செவ்வாய், 19 மார்ச், 2019

நிலம் பூத்து மலர்ந்த நாள் : இலட்சுமி கோபிநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள். மிக நெடு நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நூல் உள்ளுக்குள்ளே வந்து உட்கார்ந்து...

சங்க இலக்கியப்பாடல்களின் வாயிலாக ஒரு சங்கத் தமிழ் வரலாற்றை, புதினமாக முன்வைக்கிறார் ஆசிரியர் மனோஜ் குரூர். என்ன ஒரு அற்புதமான முயற்சி. பெரும்பான்மையான தமிழ் படைப்பாளிகளுக்கும் தமிழ் அரசியல் செய்பவர்களுக்கும் வந்தேரி என்று பிறரைத் திட்டுவதற்காக மட்டுமே தமிழ் தேவையாயிருக்கிறபோது மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட திரு,மனோஜ் குரூருக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்தது என என்னால் ஆச்சரியத்திலிருந்து அகலவே முடியவில்லை. மொழி பெயர்த்த திருமதி.ஜெயஸ்ரீ மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர். 

இந்த நூலின் காலத்தையும் கதைக் களத்தையும் புரிந்து கொள்ள நாம் தமிழில் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் படிக்க வேண்டியதில்லை. எட்டாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை நாம் படித்த தமிழ் சங்கப் பாடல்களை கொஞ்சம் நினைவில் கொண்டாலே போதும் ஏனையவற்றை இந்த நூலே பார்த்துக் கொள்ளும்.

கதையின் நகர்வில் இரண்டு இடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இந்தக்கதை, கதை மாந்தர்களின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இடையில் அதியமான் போருக்குப் புறப்படும் காட்சி அப்போது வீரர்களுக்கான விருந்தில் அதியமான் மதுவை அருந்த முற்படுகையில் ஒரு மூதாட்டியின் குரல் அவனைத் தடுக்கிறது. அந்த மூதாட்டியாக அவ்வை வருகிறார். உண்மையில் அவ்வையின் அந்த அறிமுகத்தில் நான் அப்படியே சிலிர்த்துப் போனேன். நமக்கெல்லாம் சிறிது நேரமேனும் அவ்வையோடு வாழ்ந்துவிட்டு வரும் பேறு கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த நூலாசிரியர்கள்( மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்) வாயிலாக நமக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றொரு நிகழ்வு இந்தக் கதையின் நாயகி ஒரு படைவீரனைக் காதலிக்கிறாள். இருவரும் வேறு வேறு நாட்டை இனத்தை சேர்ந்தவர்களே. அவன், அவளை சிறிது பிரிந்து தன் நாட்டிற்குச் சென்று திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் செல்கிறான். அவள் காத்திருக்கையில் அவளது கூட்டத்தார் தாங்கள் இருக்கும் இடம் விட்டு வேறு இடம் செல்ல முடிவு செய்கிறார்கள். அவள், அவன் அங்கேதான் வருவான் என்பதற்காக வர மறுக்கிறாள். அப்போது என் மனது அவளது கூட்டத்தார் அவளை என்ன செய்யப் போகிறார்களோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
( பழகிய புத்தி) ஆனால் அந்தக் கூட்டத்தின் தலைவன் அவளிடம் வந்து எங்களுக்கு நீ அவனோடு பழகுகிறாய் என்றும் அவனுக்காகத்தான் வர மறுக்கிறாய் என்றும் தெரியும். ஆனாலும் நாங்கள் வேறு இடம் போகத்தான் வேண்டும். உனக்காக நாங்கள் அவன் வரும்வரை இங்கேயே உன்னோடு இருக்கிறோம் அவன் வந்த பிறகு நீ அவனுடன் செல். பின்னர் நாங்கள் இங்கிருந்து வேறு இடம் செல்கிறோம் என்று சொல்கிறார். அவளது தாய் கூட அவளது முடிவிற்குக் குறுக்கே நிற்கவில்லை. முக்கியமாக நீ எப்படி அவனை நம்பிப் பழகினாய் அவன் உன்னை ஏமாற்றிவிட்டால் நீ என்ன செய்வாய் உன் வாழ்க்கை என்ன ஆகும்?. நம் குடும்ப சமூக மரியாதை கவுரவம் எல்லாம் என்ன ஆகும் என யாரும் கொக்கரிக்கவில்லை. உனக்கு அப்படி என்ன வீட்டார் அறியாமல் மற்றொரு ஆணுடன் பழக்கம் வேண்டியிருக்கிறது என அவளைக் குதறவில்லை. ஏன் அறிவுரை கூட சொல்லவில்லை. அதை மிக இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  அவனே அவளைத் திருமணம் செய்து பின்னர் வேறு ஒரு பெண்ணோடு அவளறியாமல் வாழ்கிறான்.

இதை அறிந்த அவள் கூட்டத்தார் அவளிடம் அதை எடுத்துச் சொல்லி எங்களோடு வா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். அப்போதும் கூட நீயாகத்தானே ஏமாந்தாய் என ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆக, சங்க காலத்தில் பெண்களின் விருப்பம் என்பது தன் குடும்பத்தையோ கூட்டத்தையோ சார்ந்து இல்லை. பெண் ஆளுமைகள் அரசர்க்கே அறிவுரை கூறுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். கற்பைப் போலவே களவும் ஒரு ஒழுக்கமாகப் பார்த்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் எப்போது பெண் என்பவள் ஒரு உணர்வுள்ள ஜீவன் என்பதைத்தாண்டி ஒரு கைப்பொருளாய் மாறிப்போனாள் என்பதுதான் புலப்படவில்லை.( பொள்ளாச்சி உட்பட பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.)

இப்படி எவ்வளவோ......என் எண்ணத்தில் உள்ளதெல்லாம் எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது.
நான் எப்போதும் நூலை வாசிப்பதன் முன்னர் முன்னுரை வாசிப்பதில்லை. நூலை வாசித்த பின் முன்னுரை பொருந்துகிறதா எனப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நூலை வாசித்து முடித்த போது இது ஒரு கால இயந்திரம் என்றே எனக்குத் தோன்றியது. அதையே திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் தன் முன்னுரையில் எழுதியிருந்தார்.

திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு நூல் என்பதை முற்றிலும் மறக்கடிக்கக்கூடிய வகையிலானது. கிட்டத்தட்ட மூல ஆசிரியரே தமிழில் எழுதியது போல இருக்கிறது.

இந்த நாவல் நமக்கு பல கதவுகளைத் திறந்து விடுகிறது. நாம் கொண்டாட வேண்டிய நாவல். இதை அழுத்தமாய் பரிந்துரைத்த தம்பி சுதாகருக்கு என் அன்பும் நன்றியும்.

வெள்ளி, 15 மார்ச், 2019

மார்க்சிய இயங்கியல் நோக்கில் தனித் தமிழ் இயக்கம்: தோழர் தியாகு



இயங்கியல் நோக்கு என்றால் என்ன?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்திவ்வுலகு
(குறள் 336 – நிலையாமை)
என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் திருக்குறளின் மெய்யியல் கொள்கை. இது நிலையற்ற வாழ்வை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சாவைச் சொல்வது மட்டுமன்று. ஒருவன் நேற்று இருந்தது போலவே இன்றும் இல்லை. இன்றிருப்பது போலவே நாளையும் இருக்கப் போவதில்லை என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். மனிதர்க்கு மட்டுமல்ல மற்ற அனைத்துக்கும் கூட இது பொருந்தும். எதுவுமே நேற்றிருந்தது போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப் போவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாத விதி. இதுதான் இயங்கியலின் (dialectical) அடிப்படைக் கொள்கை.

உலக அளவில் புதுமக்கால இயங்கியலின் தந்தை என்று எர்னெஸ்ட் எகல் எனும் செருமானிய மெய்யியல் அறிஞரைச் சொல்வார்கள். கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் எகலின் இயங்கியலைத் தமதாக்கிக் கொண்டார்கள். ஆனால் எகலின் இயங்கியல் கருத்துமுதற்கொள்கை சார்ந்த இயங்கியலாக இருந்தது. அவரது இயங்கியலை மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதற்கொள்கையோடு இணைத்து, பொருள்முதல் இயங்கியலை நிறுவினார்கள். அதனை சமூக மாற்றத்துக்குப் பொருத்தினார்கள்.

நான் ஈண்டு இயங்கியல் என்று குறிப்பிடும் போதெல்லாம் பொருள்முதல் இயங்கியலையே, அதாவது மார்க்சிய இயங்கியலையே சொல்கிறேன்.
தனித்தமிழியக்கத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம், சொல்கிறேன். யாவும் மாறுகின்றன என்று சொன்ன எகலிடம் அவரின் இளம் மாணவர்கள் கேட்டார்கள்: ஐயா, எல்லாம் மாறும் என்றால் பிரஷ்யப் பேரரசும் மாறிப்போய் விடும்தானே? எகல் அதை மறுத்தார். இயக்கம் என்பது பிரம்மத்தின் செயல். பேரரசு பிரம்மத்தின் உலகியல் வடிவம், பிரம்மம் மாறாதது, எனவே மாமன்னராட்சியும் மாறாதது என்று சொல்லி விட்டார். இதை ஏற்க மறுத்தவர்கள்தாம் இளம் எகலியர்கள்.

பிரஷ்யப் பேரரசு போலத்தான் ஒவ்வொரு பேரரசும்! பிரித்தானியப் பேரரசு தன்னை அப்படித்தான் சொல்லிக் கொண்டது, எண்ணிக் கொண்டது, மக்களையும் அவ்வாறே எண்ண வைத்தது. இப்போது இந்தியப் பேரரசும் இதைத்தான் செய்கிறது. பிற்போக்கான வல்லாற்றல்கள் தம்மை நிலைபேறுடையவையாகக் கருதிக் கொள்வதோடு, மற்றவர்களையும் அவ்வாறே நம்ப வைக்கப் பார்க்கின்றன.

இயற்கையும் மனிதக் குமுகமும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பது போல் சிந்தனையும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. பிற்போக்கானவை மாறுவதால்தான் முற்போக்காகின்றன. முற்போக்கானவை என்றால் இனி மாறத் தேவையில்லை எனக் கருதி விட வேண்டாம். முற்போக்கானவை மாறாமல் தேங்கி விட்டால் பிற்போக்கனவை ஆகி விடும். இந்தக் கோணத்தில் பார்க்கும் போது சிந்தனை மரபுகளும் அவற்றுக்கான இயக்கங்களும் கூட மாறிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்க வேண்டும்.

இது தனித்தமிழியக்கத்துக்கும் அது முன்னிறுத்தும் கொள்கைகளுக்கும் எவ்வாறு பொருந்தும் என்று சற்றே எட்டிப் பார்க்கும் முயற்சிதான் எனதுரை.
எல்லாக் கொள்கைகளும் மக்களுக்கு அறிமுகமாவது குருதியும் தசையுமாகத்தான். மார்க்சிய இயங்கியல் என்றதும் அதன் ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும், பிறகு லெனினும் நம் நினைவுக்கு வருவார்கள், ஆனால் தனித் தமிழியக்கம் பற்றி அவர்களிடம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழே தெரியாது. ஆனால் தமிழ் தெரிந்த மார்க்சியர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மார்க்சியர்கள் என்பதாலேயே அவர்களிடமிருந்து வருவதெல்லாம் மர்க்சியமாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என்ற எச்சரிக்கையோடு அவர்களைக் கருதிப் பார்க்கலாம்.

தனித்தமிழியக்கம் குறித்து, அதன் தோற்றம் குறித்து நாம் படித்திருக்கும் இரு கதைகளிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

கதை ஒன்று: ஒருநாள் மறைமலையடிகளும், அடிகளின் மூத்த மகள் நீலாம்பிகை அம்மையாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது, அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள,

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்
உயிர் மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேன்

என்ற பாடலைப் பாடினாராம். அவ்வளவில் அடிகள் கூறினாராம்:

“நீலா, இப்பாட்டில் தேகம் என்ற வடசொல்லை நீக்கி, அவ்விடத்தில் அதற்கு விடையாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லிருக்குமானால், அவ்விடத்தில் செய்யுள் ஓசை இன்பம் பின்னும் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதால் தமிழ்தன் இனிமை குன்றுகிறது. அத்துடன் நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அப்பிறமொழிச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம்மருமை தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன. இவ்வாறே அயல்மொழிச் சொற்களை ஏராளமாக நம் மொழியில் கலந்து ஆண்டதால் நூற்றுக்கணக்கான வட சொற்களும் அயல்மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன. அதனால் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் மறைந்தே போயின.”

இது கேட்ட மகள் நீலாம்பிகை தந்தையாரைப் பார்த்து, “அப்படியானால் இனிமேல் நாம் அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வமுடன் கூறினாராம்.

மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்ற தந்தையார், சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் எனவும், தாம் நடத்திய ஞானசாகரம் என்னும் வெளியீட்டை அறிவுக்கடல் எனவும், சமரச சன்மார்க்க நிலையம் என்ற தம் மாளிகைப் பெயரைப் பொதுநிலைக் கழகம் எனவும் மாற்றிக் கொண்டாராம். அத்துடன் தம்பி திருஞான சம்பந்தத்தை அறிவுத் தொடர்பு என்றும், மாணிக்கவாசகத்தை மணிமொழி என்றும், சுந்தரமூர்த்தியை அழகுரு என்றும், தங்கை திரிபுரசுந்தரியை முந்நகரழகி என்றும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி அழைத்தாராம். அடிகளும் மகளும் எழுதும் போதும் பேசும் போதும், இது தமிழா அயல்மொழியா என்று ஒவ்வொரு சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்துச் சற்றும் வழுவாது தனித் தமிழில் எழுதியும் பேசியும் வந்தனராம். இப்படித்தான் தனித்தமிழியக்கம் தோற்றம் பெற்றது என்று சொல்வாருண்டு.

கதை இரண்டு:
தமிழகப் பொதுமை இயக்கப் பெருந்தலைவர்களில் ஒருவரான தோழர் ப. சீவானந்தம் தனித்தமிழில் பற்றுக் கொண்டு தம் பெயரை உயிரின்பன் என்று மாற்றிக் கொண்டாராம். ஆர்வத்தோடு மறைமலை அடிகளைப் பார்க்கப் பல்லவபுரம் சென்றாராம். வீட்டு வாசலில் அழைப்பு மணிப் பொத்தானை அழுத்த, உள்ளிருந்து “யார் போஸ்ட்மேனா?” என்று குரல் கேட்டதாம். தனித் தமிழியக்கத்துக்காரர்கள் வடமொழி நீக்கத்தில் காட்டும் ஆர்வத்தை ஆங்கில நீக்கத்தில் காட்டுவதில்லை என்றெண்ணி வெறுத்துப் போய் விட்டாராம். உயிரின்பனைக் கைவிட்டுப் பழையபடி சீவானந்தமே ஆகி விட்டாராம்.

இந்த இரண்டு கதைகளும் கற்பனையன்று, உண்மை என்றே கொள்வோம். நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பார்களே, அது போலத்தான் இதுவும். நியூட்டன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த போது மரத்திலிருந்து ஆப்பிள் விழக் கண்டார். ஆனால் அது அவர் தலையில் விழவில்லை. அது ஏன் மேல்நோக்கி எழாமல் அல்லது பக்கவாட்டில் செல்லாமல் நிலம்நோக்கி விழ வேண்டும் என்ற வினா அவருள் எழுந்தது. ஈர்ப்பு விசையைக் கண்டறிய இதுவும் ஒரு தூண்டுதல் ஆயிற்று. இது வரை உண்மை. ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்ச்சியால்தான் ஈர்ப்பு விதியை அவர் கண்டறிந்தார் என்பது சரியன்று.

மறைமலையடிகள் – நீலாம்பிகை உரையாடல் குறித்து, “தனித்தமிழியக்கத்தின் தோற்ற நிகழ்ச்சி சுவாரசியமானதாகவும், நாடகபாணி நெறிபட்டதாகவும் அமைகின்றது” எனக் கருதும் அறிஞர் சிவத்தம்பி, “மறைமலையடிகள் இத்தகைய நாடக நிலைப்பட்ட முறையில் தனித்தமிழியக்கத்தைத் தோற்றுவித்தாரென்று கூறுவதிலும் பார்க்க, பல காலமாக உள்ளத்துள் அறிவுசெல் நெறியில் கருவிட்டு உருப்பெற்று வளர்ந்து வந்த ஒரு கருத்து மேற்குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இயக்கப் பரிமாணம் பெற்றது எனக் கூறுவதே பொருத்தமானதாகும்” என்று முடிவு செய்கிறார். தனித்தமிழ் இயக்கம் குறித்த சிந்தனை அடிகளாரிடம் பரவியிருந்தாலும், இயக்கமாக உருப்பெறுவதற்கு நீலாம்பிகை அம்மையாரிடம் நிகழ்த்திய உரையாடலும் காரணம் என்பதை சிவத்தம்பியிடமிருந்து அறிய முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச் சூழலில், தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார் என்பதே சிவத்தம்பியின் பார்வை.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் போலவே தனித்தமிழ் இயக்கப் பிறப்புக்கும் அடிப்படைக் காரணம், உடனடிக் காரணம் இரண்டும் உண்டு என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தனித்தமிழியக்கத்தை முழுக்க ஏற்றவர் அல்லவென்றாலும் அவ்வியக்கத் தோற்றம் பற்றிய அவரது பார்வை வரலாற்று இயங்கியல் நோக்கில் அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

தோழர் சீவானந்தம் ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு தனித்தமிழியக்கம் குறித்து இறுதியாக ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பார் என்பதும் நம்பக்கூடியதன்று. தமிழ்நாட்டு மார்க்சியர்களில் சீவானந்தம் சற்று மாறுபட்டவர் என்று கருதப்பட்டாலும், தனித்தமிழியக்கம் குறித்து அவர்களிடமிருந்து அடிப்படையிலேயே மாறுபட்ட ஒரு பார்வை அவருக்கிருந்ததா என்பது ஆய்வுக்குரியது. இந்தியத் தேசியத்துக்குள் ஒடுங்கி விட்ட தமிழக மார்க்சியர்களின் பார்வைதான் சரியான மார்க்சியப் பார்வையா என்பதும் கூட ஆய்வுக்குரியதே.

மொழித் தூய்மைக்கான இயக்கம் தமிழுக்கு மட்டுமே உரித்தானதன்று. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து இவ்வாறான முயற்சிகள் நடைபெறவே செய்தன. இவை குறித்து மார்க்சியப் பேராசான்கள் என்ன கருதினார்கள் என்று பார்க்க வேண்டும்.
கார்ல் மார்க்சின் தாய்மொழியான ‘டொச்’ எனும் செருமன் மொழியில் இலத்தீன் மற்றும் கிரேக்கச் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. போப்பாதிக்கத்தை எதிர்த்து புரொட்டஸ்டண்ட் சமயத்தை நிறுவிய மார்டின் லூதர் இம்மொழிக்கலப்பை எதிர்த்தார். கார்ல் மார்க்சும் பிறமொழிக் கலப்பை எதிர்ப்பவராகவும் மொழித் தூய்மையை வலியுறுத்துகிறவராகவும் இருந்தார். மார்க்ஸ் தமது மூலமுதல் (தஸ் கேபிட்டல்) நூலுக்கான ஆய்வுகளை பிரித்தானியாவில் மேற்கொண்டவர்; பொருளியல் அறிவியலில் அவருக்கு முன்னோடிகளான ஆதாம் சுமித், டேவிட் ரிக்கார்டோ போன்றோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள்; மார்க்ஸ் ஆண்ட ஆய்வுத் தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தன; இத்தனையையும் மீறித்தான் அவர் தமது பெரும்படைப்பாகிய தஸ் கப்பிடல் (மூலதனம் அல்லது மூலமுதல்) நூலைத் தமது தாய்மொழியாகிய செருமன் மொழியில் எழுதினார். அந்த அறிவியல் அம்மொழியில் போதிய வளர்ச்சி பெறாத நிலையில் கலைச் சொற்களுக்கிருந்த கடும் தட்டுப்பாடு பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். மார்க்ஸ் செருமன் மொழியில் மூலமுதல் படைத்தார் என்பது மட்டுமல்ல, இயன்ற வரை பிறமொழிக் கலப்பில்லாமலே அதைச் செய்தார். தவிர்க்க முடியாதவாறு வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்த நேரிட்ட போதும் அதற்காக வருத்தப்பட்டார். சில புதிய கருத்தாக்கங்களை வெளியிடும் இன்றியமையாத் தேவை கருதி இலத்தீன் மொழியிலும் கூட புதிய தொடர்களைப் புனைந்தார். இவ்வாறான பிறமொழி உட்கலத்தலை அரிதிலும் அரிதாகவே அவரிடம் காண முடியும்.

உருசிய மொழியில் செருமன், பிரெஞ்சு மொழிகள் அளவின்றிக் கலந்து கிடந்தன. தமிழர்களின் வடமொழி மயக்கம் போல், ஆங்கில மயக்கம் போல், உருசிய மேட்டுக் குடியினர் பிரெஞ்சு மயக்கம் கொண்டலைந்தனர். உலோமொனசோவ், அலெக்சி தோல்ஸ்தோய் போன்ற அறிஞர்கள் உருசிய மொழித் தூய்மையை வலியுறுத்தியவர்கள். உருசிய மொழியில் தலைசிறந்த புரட்சி இலக்கியராகத் திகழ்ந்த மக்சிம் கார்க்கி மொழித் தூய்மைக்கான போராட்டத்தை பண்பாட்டுக் கருவிக்கான போராட்டமாகவே மதித்தார். புரட்சித் தலைவர் இலெனின் பிறமொழிக் கலப்பை உறுதியாக எதிர்த்தவர்.

“நாம் உருசிய மொழியைக் கெடுக்கிறோம். தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றையும் தவறாகப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிறமொழிச்சொற்கள் என்னை எரிச்சலுறச் செய்கின்றன” என்று கூறிய இலெனின் “உருசிய மொழிச் சிதைப்பிற்கு எதிராகப் போர் தொடுக்க இது உரிய நேரமல்லவா?” என்று கேட்டார்.

எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிக் கலப்பைத் தவிர்ப்பதில் குறியாய் இருந்த இலெனின் “மக்களிடத்தில் இலத்தீன் கலப்பின்றி எளிய முறையில் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
தேசியக் குமுகாயத்தின் ஆக்கக்கூறுகளில் முதன்மையானது மொழி. தொடர்பு ஊடகம், சிந்தனையூர்தி என்பதையெல்லாம் காட்டிலும் மொழிதான் குமுக வாழ்வின் ஊடகம். மனிதன் குமுகப் பிராணி என்பதால் மனிதனை மனிதனாக்குவது மொழி. மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு பற்றிப் பேசும் எங்கெல்சு “கை என்பது உழைப்பின் உறுப்பு மட்டுமல்ல, உழைப்பின் படைப்புமாகும்” என்பார். அதே போல் மொழியும் குமுக வாழ்வின் கருவி மட்டுமன்று, குமுக வாழ்வின் படைப்புமாகும். மனிதர் மொழியைப் படைத்தார், மொழி மனிதரைப் படைத்தது என்று நான் சொல்வதுண்டு. ஆதிமனிதக் கூட்டம் ஒவ்வொன்றிலும் ஓசைகளாகப் பிறந்து, தெளிந்த ஒலிக்குறிப்புகளாக உருப்பெற்று, திசைமொழியாக வளர்ந்து, ஒலிவடிவத்தோடு வரிவடிவமும் பெற்று மொழி முழுமையடைகிறது. இது மொழிப் பிறப்பின் இயங்கியல். குலம் அல்லது பழங்குடியை ஒன்றாக்கும் காரணிகளில் குருதியுறவோடு மொழியும் சேர்ந்து கொள்கிறது. அருகருகிலான பழங்குடிக் குலங்கள் ஒன்றுகலந்து அவற்றின் திசைமொழிகள் ஒரே மொழியாக ஒன்றுகலக்கும் போது, குருதியுறவுக்கு மாற்றாக ஒரு பொதுமொழியே குமுகாயத்தை ஒன்றாக்கும் முதன்மைக் காரணி ஆகிறது. மொழிவழிக் குமுகாயமே தேசிய இனத்தின் கருநிலை எனத்தகும். மொழியோடு ஆட்சிப்புலமும் பண்பாடும் பொருளியல் பிணைப்பும் சேர்ந்து வரலாற்றுப் போக்கில் நிலைபெறும் போது தேசிய இனம் மலர்கிறது.

இந்தத் தேசிய இன உருவாக்கம் அயற்குறுக்கீடற்றதாக அமையும் போது பேச்சு மொழி, எழுத்து மொழி, வட்டார மொழி, கலை மொழி போன்ற பன்முகங்கள் வெளிப்பட்டாலும் பிறமொழிக் கலப்புக்கு வாய்ப்பு அரிது. ஆனால் வெவ்வேறு மொழிவழிக் குமுகாயங்கள் ஒன்றுகலந்து ஒரு தேசிய இனமாக உருப்பெறும் போது அதன் பொதுமொழி ஒரு கலவைமொழியாக அமைந்து காலப்போக்கில் அதுவே ஒரு தனிமொழியாக நிலைபெறுகிறது.

பிரெஞ்சு, ஸ்பானியம் போன்ற மொழிகளின் கூறுகளை உள்ளிணைத்துக் கொண்டு பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செயல்வழியில் அமெரிக்க ஆங்கிலமாக மருவிற்று.

தென்னாப்பிரிக்காவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய வெள்ளையர்கள் (ஆங்கிலேயர்கள் அல்லர்) செருமனி, ஆலந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழிகள் புதிய
வாழ்க்கைச் சூழலில் ஒன்றுகலந்து ஆப்பிரிக்கான்ஸ் என்ற புதிய மொழி தோன்றியது. ஆப்பிரிக்கான்ஸ் பேசிய வெள்ளையர்கள் ஆப்பிரிக்கனர்கள் எனப்பட்டனர்.

இந்த நேர்வுகளில் மொழிக்கலப்பு என்பது வரலாற்றுப் போக்கில் இயல்பாக நிகழ்வுற்று, மானிட வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் கருவியாயிற்று.

ஆனால் மொழிக் கலப்பில் மற்றொரு வகை ஒடுக்குமுறையால் பிறந்து ஆதிக்கத்துக்குக் கருவியாகிறது. இது நலம்பயக்கும் கலப்பன்று, கேடு செய்யும் கலப்படம் எனலாம்.
தமிழில் ஏற்பட்ட பிற மொழிக்கலப்புகள் அடிப்படையில் அயலாதிக்கத்தினால் ஏற்பட்டவை.

ஆரியர்களால் வடமொழியும் ஆங்கிலேயர்களால் ஆங்கிலமும் தமிழில் கலப்புற்றன. இந்தி, பாரசீகம், உருது, தெலுங்கு போன்றவற்றின் கலப்பும் அரசியல் மேலாதிக்கத்தின் துணையோடு நிகழ்ந்ததே. தமிழில் பிறமொழிக் கலப்புக்கு எதிரான போராட்டம் என்பதன் சாரம் வேற்றின ஆதிக்கத்துக்கான எதிர்ப்பாகவே இருந்துள்ளது. ஆகவே தனித்தமிழியக்கம் என்பது வெறும் மொழிசார்ந்த முயற்சி என்பதற்கும் மேலே, இறுதிநோக்கில் தமிழின விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

வல்லாதிக்க எதிர்ப்புத் தேசியங்களுக்குள்ள சனநாயக உள்ளடக்கம் பற்றி இலெனின் பேசினார். இவ்வகையில் இந்தியத் தேசியத்துக்கும் தமிழ் மக்களை வல்லாதிக்க எதிர்ப்புக்கு அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களும் பாவலர்களும் எழுத்தாளர்களும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து – முதன்மையாக வடமொழி, ஆங்கிலக் கலப்புகளை எதிர்த்து – தமிழ்மொழித் தூய்மைக்காக உழைத்தார்கள். அந்த அளவில் அவர்களது முயற்சியில் தமிழ்த் தேசியமும் விதையாக உள்ளிருக்கக் காணலாம். பாரதியார், திரு.வி.க., போன்றவர்களின் உருவில் வெளிப்பட்ட தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசியத்தின் சனநாயக உள்ளடக்கம் என்பது அயலாதிக்க எதிர்ப்புக்கு இணையாக உள்ளாதிக்க எதிர்ப்பையும் கோரி நிற்கிறது. இங்கேயும் மொத்தத்தில் பிறமொழிக் கலப்பு ஆதிக்க ஆற்றல்களின் தேவையாகவும், மொழித்துய்மைக்கான முயற்சிகள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் போரட்டத்தின் கூறாகவும் அமைகின்றன. ஆக, நாட்டு விடுதலைக்காக முனைந்து நின்றவர்களைப் போலவே, சமூக விடுதலையில் நாட்டம் கொண்டிருந்தவர்களும் பிறமொழிக் கலப்புக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்களாக விளங்கினார்கள்.

தந்தை பெரியார் கொள்கையளவில் தனித்தமிழியக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், செயலளவில் அவ்வியக்கத்துக்குத் துணைநின்றவர். சுயமரியாதையைத் தன்மதிப்பாக மாற்றிக் கொள்ளா விட்டாலும், தாம் நிறுவிய ஏடுகளுக்குக் குடியரசு என்றும் விடுதலை என்றும் பெயர் சூட்டியவர். பெரியாரை விடவும் பெரியார் வழிவந்த பலரும் — பொன்னம்பலனார், பாரதிதாசன் போன்றோர் — தனித்தமிழ்த் துடிப்புடன் விளங்கினார்கள். தனித்தமிழியக்கத்தை நிறுவி வழிநடத்திய மறைமலை அடிகளின் சைவப்பற்று அனைவரும் அறிந்ததே என்றாலும், அவரோடு பெரியார் தமிழ் மீட்பு முயற்சிகளில் இணங்கியும் இணைந்தும் செயல்பட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போரில் தமிழர் தலைவர் பெரியாரின் தலைமையில் அடிகளாரும் பிற தமிழறிஞர்களும் அணிதிரன்டதும், அப்போராட்டத்தின் உச்சப்புள்ளியாக, பெரியார், சோமசுந்தர பாரதியாருடன் சேர்ந்து மறைமலை அடிகளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியதும் தன்மதிப்புக்கும் தனித்தமிழுக்குமான இயக்க உறவின் சான்றுகள்.

இந்தியத் தேசியமும், தமிழ்த் தேசியமும், சமூக நீதி என்னும் குமுக அறமும் ஆகிய குறிக்கோள்கள் அதனதன் வரலாற்று வரம்புகளுக்குள் தனித்தமிழியக்கத்துக்கான புற அடிப்படைகளாக அமைந்தன என்று சொல்வது தனித்தமிழியக்கத்தின் மொழிசார் அகவரலாற்றை மறுப்பதோ மறைப்பதோ ஆகாது. பாவாணர் சொல்கிறார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

சுருங்கச் சொல்லின் இதுதான் தனித் தமிழியக்கத்தின் அகவரலாறு. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவாணர் – தனித்தமிழ் மலைத் தொடரின் உயர்முகடுகள் என்ற இந்த வரிசையில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தனித்தமிழியக்க வளர்ச்சியின் புற ஏரணத்துக்கும் அக ஏரணத்துக்குமான இயங்கியல் உறவை மார்க்சியம் பற்றி நிற்கிறது.
தனித்தமிழியக்கத்தைக் குமுகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆய்வு செய்த அறிஞர்களில் கைலாசபதியும் கா. சிவத்தம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். கைலாசபதி சொல்கிறார்:

“இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ள அறிவியல், சட்டம், ஆட்சித்துறை, வணிகவியல் தொடர்பான் பல கலைச் சொற்பட்டியல்களை ஆராய்ந்தால், கலைச்சொல்லாக்கத்தில் தனித்தமிழியக்கம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தோன்றுகிறது. மறைமலையடிகள் தமிழும் அவரால் தாக்குறப்பெற்றவர்கள் தமிழும் இக்காலத் தமிழ்மொழியில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.”

இதே கைலாசபதி இப்படியும் சொல்வார்: “தொல்சீர்த் தமிழைக் காப்பதோடு தமிழை வடமொழிக் கலப்பில்லாததாகவும் ஆக்க வேண்டும் என்ற வேதாச்சலத்தின் முயற்சி இரட்டைப் பிற்போக்கானது. அது செயற்படுத்த முடியாத ஒரு பணி.”

சிவத்தம்பி சொல்வார்: “மறைமலையடிகள் தமது பிராமண எதிர்ப்பியக்கத்தைத் தமிழின் தொன்மையான தூய்மையைக் கெடுக்கும் ஒரு சமூக சக்திக்கெதிரான ஓர் இயக்கமாகவே கொண்டாரென்பது தெரிய வரும். பிராமண எதிர்ப்பியக்கமானது திட்டவட்டமான ஓர் அரசியல் இயக்கமாக முகிழ்த்துக் கிளம்பிய பொழுது, அந்த அரசியல் சக்தியின் வளர்ச்சிக்கு இவரது கருத்து, செயல், நடவடிக்கைகள் உதவின. இத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கும் போது தனித்தமிழியக்கம் பழமையைப் பேணும் ஓர் இயக்கமாகவே தொழிற்பட்டது என்பது தெரிய வரும்.”

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் அறிவும் உழைப்பும் போற்றுதலுக்குரியவை என்பதில் நமக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் தனித்தமிழியக்கம் பற்றிய அவர்களின் தீர்ப்பில் அவர்கள் பெரிதும் வலியுறுத்தும் சமூக அறிவியல் பார்வையைக் காணவில்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொல்சீர் தமிழை மீட்கவும் காக்கவும் வேண்டும் என்பது மட்டுமன்று, காலத்தின் தேவைகளுக்கேற்ப வளர்க்கவும் வேண்டும் என்பதுதான் தனித்தமிழியக்கத்தின் நிலைப்பாடு, இந்தப் பணியை அது வெற்றிகரமாகச் செய்தும் உள்ளது. கலைச்சொற்களைத் தமிழாக்கும் போது தொன்மைத் தமிழ் எப்படியெல்லாம் துணைக்கு வரும் என்பதற்கு சொல்லாய்வறிஞர் அருளியாரின் கலைச்சொல் அகரமுதலி ஓர் அரும்பெரும் எடுத்துக்காட்டு.

மொழிமீட்புக்கும் மொழிக்காப்புக்கும் மொழிவளர்ச்சிக்குமான இயங்கியல் உறவை கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களால் காண முடியவில்லை எனத் தோன்றுகிறது. தனித்தமிழியக்கம் தேவையற்ற பிறமொழிக் கலப்பை வன்மையாக எதிர்க்கும் போதே, தேவை கருதிப் பிறமொழிச் சொற்களையும் தொடர்களையும் தமிழ் மரபு கெடாமல் தன்வயமாக்கிக் கொள்ளத் தயங்குவதில்லை. தனித்தமிழ் இயக்கம் என்பதைத் “தனித்து அமிழ் இயக்கம்” எனப் புரிந்து கொள்ள வேண்டாம்! பேராசிரியர் இளவரசு ஒரு முறை இப்படிக் கூறியதாக நினைவு!

தமிழில் பிறமொழிச் சொற்களைச் சிறும அளவில் ஆளும் தேவை என்பது நிலைபேறுடையதன்று. காலப்போக்கில் விரைந்து அவற்றையும் தூய தமிழாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். அப்படிச் செய்யும் போதே கலை-அறிவியல் வளர்ச்சி காரணமாய் வேறுசில பிறமொழிச் சொற்கள் வந்து சேரலாம். அவற்றையும் தூயதமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி தொடரும். அதாவது தனித்தமிழ் என்பது முடிந்த முடிவன்று. இயங்கியல் நோக்கில் அது தொடர்ச்சியான செயல்வழி. தமிழ்க் குமுக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான செயல்வழி.

பாய்ந்தோடும் உயிராறு தனித்தமிழ் இயக்கம். அதனைத் தேங்கிய குட்டையாகப் பார்ப்பது இருவிதமான பிறழ்வுகளுக்கு வழிசெய்கிறது. ஒன்று, பிறமொழி வாயிலாகக் கிடைக்கும் அறிவுச் செல்வத்தை உள்வாங்கித் தமிழைச் செழுமைப்படுத்தும் தேவையை மறுத்து, எல்லாம் தமிழில் உள்ளது என்ற குருட்டு இறுமாப்பு. இரண்டு, எல்லாவற்றையும் தமிழால் வெளிப்படுத்த முடியும், முடியுமாறு தமிழர்களால் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளாமல், பிறமொழிகளை நத்திக்கிடக்கும் அடிமைக்குணம். இந்த இரு பிறழ்வுகளையும் மார்க்சியம் உறுதியாக மறுதலிக்கிறது. இந்தப் பிறழ்வுகளைக் களைந்து தனித் தமிழியக்கத்தை தமிழ் நலன் கருதியும் தமிழர் நலன் கருதியும் முன்னெடுத்துச் செல்ல இயங்கியல் நோக்கு நமக்குதவும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமகன் என்றாலும் தனித்தமிழை ஏற்றவரல்லர். “ஏழை வேலைக்காரனைப் பார்த்து ‘சோறு தின்றாயா? என்று கேட்கலாம். கனவானைப் பார்த்து ‘போஜனமாயிற்றா? ‘நிவேதனம் ஆயிற்றா?என்று கேட்பதும், துறவிகளைப் பார்த்து ‘பிக்ஷை ஆயிற்றா? என்று கேட்பதும் சம்பிரதாயங்கள் என்று உ.வே.சா. சொல்வது அவரது குமுகக் சார்பை மட்டுமின்றி, இதற்கு நேர்மாறான தனித்தமிழின் குமுகச் சார்பையும் சுட்டி நிற்கிறது.

“வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வர மாட்டேன் என்கிறது என்று சங்கரச்சாரியார் கூறியதையும் இப்போதைய நிலவரத்தையும் ஒப்புநோக்கினால் போதும், தனித்தமிழியக்கத்தின் வெற்றி புலனாகும். அவர் காலத்திலேயே வானொலி கேட்டுத் தொலைக்காட்சி பார்த்திருப்பார். நீசர்களும் ஏறும் பேருந்து ஏறினாரா, தெரியவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியாரும் பேராயக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி ஐயரும் மட்டுமல்ல, நாமக்கல் கவிஞரும் வையாபுரிப் பிள்ளையும் ம.பொ.சி.யும் கூட தனித்தமிழியக்கத்தின் தேவையை மறுக்கவே செய்தார்கள். வடமொழிக் கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வடமொழிக் கலப்பு ஒரே நாளில் நிகழ்ந்ததன்று என்பதால் கலப்பு நீக்கமும் ஒரே நாளில் நடந்து முடிந்து விடாதுதான்.

ஆனால் அதற்கு முயற்சி, நீண்ட முயற்சி, விடாப்பிடியான முயற்சி தேவை. இந்த அறிஞர்கள் முயற்சிக்கு மாறாக முயற்றின்மையில் மூழ்கிக் கிடந்தார்கள். முயற்சியில் ஈடுபடும் மற்றவர்களையும் பழித்துரைத்தார்கள். தனித்தமிழ் திடுமென்று வானின்று குதித்ததன்று என்பதால்தான் இயக்கம் தேவைப்படுகிறது. பிறமொழி மயக்கம் என்ற நோய்க்கு மருந்து தனித்தமிழ் மயக்கம் அன்று, தனித்தமிழ் இயக்கமே என்பதில் தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தெளிவுண்டு.

“சுவாமி வேதாசலம் (மறைமலையடிகள்) சம்ஸ்கிருத எதிர்ப்பாளரே தவிர ஆங்கில எதிர்ப்பாளரல்ல என்று தோழர் பாலதண்டாயுதம் சொல்வது தனித்தமிழியக்கம் பற்றிய முழுமையான பார்வை ஆகாது. பாலதண்டாயுதம் சம்ஸ்கிருத எதிர்ப்பாளரும் அல்ல, இந்தி எதிர்ப்பாளரும் அல்ல, ஆங்கில எதிர்ப்பாளரும் அல்ல என்று நம்மாலும் சொல்ல முடியும். இந்திய மயக்கத்தாலும் தமிழியத்தின் பால் எதிர்ப்பாலும் வழிதவறிப்போன பொதுமை இயக்கத்தின் தடுமாற்றம்தான் பாலதண்டாயுதத்திடமும் வெளிப்படுகிறது.

தனித்தமிழியக்கத்தின் மீதான குற்றாய்வுகளைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் தக்க விடையளிக்கிறார் முனைவர் கு.திருமாறன் (நூல்: தனித்தமிழியக்கம். இக்கட்டுரைக்கான தரவுகள் பெரும்பாலும் இந்நூலிலிருந்து பெற்றவையே.)
மார்க்சியர்களாக அறியப்பட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் தனித்தமிழியக்கம் பற்றிய பார்வையில் சற்றே மாறுபட்டு நின்றவர் தோழர் சீவானந்தம்தான். தனித்தமிழியக்கத்தைப் பிற்போக்கானது என்று முத்திரையிடும் பொன்னீலனின் பார்வைக்கு சீவா உதவ மாட்டார். சீவா சொல்கிறார்:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ் மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழிவெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக் கூடாது…. கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான எளிய தமிழிலே, எளிதாகப் புரியக் கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டுவருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப் போக்கு சரியே.

சீவா சொல்வது சரியே! ஆனால் மார்க்சிய நோக்கில் இது முழுமையானதன்று. வர்க்கப் போராட்டம், அதன் வடிவங்களான சனநாயகப் போராட்டம், தேசிய இனவுரிமைப் போராட்டம் ஆகியவற்றின் பின்புலத்திலும், மொழித் தூய்மைக்கான நீண்ட நெடிய முயற்சியின் இயல்புத் தொடர்ச்சியாகவும் தனித்தமிழியக்கத்தை நிறுத்திப் பார்க்க விடாமல் அவரைத் தடுத்தது எது? இந்தியத் தேசிய மயக்கமும் இந்தியத் தேசியத்துக்கு மாறான ஒவ்வொன்றின் பாலும் அவர் கொண்ட காழ்ப்பும்தானே?


(தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ்த் தேசம்)
thozharthiagu.chennai@gmail.com

புதன், 19 டிசம்பர், 2018

போன தலைமுறைப் புயலைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடலும் வரலாறும் :- துரை.இராசகுமாரன்

புள்ளான்விடுதி என்றொரு கிராமம் , எங்கள் ஊரை அடுத்து அமைந்துள்ளது. அந்த ஊரில்தான் நடேசக் கோனார் என்ற ஒரு தலைசிறந்த நாட்டுப்புறப் பாடகர்  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார்.  ஈழம் வரை சென்று பாடல்பாடி பொருள் ஈட்டும் அளவிற்குக் காத்திரமான பாடல்களைத் தாமே இயற்றிப் பாடும் வல்லமை கொண்டவராக நடேசக்கோனார் இருந்துள்ளார்.

1956 வரை வாழ்ந்த கோனார் அந்தக் காலகட்டப் பகுதியில் தானாண்மை நாட்டுக் கிராமங்களைக் குறித்த பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். அவற்றில் எங்கள் கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல், வணிகம், அதிகாரப் போட்டியில் நடந்த கொலைச் சம்பவம், பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்குகள் என்று பல தரவுகள் ஊடாடிக் கிடக்கும்.

ஒரு வட்டாரத்தின் அரை நூற்றாண்டுகாலத்திய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்ற அவரது பாடல்கள் அழிந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கில்  கீரமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் பெருமுயற்சியால் 90 களில்  நடேசக்கோனாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

நடேசக் கோனாரின் பாடல் ஏடு ஒன்றில் 50 களின் தொடக்கத்தில் நாகை வழியே கரை கடந்த பெரும் புயல் ஒன்றைப் பற்றியும் , அதனால் எங்கள் பகுதிக் கிராமங்கள் சூறையாடப்பட்ட தகவல்களையும் முன்பு படித்த  நினைவு... மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம் என்று அடுக்கிலிருந்த புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்தேன்.

ஆச்சரியம் என்னவென்றால், மணிக்கு 80 மைல் வேகத்தில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் சொல்லப்படாத அந்தப் புயலின் கோரம் இன்றைய கஜாவின் கொடூரத்தோடு ஒரு செய்திகூட விடுபட்டுப் போகாமல் அப்படியே ஒன்றி வருகிறது .

நந்தன ஆண்டு, கார்த்திகை மாதம் 15 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ...
அந்தப் புயல் தாக்கியதாகப் பாடல் தொடங்குகிறது.

"மாங்காய் காய்ச்ச மரமெல்லாம் மலைமலையாய்ச் சாய்ஞ்சுதே
தேங்காய் காய்ச்ச மரமெல்லாம் தேருத்தேராச் சாய்ஞ்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே
பலாவும் வேம்பும் போச்சுதே
பூட்டன் வச்சுக் காய்ச்சுதே புளியந்தோப்பும் போச்சுதே.."
என்று பாடல் விரிவடைகிறது.

மாமரம், தென்னை, பலா, புளியமரம், சவுக்கு, முருங்கை , வாழை, பனை, கருவை மரம், கரும்பங் கொல்லை , ஈச்சமரம், வேலா மரம் உள்ளிட்டவை சாய்ந்து விட்டதாக நடேசக் கோனார் எதுகை மோனையில் வரியமைத்துப் பாடியுள்ளார்.

" சோலையான சவுக்கெல்லாம் தூருத்தூராச் சாய்ஞ்சுதே
சாலைநீள மரமெல்லாம்
சாருச்சாராய் சாய்ஞ்சுதே..."
என்ற வரிகள் இம்மி கூட பிசகின்றி இன்றைய நிலையோடு ஒட்டி வருகிறது.

மேலும்  பேசும் படக் கொட்டகை, தந்தி , தண்டவாளம் , அந்தி ரெயில் போன்றவையும் புயலால் பாதிப்படைந்துள்ளாக பாடல்  வரிகள் அமைந்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளும், தொடர் வண்டிகளும் ( பேராவூருணி- காரைக்குடி வழித்தடம் ) 40 களிலேயே எங்கள் பகுதியில் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவருகிறது.

மீன் பிடிக்கப்போன செம்படவர் சிலர் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடும் கோனார், அம்மையாண்டி கண்டிக்குளத்தில் இரண்டு குருவிக்காரர்கள் வேட்டைக்குப் போன இடத்திலேயே புயல் தாக்கி இறந்து கிடந்ததையும் குறிப்பிடுகின்றார்.
( இந்தக் குருவிக்காரர் எனும் தனித்த இனக்குழு மக்கள் இன்றும் வேட்டையாடிக் கொண்டு ஊரை விட்டு விலகி காட்டுப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் ).

புயல் தாக்கிய மறுநாள் காலையில் மறமடக்கிச் சந்தையில் இருந்து திரும்பிய ராமன் என்பவர் வரும் வழியிலேயே இறந்து கிடக்கிறார்.

மாங்காடு கிராமத்தில் தோட்டக்காவல் வேலை பார்த்த  சின்னமுத்து என்பவர் புயல் தாக்கியதில்  தோட்டத்திலேயே இறந்து விடுகிறார். ( தோட்டம், கோயில், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காவல்காக்கும் காவல்காரக் குடும்பங்கள் தானாண்மை நாட்டுக் கட்டமைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது கோயில் காவல் குடும்பங்கள் மட்டும் முத்தரையர்களில் ஓரிருவர் அதே பெயரில் இருக்கின்றனர்) .

ஒட்டன்காடு அருகேயுள்ள கொன்றைக்காட்டின் ரைஸ்மில்லில் சுவரோரமாகப் புயலுக்கு ஒதுங்கி நின்ற ஒன்பது பேரில் எட்டு பேர் சுவர் இடிந்து விழுந்ததால் அதே இடத்தில் நசுங்கிச் சாகின்றனர்.

சித்துக்காட்டில் ஒரு குடும்பத்தினர் மொத்தமாக இறந்துள்ளனர் ...

இதுபோல மரங்களுக்கும் மனிதர்களுக்கும் பேரிழப்பை நந்தன ஆண்டில் வீசிய புயல் ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் தாக்கியவுடன் இரவில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மாடி வீடுகளுக்குள் மக்கள் தஞ்சம் புகுந்ததைப் போலவே கடந்த நூற்றாண்டுப்  புயலின்போதும் மக்கள் அழுகுரலோடு வீடுவீடாக ஓடிச் சென்றதை

" சிகப்புச் சீமை ஓடெல்லாம் சின்னாபின்ன மாச்சுதே
தகப்பன் நாட்டு ஓடெல்லாம் தாறுமாறாப் போச்சுதே.."

" ஓட்டைநம்பி யந்தவீட்டில்
ஓடியுள்ளே நுழைஞ்சுதே
ஓடுகளும் பிடுங்கியோட்டு
வீடுகளும் பிரிஞ்சுதே

மாடிமெத்தை மச்சுவீட்டைத்
தேடியங்கே நுழைஞ்சுதே
மத்தியிலே மரம்விழுந்து
மெத்தைவீடும் அழிஞ்சுதே.."
என்ற வரிகள் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, நூற்றாண்டு கடந்தாலும் குடிசைகளுக்குள் வாழ்ந்த ஏழை சனம் இன்னும் குடிசைகளுக்குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான வேதனை மிக்க வரலாற்றின் எழுத்தாவணம் இந்த வரிகள்.

புயல் பற்றிய குறிப்புகளைத் திரட்டுவதற்காகச் சில ஆவணங்களை வாசித்ததில் இருந்து நான் உணர்ந்து கொண்ட உண்மை... நடேசக் கோனார் வாழ்ந்த நந்தன ஆண்டில் வீசிய கொடும் புயலுக்குப் பிறகு தென்னையை முறிக்கின்ற அளவிற்கு வீசிய புயல்  கஜா வாகத்தான் இருக்க முடியும்! அதாவது, அரைநூற்றாண்டு இடைவெளியில் வீசியுள்ளது.

கஜா என்பது " தலைமுறைப் புயல்" இந்தத் தலைமுறை நாம் அதற்கு முகம் கொடுத்து விட்டோம். இயற்கை இனி நம் தலைமுறைக்கு  அத்தகைய புயலை கொண்டுவந்து சேர்க்காது என்ற நம்பிக்கையோடு ( 'மறு புயல்' பற்றின வதந்திகளை புறந்தள்ளிவிட்டு ... ) மீண்டும் நம் மண்ணை மறுகட்டமைவு செய்வோம்.

அதேநேரத்தில்,  'மண்சார்ந்த படைப்புகள் '  எத்தனை முக்கியமானது என்பதையும் அந்தந்த மண்ணின் மக்கள் உணர வேண்டும். அதன் மூலம்தான் அடுத்தடுத்த தலைமுறைகள் தமக்கான வாழ்வைத் தகவமைவு செய்து கொள்ள முடியும். நடேசக் கோனார் பாடிவைத்ததாலேயே நாங்கள் சில பாடங்களைக் கற்றுணர்கிறோம் .
' புயல் புதிதல்ல...' என்கிற புரிதலே மீண்டும் உழைப்பதற்கான ஒரு பெரும்  மன உந்துதலைத் தருகிறது.

மேலும் காலங்கள் ஓடினாலும் காற்றுக்குப் பயந்து மாடி வீடு தேடி ஓடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...நூற்றாண்டுகளாக நம் மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த புயலுக்காவது அவர்கள் ஓடியொளியாத அளவிற்கு சமூகம் வலுப்பட வேண்டும் என்கிற உறுதிப்பாடும் மனதில் எழுகிறது. இவைதான் படைப்பின் வலிமை!

படைப்பூக்கம் கொண்ட எழுத்தாக்கங்கள் தமிழ்க் குடிகள்தோறும் ஏன் எழ வேண்டும் என்பதற்கும் இவைதான் உதாரணங்கள்.  காலங்களின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் எழுத்தும், பேச்சும்தான் ஒரு சமூகத்தின் வழிகாட்டி, வழி நடத்தி...

" ஆலமரமும் கால மாச்சுதே -
ஏ ! காத்தாயி
அதை ஆண்ட முனியும்
மாண்டு போச்சுதே.."

முறிந்த மரத்தின் கீழே நின்று கோனார் பாடிக் கொண்டிருக்கிறார்.

வியாழன், 13 டிசம்பர், 2018

சுளுந்தீ நாவல் - தமிழுக்குக் கிடைத்த கொடை: - பா.முருகன்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்தியங்களையும், தனிமனித வீரம் நிகழ்த்தும் வரலாற்று மாற்றங்களால் எழும் நாட்டார் கதைகளும், ஜமீனுக்குட்பட்ட அதிகார வரம்புகளை நில வரைவியல் முறையில்  பாலியல் பாசாங்குகள் அற்றுப் பேசும்போது அது ஏற்படுத்தும் மாயஜாலங்களும்,
சவரக்கத்திக்குள் மறைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இவ்வளவு நெருக்கமாகப் பதிவு செய்த விதத்தில் இந்த நாவல் அதிசயத்தை நிறுத்துகிறது. இதற்கு முன் மளையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ' சின்ன அயரத்தி' நிறுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. நாவிதன் புரவியின் காலடிச்சத்தம் காதுக்குள் கதம்ப வண்டுச் சத்தமாய் கிறுகிறுக்க வைக்கிறது. கிடா முட்டுச்சத்தம்  நமக்கான பெருந்தண்டனையாய் மாறும் அதே நேரத்தில், நாவிதனின் நடவடிக்கைகள் ஆகம விதிகளுடனும் பிறப்பின் தர்மத்தையும் எரிக்கும் வேள்வியாகிறது. தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஓமலிப்புப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதற்கு எடுத்துக் காட்டு கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் நூல்.

நாவிதனின் தாய் மகனைக் கொன்ற வீரனைக் கைகளால் தடவிப் பாடும்போது குற்ற உணர்ச்சியால் நம்மைக் கல்லாக்குகிறது.

நமக்குத் தேவையான மருத்துவம், நிலவரைவியல், கலாச்சாரப் படிமங்கள், மனித நோய்க்கூறுகள், சமூகத் தரவுகள் மற்றும் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என அனைத்துக் குறிப்புகளுக்கும் இந்த நாவல் உங்கள் நூலகத்தில் இருந்தால் எடுத்துத் தைரியமாகத் தேடலம்.

இவ்வளவு தரவுகளுக்கும் ஒரு நீண்ட நெடிய களப்பணி இல்லாமல் சாத்தியமே கிடையாது.
'சுளுந்தீ' நாவல் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவ்வளவே சொல்வேன்.
ஆசிரியர் அண்ணன் இரா.முத்துநாகு அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அடவி ஆதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் சுளுந்தீ நூலைக் குறித்து ..

சனி, 1 டிசம்பர், 2018

பறவைகள் குறித்த எழுத்தாவணம் :- இரா.முத்துநாகு

தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் 'இது நமக்காகது' எனப் பலரும் ஒதுங்கி விடுவார்கள். இல்லை இல்லை படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய நூல் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பறவைகள் காப்பிடங்களுக்கும் (சரணலையம்) சென்று, ஆய்விட்டு, அதன் புகைப்படங்களை (அழகிய) எடுத்து மிமினுக்கும் தாள்களில் அச்சிட்டுள்ளார்கள். இதை விட முக்கியமானது இந்தியாவிலே அதிக பறவைகள் காப்பிடமும் பெரிய காப்பிடமும் அமைந்த மாநிலம் தமிழகம் என்பதால் இது போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் இல்லாததும், இந்த நூல் அறியப்படவேண்டியதன் கட்டாயத்தை நான் உணர்கிறேன்.

'மரத்தையும், பறவையையும் தங்கையாக நினைத்து அழுத பெண் பாத்திரத்தைத் தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். கொங்கு மண்டலத்தின் 'அண்ணன்மார்' கதையின் மையப் புள்ளியே கிளி. இராமாயணத்தில் 'மான்' தானே கதையின் திருப்பம். பாலூட்டும் பன்றியைத் தனது பசிக்காக வேட்டையாடிய புலியால் பரிதவித்த பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்ட புலிக்குத் தண்டனை விதித்தான் சிவன் எனப் பக்தி இலக்கியத்திலும், பண்டை காலத்தில் உணவுக்காக வேட்டையாடுவதில் தர்மம் இருந்தது. பெண் விலங்கையும், பெண் பறவையையும் வேட்டையாடி விட்டு வருந்தி அழுத இலக்கியப் பாத்திரச் செய்திகள் புதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மானுட சமூகம் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது.

 வேட்டையாடிய கூட்டு வாழ்கையாக இயற்கையோடு மனித இனக்குழுவின் ஒற்றுமையைப் பறைசாட்டி ஒன்றோடு ஒன்றாக ஒன்றியிருந்த வாழ்வை, விலங்குகளிடமிருந்து மனிதனைத் தனியாகப் பிரித்தது பிரிட்டீஷ் சட்டம்.

வாரக் கடைசி நாளுக்கு (வீக் எண்ட்) 'எங்கு போகலாம்' எனத் திட்டமிடும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பறவைகள் காப்பிடத்திடத்திற்குப் போகலாம். அந்த காப்பிடங்கள் எங்கு உள்ளன, போகும் வழி, தூரம் எவ்வளவு, என்ன விதமான பறவைகள் எந்த மாதங்களில் வரும், போகின்றவர்கள் என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும்? இது குறித்த கையேடு வேண்டுமல்லவா? அதை இந்த நூல் அருமையாகத் தந்துள்ளது.

மொரிசியஸ் தீவில் 'கல்வாரியா' மரத்தின் விதையினை 'டோடோ' என்ற பறவை சாப்பிட்டு அதன் வயிற்றில் ஏற்படும் நொதி மாற்றத்தால் சீரடைந்து, இப்பறவையின் எச்சம் மூலமே கல்வாரியா விதை முளைத்தது. இந்தப்பறவை அழிந்ததால், இந்த மரத்தின் விதைகளை உண்ண பறவையில்லை. தானாகப் பழுத்து விழும் இந்த மரத்தின் விதை முளைக்கும் திறனை இழந்து விட்டது. தற்போது மொரீஸ்யஸ் தீவில் மிஞ்சியுள்ளது ஒரே ஒரு மரம் மட்டுமே. இதனை எப்படி இனப்பெருக்கம் செய்ய வைப்பதென உலக நாடுகளெல்லாம் கூடி ஆய்வு நடந்துகிறது. ஆய்வு இன்னும் முற்றுப்பெறவில்லை என்ற செய்தியோடு, ''பறவைகள் என்பது தனித்த உயிரனம் அல்ல அது அனைத்து உயிர்களுக்குமான தொடர் சங்கிலியின் முதல் கண்ணி'' என அறிவுறுத்தலோடு துவங்கிறது இந்த நூல்.

பெரும்பாலான பறவைகள் விதைகளை மட்டுமே உண்ணும் என்பதால் விதை முளைப்பதற்கும், பரவலுக்கும் மையக்காரணி பறவைகளே என்பதை சட்டென அறிவுறுத்துகிறது.

கடல் நீர் - முன்னீர், ஆறு - நன்னீர், குடிநீர் - இன்னீர், மழைநீர் - அமிழ்தநீர் என இலக்கியங்கள் சொல்லும் செய்தியை அருமையாகப் பறவைகள் இசைபோலச் சொல்லி, குளத்தின் ஓரத்திலே பழங்காலத்தில் இறந்த மனிதர்களைப் புதைத்துள்ளார்கள். மதுரையைச்சுற்றியுள்ள ஏரிக்கரையோரங்களை ஆய்வு செய்ததில் அங்குள்ள ஏரி குளங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற அறிய தகவலைச் சான்றுடன் விளக்குகிறது  இந்த நூல்.

தமிழ் இலக்கியப் பழம்பாடல்களில் 64 வகை பறவைகள் பெயர்கள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டு, பறவைகள் கூடி ஓசையிடுவதை 'ஓசனித்தல்' என்ற அழகுச் சொல்லால் நமது புலவர்கள் பதிவு செய்துள்ளதையும், அன்னம் என்ற பறவை வாத்து என்பதைத் தேடி விளக்கம் கொடுத்துள்ளது நூல். காகம் ஆக்ஸிசன் குறைந்த பகுதியில் வாழாது. காகம் இல்லாத இடத்தில் மனிதன் வாழமாட்டான் என்ற நுண்ணிய செய்தி, காகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.

பறவைகள் குறித்து யார்யாரெல்லாம் ஆய்வு செய்தார்கள், இந்தியாவின் முன்னோடி பறவையியலாலரான 'சலீம் அலி' குறித்த தகவல், சிறுவர்கள் எளிதாகப் புரிந்து படித்துக் கொள்ளும் விதமாகப் பறவைகளின் உடல் கூறுயியல், பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடு கட்டுகின்றன. கூடு கட்டுவதில் ஆண் பறவைகள் பெண் பறவையை ஈர்க்கப்"படும்பாடு" அதன் விவரிப்பு அறிவியல் பூர்வமாகக் கொடுத்துள்ளார்கள். அதே போல் பறவைகளிலே குயில் மட்டும் ஏன் கூடு கட்டுவதில்லை ஆய்வின் விடை கிடைக்காததைப் பதிவிட்டுள்ளது நூல். பறவைகள் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிடும், சில பறவைகள், மூன்றாண்டுக்கு ஒரு முறையே இனப்பெருக்கம் செய்கிறது என்ற செய்தி அருமையான பதிவு.

பறவைகள் காப்பிடங்களைவிட அதன் பெயர்க் காரணத்தை வாசகர்களுக்குக் கொடுத்திட நூலாசிரியர்கள் எடுத்த சிரத்தையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இராமநாதபுரமாவட்டம் சாயல்குடி அருகே உள்ல காஞ்சாரை என்ற காப்பிடத்தின் பெயர்க் காரணத்தை விளக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். கஞ்சாரை என்பது பண்டுவத்திற்கு (வைத்தியத்திற்கு பயன்படும் மூலிகை) என்பதைப் பண்டுவ அகராதியில் பார்த்திருந்தால் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.)

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று பிரிட்டீஷ் ஆட்சி வந்தது. நாயக்கர் குதிரைப் படைகளுக்குத் தடை போட்டனர். இதனால் குதிரைகளை வேதாரயகாடுகளில் தனித்து விடப்பட்டது. இந்தக்குதிரைகள் 'தொண்டுக் குதிரைகள்' என அழைக்கப்பட்டது. இந்தச் செய்தி போன்று மரங்களை நடவு செய்தவர்கள், பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் செய்திகளைப் பெட்டிச்செய்தியாகக் கொடுத்து அழகுற வடிவமைத்துள்ளார்கள்.

வேடந்தாங்கல் காப்பிடத்திற்குப் புதிய பறவைகள் வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் வந்து சென்ற சில பறவைகள் வராமல் நின்றது குறித்த ஆய்வு தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த நூல், காப்பிடங்கள் அனைத்துக் கண்மாய் ஏரிகள் அவைகளுக்கான நீர் வரத்துக் கால்வாய்கள் தூர்த்து கிடப்பதை விவசாயிகளுடன் சேர்ந்து தனது வருத்ததைப் பதிவிட்டுள்ளது.

இதே போல் காப்பிடச் சிக்கல் குறித்துப் பேசும் நூல் பொத்தாம் பொதுவாகத் தாவியுள்ளது. அது தனி அதிகாரம் என நினைத்தார்களோ என்னவோ? தொண்டை மற்றும் சேது மண்டலத்தில் இருந்த பல்லாயிரம் ஹெக்டர் காடுகளை அழித்த அரசு அதில் யூக்களிப்டஸ் & கொட்டை முந்திரி பயிட்டு காடுகளுக்குள்ளிருந்த குளங்களை மேவியது.

பொதுவாக சூழலியல்வாதிகள் ''மனிதனை விலங்காகவும், விலங்கை மனிதனாகப் பார்க்க வைத்தவர்கள்'' என்ற குற்றச்சாட்டு உண்டு. அதிலிருந்து சற்று வேறுபட்டு மனித குலத்தோடு இசைந்து நூலினை முழுமையாகச் செழுமைப்படுத்தியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.

இந்த நூலில் குறைபாடாகப் பார்ப்பது :

 அயல் தாவரம், இயல் தாவரம் எனக்குறிப்பிட்டுள்ளது.  வீட்டு விலங்காக வளர்க்கப்படும் பன்றி நாய், பூனை இவைகள் காப்பிடங்களுக்குச் செல்கிறது என்ற சொல்லாடல்கள் நமது சிந்தனைக்குள் சிக்கலை உண்டாக்குகிறது.

ஒரு விதை முளைக்கத் தேவையான காரணிகள் இருந்தாலும், அவை முளைத்து வளர்ந்திடத் தேவையான சூழல் இருந்தால் மட்டுமே அம்மண்ணில் அல்லது அவ்விடத்தில் மண்ணே இல்லாத எட்டு மாடிக் கட்டிடத்தில் கூட முளைத்த தாவரம் நிலைத்து நிற்கும். ஒவ்வொரு விதையும் தனக்குள் புரட்சி  (Darwin's Theory of Evolution, and  RNA, DNA Metopolism with its Mechanism phenomenon) என்ற 'வித்தை' வைத்துள்ளது என்பது இயற்கை விதி. வெளிநாட்டுத் தாவாரங்களுக்கு விசா வழங்குபவர்கள் போல் அயல் (அன்னிய) இயல் (உள்ளூர்) தாவரம் எனப் பிரித்து எழுதியதும் இந்த நூலில் பார்க முடிகிறது. பறவையோ விலங்கோ உணவுத் தேவைக்காக வலசையாக (migration) வரும், போகும். வந்த பறவைக்குச் சூழல் அதனது உடலுக்கு ஒத்துப்போனாலும் அந்த இடத்தில் அந்த விலங்கினங்கள் வாழ்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதைக் கவனிக்க மறுத்து கருத்துத் திணிப்பாக எழுதியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அதே போல் தன்னிச்சையான மரபுக்கூறு மாற்றம்  (spontaneous mutation) நிகழ்வதாலே, மனிதன் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள், அதிலிருந்து பூச்சி புழு. இவைகளிலிருந்து பறவை அடுத்து மனிதன் பரிணமித்தான் என்பதை தற்போது வரை உள்ள ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.

காப்பிடங்கள் அனைத்தும் குளத்திலே அமைந்துள்ளது. குளங்கள் வேளாண்மைக்கான ஆதாரம். வேளாண்மைக் குடிகளின் வளர்ப்பு விலங்கு நாய், பூனை, உணவுக்காக பன்றிகள். இவைகள் அருகில் உள்ள காப்பிடங்களுக்குப் போகத்தானே செய்திடும். இந்த நூலின் கூற்றுப்படியே வைத்தால் காட்டுப் பன்றி, காட்டுப்பூனை, காட்டு நாயான ஓநாய் செந்நாய் இவைகள் காப்பிடங்களுக்கு வருமே இதைத் தடுக்கச் சொல்லுவார்களா. அதே போல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிர்க் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க் கருத்துவருவாக்கம் அறிவியல் பூர்வமாக நிருபனம் ஆகவில்லை. அதுவரை இவர்கள் காத்திருப்பது நியாயம் என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து, சூழலியர்கள் மனித குலத்திற்கு விஞ்ஞானத்தோடு இசைந்து கொடுத்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் இவை வெற்று முழக்கமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளப்படும் என்பதை வேண்டுகிறோம்.

அயல் இயல் என்ற சொல்லாடல்கள் ''நாட்டு மாடு'' கொள்கை போன்றதே. இவையெல்லாம் 'சாதி புனிதம்' குலதெய்வ வழிபாடுகளைக் காப்பதைப் போன்ற கொள்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் சொல்ல காரணிகள் இல்லாமல், மரபு என்ற ஒற்றைச்சொல்லைச் துணைக்கு இழுக்கிறார்கள் ஆசிரியர்கள். மனிதன் நேற்று தோன்றிய விலங்கல்ல. அவன் வேட்டைக் சமூகமாக இருந்து அதிலிருந்து பரிணமித்தவன். அவன் வேட்டைச் சமூகமாக இருந்த உற்பத்தி சமூகமாக நிலைத்து நிற்க காடுகளிலிருந்து தனக்குப் பழக்கப்படும் விலங்குகளைக் கண்டறிந்து அதிலிருந்தே வளர்ப்பு விலங்குகளை (domestic)  இனம் கண்டு அவன் வளர்தான். காட்டுக்கோழி இருக்கவே கோழி வரஆடு - கேளை ஆடு - வெள்ளாடு செம்பறி ஆடு, காட்டு மாடு - உழவு மாடு, செந்நாய் ஓநாய் - நாய் இப்படி விலங்குகளைக் கண்டறிந்து வளர்த்தான் என்பது இந்த நூலாசிரியர்கள் அறியாதது அல்ல. தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக இப்படியான சொற்களைப் பயன்படுத்தி இருப்பது விஞ்ஞானத்திலிருந்து விலகி நிற்பது வருத்தமளிக்கிறது.

மனித குலம் இன்னும் வியப்பாகப் பார்ப்பது இயற்கையான மரபியல் கூறுகள் மட்டுமே (jenitic engenreing). இதற்குள் மனிதன் நுழைந்து விட்டால் அனைத்தும் மானுடன் கைவசப்படும் என்பதைச் சூழலியல் என்ற போர்வையில் விஞ்ஞானத்திற்கு எதிராக களமாடுவார்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

நூல் -  தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
ஆசிரியர் - சண்முகநந்தம் &பேராசிரியர் செயக்குமார்
வெளியீடு - எதிர்
விலை - 500

புதன், 28 நவம்பர், 2018

கோயில்களும் தானியக் குதிர்களும் :- சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தென்பெண்ணையாற்றின் தென் கரையில் போய்க் கொண்டிருந்தோம், ஆதிதிருவரங்கம் நோக்கி. சாலையில் வாகனங்கள் அதிகமில்லை என்றாலும், வளைவுகள் அதிகம். வண்டி மெதுவாகவே பயணித்தது.   பச்சைப் பட்டாடை  விரித்தது போல் பறந்து கிடந்த வயல் வெளியில் மாலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் மாயாஜாலம் செய்து கொண்டிருந்தன. கஜாப் புயலின் கோரக் காட்சிகளால் புண்ணாகிப் போயிருந்த கண்கள் புத்துணர்வு பெற்றன.

 ஊரைத் தாண்டி வலது பக்கம் திரும்ப, பிச்சைக்காரர்களின் பின்னணியில் கோவில். பார்த்தாலே தெரிந்தது, பழமையான கோவில் என்று. சனிக் கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. விறகடுப்பில் குழிப் பணியாரம் செய்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கிராமத்துப் பெண்மணி.
மிகவும் பெரிய கோவில் என்று சொல்ல முடியாது.

ஆனால் சிறிய கோவிலும் இல்லை. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. தூய்மையாகவே இருகிறது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும், நேரே ராஜ கோபுரம் தெரிந்தது.

வலதுபுறம், வட்டவடிவமான உருளைகள்  இரண்டை ஒன்றின் மேல் ஒன்று நிற்க வைத்து அதன் மேலே ஒரு கூம்பினை வைத்தது போல் செங்கல்லால் ஆன  ஒரு வித்தியாசமான கட்டிடம். பராமரிப்பு இன்றி புதர்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. பக்கத்தில் பெயர்ப் பலகை ஒன்றுமில்லை. அங்கிருந்து வந்த இளைஞரிடம், “ இது என்ன” என்று கேட்டதற்கு, “ ஏதோ, தியானா மண்டபம்ன்னு சொல்றாங்க, பாத்துப் போங்க, பாழடஞ்சி கெடக்கு” என்றார். பார்த்து பார்த்து மெதுவாக உள்ளே சென்றோம். புல்லும் பூண்டும் மண்டிக் கிடந்தன. கற்களும் கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. ம்ஹூம், இது தியான மண்டபமாக இருக்க வாய்ப்பே இல்லை என எண்ணிக் கொண்டேன்.





இல்லம் திரும்பி இணையத்தில் பார்த்தபோது அந்தக் கட்டிடம், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர் என்று தெரிந்தது. மேலே நான்கு புறமும் தானியங்களைக் கொட்ட வாயில்கள், கீழே தானியங்களை அள்ள ஒரு வழி, ...இருக்கும்..... இருக்கும் இது குதிரகத்தான் இருக்கும்.

'வளமான தென்பெண்ணைக் கரையில், இந்தத் திருக் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் இருந்தது, இப்போது அது  100 ஏக்கராகக் குறைந்து விட்டது., அறுவடை செய்து வரும் நெல், கம்பு போன்ற தானியங்களில் ஆறில் ஒரு பங்கினை கோவிலுக்குக் கொடுத்துவிடுவார்கள்,. அவற்றை செமித்து வைக்கவே இந்தக் குதிர்கள் பயன்பட்டன, இந்தக் குதிரில் சுமார் 2500 மூட்டை, அதாவது 5000 கலம் நெல் சேமிக்க முடியும்' என்றல்லாம் பலப் பல செய்திகள்  இணையத்தில் கிடைத்தன. ஆனால், இன்று பாழ்பட்டுக் கிடக்கும் இதனை புனரமைக்கவோ, காப்பற்றவோ நாதியில்லை என நினைக்கும் போது, .உள்ளம் கசிகிறது.

கோவில்களில் உள்ள குதிர்கள் பற்றி இணையத்தில் கிடைத்த பிற தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதித் திருவரங்கத்தில் உள்ளது போன்றே, திருவரங்கத்திலும் குதிர்கள் உள்ளன என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது. இங்கேயும், பராமரிப்பின்றி, குதிர்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்பது,வேதனை தரும் செய்தி.

மாறாக, குடந்தைக்கும் தஞ்சைக்கும் இடையே பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைவனம் திருக்கோவிலில் உள்ள குதிர் முறையாகப்  பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் குதிர் 17ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், அச்சுத நாயக்கரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டதென்றும்,  சுமார் 35 அடி உயரமும்  80 அடி விட்டமும் கொண்ட இந்தக் குதிரில்  3000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
செஞ்சிக் கோட்டையில் குதிர் / நெற்களஞ்சியம் ஒன்று இருப்பதை கல்லூரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் உள்ள குதிர், செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு யூகம் தான். அறிந்தவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

தொல்லியல் / இந்து அறநிலையத் துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு  மிக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க இந்த நிதி பயன்படுத்தப் படவேண்டும்.

(சில மாதங்களுக்கு முன், 'தென்பெண்ணையில் ஒரு திருவரங்கம்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவ்வளவு விரைவில் அங்கு செல்லமுடியும் என்று நினைக்கவில்லை. அழைத்துச் சென்ற என் தம்பிக்கு நன்றி )

ஐராவதம் மகாதேவன் என்றொரு தமிழகத்து மாந்தர் : சி.அறிவுறுவோன்

இவரைப்பற்றிச் செய்தித்தாட்களிலும் முகநூல் பதிவுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
அதேநேரத்தில் இல. கணேசன் ஒருசெய்தியைக் கூறியிருந்தார்.அஃதாவது,"1948ல் ஆர்.எசு.எசு அமைப்புத் தடைசெய்யப்பட்டதற்கு எதிராகப் போராடி சிறைசென்றார்,"என்பதாகும். இச்செய்தி என்னுள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது.
          கீழடி ஆய்வு தொடங்குவதற்கு முன்பே இவர் சங்ககாலம் பற்றிய ஆண்டுக் கணிப்பைக் கி.மு 3ஆம் நூற்றாண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் தொல்லியல் ஆய்வாளர் ராசன் போன்றோரது கண்டுபிடிப்புகளை ஒட்டிச் சங்ககாலத்தை கி.மு 6ஆம் நூற்றாண்டு தொடங்குவதாக அறிவிக்க வேண்டும் என்றபோது கி.மு 4ஆம் நூற்றாண்டைப் போனால் போகிறது என்று ஏற்றுக்கொண்டவர்.
          கோம்பைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகத் தமிழுக்குச் சொந்த எழுத்து இருந்ததில்லை. பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் தோற்றம் பெற்றதாகக் கூறிவந்தார்.
ஆனால் மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் மொழியியல் அடிப்படையில் ஐராவதம்மகாதேவன் போன்றோர் கருத்திற்குத் தகுந்த மறுப்பு வழங்கியும் அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கோம்பைக்கல்வெட்டைப் பார்த்துவிட்டே தமிழி என்றொரு எழுத்துவகையுண்டு எனவும் அஃதே காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து என்றும் வேறுவழியின்றி     ஒப்புக்கொண்டதுடன் தாம் சிந்துவெளி ஆய்வில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
             அதுமுதல் சிந்துவெளி ஆய்வில் தனிக்கவனம் செலுத்திய அவர் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் திராவிடமொழிகளோடு ஒத்திருப்பதாகக் கூறிவந்தார். திராவிடம் என்றோ ஆரியம் என்றோ தனி மொழிகள் இருந்ததற்கான தடயத்தை இதுவரை மொழியியலாளர் கூடக் கண்டறிந்திருக்கவில்லை. வெள்ளைக்காரர்கள் இங்கிருந்த சமற்கிருத வெறிபிடித்த பிராமணர்கள் மூலமாகத் திராவிடம், ஆரியம் என்னும் சொற்களைப்பெற்று அவற்றிற்கு மொழிமூலம் கற்பித்து மொழியியலுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்தனர். அதனால் மன்னராட்சிக் காலத்தில் இருந்த செல்வாக்கினும் தமிழுக்கான செல்வாக்குக் குறையத் தொடங்கியது. தமிழுக்கு மூலமொழி  ஒன்று இருந்தது அது திராவிடமாகலாம் என்பது கால்டுவெல்லின் கூற்று. இக்கூற்று இன்றுவரை தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளை முன்னுக்குக் கொண்டுவர உதவுகிறது. ஆய்வு என்ற பெயரில் இல்லாத ஒரு மொழிக்குத் திராவிடம் எனப்பெயர் சூட்டி உலாவரவிட்டதை ஏற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவன் சிந்துவெளியிலும் திராவிடக் கருத்தியலுக்கு மொழிவடிவம் தந்துள்ளார். அதேவேளையில் "சிந்துவெளியில் முந்து தமிழ்" எனும் நூலுள் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் தமிழி எழுத்தே என்பதைத் துல்லியமாகப் பூர்ணசந்திரசீவா எழுதியுள்ளார். இருந்தும் ஐராவதம்மகாதேவன் திராவிடத்தை விட்டு வெளியே வந்தாரில்லை.இந்தியாவின் இ.ஆ. ப க்கள் தங்களை இந்தியத்திலிருந்து விடுவித்துக்கொள்ள விரும்பியதில்லை. அதன் ஆரியத்திற்கு எதிராகத் திராவிடத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழின் இருப்பை அழிக்கும் வேலை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னின்றவரே ஐராவதம் மகாதேவன் ஆவார். இதற்காக என்னைத் திட்டித் தீர்ப்பவர்கள் ஆசை அடங்கும்வரைத் திட்டித் தீர்க்லாம். எனக்கு வருத்தம் தோன்றாது.
                 ஆர். எசு. எசு இயக்கம் மதவாத இயக்கமன்று அஃது இந்தியத் தேசிய இயக்கமே என்பவர்கள்தாம் இந்துத்துவாவின் ஏற்பாளர்கள். இப்பெயருக்கெல்லாம் அப்பாற்பட்டவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் இ.ஆ.ப க்களில் பெரும்பாலோர் சாதிவேறுபாடில்லாமல் இந்துத்துவாவினரே. அந்த வகையைச்சேர்ந்தவரே ஐராவதம் மகாதேவன் என்பது எனது கருத்தாகும்.