குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் சில பூர்வகுடிகளைக் கீழ்நிலையிலும் சில சமூகங்களை உயர்ந்த நிலையிலும் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பார்ப்பனியத்தை ஒன்றுசேர்ந்து எதிர்த்த இடைநிலைச் சாதிகள் இன்று நவீன பார்ப்பனியக்கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கின்றன. இவர்களுக்குச் சாதியப் படிநிலைகளில் கடைநிலையின் கடைசியில் நின்றுவிடக்கூடாது என்று நினைத்து வசதியாக நவீனப் பார்ப்பனியத்தைக் கையிலெடுத்துக் களமாடி வருகிறார்கள். உண்மையான பழமையானப் பார்ப்பனியம் உண்மையை உணர்ந்ததால் என்னவோ சமூகத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாகரீகமாக நவீனப் பார்ப்பனியத்தின் நையாண்டி வேலைகளை ஓர் ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தில் கோலோச்சி வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவித்த பெருந்தன்மையோடு இதுவரை நன்கு வாழாமல் விட்டவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டுமே என்ற உண்மை உணர்வுகளோடு ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் கண்டு மாற்றுக்கருத்துக் கூறாமல் ஊமையாய் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் இட ஒதுக்கீட்டின் அவசியமும் இன்னும் பிற சலுகைகளும் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்குத் தேவை என்று.
ஆனால், இட ஒதுக்கீட்டின் பலனையும் இன்னும் பிற சலுகைகளையும் அனுபவித்து வருகிற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு மற்றும் இலவச சலுகைகள் பற்றித் தவறானப் புரிதலோடு அல்லது மற்ற சமூகங்களைச்சாட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொய்ப் பிரச்சாரம் செய்து நடுநிலையானவர்களையும் குழப்பி வருகிறார்கள்.
காலம் காலமாக இட ஒதுக்கீடு பற்றித் தவறான கண்டிக்கத்தக்கச் செய்திகளும் கருத்துகளும் முகநூல் பதிவுகளும் இன்றளவும் வந்து கொண்டிருப்பது வேதனையளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஆகவே, இட ஒதுக்கீடு பற்றி இக்கட்டுரையில் பேச வேண்டியதாயிற்று.
இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக முற்பட்ட சமூகத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமை. நன்றாகக் கவனிக்க வேண்டும், அடிமைப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்தே உள்ள உரிமை தான் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள். ஒரு பாதி காலத்தில் ஒரு சமூகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது என்றால் மறுபாதியில் மற்ற சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் அடிப்படை உரிமைகளைப் பெற அவசியமும் உரிமையும் உண்டு தானே. ஆதலால், இப்போது பெற்றுவரும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையேயன்றி யாசகம் அல்ல.
அன்று இலவசத் தொகுப்பு வீடுகளை வைத்து அது ஊரா சேரியா என்று வேறுபடுத்த முடிந்தது. ஆனால், தற்போது பல வருடங்களாக அனைத்து சாதியினருக்கும் பசுமை வீடு, பிரதமர் வீடு போன்ற இலவச வீடுகளை அரசுகள் அளித்து வருகின்றன. இந்த திட்டம் சாதிகளை இன்னும் சமப்படுத்தவில்லையே?
அந்தக் காலத்தில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இலவசப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இப்போது இலவசப்பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை மட்டுமல்ல இலவசக் குறிப்பேடுகள், புத்தகப் பை, எழுதுபொருட்கள் அனைத்தும் இலவசமாக அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் சமநிலை இல்லையே?
இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவந்த தனித்துவமான சலுகைகள் அனைத்தும் பொதுவுடமை ஆக்கப்பட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தில் சமநிலை ஆகாததற்குக் காரணம் யார்? என்னைப் பொறுத்தவரை சமூக, பொருளாதார நிலையில் சமநிலை அடையும் வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகளைப் பொதுவுடமையாக்கி ஏனைய பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான். நிலைமை இப்படியிருக்க, அனைத்து சலுகைகளையும் சமமாகப் பெற்றுவரும் இடைநிலைச் சாதிகளான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தான் இலவசங்களைப் பெறுகிறார்கள் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அவர்களின் அறியாமையேயன்றி வேறொன்றுமில்லை.
சமூகச் சமநிலை என்பது பொதுவெளியில் மரியாதையோடு நடத்துவது மட்டுமல்ல மாறாக தொழில் வியாபாரம் போன்றவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்பை உறுதிசெய்வதை உள்ளடக்கியதுமாகும். அப்படியானால், நான் ஏற்கனவே சொன்னது போல பொது வெளியில் சமூகச் சமநிலை இல்லாத நிலையில் பொதுவான அரசு சலுகைகள் அளிப்பது முறையற்றது தானே. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட சலுகைகள் அளிப்பது முறையானதும் தானே. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பட்ட சலுகைகள் அனைத்தும் சமமாக்கிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அரசின் இலவசங்களும் இட ஒதுக்கீடுகளும் இருப்பது போலச்சொல்லி நாடகமாடுவதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
இட ஒதுக்கீடு பற்றி சமீபகாலமாக முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீட்டை எவ்வித இடர்பாடின்றி அனுபவித்து வரும் அறிவு ஜீவிகள் தவறான கருத்துகளையும் பொய்ப்பிரச்சாரங்களையும் புரிதலின்றி அல்லது தவறான நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். உதாரணமாக, இட ஒதுக்கீடு இன்னும் தேவையா? இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வேண்டுமா இல்லை பொருளாதாரத்தின் அடிப்படையில் வேண்டுமா? இவைபோன்ற பிரச்சாரங்களை சமூக அக்கறையில்லாமல் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
சமூகநிலையைக் கணக்கில் கொண்டு தான் இட ஒதுக்கீடு தரவேண்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து. சாதியை வைத்து இட ஒதுக்கீடு அளிப்பதே சமூக நீதியாக இருக்கும். பொருளாதார நிலையில் இட ஒதுக்கீடு அளிப்பது அவ்வளவு எளிதானதல்ல. தற்போது நடுவண் அரசு கொண்டு வந்துள்ள முற்பட்ட வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு நாளடைவில் பிசுபிசுத்துப் போய்விடும். நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள். சாகும்வரை சாதி மாறப்போவதில்லை. சமூகத்தின் எண்ண ஓட்டமும் மாறப்போவதில்லை. ஆனால், பொருளாதார நிலை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது தான். இன்று ஏழை நாளை பணக்காரன். சுருக்கமாகச் சொன்னால், சாதிச்சான்றிதழ் சாகும் வரை செல்லும், ஆனால் வருமானச் சான்றிதழ் ஆறு மாதத்திற்குத் தான் செல்லும். இதன் மூலம் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எப்படியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் இப்போது சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீட்டுச் சலுகை இருக்கக்கூடாது என்பதை நீதிமன்ற வழக்குகளையும் தாண்டி தமிழகத்தில் அறுபத்தொன்பது விழுக்காடுவரைக் கொண்டு வந்து இன்றளவும் நடைமுறையில் இருப்பது யாருக்காகத் தெரியுமா? சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீடு பற்றி விமர்சித்து வரும் உங்களுக்காகத்தான். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு என்பது நடுவண் அரசால் தக்க வைக்கப்பட்டு நடுவண் அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டும் அங்கீகரித்து அளித்து வழங்கி வருவது தான். ஆனால், நடுவண் அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோரை இதர பிற்படுத்தப்பட்டோர்(Other Backward Class) என்ற பிரிவில் தான் இட ஒதுக்கீட்டில் வைத்திருக்கிறது. நடுவண் அரசு இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவே இல்லை. நடுவண் அரசால் வழங்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகளை தமிழக அரசு அளிப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது விழுக்காடு இட ஒதுக்கீடு. இந்த அறுபத்தொன்பது விழுக்காட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பத்தொன்பது விழுக்காட்டைக் கழித்துப் பார்த்தால் எஞ்சியுள்ள ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு யாருக்கானது என்பது புரியும். இதை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? நான் சொல்கிறேன் கேளுங்கள். இட ஒதுக்கீட்டில் முப்பது விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருபது விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தான். எஞ்சியுள்ள பத்தொன்பது விழுக்காடு தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு. இப்போது சொல்லுங்கள் அறுபத்தொன்பது விழுக்காட்டில் அதிக இட ஒதுக்கீட்டைப் பெறுபவர்கள் யார் என்று? சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று வீண் விவாதம் செய்து வருகிற நீங்கள் தானே.
அப்படியானால், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று நீங்கள் முதலில் சொல்லலாமே. இட ஒதுக்கீடு என்பது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான உரிமை மற்றும் அதை வழங்குவது அரசின் கடமை.
பல நூற்றாண்டுகளாக ஆண்டனுபவித்த முற்பட்ட சமூகத்தினர்க்குக் கூட பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிற இந்த வேளையில் இட ஒதுக்கீடு பற்றிப் புரிதல் இல்லாமல் இட ஒதுக்கீட்டிலிருந்து விடுபடவா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருப்பது அறிவார்ந்த செயல் அல்ல.
இட ஒதுக்கீடு சாதிகள் அடிப்படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள உட்பிரிவுகளில் உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டு இடைச் சாதிகளால் ஒடுக்கப்பட்ட முடித்திருத்தும் மருத்துவர் சாதியினர் துணி துவைக்கும் வண்ணார் சாதியினர் நிரந்தரக்குடி இல்லாத நரிக்குறவர் சாதியினர் ஆகியோரின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளில் பங்கு போடுகிறோமே என்றெண்ணி மனச்சாட்சியோடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை வையுங்கள் என்று அரசை வலியுறுத்தலாமே. ஆண்ட சாதி என்று சொல்லி வரும் நீங்களும் அவர்களும் ஒரே பிரிவில் இருப்பது நியாயம் தானா? இவ்வளவு ஏன், இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று சிந்திக்கத் தொடங்கிய தாங்கள் முற்பட்ட வகுப்பில் கூட உங்களை வைக்கச்சொல்லி சலுகைகளை மறுக்கலாமே. இத்தகைய சலுகைகளையும் பெற்றுவிட்டு இட ஒதுக்கீடு பற்றி விமர்சிப்பது நன்றாகவா இருக்கிறது?
இன்னொரு விடயம், ஒரு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு சலுகையை மற்றொரு பிரிவினர் தட்டிப் பறிக்க இயலாது. உதாரணமாக, பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே போட்டிப் போடமுடியும். வேறு ஏதாவது ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினரோ அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரோ போட்டிப் போட்டு வெற்றி பெற இயலாது. அதேபோல் எல்லா பிரிவுகளிலும் இதே நிலைதான். அதே நேரம், கல்வி வேலைவாய்ப்புப் போட்டிகளில் குறைந்த பட்ச மதிப்பெண் (Cut Off) ஒவ்வொரு பிரிவினருக்கும் மாறுபடலாம். இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பிரிவில் உள்ள குறைந்த பட்ச மதிப்பெண்ணின் அடிப்படையில் அதே குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மற்றொருவர் தான் அந்த இடத்தைப் பெற முடியும். அதை விட கூடுதலான மதிப்பெண் பெற்றிருந்தாலும் வேறு பிரிவினர் எவரும் அந்த இடத்தைப் பெற முடியாது. இருந்த போதிலும் பொதுஇடங்களில் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் அந்த வேலை கிடைத்தது, அந்த படிப்புக்கு இடம் கிடைத்தது என்று சொல்வது தவறு. ஏனென்றால், அந்த தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்ட பிரிவின் குறைந்த பட்ச மதிப்பெண்ணை விட கூடுதலாக பெற்றிருந்தாலும் கூட பிற்படுத்தப்பட்டோருக்கான இடத்தைப் பெற இயலாது, தாழ்த்தப்பட்டவருக்கான பதினெட்டு விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள் தான் கல்விச் சேர்க்கையிலோ அல்லது அரசு வேலையிலோ அவர்கள் சேர்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கான முப்பது விழுக்காடு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இருபது விழுக்காடு இட ஒதுக்கீடுகளிலிருந்து அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்கான இட ஒதுக்கீட்டின் படி அவர் அறிவாளி, உங்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி நீங்கள் அறிவாளி. யாருடைய உரிமையையும் யாரும் பறிக்க இயலாது. இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அந்தளவுக்கு மோசமானது அல்ல. பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுகின்ற கல்விச் சேர்க்கைகளிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரைக்காட்டிலும் தாழ்த்தப்பட்டப் பிரிவினர் கூடுதலான மதிப்பெண் பெற்று பொதுப்போட்டியில் (Open Competition) வருவதைப் பார்த்திருக்கலாம். இந்த உண்மையை அரசுக் கல்லூரிப் பேராசிரியர் என்ற முறையிலும் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் நான் பலமுறை கண்டு வருகிறேன்.
தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெற்று அரசு அலுவலகங்களிலும் காவல்துறையிலும் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என்றும் அதனாலேயே மற்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன என்றும் பலர் பேசிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினர் மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைப்புத் தொடர்பாகக் கைதாகி வெளிவந்த முக்கிய நபர் ஒருவர் நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெற்று நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திலும், நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளாக இருப்பதால் என் மீது பொய்வழக்குப் போட்டு என்னை சிறையிலடைத்தனர் என்று. இது சிறு பிள்ளைத்தனமாக இல்லையா? நான் அவரிடம் கேட்க நினைப்பது, அப்படியானால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடுகளில் தேர்வு பெற்று எந்த நாட்டில் அதிகாரிகளாக இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இல்லையா என்பதைத் தான்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் தத்துவத்தைச் சொல்கிற நான் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் உள்ள இட ஒதுக்கீடு பற்றிப் பேசவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றியும் பேசுகிறேன் கேளுங்கள். அரசியல் கட்சிகளில், ஆளுமை நிறைந்த தாழ்த்தப்பட்ட அரசியல்வாதிகள் இருந்தாலும் கூட பொதுத்தொகுதிகளில் அவர்களைப் போட்டியிட நிறுத்துவதில்லை. அவ்வாறு நிறுத்தினாலும் வாக்குச் சேகரிப்பின் போது சாதியைச் சொல்லி விசப்பிரச்சாரம் செய்து தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணி செய்வார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமமான இட ஒதுக்கீடு இருக்கும்போது தேர்தலில் தனித்தொகுதிகள் அனைத்தும் மாறி பொதுத்தொகுதிகளாக வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில், மேற்சொன்னது போல் அரசியல் கட்சிகள் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களைப் பொதுத்தொகுதிகளில் நிறுத்திச் சாதி பாராமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கும் நிலை நம் நாட்டில் வருகின்ற வரை தனித்தொகுதி முறை நிலைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, இன்றைக்குத் தனித்தொகுதி தவிர்க்க இயலாததாகிவிட்டது.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றவர்களை அடிமைப்படுத்தி வந்த பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட சமூகத்தினர் இன்றைக்குள்ள இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டிராத போது இட ஒதுக்கீட்டின் பலனை இன்பமாக அனுபவித்து வருகின்ற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு பற்றி விமர்சிப்பது தான்.
பார்ப்பனியம்
பார்ப்பனரிடம் மட்டும் தான் இருக்கும் என்பதல்ல. அவர்கள் பழைமைப் பார்ப்பனியத்தை விட்டு வெளியே வந்து பல ஆண்டுகளாயிற்று.
இப்போது நவீனப் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது.
மற்றவரின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உணராத மனநிலையும் நவீனப் பார்ப்பனியம் தான். மேம்பட்ட நிலையில் இருந்த பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பற்றி உண்மை உணர்ந்து பெருந்தன்மையோடு இருக்கும் நேரத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் தவறாது போட்டிப் போட்டுப் பெற்று வருகிற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு மற்றும் ஏனைய சலுகைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தான் பெற்று வருகிறார்கள் என்பதைப் போல பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முனைவர் அ.இராமலிங்கம்
22.04.2020.
/ ஏர் இதழ் வெளியீடு / 22.04.2020 /