புதன், 19 டிசம்பர், 2018

போன தலைமுறைப் புயலைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடலும் வரலாறும் :- துரை.இராசகுமாரன்

புள்ளான்விடுதி என்றொரு கிராமம் , எங்கள் ஊரை அடுத்து அமைந்துள்ளது. அந்த ஊரில்தான் நடேசக் கோனார் என்ற ஒரு தலைசிறந்த நாட்டுப்புறப் பாடகர்  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார்.  ஈழம் வரை சென்று பாடல்பாடி பொருள் ஈட்டும் அளவிற்குக் காத்திரமான பாடல்களைத் தாமே இயற்றிப் பாடும் வல்லமை கொண்டவராக நடேசக்கோனார் இருந்துள்ளார்.

1956 வரை வாழ்ந்த கோனார் அந்தக் காலகட்டப் பகுதியில் தானாண்மை நாட்டுக் கிராமங்களைக் குறித்த பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். அவற்றில் எங்கள் கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல், வணிகம், அதிகாரப் போட்டியில் நடந்த கொலைச் சம்பவம், பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்குகள் என்று பல தரவுகள் ஊடாடிக் கிடக்கும்.

ஒரு வட்டாரத்தின் அரை நூற்றாண்டுகாலத்திய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்ற அவரது பாடல்கள் அழிந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கில்  கீரமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் பெருமுயற்சியால் 90 களில்  நடேசக்கோனாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

நடேசக் கோனாரின் பாடல் ஏடு ஒன்றில் 50 களின் தொடக்கத்தில் நாகை வழியே கரை கடந்த பெரும் புயல் ஒன்றைப் பற்றியும் , அதனால் எங்கள் பகுதிக் கிராமங்கள் சூறையாடப்பட்ட தகவல்களையும் முன்பு படித்த  நினைவு... மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம் என்று அடுக்கிலிருந்த புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்தேன்.

ஆச்சரியம் என்னவென்றால், மணிக்கு 80 மைல் வேகத்தில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் சொல்லப்படாத அந்தப் புயலின் கோரம் இன்றைய கஜாவின் கொடூரத்தோடு ஒரு செய்திகூட விடுபட்டுப் போகாமல் அப்படியே ஒன்றி வருகிறது .

நந்தன ஆண்டு, கார்த்திகை மாதம் 15 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ...
அந்தப் புயல் தாக்கியதாகப் பாடல் தொடங்குகிறது.

"மாங்காய் காய்ச்ச மரமெல்லாம் மலைமலையாய்ச் சாய்ஞ்சுதே
தேங்காய் காய்ச்ச மரமெல்லாம் தேருத்தேராச் சாய்ஞ்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே
பலாவும் வேம்பும் போச்சுதே
பூட்டன் வச்சுக் காய்ச்சுதே புளியந்தோப்பும் போச்சுதே.."
என்று பாடல் விரிவடைகிறது.

மாமரம், தென்னை, பலா, புளியமரம், சவுக்கு, முருங்கை , வாழை, பனை, கருவை மரம், கரும்பங் கொல்லை , ஈச்சமரம், வேலா மரம் உள்ளிட்டவை சாய்ந்து விட்டதாக நடேசக் கோனார் எதுகை மோனையில் வரியமைத்துப் பாடியுள்ளார்.

" சோலையான சவுக்கெல்லாம் தூருத்தூராச் சாய்ஞ்சுதே
சாலைநீள மரமெல்லாம்
சாருச்சாராய் சாய்ஞ்சுதே..."
என்ற வரிகள் இம்மி கூட பிசகின்றி இன்றைய நிலையோடு ஒட்டி வருகிறது.

மேலும்  பேசும் படக் கொட்டகை, தந்தி , தண்டவாளம் , அந்தி ரெயில் போன்றவையும் புயலால் பாதிப்படைந்துள்ளாக பாடல்  வரிகள் அமைந்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளும், தொடர் வண்டிகளும் ( பேராவூருணி- காரைக்குடி வழித்தடம் ) 40 களிலேயே எங்கள் பகுதியில் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவருகிறது.

மீன் பிடிக்கப்போன செம்படவர் சிலர் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடும் கோனார், அம்மையாண்டி கண்டிக்குளத்தில் இரண்டு குருவிக்காரர்கள் வேட்டைக்குப் போன இடத்திலேயே புயல் தாக்கி இறந்து கிடந்ததையும் குறிப்பிடுகின்றார்.
( இந்தக் குருவிக்காரர் எனும் தனித்த இனக்குழு மக்கள் இன்றும் வேட்டையாடிக் கொண்டு ஊரை விட்டு விலகி காட்டுப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் ).

புயல் தாக்கிய மறுநாள் காலையில் மறமடக்கிச் சந்தையில் இருந்து திரும்பிய ராமன் என்பவர் வரும் வழியிலேயே இறந்து கிடக்கிறார்.

மாங்காடு கிராமத்தில் தோட்டக்காவல் வேலை பார்த்த  சின்னமுத்து என்பவர் புயல் தாக்கியதில்  தோட்டத்திலேயே இறந்து விடுகிறார். ( தோட்டம், கோயில், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காவல்காக்கும் காவல்காரக் குடும்பங்கள் தானாண்மை நாட்டுக் கட்டமைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது கோயில் காவல் குடும்பங்கள் மட்டும் முத்தரையர்களில் ஓரிருவர் அதே பெயரில் இருக்கின்றனர்) .

ஒட்டன்காடு அருகேயுள்ள கொன்றைக்காட்டின் ரைஸ்மில்லில் சுவரோரமாகப் புயலுக்கு ஒதுங்கி நின்ற ஒன்பது பேரில் எட்டு பேர் சுவர் இடிந்து விழுந்ததால் அதே இடத்தில் நசுங்கிச் சாகின்றனர்.

சித்துக்காட்டில் ஒரு குடும்பத்தினர் மொத்தமாக இறந்துள்ளனர் ...

இதுபோல மரங்களுக்கும் மனிதர்களுக்கும் பேரிழப்பை நந்தன ஆண்டில் வீசிய புயல் ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் தாக்கியவுடன் இரவில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மாடி வீடுகளுக்குள் மக்கள் தஞ்சம் புகுந்ததைப் போலவே கடந்த நூற்றாண்டுப்  புயலின்போதும் மக்கள் அழுகுரலோடு வீடுவீடாக ஓடிச் சென்றதை

" சிகப்புச் சீமை ஓடெல்லாம் சின்னாபின்ன மாச்சுதே
தகப்பன் நாட்டு ஓடெல்லாம் தாறுமாறாப் போச்சுதே.."

" ஓட்டைநம்பி யந்தவீட்டில்
ஓடியுள்ளே நுழைஞ்சுதே
ஓடுகளும் பிடுங்கியோட்டு
வீடுகளும் பிரிஞ்சுதே

மாடிமெத்தை மச்சுவீட்டைத்
தேடியங்கே நுழைஞ்சுதே
மத்தியிலே மரம்விழுந்து
மெத்தைவீடும் அழிஞ்சுதே.."
என்ற வரிகள் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, நூற்றாண்டு கடந்தாலும் குடிசைகளுக்குள் வாழ்ந்த ஏழை சனம் இன்னும் குடிசைகளுக்குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான வேதனை மிக்க வரலாற்றின் எழுத்தாவணம் இந்த வரிகள்.

புயல் பற்றிய குறிப்புகளைத் திரட்டுவதற்காகச் சில ஆவணங்களை வாசித்ததில் இருந்து நான் உணர்ந்து கொண்ட உண்மை... நடேசக் கோனார் வாழ்ந்த நந்தன ஆண்டில் வீசிய கொடும் புயலுக்குப் பிறகு தென்னையை முறிக்கின்ற அளவிற்கு வீசிய புயல்  கஜா வாகத்தான் இருக்க முடியும்! அதாவது, அரைநூற்றாண்டு இடைவெளியில் வீசியுள்ளது.

கஜா என்பது " தலைமுறைப் புயல்" இந்தத் தலைமுறை நாம் அதற்கு முகம் கொடுத்து விட்டோம். இயற்கை இனி நம் தலைமுறைக்கு  அத்தகைய புயலை கொண்டுவந்து சேர்க்காது என்ற நம்பிக்கையோடு ( 'மறு புயல்' பற்றின வதந்திகளை புறந்தள்ளிவிட்டு ... ) மீண்டும் நம் மண்ணை மறுகட்டமைவு செய்வோம்.

அதேநேரத்தில்,  'மண்சார்ந்த படைப்புகள் '  எத்தனை முக்கியமானது என்பதையும் அந்தந்த மண்ணின் மக்கள் உணர வேண்டும். அதன் மூலம்தான் அடுத்தடுத்த தலைமுறைகள் தமக்கான வாழ்வைத் தகவமைவு செய்து கொள்ள முடியும். நடேசக் கோனார் பாடிவைத்ததாலேயே நாங்கள் சில பாடங்களைக் கற்றுணர்கிறோம் .
' புயல் புதிதல்ல...' என்கிற புரிதலே மீண்டும் உழைப்பதற்கான ஒரு பெரும்  மன உந்துதலைத் தருகிறது.

மேலும் காலங்கள் ஓடினாலும் காற்றுக்குப் பயந்து மாடி வீடு தேடி ஓடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...நூற்றாண்டுகளாக நம் மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த புயலுக்காவது அவர்கள் ஓடியொளியாத அளவிற்கு சமூகம் வலுப்பட வேண்டும் என்கிற உறுதிப்பாடும் மனதில் எழுகிறது. இவைதான் படைப்பின் வலிமை!

படைப்பூக்கம் கொண்ட எழுத்தாக்கங்கள் தமிழ்க் குடிகள்தோறும் ஏன் எழ வேண்டும் என்பதற்கும் இவைதான் உதாரணங்கள்.  காலங்களின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் எழுத்தும், பேச்சும்தான் ஒரு சமூகத்தின் வழிகாட்டி, வழி நடத்தி...

" ஆலமரமும் கால மாச்சுதே -
ஏ ! காத்தாயி
அதை ஆண்ட முனியும்
மாண்டு போச்சுதே.."

முறிந்த மரத்தின் கீழே நின்று கோனார் பாடிக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக