சனி, 13 அக்டோபர், 2018

இன்னுமோர் சாதிய ஆணவப் படுகொலை: சாதிய முகத்தைத் தோலுரிக்கும் அமிர்தவர்சினி.

என் பெயர் அமிர்தவர்சினி. எல்லோரும் அமிர்தா என்று அழைப்பார்கள். அப்பா மாருதிராவ், அம்மா கிரிஜாராணி. வீட்டிற்கு ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலங்கொண்டா அருகில் உள்ளது மிராளுகுடா. இங்குதான் என் அப்பா தனது தொழிலை ஆரம்பித்தார். ரேசன் கடையில் மண்ணெண்ணை விநியோகஸ்தராக தொழிலை தொடங்கிய என் அப்பா மிகப்பெரிய செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்ந்தார். அரசியல் செல்வாக்கு, பண பலம், தொழில் பலம் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் மிக்க மனிதராக தன்னை வளர்த்துக் கொண்டார். நாங்கள் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது.

அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவள். ஒருமுறை என் அப்பா என்னை அழைத்து நீ யாரிடம் வேண்டுமானாலும் பேசு, பழகு. காசு இருக்கிறதோ இல்லையோ அதை எல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் நட்பு வைத்துக் கொள். ஆனால் எஸ்சி சமூகத்தில் இருக்கிறவரோடு பேசக்கூடாது. அவர்களிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நம் குடும்பத்திற்கு கெடுதல். அதைவிட வேறு அசிங்கம் எதுவும் இருந்துவிட முடியாது என்று கூறினார். எனக்கு எஸ்சி என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் எப்படி இருப்பார்கள்? ஏன் அப்பா அவர்களோடு பேசக்கூடாது என்கிறார்? என்கிற கேள்வி எனக்குள் வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் அப்பாவிடம் அந்த பதிலை கேட்க முடியவில்லை.

2011ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிரனய் அப்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அன்பாக பேசக்கூடியவன். நாங்கள் இருவரும் சிறுவர்கள் தான். அந்த வயதில் சக நண்பர்களுடன் குறும்புத்தனமும் கேலியும் கிண்டலுமாக இருப்போம். ஆனால் பிரனய் அதையும் கடந்து பாசத்துடன் பேசுவான். அந்த பாசத்தை எப்படி சொல்வது? எல்லோரும் சொல்வார்கள். காதலன் தன்னுடைய தந்தை போன்று தம்மை கவனித்துக் கொண்டான் என்று சொல்வார்கள். ஆனால் பிரனய் அப்படி அல்ல, ஒரு குழந்தையை போன்று பார்த்துக் கொண்டான். அவன் எல்லோரிடமும் அன்பாகத்தான் பேசுவான். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கனிவும் அன்பும் தான். ஒரு கடுஞ்சொல் கூட அவனிடத்தில் தென்படாது. நாங்கள் நட்போடுதான் பேசி வந்தோம். எங்களுக்குள் எந்த காதலும் இல்லை. இந்த நட்பு என் அப்பாவை கடுமையாக பாதித்தது. என்னை பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திவிட்டு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்.

நான் 11ம் வகுப்பு படிக்கின்ற போது பிரனய் 12ம் வகுப்பு படித்து வந்தான். ஒரே பகுதி என்பதனால் சந்தித்துக் கொண்டோம். இதனை அறிந்த என் அப்பா, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பூட்டினார். கன்னத்தில் கடுமையாக தாக்கினார். நான் யாரோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்றேனோ, நீ அவர்களோடு உறவு வைத்திருக்கிறாய். நீ செய்த காரியத்தினால் நம் வம்சமே அழிந்து போய்விடும். கீழ்சாதி பயலோட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று கூறி கடுமையாக தாக்கினார். எனது அலைபேசி பறித்துக் கொள்ளப்பட்டது. உறவினர்களோடு நண்பர்களோடு எனக்கு பேச அனுமதியில்லை. இந்த சித்திரவதை 6 மாதம் தொடர்ந்தது.

வெளியே எங்கு சென்றாலும் உடன் ஆட்கள் வருவார்கள். எல்லாம் இருந்தும் மனம் வெறுமையாக இருக்கும். வீட்டில் யாரும் என்னோடு பேச மாட்டார்கள். நானே பேச முயற்சி செய்தாலும் மௌனமாக கடந்து சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு மணி நேரமல்ல, ஒவ்வொரு நிமிடமும் பிரனயும் அவனது சாதியும் குறித்து இழிவாகப் பேசுவார்கள். மாலா, மாதிகா சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமானவர்கள் என்றெல்லாம் என் அப்பா விமர்சித்து பேசுவார். ஒரு வருடம் என் படிப்பை நிறுத்தி வீட்டில் சிறை வைக்கப்பட்டு உறவினர்களாலும் குடும்பத்தினர்களாலும் நான் அனுபவித்த சித்திரவதையை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். தினந்தோறும் கண்ணீரும் வலிகளும் நிறைந்த நாட்களாக நகர்ந்தன.

நான் பிரனயோடு நட்புடன் இருப்பதனால் ஒரு வருடப் படிப்பினையே என் அப்பா நிறுத்திவிட்டார். பிரனய், ஹைதரபாத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். என் அப்பாவிடம் கெஞ்சி கேட்டு என் படிப்பை கெடுத்துவிடாதீர்கள் என்று அழுதேன். வேறு வழியில்லாமல் என் அப்பா என்னை ஹைதரபாத்தில் பி.டெக் முதலாமாண்டு சேர்த்துவிட்டார்.

எனக்கு ஹைதரபாத்தில் பி.டெக் படிக்கும் போதுதான் பிரனய் மீது நட்புடன் இருந்த எனது அன்பு காதலாக மாறியது என்று கருதுகிறேன். இருவரும் காதலை பரிமாறிக் கொண்டோம். கடந்த 2016ம் ஆண்டு நானும் என் சித்தப்பா மகள்களும் மற்றும் உறவினர்களும் ஹைதரபாத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு நான் பிரனயை அலைபேசியில், நீயும் படத்திற்கு வா என்று அழைத்திருந்தேன். அவனும் வந்திருந்தான். இதனை கவனித்த என் சித்தப்பா மகள், எனக்கு தெரியாமல் அலைபேசியில் என் சித்தப்பா சரவண்குமாருக்கு தகவலை தெரிவித்தாள். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு வந்த என் சித்தப்பா சரவண்குமார் என்னை கடுமையாக அடித்தது மட்டுமல்லாமல், பிரனய் சட்டையை பிடித்து இழுத்து எல்லோரும் பார்க்கும் விதமாக அவனது கன்னத்தில் அறைந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசினார். பிரனய் நிலைகுலைந்து பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அந்த காட்சியை இன்று நினைத்தாலும் நடுங்கிப் போவேன். எல்லா அவமானங்களையும் எனக்காக தாங்கிக் கொண்டான்.

நான் மிராளுகுடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏற்கனவே எனது உறவினர்கள் 20 – 25 பேர் இருந்தனர். எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு அடித்தனர். ஸ்டூல், உருட்டுக்கட்டை என்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை தாக்கினார்கள். உனக்கு நம்ம சாதியில் எந்த பையனும் கிடைக்கலயா? மாலா தான் கிடைத்தானா? என்று என்னை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளையும் என் உறவினர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதுபோன்ற ஒரு ஆபாசமான குப்பை பேச்சினை, நாற்றமடிக்கும் பேச்சினை அப்போதுதான் முதன்முறையாக எதிர்கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் என்னை பாலியல் ரீதியாகவும் பிரனயை சாதி ரீதியாகவும் இழித்து பழித்து பேசினர். கடுமையாக தாக்கப்பட்ட நான் காயத்துடன் ஆடை கிழிக்கப்பட்டு துவண்டு கிடந்தேன். அந்த கணம் செத்துவிட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் பிரனய் உயிர்ப்பினை கொடுத்துக் கொண்டிருந்தான். அவனது நினைவு, அவனது பேச்சு எனக்குள் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தியிருந்தது.

மறுபடியும் வீட்டிச்சிறை. தாக்குதல், இழிவுபடுத்தப்படுதுல் என்று 20 நாள் இந்த கடும் சித்திரவதை நடந்தது. எனது படிப்பினை நிறுத்திவிட்டனர். ஆனால் 15 நாட்களுக்கு ஒரு நாள் என்று மட்டும் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடன் என் அப்பாவும் வருவார்.

பிரனயின் தந்தைக்கு ஹைதரபாத்திலிருந்து மிகப்பெரிய ஒரு தாதா பேசினான். உன் மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் மாருதிராவ் மகளோடு பேசக்கூடாது. அவனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். இதனால் பயந்து போன பிரனயின் குடும்பத்தினர் பிரனயின் படிப்பை நிறுத்திவிட்டு அவனை அழைத்துக் கொண்டு உறவினர் ஒருவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பில் விட்டனர்.

இதற்கிடையில் பிரனயின் குடும்பத்தினரை மிரட்டிய அந்த தாதா போலீஸ் என்கவுண்டரால் கொல்லப்பட்டான். அவன் இறந்த பிறகு தான் பிரனயை மிராளுகுடாவிற்கு அழைத்து வந்தார்கள்.

என் படிப்பு நின்றுவிட்டது. பிரனய் படிப்பும் நின்றுவிட்டது. அவனது குடும்பம் உயிருக்கு பயந்து வெளியூரில் தஞ்சம் அடைகிற நிலை. இதெல்லாம் எதற்காக நடக்கிறது? ஆழமாக யோசித்துப் பார்த்தேன். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்க வேண்டாமென்று சொல்லி வளர்த்த என் அப்பா, எஸ்சி மக்களை மட்டும் மனிதர்களாக பார்க்கவில்லை? சாதிதான் இந்த எல்லா சதிக்கும் காரணம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன். என்ன நடந்தாலும் சரி என் வாழ்க்கை என்பது பிரனய் கூட தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

பிரனய் மீது அன்பு வைத்தது சமூக குற்றமா? 7 ஆண்டுகள், எனது 14 வயதிலிருந்து சாதி ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் கேட்கலாம் நீ தான் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவள். உனக்கு என்ன சாதி ரீதியான சித்திரவதை என்று கேட்கலாம். என் மீது நடந்தது சாதி ரீதியான சித்திரவதை தான். என் பிரனயிக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை நான் தாங்கிக் கொண்டேன். எனக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை பிரனய் ஏற்றுக் கொண்டான். ஆகவே நான் தலித்தாக பிறக்காமல் இருக்கலாம். ஆனால் தலித்துகள் மீது நடைபெறக்கூடிய சித்திரவதையை நேரடியாக எதிர் கொண்டவள். அதனால் தான் சொல்கிறேன் என் மீதான சித்திரவதை என்பது சாதி ரீதியான சித்திரவதை.

எல்லாவற்றையும் உதறிவிட்டு 2018ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரனயை திருமணம் செய்து கொண்டேன். என் அப்பா மாருதிராவ், பிரனயையும் அவனது குடும்பத்தினரும் என்னை கடத்திச் சென்றதாக மிராளுகுடா 1 டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் காவல்நிலையத்தில் நேரடியாக ஆஜராகி என்னை யாரும் கடத்தவில்லை. நான் பிரனயை திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கமளித்தேன். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். என்னை என் கணவர் பிரனயோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பிரனயின் தந்தை எல்ஐசியில் அதிகாரியாக உள்ளார். கடந்த பிப்ரவரி 2018 மாதத்தில் பிரனயின் அப்பாவை கேத்தப்பள்ளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர், நீ எல்ஐசி ஏஜன்டாமே, பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டாயாமே என்று பொய்யான புகாருக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த கடும் சித்திரவதையை செய்தார். நானும் பிரனயும் ஹைதரபாத்திற்கு சென்று ஐஜியிடம் நடந்ததை சொன்னோம். ஐஜி, நலங்கொண்டா எஸ்.பி. சீனிவாசராவிடம் இதுபோன்று நடவடிக்கை கூடாது. உடனடியாக பிரனயின் தந்தை விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட போலீசார் பிரனயின் அப்பாவை வெளியே விட்டனர்.

கடுமையான அச்சுறுத்தல் இருந்தாலும் பிரனய் என் மீது அதீத அன்பினை காட்டி வந்தான். ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி எங்களுக்கு ரிசப்சன் நடந்தது. மிராளுகுடா பகுதியில் பேனர் வைத்து கோலகலமாக கொண்டாடினோம். ஆனால் அன்றே எங்களை கொல்லுவதற்கு கூலிப்படையைச் சேர்ந்த சுபாஷ்குமார் சர்மா வந்திருக்கிறான். அந்த விபரம் எங்களுக்கு பின்னால் தான் தெரிய வந்தது.

நான் கர்ப்பமடைந்திருந்தேன். கடந்த 14 செப்டம்பர் 2018 அன்று ஜோதி மருத்துவமனைக்கு நானும் என் கணவர் பிரனயும் பிரனயின் அம்மாவும் சென்றிருந்தோம். என் உடல் பரிசோதனை முடிந்து திரும்புகிற போது, மருத்துவமனையின் வாசலில் பிற்பகல் 1.30 மணியிருக்கும் ஒரு சத்தம் கேட்டது. நானும் பிரனயின் அம்மாவும் திரும்பிப் பார்க்கிறபோது குத்துப்பட்டு கிடந்த பிரனயை சுபாஷ்குமார் சர்மா மறுபடியும் கத்தியால் குத்தினான். அந்த கொலைகாரனின் முகத்தைப் பார்த்தேன். பிரனய் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். அள்ளி எடுக்கின்றபோது உயிர் பிரிந்திருந்தது.

ஒரு கணம் எல்லாமும் முடிந்து போனது. இந்த கேடுகெட்ட சாதி ஒரு உயிரை பறித்து வீதியில் வீசி எறிந்தது. மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தன்னுடைய அப்பாவின் மரணவலி கேட்டிருக்கும். இதுபோன்ற கொடுமை யாருக்கும் வராது.

என்று கூறிய அமிர்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அம்பேத்கரும் பிரனயும் புகைப்படத்தில் எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரனயின் மனைவியும் அம்பேத்கரின் பேத்தியுமான அமிர்தாவின் கண்களில் அடர்த்தியான உறுதி தெரிந்தது. அந்த உறுதி இழந்த எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறேன்.

எவிடன்ஸ் கதிர்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

பரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும் : முனைவர் இ.முத்தையா

பரியனும் அவருடைய நாட்டுப்புறக் கலைஞர் தந்தையும் சந்தித்த அவமானம், நானும் என் தந்தையும் சந்தித்த அவமானத்தை மீள் அனுபவப்படுத்தியது.

எங்கள் ஊர்ப்  பெரியகுளம் (கண்மாய்) பல வரலாற்று  நிகழ்வுகள் புதைக்கப்பட்ட நீண்ட வெளி. சிவகாசிக் கலவரத்தில் கொல்லப்பட்ட சாதி மனிதர்களின் உடல்களை  வண்டியில் கொண்டு வந்து இந்தக் கண்மாயில் புதைத்ததாக என்னுடைய பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சிவகாசி சிவன் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (மாரி செல்வராஜ் மாதிரியே நானும் சாதி குறிப்பிடாமல் வரலாற்றைக் கதைக்கிறேன்) நுழைய முயற்சி செய்ய, கோவிலுக்குள் நுழைந்தால் அது தீட்டுப்பட்டு விடும் என்பதால் (அய்யப்பன் பெண்களால் தீட்டுப்பட்டு விடுமாம்) அவர்களை நுழையவிடாமல் இன்னொரு சாதியினர் தடுக்க, அதனால் பெரிய கலவரம் மூண்டதாகப் பாட்டி சொன்னார்.

ஆய்வு மாணவனாகச் செயல்பட்டபோது பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், மணிக்குமார் போன்றோரின் விரிவான கட்டுரையைப் படித்தபோது என்னுடைய பாட்டியின் கட்டுரையும் நினைவுக்கு வந்தது.

நான் சொல்ல வந்தது சிவகாசிக் கலவரத்தைப் பற்றியல்ல. பெரியகுளத்தையும் என ஊரைப் பற்றியும், நாங்கள் பட்ட அவமானத்தைப் பற்றியும்.

சிவகாசியிலிருந்து எங்கள் ஊருக்கு வருவதற்குச் சாலை வசதி அப்போது இல்லை. அண்மையில்தான் எங்கள் ஊருக்குச் சுதந்திரமும் சாலையும் கிடைத்தது. அப்படி எங்கள் ஊருக்கு வருபவர்கள் பெரியகுளம் கண்மாயில் இறங்கித்தான் வரவேண்டும். இறங்கி என்றால் நீரில் இறங்கி என்று அர்த்தம் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அந்தக் கண்மாய் நிரம்பும் அல்லது கொஞ்சம் தண்ணீர் தேங்கி நிற்கும்.

நான் சிவகாசிப் பள்ளிக்கூடத்தில் வகுப்பு முடிந்து மாலையில் வரும்போது சின்னாண்டித் தாத்தா எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். நடுக்கண்மாயில் குப்புறப் படுத்துக் கொண்டு பேராண்டி முதுகுல ஏறி மிதிடி எனச் சொன்னவுடன் அதை ஆசையோடும் சிரிப்போடும் பல முறை செய்திருக்கிறேன்.

சொல்ல வந்தது இதுவன்று. இந்தப் பெரியகுளத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் ஊரைச் சேர்ந்த ஓர்   இளம் பெண் ( அவருடன் சேர்ந்து தீப்பெட்டிக் கட்டை அடுக்கியிருக்கிறேன்)  சிவகாசியைச் சேர்ந்த ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்ததை எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் (எனக்கு மாமா முறை வேண்டும்) பார்த்திருக்கிறார்.

அப்போது எங்கள் ஊரில் பண்பாட்டு போலிஸார் அதிகம். அவர் ஊருக்குள் வந்தவுடன் மற்ற பண்பாட்டுப்  போலிஸாரிடம் சொல்லிவிட்டார். இவர்கள் நிலபுலத்துக்குச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள்.

அந்தப் பெண் ஊருக்குள் வந்தவுடன் இந்தப் பிள்ளைகள் அவரைச் சுற்றி நின்று கொண்டு விசாரணையைத் தொடங்கினார்கள். அந்தப் பெண் பதில் சொல்லாமல் நின்றவுடன் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோவில் தூணில் கட்டிப்போட்டார்கள்.

நான் அப்போதுதான் பழைய கிணற்றில் குளித்துவிட்டு ( எங்கள் ஊரில் பழைய கிணறு, புதுக் கிணறு, குத்தாலம், கரண்டுக் கிணறு, பண்டாரங்கிணறு, அண்ணாச்சியம்மன் கிணறு எனப் பல உண்டு)  அந்தப் பக்கம் வந்தேன்.

அப்போது ஒருவர் ' தேவடியா மகளே ஊர்ப் பெயரக்  கெடுத்துட்டியேடி ' என்று திட்டியவாறே அவள் கன்னத்தில் அறைந்தார். அதைப் பார்த்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்கள். அந்தப் பெண்ணின் மூத்த சகோதரி அங்கிருந்தவர்களைப் பார்த்து 'இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் எல்லோருமே ஊர்ப் பெயருக்குக் களங்கம் வந்து விட்டதாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அதைப் பார்த்து அழுகையும் ஆத்திரமும் வந்தது. உடனே பிள்ளையார் கோவில் மேடையில் தாவி ஏறி நின்று கொண்டு 'நிறுத்துங்கடா' என்று பலத்தை எல்லாம் கொடுத்து கத்தினேன். நிசப்தம் நிலவியது. அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அடித்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களுடைய தந்தைமார் எங்கெங்கே வங்கனம் (வைப்பாட்டி) வைத்திருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டேன். இதனால் எல்லாம் ஊரின் பெயர் கெடவில்லையா என்று கேட்டேன். ஒருவர் கூடப் பேசவில்லை. கூட்டம் கலைந்தது. அந்தப் பெண்ணை நானும் நண்பர்களும் அவிழ்த்துவிட்டு அவளுடைய சகோதரியிடம் ஒப்படைத்தோம்.

அன்று மாலை ஊர்க் கூட்டம் இருப்பதாக முரசு அறைந்து தெரிவிக்கப்பட்டது.
( ஊரின் காளியம்மன் கோவிலில் ஒரு பெரிய முரசு உள்ளது.  அதுதான் தகவல் தரும்) . ஊரில் பொங்கல் போன்ற எந்தச் சிறப்பு நிகழ்வும் இல்லாத நேரத்தில் ஊர்க் கூட்டம் சாட்டப்பட்டதால் அதற்கான காரணம் பலருக்குப் புரியவில்லை. இரவு 7 மணி இருக்கும். ஒருவர் எங்க வீட்டுக்கு வந்து  என் தந்தையைக்  கூட்டத்திற்குச் சீக்கிரம் வருமாறு நினைவுபடுத்திவிட்டு வரும் போது ஓம் பையனையும் கூட்டிட்டு வாங்க என்று சொன்னார்.

இரண்டு பேரும் கூட்டத்திற்குச் சென்றோம். கூட்டத்திற்கான காரணம் எனக்குத் தெரிந்தது. கூட்டத்தில் நுழைந்தவுடன் என் தந்தையையும் என்னையும் முன்னால் வந்து நிற்கும்படி நாட்டாமை கட்டளையிட்டார். என் தந்தை என்னைப் பார்த்து 'என்னடா விசயம்'  என்று  கேட்டார். அதற்குள் நாட்டாமை பேசத் தொடங்கிவிட்டார். (நாட்டாமைகள் பலர். என் பெரியப்பா, மாமா போன்றவர்கள்தான்). நடந்ததை என் தந்தையிடம் சொல்லி கூட்டத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 100 ரூபாய் அபராதம் என்றும் தீர்ப்புச் சொன்னார்கள்.

என் தந்தை பேசுவதற்கு முன்பே நான் பேசினேன். ஒரு பெண் ஒரு பையனிடம் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவளை அடித்தது தவறு . அடித்தவர்கள் ஒவ்வொருவரும் ஊர் மானம் போய்விட்டது என்று சொல்லியே அடித்தார்கள். அவளுடைய சகோதரி மன்னிப்புக் கேட்டும் விடவில்லை. அதனால்தான் அப்படிப் பேசினேன் என்று சொன்னேன்.

என் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஒரு பலசரக்குக் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். கடைக்கு ஒவ்வொரு முறையும் மகமை என்ற பெயரில் ஒரு தொகையை விதிப்பார்கள். கடையை வைத்துத்தான் என்னையும் உடன் பிறப்புகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் பொறுமையானவர்.

என்னப்பா தண்டனைத் தொகைய கட்டிட்டு நாட்டாமைமார் காலில் விழுந்து  உன் மகனை மன்னிப்புக் கேட்கச் சொல் என்றார் ஒரு நாட்டாமை. 'மன்னிப்பும் கேட்க முடியாது தண்டனைத் தொகையையும் கட்டமுடியாது ' என்றேன். உடனே கூட்டத்தில் இருந்த இளந்தாரிகள் என்னைச் சுற்றி நின்று கொண்டு அடிக்க வந்தார்கள். என் தந்தை 'அவனுக்குப் பதிலாக நான் மன்னிப்புக் கேட்கிறேன் ' என்று சொல்லி காலில் விழப் போனார்.

'நாட்டாமைக் காரன் ஒவ்வொருத்தனும் வைப்பாட்டி வச்சதனால ஊர் மானம் கெடல. ஒரு பொண்ணு ஒரு பையனோட பேசினதால மானம் கெட்டுப் போயிருச்சா. இப்படி இருந்தா மயிரா மழை பெய்யும் என்று கத்தினேன். உடனே 'ஊர்ச் சபையில பேசக்கூடாத பேச்சு. இனி ஒங்க கூட எதுவும் பேசப் போறதில்ல. ஒங்க குடும்பத்த ஒரு வருசத்துக்கு ஊர் விலக்கு செய்றோம். அவங்க கூட யாரும் பேசக்கூடாது. ஊர்க் கெணத்துல அவங்க தண்ணி எடுக்கக் கூடாது. அவங்க கடையில யாரும் பொருள் வாங்கக் கூடாது. வண்ணான் அவங்களுக்குத் துணி துவைக்கக் கூடாது. நாவிதன் அவங்களுக்குச் சவரம் செய்யக் கூடாது' என்று தீர்ப்புச் சொன்னார்கள். என்னை அடிக்க வந்தார்கள். அந்த நேரத்திலும் என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை அவர்களிடம் இருந்து மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த என் தந்தை என்னை எதுவும் திட்டாமல் அவராக கேவிக் கேவி அழுதார்.

இரண்டு நாட்களுக்குள் அந்த ஊரிலிருந்து கடையைக் காலி செய்து விட்டு பக்கத்தில் இருந்த சாட்சியாபுரம் என்ற ஊரில் கடை வைத்து நடத்தினார் என் தந்தை.

சாதி வெறி , ஒரு சாதிக்குள்ளேயே பொருளாதார ஏற்றத் தாழ்வு என அவமானப் படுத்துவதற்கான காரணிகள் பரந்து கிடக்கின்றன. இத்தகைய ஒடுக்குதலையும் மீறி வாழ சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் வேண்டும். எனக்கு இருந்தது. இருக்கிறது. பரியன்களும் அப்படித்தான்.

ஓவியம்
இரவி பேலட்

சனி, 6 அக்டோபர், 2018

சாதியம் குறித்து விடுதலைப் புலிகள்.


புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்து பேசுவதோ,செயற்படுவதோ குற்றமானது என்பதை விட வெட்கக்கேடானது, அநாகரீகமானது என்று கருதும் மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த,சமூக உணர்வின் பிரம்மாண்டமான மாற்றமாகும். இருந்தாலும் சாதியப்பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். சாதிய பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயயை எடுத்த எடுப்பில் குணமாகி விடுவதென்பது இலகுவான காரியமல்ல.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்பந்தங்கள் வாயிலாகவோ விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இப்பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி,அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடுமையானது, அனுமதிக்க முடியாதது.மற்றையது சாதிரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்ற விதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்க தொடங்கி இருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப்போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாய புரட்சியுடன் மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாக கொண்ட சமுதாய புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையை பெற்று, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.

ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாடு பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது,இந்த அறியாமையைப் போக்க மனப் புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்சிகரமான உணர்வு ஏற்படுவது அவசியம்.

இங்கு தான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான பிற்போக்கான கருத்துகள், கோட்பாடுகள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களை பற்றிக் கொண்டால் சாதியம் எனும் மன நோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

("விடுதலைப் புலிகள்" இதழ் குரல்-20ல் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)

திங்கள், 24 செப்டம்பர், 2018

துயரம்தான் கவிதைக்கு அழகு சேர்க்கிறது : கஸல் கவிதைகள் பற்றிய அறிமுகம் :- கோ.பாரதிமோகன்


கஜல் இரண்டடி கண்ணிகளை உடையது. இரண்டடிகளிலும் சமச்சீரான வரிகளை உடையதாக இருக்க வேண்டும் என்பது அதன் இலக்கண விதி.
கஜல் - கஸல் என இக்கவிதை இருவேறாக அழைக்கப்படுகிறது.
கஸல் கவிதைகளுக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.
கஜல் ஒரு நாடோடிப் பாடல் என்பதே அதன் மூலம்.
முதன்முதலில் கஜல் கவிதைகள் அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தைப்பற்றியும் ஒட்டகத்தில் ஏறிச்சென்று அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றியனதாக இருந்தது.
பிறகு மெல்ல மெல்ல இக்கவிதை,
சூஃபிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
சூஃபிகள் வாழ்வை கொண்டாட்டமாக வாழ்பவர்கள். ஒருவகையில் இவர்கள் ஜென் துறவிகளைப் போன்றவர்கள்.
சூபியிசம் என்பது எல்லாவற்றையும் இறைவடிவாக  காண்பது.
(மன்சூர் அல்லாஹ் என்ற கவிஞர் உச்சகட்டமாக நானே கடவுள் என சொல்ல, அவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பது வேறு கதை)
ரூமி கவிஞர் கடவுளை மதுவுக்கு ஒப்பானவர் என்கிறார்.
வாழ்வின் எந்த ஒரு தடைகளுக்குள்ளும் சிக்காத சுதந்திரமானவர்கள் சூ ஃபிகள்.
இவர்களின் கையில் கஜல் புதிய பாடலாக பரிணமிக்கிறது.
சூஃபிகள் ஓர் இஸ்லாமியத் துறவிகள்.
ஆனாலும் பொதுத் துறவு கொண்டுள்ள கட்டுக்களை இவர்கள் மீறுபவர்கள்.
கஸல் என்கிற சொல், அரபு மொழியின் 'கஸலி' எனும் சொல்லின் திரிபு.
இச்சொல் 'கஸிதா' என்கிற மூலச் சொல்லிலிருந்து மருவியது.
கஸலி என்றால் அரபி மொழியில் குறிக்கொள் என்று பொருள்.
அதாவது,  இலக்கு என்றும் வைத்துக்கொள்ளலாம்.
மிகக்கடுமையான
இசையிலக்கணத்தையும் பாடுபொருளையும் கொண்ட கஜல், மனதை மயக்கும்
இசைலயத்தை உடையது.
அப்படி இப்படி என்று கஜல் ஒருவாறு காதலிடம் வந்து சேர்ந்தபிறகு அது புதுவேகம் எடுக்கிறது.
கஸல் கவிதைகளுக்கு என ஒரு  ஆன்மா இருக்கிறது.
ஆன்மாவை உரசி செல்லும் கவிதைகளே கஸல் வடிவம்.
கஸல் அரபி் மொழியிலிருந்து பாரசீகம் பயணித்து பாரசீகத்திலிருந்து  மேலும் புயல் பாய்சல் கொள்கிறது.
பிறகு  இஸ்லாமியர் வருகைவழி
இந்தியாவுக்குள் வந்த கஜல், உருது மொழியில் பாடப்பட்டு புகழின் உச்சம் தொடுகிறது.
'அமிர் குர்சோ'தான் கஸலின் இந்திய வரவின் தொடக்கம்.
உருது கஜலில் பலர் கோலோச்சியிருந்தாலும்
கவிஞர் 'மிர்சா காலிப்' தான் கஸல் கவிதைகளில் மாபெரும் சிகரமடைந்தவர்.
மிர்சா காலிப் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
காதல், அழகு, இயற்கை, தத்துவம் ஆகிய
பாடுபொருளை கொண்டிருக்கிறது கஸல்.
*
கஸலில் புகழ்பெற்ற கவிஞர்கள்
1, ஜலாலுதீன் ருமி, 2, மிர்சா காலிப், ,3, மக்பி.
ஔரங்கசீப்பின்  மகள் ஜெப்புன்னிசா . மக்பி  என்ற பெயரில் கஸல் காதல் கவிதைகளை பாரசீகம், அரேபிய மற்றும் உருது மொழியில் எழுதினார்.
இவர் சிறந்த கவிஞர்.
மக்பி,  டெல்லி ஆளுநர் மகன் அகில்கானை காதலித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தன்னைப் பற்றி் இவ்வாறு கூறுகிறார்:
'வைரங்களை விட பிரகாசமான சொற்கள் என்னிடம் இருக்கின்றன
அதை நான் உருட்டி விளையாடுகிறேன். அதுவே போதும்' என்கிறார்.
துயரமான கவிதைகளையே ஏன் அதிகம் புனைகிறாய் என கவிஞன் ரஸ்வி கேட்க..
அவள்,
'துயரம் தான் கவிதைக்கு அழகு சேர்கிறது' என்கிறாள்.
இன்றும் பாக்தாத் நகரில் கஸல் உச்சம் பெற்று விளங்குகிறது.
மிர்ஸா காலிப்
நவாப்புகளின் சபையில் அரசகவியாக விளங்கியவர்.
தன்னைக்குறித்தும் தன் கஜலைக்குறித்தும் அவர் இப்படிச் சொல்கிறார்,
     //நான் துக்கத்தால் மட்டுமே
        பாதிப்படைகிறேன்                          
       மகிழ்ச்சியின் இறுதிப்படுக்கையருகே
       அழுதுகொண்டும்
       பாடிக்கொண்டு மிருக்கிற
       துயராளியாய் என்னைத் துக்கம்
       ஆக்கிவிட்டது
      தனியனாய், வலிக்கும் என்  
      இதயத்திலிருந்து
      கஸலின் இனிய புலம்பலை எழுப்பினேன்.

      அது கஸலின் இன்னிசை சிகரத்தை
      எட்டிவிட்டது //
என்று தன் கஸலைப்பற்றி
சொல்லும் அவர்,
     "சுடர் முறையாகவே தீர்கிறது
      சோகப் புகைச்சுருளாய் 
      காதலின் பிழம்புகள்
      உடுத்திக்கொள்கின்றன
      என் மரணத்தால்
      கறுத்த துக்க ஆடை.
      அழுகிறேன்,
      காதலின் அவல முடிவுக்காக.
      அழுகிறேன்,
      காதலின் வெள்ளப் பாழுக்காக
      நான் போனபின்
      வேறெந்த இதயம் அதற்கு இடம் தரும்?"
என்று ஆழ்ந்த இதய சோகத்தை கஸலாய் முன் வைக்கிறார்.
இவர் உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் தம் கஸல் கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். மேலும் மற்ற கஜல் கவிஞர்களின் கவிதைகளை நூலாகத் தொகுத்து இருக்கிறார்
தமிழில் ஏற்கனவே கஜல் கவிதைத் தொகுதிகள் ஒருசில வந்திருந்தாலும்
முறையாய் கஜல் என்றால் என்ன என்கிற தெளிவான அறிமுகத்துடன், கஜல் கவிதைக்கான பழைய இலக்கணங்களை எல்லாம் தகர்த்துவிட்டு  ஒரு புதிய பொலிவுடன் முழுக்க முழுக்க காதலையே பாடுபொருளாய்க் கொண்ட தொகுப்பாய் தனது 'மின்மினிகளால் ஒரு கடிதம்' கஜல் கவிதைத் தொகுப்பை கொண்டுவந்தார், கவிக்கோ அப்துல் ரகுமான்.

'காதலியுடன் பேசுதல்' என்று கஜலை அறிமுகம் செய்கிறார், கவிக்கோ: -
"கஸல்' (Ghazal) அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும். அதுவும் காதலின் சோகத்தை.
கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.
3 முதல் 9 கண்ணிகள் வரை நீளும் கஜல் கவிதையில்
ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டியதில்லை"
*
இதோ கவிக்கோவின் கவிதைகள் சில...
°
     இறைவா
     நம் சங்கமத்திற்காகதான்
     பெண்ணிடம் ஒத்திகை பார்த்துக்
     கொண்டிருக்கிறேன்
°
    இந்தக் கவிதைகள்
     நீ செய்த காயங்களிலிருந்து
     வடியும் ரத்தம்
°
     காதலின் நஞ்சைக் குடித்தே
     சாகாமல் இருப்பவன் நான்
°
     என் உயிரை
     காதலில்
     ஒளித்துவைத்துவிட்டேன்
     மரணமே!
     இனி என்ன செய்வாய்?
*
மிர்சா காலிப்'பின் உருது கஜலான
'உதிர் இலைக'ளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் நீலமணியின்
'உப்புநதிகள்' நேரடி தமிழ் கஜல் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
     கல்லும் கவிபாடும்.
     இங்கொரு
     கவிதையே கல்லானதே
     தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன்
     வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது.
     அழுகையே ராகமென்றால்
     இந்த ஊரில்
     சிறந்த பாடகன் நான்தான்.
     தரையில் விழுந்தால் அழுக்குப்படுமென
     வானத்திலேயே மழை இருக்க முடியுமா?
     நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்.
     பக்தன் மனிதனாக இருக்கக்கூடாதா?
                                   - நீலமணி
                             (உப்புநதிகள்)
*
தொடர் கண்ணிகளாலான
கோ. பாரதிமோகனின் கஜல் கவிதைகள் சில...
*
     பெட்டிக்குள் அடைக்க இசைக்கும்
     மகுடியைப் போன்றது
     உன் குரல்
     பிழையொன்றுமில்லை
     அறிவதில்லை ஒருபோதும்
     விட்டில்கள் தன் சாபத்தை
     அறிந்துகொண்டேன்
     பசுமை படர்ந்த என் பாலை
     ஒளிக்குள் மறையும்
     இருள் போன்றதென
     யார்தான் இணங்க மறுப்பார்கள்
     வசீகரத்தின் கையசைப்புக்கு
     மூழ்கிப் போகிறேன் நான்
     இந்தக் காதல்
     ஒரு புதைகுழி
*
     மணலும் சுரண்டப்பட்ட நதியின் துயர்
     என் இதயம்
     நம்பவைக்கப்படும் கொலைக்கருவி
     கண்களின் சாயலிலிருந்தால்
     நானென்ன செய்வது
     அசையும் உன் ஆடையில்
     சுவாசம் பருகியவனுக்கு பரிசா இந்த
     இதயப் புற்று?
     ஆனாலும் என்ன
     இது உன் கொடைக்கான
     என் நன்றி
*
     பெருங்கருணைக்காரி நீ
     இதயத்தை பாலையாக்கி
     கண்களுக்கு வரமளித்தாய்
     காதலின் தாகத்திற்கு
     நான் கண்ணீர் ஊற்று
*
எனது 'காதலின் மீது மோதிக்கொண்டேன்' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...
     காதலே
     உனக்கான ஆடையை
     கண்ணீரால் நெய்கிறேன்
*
     உன்னை
     சொற்களில் தேடுகிறேன்
     நீயோ மௌனத்தில்
     ஒளிந்திருக்கிறாய்
*
     உன்னையும் என்னையும்
     உடுத்தி
     நிர்வாணம் களைகிறது காதல்
*
     நீ பறந்துவிட்டாய்
     அநாதையாகிவிட்டது
     என் கூடு
*
     உன்
     கூந்தலின் நுனிவரைதான்
     என்
     ஆயுளின் நீளம்
*
     உன்
     விரல்பிடித்து நடக்கையில்
     அழகாக இருக்கிறது
     மரணத்தின் பாதை

வியாழன், 13 செப்டம்பர், 2018

அசோகர் காலக் கல்வெட்டுகளும் சமக்கிருத மொழியும்: இரவிக்குமார்.

அசோகரைக் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன.

அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கின்றன.

பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்

ஆச்சர்யவசமாக சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தைத் தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார்.

வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களைப் போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை.

சந்திர குப்த மௌரியரின் காலத்தில் முதல் சமசுகிருதக் கல்வெட்டு  கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.
அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது.

அணையைப் பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமஸ்கிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமஸ்கிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை என்று எளிதாகச் சொல்லி விட்டார்கள்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்.

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் ).

வாழ்த்துகளுடன்,
மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

சனி, 8 செப்டம்பர், 2018

ஆசீவகமும் தமிழர் சமய மரபும்: முனைவர் இ.முத்தையா

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆசீவகம் பற்றித் தொடர்ந்து தம்முடைய கருத்துக்களை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி வலுப்படுத்தி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் பற்றி தம் ஆய்வைத் தொடங்கி இந்தக் கணம் வரை ஆசீவகம் குறித்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய ஆய்வு முடிவுகள் இதுவரையில் நமக்கு அறியக் கிடைத்த தமிழ் இலக்கிய வரலாற்றையும் சமய வரலாற்றையும் கேள்விக்கு உட்படுத்தித் தமிழர்க்கென்று ஒரு சமய அடையாளம் என்பது ஆசீவகம்தான் என்பதை மீண்டும் புதிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வருகிறார்.

சமணம் என்பதும் ஜை(சை)னம் என்பதும் வெவ்வேறான சமயங்கள் என்கிறார். சமணம் என்பது ஆசீவக சமயத்தையே குறிக்கும் என்றும், இது பக்குடுக்கை நண்கணியார், மற்கலியன் (மற்கலி கோசலர்), பூரணர், நரிவெரூஉத்தலையார் என்ற நான்கு சிந்தனையாளர்களால் (இவர்கள் சங்கப் புலவர்களும் கூட) உருவாக்கப்பட்டது என்றும் இவர்கள் புத்தர், மகாவீரர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர்கள் எனக் குறிப்பிட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட , மேற்கொண்டு வருகின்ற ஆய்வுகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளார். சமணப் படுக்கைகள் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளங்காட்டி அவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை எல்லாம் மறுத்து அப்படுக்கைகள் அணைத்தும் ஆசீவக முனிவர்கள் உருவாக்கியவை என்றும் கல்வெட்டில் காணப்படும் கணி நந்தாசிரியன் என்பவர் ஆசீவகச் சிந்தனையாளர் என்றும் எடுத்துக் கூறி இதுவரை நமக்கு அறியக் கொடுத்த சமயவரலாற்றையும் மெய்யியல் வரலாற்றையும் தமிழர்க்கு உரியவை அல்ல என்பதை உணர்த்தி ஆசீவக சமயமும் அதன் மெய்யியலும்தான் தமிழரின் சுய அடையாளம் என்பதையும் உணர்த்துகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வரலாற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி வருகிறார். சங்கப் பாடல்களில் பதிவாகியுள்ள ஆசீவகக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கியவர் இப்போது சிலப்பதிகாரத்தையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆசீவக சமயத்திற்கு உரியவையாகக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய கருத்துக்களைத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களோ தொல்லியல் ஆய்வாளர்களோ அக்கறையான விவாதத்திற்கு உட்படுத்தாமல் கடந்து செல்கிறார்கள். இவருடைய கருத்துக்களை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மௌனம்தான் நிலவுகிறது. இந்த மௌனம் கலைக்கப்பட்டால்தான் புதிய உண்மைகள் வெளிப்படும்.

விவாதங்கள் தொடங்குமா?