செவ்வாய், 13 ஜூலை, 2021

விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை  நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. 

இந்த மானுடம்  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும்  கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில்  விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் தன்மை கொண்டவை. 

பொதுவாக வாழ்க்கை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. இதில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் தனக்கான உயிர்வாழ்ப் பாதையினை இயற்கை கொடுத்த வழியில் வாழ்ந்து, தங்களுடைய இறுதி நிலையினை இயற்கை விட்ட வழியில் எய்துகின்றன. இதற்கு எதிராக அவைகள் சுயநினைவினை இழந்து, வேண்டுமென்று பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, தன்னுடைய வாழ்வினை இடையில் அதாவது தற்கொலையில் முடித்துக் கொள்வதில்லை. இவைகள் அனைத்தும் பெரும்பாலும் இயற்கை மரணத்தையும் சில நேரங்களில் அகால மரணங்களை அடையுமே தவிர, எவையும் தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை. இவை அபூர்வத்திலும் அபூர்வம். 

ஆனால்,  சில மனிதர்கள் மட்டுமே  வாழ்விற்கு முரணான வகையில் இந்தத் தற்கொலைகளையும் அதன்  எண்ணங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். 

மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு இரண்டு மரணங்கள் உண்டு. ஒன்று, இயற்கை மரணம். இன்னொன்று, தவிர்க்கமுடியாத அகால மரணம். இதில் மூன்றாவதான தற்கொலை மரணம் என்ற எண்ணம் இந்த விலங்கு  உயிரினத்திற்கே பொருந்தாத ஒன்று. 

ஆனால், மனிதன் மட்டுமே மூன்று வகையான மரணத்திற்கு உரிமை உள்ளவனாக இருக்கிறான். ஒன்று இயற்கை மரணம், இரண்டாவது அகால மரணம், மூன்றாவது தற்கொலை மரணம். இதில் மூன்றாவது மரணம் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும். 

தற்கொலை விடயத்தில் ஏன் விலங்கினங்களை மனிதனுடன் ஒப்பிட வேண்டும் என அய்யம்  எழலாம். அதாவது, விலங்கினங்கள் ஐந்து அறிவு கொண்டவை. மனிதன் ஆறு அறிவு கொண்டவன். இவை இப்படி இருக்கையில், ஏன் இந்த ஒப்பிடுகை எனச் சிந்திக்க வேண்டும்.  தொடக்கத்தில் சொன்னதைப் போன்று தற்கொலை மரணங்கள் மனிதனுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. ஆனால், விலங்குகளுக்கு இவை இல்லவே இல்லை. இன்னொன்று, அதற்கு அப்படி ஒரு கேடுகெட்ட இயற்கை அறிவோ செயற்கை அறிவோ இல்லை என்பது இயற்கையின் அற்புதம்; அதிசயம். இதே அதிசயத்தினையும் இதனைவிடப் பன்மடங்கு கூடுதலான பகுத்தறிவினையும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்துள்ளது என்பது இதனைவிட அதிசயத்திலும் அதிசயம். 

மேலும், மனிதன்  பகுத்தறிவுள்ளவன். எதனையும் சிந்திக்கக் கூடிய சாதிக்கக் கூடியவன். இந்த உலகையே தலைகீழாக மாற்றிக் காட்டும் அதீதத் திறமையுள்ளவன் என்ற பாராட்டிற்கும் அழியா பெருமைக்கும் சொந்தக்காரன். 

இந்தத் தற்கொலை விடயத்தில் ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை விட, மிக மிகத் தாழ்ந்து போகிறான் என்னும்போது,  விலங்கினங்கள் இவனை விட ஒரு படி என்ன, ஆயிரம் படி மேம்பட தக்கதாகவே உள்ளது என்பது தான் உண்மை. 

சில மனிதர்கள், வாழ்வு என்பது வாழ்வதற்குத்தான் என்பதை மறந்து தாழ்ந்து போகிறார்கள். மனித வாழ்வு என்பது வாழ்வதற்காக மட்டுமே. இந்த மானுடம் அனைத்தையும் வெல்லும் தகுதி படைத்தவை. அதற்கான கால நேரங்களை - சூழல்களை இம்மானுடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கான நல் வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அதனை யாராவது தட்டிப் பறித்து கொள்வார்களா என்ன ?  இல்லை. 

இந்த மானுடப் பிறப்பு என்பது ஒரு முறைதான். அதனைத் தனக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டு பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். 

தற்கொலை செய்வதனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள புவிக்கு எந்தக் கடுகளவும் தீமையும் ஏற்படப் போவதில்லை. 

இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினந்தோறும் சூரியன் உதிக்கும்; சூரியன் மறையும். மழை பெய்யும், புயலடிக்கும், பணி கொட்டும், வெள்ளம் வரும், இன்னும் இதில் ஏராளம். இந்த இயக்கம் அனுதினமும் நடந்து கொண்டேதான் இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

ஆனால், இந்தத் தற்கொலை  செய்வதில் பெரும் கேடு உண்டு. அவை அவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் இவை மிகப்பெரிய பேரிடியாக இருக்கும். இவை கொஞ்ச நாள் கழித்து இவையும் மறைந்துபோகும். பின்பு எதார்த்த உலக ஓட்டத்தில் அவனின் குடும்பத்தார்கள் கலந்துவிடுவார்கள். பின்பு இதனைப் பற்றி நினைப்பதற்கு ஏதும் அங்கு இருக்கப்போவதில்லை. 

இப்பொழுது இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வாழ்க்கை வாழ்வதற்கா? அல்லது இடையில் முடித்துக் கொள்வதற்கா? என்று. 

உண்மையான மனிதத் தன்மை கொண்டவர்கள் வாழ்வினை வாழத்தான் என்பதனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதில் எந்த மாற்றமுமில்லை. இவை இயற்கையின் விதி அல்ல நியதி. விதி மூட நம்பிக்கை சார்ந்தது; விதி என்பது இயற்கை மெய்ஞானம் சார்ந்தது. இறுதி முடிவு இப்படி இருக்கையில், முன்னமே சொன்னதனைப் போன்று நாம்  உயிருடன் இருந்தாலும் இயற்கையின் இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

இடையில் தன்னை வேண்டுமென்று  மாய்த்துக்கொண்டாலும், இந்த இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம். அப்படி என்றால், இன்றே இப்பொழுது இந்த நிமிடமே அந்த மலிவான எண்ணத்தை விட்டொழித்து, அந்த இடத்தில் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். 

இப்படி எளிமையாகச் சொன்னால் அவை எப்படி முடியும் என்ற எண்ணமும் வரக்கூடும். இருந்தாலும் இறுதி முடிவு வாழ்வா, தற்கொலையா என்றால் வாழ்வுதான் என்ற விடை மட்டுமே மிஞ்சும். 

எனவே, நாம் இயற்கை மரணத்தினை  அடையும் முன்பே நம்மால் என்னவெல்லாம்  சாதிக்க முடியுமோ அதனையெல்லாம் சாதிக்கத் துடிக்க வேண்டும். நாமும் சாதிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும். இதுதான் மனிதனின் இயற்கைக் குணம். 

இந்தப் புவி நமக்கானது; இந்தச் சூரியன் நமக்கானது. இந்தக் காற்று நமக்கானது; இந்த மலை நமக்கானது; இந்த மழை நமக்கானது; இந்த நட்சத்திரங்கள் நமக்கானது. இன்னும் சொல்லப்போனால்,  இந்த அண்டவெளி  நாம் வாழ்வதற்கான அத்துனை சாதகங்களையும் செய்து கொண்டே இருக்கிறது.  இப்படி அனைத்தும் நாம் வாழ்வதற்கான அனைத்து நல் சூழ்நிலைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கையில், நாம் மட்டும் ஏன் இந்த இயற்கைக்கும்,  மனித இனத்திற்கே முரணான ஒரு கேடு கெட்ட தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். 

நீங்கள் சுவாசிப்பது உங்களுக்காக; நீங்கள் உண்பது உங்களுக்காக. நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்வது உங்களுக்காக. இன்னும் சொல்லப்போனால்,  இந்த உடலே உங்களுக்கானது என்பதனை மறந்து விடவேண்டாம். மேலும் மது மற்றும் புகைப்பழக்கத்தினால்  உடலினை அழித்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, இழந்த உடலினைத் திரும்ப பெறப்போகிறேன் என்று லட்சம் லட்சமாம் பணத்தினைச் செலவழிப்பது பைத்தியக்காரத்தனம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்கள், மலைகள், காடுகள் என அனைத்தும் எல்லையில்லாத் தன்மை  கொண்டிருக்கையில், நமக்கான வாழ்வும் சாதனை எல்லையில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இடையில் கெடுத்துக் கொள்வதற்கும் மாய்த்துக் கொள்வதற்கும் அல்ல. 

கட்டுரையாளர்:                            க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.


திங்கள், 12 ஜூலை, 2021

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் : க.நாகராசு

தேவைதான் அனைத்துக் கண்டுபிடிப்புகளின் தாய் என்பதனை நாம் ஒவ்வொரும் அறிவோம். இன்று உலகில் உள்ள அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன; இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய இவ்வுலகில் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் எவ்வளவு என்று நாம் எழுத நினைத்தாலும் எழுதமுடியாது; நினைக்க முடிந்தாலும் நினைக்க முடியாது. அத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதாவது அவைகள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான். 

இத்தனை கண்டுபிடிப்புக்களும் மனிதனை இன்றைக்கு இந்த உச்சபட்சமான வாழ்வியல் நிலையில் வைத்திருக்கிறது. இத்தனை கண்டுபிடிப்புகளும் இந்த மனிதனுக்குப் பயன்படத்தக்கதாகவே உள்ளது என்பது ஆச்சரியப்படத்தக்கது. இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகளும் இவனுக்குத் தேவைப்படபோகின்றன. ஏனென்றால், தேவைகள் இருப்பதனால்தானே இத்தனை எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். அப்படியானால், இங்கே அவனின் கண்டுபிடிப்பதற்கான தூண்டுகோல் அவனின் தேவைதான். 

இவை ஒருபுறமிருக்க, அவன் சிந்தனைத் தூண்டுதல் அதிகரிக்க அதிகரிக்க, அனைத்தினையும் நுணுகி ஆராய வேண்டும் என்ற எண்ணம் அவனது ஆழ்ந்த சிந்தனையில் உருவாகி விடுகிறது. அதனை மனிதனின் சமூக, பொருளாதாரப் பயன்பாட்டிற்கு அதனை எப்படிக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகிறான். 

விலங்குகளுக்கு உணவு தேவை. அதனால், அவை தேடிப் பெறுகின்றன. அதற்கு இருப்பிடம் தேவை. அதனையும் தேடிப் பெருகின்றன. அதனுடைய இனத்தினைப் பெருக்குவதற்கு இணை தேவை. அதனையும் தேடிப் பெறுகின்றன. இப்படி விலங்குகளே தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தேடி ஓடி அதனைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. 

ஆனால், மனிதன் சற்று உச்சபட்சமான ஆறு அறிவு கொண்டவன். அப்படியானால், அவருடைய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்குப் புதுமையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவன் தன்னுடைய அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகளை என்றைக்கோ தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டான். ஆனால், அவனுடைய இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் எண்ணிலடங்கா தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால், அவன் இன்னும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவுத் தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்குப் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த முடிகிறது;  பெருக்கமுடிகிறது இவனின் கண்டுபிடிப்புகளால். 

 தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு இயந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதனையும் கண்டுபிடித்து அதனுடைய எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறான். இப்படி மனிதனுடைய கண்டுபிடிப்புகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

மேலும், இந்த மானுட சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்னும் ஏராளமான தேவைகள் இருந்து கொண்டே இருப்பதால், இதற்கான கண்டுபிடிப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இறங்குவது சாலச் சிறந்ததாகும். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளில் இறங்குவதில்லை. ஆனால், மற்றவர்களின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறான்; பாராட்டுகிறான்; வியக்கிறான். இவை வரவேற்கத்தக்கதுதான். 

ஆனால், என்றைக்கு நாமும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது? படைப்புகளை மேற்கொள்வது? என்றைக்கு நாமும் மற்றவர்களின் பாராட்டையும் புகழையும் பெறுவது?அவை, மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது என்ற சிந்தனையில் நாம் ஒவ்வொரும் இறங்க வேண்டும். இங்கு கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்பது மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் ஆகலாம்; ஓவியன் ஆகலாம்; கவிஞன் ஆகலாம்; ஒரு நடிகன் ஆகலாம்; சிறந்த பேச்சாளனாக ஆகலாம்; சிறந்த சிந்தனைவாதியாகலாம்; இன்னும் பல. 

இவையும் சமூகத்திற்குத் தேவையான ஒன்றுதான். நாம் செய்ய வேண்டிய ஒன்று, தேவைகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான கண்டுபிடிப்புகளில் இறங்கிக் கொண்டே இருக்கவேண்டும். 

ஒவ்வொருவரும் சிந்திப்போம். இந்த மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகளை அனைவரும் மேற்கொள்வோம். 

கட்டுரையாளர்: க.நாகராசு, முதுகலை வரலாற்றாசிரியர்.