வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழ்ச் சித்த மருத்துவத்தின் வேத வடிவமே ஆயுர்வேத மருத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


சித்தமருத்துவத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் இடையிலான வேறுபடுகளும்,  ஏற்றத்தாழ்வும் சமூகமும் அரசும் இணைந்து உருவாக்கியவை. ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை, வேதமயமாக்கப்பட்ட சித்தமருத்துவம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது எல்லாவகையிலும், சித்தமருத்துவத்தை உள்வாங்கிச் செரித்துக்கொண்ட ஒரு மருத்துவமுறை.

ஓகக்கலை என்பது தான் பின்னாளில் யோகக்கலை என்று ஆயிற்று. யோகக்கலை என்றால் நமக்கு ஏற்படும் ஈர்ப்பு, ஓகக்கலை என்ற நம் சொந்தக்கலை மீது  உண்டாவது இல்லை. அதே போல, வர்மம் என்பதும் தமிழ் மருத்துவத்திற்கே உரிய சிறப்புக்கலை. இரசவாதமும் அவ்வாறே.

மருந்துச் செய்முறைகளில் உலோகத்தாதுக்களையெல்லாம் ஆயுர்வேதம் ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எடுத்துக்கொண்டது.  என்றாலும், மிகவும் நுட்பமான உயரிய செய்முறைகளைக் கோரும் கட்டு, களங்கு, மெழுகு, சுண்ணம் போன்றவை இன்னும் இன்றும் ஆயுர்வேதத்தில் கிடையாது. கட்டு என்பது உலோகங்களை இழைத்துப் பயன்படும் மருந்து வகையாக மாற்றுவது. இது ஒரு சாதாரண முறை அன்று. வேதியியல் முறை, நீண்ட மருந்துச்செயல்முறை. இரசவாத முறை. பக்கவிளைவுகள் இல்லாத வைத்திய முறை. நுண்ணியச் செயல்பாடுடையதாக மருத்துவ மூலப்பொருட்களை மாற்றுவது.

நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்ட லாகாப் பொருள் என்ப - தொல்காப்பியம் - 51

நோய் அல்லது துன்பம் என்பது பிறரால் எடுத்துக் காட்ட இயலாத பொருட்களுள் ஒன்றென்பதும், நோயென்பது எங்கும் எவ்விடத்தும் இலங்குவது என்பதும் காப்பியருடைய கொள்கை. இவ்வாறு தொல்காப்பியர் வழங்கும் முன்னரே நோய் பற்றிய கொள்கைகளும், தீர்க்கும் கோட்பாடுகளும் நம்மிடையே இருந்திருக்கின்றன.

ஆற்றல் நோய், அவல நோய், அருநோய், இன்னா நோய், உள் நோய், சுரந்த நோய், காழும் நோய், தணியா நோய், துன்ப நோய், துஞ்சா நோய், தொடர் நோய், படர்மணி நோய், பசப்பு நோய், பாயல் நோய், பிரிதல் நோய், பைதல் நோய், மருளறு நோய், மயங்கு நோய், விளியா நோய், வெப்ப நோய் என்ற சொற்கள் நம் இலக்கியங்களான நற்றிணை, கலித்தொகை நெடுகவும் காணப்படுகின்றன.

இந்திய அளவில் ஆயுர்வேதத்திற்கு இருக்கும் செல்வாக்கு, சித்தமருத்துவத்திற்கு இல்லை. காரணம் என்று எளிதாகச் சொல்லவேண்டுமென்றால், இயல்பாகவே மக்களுக்கு வெள்ளைத்தோலும் கருப்புத்தோலும் என்றால்  சட்டென்று வெள்ளைத்தோல் மேல் ஏற்படும் ஈர்ப்பு போன்றதே. ஆயுர்வேதம் சமஸ்கிருத மொழிமயமாக்கப்பட்ட தமிழ் மருத்துவம். அது எல்லா நிலைகளிலும் இடம் கொடுத்து இடம் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டதே அன்று அது அதுவே உருவானது அன்று, தானே உயர்ந்தது அன்று. சித்தமருத்துவத்தில் காணப்படும் சிறந்த கலை நுணுக்கங்களோ, நோய் அறியும் உத்திகளோ அந்த மருத்துவத்தில் இன்றும் கிடையாது.

வணிக ரீதியான நுகர்வுப் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல் அது மாற்றியமைக்கப்பட்டு, விடுமுறை போல ஓய்வுக்காலம் போல மக்கள் ஆயுர்வேதம் நோக்கிக் கேரளா சென்று தங்கி நிறைய தொகை செலவு செய்வதைப் பெருமையாகக் கருதுவதை நாம் அறிவோம். எப்போதுமே, காப்பியடித்தலுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுப்பது போல் தான் இதுவும்.

ஒப்பனை துறையை தன் வசப்படுத்திக்கொண்டு நவீன உலகத்தின் வர்த்தகச்சந்தையையும் தன்னுடையதாகக் கபளீகரம் செய்து கொண்டது ஆயுர்வேதம். ஆனால், அடிப்படை மருந்து செய் சமன்பாடுகள், மருத்துவ மூலப்பொருள்கள் எல்லாமே சித்தமருத்துவத்தினுடையவை. நாம் நமக்கானதை நமக்காகச் சரியாகப் பயன்படுத்தாதபோது, ஓர் அறிவு மரபு இப்படிச் சின்னாபின்னாமாகுவது இயல்பே.

ஆங்கில மருத்துவத்தில் பக்கவிளைவுகள் (Side Effects) முரண்பாடுகள்  (Contraindications) உடன் தான் ஒவ்வொரு மருந்தின் விவரத்தையும் சந்தையில் வெளியிடுகிறார்கள். ஆனால், அதுகுறித்து நாம் எந்தச் சந்தேகமும் எச்சரிக்கையும் கொள்வதில்லை. சித்தமருத்துவம் பற்றி எல்லோரும் அறிந்தோராய் அதன் பக்கவிளைவுகள் குறித்துப் பேசுகிறோம். 'பக்கவிளைவு', என்ற சொல்லே ஆங்கிலமருத்துவத்தினால் நம் வாயில் புரளும் ஒன்று.

அறுவை சிகிச்சை வரை சித்தமருத்துவத்தில் உண்டு. ஆனால், அதைச் செயல்படுத்தவதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பையும் பயிற்சியையும் வழங்கும் உள்நோக்கத்தை மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டிருக்கவில்லை.

சித்தமருத்துவம் என்றால் தமிழன் உலகிற்குக் கொடுத்த கொடை என்போம். ஆயுர்வேதம் என்றால் வேத காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டது என்று, சித்தமருத்துவத்தைச் சென்ற நூற்றாண்டின் கொடை ஆக்கிவிடுகிறோம். ஏதோ, தமிழருக்குச் சென்ற நூற்றாண்டில் தான் தமிழ் மொழி பிறந்தது போல.

நேற்று என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, ‘நீங்க நிலவேம்புக் குடிநீர் குடிச்சீங்களா?’, என்று கேட்டார். என் வீட்டில் சில அடிப்படையான தமிழ் மருந்துகளை எப்பொழுதும் வீட்டில் பின்பற்றுவோம், வைத்திருப்போம். ரிஷிகாவிற்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஆடாதோடை மணப்பாகு எப்பொழுதும் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. என் தம்பி வெளிநாட்டிற்குச் சென்ற போது நான் சொல்லாமலேயே, நிலவேம்புக்குடிநீர்ச் சூரணம் சிலவற்றை எடுத்துச் சென்றிருந்தது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.  சித்தமருத்துவம் வெறுமனே மருந்து அன்று. அது நம் வாழ்நெறியாகவும், நம் அன்றாடைத்தை உடலைப் பாதுகாக்கிற நம்முடன் உறைகிற மூதாதையாக மாறவேண்டும் என்பதே என் உள்நோக்கம்.

கவிஞர் குட்டி ரேவதி,
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /

திங்கள், 13 ஏப்ரல், 2020

சித்த மருத்துவ நூல்களே தமிழின் மைய இலக்கியம்: கவிஞர் குட்டி ரேவதி


தமிழ் மருத்துவ இலக்கியத்தை இங்கே ஒரு பதிவில் வரையறுத்துவிட முடியாது. என்றாலும் அவை என்ன மாதிரி பதிவுகளாக இருக்கின்றன என்பதை இங்கே கொஞ்சம்  தொட்டுக்காட்டிவிட  விரும்புகிறேன்.

தமிழ் மருத்துவ இலக்கியம் என்பது இதுவரை கண்டறியப்பட்டுச் சேகரிக்கப்பட்ட 3000 சித்தமருத்துவச் சுவடிகளை உள்ளடக்கியது.

பெரும்பாலான நூல்கள் அகத்தியர் 12000, போகர் - 7000, மச்சமுனி - 800, சட்டமுனி - 3000 என்பனவாய் சித்தமருத்துவர்களான அகத்தியர், போகர், மச்சமுனி, சட்டமுனி, கொங்கணர், கோரக்கர் ஆகியோர் பெயர்களிலேயே வழங்கப்படுகின்றன.

பதிப்பிக்கப்பட்ட நூல்களில் குறிப்பிடப்படும் சில நூல்கள் மறைந்து போயிருப்பதையும் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு, தேரையர் யமக வெண்பா என்ற நூலில் குறிப்பிடப்படும் பிற மருத்துவ நூல்களும் மேற்கோள் நூல்களும் நிறைய இன்று நம்மிடம் இல்லை.

நாங்கள் படிப்பதற்கு எங்களிடம் இருக்கும் நூல்களை விட, அதாவது இங்கே சித்தமருத்துவர்களுக்குப் பாடத்திட்டத்தில் வழங்கப்படும் நூல்களை விட எண்ணற்ற நூல்கள் புழக்கத்தில், வாசிப்பிற்கு, மருத்துவத்திற்கு இருந்திருக்கிறது. ஆங்கில ஆட்சியின் போது, பிரிட்டீஷார் தமிழ் மருத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு நிறைய நூல்களைத் தங்களின் History of Medicine நூலகச் சேகரிப்பிற்குக் கொண்டு சென்றதாக அறிகின்றேன். இங்கே ஆய்வு மேற்கொள்ள விரும்பும் சித்தமருத்துவர்கள் அங்கும் சென்று நூல்களை வாசிக்கையில் தான் ஆய்வுகள் முழுமையாகும்.

நிறைய நூல்கள் அவை இயற்றப்பட்டிருக்கும் பாக்களின் வகையிலேயே வழங்கப்படுகின்றன. தேரையர் வெண்பா, குணவாகட வெண்பா, சட்டைமுனி தாழிசை(தாழிசைச் செய்யுள்), அகத்தியர் விருத்தம் (ஆசிரிய விருத்தப்பாக்கள்), மச்சமுனி கலிப்பா, கருவூரார் நொண்டிச்சிந்து, யூகிமுனிவர் வாகடக்கும்மி, அகத்தியர் பள்ளு, அகத்தியர் வைத்திய காவியம், பதார்த்தகுண சிந்தாமணி, அகத்தியர் வைத்திய சூடாமணி, யூகி வைத்திய சிந்தாமணி, புலத்தியர் வைத்திய சதகம். குறள் வெண்பாவைப் போலவே வழங்கப்படும் ஒளவைக்குறளும் உண்டு.

சூத்திரம், நிகண்டு, மூலிகை நூல்கள், குழந்தை மருத்துவம் தொடர்பான நூல்களும் உண்டு. இதில் சூத்திரம் என்பது தமிழ் மருத்துவத்தின் மறைபொருள்களைக் குறிப்பிடும் நூலாகும். நிறைய பெயர்கள் மொழி வளமைத் திறனால், வேறு அர்த்தம் தொனிக்கச் சொல்லப்பட்டிருக்கும்.  அகத்தியர் காவியச் சுருக்கம்  ஒருபாடலாலும்  மச்சமுனி சூத்திரம் 800 பாடல்களாலும் ஆனது. அகத்தியர் குழம்பு, அகத்தியர் வல்லாதி என்று முக்கியமான சித்தமருந்துகளின் பெயரால் ஆன நூல்களும் உண்டு. சரக்குவைப்பு நூல்கள் என்று குறிப்பிடப்படுபவை முக்கியமானவை.

மருத்துவத்திற்குப் பயன்படும் மருத்துவ இயற்கையான மூலப்பொருட்களே சரக்கு. இயற்கையான பாடாணங்களைக் கொண்டு செயற்கைப்பாடாணங்களை ஆக்கும் வழிமுறைகள் சொல்பவை.  இயற்கைப்பாடாணங்கள் - 32, செயற்கைப்பாடாணங்கள் - 32. இந்தச் செயற்கைப்பாடாணங்கள் செய்முறை தமிழ் மருத்துவர்களுக்கு மட்டுமே உரிய கலைத்திறன் என்று சொல்லவேண்டும்.

கலைஞான நூல்கள் என்ற வகை நூல், அறிவு நூல் என வழங்கப்படுகிறது. வர்மநூல்கள் மொத்தம் 116 இருப்பதாக அறிகிறோம். கால்நடை மருத்துவ நூல்களும் தமிழ் மருத்துவ இலக்கியத்தில் அடங்கும்.

உண்மையில், தமிழ் இலக்கியப் பரப்பின் பெரும் பகுதியை   தமிழ் மருத்துவ இலக்கியங்களே   எடுத்துக்கொள்ளும். தமிழ் இலக்கணமும் இலக்கியக் கல்வியும் தமிழ் மருத்துவத்தை அறிய முக்கியமாகையால், தமிழ் மருத்துவம் இலக்கியத்தில் இன்னும் சிறப்புடைய துறையாகிறது. தமிழ் இலக்கிய அறிவைப் புகட்டாமல், தமிழ் மருத்துவ அறிவைப் புரிய வைத்துவிட முடியாது. அறிவுக்கலையின் செம்மையான வடிவமாக இது திகழ்வதால், இதை ஒரு சமூகத்தில் புகட்டாமல் நவீனத்தையோ மறுமலர்ச்சியையோ எட்டமுடியாது.
நூற்றுக்கணக்கான சான்றோர்களின் அறிவும், உழைப்பும், அக்கறையும் நிறைந்த நூல்களுடன் இத்துறை திகழ்வதும் இதன் சிறப்பு.

நான் இங்கே தொட்டுக்காட்டியுள்ளது மிக மிகக்குறைவே. இது ஒரு கடல், இதுவே தமிழின் மைய இலக்கியம்.

கவிஞர் குட்டி ரேவதி
13.04.2020.

/ ஏர் இதழ் / 13.04.2020/

சனி, 11 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தின் தத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


எடுத்த எடுப்பிலேயே சித்தமருத்துவத்தைப் பொதுமக்களும், மற்ற மருத்துவர்களும் நிராகரிக்க முதன்மையான காரணம், தமிழ் மருத்துவத்தின் அடிப்படையான தத்துவத்தை, அது இயங்கும் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான்.
இயன்றவரை எளிமையாகவும் நேரடியாகவும் இங்கே விளக்க விரும்புகிறேன்.

ஐம்பூதத் தத்துவம் என்பதுதான் தமிழ் மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம், அண்டமும் பிண்டமும் ஒன்றே, அறிந்துதான் பார்க்கும்போதே என்கிறது சட்டமுனி ஞானம் நூல். இப்பாடலிலிருந்து இத்தத்துவத்தை நேரடியாக உள்வாங்கிக் கொள்ளலாம். என்றாலும், நுணுகி நுணுகி அறியப்போகையில் தமிழ் மருத்துவம் என்பது  ஓர் அகண்ட துறையாகவும் நுண்ணிய அறிவையும் சிந்தனையையும் கோரும் துறையாகவும் இருக்கிறது.

மருத்துவர் என்போர் மட்டுமே மனித உடலைப்பற்றி அறிந்திருந்தால் போதுமானதில்லை என்று சொல்வேன். அவரவர் உடலை அறியும் திறனையும் அறிவையும் பெற்றிருந்தால்தான் பிணி இன்றி நீண்ட நெடுங்காலம் வாழ முடியும்.

இந்தச் சிந்தனை நம் மண்ணில் ஐயாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி வருகிறது என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்கள்.

 'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
 இருதிணை ஐம்பால் இயல்நெறி     வழாஅமைத்
 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும்'
 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனச்சொல்லும் தொல்காப்பியம் தொன்மையான பதிவாகிறது.

எப்படி இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனதோ, அதேபோல் இந்த உலகின் உயிர்களும் மனித உயிருடலும் ஐம்பூதக் கூட்டுச்சேர்க்கையால் உருவானவை. ஆக, இந்த உடலுக்கு ஐம்பூதச் சேர்க்கையினால் உருவான மருந்துகளே நோயைத் தீர்க்கவல்லன என்று கண்டறிந்தனர் தமிழ் மருத்துவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஐம்பூதச் சேர்க்கையற்ற மருந்துகள் உடல் நோயைத் தீர்க்க உதவா.

உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால், மண் என்று ஐம்பூதக்கூறிலிருந்து எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர் உண்டாகிறது. நீரிலிருந்து உதிரம், மஞ்ஞை, உமிழ் நீர், நிணம், விந்தும்; தீயிலிருந்து பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கமும்; காற்றிலிருந்து போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதலும்; ஆகாயத்திலிருந்து ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனையும் உண்டாகின்றன.

மருந்துப் பொருட்களில், இந்தப் பஞ்சபூதக்குணங்கள் சுவையாக இடம்பெற்றிருக்கின்றன. இவை வெறுமனே நாக்கினால் உணரப்படும் சுவை மட்டுமன்று. ஒவ்வொரு மூலிகையின் வீர்யமாகவும் அறியப்படுபவை. அதாவது, இனிப்பு என்பது மண் + நீர் என்ற இரண்டு பஞ்சபூதக்கூறும் சேர்ந்து உருவாவது. புளிப்பு, மண்ணும் தீயும். உவர்ப்பு நீரும் தீயும். கைப்பு, காற்றும் ஆகாயமும். கார்ப்பு தீயும் காற்றும். துவர்ப்பு மண்ணும் காற்றும்.

மனிதனின் நோய்களுக்கு வருவோம். நோய்க்கூறுகளைப் பற்றி அறியும்போதும் ஒவ்வொரு நோயும் ஐம்பூதச்சேர்க்கையில் நிகழும் எத்தகைய கோளாறுகளால் வருகின்றன என்ற ஆழமான ஆய்வும் விளக்கமும் கிடைக்கிறது.

நோயைக் கண்டறியும் தமிழ் மருத்துவர்களின் யுத்திகள் எண்வகைத் தேர்வு எனப்படுகின்றன. நாடி ஸ்பரிசம் நா நிறம் மொழி விழி மலம் மூத்திரம் இவை. இதில் நாடி சிறப்பான முதன்மையான உத்தியாக இருக்கிறது.

வாதம், பித்தம், கப நாடிகள் கொண்டு உடம்பில் உருவாகியிருக்கும் நோய்கள் அறியப்பட்டு அதைச் சரி செய்யும் பஞ்சபூதச் சேர்க்கை கொண்ட மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்துப் பொருள்களில் இவ்வாறு வெவ்வேறு பஞ்சபூதத்தன்மை கொண்டவையாக மருந்துப் பொருட்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மூலிகைப் பயன்பாடுகள் காலங்காலமான மரபினாலும் தொடர் நுண்ணறிவுச் செயல்பாட்டினாலும் வருவது. எதை எந்நோய்க்கு எவர்க்குக் கொடுப்பது என்பதில் மிகவும் விரிவான ஆளுகை இருக்கிறது. மரபார்ந்த அறிவையும் இலக்கியங்களையும் தொகுத்தே  ஐந்தரை ஆண்டு கல்வித்திட்டமெனத் தமிழ் மருத்துவத்திற்கு வகுத்திருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்துறைக்கு இருக்கும் சமூக, அரசு ஆதரவுகூட தமிழ் மருத்துத்துறைக்குக் கிடையாது. இலக்கியத்துறையே மெலிந்து மொழித்துறை ஆன கதை வேறு. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் தமிழ் மருத்துவமும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதை உணர்ந்தால் தான் தமிழ் மருத்துவத்தைப் போற்ற முடியும்; பயன்பெறமுடியும்.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல என்று புறநானூறு சொல்கிறதே.

திருக்குறள் மருந்து என்னும் தனித்த அதிகாரத்தைக் கொண்டு மருத்துவத்தை விளக்குகிறது.
சங்ககாலம் யூகி என்னும் மருத்துவச் சித்தரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.  மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார், ‘ஆருயிர் மருத்துவி’, என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பெண்பாலார் மருத்துவராக இருந்திருக்கின்றனர். சங்க இலக்கியத்தைத் தொடர்பவர்களால் தமிழ் மருத்துவத் தத்துவத்தைப் புரிந்துகொள்வது எளிது.

எப்படி சங்க இலக்கியங்கள் நூற்றுக்கணக்கில் தொகுதிகளாக இருக்கின்றனவோ, நவீன இலக்கியங்கள் எப்படி தொகுதிகளாக இருக்கின்றனவோ, அவ்வாறே தமிழ் மருத்துவ இலக்கியங்கள் பெரிய தொகுதி. தமிழ் மொழி வரலாற்றில் பெருங்கால ஓட்டத்தைச் சொல்லும் அருங்கலைச் சொற்களைக் கொண்டவை; தனித்தவை.

மருத்துவம் குறித்த எல்லாமும் வழி வழியாகப் பாதுகாக்கப்படும் வண்ணம் பாடல்களாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
மூலிகை என்னும் ஐம்பூதச் செல்வங்களை, ஐம்பூதக் கலவையால் ஆன மனித உடலின் பிணி தீர்க்கும் ஐம்பூதச் சமன்பாடுகளை வகுத்தவர்கள் தமிழ் மருத்துவர்கள் என்று சொல்ல வேண்டும். இதில் பொழுதுகளும் சேரும், ஐந்திணைகளும் சேரும். தாது, சீவப்பொருட்களும் சேரும். இப்படி மனிதனை இந்த அண்டத்துடன் இணைத்துப் புரிந்து கொண்டதுடன், அதை ஒரு கருத்தியலாக நீண்ட நீண்ட காலம் இலக்கியங்களாலும் வாழ்வு நெறிகளாலும் போற்றியவர்களே தமிழ் மருத்துவர்கள்.

சங்க இலக்கிய அறிவும் மொழிபால் பற்றும் தமிழ் மருத்துவத்தைப் புரிந்து கொள்வதை இன்னும் எளிதாக்கிவிடும். தமிழ் இலக்கிய நுகர்வே தமிழர் வாழ்நெறியை நிலைப்படுத்துகிறது.

தமிழர்கள் எங்கெங்கு சென்றாரோ, அங்கெல்லாம் இலக்கியத்தின் வாழ்நெறியினைப் போலவே, தமிழர் தம் மருத்துவப் பண்பாடும் வேரூன்றியிருக்கிறது.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து’
என்று ஆகியிருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி
11.04.2020

நோய்த் தொற்றுப் பரப்புரைகளும் வணிக நோக்கங்களும்: இரா.முத்துநாகு


The Corporation Or Company That Changed The World, Every Era' Via With Medical.
*
கடந்த பத்தாண்டுகள் வரை கிராமப்புற நாவிதர்கள் வைத்திருந்தது ஓரிரண்டு சவரக்கத்திகள் மட்டுமே. அக்கத்தியில் சவரம் செய்த பின்பு அவர்கள் வைத்திருக்கும் ஒட்டக்கத்தோல் அல்லது சானைக்கல்லில் பட்டை தீட்டி அடுத்தவர்களுக்குச் சவரம் செய்தார்கள். கத்தியின் பதம் போய் விட்டால் ஆசாரிகள் உதவியோடு சானை பிடித்துப் பதமேற்றி மீண்டும் சவரம் செய்தனர்.

சவரகத்திக்குப் போட்டியாக புதிய கண்டுபிடிப்பான பிளேடு வந்தது. இதன் கண்டுபிடிப்பு 18ஆம் நூற்றாண்டாக இருந்தாலும், 1950 காலங்களில் இப்பிளேடு தீடீரெனக் கிளம்பியது. ‘’படைபத்து, தேமல் போன்ற தோல் நோய்கள் பரவுவது ஒரே கத்தியில் பலருக்கு முகச்சவரம் செய்வதால் ஏற்படுகிறது’’ என்ற பரப்புரை கிளம்பியது. இதைக் கண்டறிந்ததாகச் சொன்னது, மருத்துவ உலகத்திற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

படை பத்தினை நீக்க நம்மூர் சைபால் போன்ற நிறுவனங்கள் தோன்றியதும் இதன் பரப்புரையின் வடிவம். படிப்படியான பரப்புரையை நிகழ்த்தியதன் விளைவாக மேலைநாட்டு நாவிதர்கள் கத்தியிலிருந்து பிளேடுக்கு மாறினார்கள். ஆனால் இவர்கள் சரியாகப் பிடித்து முகச்சவரம் செய்திட முடியாமல் பலரைப் பிளேடால் பதம் பார்த்தார்கள்.

ஒருவழியாக ஜெர்மன் நாட்டில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமானது. அப்படி இருந்தும் பிளேடின் விற்பனை பெரும் மந்தமாக இருந்தது. நம்ம ஊரில் ரேடியோ சின்ன பாக்கெட் கதை நூல்களில், அதன் பின்னர் மாத, பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை வரும் பல்சுவை இதழ்களில் விளம்பரம் போட்டார்கள். இதன் தாக்கம் பரவலானது தவிர, வெற்றிகரமாக பிளேடு தொழிலை விற்பனை செய்திட முடியவில்லை. ஆனால் சைபால் போன்ற நிறுவனங்களே இதன் பலனை அனுபவித்தது. இந்தப் பலனை திருப்பக் கண்டறிந்த மருந்து தான் எச்ஐவி.

இரத்தத் தொற்று மூலமாகப் பொம்பளகிட்ட போகாதவனுக்கும் எச்ஐவி பரவும் என்ற பரப்புரையால், நம்ம ஊரில் காற்றாகப் பரவியது பிளேடு.

எச்ஐவி தொற்று இருக்கும் ஆண், உடலுறவு கொண்டாலும் பெண்ணுக்குப் பிறப்பு உறுப்புகளில் காயம் இருந்தால் மட்டுமே இந்த நோய் பரவும். இது போலவே, ஆணுக்கும் என்பது மருத்துவ உலகம் பரப்புரையில் சொன்னார்கள். நடந்தது என்னவோ பிளேடு ஏவாரமும் காண்டமும்தான்.

இந்த எச்ஐவி வைரஸ் எனப் பெயர் வைப்பதற்கு முன் இந்த நோய் உலகத்திலே இல்லையெனவும் நம்பிய நம்மில் எத்தனை பேருக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நோய்த தொற்று இருந்து வருகிறது எனத் தெரிந்திருப்போம் என்பதும் ஐயமே.

வைரஸ் கிருமிகள் காற்றில் உயிர் வாழும் நேரம் நொடியில் நூறில் ஒரு பங்கு என்றார்கள். ஆனாலும் 'உயிர்ப் பய'ப் பரப்புரையின் விளைவு, சகமனிதனைப் 'பொம்பளப் பொறுக்கி'யாகப் பார்க்க வைத்ததுடன், எச்ஐவி தொற்றுள்ளவனாகப் பார்க்க வைத்தது.

இப்பவும் அப்படித்தான் சக மனிதனைப் பார்கிறார்கள்; பார்க்க வேண்டும் எனப் பரப்புரையாற்றுகிறார்கள். பரப்புரையின் இலக்கு எந்தக் கொட்டத்தை நோக்கி என்பது, ஆடுகளைப்போல் அவர்களுக்கும் தெரியாது. ஆடாகிய நமக்கும் தெரியாது.

நீரில் நோய் பரவும் என்று புட்டி நீர் உற்பத்தி துவக்கினார்கள். காற்றில் என்று "சொன்னால் சொன்னவன் ஏன் சாகவில்லை எனக் கேட்பான்" என இன்னும் சொல்லாமல் உள்ளனரோ என்னவோ.?

தற்போது அறிவித்துள்ள 'உலகடங்கு' தொற்றுக்குப் பின்னால் பல விஞ்ஞான கருவிகள் பதுங்கி இருக்கலாம். அது விரைவில் விளம்பரக் காற்றில் வரும்.

ஏனென்றால், மக்களாகிய நாம் * 'பேசத் தெரிந்த நுகர்வோர் ' என்பதை அறிவாளிகள் அறிந்து வைத்திருப்பார்கள்.
நாம் அறிந்திருக்க மாட்டோம்.

இரா.முத்துநாகு,
சுளுந்தீ நூலாசிரியர்.
11.04.2020

வியாழன், 9 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம் மீளுமா?:- இரா.முத்துநாகு


மனித குலத்தை அச்சத்தில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாவல் கொரொனா தொற்றுநோய்ப் பரவலை முறியடிப்பதற்கு, மருந்தில்லா மருந்தாகத் 'தனித்திருக்கும்'படி மருத்துவ உலகம் அறிவுறுத்தலாக வழங்கியுள்ளது.

'இந்த நோயின் பெயர்தான் புதிது. ஏற்கனவே மனித குலத்தில் இருந்த நோய்தான்'. இதற்குப் பாரம்பரிய மருந்துவத்திலும் தீர்வு உண்டு. தொற்று நோய்கள், ஒட்டுவார் ஒட்டி எனப் பெயர். இதற்குத் தனித்திருத்தல் ஏற்கனவே மக்களிடமிருந்த மரபு மருத்து முறை. அம்மை, காய்ச்சல் போன்ற தொற்று நோய் வந்தவர்கள் வீடுகளில், வேப்பம் இலை சொறுகி அடையாளப்படுத்தித் தனிமைப்படுவார்கள். அவர்கள் வீட்டிற்கு வேற்று ஆள் வந்தால் வாயிற்படியில் நிற்க வைத்து ‘எங்க வீட்டில் அம்மை விளையாண்டுள்ளது. கடும் காய்ச்சல் கண்டுள்ளது’ என்று சொல்லி, தூரநின்று பேசுவார்கள். இப்படியான விவாதம் சித்த மருத்துவர்களிடமிருந்து கிளம்பியது.

‘பாரம்பரிய மருத்துவம் என்பது 'மூட நம்பிக்கை' என்று ஆங்கில மருத்துவத்திற்கு ஆதரவான கருத்தும், ‘நாம் உண்ணும் உணவிலிருந்து அனைத்திலும் நமது மரபு உள்ளது’ என்று நாட்டு மருத்துவர்களும் சமூகத் தளங்களில் காரசாரமாக விவாதித்துக்கொண்டுள்ளனர்.

அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை, உடலுறுப்பு மாற்றுதல், துண்டான உடலுறுப்பைப் பொறுத்துதல் போன்ற வளர்ச்சியால் உலகத்தையே வசீகரித்துள்ளது நீக்கமற நிறைந்திருந்தாலும், உலகம் முழுவதும் மரபு மருத்துவம் அரசு ஆதரவில்லாமல் உயிர்ப்புடன் உள்ளது. மரபு மருத்துவத்தில் அலோபதியில் தீர்க்கப்படாத நோய்கள் குணமாவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சித்த மருத்துவம், எங்கு எப்படிப் பரவி இருந்தது? 19ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியா முழுவதையும் தனது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவருவதற்கு முன்பு, தமிழகத்தில் இருந்த சித்த மருத்தும் ஏன் வளராமல் போனது? அதற்கான காரணங்கள் என்ன?

விலங்கிலிருந்து பிரிந்த மனிதன், தன்னைத்தானே காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் தற்காப்பு ஆயுதம் மருத்தவமாக மட்டுமே இருக்கும். அதன் பின்னரே ஆயுதங்கள் கண்டறிந்திருப்பான் என்று மானுடத் தோற்றத்தின் ஆய்வு நூல்கள் சொல்கின்றன.

கம்பெனி ஆட்சிக்கு முன்பு, மன்னர்களின் நிர்வாகத் தளமாக இருந்தவை கோயில்களும் அதன் மடங்களும்தான். இவை மருத்துவம், வானிலை, சிற்பம், நடனம், நாடகம், பூமியின் நீர் இருப்பு அறியும் கூவகச் சாத்திரம், கல்வி போன்ற கலைகள் கற்றுக்கொடுக்கும் மையமாகச் செயல்பட்டன. (சான்றுகள்: கல்வெட்டு அறிஞர்களான சுப்புராயலு, புலவர் இராசு, சாந்தலிங்கம் போன்றவர்களின் தமிழகக் கல்வெட்டு, செப்பேட்டுத் தொகுதிகள்).

கோயில்களைப் பிரிட்டீஷார் அறநிலையத்துறையாக மாற்றம் செய்தனர். கோயில் பணியாளர்கள் தவிர, கலைத்துறையினருக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. பிறகு, கோயில்கள் இறைத்தளமாக மட்டுமே உருமாறின.

கோயிலைச் சார்ந்து இயங்கிய கலைஞர்களைக் காத்திட அரசு விருப்பம் காட்டாததால், கிராமங்களை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். கவனிக்க ஆளில்லாததால் மடங்களில் இருந்த பல ஆயிரம் மருத்துவச் சுவடிகள், ஆவணங்கள் மறைந்தும், அழிந்தும் போயின. மருத்துவர்கள் கூடி விவாதிக்கும் முறை தொலைந்தது. (சான்று நூல்கள்: இந்திய வரலாறு - ரொமிலா தபார், ஏ.எல்.பாஸ்யம், கோசாம்பி, வின்சென்ட் ஸ்மித், ரிச்சர்டு எம். இ. ஏடன் – டெக்கான் சோசியல் கிஸ்டரி, உ.வே.சாவின் சுயசரிதை)

இந்திய ஒன்றியக் கடற்கரைப் பகுதிகளில் வணிகத்திற்காகக் குடியேறிய டச்சு, பிரிட்டீஷ், பிரெஞ்சு, போர்த்துகீசியர்களின் வணிகப் போட்டியாலும், இந்திய நிலப்பரப்பில் ஆண்டு கொண்டிருந்த பல்வேறு மன்னர்களிடம் நிலவிய அரசியல், சமூகக் காரணங்களாலும் சுமார் 1730 இல் துவங்கிய யுத்தம் 1805இல் முடிவுக்கு வந்தாலும், உள்நாட்டுப் போராக, கலவரமாக சுமார் 1920 வரை நீடித்தது. (சான்று: தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா.ப.அப்பாத்துரை).

உள்நாட்டு யுத்தம் 1858 வரை வலுவாகவே நீடித்ததால், எங்கும் நிலையான அரசு இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுத்த சாதியக் குழுத்தலைவர்கள், மன்னர்களின் பிரதிநிதியாக இருந்தவர்கள் சிறு சிறு பகுதிகளாக நிர்வாகம் செய்தனர். (நூல் சான்று: பேராசிரியர் இராசையன் – சவுத் இந்தியன் ரிபெல்லியன், தமிழக வரலாறு, பேராசிரியர் காளிமுத்து - காலனி ஆட்சியில் வேளாண்குடிகள், வியக்க வைக்கும் தமிழகம், கோரமண்டல கடற்கரை வரலாறு ஜெர்னல்ஸ், டச்சுக் குறிப்புகள்- பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன், சோசியல் கிஸ்டரி 1550 – 1960 - பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ்.)

ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்த போரின் முடிவாகக் கிழக்கு இந்தியன் கம்பெனி இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். சீரழிந்திருந்த இந்தியாவை ஆள முற்பட்டவர்களுக்குக் கலைகளைக் காட்டிக்காப்பது தேவையற்ற சுமையாகத் தெரிந்தன. ஆனாலும், உயிர் காக்கும் கலையான மருத்துவத்தைக் காத்திட உடனடித் தேவை இருந்தது.

இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் குறித்து ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த மருத்துவம் எழுதப்பட்ட சமற்கிருத மொழியைப் புரிந்து கொள்ளவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் இம்மருத்துவ முறையில் உள்ள போதாமையால் பிரிட்டீஷார் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

தமிழகத்தில் இருந்த பண்டுவம் என்ற சித்த மருத்துவத்தைச் சுமார் 1880 பின்பே கண்டு கொண்டனர். (தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, ஆப்ராகாம் பண்டிதர், அனந்தம் பண்டிதர், முருகேச முதலியார், விருதை சிவஞாயோகி, வ.உசி போன்றவர்களால்).

கிழக்கு இந்தியன் கம்பெனி 1805ல் உப்பின் வளத்தை முழுமையாகத் தன் வயப்படுத்தியது. (சான்று நூல்கள்: மோனோபோலி ஆப் சால்ட் இன் மெட்ராஸ் பிரசிடென்சி, சால்ட் பாலிசி இன் மெட்ராஸ், சால் இண்டஸ்ட்டிரி இன் இந்தியா, சால்ட் மெனுவல், கேஸ்ட் கேப்படலிசம் நகரத்தார் போன்ற நூல்கள்). இதனால் உப்புத் தட்டுப்பாடு நிலவியது.

உப்பு இல்லாததால் பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளுறுப்பு நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. (நூல் சான்று: எண்டமிக் டிஸ்சிஸ் இன் இந்தியா, குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ்). இராணுவ வீரர்களால் மட்டுமே ஆன கிழக்கு இந்தியன் கம்பெனியார்களுக்கு நோய்வாய்ப்பட்ட மக்கள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், உலகப்போர், உள்நாட்டில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கவும் அதிகமான மருத்துவர்கள் உடனடித் தேவையாக இருந்தது. இதனால் பிரிட்டீஷார் ஆளும் நாடுகளிலிருந்து மருத்துவர்களை இறக்குமதி செய்தனர். அலோபதி மருத்துவ முறையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவம் கிடைத்தது. இதனால் இந்தியாவிலிருந்த மருத்துவ முறைகளை அவர்கள் கவனப்படுத்த மறுத்தனர்.(நூல் சான்று: சாகித்ய அகதாமி விருது பெற்ற சசி தரூரின் நூல் ; தமிழில் இருண்ட இந்தியா, வில்லியம் லீமேன்; பிரிட்டீஷ் அதிகாரிகளின் குறிப்புகள்).

இந்தியர்களைப் படிப்படியாகவே கம்பெனி இராணுவத்தில் சேர்த்தனர். பிரிட்டீஷார் துவக்கிய பஞ்சாலை, சாயத்தொழில், உப்பு தொழில்சாலைகளின் வேலை ஆட்களுக்காகச் சென்னையில் சித்த, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவம் கற்றுத்தரும் பள்ளிகளை நிறுவினார்கள். அது எப்போது என்றால், இந்தியா முழுவதையும் 1801ல் கைப்பற்றி 120 ஆண்டுகள் ஆண்ட பின்னரே, இந்தியர்களின் மருத்துவமான சித்த, ஆயுர்வேத, யுனானி பள்ளிகளைத் துவக்கினார்கள். ஆனாலும், அலோபதி மருத்துவத்தில் கிடைத்த வருவாயினைக் கவனத்தில் கொண்டு அதைப் பரப்புவதிலே கவனம் செழுதினர்.

சமற்கிருதம், பாரசீக, இந்தி, மாரத்தி போன்ற மொழிகளில் அலோபதி மருத்துவத்தைக் கற்றுக்கொடுத்தனர். இலங்கையில் மட்டும் தமிழில் கற்றுக் கொடுத்தனர். (நூல் சான்று: growth of medical education in colonial period, and golden tea ceylon, காலனி ஆட்சியில் நமது வாழ்வும் நலவாழ்வும் - டாக்டர் நரேந்திரன்).

இப்படித்தான் இந்தியாவில் அலோபதி என்ற மருத்துவம் காலடி வைத்தது. இதே காலத்தில், பிரிட்டீஷார் நடத்திய நாட்டு மருத்துவப் பள்ளியிலிருந்தும் மாணவர்கள் உருவானார்கள். இவர்களுக்குக் காலப்போக்கில் அலோபதி மருத்துவமும் சேர்த்துப் படிக்க பாடத்திட்டம் மாற்றி அமைக்ப்பட்டது. அரசு நிறுவனத்தில் படித்த இந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க 1932 வரை அனுமதிக்க சட்டம் இயற்றவில்லை.

‘சித்த மருத்துவர்கள் கந்தகம், பூதம் (பாதரசம்), வெடிப்பு, துத்தம், துருசு போன்றவையில் மருந்து தயாரிக்கிறார்கள். அபின் போன்ற போதைபொருள்கள் வைத்துள்ளர். இவை சீனநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டவை’ என அறிக்கை கொடுத்தனர். இதனால் ‘வெடிபொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மருத்துவர்களைக் கைது செய்து போலி மருத்துவர்கள் என்று அறிவித்தனர். சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படும் கஞ்சாவைக் கைப்பற்றி கிரிமினல் சட்டத்தில் சிறையில் தள்ளினர்.(நூல் சான்று: கிரைம் கிஸ்டரி இன் தி மெட்ராஸ் பிரசிடென்சி, பிரிட்டீஷ் உள்துறை அறிக்கை). இதனால் மருத்துவம் படித்த பலர் வேறு தொழிலுக்கு மாறினர். கிராமங்களில் மருத்துவம் பார்த்த பண்டுவர்கள் தலைமறைவானர்கள். ஏற்கனவே தனியார்கள் ஆதரவில் நடந்த நாட்டு மருத்துவப் படிப்பிற்கு பிரிட்டீஷ் அரசு பெயரளவிற்கு நிதி ஒதுக்கியதால், ஒரு கட்டத்தில் மாணவர்கள் படிக்க முன்வரவில்லை.

இந்தக் காலகட்டத்தில் பிளேக், காலரா போன்ற தொற்று நோய்கள் பரவியது. இந்த நோய்க்கு நாட்டு மருந்துவர்களிடம் பிரிட்டீஷார் மருத்துவம் பெற்றனர். ஒட்டுவார் ஒட்டி நோய் என்பதை அறிந்து தனித்து வாழும் முறையை நாட்டு மருத்துவர்கள் சொல்லிக் கொடுத்தனர். இதனால் பிரிட்டீஷார் கண்டோமெண்ட் உருவானது.

தொற்று நோயிலிருந்து காப்பாற்றிய பல மருத்துவர்களுக்கு ‘சர், வைத்திய இரத்னா’ என்ற பட்டத்தைப் பிரிட்டீஷ் அரசு வழங்கியது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டு மருத்தும் மீண்டும் தளைத்தது. ஆங்கில மருத்துவத்தின் வருவாயினைக் கணக்கில் கொண்டவர்கள் | ‘நாட்டு மருந்தினை ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனை செய்யவேண்டும்’ என தடை போட்டனர். மாறிமாறி விசாரணைக் கமிசன்களை அமைத்து காலம் தாழ்த்தினார்கள். (கோமன், உஸ்மான் கமிசன்). இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாட்டு மருத்துவப்படிப்பை நிறுத்தினார்கள்.

அதேவேளையில், முதல் உலகப்போருக்கு முன்பே தஞ்சை மாராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் முயற்சியில் உலகளவில் உள்ள மருத்துவக்குழுவை கூட்டி அறுவை சிகிச்சையைத் துவக்கி வெற்றியும் கண்டார். கண்புரை அறுவை சிசிக்சை சிறப்பாக நடந்தது என ஆங்கில மருத்துவர்களே சித்த மருத்துவர்களைப் பாராட்டி எழுதிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது. ஆனால், ஆட்சி அதிகாரம் பிரிட்டீஷார் வசமிருந்ததால் உடற்கூறியல் மருத்துவத்தைத் தன் வசப்படுத்தினார்கள்.

1942இல் பிரிட்டீஷார் மூடிய நாட்டு மருத்துவப் படிப்புகள் நெடிய போராட்டங்களுக்குப் பின்பு 1964 இல் மீண்டும் பூத்தது. ஆனால், ஆங்கில ஆட்சியில் எப்படி மரபு மருத்துவத்தை இரண்டாம் தரமாக நடத்தினார்களோ, அதுபோலவே இந்திய அரசும் நடத்தி வருகிறது.

இந்திய, தமிழக மரபான மருத்துவப் படிப்பிற்கு இன்று வரை பல்கலைக் கழகம் துவக்கவில்லை. ஆங்கில மருத்துவத்தின் துணை மருத்துவமாகவே இன்றும் நடத்துகிறது. இதனால் சித்த மருத்துவத்தின் நுண் அறிவியலான நாடி பார்த்து நோய் அறியும் முறைகூட, மூடநம்பிக்கை என்று சொல்லும் அளவிற்குப் போய்விட்டது.

சித்த மருத்துவப் பண்டுவத்தை ஏற்காததற்கும், அதில் அறிவியல் இல்லையென்பதற்குமான மையக் காரணம் மிகக் குறிப்பானது. அதாவது,"செந்தூர மருந்துகள் தவிர்த்து, பெரும்பாலான மருந்துகள் யாவும் மூலிகைகள்தான். இவற்றை மக்கள் தங்கள் வாழ்வியலோடு அறிந்து வைத்திருந்தனர். அவற்றை எளிதாக அறிந்து தெளிந்து கொள்ளவும் முடியும். வெகுமக்களின் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் மருத்துவ மரபுக்கும் மக்களுக்குமான இடைவெளிகளை அதிகப்படுத்தவும், அதனை அப்புறப்படுத்தவும் அறிவியலை அதிகார இருப்பாக வைத்து அடக்கி வந்தது காலனி அரசு. இதன் தொடர்ச்சியே தற்போது  ஆங்கில மருத்துவ ஆதரவாளர்களும்.

பண்டுவ மரபில், மருந்து அதிலும் செந்தூரமே மிகச்சிறந்த மருந்து ஆகும். இதை நோயறிந்து கொடுத்தால் இம்மருந்துகள் உடல் உள் உறுப்புகளைச் செம்மைப்படுத்தி நோய் எதிர்பினை உருவாக்கும்.  அலோபதி மருத்துவத்தில் பெரும் வணிகம் கொடுப்பது மருந்து மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டால் அனைத்தும் புரியும்.

மரபு என்பது நம்பிக்கை அல்ல; அது மானுடத்தின் அனுபவ அறிவு. அதைப் பயன்படுத்தும் இடத்தில் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும்.

இரா.முத்துநாகு,
சுளுந்தீ நூலாசிரியர்.
09.04.2020






செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணக்கண்டம் முழுதும் வழங்கிய மொழி தமிழே! :- அறிஞர் நடன. காசிநாதன்.





அசோக மன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் தனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது" என்று கூறியுள்ளார் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும்” என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படி அவர் பேசினார்.

அவர்தான் திரு.நடன காசிநாதன்.

திரு. நடனகாசிநாதன் கூறுவது இதுதான்,

• ‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன”

• ‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

• அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழர் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கின்றனர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

• கொடுமணல் என்னும் ஊரில், சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராசத்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

• மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரம் போன்றவை கிடைத்தன.

• தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், “கிழார்வெளி” என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

• அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம்.

• தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

• அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.

• அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம்.

• அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம்.
நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன” என்றவர், அடுத்ததாக...

 ‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள “ஆதிச்சநல்லூரை” ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது.

 கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது.

 அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் போன்ற உருவங்கள் வரையப்பட்டிருந்தன/

 அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன.

 அவை மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானவை.

 தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் “”டைமமாபாத்தில்”” கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

 எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன.

 அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.

அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார்

 ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது.

 கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள்.

 அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

 ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள்.

 ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.

 தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள்.

 அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை.

 இதையெல்லாம் நான் எழுதிய “”‘தமிழகம் - அரப்பன் நாகரிகத் தாயகம்”” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

 ‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு.

 ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

 அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

 இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது.

 ‘தமிழன்அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.

ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்." என்கிறார் திரு. நடன. காசி நாதன்.

[ Studies on Tamils' Antiquity, Records, Culture and History (STARCH) குழுவிலிருந்து]

நன்றி:
மணி மணிவண்ணன் அவர்களது முகநூல் பதிவு.

வியாழன், 11 ஜூலை, 2019

தமிழ்த் தேசியத்தின் வரலாற்று வழித் தடம் : சில அறிமுகக் குறிப்புகள் :- தோழர் தியாகு


கருத்தரங்க விவாதப் பொருள் என்ற நிலையிலிருந்து இன்று களப் போரட்ட முழக்கமாகத் தமிழ்த் தேசியம் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சிக்கலிலும், இது குறித்துத் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வாழ்க்கை என்னும் உரைகல்லில் தமிழ்த் தேசியம் அடிக்கடி உரசிப் பார்க்கப்படுகிறது. போற்றியோ தூற்றியோ தமிழ்த் தேசியம் குறித்துப் பேச வேண்டிய தேவை வலுப்பெற்றுள்ளது. புற நிலையிலும் அக நிலையிலும் தமிழ்த் தேசியத்தின் தேவை முனைப்புற்று வருகிறது.

உணர்வெனும் வகையிலும், கருத்தியலெனும் வகையிலும், இயக்கமெனும் வகையிலும் தமிழ்த் தேசியம் தமிழக அரசியலில் தவிர்க்கவொண்ணாத ஆற்றலாக எழுந்து வரும் இந்நிலையை அது திடீரென்று எட்டி விடவில்லை. அதற்கொரு வரலாறு உண்டு. இந்த ஆறு பல ஓடைகள் கொண்டது. அந்த ஓடைகள் சேர்ந்தும் பிரிந்தும் ஒட்டியும் வெட்டியும் பாய்ந்தோடித் தமிழ்த் தேசியத்தின் பல்கிளைத் தடமாகின்றன.

தமிழ்த் தேசியம் என்பது முதலாவதாக நாம் தமிழர்கள் என்ற உணர்வைக் குறிக்கும். இனவுணர்வு, ஓர்மை, தமிழ்ப் பண்பாடு என்று பலவாறு உரைக்கப்பெறும் தமிழ்த் தேசிய உணர்வு வளர்ந்து முழுமை பெற்றுக் கருத்தியலாக மலர்வது வெறும் அகவய நிகழ்ச்சிப்போக்கு மட்டுமன்று. அது உரிய புறவய நிலைமைகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் இயங்கியல் உறவு கொண்டிருப்பதாகும்.

தமிழ் மக்கள் ஒரு மொழிவழிக் குமுகாயமாக அமைந்து எல்லைகள் வரையறுக்கப்பட்ட புலத்தில் வாழ்ந்தமைக்கான இலக்கிய வரலாற்றுச் சான்றுகளாக தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் திகழ்கின்றன. தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தமிழ்நாடு என்றும் இந்த இலக்கியங்கள் தமிழ் மக்களின் தாயகத்தைக் குறிப்பிடுகின்றன.

தமிழ்ப் பண்பாட்டையும் அந்தப் பண்பாட்டின் முற்போக்கான கூறுகளையும் சுட்டும் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்பல. இவ்வகையில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் தொடங்கி, சித்தர்கள், வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வேர்களைக் காண முடியும்.

சமற்கிருதம், ஆங்கிலம், உருது, பாரசீகம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அயல்மொழிகளின் ஊடுருவலைத் தடுத்துத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கதாகும். தேவநேயப் பாவாணர் கூறுவது போல், தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார், அதனை மரமாக வளர்த்தடுத்தவர்கள் பாவாணறும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும். ஆய கலைகள் அனைத்துக்கும் ஏற்ற திறன் கொண்ட மொழியாகத் தமிழை வளர்த்திட உழைப்பவர்களில் முதலாமவர் சொல்லாய்வறிஞர் அருளியார். இவர்கள் எல்லாம் முன்னெடுத்த, இன்றளவும் முன்னெடுத்து வருகிற தனித்தமிழ் இயக்கத்தின் முயற்சிகளில் எதிரொலித்த தமிழர் மறுமலர்ச்சியை தமிழ்த் தேசியத்தின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாகக் கருத வேண்டும்.

அயல்மொழிப் படையெடுப்புக்கெதிராகத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டத்தில் தனித் தமிழியக்கத்தின் பங்கு மதிக்கத்தக்கது. பாவாணரும் பாவலரேறுவும் தனித் தமிழுக்காக மட்டுமல்ல, தனித் தமிழ்நாட்டுக்கவும் முழங்கியவர்கள். இன்றளவும் உயிர்ப்போடியங்கி வரும் தென்மொழி உள்ளிட்ட இதழ்களையும் இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

சரியாகச் சொன்னால், தமிழ்த் தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்து விட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்து, தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல்-கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்குத் தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று. தமிழ்த் தேசத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வரலாற்று-இயங்கியல் உறவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியரின் (சிறிதளவுக்கு பிரெஞ்சியர், போர்த்துகேயர், டச்சியர் ஆகியோரின்) காலனியாதிக்கத்துக்குள் வராமற் போயிருந்தால் ஐரோப்பாவில் போலவே தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் -- உரிய திருத்தங்களோடுதான் என்றாலும் -- மொழிவழித் தேசியங்களின் இயல்பான படிமலர்ச்சி பற்பல தேச அரசுகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்திருக்கக் கூடும்.

வல்லரசியத்தின் குறுக்கீடும் அதனால் மேலிருந்து திணிக்கப்பெற்ற முதலியமும் மொழிவழிக் குமுகாயங்களில் தாக்கங்கொண்டு தேசியங்கள் வளர்வதற்கு முதலில் தடை ஆயின என்றாலும், பிறகு அவை விழித்தெழச் சுற்றடியாக வழிவகுத்தன.

இந்தியத் துணைக்கண்டத்தில் மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்குக் காலனியாதிக்கம் போலவே மற்றொரு தடையாக அமைந்தது இந்துக் குமுகமாக அறியப்படும் வர்ண சாதிக் கட்டமைப்பு.

இந்தியத் தேசியத்துக்கு இணையாகவே மொழிவழித் தேசியங்களும் வளர்ந்தன. ஒரு வகையில் இந்தியத் தேசியத்தின் வளர்ச்சியே கூட மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது எனலாம். இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமே தவிர நேர்வகைத் தேசியமன்று என்றாலும், அது இந்துத்துவப் பழைமையிலிருந்து ஊட்டம் பெறத் தயங்கியதில்லை என்றாலும், வல்லாதிக்கத்துடன் முரண்பட்ட வரை குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம் கொண்டிருந்தது. வரம்புக்குட்பட்ட அளவில் என்றாலும் வல்லாதிக்கக எதிர்ப்புக்கு மக்கள் பெருந்திரளை அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்காக மக்கள்மொழியில் பேசவும் மக்கள்மொழியில் கலை இலக்கியம் படைக்கவும் வேண்டியிருந்தது. ஆகவேதான் இந்தியத் தேசியம் வளர்ந்த போதே தமிழ்த் தேசியமும் வளர்ந்தது. இரண்டுக்குமான முரண்பாடும் முட்டல் மோதலும் அப்போதே வெளிப்பட்ட போதிலும் ஒன்றையொன்று ஒழித்துக் கட்டும் பகைமையாக முற்றவில்லை. இந்த உறவுமுறையை வரலாற்றுப் பகைமையும் அரசியல் நட்பும் என்று குறிப்பிடலாம்.

இந்தியத் தேசியப் பாவலர் பாரதியிடம் தமிழ்த் தேசியமும் இருந்தது. கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த சிதம்பரனாரின் இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்தை மறுதலிக்கவில்லை. அது எல்லா வகையிலும் தமிழ்த் தேசியத்தின் வித்துகளைச் சூல்கொண்டிருந்தது. பாவேந்தர் பாரதிதாசன் இந்தியத் தேசிய மண்ணிலிருந்துதான் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலராக மலர்ந்தார்.

மொழிவழித் தேசியத்தின் மலர்ச்சிக்கும் இந்தியத் தேசியத்துக்குமான இடையுறவை விளங்கிக் கொள்ள வங்காளத்தின் வரலாறு நமக்கு உதவும். 1905 வங்கப் பிரிவினைக்கு எதிரான எழுச்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சியான சுதேசி இயக்கத்துக்கு வழிகோலிற்று என்றால் இராசாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்றவர்களின் சமூக சீர்திருத்த இயக்கம் இந்தியத் தேசியக் கருத்தியல் வளர்ச்சிக்குத் துணை செய்தது. இலக்கியத் துறையில் பக்கிம்சந்திரரும் இரவீந்திரநாத் தாகூரும் வங்கத் தேசியத்துக்கும் இந்தியத் தேசியத்துக்கும் பாலம் அமைத்தவர்கள். வந்தே மாதரம் பாடலில் போற்றி வணங்கிய வங்க அன்னையைத்தான் இந்தியத் தாயாக மாற்றிக் கொண்டார்கள். நம் பாரதியார் இந்தப் பாடலில் இடம்பெறும் ஏழு கோடியை முப்பது கோடியாக மாற்றிக் கொண்டது வெறும் மொழிபெயர்ப்பு அன்று, தேசியப் பெயர்ப்பு! இந்த வகையில் வங்கத்தையும் தமிழகத்தையும் ஒப்பாய்வு செய்தால் கருத்துக்குரிய பார்வைகள் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் என்ற உணர்வும் கருத்தியலும் வெறும் கோட்பாட்டுச் செயல்வழிகளால் மட்டும் வந்து கிடைப்பவை அல்ல, அவை பெருந்திரள் மக்கள் இயக்கங்களின் வழி மலரக் கூடியவை. இவ்வகையில் தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் போக்கு இந்தியத் தேசிய அரசியல் எனும் உதிரத்தில் உதித்ததென்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இவ்வகையில் (மீண்டும் இவ்வகையில்தான்) இந்தியத் தேசியத்தின் இயங்கியல் நிலைமறுப்புதான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரும் தடையான வர்ண சாதிக் கட்டமைப்பையும் அதனை ஆளும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து சமூகநீதிக்காக நடைபெற்றுள்ள இயக்கங்கள் யாவும் உள்ளியலாகவும் உள்ளடக்கத்திலும் தமிழ்த் தேசியத்துக்கான நன்முயற்சிகளே – அவை தம்மை அப்படி அழைத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும்! இந்தக் கோணத்தில் பார்க்குமிடத்து திருவள்ளுவர் தொடங்கி சித்தர்கள் வழியாக வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வரலாற்று வேர்களுக்கு நீர் பாய்ச்சியவர்கள் என்று சொல்லலாம்.

தந்தை பெரியார் குடியரசு ஏட்டைத் தொடங்கியது சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது மட்டுமன்று, வரலாற்று வழியில் தமிழ்த் தேசம் தன்னைத்தான் இனங்காணும் செயல்வழியின்  தொடக்கத்தையும் குறித்தது. பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பும் சமூகநீதிக்கான குரலும் வெளிப்படையாக ஒலித்தன என்னும் அதேபோது, இது தமிழ்த் தேசிய வளர்ச்சியில் ஒரு முக்கியக் கட்டத்தைக் குறித்தது. பின்னர் வந்த முதல் மொழிப்போரில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் முதன்மைப் பங்கு வகித்தது தற்செயலன்று.

இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்ச்சராகப் பொறுப்பேற்று இந்தித் திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் தந்தை பெரியாரும் அறப்போர் தொடுத்ததும் (1938) இந்தியத் தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது. இந்த மோதலின் உச்சத்தில்தான், தமிழ்நாடு தமிழருக்கே! என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முழக்கம் பிறந்தது. சரியாகப் பொருள் கொண்டால், இது தமிழ்த் தேசியத் தன்தீர்வுரிமைக்கான (சுயநிர்ணய உரிமைக்கான) முழக்கம் ஆகும். இந்த உரிமையை ஆளும் அரசு அறிந்தேற்க வேண்டும் என்பதற்கான சட்டவாத முழக்கமன்று. இது நம் தேசத்தின் பிறப்புரிமை என்பதறிந்து  இந்த உரிமையைப் பயன்படுத்தி விடுதலை கேட்பதற்கான முழக்கம் ஆகும்.

இடைக்காலத்தில் இந்த முழக்கத்தின் திரிபுற்ற வடிவமாக திராவிட நாடு திராவிடருக்கே! என்று முழங்கினாலும் மொழிவழி மாநில அமைப்புக்குப் பின் தமிழ்நாடு தமிழருக்கே! என்று மீண்டு விட்டது. பெரியார் தமிழ் நாட்டின் முழு விடுதலைக்கான முழக்கமாகவே இதனைக் கூறி வந்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே! என்பதை இறுதி மூச்சு வரை வலியுறுத்தியவர் பெரியார். ஆனால் இந்த முழக்கத்தை மெய்ப்படச் செய்வதற்கான விடுதலை அரசியலை அவர் கைக்கொள்ளத் தவறினார். விடுதலைக் கருத்தியலைப் பேசிக்கொண்டே பல நேரம் சிற்சில சீர்திருத்தங்களை முன்னிறுத்தி விடுதலையின் பகைவர்களுக்குத் துணைபோகும் நடைமுறை அரசியலைக் கடைப்பிடித்தார். தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாக அமைந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவும் அரசு அடக்குமுறைக்கு ஆதரவாகவும் பெரியார் எடுத்த நிலைப்பாடு ஒரு பெரிய சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரியாரிடமிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணா தமிழ்த் தேசியத்துக்கு முரணான திராவிட நாடு என்னும் பொருந்தாக் கோரிக்கையைப் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாவின் திராவிட நாட்டுக்குத் தெளிவான வரையறையும் கிடையாது. 1956 – 61 காலத்தில் இந்தக் கோரிக்கையை மோசடி என்று சாடி, தனித் தமிழ்நாடுதான் சரி என்று பரப்புரை செய்தவர் பெரியார்.

1961இல் பிரிவினைத் தடைச் சட்டம் வரப்போவதைக் காட்டி அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைகழுவினார். அமைப்பைக் காக்கக் குறிக்கோளைக் கைவிடும் வேடிக்கையான முடிவை மேற்கொண்டார். திராவிட நாட்டுக்கு மாற்றாக மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் கைகொண்டார். அதுவும் வெறும் தேர்தல்வழிப் பதவி அரசியலுக்கான முழக்கமாகச் சுருங்கிப் போயிற்று. தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டுவதை விடவும் தேர்தல் அரசியலுக்கான கட்சி ஒன்றைக் கட்டுவதிலேயே குறியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றார். இந்தியத் தேசியத்தோடு இணங்கிப் போவதற்குப் பொருத்தமாகவே திமுகவும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்கின்றன.

அண்ணாவின் திராவிடக் கருத்தியல் தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்ப் பற்று, தமிழுணர்வு. இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் அண்ணா தலைமையிலான திமுக வகித்த பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சியாக அமைந்த 1965 மொழிப் போராட்டத்துக்கான களத்தைச் செப்பனிட்டதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொய்யான அரசியல் அதிகாரத்தின் மீதான மயக்கமும் நாட்டமும் வளர வளர திமுகவின் ‘தமிழ்த் தேசியம்’ சிதைந்து சீரழிந்து போயிற்று. இது தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பாடம்.

இத்தனைக் குறைபாடுகளும் இருந்தாலும் தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி வரலாற்றில் திராவிட இயக்கத்துக்கு ஒரு முகாமைப் பங்கு உண்டு. அவ்வியக்கத்தின் குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம், அதன் சமூக இயைபு, வரலாற்று வேர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படிச் சொல்கிறோம். தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி என்பது வெறும் கோட்பாட்டுப் படிமலர்ச்சி மட்டுமன்று, மக்கள் இயக்கம் என்ற வகையிலான படிமலர்ச்சியும்தான் என்றால் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கக் கட்டத்தையும் கடந்தே வந்திருக்கக் காணலாம்.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சி கண்டவர் ஈ.வெ.கி. சம்பத். திராவிடத்தை உதறி தமிழினத்தின் தன்தீர்வுரிமையை (சுய நிர்ணய உரிமையை) குறிக்கோளாக அறிவித்தார். ஆனால் காங்கிரசு எதிர்ப்பை விடவும் திமுக எதிர்ப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும், இந்தியப் பணநாயகத்தை சனநாயகமாகவே நம்பித் தேர்தல் அரசியலில் மூழ்கிப் போனதும் அவரைப் பகைமுகாமில் கலக்கச் செய்தன.

சி.பா. ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், ம.பொ.சி. தலைமையிலான தமிழரசுக் கழகம் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகளாக மதிக்கத்தக்கவை ஆகும். ஈழம் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசுக் கனவு கண்டவர் ஆதித்தனார். ஆனால் இவை முனைப்பான குழுக்களாக இயங்கினவே தவிர, இவற்றால் பெருந்திரளான மக்களை அணிதிரட்ட இயலாமலே போயிற்று.

ஆதித்தனாரின் தமிழ்ப் பேரரசுக் குறிக்கோள் தேசிய இனச் சிக்கல் தொடர்பான சமூக அறிவியலுக்கு மாறுபட்டு, வெறும் அகநோக்கியல் குறிக்கோளாகவே அமைந்து விட்டது. புதுமைக் காலக் கண்ணோட்டங்களை விடவும் பழம்பெருமைப் பார்வையே அதில் மிகுந்திருந்தது. ஆனால் அவரது கருத்தியல் இந்தியத் தேசியத்துடன் விட்டுக் கொடுக்காத ஒரு போக்கை மேற்கொண்டது. தமிழீழ மக்களுடன் தமிழக மக்களின் தோழமைக்கு ஆதித்தனார் ஒரு முன்னோடியாகவே இருந்தார். ஆதித்தனார் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் நாட்டம் கொண்டு குடியரசு ஏட்டிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சி. பா. ஆதித்தனாரின் முதன்மைப் பங்களிப்பு அவரது இதழியல் பணிதான். 1942 நவம்பர் மாதம் தினத் தந்தி தொடங்கினார். அதற்கு முன்பே தமிழன் என்ற வார ஏட்டைத் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களிடையே செய்தித் தாள் படிக்கும் வழக்கத்தைப் பரவலாக்கியது தினத் தந்தி. தில்லிக்கும் இந்திக்கும் எதிரான விழிப்பைத் தூண்டுவதில் தினத் தந்தியின் பங்கு மகத்தானது. தமிழீழ ஆதரவை வளர்ப்பதிலும் ஆதித்தனார் தொடங்கிய ஏடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

நாம் தமிழர் இயக்கம் பெரிய கட்சியாக வளராத போதும் பல போராட்டங்கள் நடத்தியது. 1956க்குப் பின் ஆதித்தனார் தனித் தமிழ்நாட்டுக்கான போராட்டத்தில் தந்தை பெரியாரோடு சேர்ந்து நின்றார். பெரியாரைப் போலவே அவரும் திராவிட நாடு கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார்.

தமிழக சட்டமன்ற மேலவையிலோ பேரவையிலோ விட்டுவிட்டு  உறுப்பினராக இருந்து வந்த ஆதித்தனார் 1967 பொதுத் தேர்தலுக்குப் பின் பேரவைத் தலைவராகவும், அண்ணா மறைவுக்குப்பின் கலைஞர் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  பதவி அரசியலில் நாட்டம் கொண்ட பின் தமிழ்த் தேசியத்துக்கான அவரது போர்க்குணம் நீர்த்துப் போனதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யாக அறியப்பட்ட ம.பொ. சிவஞானம் 1946ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்த படியே தமிழரசுக் கழகம் நிறுவினார். 1954ஆம் ஆண்டுதான் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காகவும், தமிழ்வழிக் கல்விக்காகவும் திருப்பதியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகவும், சென்னையை ஆந்திரத்திடம் இழந்திடாமல் தடுப்பதற்காகவும் மபொசியன் தமிழரசுக் கழகம் தொடர்ந்து போராடியது. வடக்கே திருப்பதியை இழந்த போதும் திருத்தணிகையை மீட்கவும், தெற்கே தேவிகுளம் பீர்மேட்டை இழந்த போதும் குமரியை மீட்கவும் எல்லைப் போராட்டங்கள் உதவின. தமிழ்த் தேசியத் தாயகத்தை உறுதி செய்வதற்கான இந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய மீட்பியக்கத்தில் முகாமையனதொரு பகுதியாகும்.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் இந்தியத் தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்தையே வலியுறுத்தி வந்தது என்றாலும் தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் சிறப்பான பங்கு வகித்தது. தேசியத்தின் இன்றியமையாக் கூறாகிய தாயக உரிமைக்கான போராட்டத்தில் ம.பொ.சி.யின் வரலாற்றுப் பங்களிப்பு மதிக்கத்தக்க ஒன்று.

ம.பொ.சி.யின் செங்கோல் ஏடு தமிழ்த் தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது. மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்து அச்சுக் கோப்புத் தொழிலாளியாக இருந்து தமிழ் இலக்கியங்களோடு பழக்கமானவர் என்றாலும் அவரது இலக்கியப் பங்களிப்பு செறிவானது. சிலப்பதிகாரம், திருக்குறள், வள்ளலார், பாரதியார், வ.உ. சிதம்பரனார் குறித்தெல்லாம் ஏராளமாய் எழுதியுள்ளார். 

ஆதித்தனார் போலவே ம.பொ.சியும் இறுதிக் காலத்தில் பதவி அரசியலில் நாட்டம் கொண்டு அதற்கேற்ப மாறிப் போனார். 1987 இராசீவ் காந்தி–ஜெயவர்த்தனாவின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் இந்திய அமைதிக் காப்புப் படையையும் ஆதரித்து விடுதலைப் புலிகளைத் திட்டிப் பேசுவதில் சோ இராமசாமியுடனும் செயகாந்தனுடம் சேர்ந்து கொண்டது மபொசிக்கு ஏற்பட்ட இறுதி வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்சல் நேசமணி தலைமையிலான குமரி விடுதலைப் போராட்டமும், மங்கலங்கிழார் கட்டி வளர்த்த வடக்கெல்லைப் போராட்டமும், சென்னையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான  முயற்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்க வரலாற்றில் முகாமையானவை. இந்தப் போராட்டங்கள் முழு அளவிலான தாயக உரிமைப் போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வில்லை. பெரும்பாலான இந்தப் போராட்டத் தலைமைகளை உள்வாங்கி உட்செரிப்பதில் இந்தியத் தேசியம் வெற்றி கண்டது. அதற்கொரு கருவியாகத் தேர்தல்வழிப் பதவி அரசியல் பயன்படுத்தப்பட்டது. 

ஈ.வெ.கி. சம்பத், ஆதித்தனார், ம.பொ.சி. எல்லாரும் பதவி நாட்ட அரசியலில் மூழ்கித்தான் மூச்சடங்கினர். தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தேர்தல்வழிப் பதவி அரசியல் வண்டியோட்ட நினைப்பவர்களுக்கெல்லாம் இவர்களின் பட்டறிவு ஒரு தெளிவான எச்சரிக்கை.

தமிழன் என்ற பெயரிலேயே ஏடு நடத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழகத்தின் தலித்தியக்க முன்னோடிகள் பலரும் தமிழ்ப் பற்றும் குடியாண்மை உணர்வும் மிக்கவர்கள். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தில் தலித்து இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது. இவ்வகையில் தமிழர் ஓர்மைக்கும் ஒற்றுமைக்குமான போராட்டத்தில் தலித்து இயக்கத்தின் இந்தப் புறவயப் பங்கு கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அதேபோது தலித்து இயக்கத்தின் ஒரு பகுதியை இன்றளவும் பீடித்துள்ள இந்தியத் தேசிய மாயையும் பதவி நாடும் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) அரசியலும் சமூகநீதிப் போராட்டத்துக்கும், ஆகவே தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கும் தடைகளாக உள்ளன.

தமிழகத்தில் தமிழீழ ஆதரவு என்பது எப்போதும் தமிழ்த் தேசிய எழுச்சியின் ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 1967 தேர்தலுக்குப் பின் மங்கிப் போன தமிழ்த் தேசிய உணர்வெழுச்சியை ஒரளவு மீட்டது 1983 கறுப்பு யூலைதான். அது முதல் ஏற்றவற்றங்களின் ஊடேதான் என்றாலும் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு என்பது தமிழ்த் தேசிய அரசியலின் அடையாள முத்திரை ஆயிற்று.

இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப் படையின் பெயரால்  இந்தியா நிகழ்த்திய வன்படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பின் ஈழ ஆதரவு என்பதே பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்றாகி விட்டது. 1991 இராசீவ் கொலையின் விளைவு தமிழ்த் தேசியத்துக்கு ஒரு பின்னடைவையே குறித்தது என்றாலும், தமிழீழப் போராட்டத்துக்குரிய உறுதியான ஆதரவுத் தளம் குலைந்து போய் விடவில்லை.

நீறுபூத்த நெருப்பாய் இருந்த ஈழ ஆதரவை 2008-09 காலத்திய இறுதிப் போர் ஊதி விட்டது. போரை நிறுத்து என்ற முழக்கம் அனைத்துப் பிரிவு தமிழக மக்களையும் களத்தில் இறக்கியது. அரசியலை எட்டியும் பார்க்காத பல பிரிவினரை அது போராடச் செய்தது. சிங்களப் பேரினவாத அரசுக்கு உடந்தையான இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. வீரத் தமிழன் முத்துக்குமார் முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த தீக்குளிப்புகள் தமிழகத்தின் கொந்தளிப்பை உணர்த்தின.

 முள்ளிவாய்க்கால் இனக்கொலை (2009) ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் அனைத்துப் பகுதித் தமிழ் மக்களிடையேயும், குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடையே, தமிழ்த் தேசியம் புத்தெழுச்சி பெறத் தூண்டுதலாகியுள்ளது. ஈழத் தமிழர் ஈடுசெய் நீதிக்கான போராட்டம் பெரும்பாலும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாகவே இருந்து வந்த தமிழீழ ஆதரவை ஓரளவு அறிவுசார்ந்த ஒன்றாக மற்ற உதவியுள்ளது 2013 மாணவர் போராட்டம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழக ஆற்றுநீர் உரிமைக்கான போராட்டத்தில் கோரிக்கைகளையும் போராட வழிகளையும் வகுப்பதில் போராடும் தமிழ்த் தேசிய ஆற்றல்கள் வீரியமிக்க செயலூக்கியாக பங்கு வகித்துள்ளன.

கூடங்குளம்-இடிந்தகரை, நெடுவாசல், கதிராமங்கலம், நியூட்ரினோ போராட்டங்கள் தமிழ்த் தேசியத்தை செழுமைப்படுத்த உதவியுள்ளன. பசுமைத் தமிழ்த் தேசியம் இயல்பாக மலர்ந்து மணம் வீசுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் முறையான தொழிற்சங்க இயக்கம் முகிழ்த்தது தமிழ் மண்ணிலேதான். தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளிடம் தமிழும் பொதுமையும் சமூகநீதியுமான நோக்குகள் முனைந்து மிளிர்ந்தன. அவர்களால் அந்தக் கட்டத்திலேயே இந்தியத் தேசியக் கூட்டினை உடைத்து வெளிவர முடியவில்லை என்பதைக் குற்றமாகச் சொல்ல முடியாது.

தேசிய இனச் சிக்கல் குறித்து மார்க்சிய-இலெனினியம் தந்த சரியான புரிதல் இருந்த போதிலும் பொதுமைக் கட்சித் தலைமையால் சிந்தனை-சொல்-செயலளவில் இந்தியத் தேசியக் கருத்தியலை விட்டு வெளிப்பட முடியவில்லை. இந்த இயலாமையால்தான், குறிப்பாகத் தேசியஇனச் சிக்கலில் இந்தியத் தேசியக் காங்கிரசின் இடதுசாரி வாலாகவே அது பிற்காலத்தில் சீர்கெட்டது. தேசிய இனச் சிக்கலில் இந்தியாவின் சட்டவாதப் பொதுமை இயக்கத்தின் பெருஞ்சரிவு காசுமீரத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.

இந்தியாவின் பல்வேறு தேசங்களிலும் மார்க்சிய-லெனினியக் குழுக்கள், அமைப்புகள் வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்கித் தங்கள் சர்வதேசியக் கொள்கையின் செயலார்ந்த வடிவமாகத் தத்தமது மொழிவழித் தேசியத்தை அறிந்தேற்று, தேசியக் கோரிக்கைகளுக்காகப் போராட முன்வந்திருப்பது காத்திரமானதொரு வளர்ச்சிப் போக்காகும். இந்தப் போக்கு தமிழ்நாட்டிலும் வளர்ந்து வருவது தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் திசைவழியையும் செழுமை செய்யும் என்பதில் ஐயமில்லை. போராடும் தமிழ்த் தேசியத்துக்கு இணையாகவே வாயாடும் தமிழ்த்தேசியமும் வளர்ந்துள்ளது. இனவாதம், சாதியம், பதவி வேட்டை, குடியாண்மை மறுப்பு, பொதுவிய எதிர்ப்பு, தனிமனித வழிபாடு, வெற்றுப் பகட்டு அரசியல் என்ற வழிகளில் இளைஞர்களின் தமிழ்த் தேசிய உணர்வும் உழைப்பும் வீணாகி விடுமோ என்று கவலைகொள்ள வேண்டியுள்ளது.                                                தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுத் தடத்தைப் பயின்று வெற்றிகளிலிருந்து வீரம் பெற்று தோல்விகளிலிருந்து பாடம் பெற்று தமிழ்த் தேசியத்தின் குறிகோள்களை அடைவதற்கான அறிவுத் தெளிவும் உணர்வெழுச்சியும் அணிதிரட்டலும் வளரப் பாடாற்றுவோம்.
• தியாகு, 28/03/2018
thozharthiagu.chennai@gmail.com

ஓவியம்:
இரவி பேலட்