.5% இழந்துள்ளது, வளர்ச்சி என்கிற கோட்பாட்டில் நாம் செய்ததின் விலையை நாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். சென்னை வெள்ளத்தால் 80,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு, கேரளா வெள்ளத்தால் 40,000 கோடி இழப்பு, இப்போது கஜ புயலால் பல்லாயிரம் கோடிகள் இழப்பு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

1076 கி.மீ கடற்கரைகொண்ட தமிழகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழுமையான நிவாரணம்/அரசு வேலை வழங்கவேண்டும்.

2. தமிழக அரசு 8 வழிச்சாலைக்கு இடங்களை கையகப்படுத்தும்போது ஒரு மரத்திற்கு 40,000-50,000 வரை இழப்பீடு தருவோம் என்று அறிவித்திருந்தது. இப்போது தென்னை விவசாயிகளும், பாக்கு விவசாயிகளும் தங்களுடைய முழு வாழ்வாதாரங்கள் இழந்து நிர்கதியாக உள்ளார்கள், அவர்களுக்கு 8 வழிச்சாலைக்கு அறிவித்த அதே நிவாரணத்தை அளிக்க வேண்டும்.

3. புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் வாங்கியுள்ள கடன்கள், கூட்டுறவு வங்கி,  பொதுத்துறை வங்கி, தனியார் வங்கிகள், தனிநபர்கள் என யாரிடம் கடன் வாங்கியிருந்தாலும் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், அந்த மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள கல்வி கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும்.

நீண்டகால நடவடிக்கைகள்
(6 மாதம் முதல் இரண்டு வருடத்திற்குள் செய்யவேண்டியவை)

1. தமிழகத்திற்கென
பிரத்தியோகமான காலநிலை மையம் அமைக்கப்படவேண்டும். அந்த மையம் தமிழகத்தின் காலநிலை கொள்கைகளை வடிவமைத்து திட்டங்கள் தீட்டும் மய்ய நிறுவனமாக, அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். இனிமேல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்குமான "நோடல் ஏஜென்சி"யாக இந்த மய்யம் இருக்கவேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் காலநிலை மாற்றத்தை மையப்புள்ளியாக வைத்தே நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

2. தமிழகத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையங்கள், அணு மின்நிலையங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெரிய துறைமுகங்கள், கடற்கரையோரம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பெட்ரோலிய மண்டலங்கள் என அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்

3. ஏற்கனவே செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், அனல் மற்றும் அணு மின்நிலையங்கள் படிப்படியாக குறைக்கப்படவேண்டும். தமிழகத்தை முழுமையாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களால் இயங்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்

4. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் கைவிடப்படவேண்டும்

5. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் எந்த எந்த இடங்களில் சதுப்பு நிலங்கள் இருந்தனவோ அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்; சதுப்புநிலத்தில்தான் தான் அலையாத்திக்காடுகள் வளரும், புயல்களின் தீவிரத்தை மட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அவற்றிற்கு உண்டு.

6. அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி பொதுப் போக்குவரத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படவேண்டும். தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள 8வழி/6வழி சாலை திட்டங்களை கைவிடவேண்டும்.

7. இந்தியாவிற்கென காலநிலைச் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள், கடல் ஆய்வாளர்கள், காட்டுயிர் செயல்பாட்டாளர்கள் என அரசு நிர்வாகத்திற்கு வெளியே இருக்கும் முக்கியமான நபர்களைக் கொண்டு குழு அமைத்து அவர்களின் ஆலோசனையின் படி திட்டங்களை தீட்டவேண்டும்.