கேள்வி--பதில்:
இருட்டில் உழலும் தமிழினம் இனி என்ன செய்ய வேண்டும்?
[1] தமிழினத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை என்ன?
ஈழ எழுத்தாளர் நிலாந்தன் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றை ஓவியர் புகழேந்தி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையின் வருங்காலம் பற்றிய சில அலசல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளும், இடது சாரிகளும், ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டன. சக்தியற்ற சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித் இயக்கங்களும்தான் ஈழப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடு ஈழ மக்களின் பின்தளமாக இல்லை என்று டில்லி கொள்கை வகுப்பாளர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். “தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் ‘ஒரு கூறாகக்’ காணப்படுகின்ற; சிறிய ஆனால் புரிந்து கொள்ளக் கடினமான, வீரமிக்க ஒரு சனத்திரளைத் தொடர்ந்தும் வன்மத்தோடும் ‘பெரிய இந்தியா’ என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுகமுயலும்” அரசியல் சூழலை அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார் நிலாந்தன். சுருக்கமாகச் சொன்னால், தில்லியைப் பொறுத்தவரை, ஈழம் ஒரு பிரச்சினை அல்ல, தமிழகம் ஒரு பொருட்டேயல்ல.
[2] தமிழகத்தின் அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழினம் தமிழகத்திலுள்ள ஊழல்மிக்க, தன்னலவாத பெரிய கட்சிகளை, அவற்றின் தலைவர்களை உதறித் தள்ள வேண்டும். பெரும் ஊழல்களிலும், மோசமான வழக்குகளிலும் சிக்கி, திறமையான வழித்தோன்றல்களை உருவாக்கத் தவறி, எந்தவிதமான கொள்கைப் பிடிப்புமின்றி, வருங்கால இலக்குகளுமின்றி தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் அவர்களின் சாயம் வெளுக்கத் துவங்கிவிட்டது. டில்லி கொள்கை வகுப்பாளர்களின் கைகளில் சிக்கிய கைப்பாவைகள் போலவே அவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்ப்பந்தல் போட்டே, நம் வாழ்வை அழித்தவர்கள் இவர்கள். பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தமிழக அரசியலில் ஒரு பொருட்டேயல்ல என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் வெற்றுப்பேச்சும், வாய்ச்சொல் வீரமும், வெறுப்பு மற்றும் ஆணவம் கொப்பளிக்கும் பாசிச அணுகுமுறையும், உத்திகளற்ற செயல்பாடும் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியம் கறிக்கு உதவாது. முற்போக்குச் சிந்தனையும், முரணில்லாக் கொள்கைகளும், செம்பச்சை (Red Green) விழுமியமும் கொண்ட மிதவாத தமிழ்த் தேசியம்தான் மாற்று. சமூக நீதியும், சமத்துவமும் கோலோச்சும்; மக்கள் அறிவியலை, தக்க தொழிற்நுட்பத்தை, நீடித்த நிலைத்த வளர்ச்சியை, இயற்கை வாழ்வாதாரங்களைப் பேணும் கலப்புப் பொருளாதாரம் செழித்தோங்கும்; மனித உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும், மனித மாண்பும் தழைத்தோங்கும் ஏற்பாட்டைத்தான் செம்பச்சைக் (Red Green) கொள்கையாய் ஏற்கிறோம். தமிழ்த் தேசிய வேரூன்றி, மனிதநேய கிளைபரப்பி, ஒரு மரம்போல் வாழ மனங்கொள்வோம்.
[3] சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடு என்ன?
சிங்களப் பேரினவாதம் தனக்கே உரிய நரித்தனத்தோடு சீனாவின் வலிமையை, தோழமையைக் காட்டி டில்லி கொள்கை வகுப்பாளர்களை தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கள வெறியர்கள் கடுகளவும் இந்தியாவை விரும்பவுமில்லை, நம்பவுமில்லை, மதிக்கவுமில்லை. இது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவைக் காட்டி சீனாவிடமிருந்தும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமிருந்தும் கறந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களவர்கள். இந்தியாவும் சீனாவும் ஒன்று சேரும் வாய்ப்போ, தன்னை இனம்கண்டு கொள்ளும் நிலையோ வராது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். ஈழத் தமிழர்களையும், தமிழ் மீனவர்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவார்கள்.
[4] அப்படியானால் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம்தான் எது?
பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறத் துவங்கிய ஈழத்து இளைஞர்களை நேரில் சந்தித்து, சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஏப்ரல் தேதியிட்ட “தமிழ் உலகம்” இதழில் “அன்னிய மண்ணில் அகதிகளாய்” எனும் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். “கடினமாக உழைத்து கண்ணியமாகவே இருப்பதனால், மேலை நாட்டு மக்கள் இவர்களிடம் வெறுப்புக் காட்டவோ அல்லது இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதோ இல்லை. ...ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சீரான அரசியல் ரீதியில் இவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை” என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால் இன்றைய நிலைமை பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. அதை இன்னும் மாற்ற வேண்டும்.
ஈழத் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் காலூன்றி விட்டார்கள். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் புலம்பெயர் தமிழர்களை ஓர் அரிய வாய்ப்பாகப் பார்க்கின்றனர். நிலாந்தன் துல்லியமாக அறிவிக்கிறார்: “உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளைத் தன்வயப்படுத்துவதன் மூலம் இந்த [தெற்காசிய]ப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன.” அமெரிக்காவிலுள்ள செல்வாக்குமிக்க ஐரிஷ், யூத சமூகங்களைப் போல, அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல, அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக ஈழத் தமிழர்கள் உருவாகலாம் என்றும் நினைக்கிறார் நிலாந்தன். புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக நமது நம்பிக்கை நட்சத்திரங்கள். அதே போல, உலகெங்கும் பரந்து வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் தமிழகத்தோடும், தமிழகம் அவர்களோடும் சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சா ரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதும், தொடர்வதும் மிகவும் அவசியம்.
[5] புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
புலம்பெயர் தமிழர்கள் தங்களை இன்னும் இறுக்கமாக, இணக்கமாக கட்டமைத்துக் கொள்ளவேண்டும். தமிழீழத்திலும், தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற பிற நாடுகளிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்துக்கு ஆவன அனைத்தும் செய்ய வேண்டும். திறமைமிக்க, பொருளாதார சக்தி கொண்ட, அரசியல் பின்புலமுள்ள ஒரு சர்வதேசக் குமுகமாக நாம் உருப்பெற உதவ வேண்டும். கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils), அமெரிக்காவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு (World Tamil Organization), நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) போன்ற அமைப்புக்கள் இன்னும் பல்கிப் பெருக வேண்டும், பலம் பெற வேண்டும், படையணிகளாய் ஒன்றுதிரள வேண்டும்.
[6] சர்வதேச அரசியலை தமிழினம் எப்படி எதிர்கொள்வது?
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான அவநம்பிக்கை, பகைமை, போட்டி போன்றவற்றை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவோடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் “அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்” மேற்கத்திய நாடுகளிடம் நட்பு பாராட்டி இந்தியாவைக் கையாளவேண்டும். சீனா உரிமை கொண்டாடும் திபெத், தைவான் போன்ற பகுதிகளின் மக்களோடும், சீனாவை ஐயுறும் பிற தெற்காசிய நாடுகளோடும் நாம் தொடர்பைப் பேண வேண்டும். இந்தியப் பெருங்கடலைச் சுற்றி முத்து மாலை (String of Pearls) ஒன்றைக் கட்டியமைக்க சீனா முயலும்போது, அதில் ஒரு முத்தையாவது நம்மால் உடைத்துக்காட்ட முடியும் என்பதை உணரச் செய்ய வேண்டும். நாம் வல்லாதிக்கக் கனவுகள் கொண்ட குமுகமல்ல; ஆனால் யாருக்கும் அடிமையாக வாழவும் மாட்டோம்.
[7] தமிழினத்தின் அரசியல் இலக்கு என்ன?
நமது வாழ்வுக்காக, வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரங்களுக்காக, வருங்காலத்துக்காக, வரவிருக்கும் சந்ததிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தையும், தமிழீழத்தையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு அந்தப்பக்கமா போகப் போகிறோம்? இல்லை! கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்களருகேதான் வாழப்போகிறோம். அவர்கள் நம்மை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஓரடி எடுத்துவைத்தால், நாம் இரண்டடி எடுத்துவைக்க அணியமாயிருக்கிறோம்.
[8] கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்கள்தான் நமது பிரச்சினையா?
இல்லை. நமது முக்கிய பிரச்சினை நாமேதான். நமது சமூக—கலாச்சாரத் தளங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவந்தாக வேண்டும். யார் கொண்டு வருவது? எந்தப் புனிதரோ, தேவதூதரோ கொண்டுவரப் போவதில்லை. நாமேதான் கொண்டுவர வேண்டும். மொத்தத் தமிழினமும் மாறட்டும், நான் உடனே மாறிவிடுகிறேன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைப்பாடு. நாம் ஒவ்வொருவரும் உடனே மாறினால், தமிழினம் ஒரே நாளில் மாறி விடும்.
[] சாதி, மத அடையாளங்களைப் புறந்தள்ளி, தமிழராய் நம்மை, நம்மவரை பார்க்கப் பழக வேண்டும். சிறுபான்மையினர், தலித் மக்கள் உரிமைகள், நலன் காக்கும் வழிவகை செய்ய வேண்டும்.
[] கல்வியறிவை, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை, சமூக-அரசியல் விழிப்புணர்வை, சுற்றுச்சூழல் அறிவை வளர்க்க வேண்டும்.
[] பெண்களுக்கு கல்வியும், முக்கியத்துவமும், பாதுகாப்பும் கொடுத்து, குடும்பங்களை, சமூக உறவுகளைப் பேணியாக வேண்டும்.
[] தமிழ் ஆண்களை, தமிழ்க் குடும்பங்களை சிதைத்துக் கொண்டிருக்கும், மது அரக்கனை அழித்தேயாக வேண்டும்.
[] சினிமா, சின்னத்திரை போன்றவற்றைப் புறந்தள்ளி, நுண்கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
[] பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் குறிக்கோள், வெற்றியின் அளவுகோல் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
[] நமது வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், நிறைகுறைகள் பற்றித் தெரிந்து, எதிர்மறை எண்ணங்களை, அணுகுமுறைகளைக் கைவிட்டு, உயர்ந்த சிந்தனைகளை, மதிப்பீடுகளை, ஒற்றுமையை வளர்த்தெடுப்போம்.
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
நவம்பர் 17, 2013
கார்த்திகை 1, 2044
ஒளிப்படம் :
நித்தியன்