ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்
பிரபஞ்சன்
தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.
வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார்.
ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். . இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.
மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள்.
அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள்.
ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார்.
'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது.
காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள் விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில் சாக்கடைகளே இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார்.
கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது:
'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’
ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக இல்லை, மற்றும் பல்வேறு கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.
தனி மனிதர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.
‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’
கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?
பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென்.
'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .!
உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும்.
பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும்.
இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம். அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார்.
அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம்.
விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.
பயன் கொண்ட நூல்கள்
*மூன்றாம் பாலின்முகம்-நாவல்
பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர்,சென்னை-83
தொலைபேசி : 24896979, 65855704
*காதல்வரலாறு
டயன் அக்கர்மென்-தமிழில் ச.சரவணன். சந்தியா பதிப்பகம்
* அரவாணிகள்
உடலியல் உளவியல் வாழ்வியல்
தொகுப்பு : மகாராசன்
தோழமை வெளியீடு, சென்னை-78
தொலைபேசி : 9444302967
நன்றி: உயிரோசை.காம்