செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

எங்கெல்சின் அநாகரிக நிலையும் நாகரிக நிலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு




பிரெடரிக் ஏங்கல்ஸ் அவர்கள் எழுதிய 'அநாகரிக நிலையும் நாகரீக நிலையம் என்ற நூலினை அண்மையில் வாசித்தேன். இந்நூல்  மனித சமூகத்தின் பல்வேறு அடிப்படை விடயங்களை மெய்யான ஆராய்ச்சியின் மூலமும் தெளிவான ஆதாரங்களுடன் விளக்குகிறது.

முதலாவதாக, அன்றைய சமூகமானது பொதுவுடமைத் தன்மை கொண்டது என்பதனையும், 

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினையின் இயற்கைத்தோற்றம் பற்றியும், 

மூன்றாவதாக, கால்நடை வளர்ப்பும், அவை எப்படி பரிமாற்றுப் பண்டமாக உருவானது என்பதனையும்,

நான்காவதாக, பயிர்த்தொழிலிளிருந்து கைத்தொழில் எவ்வாறு உருவானது என்பதனையும், 

ஐந்தாவதாக, உழைப்புச் சக்தியின் தேவை எப்படி அடிமைகளைப் பெற்றெடுத்தது என்பதனையும், 

ஆறாவதாக, இரும்பு எப்படி வேளாண்மையையும்  போரினையும்  ஊக்கப்படுத்தியது என்பதனையும் தெளிவான விளக்கங்களுடன் விளக்குகிறார்.

முதலாவதாக, அன்றைய இனக்குழுவானது தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தது. அங்குள்ள அனைத்து உடைமைகளும் பொதுவானதாகவே இருந்தது. அதனால், அவை  பொதுவுடமைச் சமூகமாகத் தனித்தன்மை பெற்று விளங்கியது. இருந்தபோதிலும் ஒரு குழுவினுடைய ஊடைமையினை இன்னொரு குழு அபகரிப்பது இயல்பாக இருந்தது. இதன் விளைவு போர்.  இனக்குழுக்களுக்கிடையே  கடுமையான சண்டைகள் நடைபெறும். இப்போரில் ஒரு இனக்குழு அடியோடு அழிந்து போகுமே தவிர அடிமைப்படாது என்கிறார் ஏங்கல்ஸ். அப்படி என்றால், அக்காலத்தில் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது. அன்றைய சமூகத்தில் தனி உடைமை என்ற ஒன்று இல்லாததால் ஆள்வோரும் இல்லை; ஆளப்படுவோரும் இல்லை. இன்றைய நிலைமையோ இதற்கு முற்றும் முரணாக இருக்கிறது. அதாவது தனியுடமை அதிகார வர்க்கம் என்ற ஒரு கொலைகாரத் தன்மையினைப் பெற்றெடுத்தது. இவை, மேலும் வர்க்கப் பிரிவினையை உருவாக்கியதோடு, பல்வேறு சாதி மதங்களின் தோற்றத்தற்கு வழிகோலியது. இதில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதிகாரமற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குரல்வலைகள் முற்றிலுமாகப் பலவகைகளில் நெரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள  நாம் இக்கொடுமையினைக் கானாத நொடியே இல்லை எனலாம்.

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினை பற்றி பேசுகிறார். உழைப்புப் பிரிவினை என்பது இயற்கையின் வளர்ச்சியே என்கிறார் எங்கெல்ஸ். ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது உணவுகளைச் சேகரிப்பதும் தனக்கான பாதுகாப்பான இருப்பிடத்தை அமைப்பது மட்டுமே பிரதானமாக இருந்தது. இதில் ஆண்களும் பெண்களுமாகச் சரிசமமாக ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், காட்டு விலங்குகளை வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்திய போது இதனைப் பராமரிப்பதிலும், குழந்தைப் பேரினைப் பெற்றெடுப்பதிலும் அதனைப் பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டிய நிலையிலும் பெண்கள் தான்  ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது இயற்கையாகவே உருவானது. அதனோடு கூடவே  கால்நடைகளிடமிருந்து பால் கறப்பது, அதிலிருந்து பால் பொருட்களைத் தயாரிப்பது போன்றவைகளையும்  பெண்களே மேற்கொண்டனர்.

இன்னொன்று மிக முக்கியமானது, தொடக்கத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை உற்பத்திச் செய்வதற்காகவே தொடங்கப்பட்ட வேளாண்மை, பின்பு அவை மனிதனுக்கு உணவினை உற்பத்தி செய்யக்கூடிய வேளாண்மையாக மாறியது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது, கால்நடைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வீட்டில் இருக்கும் பெண்களைச் சார்ந்தது என்றால், இந்த வேளாண்மையையும் தொடக்கத்தில் மேற்கொண்டது பெண்கள் தான் என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. இதனை மேம்படுத்துவதில் தங்களுடைய பங்களிப்பை ஆண்கள் செலுத்தியிருக்கலாம் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் உணவு உற்பத்திக்கான வேளாண்மையினைக் கண்டுபிடித்தது பெண்களே. ஒரு நாகரிகத்தின் முதன்மை அடையாளமே இந்த வேளாண்மையே தான். அதுதான் உணவு உற்பத்தி. இதுவே நாடோடி வாழ்க்கைக்கு முடிவுகட்டியது. அப்படி என்றால், நாகரீகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் இந்தப் பெண்கள் தான் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆண்கள் காட்டில் வீட்டில் பெண்கள் என்கிறார் ஏங்கெல்ஸ்.

மேலும், அவர் ஆண் தன்னுடைய துறையில் எஜமானனாக இருந்த மாதிரி பெண் தன்னுடைய துறையில் எஜமானியாக இருந்தார் என்கிறார்.  இதில் அதிகாரம் உள்ளவர், அதிகாரமற்றவர் என்ற பிரிவினையே கிடையாது. இருவரும் சமமானவர்கள் தான். இருந்தாலும் தனியுடைமையின் மோசமான விளைவுகளால் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது வெட்கக் கேடானது. இன்றைய எதார்த்த உலகில் இந்த இருவருக்குமான வேறுபாடானது இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் தான், இன்னும் பெண்களுக்கு முழு உரிமை வழங்க வேண்டும் என்ற பலமான முழக்கங்களை கேட்டுக் கொண்டேயிருக்க முடிகிறது. காரணம், பெண்கள் இன்னும் ஆண்களுக்குச் சமமான உரிமையினை முழுமையாகப் பெறவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இதனை எப்படி விளங்கிக் கொள்வதென்றால், உதாரணம் பெண்களுக்குச் சமமான உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தினை யாராவது பேசியோ அல்லது எழுதியோ பார்க்க முடிகிறதா? இல்லையே. அப்படி என்றால் பெண்கள் இன்னும் ஆனாதிக்கச் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

மேலும், அன்றைய  திருமண முறை இணை மண முறை  என்கிறார் ஏங்கல்ஸ். அதாவது, பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டுமே தெரியும், இது யாருடைய குழந்தை என்று. ஆனால், தகப்பனுக்கு அவ்வளவு எளிதாகத் தெரிவதில்லை. அதனால் தான், தொடக்ககாலச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தாயே முதன்மையானவளாக இருந்தாள். அன்று ஆண்கள் அனைவரும் கணவன்மார்கள், பெண்கள் அனைவரும் மனைவிமார்கள் என்ற நிலைதான் இருந்தது. பன்னெடுங்காலத்திற்குப் பின்புதான் ஒருதார மணமுறை உருவானது. இவை காலப்போக்கில் தகப்பன் குலத்தினைப் பெற்றெடுத்தது. அவை இன்றுவரை தொடர்நது கொண்டே வருகிறது.

மூன்றாவதாக, அநாகரிகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன என்கிறார் ஏங்கல்ஸ். அவர்   எழுதும் பொழுது பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றதுதான் சமுதாயத்தில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை என்கிறார். ஆம் உண்மைதான் பன்னெடுங்காலமாக உணவுக்காக அலைந்து திரிந்த  இந்தக் கூட்டமானது,  கால்நடைகள் மூலமாக முதன்மைத் தேவையான உணவுத் தேவையினை நிறைவேற்றிக் கொண்டது. மேலும், கால்நடைகள் என்ற பண்டமோ  மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவதற்கான பண்டமாக ஆயிற்று என்றும், மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவாதற்குரிய பண்டமாக  ஆயிற்று. அது எங்குமே மறுப்பில்லாமல் பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், அன்று யாரிடம் அதிகமான கால்நடைகள் இருக்கிறதோ அவர்கள்தான் அனைத்து நிலைகளிலும்  தன்னிறைவு பெற்ற குழுக்களாக இருந்திருக்கிறார்கள். அன்று கால்நடைகள் தான் முதன்மையான செல்வமாக இருந்திருக்கிறது. கால்நடைகளைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் போர்கள் நடந்தேரின. இந்திய வரலாற்றில் வேத காலத்தில் கால்நடைகளைக் கைப்பற்றுவதற்குப் பெரும் போரே நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், சங்ககாலத்தில் ஆநிரை கவர்தல் என்பதன் மூலமும் கால்நடைகள் எந்த அளவிற்கு  அதி முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்தக்  கால்நடைகளில் பசுமாடு தான் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இவைதான் அன்றைய மனிதர்களுக்கு அனைவருக்குமான உணவு தேவைகளைப் பூர்த்தி செய்தது. அதேநேரத்தில்  இன்னொன்றினையும் புரிந்துகொள்ளவேண்டும். பசுமாட்டிற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் காளை மாட்டிற்குப் பெரிய அளவில் கொடுக்கப்படுவதில்லை. இவை ஏனோ முற்றும் முரணாக உள்ளது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுமாடு கன்றுகளை ஈன்றெடுப்பதற்கும், உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால்  காளை மாடு அவசியம். காளை இல்லையேல் பசு இல்லை, பசு இல்லையேல் காளைகள்  இல்லை என்பது தான் உண்மை.  இருந்த போதிலும் காளையின் முக்கியத்துவத்தை தமிழ்ச்சமூகம் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறது.  

காளைகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதோடு அவைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அதனுடைய வலுவினை வெளிப்படுத்தும் விதமாக காளையர்கள் காளைகளுடன் கட்டித்தழுவும் ஏறுதலுவுதல் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இதனை முனைவர் ஏர் மகாராசனின் ஏறு தழுவுதல் என்ற நூலில் கானமுடிகிறது. இவை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பொங்கலை முன்னிட்டு  நடத்தப்படுகிறது. 

மேலும், கால்நடைகளில் செம்மறி ஆடுகள் அவசியம் அதி முக்கியமானவை. அக்காலகட்டத்தில் பனிப்பிரதேசத்தில் இனக்குழுக்கள் வாழ்வதற்கு அச்சாணியே இந்த செம்பரி ஆடுகள் தான். அவை அவனுக்கான உணவினைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவனுக்கான ஆடையினையும் கொடுத்தது. அதாவது அதன் ரோமங்கள் ஆடையாகவும் கம்பளி தயாரிக்கவும் பயன்பட்டது.இவை  அவர்களை பனிப்பிரதேசத்தில் வாழும் சூழலினை ஏற்படுத்திக்கொடுத்தது. பனிப்பிரதேசத்தில் வாழும் இக்லு குழுவை உதாரணம் காட்டலாம்.

 நான்காவதாக, உழைப்பினால் உற்பத்தியினை அதிகப்படுத்துவதனைப் பற்றி எழுதுகிறார். அன்றை காலகட்டத்தில் உழைப்பு மட்டுமே அவனுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் முதன்மைத் தன்மை கொண்டதாக இருந்தது. தனியுடைமை வலிமையடைந்ததன் விளைவு இன்னும்  கூடுதல் உழைப்பு சக்தி தேவைப்பட்டது. அதனை தன்னிடமுள்ள குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை வைத்து நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு ஏராளமான ஆட்கள் தேவை. இந்த ஏராளமான ஆட்களைப்பெற வேண்டுமானால் இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று, தன் இனத்தில் கூடுதலான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இதற்கு நெடுங்காலம் பிடிக்கும். அதனால் இவை இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. மற்றொன்று, மற்ற குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போரின் மூலமாக  வென்று அவர்களை அடிமைகளை  மாற்ற வேண்டும். இதில் இரண்டாமானவையினைத் தேர்ந்தெடுத்தது. போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கி, அவர்களின் உழைப்பினை தன்னுடைய தேவைக்கும் மீதமான உழைப்பினைப் பல்வேறு உற்பத்திக்காக மடைமாற்றம் செய்தனர். விளைவு, உற்பத்தி அதிகமானதும் தன்னுடைய தேவைக்குப் போக மீதியினை  வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவு வணிகம் உருவானது. மேலும், வணிகத்தின் மூலம் அபரீதமான பொருளாதாரத்தினைப் பெற்றெடுத்ததின் விளைவு, அதற்கு  மீண்டும் மீண்டும் உழைப்புச் சக்தியின் தேவை அதிகமாகி கொண்டே சென்றதால் அடிமைகளுக்கான தேவையும் அதிகமாக கொண்டே சென்றது. அதற்காகக் கொலைகார யுத்தங்கள் நடந்து கொண்டே இருந்தன. இதில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று உண்டு. அதாவது, அன்றைய அரசாட்சிகள் செல்வச் செழிப்போடு மின்னியது என்றால், அவைகள் அனைத்துமே இந்த அடிமைகளின் உழைப்பினால் விளைந்தவையே. அதாவது சாலை போடுவது, அரண்மனை கட்டுதல், கால்வாய் வெட்டுதல், வேளாண்மை செய்வது,  போருக்கான குதிரைகள் யானைகள் பராமரிப்பது ஆகியவைகளில் அடிமைகளின் உழைப்பை காணமுடிகிறது. மேலும்  இன்றைய அனைத்து நினைவுச் சின்னங்களிலும் லட்சக்கணக்கான அடிமைகளின் உழைப்பினைக் காண முடியும்.  அரசரும் அவருடைய ஆட்சியும்  உச்சத்தில் இருந்தது என்றால், அடிமைகளின் உழைப்பு உச்சபட்சமாக வழிந்து பெறப்பட்டது.

ஐந்தாவதாக, ஏங்கல்ஸ் அவர்கள் அநாகரிக நிலையினை நாகரீக நிலைக்கு மாற்றுவதில்  இரும்பு முதன்மையான பங்கினை வகித்தது என்கிறார். இரும்பின் பயன்பாடு  அளப்பரியது. காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றுவதற்கும் போர் ஆயுதங்களைச் செய்வதற்கும் இன்னும் பலவகைகளில் இரும்பு உலோகம் பயன்படுத்தப்பட்டது.

இறுதியாக, பொதுவுடைமை சிதைந்து, தனி உடைமை உருவானதினை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்தத் தனியுடைமை தான் மானுட சமூகத்தின் முதன்மையான எதிரி. பண்டைய பொதுவுடைமைச் சமூகம் என்பது அடர்ந்த வனத்தைப் போன்றது. அது அத்தனை உயிர்களுக்குமான உயிர்நாடி; அனைத்து உயிரினங்களுக்கும் உணவினைக் கொடுக்கிறது; இருப்பிடத்தை கொடுக்கிறது; மனிதனுக்கு உணவோடு கூடவே பொருளாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கிறது. இயற்கை சமநிலையைப் போற்றி பாதுகாக்கிறது; மழை பொழிவைத் தருவிக்கிறது; மண் அரிமானத்தைத் தடுக்கிறது; பிராண வாயுவினைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது, இப்படியாக எண்ணிலடங்கா நன்மைகளை இந்தக் காடுகள் செய்துகொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட காட்டினை அழிக்க நினைப்பது  கொடுமையிலும் கொடுமை தான். இதேபோன்றுதான், மானுடத்தினை முதன்மையான உச்சத்தில் வைத்திருந்த பொதுவுடமை தனியுடைமையினால் சிதைந்தது. இந்தத் தனியுடைமை அதிகாரத்தினைப் பெருக்கியதோடு ஆயுதங்களையும் உற்பத்தி செய்தது, அதோடு கூடவே கொடும் போர்களையும் வழிந்து ஏற்படுத்தியது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் செயலினை வார்த்தெடுத்தது. நாட்டினைத் தன் வசமாக்கி, தன்னுடைய செங்கோலில் அனைத்து குடிகளின் உயிரையும் பிடித்து வைத்திருந்தது. விளைவு புரட்சி, போராட்டம். இவைகள் அனைத்துமே மேலே உள்ளவைகளுக்கு முடிவு கட்டினாலும், மீண்டும் அதிகார வர்க்கம் புதுமையான வடிவத்தில் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. உழைப்பின் மூலமாகப் பொருளாதாரத்தைப் பெற முடியும் என்ற நிலை மாறி, கொள்ளையடிப்பதில் மூலமாக அதனைப் பெற முடியும் என்பதனை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

பொதுவுடைமை மலரும்.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.

09.08.2021

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காலனியம் வீழட்டும்; சுதந்திரம் மலரட்டும் : நுக்ருமாவும் ஆப்பிரிக்க விடுதலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு


அண்மையில், அமில்கர் கப்ரால் எழுதிய  'நுக்ருமாவும் ஆப்பிரிக்கா விடுதலையும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இந்நூல் ஆழமான படிப்பினை உலகிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு நாடு எவ்வாறு போராடி வெற்றிப் பெற்றது என்பது தான் அது. 

கானா என்ற நாடு ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பக்கமுள்ள ஒரு சிறிய நாடு. இந்நாடானது காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்தக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டினுடைய புரட்சியாளர் க்வாமோ நுக்ருமா என்பவர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அதிபராகவும் ஆனார். அவர் தன்னுடைய நாட்டிற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதுடன் நில்லாமல், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுதந்திரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமான விடுதலை உணர்வு கொண்டிருந்தார். அதாவது அடிமைத்தனத்தை பெற்றெடுக்கும் காலனியாதிக்கத்தினை என்ன விலை கொடுத்தேனும் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி வென்றவர் நுக்ருமா. 

கானாவின் அதிபராக இருந்த பொழுது, தொடக்கத்தில் சனநாயகத்தை நிலைநாட்டியவர். பிற்காலத்தில்  தன்னுடைய தவறான தேசியக் கொள்கையினால் அதற்கு எதிராகத் திரும்பினார். ஒரு கட்டத்தில் தனக்கும் தன்னுடைய ஆட்சிக்கும் பாதுகாப்பினைப் பெறுவதற்கு ராணுவத்தை நம்பி இருந்தார் என்ற செய்தி துயரமாக இருந்தது. 

எந்த ஒரு நாடு அந்நாட்டின் நல் ஆட்சிக்கு ராணுவத்தை நம்பியிருக்கிறதோ, அந்நாடு சனநாயகத்திற்கு எதிரான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நிலைக்குத்தான் நுக்ருமாவும் தள்ளப்பட்டார். அதாவது, சனநாயகத்தைத் தொடக்கத்தில் நிலைநாட்ட வந்த ஒருவர், அதிபரான பின்பு அதனைக் கொலை செய்யும் விதமாக நடந்து கொண்டார். இவை,  தான் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்ட நேர்மையான, உண்மையான நோக்கத்திற்கு விரோதமானது. முக்கியமாக அவர் தன்னைத் தானே ஒஸாஜி ஃபோ  அல்லது மீட்பர் என்று அழைத்துக்கொண்டார். 

அவருடைய ஆட்சி முட்டாள்கள், பைத்தியக்காரர்கள் விமர்சிக்கக் கூடிய அளவிற்குச் சகிப்புத்தன்மையற்ற விதத்தில் இருந்தது. அவருடைய தேசியக் கொள்கை எந்த அளவிற்குத் தன் நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக  இருந்தது என்பதனைக் காணமுடிகிறது. இருந்தாலும், அவருடைய தொடக்ககாலப் போராட்ட வெற்றியான நாட்டினை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்பட்டதினை யாராலும் மறுக்க முடியாது.

மேலும், அவர் ஒன்றுபட்ட ஆப்பிரிக்காவின் அரசுக்குக் கானா அரசு தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் என்று கானா அரசின் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அவர் எழுதினார் எனும் பொழுது, இவர் உண்மையிலேயே ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களின் மீது எவ்வளவு பெரிய மதிப்பு மரியாதை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நான்,என்னுடைய தேசம் என்று குறுகிய எண்ணமே கொண்டிருக்கும்  தலைவர்களுக்கு மத்தியில், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் முழு சனநாயக விடுதலை, அதாவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் காலனியாதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். 

அனைத்து மக்களும் தனக்கான சுயமான தேசத்தில் சுயமான அரசு உருவாக்கித்தர வேண்டும் என்ற நோக்கம் அவரை அறிஞராக, புரட்சிவாதியாக, சிந்தனையாளராக, பெரும் தத்துவவாதியாக, அடிமைத்தனத்தின் முதல் எதிரியாக இருப்பவர் நுக்ருமா என்ற நிலை உருவானது.

அதே நேரத்தில், கானாவின் குடியரசுத் தலைவர் செகோவ் டூரே அடிக்கடி கூறுவதைப் போல 'மக்களும், மனித குலமும் எல்லைகள் அனைத்தையும் கடந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது, ஒரு மனிதன் எம்மாத்திரம்' என்கிறார். அப்படியென்றால், நுக்ருமாவின் சாதனைகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அவர், ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மக்களுக்கு வீரத்தின் அதாவது சுதந்திரத்தின் விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவருடைய பெருமைகள் அதாவது, ஒரு கை எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், அதனால் வானத்தை மறைக்க முடியாது என்ற பழமொழிக்கு ஒப்பாகும். 

அதேபோன்று, அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது அவரை இந்த மோசமான நிலைமைக்குத் தள்ளி துரோகம் செய்தவர்களை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது. அவருக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கு ஏற்படும். அதாவது, வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் அது முகத்திலே தான் விழும் என்ற பழமொழியைப் போன்றது. 

இறுதியாக, நுக்ருமாவின் புகழ் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல  உலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்.

குவாமோ நுக்ருமாவுக்குப் புகழ் அஞ்சலி.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.


செவ்வாய், 13 ஜூலை, 2021

விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை  நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. 

இந்த மானுடம்  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும்  கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில்  விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் தன்மை கொண்டவை. 

பொதுவாக வாழ்க்கை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. இதில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் தனக்கான உயிர்வாழ்ப் பாதையினை இயற்கை கொடுத்த வழியில் வாழ்ந்து, தங்களுடைய இறுதி நிலையினை இயற்கை விட்ட வழியில் எய்துகின்றன. இதற்கு எதிராக அவைகள் சுயநினைவினை இழந்து, வேண்டுமென்று பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, தன்னுடைய வாழ்வினை இடையில் அதாவது தற்கொலையில் முடித்துக் கொள்வதில்லை. இவைகள் அனைத்தும் பெரும்பாலும் இயற்கை மரணத்தையும் சில நேரங்களில் அகால மரணங்களை அடையுமே தவிர, எவையும் தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை. இவை அபூர்வத்திலும் அபூர்வம். 

ஆனால்,  சில மனிதர்கள் மட்டுமே  வாழ்விற்கு முரணான வகையில் இந்தத் தற்கொலைகளையும் அதன்  எண்ணங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். 

மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு இரண்டு மரணங்கள் உண்டு. ஒன்று, இயற்கை மரணம். இன்னொன்று, தவிர்க்கமுடியாத அகால மரணம். இதில் மூன்றாவதான தற்கொலை மரணம் என்ற எண்ணம் இந்த விலங்கு  உயிரினத்திற்கே பொருந்தாத ஒன்று. 

ஆனால், மனிதன் மட்டுமே மூன்று வகையான மரணத்திற்கு உரிமை உள்ளவனாக இருக்கிறான். ஒன்று இயற்கை மரணம், இரண்டாவது அகால மரணம், மூன்றாவது தற்கொலை மரணம். இதில் மூன்றாவது மரணம் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும். 

தற்கொலை விடயத்தில் ஏன் விலங்கினங்களை மனிதனுடன் ஒப்பிட வேண்டும் என அய்யம்  எழலாம். அதாவது, விலங்கினங்கள் ஐந்து அறிவு கொண்டவை. மனிதன் ஆறு அறிவு கொண்டவன். இவை இப்படி இருக்கையில், ஏன் இந்த ஒப்பிடுகை எனச் சிந்திக்க வேண்டும்.  தொடக்கத்தில் சொன்னதைப் போன்று தற்கொலை மரணங்கள் மனிதனுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. ஆனால், விலங்குகளுக்கு இவை இல்லவே இல்லை. இன்னொன்று, அதற்கு அப்படி ஒரு கேடுகெட்ட இயற்கை அறிவோ செயற்கை அறிவோ இல்லை என்பது இயற்கையின் அற்புதம்; அதிசயம். இதே அதிசயத்தினையும் இதனைவிடப் பன்மடங்கு கூடுதலான பகுத்தறிவினையும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்துள்ளது என்பது இதனைவிட அதிசயத்திலும் அதிசயம். 

மேலும், மனிதன்  பகுத்தறிவுள்ளவன். எதனையும் சிந்திக்கக் கூடிய சாதிக்கக் கூடியவன். இந்த உலகையே தலைகீழாக மாற்றிக் காட்டும் அதீதத் திறமையுள்ளவன் என்ற பாராட்டிற்கும் அழியா பெருமைக்கும் சொந்தக்காரன். 

இந்தத் தற்கொலை விடயத்தில் ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை விட, மிக மிகத் தாழ்ந்து போகிறான் என்னும்போது,  விலங்கினங்கள் இவனை விட ஒரு படி என்ன, ஆயிரம் படி மேம்பட தக்கதாகவே உள்ளது என்பது தான் உண்மை. 

சில மனிதர்கள், வாழ்வு என்பது வாழ்வதற்குத்தான் என்பதை மறந்து தாழ்ந்து போகிறார்கள். மனித வாழ்வு என்பது வாழ்வதற்காக மட்டுமே. இந்த மானுடம் அனைத்தையும் வெல்லும் தகுதி படைத்தவை. அதற்கான கால நேரங்களை - சூழல்களை இம்மானுடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கான நல் வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அதனை யாராவது தட்டிப் பறித்து கொள்வார்களா என்ன ?  இல்லை. 

இந்த மானுடப் பிறப்பு என்பது ஒரு முறைதான். அதனைத் தனக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டு பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். 

தற்கொலை செய்வதனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள புவிக்கு எந்தக் கடுகளவும் தீமையும் ஏற்படப் போவதில்லை. 

இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினந்தோறும் சூரியன் உதிக்கும்; சூரியன் மறையும். மழை பெய்யும், புயலடிக்கும், பணி கொட்டும், வெள்ளம் வரும், இன்னும் இதில் ஏராளம். இந்த இயக்கம் அனுதினமும் நடந்து கொண்டேதான் இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

ஆனால், இந்தத் தற்கொலை  செய்வதில் பெரும் கேடு உண்டு. அவை அவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் இவை மிகப்பெரிய பேரிடியாக இருக்கும். இவை கொஞ்ச நாள் கழித்து இவையும் மறைந்துபோகும். பின்பு எதார்த்த உலக ஓட்டத்தில் அவனின் குடும்பத்தார்கள் கலந்துவிடுவார்கள். பின்பு இதனைப் பற்றி நினைப்பதற்கு ஏதும் அங்கு இருக்கப்போவதில்லை. 

இப்பொழுது இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வாழ்க்கை வாழ்வதற்கா? அல்லது இடையில் முடித்துக் கொள்வதற்கா? என்று. 

உண்மையான மனிதத் தன்மை கொண்டவர்கள் வாழ்வினை வாழத்தான் என்பதனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதில் எந்த மாற்றமுமில்லை. இவை இயற்கையின் விதி அல்ல நியதி. விதி மூட நம்பிக்கை சார்ந்தது; விதி என்பது இயற்கை மெய்ஞானம் சார்ந்தது. இறுதி முடிவு இப்படி இருக்கையில், முன்னமே சொன்னதனைப் போன்று நாம்  உயிருடன் இருந்தாலும் இயற்கையின் இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

இடையில் தன்னை வேண்டுமென்று  மாய்த்துக்கொண்டாலும், இந்த இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம். அப்படி என்றால், இன்றே இப்பொழுது இந்த நிமிடமே அந்த மலிவான எண்ணத்தை விட்டொழித்து, அந்த இடத்தில் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். 

இப்படி எளிமையாகச் சொன்னால் அவை எப்படி முடியும் என்ற எண்ணமும் வரக்கூடும். இருந்தாலும் இறுதி முடிவு வாழ்வா, தற்கொலையா என்றால் வாழ்வுதான் என்ற விடை மட்டுமே மிஞ்சும். 

எனவே, நாம் இயற்கை மரணத்தினை  அடையும் முன்பே நம்மால் என்னவெல்லாம்  சாதிக்க முடியுமோ அதனையெல்லாம் சாதிக்கத் துடிக்க வேண்டும். நாமும் சாதிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும். இதுதான் மனிதனின் இயற்கைக் குணம். 

இந்தப் புவி நமக்கானது; இந்தச் சூரியன் நமக்கானது. இந்தக் காற்று நமக்கானது; இந்த மலை நமக்கானது; இந்த மழை நமக்கானது; இந்த நட்சத்திரங்கள் நமக்கானது. இன்னும் சொல்லப்போனால்,  இந்த அண்டவெளி  நாம் வாழ்வதற்கான அத்துனை சாதகங்களையும் செய்து கொண்டே இருக்கிறது.  இப்படி அனைத்தும் நாம் வாழ்வதற்கான அனைத்து நல் சூழ்நிலைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கையில், நாம் மட்டும் ஏன் இந்த இயற்கைக்கும்,  மனித இனத்திற்கே முரணான ஒரு கேடு கெட்ட தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். 

நீங்கள் சுவாசிப்பது உங்களுக்காக; நீங்கள் உண்பது உங்களுக்காக. நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்வது உங்களுக்காக. இன்னும் சொல்லப்போனால்,  இந்த உடலே உங்களுக்கானது என்பதனை மறந்து விடவேண்டாம். மேலும் மது மற்றும் புகைப்பழக்கத்தினால்  உடலினை அழித்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, இழந்த உடலினைத் திரும்ப பெறப்போகிறேன் என்று லட்சம் லட்சமாம் பணத்தினைச் செலவழிப்பது பைத்தியக்காரத்தனம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்கள், மலைகள், காடுகள் என அனைத்தும் எல்லையில்லாத் தன்மை  கொண்டிருக்கையில், நமக்கான வாழ்வும் சாதனை எல்லையில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இடையில் கெடுத்துக் கொள்வதற்கும் மாய்த்துக் கொள்வதற்கும் அல்ல. 

கட்டுரையாளர்:                            க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.


திங்கள், 12 ஜூலை, 2021

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் : க.நாகராசு

தேவைதான் அனைத்துக் கண்டுபிடிப்புகளின் தாய் என்பதனை நாம் ஒவ்வொரும் அறிவோம். இன்று உலகில் உள்ள அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன; இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய இவ்வுலகில் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் எவ்வளவு என்று நாம் எழுத நினைத்தாலும் எழுதமுடியாது; நினைக்க முடிந்தாலும் நினைக்க முடியாது. அத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதாவது அவைகள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான். 

இத்தனை கண்டுபிடிப்புக்களும் மனிதனை இன்றைக்கு இந்த உச்சபட்சமான வாழ்வியல் நிலையில் வைத்திருக்கிறது. இத்தனை கண்டுபிடிப்புகளும் இந்த மனிதனுக்குப் பயன்படத்தக்கதாகவே உள்ளது என்பது ஆச்சரியப்படத்தக்கது. இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகளும் இவனுக்குத் தேவைப்படபோகின்றன. ஏனென்றால், தேவைகள் இருப்பதனால்தானே இத்தனை எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். அப்படியானால், இங்கே அவனின் கண்டுபிடிப்பதற்கான தூண்டுகோல் அவனின் தேவைதான். 

இவை ஒருபுறமிருக்க, அவன் சிந்தனைத் தூண்டுதல் அதிகரிக்க அதிகரிக்க, அனைத்தினையும் நுணுகி ஆராய வேண்டும் என்ற எண்ணம் அவனது ஆழ்ந்த சிந்தனையில் உருவாகி விடுகிறது. அதனை மனிதனின் சமூக, பொருளாதாரப் பயன்பாட்டிற்கு அதனை எப்படிக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகிறான். 

விலங்குகளுக்கு உணவு தேவை. அதனால், அவை தேடிப் பெறுகின்றன. அதற்கு இருப்பிடம் தேவை. அதனையும் தேடிப் பெருகின்றன. அதனுடைய இனத்தினைப் பெருக்குவதற்கு இணை தேவை. அதனையும் தேடிப் பெறுகின்றன. இப்படி விலங்குகளே தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தேடி ஓடி அதனைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. 

ஆனால், மனிதன் சற்று உச்சபட்சமான ஆறு அறிவு கொண்டவன். அப்படியானால், அவருடைய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்குப் புதுமையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவன் தன்னுடைய அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகளை என்றைக்கோ தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டான். ஆனால், அவனுடைய இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் எண்ணிலடங்கா தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால், அவன் இன்னும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவுத் தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்குப் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த முடிகிறது;  பெருக்கமுடிகிறது இவனின் கண்டுபிடிப்புகளால். 

 தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு இயந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதனையும் கண்டுபிடித்து அதனுடைய எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறான். இப்படி மனிதனுடைய கண்டுபிடிப்புகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

மேலும், இந்த மானுட சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்னும் ஏராளமான தேவைகள் இருந்து கொண்டே இருப்பதால், இதற்கான கண்டுபிடிப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இறங்குவது சாலச் சிறந்ததாகும். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளில் இறங்குவதில்லை. ஆனால், மற்றவர்களின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறான்; பாராட்டுகிறான்; வியக்கிறான். இவை வரவேற்கத்தக்கதுதான். 

ஆனால், என்றைக்கு நாமும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது? படைப்புகளை மேற்கொள்வது? என்றைக்கு நாமும் மற்றவர்களின் பாராட்டையும் புகழையும் பெறுவது?அவை, மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது என்ற சிந்தனையில் நாம் ஒவ்வொரும் இறங்க வேண்டும். இங்கு கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் ஆகலாம்; ஓவியன் ஆகலாம்; கவிஞன் ஆகலாம்; ஒரு நடிகன் ஆகலாம்; சிறந்த பேச்சாளனாக ஆகலாம்; சிறந்த சிந்தனைவாதியாகலாம்; இன்னும் பல. 

இவையும் சமூகத்திற்குத் தேவையான ஒன்றுதான். நாம் செய்ய வேண்டிய ஒன்று, தேவைகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான கண்டுபிடிப்புகளில் இறங்கிக் கொண்டே இருக்கவேண்டும். 

ஒவ்வொருவரும் சிந்திப்போம். இந்த மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகளை அனைவரும் மேற்கொள்வோம். 

கட்டுரையாளர்: க.நாகராசு, முதுகலை வரலாற்றாசிரியர்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தமிழீழ மாவீரர்நாள் : உணர்வும் வரலாறும்

 


தமிழீழ மாவீரர் நாள் வாரம்.


அதிகாரப்பூர்வ பெயர்: 

மாவீரர் நாள்.

மாவீரர் நாள் அடையாளம்: காந்தள்.

கடைபிடிப்போர்: தமிழர்.

நாள்: நவம்பர் 27.

காலம்: 1 நாள் நிகழ்வு.

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, 

தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் 

அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

வரலாறு:

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் 

(செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

கடைப்பிடிப்பு:

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

கொடியேற்றுதல்:

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற 

ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உறுதிமொழி:

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

"மொழியாகி,

எங்கள் மூச்சாகி - நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை

உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு

துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்

தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈகைச்சுடரேற்றுதல்:

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.

மாவீரர் நாள் பாடல்:

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.

 இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

மாவீரர் குடும்ப கௌரவிப்பு:

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.

அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவீரர் நாள் உரை:

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.

கார்த்திகைப் பூ:

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மேற்கோள்கள்:

மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்.தமிழீழ மாவீரர் நாள் அனுபவம் ஒன்று - த. அகிலன்.

நன்றி:

தமிழ் விக்கிப்பீடியா.

தமிழீழ மாவீரர்களுக்கு

வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

20.11.2020

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

வேளாண் சமூகத்தவரின் பெயர் மற்றும் பட்டியல் மாற்றக் கோரிக்கை: கருத்தாய்வு முடிவுகள்.



வேளாண் சமூகத்தவரின் பெயர் மாற்ற அரசாணை மற்றும் பட்டியல் மாற்றக் கோரிக்கை தொடர்பான கருத்தாய்வு முடிவுகள் வெளியீடு.
*
தமிழ்ச் சமூகத்தின் வேளாண் தொழில் மரபினராக அடையாளப்படுகிற தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்) சமூகத்தினரின் பெயர் மாற்ற அரசாணை மற்றும் பட்டியல் மாற்றக் கோரிக்கை  தொடர்பான பொது வாக்கெடுப்பு / கருத்தாய்வுப் பணியை, இயங்கலைப் படிவத்தின் (ONLINE SURVEY FORM) வாயிலாக வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம், மக்கள் தமிழ் ஆய்வரண் இணைந்து மேற்கொண்டன. 

15.08.2020 முதல் 29.09.2020 வரை 2708 பேர் தமது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அதில் பதிவான முடிவுகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

தோழமையுடன்:
முனைவர் மகாராசன்,
கருத்தாய்வு ஒருங்கிணைப்பாளர்
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம், 
மக்கள் தமிழ் ஆய்வரண்.


•கருத்தாய்வில் கலந்துகொண்ட பாலினத்தவர்கள்.

• ஆண்கள்: 90.3%
• பெண்கள்: 9.7%


•கருத்தாய்வில் கலந்துகொண்டவர்களின் 
கல்வித் தகுதிகள்.

• பள்ளிப் படிப்பு: 25.1%
• பட்டயப் படிப்பு: 16.3%
• பட்டப் படிப்பு: 28.7%
• பட்ட மேற்படிப்பு: 19.2%
• ஆராய்ச்சிப் படிப்பு: 8.8%
• படிக்காதவர்கள்: 2%


•கருத்தாய்வில் கலந்துகொண்டவர்களின் 
தொழில் நிலைகள்.

• வேளாண் தொழில்: 21.8%
• அரசுப் பணி: 25.6%
• தனியார் பணி: 25%
• சுய தொழில்: 16.3%
• இதர: 11.3%


•கருத்தாய்வில் கலந்துகொண்டவர்களின் 
சமூகப் பின்புலம்.

• தேவேந்திரகுல வேளாளர்: 97.9%
• மற்ற சமூகத்தினர்: 1.3%
• இதர: 0.7%


கேள்வி 1:
•தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மாற்ற அரசாணைக் கோரிக்கையை ஆதரிக்கிறீர்களா?

• ஆம்: 97.5%
• இல்லை: 1.9%
• கருத்தில்லை: 0.6%


கேள்வி 2:
•தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மாற்ற அரசாணைக் கோரிக்கையை ஏன் ஆதரிக்கிறீர்கள்?

• தன்மானத்திற்காக 
(சுய மரியாதைக்காக ): 75.1%
• கல்வி / வேலை / 
சுயதொழில் வாய்ப்புக்காக: 14.9%
• சாதிப் பெருமிதத்திற்காக: 3.4%
• அரசியல் காரணத்திற்காக: 1.6%
• கருத்துச் சொல்ல 
விருப்பம் இல்லை: 5%


கேள்வி 3:
•தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்) சமூகத்தினரை எஸ்.சி எனும் பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறீர்களா?

• ஆம்: 94.4%
• இல்லை: 4.2%
• கருத்தில்லை: 1.4%


கேள்வி 4:
•தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்) சமூகத்தினர் எஸ்.சி பட்டியலில் நீடித்து இருப்பதால் / இருந்தால் கிடைக்கும் சமூக மாற்றுகள் / வாய்ப்புகள்.

• சாதி அவமானங்கள்: 43.8%
• சமூக ஒதுக்கல்கள்: 41.2%
• அரசின் சலுகைகள்: 4.2%
• சமூக நீதி / இதர: 8.9%
• இதரத் தேவைக்காக: 1.9%


கேள்வி 5:
•தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்) சமூகத்தினர் எஸ்.சி பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாறுவதால் கிடைக்கும் சமூக மாற்றுகள் / வாய்ப்புகள்.

• தன்மான 
(சுய மரியாதை) முன்னேற்றம்: 64.5%
• கல்வி வேலை வாய்ப்புகள்: 4.3%
•தனியார் / சுய தொழில் / 
பொருளாதார முன்னேற்றம்: 25.7%
• அரசியல் லாபங்கள்: 1.3%
•எந்த முனேற்றமும் 
ஏற்படப் போவதில்லை: 2.6%
• இழப்புகளே அதிகமாகும்: 1.6%


பிற்சேர்க்கை:
கருத்தாய்வுப் பதிவுகளின் புள்ளிவிவர வரைபடங்கள்:





வெளியீடு:
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.

வெள்ளி, 12 ஜூன், 2020

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? : முனைவர் டி.தர்மராஜ்


           
                  
‘தேவேந்திரகுல வேளாளர்’ என்பது தான் இவர்களது பெயர்! தேவேந்திரன் என்ற சொல் 'தேவலோகத்து இந்திரன்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவன் ஒரு புராணக் கதாபாத்திரம். 'குலம்' என்ற சொல்லின் பொருள் எல்லாருக்கும் தெரியும். ’வேளாளர்' என்றால் வேளாண்மை செய்பவர் அதாவது விவசாயக் குடிகள் என்று அர்த்தம்.  தமிழகத்தின் தொல்குடிகளுள் தேவேந்திரரும் ஒன்று.
வேளாண்மையே இவர்களது தொழில். எனவே, ஆற்றங்கரையோர கிராமங்களில் இவர்கள் வாழ்ந்து வருவதை காணமுடியும். அது போல குளத்துப்பாசன பகுதிகளிலும். ஏரிப்பாசன கிராமங்களிலும், வானம் பார்த்த நிலங்களிலும் இவர்கள் விவசாயம் செய்து வருவதை இன்றைக்கும் பார்க்கலாம்.  தமிழகத்தின் விவசாய மரபில் இவர்களுடைய பங்கு தான் கணிசமானது.
கட்டாந்தரைகளை கழனிகளாக மாற்றும் தொழில்நுட்பம் இம்மக்களுக்கே தெரிகிறது என்ற செய்தியை பல்வேறு நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.  புதியதொரு கிராமத்தை உருவாக்குகையில் வேளாண் பணிகளுக்காக இம்மக்களை வருத்தி அழைத்து வந்த செய்திகள் பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையுமே இவர்களின் மரபு என்பதால், மருதநில மக்கள் என்ற சிறப்பு பெயரும் இவர்களுக்கு உண்டு.
மொத்தத்தில் இவர்களின் வரலாறு தான் தமிழகத்தின் விவசாய வரலாறு; இவர்களது அறிவு தான் தமிழகத்தின் வேளாண் அறிவு; இவர்களது மேன்மை தான் தமிழகத்தின் பண்பாட்டு மேன்மை; அதே போல் இவர்களது வீழ்ச்சிதான் தமிழகத்தின் வீழ்ச்சியும் கூட!
2
சுமார் நானூறு வருடங்களாக, ஒட்டு மொத்தசமூகத்தின் கேலியையும், கிண்டலையும், ஏச்சையும், பேச்சையும் தாங்கிக்கொண்டு அவமரியதையோடு, ஏளனங்களை சுமந்து வாழ்ந்து வரும் தேவேந்திரர்கள் சமுகப் பொருளாதார அரசியல் தளங்களில் தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணங்களைத் தொடர்ந்து பரிசீலித்து வந்திருக்கிறார்கள் .நிலங்களைப் பறிகொடுத்தது, வரலாற்றில் தந்திரமாக புறக்கணிக்கப்பட்டது, இலக்கியத்தில் இழிவாக சித்தரிக்கப்பட்டது, பூர்வீக வாழிடங்களிலிருந்து வம்படியாய் இடம் பெயர்க்கப்பட்டது, தொடர்ச்சியான வன்முறைக்கு இலக்கானது, தீண்டத்தகாதவர்கள் என்று வலிந்து சுமத்தப்பட்டது என்று நானூறு வருடங்களாக தன் மீது நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களுக்கு எதிராக இச்சமூகம் போராடியே வந்திருக்கிறது.
அரசியல் மாற்றங்களினாலும், சமய மாற்றங்களினாலும் தங்களது உழைப்பில் உருவான வயல்வெளிகளை எல்லாம் பிற மக்களிடமும், சைவ-வைணவ தெய்வங்களிடமும் பறிகொடுத்த வலியின் காரணமாகவே இன்றைக்கும் இவர்கள் சிறு துண்டு நிலம் கிடைக்கிறது என்றாலும் எப்பாடுபட்டாலும் அதை வாங்கிவிடும் வேட்கையைக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பொருளாதாரத்தில் அடைந்த வீழ்ச்சி, சிறு துண்டு நிலங்களை மட்டுமே, அதுவும் படாதபாடுபட்டு, வாங்கும் நிலையில் இவர்களை வைத்திருக்கிறது என்பது தான் உண்மை.  இதற்காகச் செங்கர்சூளைகளில் குடும்பங்களையே ஒப்புவித்து கூட வாங்குகிறார்கள் என்பது தான் உண்மை.  விவசாயம் பொய்த்துப்போன இந்த நூற்றாண்டிலும் நிலத்தின் மீதான பிடிப்பை விட்டுவிடாமல், பிடிவாதமாய் கிராமப்புறங்களிலேயே தேய்ந்து கொண்டிருப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பு இழந்து போன மண்ணின் ருசி தவிர வேறு என்ன காரணமாக இருக்கமுடியும்? 
கட்டாந்தரைகளை விளைநிலங்களாக மாற்றிய அனுபவங்களும் தேவேந்திரர்களை உளவியல் ரீதியாக எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதன் வெளிப்பாடு தான் நிலம் மீதான இவர்களின் ஈர்ப்பும், காதலும்.  விவசாய நிலங்கள் மீதான இவர்களது காதலை இன்னொரு வழியிலும் நாம் கண்டு கொள்ளமுடியும்.  நிலங்கள் பறிபோன காரணத்தாலும், வன்கொடுமைகள் அதிகரித்த காரணத்தினாலூம், பருவ நிலைக் கோளாறுகளால் விவசாயம் நலிவடைந்த காரணத்தாலும் தேயிலைத் தோட்டங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்ற இம்மக்கள், அங்கே சம்பாதித்தது சொற்பமான பணம்தான் என்றாலும் அதையும் மிச்சம் பிடித்துக்கொண்டு வந்து பூர்வீகக் கிராமங்களில் சிறு நிலங்களை வாங்க முனையும் போக்கு மிக இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.  இவர்களின் மண் வேட்கை எவ்வளவு தூரம் என்றால், விவசாயம் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத சமூகங்கள் கூட, ‘மண்ணுல ஏதோ தங்கம் கிடைக்கிற மாதிரி தோண்டிகிட்டே இருப்பாங்க!’ என்று கேலி பேசும் அளவுக்கு வீரியமானது.
இதைபோல் வரலாற்றிலிருந்து தாங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கும் இலக்கியத்தில் இழிவு செய்யப்பட்டதற்கும் எதிரான இவர்களது நடவடிக்கைகள் இருபதாம் நூற்றாண்டில் வலிமை பெற்றதற்கான சான்றுகள் பல உள்ளன. தேவ ஆசிர்வாதம், குருசாமி சித்தர், தே. ஞானசேகரன் போன்றோர் வரலாற்றை மீட்டுருவாக்கும் முயற்சியில் ‘மள்ளர்’ என்ற புதுஅடையாளத்தை நிறுவுவதற்குக்காட்டிய முனைப்புகள் அதிகம். 
சங்க இலக்கியம் தொடங்கி தமிழில் கிடைக்கக் கூடிய பல்வேறு இலக்கிய ஆதாரங்களை ஒன்று திரட்டிய வேகமும், செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளைக் கொண்டு வந்து சேர்த்த நேர்த்தியும் இச்சமூகம் தன்மீது படிந்த கறையைத் துடைப்பதற்கான வேலைகள் தாம்.
தென் தமிழகத்தில் இச்சமூகத்தின் மீது தொடர்ச்சியாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம், பிற ஓடுக்கப்பட்ட சமூகங்களைப் போலல்லாது, 'ஆயுதம் ஏந்தி எதிர்தாக்குதல்’ நடத்திய சமூகமும் இது ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.  சாதிய ஒடுக்குமுறையால் ஏவப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வீனையாக தன்னியல்பாக நடைபெறும் மறுதாக்குதல்களின் தாத்பர்யம் இன்றளவும் பலருக்கு விளங்காத புதிர்தான்.   
அதிலும் மோசமாக, ஓடுக்கப்பட்டவர்கள் மீது ஏப்பொழுதெல்லாம் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றதோ அப்போதெல்லாம் அதனை ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள விரும்பும் நடுநிலையாளர்களும் நிவாரணப்பணிகள் செய்ய விரும்பும் தன்னார்வ நிறுவனங்களும் தான் இதில் அதிகமாகக் குழம்பிப்போனார்கள்.  ஒரு ஒடுக்கப்பட்டசமூகமே தனக்கான நியாயத்தை தன்னிச்சையாய் பெற்றுக்கொள்கின்றது என்ற உண்மையை அவர்கள் இந்திய சமூகச் சூழலின் அடிப்படையில் வைத்து விளங்கிக் கொள்ளமுடியாதவர்களாக இருந்தனர்.  
ஒடுக்கப்பட்ட சமூகம் தனக்கான தீர்வைத் தானே தேடி கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை.  சாதிய வன்முறைக்கு எதிரான போராட்டம் வலுவான கருத்தியல் அடித்தளங்களுடன், சாத்வீகமாய் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சித்தாந்தம் அவர்களை இப்படியே யோசிக்க வைத்தது.  ‘எனது நீதியை நானே வருவித்துக் கொள்கின்றேன்’ என்று ஒடுக்கப்பட்டவர்கள் புறப்பட்டு விட்டால் நடுநிலையாளர்களுக்கு தன்னார்வலர்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும் அபாயம் இதில் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். 
எனவே, தேவேந்திரர்களின் வன்முறைக்கு எதிரான போரரட்டம் பெரிய கவனிப்பு எதையும் பெறாமல் போயிற்று.  ஒரு வேளை, தேவேந்திரர்கள் ஓடுக்கப்பட்ட சமூகம் இல்லையோ என்ற சந்தேகம் கூட பலரிடமும் வலுத்தது.  'நீங்கள் நினைப்பது மாதிரியான ஓடுக்கப்பட்டவன் நான் இல்லை!' என்ற தேவேந்திரர்களின் குரல் இதன் அடிப்படையிலேயே மேலெழும்பத் தொடங்கியது.
இனி நாம் தேவேந்திர சமூகத்தினர் வீழ்த்தப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருக்கமுடியும் என்று தேட முயற்சிக்கலாம். வீழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் பல அர்த்தங்கள் பொதிந்தது. அச்சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் ‘ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தவர்கள்’ என்ற கருத்தையும் நாம் முன் வைக்கின்றோம்.  அதற்கான சான்றுகளும் நம்மிடம் இல்லை.
3
நெல்லோடு தோன்றிய கதை:
வரலாற்றிலிருந்து தந்திரமாய் புறந்தள்ளபட்ட பல்வேறு சமூகங்களுக்குக் கடைசி ஆயுதமாய் பயன்படுவது, அதனுடைய சொல் கதைகளும் புராணங்களுமே.  ’எழுத்தில் தானே புறக்கணிப்பாய், பேசுவதைக் கூட தடை செய்து விடமுடியுமா?’ என்ற கேள்வியோடு தனது மரபையும் கடந்த காலத்தையும் கதைகளாகப் பாதுகாத்து வைப்பது தான் வீழ்த்தப்பட்ட சமூகங்களின் ராஜதந்திரம்.
அந்த வகையில், தேவேந்திர சமூகமும் தனது வரலாற்றை இன்றளவும் புனைவுகளாகவும், அதனை நிஜமாக்கும் சடங்குகளகவும் பாதுகாத்து வைத்திருக்கிறது. அத்தகைய புனைவுகளில் தலையாய ஒன்று ‘நெல்லோடு தோன்றிய கதை’. இந்த உலகிற்கு நெல்லைக் கொண்டுவந்தது தாங்கள் தான் என்பதை விதவிதமானக் கதைகள் மூலமாகத் தங்களுக்குள் பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தக் கதைகள் தமிழகமெங்கும் வாழ்ந்து வரக்கூடிய தேவேந்திர சமூகத்தவர்களின் பொதுத்தன்மையாக மாறி, அவர்களது ஆழ்மனங்களில் பதிந்து போயிருக்கிறது.  இக்கதைகளின் பல்வேறு வடிவங்களை தே. ஞானசேகரன் தொகுத்துத் தந்துள்ளார்.
அக்கதைகளின் சாராம்சத்தில் தெய்வங்களுக்கு உணவு தயாரிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது.  சில கதைகளில் இந்த தெய்வங்கள், இந்திரனும் இந்திராணியும் என்று குறிப்பிடப்படுகின்றது. வேறு சில கதைகளில், தேவேந்திரனே உணவு சமைப்பவனாகக் கட்டப்படுகின்றான்.  அது நமக்கு உபயோகமற்ற தகவல்.  தெய்வங்களுக்கான உணவை யார் சமைத்தார்கள் என்பது நமக்காண தேவை அல்ல? நமக்கு தேவைப்படும் விஷயம் அடுத்து வருகின்றது.
அந்த உணவில், ஒரு முறை, தான் கண்டு பிடித்து வளர்த்த நெல்மணிகளை தேவேந்திரன் கலந்து சமைத்தான்.  வழக்கத்தை விடவும், அன்றைய உணவு தித்திப்பாகவும் சுவையாகவும் இருப்பதை தெய்வங்கள் கண்டு கொண்டன.
தங்களுடைய உணவை இவ்வளவு சிறப்பானதாக மாற்றியது யார்? என்று கேள்வி எழுப்புகின்றன.
தேவேந்திரன், ‘நான் தான்’ என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்கிறான்.  அவனே உழுது, அவனே பயிர் வைத்து, அவனே அறுத்துக் கொண்டு வந்த நெல்மணிகள்! 
தெய்வங்களுக்குத் தலைகால் புரியாத சந்தோசம். ‘உனக்கு என்ன வேண்டும், கேள்?’ என்றன.
‘உழுது பயிரிடுவதற்கு இன்னும் நிலம் வேண்டும்’.
’சரி, நீ போய், பூமியில் விவசாயாம் செய்து மக்களுக்கெல்லாம் இந்த நெல்லைச் சோறாக்கிக் கொடு’ என்று தெய்வங்கள் வரம் தந்தன.
தேவேந்திரன் நெல்லோடு பூமிக்கு வந்தான்!
இந்த புராணக் கதையிலிருந்து நாம் சில தகவல்களைப் பெற முடியும். நீர்வளம் நிறைந்த சமவெளிப்பகுதிகளை உழுது பயிரிடும் தொழில்நுட்ப மலர்ச்சியோடு தேவேந்திர சமூகத்திற்கு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக நெல் விளைவிக்கும் கலையில் தேவேந்திரர்கள் விற்பன்னர்களாக இருந்திருக்க வேண்டும்.  நெல்லோடு தொடர்புடையவர்கள் என்பதற்கு வேறு சில சான்றுகள் கூட நமக்குக் கிடைக்கின்றன. திருமணத்தின் போது இச்சமூக மணமகன்களின் தலையில். நெற்கதிரால் புனையப்பட்ட மணிமகுடம் சூட்டப்படுகிறது (மணி மகுடம் என்ற சொற்பிரயோகத்திலுள்ள மணி கூட நெல் மணியைத்தான் குறிக்க வேண்டும்: நாம் பரவலாய் நம்பும் ஒளிவிடும் கற்களை அல்ல என்றே தோன்றுகிறது).
ஒவ்வெரு ஆண்டும் தங்கப் பூண் போட்ட ‘பொன் ஏரால்’ நிலத்தை உழுது செய்யும் ‘நாளேரு’ என்ற சடங்கை இன்றும் இந்த சமூகம் செய்து வருகிறது.  ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்ற சொலவடை ரொம்பவும் பிரபலம்.  இப்படியே நெற்பயிரையும் அதற்கு ஆதாரமான உழவுத் தொழிலையும் இம்மக்களோடு இணைக்கிற சான்றுகள் ஏராளம் கிடைக்கின்றன.
மனித சமுக வரலாற்றில், நிலத்தைப் பண்படுத்தி அதிகமான விளைச்சலை உற்பத்தி செய்யும் காலகட்டத்தை நிலவுடமைக் காலகட்டம் என்று  வரையறுக்கிறோம்.  இத்தருணம், நிலம் போற்றுதலுக்குரியதாகிறது.  நீர் விலைமதிப்பில்லாததாக மாறுகிறது.  குடும்ப அளவில் இரத்த உறவுகள் இணைந்து பயிர்த்தொழிலில் ஈடுபடுவது கட்டாயமாகிறது.  அதாவது குடும்பம் என்ற சமுக நிறுவனம் நிலவுடமைச் சமூகத்திலேயே நிலைபெறத் தொடங்குகிறது.  (தேவேந்திர சமூகத்தில் பெரும்பாலருக்கு இன்னுமொரு செல்லப்பெயர் உண்டு – அது குடும்பன்மார். இந்தக் குடும்பனையும் ‘குடும்பம்’ என்ற சமூகக் காரணியின் தோற்றத்தையும் சேர்த்து யோசிக்க முடியும்.) நிலவுடமைச் சமூகமே ‘நாடு’ என்ற அரசியலமைப்பை தோற்றுவிக்கிறது.  இதையே நாம் தமிழில் மருதம் என்று அழைக்கிறோம் .
மருதம் என்றொரு நிலவுடைமை வாழ்க்கை முறை தோன்றும்பொழுது, அதற்கு முன்பு செல்வாக்கு பெற்றிருந்த முல்லை நில வாழ்கையின் அதிகாரங்கள் பழைய அதிகாரங்களாக மாறுகின்றன அல்லது அவ்வதிகாரங்கள் தங்களைப் புதிய சமுக அமைப்பிற்கு பழக்கிக் கொண்டு அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்கின்றன.  கால்நடைச் சமுக அமைப்பு வீழ்ந்து, நிலவுடமை அமைப்பு உச்சம் கொள்ளும் இடைவெளியில், கால்நடை சமுகங்கள் தங்களையும் விவசாயதொழிலோடு இணைத்துக் கொண்டதை மானிட வரலாறு தெரிவிக்கிறது.  
அதுநாள் வரையில் பால், மாமிசம், தோல், மயிர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த கால்நடைகள் நிலத்தை உழுகிற பணியிலும், உரமிடும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவது போன்ற மாற்றங்கள் நடைபெறத் தொடங்கின.  இதனால் காளைகளின் பயன்பாடு, இனப்பெருக்கம் அல்லது போக்குவரத்து என்ற எல்லையைத் தாண்டி நிலத்தைப் பண்படுத்துதல் என்ற புதிய தளத்தை வந்தடைந்தது.
விவசாய அறிவு என்பது, நில அறிவையும், நீர் மேலாண்மையையும், பயிர்கள் குறித்த தெளிவையும், கால்நடைகளின் பயன்பாட்டையும் இணைத்ததாக உருவாகத் தொடங்கியது இப்படித்தான்.  இதனால், அரசன் என்ற அரசியல் அதிகாரம் உருவாகி வலுப்பெறத் தொடங்கியதை நாம் அறிவோம்.  இந்திய நிலப்பரப்பில் அரசுகளின் தோற்றத்தையும், நிலவுடைமைச் சமுக அமைப்பின் உருவாக்கத்தையும் கி .மு ஐந்து அல்லது ஆறாவது நூற்றாண்டு நிகழ்வாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர்.  
ஆற்றங்கரை நிலங்களும், ஆற்று நீரைப் பயன்படுத்துவதிலும் உரிமைகள் கோரப்பட்டு பெரும் கலவரங்கள் வெடித்த காலகட்டமாக இந்த நூற்றாண்டுகள் சித்தரிக்கப்படுகின்றன.  தேவேந்திரர் சமுகம் தனது அதிகரப்பூர்வ வரலாற்றை இந்த இடத்திலிருந்தே தொடங்க விரும்புகிறது.  அதன் வெளிப்பாடுதான் நெல்லோடு தோன்றிய கதை.  இந்த செய்தியை கொஞ்ச நேரத்திற்கு அப்படியே விட்டு விட்டு வேறொரு சங்கதியை பேசுவோம்.  அதன் பின்பு மறுபடியும் நெல்லுக்கு வரலாம்.
4
நான் தீண்டத்தகாதவன் இல்லை:
தேவேந்திர சமூகம் வெளிப்படுத்தும் இன்னுமொரு காத்திரமான குரல், ’நான் தீண்டத்தகாதவன் இல்லை!’ அதாவது, தனக்கும் தீண்டாமைக்கும் தொடர்பில்லை; தன்மீது தீண்டாமையைப் பிரயோகிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை என்பது அதன் வலுவான வாதம்.  இதற்காக அது முன்வைக்கும் வரலாற்று சாட்சியம், ’மாட்டுக்கறியை உண்ணாமல் தவிர்க்கும் உணவுப் பழக்கம்’.  
தேவேந்திரர்கள் மாட்டுக்கறி உண்பது இல்லை. மாட்டுக்கறியை உண்பது அவர்களைப் பொறுத்த வரையில் விலக்கப்பட்ட ஒன்று. அதற்காக மாட்டைப் புனிதமாகக் கருதுகிறவர்கள் என்று பொருள் இல்லை.  மாடு அவர்களைப் பொறுத்தவரையில் விவசாயத்திற்கு உதவி செய்யும் சக வேலையாள்.  தனது பாரம்பரியத் தொழிலில் தன்னோடு கூட பணிபுரியும் இன்னொரு நபரை எவ்வாறு உண்பது என்ற அடிப்படையான நாகரிகம் தான் தேவேந்திரர்கள் கடைப்பிடிக்கும் மாட்டுக்கறி மீதான விலக்கு.
தாங்கள் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டோம் என்கிற சிறு எண்ணம் கூட இச்சமூகத்திடம் இல்லை என்பதற்கு அதனுடைய வாய்மொழி வரலாற்று ஆதாரங்களே போதுமானது. ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி (குறிப்பாக மாட்டுக்கறி உண்பதையும், தோலைப் பயன்படுத்துவதையும்) பிராமணர்கள் தீண்டத்தகாதவர்களை வரையறை செய்யும் கதைகளுக்கு எதிராக, அந்தந்த சமூகங்களில் எதிர்க் கதைகள் காணப்படுவதை நாம் அறிவோம்.  தமிழகத்து ஓடுக்கப்பட்ட சமூகங்களான ஆதிதிராவிடர்களிடமும், அருந்ததியினரிடமும் இத்தகையக் கதைகள் உண்டு.
ஆபத்திற்கு மாட்டுக்கறி உண்டதைக் காரணம் காட்டுகிறார்கள்; ஆசைப்பட்டு ஒரு துண்டு சாப்பிட்டதைக் காரணம் காட்டுகிறார்கள்; மாட்டுக்கறியைச் சாப்பிடச் சொல்லி காட்டாயப்படுத்தி விட்டு இப்போது குற்றம் சொல்கிறார்கள்; செத்த மாட்டை தூக்கிக் கையில் தந்துவிட்டு இன்றைக்கு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்ற தொனிகள் நிரம்பிய எதிர்க்கதைகள் மேற்கூறிய சமூகங்களிடம் உண்டு.  மாட்டுக்கறியை சாப்பிட்டதால் மட்டும் ஒரு சமூகம் தீண்டத்தகாததாய் மாறிவிடுமா, தோலைப் பயன்படுத்துவதால் மட்டுமே ஒரு சமூகம் தீண்டப்படாமல் போகுமா என்பவையெல்லாம் அடிப்படையான கேள்விகள்.
ஆனால், தேவேந்திரர்களைப் பொறுத்தவரையில் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டோம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லை என்பது தான் நம்முடைய வாதம்.  எனவே, தீண்டாமைக்கு எதிரான கதைகளைப் புனைய வேண்டிய நிர்பந்தம் எதுவும் அதற்கு இருக்கவில்லை.
அப்படியானால், தேவேந்திரர்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கு என்ன காரணம்? வெகுவாக நம்பப்படுவது போல் மாட்டுக்கறியோ, தோலோ இல்லையென்றால் வேறு என்னவாக இருக்க முடியும்?  இந்த இடத்தில் அம்பேத்கரின் கட்டுரையொன்று நமக்கு சில வெளிச்சங்களைக் காட்டமுடியும் என்று நினைக்கிறேன்.  
தீண்டாமையின் தோற்றம் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையொன்று தேவேந்திரர்களைப் புரிந்து கொள்வதில் நமக்குத் துணை செய்யமுடியும். அந்தக் கட்டுரையில் அம்பேத்கர், தீண்டாமைக்கான காரணங்களை தேடத் தொடங்குகிறார்.  என்னென்ன காரணங்களுக்காக சில சமுகங்கள் தீண்டப்படாதவை என்று அடையாளப்படுத்தப்படுகின்றன என்று பட்டியலிடத் தொடங்குகிறார்.  அந்தப் பட்டியல் நீளமானது .அதில் பத்து காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
1.பிராமணர்களின் மேலாண்மையை மறுத்தல் .
2.பிராமணர்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதாவது இந்து குருவிடமிருந்தோ மந்திர உபதேசம் பெறாதிருத்தல்.
3.வேதங்கள் மறுத்தல் .
4.இந்துக் கடவுள்களை வணங்காதிருத்தல் .
5.’நல்ல பிராமணர்களைக்’ குடும்ப புரோகிதர்களாகக் கொள்ளாதிருத்தல் .
6.பிராமணப் புரோகிதர்களை ஏற்றுக் கொள்ளாதிருத்தல் .
7.சைவ, வைணவ இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதது .
8.தொடுதலின் மூலமோ அல்லது அருகாமையில் நெருங்கி வருவது மூலமோ தீட்டை ஏற்படுத்துதல்.
9.இறந்தவர்களைப் புதைத்தல்.
10.மாட்டிறைச்சி உண்பதும், பசுக்களுக்கு சடங்குகள் ஏதும் செய்யாமலிருத்தலும்.
அம்பேத்கர் தனது கட்டுரையில் வரிசைப்படுத்தும் காரணங்கள் எவ்வளவு தூரம் தேவேந்திர சமுகத்திற்கு பொருந்தி வருகிறது என்று பார்க்கலாம்.
1. தேவேந்திரர்கள் என்றைக்குமே பிராமண மேலாண்மையை ஏற்றுக்கொண்டதில்லை.
2. பிராமணர்களிடமிருந்தோ, பிற இந்து குருக்களிடமிருந்தோ அவர்கள் மந்திர உபதேசம் பெறுவது இல்லை.
3. வேதங்களை அவர்கள் கண்டுகொண்டதே இல்லை .
4. இந்துக் கடவுள்களை வணங்குவது இல்லை.  நாட்டுப்புற தெய்வங்களையே கொண்டாடுகிறார்கள்.
5. பிராமணர்கள், அவர்களின் குடும்ப புரோகிதர்கள் அல்ல .
6. பிராமணப் புரோகிதர்களை அவர்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. தங்களுள் ஒருவரான வாதிரியார்களையே அவர்கள் இதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.
7. சைவ,வைணவ இந்துக் கோவில்களின் உள்ளே இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
8. தொடுதலின் மூலமோ அருகாமையில் நெருங்கி வருவதன் மூலமோ இவர்களால் தீட்டு ஏற்படுவதில்லை.
9. தேவேந்திரர்கள் இறந்தவர்களைப் புதைக்கிறார்கள்.
10. மாட்டு இறைச்சி உண்பது இல்லை; பசுக்களுக்கு சடங்குகளும் செய்வது இல்லை.
இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் .தேவேந்திரர்கள் செய்து வரும் மிகபெரும் குற்றம், பிராமணர்களை மதிக்காதிருத்தல். இந்தப் பத்து காரணங்களில் ஆறு காரணங்கள் பிராமணர்களோடு தொடர்புடையன.  அடிப்படையில், தேவேயந்திரர்களின் பண்பாட்டோடு பிராமண எதிர்ப்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தான் இந்தக் காரணங்கள் சுட்டுகின்றன. அப்படியானால் பிராமணர்களை ஏற்றுக் கொள்ளாத, மதிக்காத குணத்தினால் தான் தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டர்களா?பொய்யாகத் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டர்களா? அப்படித்தான் என்றால், அதற்கான காரணங்கள் என்ன?  அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் என்ன பகை?  வரலாற்றில் என்ன நடந்தது?
‘வரலாற்றில் என்ன நடந்தது’ என்ற கேள்வியை அம்பேத்கரும் கேட்கிறார்.  தீண்டாமைக்கான பத்து காரணங்களை அலசும் அவர், அவற்றின் மையமாக இரண்டு காரணங்களை தேர்வு செய்கிறார். ஒன்று, பிராமண எதிர்ப்பு, மற்றொன்று, மாட்டுக்கறி உண்பது. இந்த இரண்டு காரணங்களால் தான் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்ற பிரிவு உருவாக்கப்படுகிறது என்று முடிவு செய்யும் அம்பேத்கர் அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் பேசத்தொடங்குகிறார்.
இந்திய தேசத்தின் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பூர்வகுடிகலாக இருப்பதைக் கண்டுகொண்ட அம்பேத்கர், பிராமணர்கள் பிறப்பினடிபடியிலான சாதி பேதத்தை வலியுறுத்தும்போது இப்பூர்வகுடிகள் அனைவரும் அதனை எதிர்த்திருக்கிறார்கள் என்பதற்கான பல்வேறு சான்றுகளைக் காட்டுகிறார்.  சாதி எதிர்ப்பு என்ற பிராமண எதிர்ப்பில் இம்மக்களனைவரும் பெளத்தசமயத்தின் பின்னல் திரண்டதற்கும் அவரால் சான்றுகளைத் திரட்ட முடிகிறது.
பௌத்தம் என்ற வலுவான ஆயுதத்தின் மூலம் பல நூற்றாண்டுகளாக பிராமணர்களின் பிறப்புக் கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம் நடந்து வந்ததை சுட்டும் அம்பேத்கர், ஒரு கட்டத்தில் பௌத்தம் வீழ்ச்சியை சந்தித்தபோது அதனோடு கூட நின்று போராடிகொண்டிருந்த மக்களும் வீழ்ந்தார்கள் என்று எழுதுகிறார்.  பௌத்த சார்பும், பிராமண எதிர்ப்பும், சாதியொழிப்பு மீதான தீவிரமும், பிறப்புக் கோட்பாட்டை எதிர்த்ததுமே இம்மக்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றியிருக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்து சேருகிறார். ஆனாலும் ,இந்த விளக்கத்தின் மீது அம்பேத்கருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.
'பிராமண எதிர்ப்பு' என்ற காரணத்திற்கு இந்திய முழுவதிலுமிருந்து அவரால் போதுமான சான்றுகளைத் திரட்ட முடியவில்லை.  கிடைக்கின்ற ஒன்றிரண்டு தரவுகளும் தென்னிந்தியாவைச் சார்ந்ததாகவே, குறிப்பாக தமிழகத்து ஆதிதிராவிட சமுகம் சார்ந்ததாகவே இருந்ததால், இந்தக் காரணத்தைத் தள்ளிவைத்துவிட்டு அடுத்த காரணமான மாட்டிறைச்சி உண்பதை மையப்படுத்தி பேசதொடங்குகிறார்.
மாட்டிறைச்சி உண்பதற்கு இந்தியா முழுவதுமிருந்து அவருக்குச் சான்றுகள் கிடைத்தன.  தீண்டத்தகாதவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் மாட்டுக்கறி உண்பவர்களாகவும், தோலைப் பயன்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.  எனவே, தீண்டமைக்கான முக்கியக் காரணம் மாட்டிறைச்சியே என்று அம்பேத்கர் முடிவு செய்தார் .
தமிழகத்தின் தேவேந்திர சமுகம் குறித்த தரவுகள் அம்பேத்கருக்கு கிடைத்திருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.  விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு, பிராமண எதிர்ப்பைக் கடை பிடித்து, மாட்டுக்கறியை விலக்கி வைத்து, ஆனால் தீண்டத்தகாவர்களாகவும் அடையாளப்படுத்தப்படும் தேவேந்திரர்கள் குறித்த இனவரையியல் தரவுகள் மட்டும் அம்பேத்கருக்குக் கிடைத்திருந்தால்...?
பரவாயில்லை! ஒன்றும் மோசம் போய்விடவில்லை.  அந்த வேலையை நாம் இப்போது செய்யலாம்.
5
நெல்லும் சமூகமும்:
ஆதிச்சநல்லூர் தொட்டு தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் தோண்டி எடுக்கப்பட்ட தாழிகளுக்கு 3500லிருந்து 4000 வருட வயதிருக்கும் என்று சொல்கிறார்கள். அந்த தாழிகளைச் செய்வதற்காக மண்ணோடு வைக்கோல் செண்டை கலந்திருக்கிறார்கள். மேலும், தாழிகளுக்குள் நெல் உமிகள் கண்டெடுக்கபட்டுள்ளன. ஈமச்சடங்கில் நெல்மணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் 4000 வருடம் பழமையானது.
இதன்படி கி.மு 2000 தொட்டே நெல் பயன்படுத்தப்பட்டு வந்தாகக் கருத முடியும்.  ஆனாலும், மிகப் பரந்த அளவிலான மருத நாகரிகம் கி.மு 5 அல்லது 6 வது நூற்றாண்டில் ஏற்பட்டதாக வரலாறு சொல்கின்றது.  இந்தியா முழுமையும் புதியதொரு சமுதாய மற்றம் நிகழ்ந்த காலகட்டம் அது. விவசாயம் உச்சபட்ச நிலையை அடைவதற்கான பயணத்தை அப்பொழுது தான் ஆரம்பிக்கின்றது.  பல்வேறு பழங்குடியினங்கள் குறிஞ்சி, முல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேறி சமவெளிகளை நோக்கி நகரத் தொடங்கியிருந்தன. நிலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க வேண்டிய பொருளாக மாறிக்கொண்டிருந்தது. அதிலும் வருடம் முழுவதும் நீர்ப்பாசன வசதிகள் கொண்ட ஆற்றங்கரையோர நிலங்கள் பொக்கிஷங்களைப் போல பார்க்கப்பட்டன.  வளமான நிலம், நீர்ப்பாசன வசதிகள், பயர்களைப்பற்றி அறிவு என்று புதியதொரு சமூகம் அங்கே உருவாகிக் கொண்டிருந்தது.
நீலவுடமைச் சமூகத்தின் உருவாக்கத்தில் நெல்லின் பங்கு கணிசமானது என்றே ஆய்வாளர்கள் கருதிகின்றனர். நெல் நினைத்துப் பார்க்கமுடியாத மாற்றங்களையெல்லாம் சமூகத்தில் ஏற்படுத்தியது. ஒரு பேச்சுக்கு நெற்பயிரின் அறிமுகத்தால் மக்கள்தொகை பெருகியது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மையில் அப்படி தான் நடந்து.
அரிசியுணவு இரண்டு விதங்களில் இதற்குக் காரணமாக இருந்தது.  முதலாவது, போதுமான ஊட்டசத்து இல்லாமல், தாய்ப்பாலின்றி இறந்துபோகும் குழந்தைகளுக்கு அரிசியுணவு மிகச்சரியான மாற்றாக அமைந்து. ’அன்னப்பால்’ அல்லது ‘அன்னம்’ என்று அரிசியுணவு அழைக்கப்படுவதன் காரணம் இது தான்.  இதனால் குழந்தை மரணங்கள் பெருமளவில் குறைந்தன. இரண்டாவதாக தாய்ப்பாலுக்கு மாற்றாக அன்னப்பால் பயன்படுத்தப்பட்டதால் குழந்தைகள், வெகு விரைவிலேயே பால் குடியை நிறுத்திவிடத் தொடங்கினார்கள். 
இதனால் தாய்மார்கள் அடுத்த குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு விரைவாகவே தயாராக முடிந்தது.  வரிசையாக அவர்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளமுடிந்தது. குழந்தை மரணங்கள் தவிர்க்கப்பட்டன, அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது போன்ற காரணங்களால் மக்கள் தொகை கணிசமாக பெருகத் தொடங்கியது. இது அரிசியுணவால் தான் சாத்தியமாயிற்று.
மக்கள் தொகை பெருகியக் காரணத்தால், புதியக் குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின.  ஒருபக்கம் அபரிதமான உணவு உற்பத்தியும் நடைபெற்றதால் பெருநகரங்கள் தோன்றலாயின.  பெருநகரங்களின் உதவியால், கைவினைக் கலைகளும், வணிக நடவடிக்கைகளும் உச்சத்தை அடைந்தன. நெற்பயிரை மையமாகக் கொண்ட விவசாயம், ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் வேறு மாதிரியாய் மாற்றியமைத்துக் கொண்டிருந்தது.
தேவேந்திர சமூகத்தவர்கள் காப்பற்றி வரும் வரலாற்று ஞாபகங்களின்படி, தமிழகத்தில் நெல் விவசாயத்தில் கரைகண்டவர்களய் அவர்களே திகழ்ந்தனர்.  மண்ணின் தன்மைகளைக் கொண்டு அவற்றை விதவிதமாய் அவர்களால் வகைப்படுத்த முடிந்தது; நீரைத் தடுத்து, தேக்கிவைத்து பயன்படுத்திக் கொள்ளும் புதிய உத்திகளை அவர்கள் கண்டடையத் தொடங்கினார்கள். குளம், கம்மாய், ஏரி, கிணறு, கமலை, மடை, கலிங்கல், கால்வாய், மறுகால், ஏந்தல் போன்ற தொழில் நுட்பங்கள் உருப்பெறத் தொடங்கின.  நெல்லில் புதிய புதிய வகைகள் கண்டறியப்பட்டு அவற்றைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள் வகுக்கபட்டன. இது போன்ற தொழில் நுட்பங்களில் தேவேந்திரர்களின் ஈடுபாடும், திறமையும் எராளமான பள்ளு நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
6
மருத மலர்ச்சியும் முதற்பகையும்:
இந்தியா முழுமையும் நிலவிய இதுபோன்றவொரு விவசாய மலர்ச்சியினால் பெரிதும் திகைத்துப் போனது கால்நடை வளர்ப்பு சமூகங்கள் மட்டுமே.  பரந்த புல்வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த சமூகங்கள் தங்களது மேய்ச்சல் நிலங்கள் கழனிகளாக மாறிவிட்டபடியால், அடிமடியில் கைவைத்தது போல பதறிப் போயின. அது நாள் வரையில் ’மாடு’ என்றால் மட்டுமே ‘செல்வம்’ என்று நினைத்து வந்த சமூகம் நிலத்தை பொக்கிஷமாய் கருதத் தொடங்கியதை அவர்களால் உடனடியாய் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.  நிலவுடமை சமூகத்தின் புதிய நடவடிக்கைகளுக்கு பழகிக்கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள அவர்கள் பெருமளவில் சங்கடப்பட்டார்கள்.
நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெருமளவில் பாதிக்க்ப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றால் அது மிகையில்லை. கால்நடைகளை மேய்ப்பதையே தங்களது குலத்தொழிலாய்க் கொண்டிருந்த பிராமணர்கள், புதிய சமூக அமைப்பில் தங்களது இருப்பு கேள்விகுறியாகிப் போனதைக் கண்டு கலங்கித்தான் போனார்கள்.  மேலும், சடங்குகளின் போதும், ‘யாகம்’ என்ற பெயரிலும் ஆயிரக்கான கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை, தீயிட்டுப் பொசுக்கும் வழக்கத்தையும், மாமிசத்தை உண்ணும் வழக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர்.
விவசாயம் முதன்மைத் தொழிலாய் மாறிப்போன சூழலில் அவர்களால் தொடர்ந்து இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபட முடியாமல் போனது.  பால், மாமிசம், தோல் என்ற நேரடி பயன்பாட்டையும் தாண்டி, மாடுகள் ‘உழைப்பு’ என்ற காரணி மூலமும் அளக்கப்படத் தொடங்கின. இதனால், ’மாடு’ குறித்த புதியதொரு பிம்பம் உருவாகத் தொடங்கியது.  மாடுகளின் சாணம் மிகச் சிறந்த உரமாகக் கருதப்பட்டது; அவை மனிதர்களோடு மனிதர்களாய் விவசாயத் தொழிலில் ஈடுபடும் சகஉழைப்பாளியாக பார்க்கப்படலாயின. இதனால், பிராமணர்கள் மாடுகளைக் கொன்று செய்யும் யாகங்களும், மாட்டு இறைச்சியை உண்பதும் கண்டிக்கத்தக்க செயல்களாக மாறின.
தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்குமான முதற்பகை இப்படியே தோன்றியது.  தங்களது பழைய சமூக மரியாதையை (கால்நடை வளர்ப்பு சமூக மரியாதையை) நிலைகுலையச் செய்தவர்கள் என்ற கோபம் பிராமணர்கள் மனதில் பெரும் துவேசமாகப் பரவியது. இதனால், வேளாண் தொழில் கேவலமானது என்றும், அதைச் செய்பவர்கள் இழிவானவர்கள் என்றும் பிராமணர்கள் பேசத்தலைப்பட்டனர்.  மேலும், தங்கள் பாரம்பரிய உணவான மாட்டு இறைச்சிக்குக் கூட தடையேற்படுகிறது என்பதை பிராமணர்களால் அவ்வளவு எளிதாக எடுத்துகொள்ள முடியவில்லை.
கால்நடைச்சமூக அழிவு, யாகங்களை நிகழ்த்த முடியாத சூழல், மாட்டிறைச்சியை உண்பதால் ஏற்பட்ட இழிவு போன்ற காரணங்களினால் பிராமணர்கள் தங்களது இருப்பே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை வெகுவாக உணர்ந்திருந்திருந்தனர்.  இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக அவர்கள் அடையாளப்படுத்தியது, வேளாண்குடி மக்களை, அதாவது தேவேந்திரர்களை!இதுவே, தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் ஏற்பட்ட முதல் மோதல் என்று வரலாறு சொல்கின்றது.
7
மாடுகளைக் காப்பாற்றுதல்
நன்செய் விவசாயத்தைத் தங்களது பண்பாட்டு அடையாளமாகவே மாற்றிக் கொண்ட தேவேந்திரர்கள் நிலவுடமைச் சமூக அமைப்பின் முதுகெலும்பாக நின்று பெரும் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டி வந்தது.  கால்நடைச் சமூகத்து பழமைவாதிகளான பிராமணர்களை எதிர்த்த அவர்களது போரரட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தங்களது விவசாய வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் கால்நடைகளை யாகம் என்ற பெயரில் வீணே கொன்று அழிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பெரும் சமூகப் போராட்டத்தையே அவர்கள் நிகழ்த்த வேண்டி வந்தது.
தேவேந்திரர்களின், பிராமணர்களுக்கு எதிரான போரரட்டம், கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பிற்குமான மோதலாகவே கவனிக்கப்பட வேண்டும்.  கால்நடை வளர்ப்பு சமூகப் பிரதிநிதிகளாக பிராமணர்கள் ஒருபக்கமும், நிலவுடமைச் சமூக அமைப்புப் பிரதிநிதிகளாக தேவேந்திரர்கள் மறுபக்கமும் நின்று போராடினார்கள். அதாவது, பழமைக்கும் புதுமைக்கும் இடையே பொருத்த மோதல் உண்டானது. 
தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்று கொண்டிருந்தனர். நெல்லின் அறிமுகத்தாலும், விவசாயம் என்ற புதியதொழில் முறையின் வளர்ச்சியாலும் இத்தகைய மோதல் உருவான அதே காலகட்டத்தில் தான் பௌத்தம் தனது வேர்களை அகலப்பரப்பி இந்த மண்ணில் தளைக்கத் தொடங்கியது.  கருத்தியல் ரீதியாய் பிராமணர்களோடு சரிக்கு சரி போராடி வந்த பௌத்தம், நிலவுடமைச்சமூக அமைப்பின் மலர்ச்சியால் பிராமணர்களின் கொள்கைகளும், மூடநம்பிக்கைகளும் வலுவிழந்து வருவதைக் கண்டதும், விவசாயக் குடிகளையெல்லாம் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கியது.
ஆதி பௌத்தத்தின் சமூகப் பின்னணியை விளக்கமுனையும் பல்வேறு ஆய்வாளர்களும் இந்த கருத்தை தங்களது நூற்களில் பதிவு செய்துள்ளனர். ‘அரசு’ என்ற நிறுவனத்தின் தோற்றம், வேளாண்மை என்ற தொழிலின் வளர்ச்சி, நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதிலான மோதல்கள், நிலத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்படும் போர்கள் என்று நிலவுடமை சமூகம் சந்தித்த பல்வேறு இன்னல்களையும், பௌத்த நூற்கள் ஆழமாக விவாதிக்கின்றன.  வயிற்றிற்கு சோறிடுதல் எவ்வளவு உன்னதமான செயல் என்று வியக்காத பௌத்த நூற்களே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதானால், வளர்ந்துவரும் புதிய நிலவுடமைச் சமூகத்தின் சமயமாகவே பௌத்தம் தன்னை வளர்த்தெடுத்து வந்துள்ளது.
பிராமணர்களின் பிறவிக் கோட்பாட்டையும் கண்மூடித்தனமான சடங்காசாரங்களையும், வீணான உயிர்ப்பலியையும் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்திவந்த பௌத்தம், உருவாகிவரும் புதிய நிலவுடமை சமூகத்தின் குரலாகத் தன்னை மற்றிக் கொண்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. மூடநம்பிக்கைகளால் செய்யப்பட்ட பிராமணியத்தை வெற்றிகொள்வதற்கு, உழைப்பையும் அதன்மூலமான அபரிமிதமான உணவு உற்பத்தியையும் மேன்மைப்படுத்துவதற்கு தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகவே பௌத்தம் இந்தத் தருணத்தைக் கணித்தது.  
தேவேந்திரர்களுக்கும் பௌத்தத்திற்குமான உறவு வலுவடையத் தொடங்கியதும் இந்த காலகட்டத்தில் தான். ஏறக்குறைய தேவேந்திரர்கள், ‘தேவேந்திரர்களாக’ அடையாளப்படுத்தப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். ’குடும்பன்மார்’ என்ற பாரம்பரிய அடையாளத்தோடு பயிரிடும் பழங்குடிகளாக வாழ்த்து வந்த இந்த சமூகம், ’நெல்’ என்ற பயிர்வகையைக் கண்டுபிடித்து, அதனைப் பரந்த அளவில் விளைவிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், தன்னியல்பாக பௌத்தத்தோடு நெருங்கிவரத் தொடங்கியது.  பிராமணர்களின் மூடப்பழக்கவழக்கங்களை எதிர்க்கும் பௌத்தம் தனக்கு சரியான ஆயுதமாக இருக்க முடியும் என்று நம்பியது.  அதனால், தனது பண்பாட்டு அடையாளத்தையே கூட பௌத்த நெறிமுறைகளின்படி கட்டமைக்கத் தொடங்கியது.
8
தேவேந்திரர்களான குடும்பன்மார்:
கௌதம புத்தருக்கான ஆயிரக்கணக்கான பெயர்களில் ‘இந்திரன்’ என்பதும் ஒன்று. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட முனிவர் என்பதால் புத்தர், ’ஐந்திரன்’ என்று அழைக்கப்பட்டார். ’ஐ’, ’இ’யாக மருவியதால் ஐந்திரன், இந்திரனாக அழைக்கப்பட்டார்.  தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார் தொல்காப்பியரை ‘ஐந்திரன் அறிந்தவன்’ என்று பாராட்டுவதை, தொல்காப்பியர் பௌத்த நெறிகளைக் கற்றவர் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.  ’இந்திரன்’, ‘இந்திரன்’ என்றழைக்கப்பட்ட புத்தர் தெய்வமாக மாற்றப்பட்டபொழுது அவரோடு தொடர்புடைய பல விஷயங்களும் பலவிதமாக மாற்றப்பட்டன.
புத்தரின் பிறப்பை அறிவிக்கும் கதையில் இடம் பெறும் ஐராவதம் என்ற வெள்ளை யானை இந்திரனின் வாகனமாகக் கற்பனை செய்யப்பட்டது. விவசாயத்தை மையப்படுத்திய நிலவுடைமைச் சமூகத்தின் சமயமாக பௌத்தம் கருதப்பட்டதால், புத்தர், அதாவது இந்திரன், மழைக்கான தெய்வமாகக் கருதப்பட்டார். நீர் தானே விவசாயத்திற்கான அடிப்படை! ஆற்றில் புதுப்புனல் புரண்டோடும் காலத்தில் எடுக்கப்படும் கொண்டாட்டம் இந்திரவிழா என்று அழைக்கப்பட்டது.
யானையைப் போலவே வெண்ணிறமும் பௌத்தத்தின் சின்னமாகக் கருதப்பட்டது.  அதனால் இந்திரவிழாவின்போது யானையின்மீது வெண்ணிற உடைஉடுத்தி, வெண்சாமரம் வீசி, வெண்குடை பிடித்து இந்திரனை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வருவது இன்றளவும் நடைபெறுகின்றது. ராஜபாளையம் நகரிலுள்ள தேவேந்திரகள் 'நீர்காத்த அய்யனார்’ என்றழைக்கப்படும் புத்தருக்கு இந்தச் சடங்கை இன்றைக்கும் செய்கின்றார்கள்.
திருநெல்வேலி நகரிலுள்ள தேவேந்திரர்கள் பேராற்று அம்மானுக்கு சிறிது காலம் முன்பு வரை இந்திரவிழா எடுத்துவந்தார்கள்.  சிலப்பதிகாரத்தில் சித்திரிக்கப்படும் இந்திரவிழாவும் இதைப்போன்றவொரு பௌத்தவிழாவே! பௌத்த சமயத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட ‘குடும்பர்கள்’ தங்களை நெல்லோடு இந்த உலகிற்கு அனுப்பியது இந்திரனாகிய புத்தரே என்ற நோக்கத்தில் தங்களது பெயரையும் ’தேவஇந்திரர்கள்’ என்று மாற்றிக் கொண்டனர்.  இந்தப் புதிய அடையாளத்துடனேயே பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் துவங்கினர்.
9
பிராமணர்களின் தடம்புரளல்:
பிராமணர்கள் அவ்வளவொன்றும் சாமானிய எதிரிகள் இல்லை.  பௌத்தம் தன்னை வேளாண்குடிகளின் சமயமாக அங்கீகரித்து மேலெழுந்து வருவதைக் கண்ட பிராமணர்கள், தங்களை விட்டு அதிகாரம் நழுவிச் செல்வதை சரியாகவே கணித்தார்கள். பெரும் எண்ணிக்கையில் மாடுகளைப் பலியிடுவதும். மாட்டிறைச்சி உண்பதுமே தங்களைப் பொதுவாழ்வில் கலக்கவிடாமல் செய்கின்றது என்பதை உணர்ந்து கொண்ட பிராமணர்கள் வழக்கம் போல் தடாலடியாய் தடம்புரளத் தொடங்கினார்கள்.
அதாவது, யாகங்களுக்கு மாடுகளை இரையாக்குவதை தவிர்த்து நெய்யைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மாடுகள் இல்லையென்றால் பரவாயில்லை, அக்கனி பகவான் அவற்றிக்குப் பதிலாக நெய்யை சாப்பிட்டுக் கொள்வார் என்று சமாதானம் சொன்னார்கள். மாட்டுக்கறியை உண்ணும் விவகாரத்தில் தம் மீதான களங்கத்தைப் போக்க அவர்கள் புலால் மறுப்பு வரைக்கும் செல்லவேண்டி வந்தது.  யாகங்களில் நெய்யைப் பயன்படுத்துவது, புலால் மறுப்பது என்ற இரண்டு நடவடிக்கைகள் மூலமாகவே அவர்கள் தாங்கள் மீது படிந்த கறையைத் துடைக்க முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, நிலவுடைமைச் சமூக அமைப்பை கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலிருந்து விலகி அதன் லாபங்களை எவ்வாறு நோகாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்கலானார்கள்.
தங்களது பாரம்பரியத் தொழிலான கால்நடைப் பராமரிப்பை கைவிடுவது அவர்களுக்கு ஒன்றும் கடினமாயில்லை. மாறிவரும் சமூக அமைப்பிற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள அவர்களுக்கு தெரிந்திருந்து.  அதனால் மேய்ச்சல் தொழிலை கைவிட்டதில் அவர்கள் எந்த வேதனையையும் உணர்ந்திருக்கவில்லை.  யாகங்களில் மாடுகளைத் தவிர்த்தது கூட அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை.  புலால் மறுப்பு கூட அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை. நாளடைவில் பழகிக் கொண்டார்கள். முடியாத தருணங்களில் ரகசியமாய் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
ஆனால்,அவர்களால் மறக்க முடியாத, எப்பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்த விஷயம் ஒன்று உண்டு என்றால், அது, தேவேந்திரர்கள் மட்டுமே.  தங்களது பாரம்பரியத்தைக் கேள்விகேட்ட, எட்டி உதைத்த சமூகம் என்ற அளவில் தேவேந்திரர்கள் மீதான அவர்களது கோபம் மட்டும் குறையாமல் பெருகிக் கொண்டேயிருந்தது.
தேவேந்திரர்கள் இந்தப் போராட்டத்தையும் அதன் விளைவுகளையும் வேறு மாதிரியாய் விளங்கிக் கொண்டார்கள்.  தங்களது பண்பாட்டிலிருந்து கிடைத்த நெற்பயிரால் சமூகம் உருமாறுவது அவர்களுக்குப் பெருமைதான்.  இறப்பு விகிதம் குறைந்து, பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதில் அவர்களுக்குப் பங்குண்டு என்று பெருமிதமே கொண்டனர்.  உலகிற்கே சோறிடும் தொழிலைச் செய்கின்றோம் என்ற கர்வம் கூட கொண்டார்கள்.  பௌத்த சமயத்தோடு ஏற்பட்ட புதிய உறவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். அது போதித்த சமத்துவம், சமதர்மம் போன்ற விஷயங்கள் அவர்களுக்கு உவப்பாய் இருந்தன.  பிராமணர்கள் ஆரம்பத்தில் காட்டிய எதிர்ப்பைப் பின்பு கைவிட்டது குறித்து திருப்தியடைந்தர்கள்.
தேவேந்திரர்களை மையப்படுத்தி புதியதொரு சமூக அமைப்பு உருவாகி நிலைபெறத் தொடங்கியது.  கழனி வேலைகளை தேவேந்திரர்கள் தங்கள் தலையிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள். ’குடும்பம்’ என்ற வலுவான பண்பாட்டு அமைப்பு இதற்கு அவர்களுக்கு உதவியது.  விவசாயக் கருவிகளை செய்வதற்கான ஆசாரி, கொல்லர் போன்றோர் முக்கிய பங்கினை வகிக்கலானார்கள்.  நிலத்தைப் பண்படுத்தத் தேவையான உரங்களை இடையர்கள் கவனித்துக் கொண்டனர்.  தோல் போருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் கைவினைக் கலைஞர்கள் உருவாயினர். விளைநிலங்களையும், நீர் நிலைகளையும், காவல் காப்பதற்கான வேலையாட்கள் தோன்றினார்கள். விளைபொருட்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள் வந்தனர். இதனால் வணிகப் பாதைகள் தோன்றின. பத்துப்பதினெட்டு கிராமங்களுக்கு மையமாய் மண்டிகளும், சந்தைகளும் கொண்ட பெருங்கிராமங்கள் தோன்றின.
மழை வரும் நாட்களைக் கணித்துச் சொல்லும் வள்ளுவர்கள் வந்து போனார்கள்.  இத்தகைய விவசாயக் கிராமங்களின் கல்வித் தேவைகளையும் மருத்துவத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள குன்றுகளில் கற்படுக்கைகளைத் தயார் செய்து பௌத்தத் துறவிகள் வந்து தங்கலானார்கள். குழந்தைகளுக்கான கல்வி இங்கு கற்பிக்கப்பட்டது; மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. இதனால் இக்குன்றுகளுக்குப் பொதுவாகப் ‘பள்ளி’ என்ற பெயர் வழங்கப்பட்டது.  இப்படியே தமிழகமெங்கும் வேளாண்மையை மையப்படுத்திய ‘பள்ளியம்பதிகள்’ எராளம் தோன்றின. ’பதி’என்றால் குன்று, பள்ளிகள் நடைபெறும் குன்றுகளுக்குப் பெயர் ‘பள்ளியம்பதிகள்!’
இத்தகைய பள்ளியம்பதிகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சிறுசமூகங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தன.  பத்துப்பதினைந்து கிராமங்களை இணைதே ஒரு பள்ளியம்பதி உருவகப்பட்டிருக்கிறது. இணைக்கும் கண்ணியாக பௌத்த பள்ளிகள் இருந்திருக்கின்றன. பள்ளியம்பதிகளுக்கு அரசியல் அதிகாரம் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே இது அரசியல் அமைப்பாக அல்லாமல் சமூகத்தின் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் சமூக அமைப்பு என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.
பள்ளியம்பதிகளில் தேவேந்திர சமூகம் பொழுதெல்லாம் வேளாண்மை செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்து. ’நெல்’ இச்சமூகத்தின் சின்னமாகவே மாறிப் போனது. வாழ்க்கை வட்டச் சடங்குகளில் நெல் முக்கியமானக் குறியீடாக மாறியது. வாய்மொழி வழக்காறுகளில் நிலமும், உழவும், பயிர் செய்தலுமே திரும்பத் திரும்ப இடம் பெற்றன. தேவேந்திரர்களுக்குள் திறமையான பயிர் வைப்பவர்கள் தோன்றினார்கள்;  அவர்களுக்குள்ளேயே நீர் மேலாண்மை செய்யும் ‘நீர்ப்பாய்ச்சிகள்’ உருவானார்கள்; பெரிய குளங்களை வெட்டி, பாதுகாத்து பராமரிக்கும் ‘கரையாளர்கள்’ தோன்றினர்; போர் வந்த காலங்களில் உழவை மறந்து விட்டு ஆயுதங்களுடன் செல்லும் போது ‘காலாடிகள்’ தலைமை தாங்கினார்கள்.
10
கோவில்களின் தோற்றம் 
இது ஒரு பக்கம் நடந்து என்றால், இன்னொரு பக்கம் வேறொரு சதிவலையை பிரமாணர்கள் பின்னிக் கொண்டிருந்தனர். வேகமாக உருவாகி வரும் நிலவுடைமைச் சமூகத்தில் தங்களுக்கான அதிகாரத்தை அவர்கள் ஏற்கனவே கற்பனை செய்யத் தொடங்கியிருந்தனர். அவை, கோவில்கள்! அவர்களது நோக்கங்கள் இரண்டு: நிலவுடமைச் சமூகத்தில் தங்களை சர்வ வல்லமை படைத்தவர்களாக நிலைநிறுத்வது; தங்களை வீழ்த்திய தேவேந்திரர்களை நிர்முலம் செய்வது. இவ்விரண்டிற்கும் சாதகமான திட்டமென கோவில்களை உருவாக்கத் தொடங்கினர்.
‘கோவில்’ என்பது மிகத் தந்திரமான அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு அர்த்தத்தைத் தரும் வகையில் விளக்கங்கள் வடிவமைக்கப்பட்டன. வெளிப்பார்வைக்கு ஆன்மீக நடவடிக்கைகளுக்கான தளம் போலத் தென்பட்டாலும் அதன் ஒழுங்கமைப்பும், செயல்பாடுகளும் அதன் எல்லையை கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு விரிவுபடுத்தின. 
’கடவுள்’குடிகொண்ட இடம் என்பதை வலுப்படுத்தும் ஏராளமானக் கதைகளையும், புராணங்களையும் கொண்டு செய்யப்பட்டிருக்கும் கோவில்கள் யதார்த்தத்தில் பல்வேறு போர்வைகளைப் போர்த்திக் கொண்ட சமூகப் பொருளாதார அமைப்பாகவே உருவாக்கப்பட்டன. ‘கோவில்கள்’ என்று இங்கு நாம் குறிப்பிடுபவை, ஆற்றங்கரைகளில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பெரிய நிறுவனங்களை மட்டுமே. இந்தக் கோவில்கள் அனைத்தும் சைவ, வைணவக் கடவுளர்களின் இருப்பிடங்களாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. இப்படியான கதைகள் பெரும்பாலும் இக்கடவுள்களின் லீலைகளாகவும், விளையாடல்களாகவும் அமைந்திருந்தன.
சமூக ஓழுங்கமைப்புகள் சமவெளியையும், நீர்நிலைகளையும் மையப்படுத்தி தீர்மானிக்கப்படும் புதிய சூழலுக்குத் தகுந்தவாறு, பிராமண சமூகம் தன்னை தகவமைத்துக் கொள்வதில் மும்முரமாய் இறங்கியது.  சமூக அதிகாரம், ஆடுமாடுகளுக்கான புல்வெளியிலிருந்து இடம்பெயர்ந்து நெல் விளையும் சமவெளிகளுக்குச் சென்று கொண்டிருந்ததை அது நன்றாகவே உணர்ந்திருந்தது. அதன் விளைவாக, பாரம்பரியமான தங்களது கால்நடை மேய்ப்புத்தொழிலைத் துறந்து விட்டு, நிலவுடமை அமைப்பிற்குள் தங்களுக்கான இடத்தை தேடத் தொடங்கியது.  அவ்வாறு தேடிக் கண்டடைந்த அமைப்பு தான் ‘கோவில்கள்’.
‘கோவில்’ என்ற சொல் பல்வேறு அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருக்கும் வரலாற்றுத் தடயம்.  இச்சொல்லிற்குப் பொருள் சொல்பவர்கள், ’கோ’ + ’இல்’ என்று பதம் பிரித்து, ’கோ’ என்றால் அரசன் என்று விளக்கம் சொல்வார்கள். அரசனின் வீடு அல்லது அரண்மனை என்று குறிப்பிடுவார்கள். கோவில்களுக்குகள் குடிகொண்டுள்ள கடவுள், அரசனைப் போன்றவன் என்று இதற்கு அர்த்தமாம். அல்லது முற்காலங்களில் அரசர்களும் இக்கோவில்களிலேயே வசித்தார்கள் என்று பொருள் சொல்லுவார்கள்.
ஆனால், கோவில் என்ற சொல் வேறு சில பரிமாணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  ’கோ’ என்ற சொல்லுக்கு அரசன் என்பது மட்டுமல்ல, இன்னும் சில அர்த்தங்களும் உண்டு.  ’கோ’ என்ற சொல் கால்நடைகளான ஆடு,மாடுகளைக் குறிக்கும் சொல்லாகும்.  முல்லை நில வாழ்கையிலிருந்து தோன்றிய சொல் இது. கோபாலன், கோன் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் தோன்றியவை தான். ‘.கோ’ என்றால் ‘மாடு’ என்று பொருள்படுகிறது; அதே சமயம் தமிழில் ‘மாடு’ என்றால் செல்வம் என்றும் பொருள்.  இதுவும் முல்லை நிலம் சொல்லித் தந்துதான்.  கால்நடைப் பராமரிப்பு சமூகத்திற்கு ‘மாடு’ தான் தலையாய செல்வம்.  கேடில் விழுச்செல்வம், மாடல்ல மற்ற யவை!’
‘கோ’ என்றால் மாடு; ‘மாடு’ என்றால் செல்வம். அப்படியானால் “கோ” என்றாலும் செல்வம் என்று தான் பொருள்.  கோமகன் என்பதை சொல்வந்தன் என்று தான் இன்றைக்கும் நாம் பயன்படுத்துகிறோம்.  இந்த விளக்கத்தின் படி கோவில் என்பதை அரசனின் இல்லம் என்று சொல்வதை விட ‘செல்வத்தின் இல்லம்’ அதாவது ‘கருவூலம்’ என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும்.
கோவில் என்ற சொல்லுக்குள் மறைந்துள்ள இது போன்ற வரலாற்றுச் சுவடுகளை அடையாளம் காண்பதன் மூலம் நாம் இரண்டு செய்திகளைத் தீர்மானமாகச் சொல்ல முன்வரலாம்.  ஒன்று, கோவில் என்பது நிலவுடைமைச் சமூகத்தின் (அதாவது மருத நிலத்தின்) கருவூலமாக அதாவது ‘செல்வத்தின் இருப்பிடமாக ’செயல்பட்டு வந்திருக்கிறது; இரண்டு, ’கோவில்’ என்ற கருவூலத்தை உருவாக்கிய பொழுது முல்லை நில சிந்தனையோட்டங்களே தமிழ் மனதை ஆக்ரமித்து கொண்டிருந்தன.
இந்த இரண்டாவது செய்தியை இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  ‘பயிர் வகைக் கண்டுபிடிப்பு’, 'விவசாய முறைகளின் பரவலாக்கம்’, ‘நீர் மேலாண்மையில் முன்னேற்றம்’ போன்ற காரணிகளால் தமிழிச்சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக மருத நாகரீகத்தை மையப்படுத்தி நகர தொடங்கியது.  அதுநாள் வரையில் மையமாக விளங்கியிருந்த முல்லை நில நாகரீகம் தளரத் தொடங்கியது.  இந்த நகர்வின் அடிப்படையான சிக்கல், புதிய அதிகாரங்களின் தோற்றமும், பழைய அதிகாரங்களின் தகர்வுமாக இருந்து.  இந்த மாற்றத்தினால், உடனடியான நிலைகுலைவை சந்தித்தவர்கள் பிராமணர்களாகவே இருந்தனர். அவர்களது பூர்வீகக் கால்நடை மேய்ப்புத் தொழிலின் தேவைகள் குறைந்ததும், ’மாடு’ மிக அத்யாவசியமான தொழிலாளியாக மாறியதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறின.
போதாக்குறைக்குக் கால்நடைகளை, குறிப்பாக மாட்டை, உணவுக்காகவும் சடங்குகளுக்காகவும் கொல்கிற வழக்கத்திற்கு எதிராக உருவாகிய பொது அபிப்பிராயம், அவ்வாறு செய்து வந்த பிராமணர்களுக்கு தீராத அவப்பெயரையும் சம்பாதித்துத் தந்தது.  அதிகாரத்தை இழந்து, சமூக மரியாதையில் தரமிழந்து போய்க் கொண்டிருந்த சூழலில் பிராமணர்கள் ‘கோவில்’ என்ற புதிய திட்டத்தோடு களமிறங்கினர்.  இதற்காக அவர்கள் தங்களது குலத்தொழிலான கால்நடை மேய்த்தலை துறந்தனர்; மாட்டுக்கறி புசிப்பதை தவிர்த்தனர்; தங்களது உபதொழிலாக விளங்கிய மந்திர தந்திர வேலைகளை முழுநேரப் பணியாக மாற்றி கொண்டார்கள்.
மந்திர வேலைகளுக்கான மையமாகவும் நிலவுடமைச் சமூக அமைப்பின் செல்வத்தை நிர்வகிக்கும் கேந்திரமாகவும் திகழக்கூடிய ‘கோவில்’ என்ற அமைப்பை கற்பனை செய்ததே பிராமணர்களின் வெற்றியாக அமைந்தது. பொதுப்பார்வைக்கு ‘கோவில்’ என்ற அமைப்பை ஆன்மீகத் தளமாகவும், நிலவுடமைச் சமூக ஆட்சியாளர்களுக்கு ‘அரசனின், அதாவது இறைவனின் விடு’ என்று விளக்கிய பிராமணர்கள் தங்களுக்குள் ரகசியமாய் ‘கோவில் என்பது கருவூலம்’ என்ற பிரத்யோக அர்த்தத்தையும் வைத்திருந்தார்கள் என்பதே உண்மை.  கோவிலுக்கு ‘செல்வங்களின் தலைமையிடம்’ என்ற உள்ளர்த்தம் அவர்களது கால்நடை மேய்ப்பு வாழ்க்கை அனுபவத்திலிருந்து வந்தது என்பது தான் நமது வாதம்.
தங்களது சமூக மரியாதையைக் குலைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் தேவேந்திரர்களே என்று வெறிகொண்ட பிராமணர்கள் கோவில்கள் மூலமாகவே தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்றினார்கள். இதன் படி, தேவேந்திரர்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் அனைத்தும் அரசர்களுக்கு, அதாவது நாட்டிற்கு, அதாவது கடவுள்களுக்கு, அதாவது கோவில்களுக்கு சொந்தமானவை என்று மாற்றி எழுதப்பட்டன.  இதனால், தேவேந்திரர்களின் நிலங்கள் அவர்களிடமிருந்து பலவந்தமாய் பறிக்கப்பட்டன.  சிற்சில இடங்களில் நிலங்களை மட்டுமல்லாது அவற்றில் விவசாயம் செய்து கொண்டிருடுந்த தேவேந்திரர்களும் கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்டனர்.
அதுநாள் வரையில் ஆடு, மாடுகளை மட்டுமே தானமாகப் பெற்று வந்த பிரமணர்கள் தங்களது மந்திர, தந்திர வேலைகளுக்குக் கூலியாக விவசாயக் கிராமங்களை வேண்டிப் பெறத் தொடங்கினார்கள்.  கல்வியறிவோ கேள்வியறிவோ இல்லாது, காமம் மட்டுமே தலை மீதேறி, தன் உடல் வலிமையால் மட்டுமே ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்கள் பிராமணர்களின் மந்திர தந்திரங்களுக்குப் பலியான துர்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.  யாகங்களுக்காகவும், வேள்விகளுக்காகவும் பல்வேறு கிராமங்களை பிராமணர்கள் பெயரில் எழுதி வைக்கும் செயலில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது தேவேந்திரர்கள் மட்டுமே.
தான் நம்பிய அரசர்களாலேயே கொத்தடிமைகள் போல மாற்றப்பட்ட தேவேந்திரர்கள், பிராமணர்களின் இந்தச் சதியை உடனடியாய் உணர்ந்து கொண்டார்கள் இல்லை. விளைநிலங்கள் கோவில்களுக்குள் சுருட்டப்பட்டன; விவசாயிகள் நிலத்தோடு பிணைக்கப்பட்டனர்; விளைச்சலை தெய்வங்களின் பெயரால் அரசர்களும், பண்ணைக்காரர்களும், பிராமணர்களும் பங்கிட்டுக் கொண்டனர்; ஓவ்வொரு வருடமும் நிலம் குத்தகைக்கு விடப்படும்பொழுது, எங்கே விளைவிக்கும் தேவேந்திரர்களே குத்தகைதாரர்களாக மாறிமேலெழுந்து விடுவார்களோ என்று பயந்த பிராமணர்கள் தேவேந்திரர்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்க அவர்கள் மீது ‘தீண்டத்தகாதவர்’ என்ற பழியை சுமத்தினார்கள்.
அவர்களை விவசாய நிலங்களை ஓட்டியே குடியமர்த்தி, ஊரிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். நாளின் பெரும்பகுதியை வயல்களிலேயே கழிப்பதால் சேறு பூசிய தேகத்துடன் விளங்கும் தேவேந்திரர்களை அழுக்கானவர்கள் என்றனர். கோவில்களுக்குள் நுழையத்தகாதவர்கள் என்றனர். பிராமணர்கள் பரப்பிய இந்தக் குற்றச்சாட்டுகளை கல்வியறிவற்ற பெருஞ் சமூகம் கண்மூடி, வாய்பொத்தி அப்படியே நம்பியது.  தேவேந்திரர்களை ‘தீண்டத்தகாதவர்’ என்று சொல்லத் தொடங்கியது 
பிராமணர்களின் சதியை விளங்கிக் கொண்ட தேவேந்திரர்கள் தங்களது பாரம்பரியத்தையும் பண்பாட்டுச் செழுமையையும் மேலும் மேலும் வலுப்படுத்தும் காரியங்களிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.  தங்களது விவசாயப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்; ’குடும்பம்’என்ற பண்பாட்டு அமைப்பை உருவாக்கியவர்கள் என்ற பெருமையை வலியுறுத்தல்; பிராமணர்களின் வைதீகத்திற்கு எதிரான பௌதீகத்தை (பௌத்தத்தை) பரப்புதல் போன்ற காரியங்களை முன்னைக் காட்டிலும் வலுவாகச் செய்யத் தொடங்கினர். கோவில்களுக்கும், பிராமணர்களுக்கும் சொந்தமாக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக செய்தே வந்தனர்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் “களப்பிரர்” என்ற பெயரோடு நடைபெற்ற சமூக மாற்றம் தேவேந்திரர்களால் முன்னெடுக்கப்பட்டதே. பிரம்மதேயங்களை மறுத்ததும், நீர்நிலைகளை புதுப்பித்ததுமே அக்காலகட்டத்து முக்கிய நிகழ்வுகளாக விளங்கின.  பௌத்த சமயத்தை ஆதரித்து, வேளாண்குடிகளின் உரிமையை நிலைநாட்டி, பிராமணர்களின் சதியை முறியடித்த களப்பிரர்களின் காலகட்டமே பிற்காலத்து பிராமண வரலாற்றாசிரியர்களால் இருண்ட காலம் என்று சொல்லப்பட்டது.  ஆனால், அக்காலகட்டமே தேவேந்திரர்கள் பிராமணர்களுக்கு எதிராய் நிகழ்த்திய முதற் போராட்டம் நிகழ்ந்த காலகட்டமாகும்.
விவசாய நிலங்களைப் பிடுங்கினால் மட்டும் போதாது, தேவேந்திரர்களை ஓட்டுமொத்தமாய் வீழ்த்துவதற்கு வேறுசில யுத்திகளையும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த பிராமணர்கள், தேவேந்திரர்களின் பலம் என்று கண்டது மூன்று விஷயங்களை மட்டுமே.  அவை, நிலம்; குடும்பம்; பௌத்தம். இவற்றுள் நிலத்தை ‘கோவில்’ என்ற பெயரால் கபளீகரம் செய்தாயிற்று.  இனி அழிக்க வேண்டியவை ‘குடும்பன்’ என்ற பண்பாட்டுப் பெருமையையும், ’பௌத்தம்’ என்ற கருத்தியல் ஆயுதத்தையுமே ஆகும்.
நிலவுடமைச் சமூகங்களின் மிக முக்கியமான, அதேநேரம் எளிமையான, சிறிய சமூக அமைப்பை ‘குடும்பம்’ என்கிறோம். வேளாண்மை, ஆண்கள் மற்றும் பெண்களின் சரிசமமான உழைப்பை வேண்டி நிற்பதால், ’குடும்பன்’ என்ற அமைப்பு இன்றியமையாத ஒன்றாக மாறியது. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவுடமை சமூகங்கள் தோன்றியபொழுதெல்லாம், ’குடும்பம்’ என்ற காரணியின் தோற்றமும் நடைபெற்றிருக்கிறது. இது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமேயான தனிக்குணமல்ல.  ஆனால், தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான் இக்குடும்பம் என்ற அமைப்பு ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளமாகவே மாற்றப்பட்டிருந்தது. அந்த இனம், தேவேந்திர இனம். அவர்களது பூர்வீக அடையாளம் ‘குடும்பர்கள்’ என்பதாகும்.
குடும்பர்களாகிய தேவேந்திரர்களின் பண்பாட்டு அடையாளத்தை சீர்குலைக்க விரும்பிய பிராமணர்கள் இந்த முறை “பாலியில் குற்றச்சாட்டுகள்” என்ற ஆயுதத்தைக் கையில்எடுத்தார்கள்.  இதன் மூலம் மருத நாகரீகம் என்பது பாலியல் அத்துமீறல்களைக் கொண்டது என்று நிரூபிக்க முனைந்தார்கள். குடும்பர்கள், ரகசியமாய் பெண் ஸ்நேகிதம் கொள்கிறவர்கள் என்றும், அதனால் அவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் பொழுதெல்லாம் சண்டையும் சச்சரவுமாய் இருக்கும் என்றும், பரத்தையார் என்ற புதிய வகைப் பெண்டிரை இவர்களே உருவாக்கினர் என்றும் தொடர்ச்சியாக பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய பாலியல் குற்றசாட்டுகள், இறையனார் களவியல் உரையின் மூலமாக நிறுவப்பட்டு, அதன்பின் மருதநிலப் பாடல்களுக்கு உரையெழுதிய ஆசிரியர்களால் மீண்டும் மீண்டும் சொல்லி நிலைநாட்டப்பட்டன.  இத்தகைய அவதூறுகளின் பிந்தைய வடிவமாகவே பள்ளு இலக்கியங்கள் செய்யப்பட்டன.
வேளண்மை என்றொரு மாபெரும் நாகரீகத்தை இம்மண்ணில் தளைக்கச் செய்த தேவேந்திரர்களை பெண் மோகம் கொண்டவர்கள், பலதாரங்களை மணப்பவர்கள், காமக் களியாட்டங்களில் திளைப்பவர்கள், பரத்தையரை நாடுபவர்கள் என்று சரமாரியான குற்றச்சாட்டுகள் மூலம் தமிழ்ச் சமூகம் புறந்தள்ளத் தொடங்கியது. பொருளாதார ரீதியாகவும், அறவொழுக்கம் சார்ந்தும் தன்மீது நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதல்களால் தேவேந்திரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது உயர்நிலையிலிருந்து சரியத் தொடங்கினார்கள். இக்காலகட்டத்தில் ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகமும் இருபெரும் பிரிவுகளாக பிளவுபடத் தொடங்கியது.
இடங்கை என்றும் வலங்கை என்றும் அழைக்கப்பட்ட இப்பிரிவுகளின் அடிப்படையான வேற்றுமை வேளாண்மை மட்டுமே. நிலத்தோடு தொடர்புடைய சமூகக் குழுக்கள் ஒரு பிரிவாகவும், கோவிலோடு தொடர்புடைய குழுக்கள் மறு பரிவாகவும் திரண்டன.  சுருக்கமாகச் சொன்னால், நிலவுடமைச் சமூகத்தின் உணவு உற்பத்தி முறைகளில் நேரடியாகப் பங்கு கொண்ட மக்கள் ஒரு பிரிவாகவும், நேரடியாகப் பங்கு பெறாதவர்கள் மற்றொரு பிரிவாகவும் அழைக்கப்பட்டனர். 
இதில் தேவேந்திரர்கள் நிலத்தோடும், பிராமணர்கள் கோவிலோடும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார்கள். தேவேந்திரர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் அவர்களிடமிருந்து நிலத்தை அபகரித்தும், பாலியல் குற்றச்சாட்டுகளை பரப்பியும் பல்வேறு சதிவேலைகளில் இறங்கிய பிராமணர்கள், தேவேந்திரர்களின் ஆன்ம பலமான பௌத்தத்தை வேரறுக்கும் முயற்சியிலும் இறங்கத் தொடங்கினார்கள். 
வெகுஜன மக்களின் அன்றாட வாழ்கைப் பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வுகளை வழங்கியபடி மக்களோடு மக்களாக கலந்து விட்டிருந்த பௌத்தத்தின் தூல வடிவமான “பள்ளியம்பதிகள்”, ஆங்காங்கு செயல்பட்டு வந்த தமிழ் மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன.  இந்நிலை கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரையில் எந்தவெரு பெரிய தடையுமின்றி தொடர்ந்து வந்தது.
ஆனால் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாமிய மன்னர்களின் வருகை, வடுகர்களின் படையெடுப்பு மற்றும் குடியேற்றம், ஐரோப்பியர்களின் நெருக்குதல் என்று அத்தனையும் சேர்ந்து தமிழக அரசியல் சூழலில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தின.  விட்டகுறை தொட்டகுறையாய் ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் அரசர்கள் ஓட்டுமொத்தமாய் வீழ்த்தப்பட்டனர். வேற்று மொழி பேசும் மக்கள்திரள் அலையலையாய் வந்து தமிழகத்துள் குடியேறத் தொடங்கியது.  இதனால், ஏற்கனவே நிலவி வந்த சமூக அரசியல் ஓழுங்கமைப்புகள் சீர்குலைந்து புதிய அமைப்புகள் உருவாயின.  விளைச்சல் நிலங்களுக்கும் நீர்ப்பாசனப் பகுதிகளுக்கும், முத்துகள் விளையும் துறைகளுக்கும் பலத்த போட்டி உருவாகத் தொடங்கியது.  இவற்றை யார் கையகப்படுத்துவது என்ற பலப்பரிட்சையில் உள்நாட்டுக் கலவரங்கள் பெருகத் தொடங்கின.
11
பள்ளி அழிந்து பாளையம் எழுந்தது:
முழுநேர விவசாயிகளாகவும், எப்பொழுதாவது தேவைப்படும் தருணங்களில் மட்டுமே போர்வீர்களாகவும் செயல்பட்டு வந்த தேவேந்திரர்கள், வரலாற்றில் முதன் முறையாக முழுநேரக் கொலைத் தொழில் புரியும் சமூகக் குழுக்களை சந்திக்கத் தொடங்கின.  காவற்பணி செய்தல், போரிடுதல் என்ற இரு காரியங்களை மட்டுமே செய்து வந்த குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசியல் அரங்கில் கோலோச்ச ஆரம்பித்தது இக்காலகட்டத்தில்தான்.
தமிழகமெங்கும் நிலவிய இத்தகைய குளறுபடிகளால் பெரிதும் பாதிக்கபட்டது தேவேந்திரர்களும், பௌத்த சமயமுமே ஆகும். தமிழ் மன்னர்களின் ஆதரவை இழந்ததோடு மட்டுமல்லாமல், சைவ - வைணவ வெறியர்களாய் விளங்கிய வடுகர்களின் வருகையை பௌத்தத்தால் எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. இதன் விளைவால், பள்ளியம்பதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வீழத்தொடங்கின. இத்தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிராமணர்கள் தேவேந்திரர்களுக்கு நேரடியாவே நெருக்கடியைத் தரத் தொடங்கினார்கள்.
சிவனென்றும், பெருமாளென்றும் பிராமணர்கள் போடும் நாடகமெல்லாம் சுயநலத்தில் விளைந்தவையே என்பதைத் தெளிவாய் உணர்ந்திருந்த தேவேந்திரகள், பௌத்தத்தின் மீதான தங்களது சார்பு நிலையை விடாப்பிடியாய் பற்றியிருந்ததோடு, அதனைக் கொண்டு பிராமணர்களின் வேஷத்தை கலைக்கவும் செய்து வந்தார்கள்.  கல்வியறிவற்ற பிறமக்களெல்லாம் பிராமணர்களின் தந்திரத்தில் மயங்கி அவர்களைப் பூசாரிகளாகவும், வேதங்களைப் புனித நூற்களாகவும் ஏற்றுக் கொண்டு விட்ட சூழலில் பௌத்த பள்ளியம்பதிகளையே தங்களது ஞானபீடங்களாக வரித்திருந்த தேவேந்திரர்கள் போலியான பிராணர்களையும், அவர்களை நம்பும் மூடர்களையும் தொடர்ந்து கண்டித்து வந்தார்கள்.
ஆனால், விளைநிலங்களை கையகப்படுத்துவதற்காக நடைபெற்ற உள்நாட்டு கலவரங்கள் தேவேந்திரர்களை முற்றிலுமாக நிலத்திலிருந்து அந்நியப்படுத்தியது. ஆற்றுப்பாசன நிலங்களையெல்லாம் பெரும்கோவில்கள் கபளீகரம் செய்து விட, மீதமிருந்த குளத்துப்பாசன மற்றும் மானாவாரி நிலங்களை கொலைத் தொழில் புரிந்த குழுக்கள் கையாகப்படுத்த தொடங்கின. 
இப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்டு அக்குழுக்கள் தங்களை ஜமீன்களாக அறிவித்துக் கொண்டன.  அந்நிலங்களில் செயற்பட்டு வந்த பள்ளியம்பதிகளையெல்லாம் வல்லந்தமாய் அழித்தவர்கள் அவற்றிற்குப் பதிலாக தங்களது படைகள் தங்கும் பாளையம்பதிகளை உருவாக்கினார்கள். இதனால், பௌத்த பள்ளிகள் அழிக்கப்பட்டு படைகள் தங்கும் பாளையம்பதிகள் தமிழகத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன.
விவசாய நிலங்களை முழுமையாகப் பறிகொடுத்ததோடு மட்டும்மல்லாமல், ’தீண்டத்தகாதவன்’ என்ற வீண்பழியையும் சுமந்து, ’பாலியல் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்பது போன்ற அவதூறுகளைத் தாங்கி ஏறக்குறைய நசுக்கப்பட்டிருந்த தேவேந்திரர்கள், பௌத்த பள்ளிகளெல்லாம் அழிக்கப்பட்டு பாளையங்கள் உருவாக்கப்பட்ட சூழலில் தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக திரண்டு எழுந்த போது, ஒட்டுமொத்த சமூகத்தால் பௌத்த பள்ளிகளை நம்பிய ‘பள்ளர், பள்ளர்’ என்று கேலி பேசப்பட்டனர்.  வரலாற்றில் முதல்முறையாய் ‘பள்ளர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது இந்தத் தருணத்தில் தான்.
பௌத்த பள்ளிகளை சார்ந்தவர்கள் என்று பொருள்படும் வகையில் சொல்லப்பட்ட வசைமொழியான ‘பள்ளர்’ என்ற சொல், நாளடைவில் ‘பள்ளத்தில் வாழ்பவர்கள்’ என்பதாகத் திரிந்து போனது. இதனால் ‘குடும்பன்’ என்ற பாரம்பரிய அடையாளமும், ’தேவேந்திரர்’ என்ற நவீன அடையாளமும் மறந்து ஒட்டுமொத்தத் தமிழகமும், இம்மக்களை ‘பள்ளர்’ என்ற கேலிச்சொல்லால் ஞாபாகம் கொள்கின்ற பழக்கம் மேலோங்கியது.
தனது நெடுங்காலத்து வன்மத்தைத் தணித்துக் கொண்ட குரூரத்துடன் பிராமணர்கள், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.  நிலம் மட்டுமே தனது வரலாற்றையும், பண்பாட்டையும், ஆன்மீகத்தையும் மீட்டுத்தரும் என்ற நம்பிக்கொண்டிருக்கிற தேவேந்திரர்கள் மழை வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். மழை தரும் தெய்வம், இந்திரனாம்!

நன்றி:
http://tdharumaraj.blogspot.com/2020/06/blog-post.html