வியாழன், 9 மே, 2019

சுளுந்தீ :அறிவுத்தீக்கான வரலாற்றுச் சித்த மருந்து. :- இலட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர்.

ஒரு நாவலிற்கான கருவையும் கதைக் களத்தையும் தேர்வு செய்தபின்னர் அந்த நாவல் முழு வடிவம் பெற்று வாசகனை அடைவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிற நாவல்.  சில நூல்களைத்தான் நாம் காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி எனக்குத் தோன்றிய நாவல் இது.

மதுரைக்கு அருகே உள்ள கன்னிவாடி கிராமமும் ஏனைய மதுரை மாவட்டத்தின் நிலப்பரப்பையும் அதைச் சுற்றிய வரலாற்றையும் பேசுகிறது இந்த நாவல். நாயக்கர் ஆட்சிக்காலம். மன்னருக்கு அடுத்தபடியாக குறுகிய எல்லையில் அதிகாரம் கொண்ட அரண்மனையாரின் ஆட்சியிலும், ஆட்சிக்காகவும் நடக்கும் சம்பவங்களே கதை.
சின்ன கதிரியப்ப நாயக்கரான அரண்மனையார், அந்த எல்லையில் வாழ்ந்து அங்குள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற சித்தர், அவரின் சீடராக வரும் நாவிதரும் பண்டுவருமான ராமன், அவரது மகன் மாடன், ராமனையும் மாடனையும் பழிவாங்கத் துடிக்கும் தளபதி, இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள்.

நாவலின் முதல் பகுதி ஒரு  சித்த மருத்துவக் களஞ்சியம். ராஜபிளவு எனச் சொல்லப் படுகிற நோயில் தொடங்கி, அறுந்த காதை ஒட்டவைக்கும் வைத்தியம், காது வளர்க்கும் வகை, பெண்களுக்கு வரும் பெரும்பாடு எனும் கரு சம்பந்தமான நோய், வெட்ட வாய்வு நோய், பசிப்பிணி, மூல நோய், ஓரண்ட வாயு எனும் ஆண்களுக்கு வரும் நோய், குழந்தை பிறப்பிற்கு என கிட்டத்தட்ட நம் சமகாலத்தில் நாம் சந்தித்து வரும் எல்லா நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகள் சித்தர் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் வாசிக்கும்போது நாம் ராமனாக மாறி சித்தருக்கு சீடராக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கித் தவிக்கிறது. சித்தர் பொடவிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் நம் மனமும் பொடவை பக்தியோடும் பணிவோடும் நோக்கி நிற்கிறது. நம் மருத்துவ அற்புதங்களைக் கொன்று புதைத்துவிட்டு மூக்கிலும் நரம்புகளிலும் ஊசிகளை சொருகிக் கொண்டு கை நிறைய பலவண்ண மாத்திரைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

சித்தர் சமாதியானதும் தான் ராமனின் கதை தொடங்குகிறது. சித்தரே ராமனை சீடனாக அறிவித்தாலும் கூட, பந்த பாசம் கொண்ட ராமனால் சித்தராக வாழ முடியவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. தனது மகனை எப்படியாவது அரண்மனைப் படையில் வீரனாக சேர்த்துவிட வேண்டும் என்பதே நாவிதரான ராமனின் கனவாக இருக்கிறது. ஆனால் பிறப்பால் நாவிதரான ராமனின் மகனால் அரண்மனை வீரனாக முடியவே முடியாது என்பதே யதார்த்தம். குலத்தொழிலே கட்டாயம். ஆனாலும் ராமன் தன் மகனை மிகச் சிறந்த வீரனாக வளர்க்கிறார். படைவீரனாகும் கனவையும் அவனுக்குள் விதைக்கிறார். அரண்மனையாரின் மிகுந்த மரியாதைக்குரியவராய் இருந்தும் ராமனால் தன் காலத்தில் தன் மகன் மாடனை அரண்மனை வீரனாக்க இயலவில்லை. அதே நேரம் தன்னுடைய குலத்தொழிலான நாவிதத்தின் நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் தன் மகனுக்குக் கற்றுத் தருகிறார் ராமன். இந்த இடத்தில் நாவிதத்தின் மகிமைகளை ராமன் சொல்லும்போது நம் சடங்குகளைப் பற்றிய பல செய்திகள் நமக்குத் தெரிய வருகிறது.

ராமன் திடீரென மறைந்துவிட மாடனை வீரன் கனவு துரத்துகிறது. ஒரு வீரனாவதற்காகவே வளர்க்கப்பட்டவனால் குடிமக்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் குழைந்து பிழைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நல்லவனாக இருந்தாலும் கூட, மாடன் ஊராறால் வெறுக்கப் பட்டு சதியால் கொலை செய்யப் படுகிறான். இதுதான் கதை.

இந்தக் கதைக் களத்தில் எத்தனை எத்தனை வார்த்தைகளுக்கான காரணங்களோடு கூடிய அர்த்தங்கள். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகளான ஈத்தரப்பய போன்ற வார்த்தைகளுக்கான பின்புலங்கள் தெரிய வரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. செந்தூரம் எனப்படுகிற பாஸ்பரஸ் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருந்து. அதிலிருந்து வெடி தயாரிக்கப்பட்டதால் வெடிமருந்து என்கிற பெயர் புழக்கத்திலிருக்கிறது என்கிற விளக்கம். என ஏகப்பட்ட நமக்கு அறியாத விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூல் முழுவதும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நம் சமூகம் கண்டு பயப்படும் சித்து வேலை, பில்லி சூனியம் ஆகியவற்றின் பின்னால் உள்ள சூட்குமங்கள் பற்றிய எளிய விளக்கங்கள் அந்தந்த கதை மாந்தர்களை வைத்தே விளக்கப் பட்டுள்ள விதம் மிக மிக அருமை. அதில் கொஞ்சம்கூட பகுத்தறிவின் பிரச்சார நெடி இல்லை.
நாவலின் இறுதிப் பகுதியை வாசிக்கையில் எங்கே நாம் சாப்பிட்டு வருவதற்குள் மாடனைக் கொன்று விடுவார்களோ என்கிற பதற்றத்தில் சாப்பிடக்கூட பொறுமையில்லாமல் பரபரவென வாசிக்க வைக்கிற கதையின் ஓட்டம்.
இது புதினமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து செய்திகளும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பதால் ஆசிரியரின் உழைப்பின் தீவிரம் நமக்குப் புரிகிறது. குலநீக்கம் என்பதின் பின்னால் உள்ள சூழ்ச்சி மற்றும் குல நீக்கம் செய்யப் பட்டுள்ளவர்களின் வேதனைகளையும் மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.
ஆனந்தா வருடப் பஞ்சம் பற்றிய பகுதி வரும்போது மனசு துக்கப் படத்தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் பஞ்ச காலத்தைப் பற்றி எழுதும்போதுகூட சோகத்தை எழுத்தில் வலிந்து திணிக்காமல் மிக மிக யதார்த்தமாய் பஞ்சத்தின் இயல்பையும் அதைக் கடந்து வர மக்கள் செய்த நடவடிக்கைகளையும் பஞ்சத்தைக் கடக்க கிணறு வெட்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகிற பூதம் புறப்பட்ட விதத்தையும் ஆசிரியர் எதியிருக்கிற விதம் நமக்கு வாழ்வின்  மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. முழுமையாக எழுதினால் சுளுந்தீ பற்றிய விமர்சன நூலே எழுதலாம். ஆசிரியர் திரு.முத்து நாகு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வி,பி.பி.யில் வரவழைத்து உதவிய அன்புத் தம்பி சுதாகருக்கு அன்பும் நன்றியும்.

சுளுந்தீ - அறிவுத்தீக்கான வரலாற்று சித்த மருந்து.

சுளுந்தீ- நாவல்
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
VPPயில் புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 99948 80005-திரு.முரளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக