தமிழ்ப் புத்தாண்டே வருக!
:சா.தனலட்சுமி கோவிந்தராசு
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்கும்
தித்திக்குமே பொங்கல் திருநாள்;
தையல்மகளை வரவேற்கும்
தமிழினத்தின் நன்னாள்.
தமிழரை ஆள்புரிந்தோர்
தம் மொழியைப் புகுத்தியதால்
தமிழ்த்திங்கள் பெயர்களெல்லாம்
சமக்கிருதச் சாயம் பூண்டன;
தமிழ்ப் புத்தாண்டும்
தடம் மாறிப்போனது.
சுறவம் முதல் சிலை வரையுள்ள
தமிழ்த் திங்களின் சுவடுகள் மறைந்தன;
சித்திரை முதல் பங்குனி வரையுள்ள
சமக்கிருதமே நம்மை ஆள்கிறது.
நம் தமிழோ
பார்ப்பனியப் பிடியில் பல்லாண்டு
அந்நியர் பிடியில் பலவாண்டு
அறியாமைப் பீடையில் இந்நாளும்
சிக்கித் தவிக்கிறது.
ஆனாலும்,
எதிரிகளின் நஞ்சையெல்லாம்
தனக்குள் உரமாக்கியே
எழுத்தாய் சொற்களாய்
நிமிர்ந்து நிற்கிறது தமிழ்.
தலைமுறைத் தமிழுக்குத்
தன்னினத் தடுப்பூசி போட்டிருப்பதால்
பிறமொழிப் பிணியின்றி
பிறக்கிறது புதுத்தமிழ்.
தமிழே
உமக்கு ஒப்பாரும் இல்லை;
உன்னை விற்பாரும் இல்லை.
மங்கிய நிலை மாறி
எங்கும் பொங்கும் நிலைபெறவே
வாழ்ந்திருப்போம்.
வரும் காலத்தில்
தமிழரெல்லாம் தன்னிறைவு பெற
பொங்கலோ பொங்கலென்று
பொங்குக பொன் தமிழே
தமிழருக்கு சுவைநலம் தருகவே!
சா.தனலட்சுமி கோவிந்தராசு
செயமங்கலம்.