திங்கள், 12 ஜூலை, 2021

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் : க.நாகராசு

தேவைதான் அனைத்துக் கண்டுபிடிப்புகளின் தாய் என்பதனை நாம் ஒவ்வொரும் அறிவோம். இன்று உலகில் உள்ள அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன; இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய இவ்வுலகில் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் எவ்வளவு என்று நாம் எழுத நினைத்தாலும் எழுதமுடியாது; நினைக்க முடிந்தாலும் நினைக்க முடியாது. அத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதாவது அவைகள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான். 

இத்தனை கண்டுபிடிப்புக்களும் மனிதனை இன்றைக்கு இந்த உச்சபட்சமான வாழ்வியல் நிலையில் வைத்திருக்கிறது. இத்தனை கண்டுபிடிப்புகளும் இந்த மனிதனுக்குப் பயன்படத்தக்கதாகவே உள்ளது என்பது ஆச்சரியப்படத்தக்கது. இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகளும் இவனுக்குத் தேவைப்படபோகின்றன. ஏனென்றால், தேவைகள் இருப்பதனால்தானே இத்தனை எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். அப்படியானால், இங்கே அவனின் கண்டுபிடிப்பதற்கான தூண்டுகோல் அவனின் தேவைதான். 

இவை ஒருபுறமிருக்க, அவன் சிந்தனைத் தூண்டுதல் அதிகரிக்க அதிகரிக்க, அனைத்தினையும் நுணுகி ஆராய வேண்டும் என்ற எண்ணம் அவனது ஆழ்ந்த சிந்தனையில் உருவாகி விடுகிறது. அதனை மனிதனின் சமூக, பொருளாதாரப் பயன்பாட்டிற்கு அதனை எப்படிக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகிறான். 

விலங்குகளுக்கு உணவு தேவை. அதனால், அவை தேடிப் பெறுகின்றன. அதற்கு இருப்பிடம் தேவை. அதனையும் தேடிப் பெருகின்றன. அதனுடைய இனத்தினைப் பெருக்குவதற்கு இணை தேவை. அதனையும் தேடிப் பெறுகின்றன. இப்படி விலங்குகளே தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தேடி ஓடி அதனைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. 

ஆனால், மனிதன் சற்று உச்சபட்சமான ஆறு அறிவு கொண்டவன். அப்படியானால், அவருடைய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்குப் புதுமையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவன் தன்னுடைய அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகளை என்றைக்கோ தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டான். ஆனால், அவனுடைய இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் எண்ணிலடங்கா தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால், அவன் இன்னும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவுத் தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்குப் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த முடிகிறது;  பெருக்கமுடிகிறது இவனின் கண்டுபிடிப்புகளால். 

 தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு இயந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதனையும் கண்டுபிடித்து அதனுடைய எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறான். இப்படி மனிதனுடைய கண்டுபிடிப்புகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

மேலும், இந்த மானுட சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்னும் ஏராளமான தேவைகள் இருந்து கொண்டே இருப்பதால், இதற்கான கண்டுபிடிப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இறங்குவது சாலச் சிறந்ததாகும். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளில் இறங்குவதில்லை. ஆனால், மற்றவர்களின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறான்; பாராட்டுகிறான்; வியக்கிறான். இவை வரவேற்கத்தக்கதுதான். 

ஆனால், என்றைக்கு நாமும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது? படைப்புகளை மேற்கொள்வது? என்றைக்கு நாமும் மற்றவர்களின் பாராட்டையும் புகழையும் பெறுவது?அவை, மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது என்ற சிந்தனையில் நாம் ஒவ்வொரும் இறங்க வேண்டும். இங்கு கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் ஆகலாம்; ஓவியன் ஆகலாம்; கவிஞன் ஆகலாம்; ஒரு நடிகன் ஆகலாம்; சிறந்த பேச்சாளனாக ஆகலாம்; சிறந்த சிந்தனைவாதியாகலாம்; இன்னும் பல. 

இவையும் சமூகத்திற்குத் தேவையான ஒன்றுதான். நாம் செய்ய வேண்டிய ஒன்று, தேவைகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான கண்டுபிடிப்புகளில் இறங்கிக் கொண்டே இருக்கவேண்டும். 

ஒவ்வொருவரும் சிந்திப்போம். இந்த மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகளை அனைவரும் மேற்கொள்வோம். 

கட்டுரையாளர்: க.நாகராசு, முதுகலை வரலாற்றாசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக