சனி, 8 செப்டம்பர், 2018

ஆசீவகமும் தமிழர் சமய மரபும்: முனைவர் இ.முத்தையா

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆசீவகம் பற்றித் தொடர்ந்து தம்முடைய கருத்துக்களை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி வலுப்படுத்தி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் பற்றி தம் ஆய்வைத் தொடங்கி இந்தக் கணம் வரை ஆசீவகம் குறித்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய ஆய்வு முடிவுகள் இதுவரையில் நமக்கு அறியக் கிடைத்த தமிழ் இலக்கிய வரலாற்றையும் சமய வரலாற்றையும் கேள்விக்கு உட்படுத்தித் தமிழர்க்கென்று ஒரு சமய அடையாளம் என்பது ஆசீவகம்தான் என்பதை மீண்டும் புதிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வருகிறார்.

சமணம் என்பதும் ஜை(சை)னம் என்பதும் வெவ்வேறான சமயங்கள் என்கிறார். சமணம் என்பது ஆசீவக சமயத்தையே குறிக்கும் என்றும், இது பக்குடுக்கை நண்கணியார், மற்கலியன் (மற்கலி கோசலர்), பூரணர், நரிவெரூஉத்தலையார் என்ற நான்கு சிந்தனையாளர்களால் (இவர்கள் சங்கப் புலவர்களும் கூட) உருவாக்கப்பட்டது என்றும் இவர்கள் புத்தர், மகாவீரர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர்கள் எனக் குறிப்பிட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட , மேற்கொண்டு வருகின்ற ஆய்வுகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளார். சமணப் படுக்கைகள் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளங்காட்டி அவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை எல்லாம் மறுத்து அப்படுக்கைகள் அணைத்தும் ஆசீவக முனிவர்கள் உருவாக்கியவை என்றும் கல்வெட்டில் காணப்படும் கணி நந்தாசிரியன் என்பவர் ஆசீவகச் சிந்தனையாளர் என்றும் எடுத்துக் கூறி இதுவரை நமக்கு அறியக் கொடுத்த சமயவரலாற்றையும் மெய்யியல் வரலாற்றையும் தமிழர்க்கு உரியவை அல்ல என்பதை உணர்த்தி ஆசீவக சமயமும் அதன் மெய்யியலும்தான் தமிழரின் சுய அடையாளம் என்பதையும் உணர்த்துகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வரலாற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி வருகிறார். சங்கப் பாடல்களில் பதிவாகியுள்ள ஆசீவகக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கியவர் இப்போது சிலப்பதிகாரத்தையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆசீவக சமயத்திற்கு உரியவையாகக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய கருத்துக்களைத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களோ தொல்லியல் ஆய்வாளர்களோ அக்கறையான விவாதத்திற்கு உட்படுத்தாமல் கடந்து செல்கிறார்கள். இவருடைய கருத்துக்களை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மௌனம்தான் நிலவுகிறது. இந்த மௌனம் கலைக்கப்பட்டால்தான் புதிய உண்மைகள் வெளிப்படும்.

விவாதங்கள் தொடங்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக