செவ்வாய், 9 அக்டோபர், 2018

பரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும் : முனைவர் இ.முத்தையா

பரியனும் அவருடைய நாட்டுப்புறக் கலைஞர் தந்தையும் சந்தித்த அவமானம், நானும் என் தந்தையும் சந்தித்த அவமானத்தை மீள் அனுபவப்படுத்தியது.

எங்கள் ஊர்ப்  பெரியகுளம் (கண்மாய்) பல வரலாற்று  நிகழ்வுகள் புதைக்கப்பட்ட நீண்ட வெளி. சிவகாசிக் கலவரத்தில் கொல்லப்பட்ட சாதி மனிதர்களின் உடல்களை  வண்டியில் கொண்டு வந்து இந்தக் கண்மாயில் புதைத்ததாக என்னுடைய பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சிவகாசி சிவன் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (மாரி செல்வராஜ் மாதிரியே நானும் சாதி குறிப்பிடாமல் வரலாற்றைக் கதைக்கிறேன்) நுழைய முயற்சி செய்ய, கோவிலுக்குள் நுழைந்தால் அது தீட்டுப்பட்டு விடும் என்பதால் (அய்யப்பன் பெண்களால் தீட்டுப்பட்டு விடுமாம்) அவர்களை நுழையவிடாமல் இன்னொரு சாதியினர் தடுக்க, அதனால் பெரிய கலவரம் மூண்டதாகப் பாட்டி சொன்னார்.

ஆய்வு மாணவனாகச் செயல்பட்டபோது பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், மணிக்குமார் போன்றோரின் விரிவான கட்டுரையைப் படித்தபோது என்னுடைய பாட்டியின் கட்டுரையும் நினைவுக்கு வந்தது.

நான் சொல்ல வந்தது சிவகாசிக் கலவரத்தைப் பற்றியல்ல. பெரியகுளத்தையும் என ஊரைப் பற்றியும், நாங்கள் பட்ட அவமானத்தைப் பற்றியும்.

சிவகாசியிலிருந்து எங்கள் ஊருக்கு வருவதற்குச் சாலை வசதி அப்போது இல்லை. அண்மையில்தான் எங்கள் ஊருக்குச் சுதந்திரமும் சாலையும் கிடைத்தது. அப்படி எங்கள் ஊருக்கு வருபவர்கள் பெரியகுளம் கண்மாயில் இறங்கித்தான் வரவேண்டும். இறங்கி என்றால் நீரில் இறங்கி என்று அர்த்தம் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அந்தக் கண்மாய் நிரம்பும் அல்லது கொஞ்சம் தண்ணீர் தேங்கி நிற்கும்.

நான் சிவகாசிப் பள்ளிக்கூடத்தில் வகுப்பு முடிந்து மாலையில் வரும்போது சின்னாண்டித் தாத்தா எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். நடுக்கண்மாயில் குப்புறப் படுத்துக் கொண்டு பேராண்டி முதுகுல ஏறி மிதிடி எனச் சொன்னவுடன் அதை ஆசையோடும் சிரிப்போடும் பல முறை செய்திருக்கிறேன்.

சொல்ல வந்தது இதுவன்று. இந்தப் பெரியகுளத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் ஊரைச் சேர்ந்த ஓர்   இளம் பெண் ( அவருடன் சேர்ந்து தீப்பெட்டிக் கட்டை அடுக்கியிருக்கிறேன்)  சிவகாசியைச் சேர்ந்த ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்ததை எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் (எனக்கு மாமா முறை வேண்டும்) பார்த்திருக்கிறார்.

அப்போது எங்கள் ஊரில் பண்பாட்டு போலிஸார் அதிகம். அவர் ஊருக்குள் வந்தவுடன் மற்ற பண்பாட்டுப்  போலிஸாரிடம் சொல்லிவிட்டார். இவர்கள் நிலபுலத்துக்குச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள்.

அந்தப் பெண் ஊருக்குள் வந்தவுடன் இந்தப் பிள்ளைகள் அவரைச் சுற்றி நின்று கொண்டு விசாரணையைத் தொடங்கினார்கள். அந்தப் பெண் பதில் சொல்லாமல் நின்றவுடன் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோவில் தூணில் கட்டிப்போட்டார்கள்.

நான் அப்போதுதான் பழைய கிணற்றில் குளித்துவிட்டு ( எங்கள் ஊரில் பழைய கிணறு, புதுக் கிணறு, குத்தாலம், கரண்டுக் கிணறு, பண்டாரங்கிணறு, அண்ணாச்சியம்மன் கிணறு எனப் பல உண்டு)  அந்தப் பக்கம் வந்தேன்.

அப்போது ஒருவர் ' தேவடியா மகளே ஊர்ப் பெயரக்  கெடுத்துட்டியேடி ' என்று திட்டியவாறே அவள் கன்னத்தில் அறைந்தார். அதைப் பார்த்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்கள். அந்தப் பெண்ணின் மூத்த சகோதரி அங்கிருந்தவர்களைப் பார்த்து 'இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் எல்லோருமே ஊர்ப் பெயருக்குக் களங்கம் வந்து விட்டதாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அதைப் பார்த்து அழுகையும் ஆத்திரமும் வந்தது. உடனே பிள்ளையார் கோவில் மேடையில் தாவி ஏறி நின்று கொண்டு 'நிறுத்துங்கடா' என்று பலத்தை எல்லாம் கொடுத்து கத்தினேன். நிசப்தம் நிலவியது. அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அடித்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களுடைய தந்தைமார் எங்கெங்கே வங்கனம் (வைப்பாட்டி) வைத்திருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டேன். இதனால் எல்லாம் ஊரின் பெயர் கெடவில்லையா என்று கேட்டேன். ஒருவர் கூடப் பேசவில்லை. கூட்டம் கலைந்தது. அந்தப் பெண்ணை நானும் நண்பர்களும் அவிழ்த்துவிட்டு அவளுடைய சகோதரியிடம் ஒப்படைத்தோம்.

அன்று மாலை ஊர்க் கூட்டம் இருப்பதாக முரசு அறைந்து தெரிவிக்கப்பட்டது.
( ஊரின் காளியம்மன் கோவிலில் ஒரு பெரிய முரசு உள்ளது.  அதுதான் தகவல் தரும்) . ஊரில் பொங்கல் போன்ற எந்தச் சிறப்பு நிகழ்வும் இல்லாத நேரத்தில் ஊர்க் கூட்டம் சாட்டப்பட்டதால் அதற்கான காரணம் பலருக்குப் புரியவில்லை. இரவு 7 மணி இருக்கும். ஒருவர் எங்க வீட்டுக்கு வந்து  என் தந்தையைக்  கூட்டத்திற்குச் சீக்கிரம் வருமாறு நினைவுபடுத்திவிட்டு வரும் போது ஓம் பையனையும் கூட்டிட்டு வாங்க என்று சொன்னார்.

இரண்டு பேரும் கூட்டத்திற்குச் சென்றோம். கூட்டத்திற்கான காரணம் எனக்குத் தெரிந்தது. கூட்டத்தில் நுழைந்தவுடன் என் தந்தையையும் என்னையும் முன்னால் வந்து நிற்கும்படி நாட்டாமை கட்டளையிட்டார். என் தந்தை என்னைப் பார்த்து 'என்னடா விசயம்'  என்று  கேட்டார். அதற்குள் நாட்டாமை பேசத் தொடங்கிவிட்டார். (நாட்டாமைகள் பலர். என் பெரியப்பா, மாமா போன்றவர்கள்தான்). நடந்ததை என் தந்தையிடம் சொல்லி கூட்டத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 100 ரூபாய் அபராதம் என்றும் தீர்ப்புச் சொன்னார்கள்.

என் தந்தை பேசுவதற்கு முன்பே நான் பேசினேன். ஒரு பெண் ஒரு பையனிடம் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவளை அடித்தது தவறு . அடித்தவர்கள் ஒவ்வொருவரும் ஊர் மானம் போய்விட்டது என்று சொல்லியே அடித்தார்கள். அவளுடைய சகோதரி மன்னிப்புக் கேட்டும் விடவில்லை. அதனால்தான் அப்படிப் பேசினேன் என்று சொன்னேன்.

என் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஒரு பலசரக்குக் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். கடைக்கு ஒவ்வொரு முறையும் மகமை என்ற பெயரில் ஒரு தொகையை விதிப்பார்கள். கடையை வைத்துத்தான் என்னையும் உடன் பிறப்புகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் பொறுமையானவர்.

என்னப்பா தண்டனைத் தொகைய கட்டிட்டு நாட்டாமைமார் காலில் விழுந்து  உன் மகனை மன்னிப்புக் கேட்கச் சொல் என்றார் ஒரு நாட்டாமை. 'மன்னிப்பும் கேட்க முடியாது தண்டனைத் தொகையையும் கட்டமுடியாது ' என்றேன். உடனே கூட்டத்தில் இருந்த இளந்தாரிகள் என்னைச் சுற்றி நின்று கொண்டு அடிக்க வந்தார்கள். என் தந்தை 'அவனுக்குப் பதிலாக நான் மன்னிப்புக் கேட்கிறேன் ' என்று சொல்லி காலில் விழப் போனார்.

'நாட்டாமைக் காரன் ஒவ்வொருத்தனும் வைப்பாட்டி வச்சதனால ஊர் மானம் கெடல. ஒரு பொண்ணு ஒரு பையனோட பேசினதால மானம் கெட்டுப் போயிருச்சா. இப்படி இருந்தா மயிரா மழை பெய்யும் என்று கத்தினேன். உடனே 'ஊர்ச் சபையில பேசக்கூடாத பேச்சு. இனி ஒங்க கூட எதுவும் பேசப் போறதில்ல. ஒங்க குடும்பத்த ஒரு வருசத்துக்கு ஊர் விலக்கு செய்றோம். அவங்க கூட யாரும் பேசக்கூடாது. ஊர்க் கெணத்துல அவங்க தண்ணி எடுக்கக் கூடாது. அவங்க கடையில யாரும் பொருள் வாங்கக் கூடாது. வண்ணான் அவங்களுக்குத் துணி துவைக்கக் கூடாது. நாவிதன் அவங்களுக்குச் சவரம் செய்யக் கூடாது' என்று தீர்ப்புச் சொன்னார்கள். என்னை அடிக்க வந்தார்கள். அந்த நேரத்திலும் என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை அவர்களிடம் இருந்து மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த என் தந்தை என்னை எதுவும் திட்டாமல் அவராக கேவிக் கேவி அழுதார்.

இரண்டு நாட்களுக்குள் அந்த ஊரிலிருந்து கடையைக் காலி செய்து விட்டு பக்கத்தில் இருந்த சாட்சியாபுரம் என்ற ஊரில் கடை வைத்து நடத்தினார் என் தந்தை.

சாதி வெறி , ஒரு சாதிக்குள்ளேயே பொருளாதார ஏற்றத் தாழ்வு என அவமானப் படுத்துவதற்கான காரணிகள் பரந்து கிடக்கின்றன. இத்தகைய ஒடுக்குதலையும் மீறி வாழ சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் வேண்டும். எனக்கு இருந்தது. இருக்கிறது. பரியன்களும் அப்படித்தான்.

ஓவியம்
இரவி பேலட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக