ஞாயிறு, 11 நவம்பர், 2018

வெட்டுப்பட்ட புளியமரம்: முத்துராசா குமார்

தலையின்றி கை கால்களின்றி
இறைச்சி கடையில்
முண்டமாகி கிடக்கும்
கறிவெட்டும் கட்டை
முன்பு புளியமரமாக
தழைத்திருந்தது

வெள்ளாட்டை வைத்து
வெட்டும் போது
கட்டையிலிருந்து சடச்சடவென
புளியம்பழங்கள்
உதிர்ந்தன

அடுத்தடுத்து வெட்டுகையில்
கூடுகள்
கொக்கு முட்டைகள்
விழுந்தன

ஒருகட்டத்தில்
தூளியாடிய சிறுவர்களும்
குதித்தனர்

ஞாயிறு காலையின் கூட்டத்தில்
ஒவ்வொரு வெட்டுக்கும்
எல்லாமும் சேர்ந்து
கிளைகளை உலுப்பின

கடுப்பான கடைக்காரர்
உதிர்ந்ததை
விழுந்ததை
குதித்ததை
மொத்தமாக வெட்டி
கறிகளோடு கலந்து கைமாற்றிவிட்டு கட்டையைத் தூக்கி வீதியில் வீசினார்

வாசலிலேயே காத்துக்கிடந்த
ஆணியடி வாங்கிய முனிகள்
வெட்டுக்காயங்களோடு வந்து விழுந்த
புளியமரத்தை தாங்கிப் பிடித்து
கூட்டிச் சென்றன

எந்த நாய்களும் குரைக்கவில்லை.

- முத்துராசா குமார்

சனி, 10 நவம்பர், 2018

அம்மாச்சி :- முத்துராசா குமார்.


வயக்காட்டில் ஊன்றினால்
நல்லதென்று எரிந்து தணிந்த சொக்கப்பனையிலிருந்து
பனங்கருக்கை பிடுங்கி வந்திருந்தாள்
அம்மாச்சி.

அவள் வருவதற்குள்
மொசைக்கி கற்களால்
பூசப்பட்டிருந்தது வயக்காடு.

தலைவிரிக்கோலத்தில்
கருக்கோடு நடந்தவள்
எத்திசையில் அலைகிறாள் என்று
இன்றுவரைத் தெரியவில்லை.

உடலைவிட பெரிய வாய்கள் கொண்ட
கதிரறுக்கும் எந்திரங்கள்
கொலைப்பசியில் ஊரையே
வேட்டையாடத் தொடங்கின.

முன்னொரு காலத்தில்
மிச்சம் விடப்பட்ட அடிக்கதிரின்
பின்னால் மறைந்திருந்த என்னை
அவைகளின் கண்கள் கண்டுகொண்டு
அருகே வந்து வாய் பிளந்தன.

'சடைப்பிடித்த நெற்களோடு
சாய்ந்து கிடக்கும் கதிர்கள் நானல்ல' என்று கண்ணீரும் சிறுநீரும் வழிய கெஞ்சுகையில்
ஊட பாய்ந்து பனங்கருக்கால்
எந்திரங்களை சங்கறுத்து விட்டு
திரும்பாமல் நடந்தாள் அம்மாச்சி.

(அக்டோபர் மாத 'நடுகல்' இதழில் வெளிவந்த கவிதை)
நன்றி: Pon Muthu

புதன், 7 நவம்பர், 2018

முசிறி: தென்னகத்தின் மொகன்சோதாரோ :- கண. குறிஞ்சி.

கேரளத்திலுள்ள "துறை கடந்த தொல்லியல் அறிவியல் முன்னேற்றத்திற்கான நிறுவனம்" எனும் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பி.ஜே.செரியன், தமிழகத்தின் துறைமுகப் பட்டணமாகிய முசிறி குறித்து ( கி.மு.  300 முதல் கி.மு. 500 வரை ) அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், தமிழகத்தின் தொன்மையை நன்கு பறை சாற்றுகின்றன.

சங்க காலத்தின் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, தமிழகத்திலுள்ள இடங்களை மீண்டும் கண்டறிய முயற்சிப்பதாகச் செரியன் குறிப்பிட்டார். அந்த வகையில்  பட்டணம் பகுதியில் 2007 ஆம் ஆண்டில் அவர் அகழாய்வு நடத்தினார்.

முசிரிஸ் எனும் பழங்காலத் துறைமுகத்தின் ஒரு பகுதியாகப் பட்டணம் பகுதி இருந்திருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக உள்ளது. பட்டணம் பகுதியில் சிறு அளவுதான் அவர் அகழ்ந்து பார்த்தார். இருப்பினும் அங்கு பெற்ற ஆதாரங்கள், தமிழகத்தின் சங்ககாலப் பகுதிகளோடு பட்டணம் பகுதிக்குத் தொடர்பு இருந்ததை உணர்த்தின.

"பழைய வணிகத் துறைமுகமாகிய
முசிறிஸ் / முசிறிப் பட்டணத்தின் உள்ளடங்கிய பகுதியாகப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். முசிறிப் பட்டணத்தை "முசிறிஸ்"  என  உரோமானியர்கள் அழைத்தாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

கடல் கடந்த வணிக மையமாக இருந்ததால், இப்பகுதி குறித்து இந்திய மற்றும் ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியங்களில் அதிக அளவு குறிப்புகள் காணப்படுகின்றன.

முசிறியின் ஓர் அங்கமாகப் பட்டணம் பகுதி இருந்ததற்கான தரவுகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அப்படிப் பார்த்தால், பட்டணம் பகுதிதான் தென்னிந்தியாவின் மொகன்சோ தாரோவாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இன்றைய தமிழ்நாட்டின் புராதனப் பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்துள்ளன.

இன்றைய கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகள், கேரளத்தின் பட்டணத்தோடும், தமிழகத்திலுள்ள  கொடுமணல், அரிக்கமேடு, வீரம்பட்டினம் மற்றும் காவேரிப்பட்டினம் பகுதிகளோடும் பெருமளவு இணைப்பில் இருந்துள்ளன.

சில பகுதிகள் " பட்டணம் " என்ற பெயரைக் கொண்டுள்ளது, அவைகளுக்கு இடையே உறவு இருந்ததைத் தெளிவாக்குகிறது.

இது ஏதோ இரண்டு அல்லது மூன்று மாநிலங்களோடு குறுகி விடவில்லை. கருத்துக்களும், நம்பிக்கைகளும் கடல் கடந்தும் பகிரப்பட்டன.

உரோமானியர்கள், அராபியர்கள் மற்றும் கிருத்துவர்கள் எனக் கண்டங்கள் கடந்து  இணைப்புகள் இருந்தன " என ஆய்வாளர் செரியன் குறிப்பிடுகிறார்.

மேலும் தமிழகத்திலுள்ள சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் பல்வேறு பண்பாடுகளும், நம்பிக்கைகளும்  இணக்கமாக இருந்த புகழ் பெற்ற இடங்களாக இருந்துள்ளன.
தமிழ்நாட்டின் சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் அப்படிச் சிறந்து விளங்கியதற்கான பெளதீகச் சான்றுகள் போதிய அளவு  தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெளிவு படுத்துகிறார்.

"தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோண்டப் பட்ட  40 தொல்லியல் அகழாய்வுகளில், குறைந்தது  20 இடங்களாவது சங்க கால கட்டத்தில் இருந்திருக்கக் கூடும்.

கொடுமணல், அரிக்கமேடு மற்றும் அண்மையில் அகழப்பட்ட  கீழடி ஆகிய பகுதிகள், கேரளத்தின் பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள பட்டணம் எனும் பகுதியோடு பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இந்தப் பட்டணம் பகுதி, தென் சீனத்திலிருந்து ஜிப்ரால்டர் வரையிலும் இருந்த 40 துறைமுகப் பகுதிகளோடு தொடர்பில் இருந்தமைக்கான பெளதீகச் சான்றுகள் உள்ளன.

வரலாற்றிலேயே இந்தக் காலகட்டத்தில்
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வேறுபட்ட கண்டங்களின் ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்கு முதல் முறையாக மக்கள் பயணங்களை மேற்கொண்டனர்" என்ற அவரது கருத்து,  தமிழ்நாட்டின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகிறது.

"நீச மொழிக்கு இவ்வளவு சிறப்பா?" என சமஸ்கிருதவாதிகள் பொறாமையால் புழுங்கக் கூடும். என்ன செய்வது?

சூரியனைக் குடை கொண்டு மறைத்து விட முடியாதே?

சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி - சொல்லாக்கம் பற்றிய உரையாடல் : - தோழர் தியாகு.

சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன். 
ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி வருகிறேன். 
இன்று உலகில் வெற்றி பெற்ற முதல் சோசலிசப் புரட்சி ஆகிய நவம்பர் புரட்சி நடைபெற்ற நாள். (முதல் பாட்டாளியப் புரட்சி ஆகிய பாரிஸ் கொம்யூனைக் கணக்கில் கொள்ளாமல் சொல்கிறேன்). அந்தப் புரட்சியின் சாதனைகளில் ஒன்று உலகெங்கும் சோசலிசச் சிந்தனைகளைப் பரவச் செய்ததாகும். சோசலிசச் சிந்தனைகளை நான் குமுகியச் சிந்தனைகள் என்கிறேன். சோசலிசம், கம்யூனிசம், மார்க்சியம் என்ற கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நவம்பர் புரட்சியால் பரவின. இவற்றுக்கு இணையான தமிழ்ச் சமன்களை அப்போதே தேடத் தொடங்கினர். கம்யூனிசத்தைப் பொதுவுடைமை என்று பாரதியும் திரு.வி.கவும் அடுத்து வந்த தமிழறிஞர்களும் பெயர்த்தனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இதையே பொதுமை என்று சுருக்கினார். “பொதுமை நோக்கிச் செல்கின்றதிந்த வையம்!” பொதுவுடைமையைக் காட்டிலும் பொதுமை பொருத்தமானது என்று கருதுகிறேன். இது குறித்துப் பிறகு பேசுவோம்.

இப்போது சோசலிசத்தை எடுத்துக் கொள்வோம். இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதலில் சோசலிசத்தை ’அபேதவாதம்’ (வேற்றுமையினமை) என்று மொழி பெயர்த்தாராம். பேதமும் தமிழன்று, வாதமும் தமிழன்று என இப்போது சொல்லி விடலாம். ஆனால் அப்போது அது ஒரு நன்முயற்சி. அபேதவாதம் எதிர்மறையாக இருந்ததால் சோசலிசத்தை நேர்நிறையாகக் குறிப்பிட  ”சமதர்மம்” என்ற் சொல்லாட்சி புழக்கத்துக்கு வந்தது. சிஙாரவேலர், ஜீவா, பெரியார் தொடங்கி இன்றும் பலர் சோசலிசத்தை சமதர்மம் என்று குறிப்பிடக் காண்கிறோம். மனுதர்மம், வர்ணதர்மம் என்பது போல் சமதர்மம் இயல்பாக ஒட்ட மறுக்கிறது. சோசலிசத்தை வெறும் தர்மமாகச் சுருக்குவதும் கோட்பாட்டில் பிழையானது.

அபேத வாதம், சம தர்மம் இரண்டுமே தமிழல்ல என்பதால் தமிழ்ப்பற்றுமிக்க சோசலிசவாதிகள்  நிகரமை என்று குறிப்பிடத் தொடங்கினர். நிகர் என்றால் சமம், நிகர்மை என்றால் சமத்துவம், நிகரமை என்றால் சமதர்மம் / சோசலிசம் என்பது இவர்களின் பார்வை. அபேதவதம், சமதர்மம் என்பவை தமிழல்ல, நிகரமை தமிழ்தான். ஆனால் அந்தத் தமிழல்லாத சொற்களைப் போலவே நிகர்மையும் சோசலிசத்தின் உட்கருத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றியது. எனவேதான் சோசலிசம் என்றே தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன். இதனைத் தமிழுக்குக் கொண்டுவரும் தேடல் முய்ற்சியில் தொடர்ந்து ஈடுபட்டேன். அந்த முயற்சியிலிருந்து விளைந்ததே குமுகியம் என்ற சொல்.

Socialism  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிச் சொல் society. Society என்றால் சமூகம். சமூகம் தமிழன்று என்பதால் பாவாணர் குமுகம் என்று சொல்லடித்துக் கொடுத்தார். சமூகம் குமுகம் ஆயிற்று, சமுதாயம் குமுகாயம் ஆயிற்று. குமுக அமைப்புக்ள் அவற்றின் பொருளாக்க உறவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. தொல் பொதுமை (புராதனப் பொதுவுடைமை), அடிமையுடைமை, நிலக் கிழமை (பிரபுத்துவம்) முதலமை (முதலாளித்துவம்) இந்த ஒவ்வொரு குமுக வடிவமும் வெவ்வெறு பொருளியல் அடித்தளம் கொண்டவை. பொருளியல் அடித்தளத்தின் சாறம் (சாரம் அன்று) ஆக்கப் பொறிகளின் (உற்பத்திச் சாதனங்களின்) உடைமை.. முன்சென்ற அமைப்புகளிலிருந்து சோசலிச அமைப்பை வேறுபடுத்தும் அடிப்படைத்தன்மை  ஆக்கப்பொறிகளின் உடைமைதான். சோசலிசத்தில் ஆக்கப்ப்பொறிகள் அனைத்தும் சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை ஆகின்றன. இந்தக் கோணத்தில் சோசலிசத்தை சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை என்றழைப்பதில் பிழை இல்லை. ஆனால் பொருளியல் ஒரு குமுக அமைப்பின் அடிப்படையாக இருக்கும் போதே அரசியல், பண்பாடு போன்ற கூறுகளும் சேர்ந்ததுதான் குமுகம் ஆகும். பொதுவுடைமையை காட்டிலும் பொதுமை சிறப்பானது என்பது இதனால்தான். அதே போல் குமுகவுடைமை என்பதை விடக் குமுகமை சிறப்பானது என்ற முடிவுக்கு வந்தேன்; Socialist system என்பதைக் குமுக அமைப்பு என்போம்

Socialism என்பது ஒரு குமுக அமைப்பின் பெயர் மட்டுமன்று. அது ஒரு கருத்தமைப்பின் பெயருமாகும். குமுக அமைப்பைக் குறிக்க குமுகமை எனலாம். கருதமைப்பைக் குறிக்க குமுகியம் எனலாம்.

வேறு மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் பார்த்தேன். இந்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் சமாஜ்வாத் என்கிறார்கள். அதாவது சமூகவாதம், இதற்கான தூய தமிழ் குமுகியம்தானே?

நவம்பர் புரட்சி குமுகமைப் புரட்சி! குமுகமைக் குமுகம் படைப்பதற்கான புரட்சி! அறிவியல் குமுகியத்தின் வெற்றியை நிலைநாட்டிய குமுகியப்  புரட்சி!

தொடர்ந்து பேசுவோம்!

நம்பிக்கைப் பூ :- புதுவை இரத்தினதுரை

மாரிமழை பொழியும்.
மண்கசியும்
ஊர்முழுதும்
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்
கார்த்திகையில்
பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்.
துயிலுமில்லச் சாமிகளுக்கான
சந்தனநாள் வந்தடையும்.

மாவீரச்செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று
நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி
பாடும் நாள்.
விதைத்த பயிர்கள்
நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்.

குன்றிக் குரல் நடுங்கி
குற்றேவல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு
என நிமிர்ந்து பேசும்படியான‌
புதுவாழ்வின் புலர்வுதினம்.

புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.

தாயழுதால்
அம்மா தளராதே
எனுமொற்றைச்சொல்லே
துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.

பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர‌
பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ...!!!

ஈழத்துக் கவிஞர்
"புதுவை இரத்தினதுரை"

ஓவியம்:
கார்த்திகேயன்

சங்க காலத்தில் சாதியும் உடன்போக்கும்:- கணியன் பாலன்

அகமணமுறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது. இனக்குழு காலத்தில் அகமணமுறை இருந்தது. அன்று இரத்த உறவு என்பது உயிரினும் மேலானதாக மதிக்கப்பட்டது. இந்த அகமணமுறைதான் அந்த இனக்குழுவின் இரத்த உறவையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பு முறையையும் கட்டிக்காத்து வந்தது. ஆகவே இனக்குழு காலத்தில் அகமணமுறை உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் இனக்குழுவின் கண அமைப்பு முறையை அதன் அகமணமுறையை அழித்து அதன் மீது கட்டப்பட்டதுதான் இந்த ஒருதார மணமும், குடும்பமும், அரசும் ஆகும்.

ஆதலால் ஒருதார மணமும், குடும்பமும், அரசும் உருவானபோது இந்த அகமணமுறையும் இல்லாது போனது. தமிழகத்திலும் இக்காலகட்டத்தில் அகமணமுறை இல்லாது போனது. அதன் அடையாளம் தான் ‘உடன்போக்கு’ திருமணமுறை ஆகும். சங்ககாலத்தில் உடன்போக்கு என்பது திருமணத்திற்கான ஒரு முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிய பொழுது இம்முறைக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. ஆனால் பொதுவாக உடன்போக்கு என்பதைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தது என்பதைச் சங்ககால அகப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

இந்த உடன்போக்கில் தலைவி தன் குடிக்குரிய தலைவனோடு மட்டுமே போனதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. முல்லைத்தலைவி குறிஞ்சித்தலைவனோடும், நெய்தல் தலைவி மருதத்தலைவனோடும் என  ஐவகைத்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும், அனைத்துத் தொழில் செய்யும் தலைவனோடும் ஐந்திணைத்தலைவிகளும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதி படத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் அகமணமுறை இருக்கவில்லை. அதன் காரணமாகச் சங்ககாலத்தில் சாதியும் இருக்கவில்லை எனலாம்.

ஆனால் பொருளாதார உயர்வு தாழ்வுகளும், வர்க்கவேறுபாடுகளும் இந்த உடன்போக்குத் திருமண உறவுக்கு ஆங்காங்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன என்பதையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. அதுபோன்றே அரச குடும்பங்களிலும், உயர்வேளிர் குடும்பங்களிலும் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கும். சான்றாக நற்றிணையின் 45ஆம் பாடலில் தலைவி யின் காதலை வேண்டும் தலைவனிடம் தோழி, இவள் சிறுகுடிசையில் வாழும் மீனவப்பெண் எனவும் நீயோ தேருடைய செல்வந்தன் மகன் எனவும் கூறி இருவருக்கும் பொருத்தம் இல்லை என அவனது காதலை மறுக்கிறாள். நற்றிணையின் 328ஆம் பாடலில் மணம் செய்யாது காலம் கடத்தும் தலைவனை எண்ணி தலைவி வருந்தும்போது தோழி தலைவனின் பிறப்பு உயர்ந்தது என்பதால் அவர் என்றும் சொற்பிறழார், விரைவில் வருவார் என ஆறுதல் கூறுகிறாள்.

ஆகவே வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தந்து வந்துள்ளன என்ற போதிலும் உடன்போக்கைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருந்தது என்பதில் மாற்றம் இல்லை. அதன் காரணமாகவே அனைத்துக்குடிப் பெண்களும் அனைத்துக்குடி ஆண்களோடும் வேறுபாடு இன்றி உடன்போக்கு மேற்கொண்டனர் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடக் கூறுகின்றன. அதுபோன்றே செல்வக்குடியில் பிறந்த இளம்பெண் ஏழை இளைஞனோடும், தேருடைய செல்வ மகன் ஏழை இளம் பெண்ணுடனும் உடன்போக்கு மேற்கொண்டதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

சங்ககாலத்தில் திணை வேறுபாடுகளும், தொழில் வேறுபாடுகளும், பொருளா தார அடிப்படையிலான வகுப்பு, வர்க்க வேறுபாடுகளும்தான் இருந்துள்ளன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. இவைபோகச் சங்ககாலத்தில் இழிசனன், சண்டாளன், புலையன் போன்ற கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவர்களும் கூட சாதிய அடிப்படையில் அப்படி அழைக்கப்படவில்லை. இழிவான தொழில் செய்கிறவர்கள் என்கிற அடிப் படையில்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.

குறுந்தொகையின் 40ஆம் பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயர்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” 
என்கிறது. உடன்போக்கில் ஈடுபட்டத் தலைவனும் தலைவியும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதையும் அனைத்துப்பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. ஆகவே அன்றையச் சங்ககாலம் அங்கீகரித்த உடன்போக்குத் திருமண முறையில் சாதிகள் இல்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது எனலாம்.

சங்கம் மருவிய காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் மிக அதிக அளவில் அதிகரித்ததின் விளைவாகவும் வைதீக ஆதிக்கமும், பிராமணிய ஆதிக்கமும் மிக அதிகச் செல்வாக்கு பெற்றதாலும் சாதீயத்துக்கானக் கூறுகள் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகத்துவங்கி இடைக்காலத்திலும் சோழ பாண்டியப் பேரரசுகள் காலத்திலும் அது படிப்படியாக வளர்ந்து வலுவடைந்து, 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஆங்கிலேய ஆட்சியிலும் அது மேலும் வளர்ந்து பிரிவுகள் அதிகரித்துக், கெட்டித்தன்மை கொண்டதாக இறுகி இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

அரசு தோன்றும்பொழுதும் அதன் பின்னரும் உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. ஆனால் உலகில் எங்கும் சாதிகள் உருவாகவில்லை. சங்ககாலத்திலும் சாதிகள் இருக்கவில்லை. ஆதலால் சாதீயத்தின் ஆரம்பகால ஊற்றுக்கண்ணாக இருந்தது வைதீகச்சிந்தனையும், பிராமணியமும்தான் என உறுதிபடக் கூறலாம். எனினும் இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 855 - 857.

ஓவியம்:
கவியோவியத் தமிழன்

திங்கள், 5 நவம்பர், 2018

தீபாவளியும் ஆரியப் பண்பாட்டுப் பின்புலமும்:- முனைவர் தொ.பரமசிவன்.

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந் தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் இத்திருவிழா கொண்டாடப்படு கிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசியத் திருவிழா போலக் காட்டப்படுகிறது.

ஆயினும் தைப் பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்கு களோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப் பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப் பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழா வாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? - பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலை களோடும் சடங்குகளோடும் தொடர்பில் லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண் டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடை யாளமான வெடி, அதன் மூலப் பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுக மாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும். தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்தநாளே பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத்தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசய நகரப் பேரரசான, இந்து சாம்ராஜ்ஜியம், தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின் றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர் களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும், சடங்காகும். தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்கா ஸ்நானம் செய்துகொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத் திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

/அறிஞர் தொ.பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம் நூலில் உள்ள கட்டுரை/