சனி, 6 அக்டோபர், 2018

சாதியம் குறித்து விடுதலைப் புலிகள்.


புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்து பேசுவதோ,செயற்படுவதோ குற்றமானது என்பதை விட வெட்கக்கேடானது, அநாகரீகமானது என்று கருதும் மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த,சமூக உணர்வின் பிரம்மாண்டமான மாற்றமாகும். இருந்தாலும் சாதியப்பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். சாதிய பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயயை எடுத்த எடுப்பில் குணமாகி விடுவதென்பது இலகுவான காரியமல்ல.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்பந்தங்கள் வாயிலாகவோ விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இப்பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி,அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடுமையானது, அனுமதிக்க முடியாதது.மற்றையது சாதிரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்ற விதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்க தொடங்கி இருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப்போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாய புரட்சியுடன் மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாக கொண்ட சமுதாய புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையை பெற்று, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.

ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாடு பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது,இந்த அறியாமையைப் போக்க மனப் புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்சிகரமான உணர்வு ஏற்படுவது அவசியம்.

இங்கு தான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான பிற்போக்கான கருத்துகள், கோட்பாடுகள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களை பற்றிக் கொண்டால் சாதியம் எனும் மன நோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

("விடுதலைப் புலிகள்" இதழ் குரல்-20ல் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)

திங்கள், 24 செப்டம்பர், 2018

துயரம்தான் கவிதைக்கு அழகு சேர்க்கிறது : கஸல் கவிதைகள் பற்றிய அறிமுகம் :- கோ.பாரதிமோகன்


கஜல் இரண்டடி கண்ணிகளை உடையது. இரண்டடிகளிலும் சமச்சீரான வரிகளை உடையதாக இருக்க வேண்டும் என்பது அதன் இலக்கண விதி.
கஜல் - கஸல் என இக்கவிதை இருவேறாக அழைக்கப்படுகிறது.
கஸல் கவிதைகளுக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.
கஜல் ஒரு நாடோடிப் பாடல் என்பதே அதன் மூலம்.
முதன்முதலில் கஜல் கவிதைகள் அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தைப்பற்றியும் ஒட்டகத்தில் ஏறிச்சென்று அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றியனதாக இருந்தது.
பிறகு மெல்ல மெல்ல இக்கவிதை,
சூஃபிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
சூஃபிகள் வாழ்வை கொண்டாட்டமாக வாழ்பவர்கள். ஒருவகையில் இவர்கள் ஜென் துறவிகளைப் போன்றவர்கள்.
சூபியிசம் என்பது எல்லாவற்றையும் இறைவடிவாக  காண்பது.
(மன்சூர் அல்லாஹ் என்ற கவிஞர் உச்சகட்டமாக நானே கடவுள் என சொல்ல, அவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பது வேறு கதை)
ரூமி கவிஞர் கடவுளை மதுவுக்கு ஒப்பானவர் என்கிறார்.
வாழ்வின் எந்த ஒரு தடைகளுக்குள்ளும் சிக்காத சுதந்திரமானவர்கள் சூ ஃபிகள்.
இவர்களின் கையில் கஜல் புதிய பாடலாக பரிணமிக்கிறது.
சூஃபிகள் ஓர் இஸ்லாமியத் துறவிகள்.
ஆனாலும் பொதுத் துறவு கொண்டுள்ள கட்டுக்களை இவர்கள் மீறுபவர்கள்.
கஸல் என்கிற சொல், அரபு மொழியின் 'கஸலி' எனும் சொல்லின் திரிபு.
இச்சொல் 'கஸிதா' என்கிற மூலச் சொல்லிலிருந்து மருவியது.
கஸலி என்றால் அரபி மொழியில் குறிக்கொள் என்று பொருள்.
அதாவது,  இலக்கு என்றும் வைத்துக்கொள்ளலாம்.
மிகக்கடுமையான
இசையிலக்கணத்தையும் பாடுபொருளையும் கொண்ட கஜல், மனதை மயக்கும்
இசைலயத்தை உடையது.
அப்படி இப்படி என்று கஜல் ஒருவாறு காதலிடம் வந்து சேர்ந்தபிறகு அது புதுவேகம் எடுக்கிறது.
கஸல் கவிதைகளுக்கு என ஒரு  ஆன்மா இருக்கிறது.
ஆன்மாவை உரசி செல்லும் கவிதைகளே கஸல் வடிவம்.
கஸல் அரபி் மொழியிலிருந்து பாரசீகம் பயணித்து பாரசீகத்திலிருந்து  மேலும் புயல் பாய்சல் கொள்கிறது.
பிறகு  இஸ்லாமியர் வருகைவழி
இந்தியாவுக்குள் வந்த கஜல், உருது மொழியில் பாடப்பட்டு புகழின் உச்சம் தொடுகிறது.
'அமிர் குர்சோ'தான் கஸலின் இந்திய வரவின் தொடக்கம்.
உருது கஜலில் பலர் கோலோச்சியிருந்தாலும்
கவிஞர் 'மிர்சா காலிப்' தான் கஸல் கவிதைகளில் மாபெரும் சிகரமடைந்தவர்.
மிர்சா காலிப் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
காதல், அழகு, இயற்கை, தத்துவம் ஆகிய
பாடுபொருளை கொண்டிருக்கிறது கஸல்.
*
கஸலில் புகழ்பெற்ற கவிஞர்கள்
1, ஜலாலுதீன் ருமி, 2, மிர்சா காலிப், ,3, மக்பி.
ஔரங்கசீப்பின்  மகள் ஜெப்புன்னிசா . மக்பி  என்ற பெயரில் கஸல் காதல் கவிதைகளை பாரசீகம், அரேபிய மற்றும் உருது மொழியில் எழுதினார்.
இவர் சிறந்த கவிஞர்.
மக்பி,  டெல்லி ஆளுநர் மகன் அகில்கானை காதலித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தன்னைப் பற்றி் இவ்வாறு கூறுகிறார்:
'வைரங்களை விட பிரகாசமான சொற்கள் என்னிடம் இருக்கின்றன
அதை நான் உருட்டி விளையாடுகிறேன். அதுவே போதும்' என்கிறார்.
துயரமான கவிதைகளையே ஏன் அதிகம் புனைகிறாய் என கவிஞன் ரஸ்வி கேட்க..
அவள்,
'துயரம் தான் கவிதைக்கு அழகு சேர்கிறது' என்கிறாள்.
இன்றும் பாக்தாத் நகரில் கஸல் உச்சம் பெற்று விளங்குகிறது.
மிர்ஸா காலிப்
நவாப்புகளின் சபையில் அரசகவியாக விளங்கியவர்.
தன்னைக்குறித்தும் தன் கஜலைக்குறித்தும் அவர் இப்படிச் சொல்கிறார்,
     //நான் துக்கத்தால் மட்டுமே
        பாதிப்படைகிறேன்                          
       மகிழ்ச்சியின் இறுதிப்படுக்கையருகே
       அழுதுகொண்டும்
       பாடிக்கொண்டு மிருக்கிற
       துயராளியாய் என்னைத் துக்கம்
       ஆக்கிவிட்டது
      தனியனாய், வலிக்கும் என்  
      இதயத்திலிருந்து
      கஸலின் இனிய புலம்பலை எழுப்பினேன்.

      அது கஸலின் இன்னிசை சிகரத்தை
      எட்டிவிட்டது //
என்று தன் கஸலைப்பற்றி
சொல்லும் அவர்,
     "சுடர் முறையாகவே தீர்கிறது
      சோகப் புகைச்சுருளாய் 
      காதலின் பிழம்புகள்
      உடுத்திக்கொள்கின்றன
      என் மரணத்தால்
      கறுத்த துக்க ஆடை.
      அழுகிறேன்,
      காதலின் அவல முடிவுக்காக.
      அழுகிறேன்,
      காதலின் வெள்ளப் பாழுக்காக
      நான் போனபின்
      வேறெந்த இதயம் அதற்கு இடம் தரும்?"
என்று ஆழ்ந்த இதய சோகத்தை கஸலாய் முன் வைக்கிறார்.
இவர் உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் தம் கஸல் கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். மேலும் மற்ற கஜல் கவிஞர்களின் கவிதைகளை நூலாகத் தொகுத்து இருக்கிறார்
தமிழில் ஏற்கனவே கஜல் கவிதைத் தொகுதிகள் ஒருசில வந்திருந்தாலும்
முறையாய் கஜல் என்றால் என்ன என்கிற தெளிவான அறிமுகத்துடன், கஜல் கவிதைக்கான பழைய இலக்கணங்களை எல்லாம் தகர்த்துவிட்டு  ஒரு புதிய பொலிவுடன் முழுக்க முழுக்க காதலையே பாடுபொருளாய்க் கொண்ட தொகுப்பாய் தனது 'மின்மினிகளால் ஒரு கடிதம்' கஜல் கவிதைத் தொகுப்பை கொண்டுவந்தார், கவிக்கோ அப்துல் ரகுமான்.

'காதலியுடன் பேசுதல்' என்று கஜலை அறிமுகம் செய்கிறார், கவிக்கோ: -
"கஸல்' (Ghazal) அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும். அதுவும் காதலின் சோகத்தை.
கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.
3 முதல் 9 கண்ணிகள் வரை நீளும் கஜல் கவிதையில்
ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டியதில்லை"
*
இதோ கவிக்கோவின் கவிதைகள் சில...
°
     இறைவா
     நம் சங்கமத்திற்காகதான்
     பெண்ணிடம் ஒத்திகை பார்த்துக்
     கொண்டிருக்கிறேன்
°
    இந்தக் கவிதைகள்
     நீ செய்த காயங்களிலிருந்து
     வடியும் ரத்தம்
°
     காதலின் நஞ்சைக் குடித்தே
     சாகாமல் இருப்பவன் நான்
°
     என் உயிரை
     காதலில்
     ஒளித்துவைத்துவிட்டேன்
     மரணமே!
     இனி என்ன செய்வாய்?
*
மிர்சா காலிப்'பின் உருது கஜலான
'உதிர் இலைக'ளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் நீலமணியின்
'உப்புநதிகள்' நேரடி தமிழ் கஜல் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
     கல்லும் கவிபாடும்.
     இங்கொரு
     கவிதையே கல்லானதே
     தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன்
     வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது.
     அழுகையே ராகமென்றால்
     இந்த ஊரில்
     சிறந்த பாடகன் நான்தான்.
     தரையில் விழுந்தால் அழுக்குப்படுமென
     வானத்திலேயே மழை இருக்க முடியுமா?
     நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்.
     பக்தன் மனிதனாக இருக்கக்கூடாதா?
                                   - நீலமணி
                             (உப்புநதிகள்)
*
தொடர் கண்ணிகளாலான
கோ. பாரதிமோகனின் கஜல் கவிதைகள் சில...
*
     பெட்டிக்குள் அடைக்க இசைக்கும்
     மகுடியைப் போன்றது
     உன் குரல்
     பிழையொன்றுமில்லை
     அறிவதில்லை ஒருபோதும்
     விட்டில்கள் தன் சாபத்தை
     அறிந்துகொண்டேன்
     பசுமை படர்ந்த என் பாலை
     ஒளிக்குள் மறையும்
     இருள் போன்றதென
     யார்தான் இணங்க மறுப்பார்கள்
     வசீகரத்தின் கையசைப்புக்கு
     மூழ்கிப் போகிறேன் நான்
     இந்தக் காதல்
     ஒரு புதைகுழி
*
     மணலும் சுரண்டப்பட்ட நதியின் துயர்
     என் இதயம்
     நம்பவைக்கப்படும் கொலைக்கருவி
     கண்களின் சாயலிலிருந்தால்
     நானென்ன செய்வது
     அசையும் உன் ஆடையில்
     சுவாசம் பருகியவனுக்கு பரிசா இந்த
     இதயப் புற்று?
     ஆனாலும் என்ன
     இது உன் கொடைக்கான
     என் நன்றி
*
     பெருங்கருணைக்காரி நீ
     இதயத்தை பாலையாக்கி
     கண்களுக்கு வரமளித்தாய்
     காதலின் தாகத்திற்கு
     நான் கண்ணீர் ஊற்று
*
எனது 'காதலின் மீது மோதிக்கொண்டேன்' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...
     காதலே
     உனக்கான ஆடையை
     கண்ணீரால் நெய்கிறேன்
*
     உன்னை
     சொற்களில் தேடுகிறேன்
     நீயோ மௌனத்தில்
     ஒளிந்திருக்கிறாய்
*
     உன்னையும் என்னையும்
     உடுத்தி
     நிர்வாணம் களைகிறது காதல்
*
     நீ பறந்துவிட்டாய்
     அநாதையாகிவிட்டது
     என் கூடு
*
     உன்
     கூந்தலின் நுனிவரைதான்
     என்
     ஆயுளின் நீளம்
*
     உன்
     விரல்பிடித்து நடக்கையில்
     அழகாக இருக்கிறது
     மரணத்தின் பாதை

வியாழன், 13 செப்டம்பர், 2018

அசோகர் காலக் கல்வெட்டுகளும் சமக்கிருத மொழியும்: இரவிக்குமார்.

அசோகரைக் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன.

அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கின்றன.

பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்

ஆச்சர்யவசமாக சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தைத் தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார்.

வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களைப் போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை.

சந்திர குப்த மௌரியரின் காலத்தில் முதல் சமசுகிருதக் கல்வெட்டு  கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.
அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது.

அணையைப் பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமஸ்கிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமஸ்கிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை என்று எளிதாகச் சொல்லி விட்டார்கள்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்.

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் ).

வாழ்த்துகளுடன்,
மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

சனி, 8 செப்டம்பர், 2018

ஆசீவகமும் தமிழர் சமய மரபும்: முனைவர் இ.முத்தையா

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆசீவகம் பற்றித் தொடர்ந்து தம்முடைய கருத்துக்களை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி வலுப்படுத்தி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் பற்றி தம் ஆய்வைத் தொடங்கி இந்தக் கணம் வரை ஆசீவகம் குறித்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய ஆய்வு முடிவுகள் இதுவரையில் நமக்கு அறியக் கிடைத்த தமிழ் இலக்கிய வரலாற்றையும் சமய வரலாற்றையும் கேள்விக்கு உட்படுத்தித் தமிழர்க்கென்று ஒரு சமய அடையாளம் என்பது ஆசீவகம்தான் என்பதை மீண்டும் புதிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வருகிறார்.

சமணம் என்பதும் ஜை(சை)னம் என்பதும் வெவ்வேறான சமயங்கள் என்கிறார். சமணம் என்பது ஆசீவக சமயத்தையே குறிக்கும் என்றும், இது பக்குடுக்கை நண்கணியார், மற்கலியன் (மற்கலி கோசலர்), பூரணர், நரிவெரூஉத்தலையார் என்ற நான்கு சிந்தனையாளர்களால் (இவர்கள் சங்கப் புலவர்களும் கூட) உருவாக்கப்பட்டது என்றும் இவர்கள் புத்தர், மகாவீரர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர்கள் எனக் குறிப்பிட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட , மேற்கொண்டு வருகின்ற ஆய்வுகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளார். சமணப் படுக்கைகள் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளங்காட்டி அவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை எல்லாம் மறுத்து அப்படுக்கைகள் அணைத்தும் ஆசீவக முனிவர்கள் உருவாக்கியவை என்றும் கல்வெட்டில் காணப்படும் கணி நந்தாசிரியன் என்பவர் ஆசீவகச் சிந்தனையாளர் என்றும் எடுத்துக் கூறி இதுவரை நமக்கு அறியக் கொடுத்த சமயவரலாற்றையும் மெய்யியல் வரலாற்றையும் தமிழர்க்கு உரியவை அல்ல என்பதை உணர்த்தி ஆசீவக சமயமும் அதன் மெய்யியலும்தான் தமிழரின் சுய அடையாளம் என்பதையும் உணர்த்துகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வரலாற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி வருகிறார். சங்கப் பாடல்களில் பதிவாகியுள்ள ஆசீவகக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கியவர் இப்போது சிலப்பதிகாரத்தையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆசீவக சமயத்திற்கு உரியவையாகக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய கருத்துக்களைத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களோ தொல்லியல் ஆய்வாளர்களோ அக்கறையான விவாதத்திற்கு உட்படுத்தாமல் கடந்து செல்கிறார்கள். இவருடைய கருத்துக்களை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மௌனம்தான் நிலவுகிறது. இந்த மௌனம் கலைக்கப்பட்டால்தான் புதிய உண்மைகள் வெளிப்படும்.

விவாதங்கள் தொடங்குமா?

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

திராவிடம் : கால்டுவெல்லின் கடுஞ்சறுக்கல்களும் வைரமுத்துவின் ஆற்றுப்படையும்:- பெ. மணியரசன்.


பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.

சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.

வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.

“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)

“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது - அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் - திருக்குறளில் - காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!

வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 - 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 - 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 -  1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 - 1819),  இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 - 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.

வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!

தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?

கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்!  அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.

மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.

தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனி மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?

கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு - தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே - வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் - பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”

- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் - புலவர்  கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் - 7.

ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.

ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
----------------------------------------------------------

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.

இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான - திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :

“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் - Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.

“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது  தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் - உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”

- இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் - Kavithasaran Pathipagam, Chennai - 600019, பக்கம் - 5,6.

மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் - திராவிடம் - தமிழர் தொடர் கட்டுரை).

மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள்  கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை - மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர - திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று  தன்விருப்பப்படி - சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!

கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை  என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.

இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” - “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் - “Indian Antiquities By the Late Bishop Caldwell”  என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை - பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் - மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.     

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை  போன்ற தமிழ் நூல்கள் தமிழர் - தமிழகம் - தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?

அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்,  புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!

இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை - மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.

கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண் டாட்டம் போட வேண்டும்?

“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று - ஆரியச்சொல்!

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான - “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக - விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.

“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் - தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை - அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.

அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!

தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.

அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.

தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள்  விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!

அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!

மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு - பாவாணர், பக்கம் 26 - 28).

கால்டுவெல் இல்லையென்றால் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!

தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் - தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் - தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் - போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் - பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி - வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!

மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் - தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.

திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.

திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!

தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).

கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!

கேரள வெள்ளம்: தமிழகத்துக்குப் பாடம் :- நக்கீரன், சூழலியல் அறிஞர்.

கடவுளின் சொந்த தேசமான கேரளா இப்போது சாத்தானின் கையில் இருக்கிறது என்றார் ஒரு கேரள நண்பர். உண்மையில் எல்லா மதங்களின் கடவுள்களும் மாநிலத்தைக் கைவிட்டனர். அவர்களால் தம் வழிப்பாட்டுத்தலங்களைக் கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் இயற்கையே பேராற்றல் மிக்கது என்பது மெய்யாகியுள்ளது. கேரளா நம்மை விட இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம். அங்கேயே இப்படிப்பட்ட பேரிடர் எனில் நம்முடைய நிலை கவலைக்கிடமே. இப்பேரிடரை ‘மானுடரால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்’ என்பதே பொருந்தும். மனிதருடைய தவறுகளால் காட்டுயிர்களும் வளர்ப்பு விலங்களும் தம் உயிரை இழந்துள்ளன.

ஓரினப்பயிர்கள் :
மலைகள், காடுகள், ஆறுகள், ஓடைகள், காயல்கள் ஆகியவற்றால் கொடையளிக்கப்பட்ட மாநிலம் கேரளா. சோலைக்காடுகள் ஆறுகளின் தொட்டில். அவை மழைநீரை ஈர்த்து வைத்து கொஞ்ச கொஞ்சமாகக் கசியவிடும் தன்மை கொண்டவை. இதனால் வெள்ளம் கட்டுப்படும். ஆனால் ஓரினப்பயிர் தோட்டங்கள் தொட்டில் கயிற்றை அறுத்துவிட்டன. மண் அரிமானம் மழைநீரை துரிதமாக வெளியேற்றுகின்றன. காடுகளை விடத் தேயிலைத் தோட்டங்கள் வெளியேற்றும் நீரின் அளவு 45 மடங்கு அதிகம் என்கிறது கென்யாவில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு. விளைவு, பெய்யும் மழை 48 மணி நேரத்தில் மொத்தமுள்ள 44 ஆறுகளின் வழியாக விரைவாகக் கடலில் கலந்துவிடுகிறது.

பெருமழை கேரளாவுக்குப் புதிதல்ல. சிரபுஞ்சிக்கு அடுத்து உலகின் அதிக மழைப்பெறும் இரண்டாவது இடமாகப் பதியப்பட்டது வயநாட்டில் உள்ள ‘லக்கிடி’. .2005-ல் 4446.5 மி.மீட்டராகப் பதிவான இடம். நீலாம்பூரின் ஒரு இலட்சம் ஏக்கர் காட்டின் இருப்பு வயநாட்டின் சூழலை நெடுங்காலம் காத்து வந்தது. இன்று அதில் கிட்டதட்ட 90,000 ஏக்கர் தோட்டங்களாகிவிட்டன. தோட்டப்பயிர் ஒருபோதும் காடு ஆகாது. மேலும் சோலைக்காடுகள் இருந்த இடங்களில் முளைத்திருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கும் கோழிக்கோட்டில் இயங்கும் குவாலியர் ரேயான் தொழிற்சாலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.

குவாரிகள் :
வயநாடு மாவட்டத்தில் மட்டும் 160 கிரானைட் குவாரிகள் செயற்படுகின்றன. இவற்றில் வரலாற்றுப் புகழ்ப்பெற்ற இடக்கல் குகை அருகிலுள்ள அம்பலவயல் ஊராட்சியில் மட்டும் ஏறக்குறைய 40 குவாரிகள் உள்ளன. 1961 சுரங்கச்சட்டம் சிறிய வெடிகளின் வழி நிலமட்டத்துக்குக் கீழே 40 அடிகள் வரை தோண்ட அனுமதியளித்தது. இச்சட்டம் அறிமுகமானபோது பெரிய அளவிலான சுரங்கத்தொழிலோ மலையைப் பகுத்தறிவில்லாமல் வெடி வைத்து தகர்க்கும் முறைகளோ இல்லை. ஆனால் இன்று 400 அடிகள் வரை வெடிவைத்து தகர்ப்பதோடு, சமயத்தில் 900 அடிகள் ஆழத்துக்கும் செல்கின்றன.

பெரும்பாலான குவாரிகள் சுரங்கத் தொழிலுக்குரிய அனுமதி பெறாமல் பொதுக் கூட்டுறவு பணிக்கான வெடிப்பொருட்கள் அனுமதிப் பத்திரத்தை வைத்தே கொள்ளையடிக்கின்றன. குவாரிகளை ஒட்டி க்ரசர்கள், எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன. கான்துறையால் 14 இடங்களை மட்டுமே தடை செய்ய முடிந்தது. மீதி அமோகமாக இயங்குகின்றன. மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கை இப்பகுதியை பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மண்டலம் 1-ல் வைக்கப் பரிந்துரைச் செய்தும் பலனில்லை இதுபோல் கோட்டயம், இடுக்கி மாவட்ட எல்லைகளில் உள்ளாட்சி அமைப்புகளால் ஏறக்குறைய 3,000 ஏக்கர் அளவுக்குக் கிரானைட், லேட்டரைட் என்னும் செங்களிப்பாறை மற்றும் ஜல்லி தொழிலுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பஞ்சாயத் ராஜ் சட்டங்கள் உறக்கத்தில் உள்ளன. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் தன் ‘கண்ணன்தளி பூக்களுடே கால’த்தில் எழுதியது போல ‘மலைகள் லாரிகளில் ஏறத் தயாராக இருக்கிறது’.

ஆக்கிரமிப்புகள் :
மலைகளில் நிகழும் ஆக்கிரமிப்புகள், வளர்ச்சித் திட்டங்கள் பல கோடிகளை உள்ளடக்கிய அரசியல் செல்வாக்கைக் கொண்டவை. மலைகளைப் பின்புல காட்சியாகக் கொண்ட இடங்களில் கல்விக்கூடங்கள், ஓய்வில்லங்கள் எழும்பி, மலையிலிருந்து வழிந்திறங்கும் ஓடைகளைத் தடைச் செய்கின்றன. செல்வ நிலையைப் பறைச்சாற்ற மலைகளில் கட்டப்பட்ட ஆடம்பர இல்லங்களில் 30% ஆளில்லாமலேயே பூட்டிக் கிடக்கின்றன. சிலநாட்கள் மட்டுமே தங்க ஏறக்குறைய 10,000 சதுர அடி பரப்பளவுக்குக் கட்டப்படும் சொகுசு வீடுகள் பெரும்பாலானவை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், மதத்தலைவர்களுக்குச் சொந்தமானவை. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகியவை நில மாஃபியாக்களின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ளன.

மலைப்பாதை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்ட தடையுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் இவற்றைத் தடுக்கும் உரிமையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்துள்ளது. இருப்பினும் பயனில்லை. மீனாச்சில் ஆற்றின் முக்கிய ஊற்றே வழிக்கடவு புல்வெளிகளில்தான் இருந்தன. வாகமோனின் வரம்பற்ற சுற்றுலா கட்டிடங்கள் இந்தப் புல்வெளியைத் தின்றுவிட்டன. சுற்றுலாத் தலமான மூணாறு கசாப்புக் கடையாகக் காட்சியளிக்கிறது. மண் அரிமானம் என்பது மூணாரில் அன்றாடக் காட்சி. இதில் பெருமழை நிகழ்ந்தால் என்ன நிகழும்?.

மணல் :
கேரளாவிலும் சட்டவிரோத மணற்கொள்ளைகள் நிகழ்கின்றன. தெற்கில் உள்ள மீனாச்சில் ஆற்றுப்படுகைக் காணாமலேயே போய்விட்டது. வடக்கில் வயநாட்டிலுள்ள ஓடைகள் நெல்வயல்களில் மணல் அள்ளுதல் அன்றாடக் காட்சி. மணல் மாஃபியாக்கள் நெல்வயல்களில் பெரும் பள்ளங்களைத் தோண்டி வைத்துள்ளனர். இவை நீர்வரத்தைத் தடுத்துத் திசை மாற்றிவிடும். பெருமழையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அட்டப்பாடியின் சூழலியல் அழிவு பாரதப்புழா ஆற்றின் வெள்ளப்பெருக்காக மாறியது.

சதுப்பு நிலங்கள் :
கேரளாவில் 217 பெரிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவை மாநிலத்தின் மொத்த பரப்பளவில் ஐந்திலொரு பங்காகும். கேரளாவின் வெள்ளப்பெருக்கை நெடுங்காலம் தாங்கிவந்த இவை இன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன. சான்றாக 1834-ல் 36,329 எக்டேராக இருந்த வேம்பநாடு ஏரியின் இன்றைய பரப்பளவு மூன்றிலொரு பங்காகச் சுருங்கி 13,224 எக்டேராகக் குறைந்துவிட்டது. குட்டநாடுப் பகுதிகள், ஆலப்புழா, கோட்டயம், கொல்லம், எர்ணாக்குளம் வெள்ளத்தில் மூழ்கிய காரணம் புரிந்திருக்கும். தவிர ஏரியினுள் கொட்டப்பட்டுள்ள டன் கணக்கான குப்பைகள் நீர் உறிஞ்சும் தன்மையைக் குறைத்துள்ளன. ஏரியின் அடிப்பாகம் முழுக்க ஞெகிலிகளும் போத்தல்களுமாகக் கிடக்கின்றன.

பருவமழை:
மே மாத இறுதியில் நிகழும் தென்மேற்குப் பருவமழையைக் கேரளாவில் இடவப்பாதி மழை என்பர். பருவமழையின் அடையாளமே அது இடி மின்னல் இல்லாது தொடர்ந்து பெய்வதுதான். இடி மின்னல் இருந்தால் அதைப் புயல்மழை என்பர். ஆனால் இந்த ஆண்டுக் கேரளப் பருவமழை இடி மின்னலுடன் பெய்திருப்பது நல்ல அறிகுறியல்ல. இது மனிதர் உருவாக்கி வரும் புவிவெப்பமாதலின் துணை விளைவான பருவநிலை மாற்றத்தின் அறிகுறி. அண்மைக் காலமாகவே மழையளவில் பெரும் மாற்றம் இல்லையெனினும் மழைநாட்கள் குறைந்துவிட்டன. பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களிலேயே நீரிடியைப் போல் கொட்டித் தீர்த்துவிடுகின்றன.

சுருங்கச் சொன்னால் கேரள வெள்ளம் இரு பாடங்களை உணர்த்துகின்றன. ஒன்று சோலைக்காடுகளின் அழிவு, மற்றொன்று பருவநிலை மாற்றம். இதுதவிர மூன்றாவது காரணம் ஒன்றையும் அண்மையில் ஓர் அறிவியலாளர் கண்டறிந்தார். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கும் வெள்ளத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்பதே அந்தக் கண்டுப்பிடிப்பு. சூழலியல் காரணங்களைத் திரிக்கும் இவ்வகை அபத்தங்களே  உண்மையில் அனைத்தையும் விடப் பெரிய பேரிடர்.

(ஒளிப்படம் - இணையம் வழிப் பெறப்பட்டது. நன்றி)