புதன், 20 மே, 2020

மகப்பேறு அறுவை சிகிச்சையும் மருத்துவ அநீதியும்: கதிர் நம்பி

இந்தியாவில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் வேகமாகப் பரவி வருகிறது.

எப்போதும் இல்லாத வகையில் இந்தியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சிசேரியன் என சொல்லப்படும் அறுவை சிகிச்சை முறையை அதிகம் பின்பற்றுகிறார்கள். அரசு தரப்பு தகவல்களும் இதனை உறுதிபடுத்துகின்றன.
2008-2009 இல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு மடங்கு அதிகமாகி இருக்கிறது.

சி செக்சன் (c-section) என்பது வயிற்றையும் கருப்பையையும் கீறி குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்.உலக சுகாதார நிறுவன (WHO) அறிவுறுத்தலின்படி, பிரசவத்தில் இக்கட்டான சூழலிலே மட்டும் தான் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா உட்பட வளரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் ‘சி-செக்சன்’ அதிகமாக பரவி வருகின்றது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கூடவே முறைப்படுத்தப்படாத சந்தை, லாப நோக்கம் மற்றும் பெண்களிடையே இதன் மீது ஏற்பட்டிருக்கும் சிந்தனை போக்கு என இவை எல்லாம் அறுவை சிகிச்சைக்கு காரணமாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் முன்னூறு சதவிகிதமும் (300%) தனியார் மருத்துவமனைகளில் நானூறு சதவிகிதமும் (400%) அறுவை சிகிச்சை பிரசவங்கள் கூடியிருக்கின்றன.
2018-2019 இல் பொது மருத்துவமனைகளில் பிறந்த 1.3 கோடி குழந்தைகளில் 19 லட்சம் குழந்தைகள் ‘சி-செக்சன்’ முறையில் பிறந்தவை என நல்வாழ்வு மற்றும் குடும்ப நல ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் நல மேம்பாட்டு தகவல் அமைப்பு (Health Management Information System) சேகரித்த தகவல் இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை பாதியிலும் குறைவாகவே இருந்திருக்கிறது. 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் 73.13 லட்சம் பிறந்த குழந்தைகளில் 4.61 லட்சம் குழந்தைகள் ‘சி-செக்சன்’ முறையில் பிறந்தவை. 6 சதவிகிதமே கூடியிருக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல் இருப்பதாலும் அதன் காரணமாக அதிகம் பணம் செலுத்தவும் வேண்டியதால் ‘சி-செக்சனின்’ நண்பன் என்று சொல்லப்படும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

2008-2009இல் தனியார் மருத்துவமனைகளில் சி-செக்சன்’ முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சம். இதுவே 2018-2019 இல் நான்கு மடங்காக 20.5 லட்சம் என்றாகிப் போனது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மொத்த குழந்தைகளில் 17 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை. இப்பொழுது அது இரண்டு மடங்காகி 33.8 இல் நிற்கிறது.

சி-செக்சன் என்பது சேவை அளிப்பவரின் லாப நோக்கத்தில் இருந்து வருகிறது. இங்கு சேவை அளிப்பவர் என்பது மருத்துவமனைகளை குறிக்கிறது. மருத்துவமனைகள் நல விழைவர்களுக்கு தங்களுடைய பொருளை குறித்த தகவல்களோடு விற்பனை செய்கிறார்கள். முறைப்படுத்தப்படாத சந்தை, நெறிமுறையற்ற விதிகள் என இவற்றின் காரணமாக இந்தியாவில் சி-செக்சன் பரவி வருகிறது என்கிறார் பொருளாதார நிபுணரும் உதவி பேராசிரியருமான இந்திரனில் முகோபாத்யாய்.

சி-செக்சன் பலம் x பலவீனம் :

சி-செக்சன் சில காரணங்களுக்காக “மருத்துவ அநீதி” என்று சொல்லப்படுகிறது. சி-செக்சன் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது தாமதமாகிறது, எடை குறைவு,சுவாசக் கோளாறுகள்,அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் போக்கு, குறைவான அப்கர் புள்ளி(lower apgar score)* என இவற்றையெல்லாம் ஐ.ஐ.எம் அகமதாபாத் தன் ஆய்வில் குறிப்பிடுகிறது.
எனினும் கூட, சுகப் பிரசவமாகாத சூழல் இருக்கின்ற பொழுது, காட்டாக குழந்தையின் இருப்பு நிலையில் சிக்கல் போன்ற சில எதிர்பாரா நிகழ்வுகளை பார்க்கின்ற பொழுது சி-செக்சன் ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறது என்கிறார் மகப்பேறு மருத்துவர் மரு.சுபஸ்ரீ.
உலக சுகாதார நிறுவனம், மருத்துவர்கள் சி-செக்சன் முறையை கொடுக்கப்பட்ட இலக்காகவோ அல்லது எண்ணிக்கைக்காகவோ செய்யக் கூடாது. பிரசவிக்கும் தாயின் தேவை கருதி அதை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சி-செக்சன் அறுவை சிகிச்சையை தவறாக செய்கின்ற பட்சத்தில் அது தாயிற்கு உடலில் ஏதேனும் இயலாமை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்திடக் கூடும். சி-செக்சன் அறுவை சிகிச்சையில் அதிகபட்ச லாபம் கிடைப்பதால் அது மேலும் அறுவை சிகிச்சைகளை அதிகரிக்கிறது. இதனால் பிற மருத்துவ சேவைகளில் தேக்கம் ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

சி-செக்சனில் முதன்மை வகிக்கும் நகரங்கள் :

மகாராஷ்டிரா தவிர்த்து தென் இந்தியாவில் தான் சி-செக்சன் அறுவை சிகிச்சை விகிதம் கூடுதலாக இருக்கிறது.ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக சி-செக்சன் முறையில் குழந்தைகள் பிறக்கின்றன.

சி-செக்சன் முறையை ஏற்க மறுத்தாலும் 2008-2009 கால கட்டத்தை ஒப்பிடும் பொழுது அதிகமாகவே அறுவை சிகிச்சை முறையில் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

மகாராஷ்ட்ராவில் 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26,000. அது இப்போது 1.75 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 51,000 ஆக இருந்து 2.25 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

கர்நாடகாவில் 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 25,000. அது இப்போது 1.37 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 20,000 ஆக இருந்து 1.4 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

ஏன் சி-செக்சன் அதிகரிக்கின்றன? :

பிரசவ வலி தாங்கும் திறன் குறைந்து கொண்டே வருவதால் சி-செக்சன் அறுவை சிகிச்சையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.”என்னுடைய அனுபவத்தில் பத்திற்கு ஆறு பேர் வலி தாங்க முடியாமல் சுக பிரசவத்தை தவிர்த்து விடுகின்றனர். கலந்தாய்வுகள் மூலம் நம்பிக்கை அளித்தாலும் உறவினர்கள் கூட அறுவை சிகிச்சையையே செய்யச் சொல்கிறார்கள்.” என்கிறார் டெல்லியைச் சார்ந்த ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்வி நிறுவனத்தின் மூத்த மருத்துவர் மரு.சாதனா சிங்ஹால்.

தலைக்கு பதிலாக கால்கள் ஜனனப் பாதையை நோக்கி இருத்தல், தாயின் கடந்தகால நோய்க் குறியீடுகள், குழந்தை இயல்பு நிலையற்று பிறக்கும் காரணிகள் கொண்டிருத்தல், குழந்தை கருப்பையில் மலம் கழித்தல் போன்ற காரணங்களுக்காக மருத்துவர்கள் சி-செக்சன் முறையை தெரிவு செய்கிறார்கள் என்கிறார் சிங்ஹால்.

அரசு சுக பிரசவத்திற்கு பணம் தராமலும் அறுவை சிகிச்சைக்கு மட்டும் பணம் தருவதும் சி-செக்சன் அதிகரிக்க ஒரு காரணம் என்கிறார் OP ஜிண்டால் பல்கலையைச் சேர்ந்த முகோபாத்யாய்.

“சி-செக்சன் அறுவை சிகிச்சை செய்வதற்கு கிடைக்கின்ற இழப்பீட்டு தொகையைப் போல சுக பிரசவத்திற்கு எதுவும் கிடைப்பதில்லை.தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக 55 சதவிகித அறுவை சிகிச்சைகள் காப்பீட்டு திட்டங்களின் கீழ் நடக்கின்றன. இதுவே பொது மருத்துவமனைகளில் 17 சதவிகிதம் காப்பீட்டு திட்டங்களின் கீழ் நடக்கின்றன” என்கிறார் முகோபாத்யாய்.

மேலும் சி-செக்சன் மக்களுக்கு பெரும் செலவினமாக இருக்கிறது. ஐ.ஐ.எம் அகமதாபாத் நடத்திய ஆய்வின் படி தனியார் மருத்துவமனையில் சுக பிரசவத்திற்கு ஆகின்ற செலவு 10,814. ஆனால் சி-செக்சன் அறுவை சிகிச்சைக்கு ஆகின்ற செலவானது 23,978.

“எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டு விடக் கூடாதென்பதால் தீவிர கண்காணிப்பினாலும் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது என பொது துறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்வதால் அவர்களுக்கு ஊக்கத் தொகை எதுவும் கிடைக்காவிட்டாலும் கூட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு அதனால் வருகின்ற விளைவுகளை தவிர்க்கவே சி-செக்சனை தேர்ந்து எடுக்கிறார்கள்” என்கிறார் சுபஸ்ரீ.

ஆய்வுகள் சொல்லும் உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோள் :

உலக சுகாதார நிறுவனம் சிசேரியன் பிறப்பு விகிதத்திற்கு வைத்திருக்கிற அளவுகோலிற்கு மேலே தான் இந்தியா இருக்கிறது என்று மருத்துவ ஆய்வறிக்கை குழுமமான ஜாமா (Jama) வின் ஆய்வறிக்கை சொல்கிறது. அளவு கோளான 15 சதவிகிதத்தை இந்தியா எப்போதோ கடந்து விட்டது என்று நிறைவு செய்கிறது அந்த ஆய்வு.

2018-2019 இல் இந்தியாவில் நடந்த மொத்த பிரசவங்களில் 20 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள். கடந்த 2017-2018 இல் 18.7 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடந்திருக்கின்றன. இது நெதர்லாந்து,பின்லாந்து நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமானதாகவே தெரிகிறது. 2008-2009இல் இதன் விகிதம் வெறும் 8.9 சதவிகிதம்.

பிரெஞ்ச் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (FRID)
நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் 2010 லிருந்து 2016 வரைக்கும் 18 லட்சம் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கின்றன. இதில் வசதி படைத்த, முன்னேறிய மேல்தட்டு மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் இந்தியாவில் இரட்டை நிலை நிலவுகிறது. சி-செக்சன் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வசதியற்ற எளிய மக்களும் இருக்கிறார்கள். மேலதிகமான அறுவை சிகிச்சை பிரசவங்களை செய்து கொள்ளும் வசதி படைத்த மக்களும் இருக்கிறார்கள்.

இதே கால கட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களிடத்தில் வெறும் 5 லட்சம் குழந்தைகளே அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கின்றன. இங்கு பெரும்பாலும் வீட்டுப் பிரசவங்களே நடந்திருக்கின்றன. வீட்டுப் பிரசவங்களை விட சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறைவாகவே நடந்திருக்கின்றன என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூலக்கட்டுரை இணைப்பு கீழே :
https://theprint.in/health/caesarean-deliveries-have-become-an-epidemic-in-india-record-300-jump-in-last-decade/334291/.

மொழியாக்கக் கட்டுரை வெளியீடு:
அறிஞர் தொ.பரமசிவன் வாசகர் வட்டம்.

எருமைப்பட்டி கோவிந்தன் கோவில்: உள்ளூர் வரலாறு. :- உதியன் பெருஞ்சேரலாதன்.


அழகர் மலையான் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை ஓட்டிக்கொண்டு பல மாதங்கள் கடந்துபோக ஊர் ஊராகப் பயணப்பட்டே வந்திருந்தார் அந்த முதியவர். வைகைத் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும்போது அதன் கோபத்தைத் தணிக்கும்
கூத்தன் கால்வாய். அருகில் நான்கைந்து வீடுகள் அமையப்பெற்ற உழைக்கும் உழுகுடிமக்கள் மட்டுமே வாழும் அழகானதான எருமைப்பட்டி எனும் ஊரின் வடமேற்குத் திசையில் அந்த முதியவர் வந்து அமர்ந்திருந்தார்.

அவ்வூரில் ஒன்பது பெண் பிள்ளைகளோடு ஓர் ஆணும் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் மாயழகன். இவருக்கு மூத்தவர்களாக பெரிய ராமாயி, சின்ன ராமாயி, பெரிய சிட்டு, சின்னச் சிட்டு, பெரிய சிவனி, சின்னச் சிவனி, சின்னச் சாத்தி, பெரிய சாத்தி, இருளாயி போன்றவர்கள் அவ்வூரில் வாழ்ந்து வந்தனர்.

அந்த முதியவர் ஓட்டிவந்த தம்பட்ட மாடு பார்ப்பதற்குத் தேவலோகப் பசுவை போன்று இருந்தது. மேலாடை பொருத்தப்பட்ட வெள்ளை நிற மாடு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வளைந்த வாள்போல் அமைந்த கொம்பில் வண்ணத் துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நெற்றியில் ஒரு ராமம் பூசப்பட்டிருக்கும். தம்பட்ட மாட்டை அவ்வூரிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

அம்முதியவர் தம்பட்டம் மாட்டை ஓட்டிக்கொண்டு மாயாவதாரனின் புகழைப் பாடிக் கொண்டும், ஒவ்வொரு வீட்டின் முற்றத்தில் அருள்வாக்கு கூறிக் கொண்டும் அம்முதியவர் வலம் வந்தார்.

அவரின் இசைப் பாடலுக்கு ஏற்ப சிறு பறையைக் கொட்டும்போது தம்பட்ட மாடு தலையாட்டும்....வீட்டில் உள்ள பெண்மணிகள் சொளகில் கொண்டுவரப்பட்ட நெல் மணியைத் தன் நாவால் தடவும். மீதி உள்ள நெல்மணிகளைத் தன் தோளில் கிடக்கும் தானியப் பையில் முதியவர் போட்டு வைத்துக் கொள்வார்.

ஒவ்வொரு வீட்டின் முன்பும் கோவிந்தனின் பெருமையையும் கோவிந்தனின் அவதாரத்தையும் கோவிந்தனின் புகழையும் இசைபாடி சிறுபறை கொட்டி அருள்வாக்கு கூறுவார் அந்த முதியவர். இப்படித்தான் அந்த முதியவர் ஊரில் வாழ்ந்து வந்தார்.

தன் கையில் பிறம்பு ஒன்று வைத்திருப்பார். அது பார்ப்பதற்குக் கமண்டலம் போலப் பெரிதாக இருக்கும். அந்தக் கம்பின் இரு பகுதிகளிலும் அவர் வைத்திருந்த உடமைப் பொருள்களைத் தொங்க விட்டிருப்பார். மாட்டின் கயிற்றை அடிப்பகுதியில் கட்டியிருப்பார். கோணிப் பையில் தலைவைத்து முனிவர் போலத் தவக்கோலம் கொண்டிருப்பார் அந்த முதியவர்.

இரவு முடிந்து காலைப்பொழுது வந்தவுடன் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கம் கொண்டு கிளம்பினார். கையில் பைகளையும் மாட்டின் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஊன்றிய பிரம்பைப் புடுங்க...பிரம்பை அவரால் அசைக்கக் கூட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. இறைவனை நினைத்து வேண்ட அருள் வந்து ஆடினார் அந்த முதியவர்.

அருள் ஆடிய அந்த முதியவர், நான்தான்டா கோவிந்தன் வந்திருக்கேன். குடிகளைக் காக்க கோவிந்தை வந்து இருக்கேன்டா. சித்திரை மாதம் திரியாட்டு எடுத்து அருள்வாக்கு கூறி அழகர் மலைக்கு வாங்கடா..வாழ்வாங்கு வாழ நான் வழிகாட்டுறேன்டா...என்று ஆக்ரோசமா அருள்வாக்கு கூறி முதியவர் திடீரெனக் காணாமல் போனார்.

அவ்வூரில் வாழ்ந்த மாயழகனுக்கு கோவிந்தன் அருள் கிடைக்க, கோடாங்கியாக மாறி அருள்வாக்கு வழங்கினார். சேதுபதி ராஜா அரண்மனையில் நாட்டிலுள்ள கோடாங்கிகளை எல்லாம் அழைத்து வந்து அடைத்து வைத்திருந்தனர். நீண்ட தலைமுடி, நெற்றியில் விபூதிப் பட்டை, சந்தனப் பொட்டின் மீது குங்குமம், கழுத்தில் நிறைய ருத்ராட்ச கொட்டை அடுக்கிய மாலை, இடுப்பில் காவி வேட்டி வேட்டி நழுவாமல் இருக்க இருக்கிக் கட்டியத் துண்டு...பூஜைக்குரிய பொருட்கள் அடங்கிய சிறு பை. அகலமாய் அமர்ந்திருந்தனர் கோடாங்கிகள்.

ஒவ்வொருவரும் மரண பயத்துடன் உட்கார்ந்து இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. அரண்மனையின் அமைச்சர் வந்தார். நம்ம ராசா வீட்டில் ஒரு சில நாட்களாகத் துன்பமாக இருக்கிறது. அது என்ன? எதனால் நிகழ்ந்தது? தெய்வ குத்தம் ஏதேனும் உண்டா? வேறு என்ன? இதனை நீக்குவதற்கு என்ன பரிகாரம் இருக்கு? என்பதை நீங்க சொல்லணும்.....என்றார் கறாராக.

குறி சரியாகச் சொல்லாத கோடாங்கி சாட்டையால் பதம்பார்த்து அனுப்பினர் அரண்மனைக் காவலர்கள். போலிக் கோடாங்கிகள் ஓட்டம் பிடித்தனர். அரண்மனை வெறிச்சோடியது. ராசாவின் முகம் மட்டும் சோகம் படர்ந்து அப்பிக் கிடந்தது. ராணியின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதைக் கண்ட அரண்மனை மருத்துவன், சாமி...எருமைப்பட்டி மாயழகன் என்கிற ஒரு கோடாங்கி இருக்கானாம்....அவன கூட்டிட்டு வந்தா எல்லாம் சரியாயிடும் என்று அக்கம்பக்கத்துல பேசுகிறார்கள் என்று ராசாவுடன் கோரிக்கை வைக்க, குதிரை வண்டி எருமைப்பட்டி வந்து சேர்ந்தது.

ராசாவின் கட்டளை. உடனே அரண்மனைக்கு வாங்க என்று குதிரை வண்டியில் வந்து இறங்கிய காவலாளி சொன்னான். ராசாவின் கட்டளையை ஏற்ற கோடாங்கி மாயழகன், நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு கோரிக்கையும் பையையும் எடுத்துக் கொண்டு குதிரை வண்டியில் அமர, புயல் வேகத்தில் அரண்மனை வாயிலை அடைந்தது குதிரைவண்டி.

அரண்மனையே மாயழகு கோடாங்கியின் வருகைக்கு மட்டுமே காத்து கிடந்தது. ராசாவின் முகத்தில் சோக ரேகைகள் படர்ந்து கிடந்தது. அரண்மனையின் ஆசனம் போடப்பட்டது. ஆனால் கோடாங்கி மாயழகு ஆசனத்தில் அமர வில்லை. தான் கொண்டுவந்த கோணிப் பையை எடுத்து தரையில் விரித்தார். மதுரை அழகர் மலையானை நோக்கி உட்கார்ந்து, கையில் சோதியை இறுக்கிப் பிடித்து தரையில் உருட்டினார். இரண்டு மூன்று தடவை சோதி தரையில் உருண்டு செய்தி சொன்னது கோடாங்கிக்கு ...

அரண்மனையைச் சுற்றிப் பார்த்தேன் கோளாறு இல்ல. ராணிக்கு சேதாரம் வந்திருக்கு.... உடலில் கோளாறு...வாளையாய் கட்டி இறைக்குது...நோயைச் சொல்லி நோய்க்கு மருந்தும் சொல்லி குறி சொல்லி முடித்து திருநீற்றைக் கொடுத்து ராணிக்குப் பூசுங்க ராஜா என்று திருநீற்றை அள்ளிக் கொடுத்தார் கோடாங்கி மாயழகன்.

திருநீற்றைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்தாள்...அரண்மனையே இன்பத்தில் திளைத்தது. ராசாவுக்கு ஒரே மகிழ்ச்சி கோடாங்கி மாயழகனை கட்டிப்பிடித்துத் தழுவினார்.உனக்கு என்ன வேணும் கேளுங்க சாமி என் நாட்டில் ஒரு பகுதியைத் தருகிறேன் என்று ராசா கோடாங்கியிடம் சொன்னார்.

எனக்கு எதுவும் வேண்டாம் ராஜா....நீங்க நல்லா இருந்தா போதும். நாடு நல்ல வளம் பெருகும். கோவிந்தன் அருளால் அவ்வளவுதான். உங்க நினைவா அரண்மனைப் பொருளான வெண்கலக் குவளை மட்டும் போதும் ராசா என்று சொன்ன கோடாங்கி மாயழகன், கோணிப் பையை எடுத்துச் சுருட்டிக்கொண்டு ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு அரண்மனை வாயிலைக் கடந்து சாரட் வண்டியில் ஏறி அமர்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு எருமைப்பட்டிக்கு திடீர் விஜயம் செய்தார் ராசா. கோவிந்தனுக்குக் கோயில் எடுத்தான். கல்லில் சிலை வடிக்காது, கரையானால் அழிக்கப்படாத
மரச்சிலையைக் குதிரையில் அமர்ந்த நிலையில் கோவிந்தனுக்குச் சிலை வைத்தான். கோடாங்கி மாயழகனுக்குக் கற்சிலையால் சிலை வைத்துத் தன் நன்றிக்கடனைச் செய்து முடித்தார் ராசா என்றும், கோவிந்தன் 400 ஆண்டுகளுக்கு மேல் எருமைப்பட்டியில்இருந்து எல்லா மக்களையும் காத்து நிற்கின்றான் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி...கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் கோடாங்கி மாயழகன் வட மேற்குத் திசையில் இருக்கும் அழகர்மலையில் வாழும் கோவிந்தனை வணங்கியபடி காட்சி தருகிறார்.

தகவல்: மா.வேலுச்சாமி, கருங்கலக்குறிச்சி.
இவர் அழகர்மலையான் கோவிந்தனுக்குத் திரியாட்டு எடுத்தவர்.

சனி, 9 மே, 2020

குதிரை வீரன் அழகம்மாள் காதல்: உள்ளூர்க் கதை வழக்காறும் வரலாறும்:- உதியன் பெருஞ்சேரலாதன்

உலகம் இருக்கும் வரை காதல் இருந்து கொண்டே இருக்கும்;காதல் இருக்கும் வரை உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதற்கு எங்களூர் எல்லைச் சாமிகளே சாட்சி.
அவர்களைப் பற்றியகதை அதைத்தான் வரலாறாய்ச் சொல்கிறது.

அப்படித்தான், குதிரைப்படை வீரனுக்கும் செல்வச் சீமாட்டியாக வளர்ந்துவந்த அழகம்மாளுக்கும் காதல் அரும்பத் தொடங்கியது. அழகம்மாள் அழகில் மட்டும் அல்ல; சகல அந்தஸ்திலும் ஏழு அண்ணன்மார்கள் புடைசூழ வளமான வாழ்வை வாழ்ந்து வந்தவள்.

நாடாண்ட மன்னவனுக்குச் சேவகம் செய்யும் குதிரை வீரன் ஒருவன் அழகம்மாள் வாழும் வீதியில் தினமும் சென்று வருவது வாடிக்கை தான். அளவான உயரம்... அடுக்கடுக்கான கட்டுடம்பு.... கொண்டையிட்ட தலைமுடி. கூடவே ஒரு வேட்டை நாய். இப்படித்தான் அந்தக் குதிரை வீரன் காட்சியளித்தான்.

கலைந்த கூந்தலைக் காயவைக்க மாடியில் தோழிகளோடு உலாவரும் அழகம்மாளின் கண்களுக்குக் குதிரை வீரனின் தோற்றம் கண்ணுக்குள் புகுந்தது....
அதோடு மட்டுமல்ல; பருவப் பெண்ணல்லவோ அழகம்மாள். அவளைப் பாடாய் படுத்தியது குதிரை வீரனின் நினைவு. காதல் அவஸ்தை அனைத்தையும் பெற்று ஆண்டாளாகவே மாறினாள் அழகம்மாள்.

தோழியைத் தூது விட்டாள்... துயரத்தை முதன் முதலில் சந்தித்தாள். காதலைக் குதிரைவீரன் ஏற்கவில்லை. மறுமுறை தூது விட்டால் அழகம்மாள்.... குதிரைவீரன் நேரில் பார்க்க வருகிறேன் என்று தோழியிடம் கூறி விடைபெற்றான்.

மறுநாள் மாலை வேளை, அந்த வனப்பகுதியில் அவளைச் சந்திப்பதாக மடல் கொடுத்தான் குதிரை வீரன். மடல் கிடைத்த மகிழ்ச்சியில் அழகம்மாள் அதிக அழகானாள். நந்தவனத் தோழிகள் புடைசூழ நர்த்தனம் புரிந்தது. குதிரைவீரன் வருகை புரிந்தார். குதிரை, உடைவாள், நாய் இவற்றுடன்....

அழகம்மாள் இந்திரலோகத்து இளவரசியாய் அழகின் கொடையாய் ஒய்யார நடை பயின்று நாணத்துடனும் மடத்துடனும் முகம் மறைத்து நிலாப் பெண்ணாய் முகம் காட்டினாள். குதிரை வீரனுக்குப் பெருமகிழ்ச்சி.. அழகை ஆராதனை செய்கின்றான் தன் கண்களால். முடிவு செய்துவிட்டான் குதிரைவீரன். வாழ்ந்தால் இவளுடன் மட்டுமே என முடிவாகிவிட்டது.

அவளிடம், என்னுடன் வந்துவிடு என்றான். அவளும் சம்மதித்தாள். குதிரையில் வைத்துக் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதியை நோக்கி குதிரை ஏறிச் செலுத்தினான். குதிரை வீரன், அழகம்மாள் உடன் கூடவே நாயும் விரைந்து ஓடி வந்தது.

இளைப்பாறவும் ஓய்வெடுக்கவும் வெங்கலக் குறிச்சிக் கண்மாய்க்குள் இருவரும் தஞ்சம் ஆனார்கள். நாணல்கள் சூழ்ந்த இடம். நாட்டுக் கருவேல மரங்கள் அரணாகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து இருவரும் துயில் கொண்டனர்.

அப்போது, சாரட் வண்டியில் இருந்து இறங்கி ஓடி வந்த ஏழு பேரும், அழகம்மாளையும் குதிரை வீரனையும் கண்டறிந்தனர். அவிழ்ந்திருந்த கூந்தல் பூமிக்குக் குடை  விரித்து இருந்த கார் கூந்தலைப் பிடித்து அரிவாளால் ஒரே வெட்டு. குடைசாய்ந்தாள் அழகம்மாள் பூமியில். அலறித் துடித்தான் குதிரைவீரன். உடைவாளை எடுத்து எழுவரையும் காயப்படுத்தினான். அழகம்மாளின் உடன்பிறந்தவர்கள் என்பதற்காகவே உயிருடன் தப்பிப் பிழைத்தார்கள் அவர்கள்.

குருதி ஓடிய நிலையில் மயங்கிக் கிடந்த அழகம்மாளைத் தன் தோளில் கிடத்திக்கொண்டு ஆட்கள் உள்ள இடத்தை நோக்கி ஓடிவந்தான் குதிரை வீரன். கண்மாய்க் கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனைக் கண்டு அலறியபடி தண்ணீர் கேட்க, அவனோ பயந்து தண்ணீர் இல்லை என்று ஆட்டின் பாலைக் கொடுக்க முன்வந்தான். பால் அருந்திய நிலையில் அழகம்மாள் இடையனை நோக்கி உன் குலம் வாழ்க என்றாள் கண்ணீர் மல்க...காதலனைக் கட்டி அணைத்து முத்தம் இட்டு மடிந்தாள்அழகம்மாள்.

தன் உடைவாளை எடுத்து, குதிரையையும் நாயையும் வெட்டிச் சாய்த்துவிட்டு, தன் உடைவாளை நெஞ்சில் சொருகினான் குதிரைவீரன்.

சாதி மதம் பார்க்கும் காதல் கொலைஞர்கள் அந்தஸ்தும் பார்த்தார்கள் அழகம்மாளின் காதலில் ...

வன் கொலையாய் மரணித்த அழகம்மாளும் குதிரை வீரனும் ஊரைக் காக்கும் எல்லைச் சாமிகளாயினர் என்ற உள்ளூர்க் கதை, காலங்காலமாக வழங்கி வருகின்றது.

காதலர்கள் வாழவில்லை; காதல் சாகவில்லை என்பதை, எல்லைச் சாமிகளாக மக்கள் வழிபடும்  குதிரைவீரன் அழகம்மாள் பற்றிய வழக்காற்றுக் கதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

//ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெங்கலக் குறிச்சி ஊராட்சி, வெங்கலக் குறிச்சியில் அமைந்துள்ள அழகம்மாள் கோவில் கதை.//

-உதியன் பெருஞ்சேரலாதன்.
09.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 09.05.2020 /

வெள்ளி, 8 மே, 2020

வசுமித்ர - இலக்கியம் - இடதுசாரி : ப.பிரபாகரன்

அம்பேத்கரின் அறிவுத்தேடல் என்பது, புத்தரின் ஆண்குறியை மட்டுமே வரம்பாகக் கொண்டிருந்தது எனும் வசையில் நீங்கள் இலக்கியம் லயித்தால், இடதின் சாரம் துய்த்தால் நீங்கள் தான் வசுமித்ர. கவனிக்கவும் வசுமித்ரா அல்ல. ஏனெனில் வசுமித்ரா என்பது மார்க்ஸோடு புனிதம் உய்க்கத் தடை செய்தலின் பொருட்டில் வார்த்தெடுக்கப்பட்டதாய் கருதப்படுகிறது.

குறி மடக்கல்
இந்திரியம்
முலை
பை நாகம்
யோனிப்பழம்
எமனின் காமம்
எருமையைப் புணர்தல்
காளியைப் புணர்வதில் ஆகச்சிறத்தல்
காந்திய ஊதொலி
-இவையெல்லாம் இலக்கியம் என்றால், கவிதை என்றால், அந்த எழவு வீட்டுப் பிணத்தின் தலைமாட்டு நெல் மரக்கால் எனக்குத் தேவையில்லை. நீங்களே பொங்கித் தின்றுவிடுங்கள்.

செழிப்பும் மனக்கொழுப்பும் மிக்க புத்திஜீவியாகிய நீங்கள் மக்களுக்கு வகுப்பெடுக்கத் தயாரென்றால் எதுவும் பேசலாம். உங்களை ஒரு குழு மேடையேற்றும். அதில் நீங்கள் மினுக்கும் மார்க்சியத்தை மெச்சி முகரலாம். எதிர்பார்த்தபடி கம்யூனிச அறிஞர் பட்டத்தையும் தட்டிச்செல்லலாம்.

இதற்குப்பிறகும் நீங்கள் பிரபலமாக ஆசைப்பட்டால்,
ரெண்டு பீரை வாங்கி வரும் நுரையின் சூத்திரமென்ன? எனும் தத்துவார்த்த வேள்விகளில் உங்களின் மதிப்புமிகு சலைவாக்களை ஒழுக விட்டு ஆய்வு செய்யலாமே தவிர, யார் குறியில் அம்பேத்கர் அறிவைத்தேடினார் என்று அந்தரங்கச்சுவை நாடும் உங்கள் ஆழ் மனதின் அடக்கி வைக்கப்பட்ட மலங்களின் நாற்றமெடுத்த வாயுக்களைப் பிடுங்கி விடத்தேவையில்லை. ஏனெனில் அது உங்கள் உடலில் ஊறிப்பெருகி உங்களை மட்டும் அழித்துக்கொள்ளும் சாதிய ஊதல். அதற்கு நாங்கள் பலிபடையல் ஆக முடியாது.

அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள், புத்தத் தேடல் போன்றவற்றில் விமர்சனமிருந்தால் விவாதமாக முன் வைக்கலாம். மாறாக, அவதூறு செய்தால் நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம். ஆனால், அது நிச்சயம் அவதூறாக இருக்காது. உங்களை அம்பலப்படுத்துவதாக அமையும்.

கம்யூனிச புத்திஜீவிகள் என உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு, ஊடக வெளிச்சத்தில் ததும்பி நிற்கும் மூளைக் கதுப்புகளின் விஞ்ஞான சமிக்ஞைகளையெல்லாம் எங்களை நோக்கி ஏவி விடும் நீங்கள் உண்மையான இடதுசாரித் தோழர்களை அறிவீர்களா?

உடல் அளவுக்குப் பொருந்தாத பழைய ஆடைகளை அணிந்து, தானாக முடிவெட்டி சவரம் செய்து, பேருந்துக் காசை மிச்சம் பிடித்து, போகுமிடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பசியாறி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, அவர்களுக்காக அரச பயங்கரத்தையும் ஆதிக்க சாதி வெறியையும் எதிர்த்து, சமரசமின்றி போராடி, வெட்டப்பட்டுச் செத்துப்போன பிறகும் இன்றுவரை அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் அவர்கள்.

படிப்பை உதறி, உடல்சுகம் உதறி, சொந்தபந்தம் சொத்துசுகம் அனைத்தையும் துறந்து தியாகியானவர்களே கம்யூனிஸ்டுகள்.

தோழர் தமிழரசனைத் தெரியுமா?

விழுப்புரத்திலிருந்து சென்னை வரை நடந்தே சென்றவர். பச்சை வாழைக்காயைச் சுட்டுத தின்று பசியாறியவர். மீன்சுருட்டி அறிக்கையில் சாதியொழிப்பைப் பேசி காடுவெட்டி குருவையே குலைநடுங்கச் செய்தவர். அவரையே இதுநாள் வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட்டாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூலியஸ் ஃபூசிக் தன் பன்னிரண்டு வயதில் கவிதை பாடி அரசியல் பேசியவன்.
அவன் சொல்கிறான்.
"கம்யூனிஸ்டுகள் தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக மாறவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்"
-சொல்லியபடியே தூக்கிலேறி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செக்கோஸ்லேவியாவுக்காகச் செத்து போனான்.

அவன் ஒரு போதும் உங்களைப்போல் யோனியின் கரு, பூ, பிஞ்சு, காய், பழம், அழுகல் எனும் இலக்கியங்களுக்குள் திளைத்துப்போகவில்லை. மாறாக காவல் படையின் குண்டாந்தடி அடிகளை வாங்கி முகம் உடைந்த பின்பும் எதிர்த்து முழங்கினான்
"போலீஸ் அராஜகம் ஒழிக" என்று..!!

உலகம் போற்றும் 'எர்னஸ்டோ சே குவேரா'வைச் கூட கட்சியில் வேலை செய்யாதவர் எனும் விமர்சனம் செய்வோர் உண்டு.

நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாவிட்டாலும், இது போன்ற எண்ணிலடங்கா தியாகத் தோழர்களின் வரலாறு தெரிந்திருப்பதால்தான் இன்னமும் இடதுசாரி ஆதரவாளராக உள்ளேன்.

ஆனால், அவர்களையே விஞ்சும் வகையில் மார்க்சியம் பேசும் நீங்களெல்லாம் உங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்வதுதான் என் போன்றோரைக் கெக்கலிக்க வைக்கிறது.

அப்படிப்பட்ட பாரம்பரியம் வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள தோழர்களே அம்பேத்கரை சரியான அளவுகோளில் அணுகும்போது, ஆபாச அவதூறு கிளப்பும் வசுமித்ரவோ மற்றுமவனை ஆதரிக்கும் இடதுகளோ
முத்துராமலிங்கத்தையோ, காந்தியையோ, திலகரையோ, படேலையோ, ராமதாசையோ, யுவராஜையோ, இன்னும் பல சாதிப்புழுக்களையோ நாகரிகச் சொற்களைக் கொண்டாவது விமர்சித்திருக்கிறீர்களா?

மாட்டீர்கள். ஆனாலும், நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக்கொண்டு உயர்தர நிறுவனத்துச் செஞ்சட்டைகளணிந்து காணொளிக் காட்சிகள் மூலம் வகுப்புகள் எனும் பெயரில் தூய்மைவாதம் பேசுகிறீர்களே, அந்தப் பேச்சு என்றாவது உங்களைப் பரிசுத்தப்படுத்துமா பேச்சு வியாபாரிகளே?

பறைசாதி வெறியர்கள், தலித்திய அறிவிலிகள் என்று கவிஞ முகமணிந்து முயங்கிப்பெறும் காமத்திளைப்பில் கம்யூனிசம் கண்டடைந்த நீங்கள், உங்களின் தனியான கழிவறையில் மலத்துவாரத்தைச் சிறுதுளை நீர் பீய்ச்சான் கொண்டு சுத்தப்படுத்துவதைத் தவிர்த்து, வாய்க்கொப்பளித்து விழுங்கி, குளித்துத் துவைத்து செடிக்கூற்றிப் பறித்துச் சமைக்கும் ஏரித்தண்ணீர் விளைவித்த கத்தரிக்காய் குழம்பை ரேஷன் அரிசிச்சோற்றில் பிசைந்து சாப்பிடுவீர்களா?

நாங்கள் கம்யூனிஸ்ட் வரலாற்றில் புது வடை சுடுகிறோம் எனும் ஆன்லைன் ஆர்ப்பாட்டக்காரர்களே! நீங்கள் உயர்தர சானிட்டரி பேட் தவிர்த்து பிறப்புறுப்பில் பீறிடும் உதிரம் உறிஞ்ச ஃபுல் வாயில் புடவைகளைக் கிழித்துப் பொருத்தி கட்டிட வேலை செய்திருக்கிறீர்களா?

நீர்க்கடுப்பில் குறி வலித்து கொட்டை வீங்கி யூனிட் கணக்கில் ஜல்லியை அள்ளி விட்டிருக்கிறீர்களா?

கல்யாண மண்டபத்தில் வியர்வதை வழித்து, பாத்திரங்கள் கழுவி இருநூறு வாங்கி கைகளில் சொறி வந்து நொந்திருக்கிறீர்களா?

காய்கறி மார்க்கெட்டுகளில் இடுப்பெலும்பு முறியுமளவு மூட்டைகள் தூக்கியிருக்கிறீர்களா?

இன்னும் எத்தனையோ உழைக்கும் வெளிகளில் மூத்திர வாடையோடு வாழ்ந்திருக்கிறீர்களா?

இதை வாசிக்கும்போதுதான் உங்களுக்கு இவை அறிமுகமே ஆகியிருக்கும்.

ஆனாலும், நீங்கள்தான் கம்யூனிஸ்டுகள் உயர்தர செல்பேசியில் உயர்தனிச் செம்மொழிகளில் அம்பேத்கரை குறிபாடும் தூய இடதுசாரிகளாகிய நீங்கள்தான் புரட்சி செய்யப்போகிறீர்கள்? நீங்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை நோண்டப்போகிறீர்கள்.?

சங் பரிவார் குறிகளால் குத்திக்கிழிக்கப்படும் சிறுபான்மை மக்களின் உடல்களைப் பற்றி பேசாதவர்கள், பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்துப் பதறாதவர்கள், குறி கொண்டு அம்பேத்கரிய வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், நீங்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து வேலை செய்ய மாட்டீர்கள். நீங்கள் பதிப்பகம் வைத்திருப்பீர்கள். நீங்கள் புத்தகம் எழுதுவீர்கள். நீங்கள் விருது கொடுப்பீர்கள். விருது வாங்குவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியினருக்கே பாடம் நடத்துவீர்கள். உங்களை அவர்களும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

உங்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

"நீங்கள்லாம் கம்யூனிஸ்ட் கெடையாது. எந்தக் கட்சிலயும் சேராம உடம்ப வருத்தி ஒழைக்காம வாயாலயே ஓலா உட்டு ஓத்ஸ் சாப்புடுறவனுங்க.. உங்க எழுத்துக்கொழுப்புக்கெல்லாம் உச்சம் தேவைப்பட்டா குழி பறிச்சி குறியைப் பொதச்சிக்கிங்க. அத விட்டுட்டு புக்க படி, கவிதையப் படின்னு ஆபாச குருத்துகளுக்கு உரம் வேண்டி வாதம் பண்ணினா, நீ எழுதினத நான் ஏண்டா படிக்கணும்னுதான் பதில் கேள்வி கேப்பேன்."

அப்புறம்,

அம்பேத்கர் எட்டாயிரம் ரூபாய் கொடுத்துத் தங்கத்திலான குர்-ஆன் வாங்கினார்;
கார் வைத்திருந்தார்; கோட், தொப்பி அணிந்திருந்தார்; மாடி வீடு கட்டினார்; கடைசி வரை அரச நட்புக்களிடம் நற்சார்பு கொண்டிருந்தார்
-எனச் சொல்லும் யோக்கியவான்களே! பெரியாரைப் பேசுபவர்கள், அவர் சொன்ன எளிமையான வாழ்வை வாழ்கின்றனரா? மார்க்ஸைப் பின்பற்றுபவர்கள் முழு கம்யூனிச தியாக வாழ்வை வாழ்கின்றனரா?
இவர்களிடம் செல்லுபடியாகாத உங்கள் கோபம் அம்பேத்கரிடம் மட்டும் குறி கொள்ளுமென்றால் உங்களுக்கோர் பதிலுண்டு.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அம்பேத்கரும் சரி, அவரால் உரிமை பெற்ற நாங்களும் சரி, இந்திய அரசால் சாதிய சக்திகளால் அனுபவித்த கொடுமைகள் இன்னமும் முழுமையாக நீங்காமல் தொடர்ந்து கொண்டேதான் சகித்து வாழ்கிறோம். இட ஒதுக்கீடு மூலம் கல்வி பெற்று இன்னமும் நூறாண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் எங்களைத் தூய்மை வாழ்க்கை வாழ, தியாக வாழ்க்கை வாழ, வறுமை வாழ்க்கை வாழ, கம்யூனிசத்தின் பெயரால் பணிப்பீர்களேயானால் உங்களை நீங்களே திருப்பிக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்தானா என்று..

"நாங்க எப்பதாண்டா நல்ல சட்ட போட்டு நல்ல சோறு திங்கிறது?

உங்களை நான் நன்கறிவேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வாட்சப் குழுவில் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பீர்கள். கட்சிப்பணி ஆற்ற முடியவில்லையென உங்கள் அடிப்பொடிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அடையாளம் பெறுவீர்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பிரபலம் ஆவீர்கள். ஆனால் ஒரு போதும் கம்யூனிஸ்ட் ஆக மாட்டீர்கள்.

ஆனால் தலித்துகளுக்கு மட்டும் பாடமெடுப்பீர்கள்.. உங்களைப் பற்றி கட்சி கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டித்து எழுத வேண்டும். ஆனால், அவர்கள் உங்கள் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் இருக்கும்வரையில் இந்தியாவில் புரட்சி நிச்சயம் என்று நம்புபவர்கள் அவர்கள்.

இங்கே உங்களைப்போன்ற கழிசடைகளை ஆதரிக்கும் சில கட்சி கம்யூனிஸ்டுகளை இப்போது நாங்கள் அடையாளம் காண்கிறோம். இவர்களை இனி புரட்சிக்கான புண்ணியவான்கள் என்று கருதி இந்தியாவை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நாம் ஏதேனும் தமிழ்ப்படம் பார்த்து விமர்சனம் எழுதிக்கொள்வதே உத்தமம். அந்தளவுக்கு 'பிளக்க வாசிப்பவர்கள்''
சாமுவேல் போன்ற தோழர்களையே தலித்திய சாதிவெறியன் என்று முத்திரை குத்திப் பேசுபவர்களைக்கூட அமைதியாகக் கடந்து போகிறவர்கள்.

ஆனாலும், சில உண்மையான கம்யூனிஸ்டுகள் களத்தில் அதிகாரத்தை எதிர்த்துக் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் வசுமித்ர கும்பலோ புத்தகம் விற்க அடையாளம் தேடுகிறது. லாபம் பார்த்தவர்கள் வேறென்ன செய்வார்கள்? அதற்கு அம்பேத்கர் தான் இம்முறை இவர்களின் தேர்வு என்றால்,
"வா, காத்திருக்கிறோம்..!!"

ப.பிரபாகரன்.
08.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 08.05.2020 /

நன்றி:
ஜின் அவர்களது முகநூல் பதிவு.

வியாழன், 7 மே, 2020

அப்பாவின் பூர்வீகத்துப் பெருங்கோபம்: அன்பு தவமணி


தாய் அறிமுகப்படுத்திதான் ஒரு குழந்தைக்கு அப்பாவைத் தெரியும் என்று சொல்லுவார்கள். தமிழ்ச் சமூகத்தில் இந்த மொழியைப் பரவலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழ் சினிமாவில் கூட நிறைய இதுபற்றிய உரையாடல்களும் பாடல்களும் வந்திருக்கிறது.

நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் என்பது, என்னுடைய தந்தையின் ஊர் அல்ல. என் தாய் பிறந்த மண்ணில் தான் நான் பிறந்ததில் இருந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தில் ஒருவருக்குப்
பிறந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து போவது என்பது மிகவும் துயரமான சம்பவம். அதை ஏற்றுக் கொள்ள ஒவ்வொருவருடைய மனமும் மறுக்கத்தான் செய்யும். அந்த வகையில், என் தந்தைக்கு எப்படி இருந்ததோ என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் அந்த இடத்தை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள் என்றால், அது உடலிலிருந்து உயிர் பிரிவதற்குத்தான் சமம்.

இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். குறிப்பாக, நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு நடந்ததையே கொள்ளலாம். இதுபோன்று பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும், வறுமையின் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் நிறைய மக்கள் தான் பிறந்த இடத்தை விட்டுப் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய மன நிலையை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிறப்பிடம் பற்றிய ரணம் இருக்கத்தான் செய்யும்.

அந்தவகையில், என்னுடைய பிறந்த ஊரில் இருந்து எனக்கு நிகழ்ந்த பிரிவு என்பது கொஞ்சம் விசித்திரமானது. அதனால் என்னவோ எனக்கு அந்த நெகிழ்வான தருணம் என்பது இல்லாமல் போய்விட்டது.

இன்னொரு வகையில், நாம் வாழும் நாடு என்பதும் தாய்நாடு, நாம் வாழும் பூமி என்பது தாய் பூமி, நம் பூமியில் ஓடும் நதிகள் என்பது பெண்பாற் பெயர்களாகவே உள்ளது .

இப்படி நம் சமூக அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் நீங்கள் வாழ்வது தந்தையின் ஊராக இருக்க வேண்டும். சொத்து என்பதும் ஆண்களுக்கு வழங்கப்படும். சமூக அமைப்பும் ஆணாதிக்கச் சமூகமே. இது ஒருபுறம் இருக்க, எனக்குக் கிடைத்த வாய்ப்போ என் தாய் பிறந்த ஊரிலேயே நான் பிறந்து இருக்கிறேன்.

அதனால் எனக்கு அப்பா பிறந்த ஊர், அந்த ஊரின் மீதான நாட்டம், ஈர்ப்பு, பிடிப்பு என்று ஏதும் பெரிய அளவில் இல்லை.

ஒருவேளை, நான் தந்தை ஊரில் பிறந்து இருந்து, அங்கு கொஞ்ச காலம் வாழ்ந்து இருந்து, அதன் பிறகு தாய் ஊருக்கு வந்திருந்தால் எனக்கு அந்த வலியும் வேதனையும் எல்லோருக்கும் போல எனக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு நகரத்திற்கு அழைத்துச் சென்றதுதான் அப்பாவைப் பற்றிய பெரிய அளவிலான நினைவு. அப்போ எனக்கு 10வயது . அதற்கு முன்பு வரை அவரைப்பற்றித் தெரியவில்லையா என்ற கேள்வி எழும். அப்படி என்றால் தெரியும். எப்படி தெரியும் ?

அவர் வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்த்து வரக்கூடியவர். ஒரு வாரம் அல்லது10 நாள் என்று வேலை பார்ப்பவர். விவசாயம் எந்தெந்த ஊர்களில் நடக்கிறதோ, அங்கெல்லாம் கதிர் அடித்த பிறகு அந்த வைக்கோல்களைக் கட்டி மாட்டு வண்டிகளில் கேரளாவிற்கு ஏற்றி விடும் வேலை. வேலை முடிந்து பாரம் ஏற்றிய மாட்டுவண்டி மூலமாக மதுரை வழியாக வரும்போது அவர் இறங்கி வீட்டிற்கு வருவார்.

எனக்கு ஆறு ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் உள்ளதால், நான் அவர் வரும்போது உறங்கி விடுவேன். அதன்பிறகு உள்ளூரிலும் அவருக்கு வேலை இருக்கும். உள்ளூர் கதிர் அடிப்புக் காலங்களில் அப்பொழுது அவர் காலையில் என் தலைமாட்டில் 10 பைசா 20 பைசா என்று எனக்குச் செலவுக்கு வைத்துவிட்டு வேலைக்கு 5 மணிக்கே சென்றுவிடுவார். நான் எழுந்து ஆவலுடன் தலையணையைப் புரட்டுவேன். அந்த 10 பைசா 20 பைசாவா என்ற தொகை தான் என் முக மலர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். அதுதான் அவர் மீது நான் செலுத்தும் பாசமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் மாலை வெளியூர் சென்று வரும்போது சில சுவராசியமான நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது.

அவர் வரும்போது கதவு திறக்கும் சத்தம் கேட்கும். ஏதோ ஒருவகையான அரைகுறை முழிப்பு. அதன் பிறகு பக்கத்தில் அமர்ந்து பெயர் சொல்லி அழைத்து எழுந்திரு எழுந்திரு என்றும் கூப்பிட்டு, இந்தா புரோட்டா சாப்பிடு என்பார். அப்பொழுதெல்லாம் பாலித்தீன் கவரில் தனியாக சால்னா வாங்கக்கூடிய பழக்கம் இல்லை. கடையிலேயே இலையில் புரோட்டாவைப் பிச்சுப் போட்டு அதில் சால்னாவும், அதற்குள் ஒரு ஆம்பளைட் வைத்து கட்டித் தருவார்கள். அதை என் முகத்திற்கு முன்னால் திறக்கும்போது அந்த வாடை என்னை எழுப்பி விடும். அதன் பிறகு அரைத் தூக்கத்தில் அந்த புரோட்டாவைத் தின்றிருக்கிறேன். அதன் பிறகு அவர்கள் வாயைக் கழுவி விட்டு தண்ணீர் கொடுத்து அப்படியே தூங்கவைத்த நாட்கள் அதிகம். அதை காலையில் கேட்பார்கள். நான் சாப்பிட்டதுகூட எனக்கு நினைவில் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்லித்தான் அதை நான் தெரிந்து இருக்கிறேன்.

புரோட்டா வாங்கி வராத காலங்களில் அதிகமாக எனக்குக் கிடைத்த தின்பண்டம் மிச்சர். அந்த மிக்சர் நான் சாப்பிடும் நேரமும் இதேபோல அரைத்தூக்கம்தான். அதைச் சாப்பிடும்போது காரம் அதிகமாக இருக்கும். அதனால் அதை அள்ளி ஒரு டம்ளரில் போட்டுக்கொண்டு அதில் பச்சைச் தண்ணீரை ஊற்றி, அதன் பிறகு அதைப் பிழிந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ற நாட்கள் ஏராளம். சில நாட்கள் ஞாபகம் இல்லாமலேயே தின்று இருக்கிறேன். இதையும் மறுநாள் காலையில் எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார்.

சில காலங்களில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மார்கழி மாதம் கிட்டத்தட்ட எனக்கு ஏழு எட்டு வயதில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவதை வழக்கமாகக் கொண்ட அவர், எனக்கும் அந்த மாதிரியான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தினார்கள். அப்போது விரதம் இருக்கக் கூடிய ஒரு வழக்கம் இருந்தது.கட்டுப்பாடுகள் கடுமையானதாக இருக்கும். பெண்கள் குறிப்பாக அம்மாகூட வீட்டுத் தூரமான காலங்களில் கொடுமையான முறையில் அவர்கள் வழி நடத்தப் பட்டார்கள்.

எனக்கு இந்தக் காலங்களில் கிடைத்த ஒரு சுவையான நிகழ்வு, அனுபவம் என்னவென்றால், ரோட்டுக் கடையில் எனக்குத் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு எங்க அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் ஒரு அய்யர் கடை.

பூரிக் கிழங்கு என்றால் ஒரு அலாதிப்பிரியம். நான் போய் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற சுதந்திரமும் எனக்கு இருந்தது. இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அந்த இரண்டு மாதகாலம் அவ்வாறு இருந்ததால் எனக்கு அவர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், தாயைவிட தந்தை மீது எனக்கு ஏற்பட்ட பிரியங்கள் இந்த வகையில்தான்.

அதன் பிறகு, ஆறாவது பள்ளியில் சேர்த்து, பின்பு விடுதியில் சேர்த்து விட்ட பிறகு, அவருடைய பணி நின்று விட்டது. என் கல்விப்புலம் சார்ந்த ஒட்டுமொத்த கவனிப்பும் என் தாய் சார்ந்தே ஆகிவிட்டது. அதனால் என்னவோ தாயின் மீது வெறுப்பும், தந்தையின் மீது பாசம் என்று ஒரு இரு மைய நிர்வாகமாக மாறிப்போனது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் காலங்களில் எப்போதாவது ஒரு நாள் வருவது போவது என்று இருந்ததன் காரணமாக, நான் வரும் நேரத்தில் அவர் வேலைக்குச் செல்வதும், அவர் இருக்கும் நேரத்தில் நான் கல்லூரி பல்கலைக்கழகங்களில் விருப்பமாக என் வாழ்க்கை மாறிப் போனது. அவர் மீது நேரடியாக இல்லாமலும் மறைமுகமாகப் பாசம் ஏராளமாக இருந்து வந்தது. தற்போது அவருடனே இருந்து நெருங்கி வாழ்ந்து வரும் போது தான் தெரிகிறது, என் தாய் அவரோடு எவ்வளவு சிரமப்பட்டு குடும்பம் நடத்தியிருக்கிறார் என்று.

சிறுவயதில் என்னை என் தாய் கட்டுப்படுத்திவிட , பன்மடங்கு நான் அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. இது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது. நான் குழந்தையாக இருக்கும்போது அவர் செய்ய வேண்டியது இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்த ஊரான சொந்த ஊரைப் பற்றிப் பெரிதாக இங்கே இன்னும் சொல்லவில்லை. அங்கு தந்தையுடன் பிறந்த மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். பிறகு அவருக்குச் சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருக்கிறார்கள். ஒரு பத்து குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு எப்போதாவது மாசிமாதம் நடக்கக்கூடிய திருவிழாவிற்கும், அந்த ஊரிலேயே நடக்கக்கூடிய அனைத்து சமூகம் சார்ந்த திருவிழாவிற்கும் நான் எப்போதாவது செல்வதுண்டு. அந்த மாதிரி ஒன்று இரண்டு முறை சென்ற நிகழ்வு நினைவிலிருக்கிறது.

நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் பள்ளி விடுதியில் இருந்து நானாகவே முதல்முறையாக அந்த ஊருக்குச் செல்கிறேன். இரவு நேரம். அதுதான் எனக்கு வெளியூருக்கு என்ற தனிப் பயணம். எனக்கு அதில் ஒரே ஒரு பதட்டம் தான். பயமில்லை. நாம் போகிற பேருந்து அந்த ஊரைக் கடந்து போகும்போது| அப்போ அந்த இறங்கும் இடத்தைத் தவற விட்டு விட்டோம் என்றால், வேறு இடத்துக்குக் கொண்டு சென்று விடுவார்கள். திரும்புவதற்குக் காசில்லை என்ற அந்தப் பதட்டம் தான். அதனால் நான் ரொம்ப முனைப்பாக வெளியில் பார்த்துக் கொண்டும், அந்த நடத்துனரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டும் சென்றேன்.

மறுநாள், என் பெரியப்பா மகன் அவர்களிடம் வாங்க கடை பக்கம் போவோம் என்று அழைத்து விட்டுச் சென்றேன். அந்தக் கடையில் டீ போடுவதற்கு முன்னால் இந்தப் பையன் யார் என்று கேட்டார்கள். அப்போது என் அண்ணன் இவன். என் உறவுக்காரன் என்று சொன்னான். பிறகு எனக்கு அங்கு ஒரு தேநீர் வழங்கப்பட்டது. அவனுக்கும் வழங்கப்பட்டது. இரண்டும் பீங்கான் டம்ளர். அதன்பிறகு மற்றவர்களுக்குச் சில்வர் டம்ளரும் கொடுக்கப்பட்டது. குடித்த பின்பு நான் வேண்டுமென்றே அந்த டம்ளரை கீழே போட்டு உடைத்து விட்டேன். அந்தக் கடைக்காரன் பதறி, ஏன் உடைத்தாய்? நீ எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?என்று கேட்டபோது, என் அண்ணன் பொறுங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சமாதானப்படுத்தினார். மறுபடியும் அந்தக் கடைக்காரர் யார் இந்தப் பையன் என்று கேட்டபோது, என் சித்தப்பா பையன் என்று சொல்லி, என் தந்தையின் புனைப்பெயரைச் சொன்னான். அதற்கு அந்தக் கடைக்காரர், நினைத்தேன்; கண்டிப்பாகச் செய்வான். இவன் செய்வான் என்றார்.

இந்த ஊரைவிட்டு 15 வருடம் என் தாயின் ஊரில் இருந்தாலும், அவ்வப்போது அவர் அந்த ஊருக்குச் சென்று வந்திருக்கிறார். அப்பொழுது எல்லாம் தெரியாது, அவர் அங்கு வாழ்ந்த வாழ்க்கை என்ன என்று. அவரைப் பற்றிய கதைகள் அங்கு ஏராளமாக இருந்தது. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு புரட்சியாளர் போல போர்க்குணமிக்க மனிதராக அங்கு வாழ்ந்திருக்கிறார். நான் சிறுசிறு சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.

எதிர்காலத்தில் எனக்குள்ளும் என்னை அறியாமல் இந்தப் போர்க்குணம் வந்து இருக்கலாம். எந்த வகையில் என்று தேடினால் அது இந்த வகையில் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அன்பு தவமணி
07.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 07.05.2020 /

ஓவியம்:
திரைக்கலைஞர் பொன்வண்ணன்

திங்கள், 4 மே, 2020

இருள் வாழ்வுக்கு ஒளிகாட்டிய தாய் விளக்கு: அன்பு தவமணி

அம்மா என்ற சொல் இந்த பூமிப்பந்தில் மிக முக்கியமானது. இந்த அர்த்தத்தில் வெவ்வேறு உச்சரிப்பில் பல்வேறு நாடுகளில் சொற்களில் கையாளப்பட்டாலும், அங்கு அந்தச் சொற்களுக்கு இருக்கக்கூடிய உறவு முறைகளுக்கும் தமிழகச் சூழலில் இருக்கக்கூடிய அம்மா, தாய், தாய்மை என்ற உறவுகளுக்கும் உள்ள பந்தம் கண்டிப்பாக வேறுபாடு உடையதாகதான் இருக்கும்.

அம்மா என்ற சொல் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறதோ அல்லது இருந்ததோ என்று தெரியவில்லை. ஆனால், என்னைப் பொருத்தவரை வித்தியாசமானதாகவும்; விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணங்களும் பல்வேறு உண்டு.

நான் சிறுபிள்ளையாக இருக்கும் காலந்தொட்டே அம்மாவின் மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஏற்பட்டது. ஏனென்றால், நான் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மாலை நேரத்தில் வீட்டுப்பாடம் செய்தாயா? என்று கேட்பார்கள். அப்போது வீட்டில் மண்ணெண்ணைத் தீபம்தான். அந்தத் தீபத்தில் இருந்து வரும் புகையும், இரவு நேரம் படிப்பதும் எனக்குப் பிடிக்காது. அதுபோக, ஆறரை ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் இருந்தது. அதனால், என்னவோ தெரியவில்லை அம்மாவைப் பிடிக்காமல் போனது.

தொடக்கக்கல்வி முடிந்தபிறகு, ஆறாம் வகுப்புப் படிப்பிற்காக நகரத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் ஊர்ப் பக்கத்தில் உள்ள ஒத்தக்கடையிலும் மேல்நிலைப்பள்ளி இருந்தது. ஆனால், என்னை மதுரை நகரத்தில் உள்ள இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். என் விருப்பத்துக்கு மாறாக விடுதியில் வேறும் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அதற்குக் காரணமும் என் அம்மாதான். அங்கிருந்தும் தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் வழங்கவில்லை. என்னோடு சேர்ந்து என் ஊரைச் சார்ந்த உறவினர்கள் நாலு பேர் படித்தார்கள். ஏதோ ஒரு வழியில் ஆறாம் வகுப்பு கடந்துவிட்டேன். ஏழாம் வகுப்பில் என் உறவுக்காரர்கள் விடுதியை விட்டு நின்று விட்டார்கள். நான் எவ்வளவோ என் தாயிடம் மன்றாடினேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீ எப்படியானாலும் விடுதியில்தான் இருக்க வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தி விட்டார். நானும் வேறு வழியில்லாமல் விடுதியில் இருந்தேன். அப்பொழுது என் உறவினரிடம், நீங்கள் ஊரிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி வரும்போது என் வீட்டிலிருந்து எனக்குச் செலவுக்குப் பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுவேன். அவர்கள் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ அல்லது மறந்தோ என எனக்குத் தெரியவில்லை. பணம் வாங்காமல் வருவார்கள். இதுவும் என் தாயின் மீது வெறுப்பைக் காட்டியது.

இப்படியே, எட்டாம் வகுப்பும் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் பாதி படித்து அரையும் குறையுமாக வீட்டுக்கு வந்தும் போயுமாக இருந்து பயணப்பட்டேன். அப்பொழுதே எனக்கும் என்னுடைய தாய்க்கும் முரண்கள் ஆரம்பித்தது எலியும் பூனையுமாக. ஒருவழியாகப் பத்தாம் வகுப்பை முடித்து நான் படித்த இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் நான் கேட்ட பாடப் பிரிவான அறிவியல் பிரிவு கிடைக்காத காரணத்தால், ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டேன். இங்கு தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், பிரச்சனை வேறு விதமாக எனக்கும் என் அம்மாவுக்கும் உருவானது.

என் பள்ளியில் படிக்கக் கூடிய இன்னொரு மாணவ நண்பர் வீட்டைத் தாண்டித்தான் என் அம்மா கடைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அந்த நண்பர் அவர் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து சத்தமாகப் படிக்கும் பழக்கம் உடையவர். அவரைப் பார்த்து வந்த பிறகு, உன் உடன் பயிலும் நண்பர் எவ்வாறு படிக்கிறார்? நீ படிக்கவில்லையே என்று எனக்குப் பலவிதமான நெருக்கடிகளையும் சிரமங்களையும் கொடுப்பதாகவே நான் உணர்ந்தேன். அந்த மாணவன் நண்பர்தான்.

ஒருவழியாகப் பன்னிரண்டாம் வகுப்பு கடந்த பின்பு, என்னுடைய அம்மாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கர்ப்பப் பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரொம்பத் திண்டாட்டம் ஆன அந்தச் சூழ்நிலையில், எனக்கு கோவாபரேடிவ் என்ற ஒரு படிப்புக்கும், ஓர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி, தமிழ்ப் பாட பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருந்தபோது, ஒரே நாளில் எனக்கு அழைப்பு வந்தது. அம்மா கோவாபரேடிவ் போ என்றார்கள். அப்போது எனக்கும் அவருக்கும் சண்டைதான். கல்லூரிக்குத்தான் போவேன் என்ற எனக்கு, என்னுடைய பெரியப்பா அவர்கள் அழைத்துக்கொண்டு கல்லூரியில் பிஎஸ்சி ஜீவாலஜி சேர்த்துவிட்டார்கள். இரண்டு நாள் படித்தேன். ஆங்கிலவழிக்கல்வி எனக்கு ஏறவில்லை. வீட்டுக்கு வந்து விட்டேன். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அந்த நேரத்தில்தான் கல்லூரிப் பேராசிரியர்களின் மாபெரும் போராட்டம் ஒன்று நடந்தது. பல்கலைக்கழக மானியக்குழுவை எதிர்த்து என்று நினைக்கிறேன். அது முடிந்த பிறகு வெயிட்டிங் லிஸ்டில் எனக்குத் தமிழ் அனுப்பியிருந்தார்கள். உடனே போய் பழைய கட்டணத்தை மாற்றி தமிழ்ப் பட்டப் படிப்பில் இளங்கலை சேர்ந்து கொண்டேன். அங்கேயும் விடுதி வாழ்க்கைதான். இப்படி தொடர்ச்சியாக நான் வீட்டுக்கு ஒரே ஒரு ஆணாக மட்டும் பிறந்த என்னோடு வேறு பிள்ளைகள் கூட இல்லை. அப்படி இருந்தும் நான் ஊரில், வீட்டில் இல்லாமல் வெளியில் படித்த நாட்கள்தான் அதிகம்.

நிறைய பேர்கூட என் முன்னால் வைத்தே என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறார்கள். பிள்ளையைப் பெற்றுவிட்டு வெளியில் வைத்துப் படிக்க வைக்கிற உனக்கு, உன் மகன் மீது பாசம் இல்லையா என்று. அப்பொழுது அவர் என்ன நினைத்தார்? என்ன பதில் சொன்னார்? என்று கூட எனக்கு இப்போது நினைவிலில்லை. இப்படியே போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கல்லூரிப் படிப்பு ஒரு வகையில் முடிவடைந்தது.

அதன் பின்பு, கல்வியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றும், ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்ட முடியாத சூழலில் பல்கலைக்கழகத்தை நோக்கி பயணப்பட நேர்ந்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தேன் நான். எனக்கு முன்பாக ஒரு நபர் சிபாரிசு மூலமாக முந்திக் கொண்டு சென்றுவிட்டார். என்னோடு கதவு அடைக்கப்பட்டது. அந்த முதுகலைத் தமிழ்ப் படிப்புக்கு வேறு வழியில்லாமல் போனது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பைப் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் துவங்குகிறேன்.

அதன் பிறகு, நான் பயணப்பட்ட வாழ்க்கை முறைகள் வேறு. அது ஒரு காலம். நான் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் ஒட்டுமொத்தமாக இருட்டாய் இருக்கிறது. ஆனால் நான் நடந்து வந்த பாதை மட்டும் என்னவோ வெளிச்சமாகத் தெரிகிறது. காரணம், ஒருவேளை பத்து மாதம் இருட்டில் வயிற்றில் வைத்திருந்த காரணத்தால் என்னவோ, ஒட்டுமொத்தமாக என் வாழ்க்கையின் வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறார் அம்மா.

ஆம், ஓர் அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியப் பணியில் இருக்கிறேன்.

நான் கடந்து வந்த பாதை மட்டுமே வெளிச்சமாக இருக்கிறது. தெரு விளக்கு இல்லாத ஊரில் பிறந்த எனக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்தைத் தந்தது என் தாய் மட்டுமே. ஆனால், நான் நேரடி வாழ்க்கையில் இன்றுவரை எலியும் பூனையுமாகத்தான் இருந்து வருகிறேன். அது என்னவோ தெரியவில்லை. ஆனால், வெளி உலகில் அவர் என்னை விட்டுக் கொடுத்ததில்லை, நான் அவரை விட்டுத் தந்ததும் இல்லை. ஆனாலும், இதுவரையிலான நேரடி வாழ்க்கை எலியும் பூனையுமாகவே வாழ்ந்து வருகிறோம்.

என்னைப் பொருத்தவரை, இந்தத் தொப்புள்க் கொடி உறவு தொடர்ந்து கொண்டேதான்  இருக்கும்; ஓடிக் கொண்டேதான் இருக்கும்; உறைந்து போகாது. அன்பின் எள்ளளவும் குறையாது உயிர் போகும் வரை.

அன்பு தவமணி
04.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 04.05.2020 /

வெள்ளி, 1 மே, 2020

வ.உ.சியின் முன்னெடுப்பும் கோரல் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டமும்: ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்

தொழிற்சங்கம் என்ற அமைப்பு இல்லாத அந்த காலத்தில் குறைந்த ஊதியம் அளித்து கூலி என்ற பெயரால் இழிவாக நடத்தப்பட்டு தொழிலாளர்களை கடுமையாக வேலை வாங்கியது ஆங்கிலேய முதலாளி வர்க்கம். தொழிலாளர்களின் நிலைமையும்  மிக வருந்திய நிலைத்தக்கதாய் இருந்தது.

பத்து வயது பன்னிரண்டு வயது சிறுவர்களும் ஆலையில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். வார விடுமுறையென்பது, தொழிலாளர்கள் அறியாத ஒன்றாக இருந்தது. உணவு அருந்த செல்ல போதிய இடைவேளை கிடையாது. ஊதியம் மிகவும் சொற்பமானது. உடல் நலக் குறைவால் விடுப்பு எடுப்பின் அதற்கு ஊதியம் மறுக்கப்படும். அத்துடன் சில நேரங்களில் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய தொழிலாளிக்கு வேலை மறுக்கப்படும். இதனால் ஊதியமில்லாத விடுமுறையில் செல்வதற்கு கூட தொழிலாளர்கள் அஞ்சிய காலம்.

காலை ஆறு மணியிலிருந்து  மாலை ஆறு மணி வரை தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை செய்தனர். ”ரேகை பார்த்து ஓட்டுதல்” என்ற சொல்லால் வேலையின் தொடக்கமும் முடிவும் குறிப்பிடப்பட்டது. உள்ளங்கை ரேகையானது தெளிவாக தெரியும் நேரத்தில் வேலையினைத் தொடங்கி, அதனைப் பார்க்க பார்க்க முடியாத அளவில் ஒளி மங்கும் நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்ற சொல்லின் பொருளாகும்.

தொழிலாளர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட பிரம்படி வழங்கப்பட்டது. வெள்ளையதிகாரிகள்  ஆலையினுள் வரும் போது குறுக்கே கடந்து சென்றாலும் அடியும் உதையும் கிடைக்கும்.
கோரல் மில் தொழிலாளர்களின் அவல நிலையை கண்ணுற்ற வ.உ.சி. மற்றும் சிவா, பதமநாப அய்யங்கார் தொழிலாளர்களினை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். ஆங்கிலேய இரகசிய அறிக்கை கீழ் வருமாறு குறிப்பிடுகிறது.

“ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பணத்தின் அளவை அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர்க்க வேலை நிறுத்தம் செய்யும்படி கூலிகளுக்கு அறிவுரை கூறினார். ருசியப் புரட்சியானது மக்களுக்கு நன்மையளித்தது. (1905 ம் ஆண்டு நடைபெற்ற முதல் ரஷ்ய புரட்சி). புரட்சியானது உலகத்துக்கே எப்பொழுதும் நல்லதையே புரியும் என்று அவர் குறிப்பிட்டார். வேலையாட்கள் மூன்று நாட்கள் வேலையை நிறுத்தினால் ஐரோப்பிய முதலாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

1908 பிப்ரவரி 27 தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்ய வைத்து ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர வசதிகளை வலியுறுத்தி இந்தியாவெங்கும் தலைப்பு செய்திகளில் அதிரச் செய்தார்  வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர். இந்த தொழிலாளர் போராட்டத்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த காலனிய ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த சென்ற நூற்றாண்டின் பெரிய சம்மட்டி அடி.

தென் கோடியில் நடந்த இந்த போராட்டம் இந்தியாவை தாண்டி ரஷ்யா வரை மிகவும் நுட்பமாக கவனிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களின் எழுச்சியாக மாறி அடித் தட்டு வர்க்க மக்களிடையே அரசியல் அறிவும் பரவியது.

இந்தியா முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்ட்ம் வெறுமனே ஊதிய உயர்வு போராட்டமாக மட்டுமே கருதாமல் இந்திய விடுதலை இயக்கத்தில் சுதேசி இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தை இணைக்கும் நோக்குடன் திறம்பட செய்து வழிகாட்டினார் வ.உ.சி.

தொழிலாளர்கள் போராட்டம்  எந்த வகையிலும் குன்றி விடாமல் பார்த்துக் கொண்டார் வ.உ.சி. குறிப்பாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட காலங்களில் பட்டினி பசியால் வாடி விடக் கூடாது அதனால் போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் பொது நிதி திரட்டி சாப்பாடு போட்டதுதான் மிகவும் முக்கியமானது.

 தொழிலாளர்களின் போராட்ட உணர்வு குன்றாமல் இருப்பதற்காக சுப்பிரமணிய சிவாவினுடைய எரிமலைப் பேச்சை நன்றாக பயன்படுத்தினார். வ.உ.சி. தனது சுயசரிதையில் சிவாவின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவார்.

”அறிக்கைப் படியே அனேகர் பேட்டையில்
செறிக்க வந் திருந்தனர் செப்பினன் சிவஞ்சில
கேட்டதும் நம்மவர் கிளம்பினர் ஆர்த்தனர்
பார்த்தேன் ஆபத்து பலத்த தென் றுன்னினேன்
யார்த்தேன் சிலசொல் மன வலி கொண்டே
உயிரென இனியவென் உத்தம நண்பரே!

 வ.உ.சி. மற்றும் சிவா தலைமையில் நடைபெறும் தூத்துக்குடி போராட்டத்துக்கு  முக்கியத்துவம் அளித்து சுதேசமித்திரனில் ஜி.சுப்ரமண்ய அய்யர் “ தூத்துக்குடி பவள தொழிற்சாலை வேலை நிறுத்தம்” “ தூத்துக்குடியும் சுதேசியமும்” “ தூத்துக்குடி வேலை நிறுத்தம்” “ நம் தொழிலாளிகள்” “ தூத்துக்குடி சமாச்சாரம்” போன்ற பல்வேறு தலைப்புகளில்  செய்திகளினை வெளியிட்டார்.

மகான் அரவிந்தர் தன்னுடைய வந்தேமாதரம் இதழில்  “வெல்டன் மிஸ்டர் பிள்ளை’’ (நன்று செய்தீர் பிள்ளையவர்களே) என்ற புகழ் மிக்க தலையங்கம் எழுதியதுடன் தொடர்ந்து போராட்டம் குறித்து அச் சமயத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பால கங்காதார திலகர் அவர்களும் தனது பங்குக்கு கேசரி, மராட்டா பத்திரிக்கைகளில் தூத்துக்குடி தொழிலாளர் போராட்டம் குறித்து சிறப்பு செய்திகளாக வெளியாகின.

முத்தாய்ப்பாக ரஷ்யா நாட்டு ஜார் மன்னனின் இந்திய தூதுவராக பம்பாயில் பணியாற்றிய செர்கின் (Chirkin) என்பவர் இந்தியாவில் திட்டமிட்டு திறம்பட நடத்தப்படும் வேலைநிறுத்தம்’’. என்று அறிக்கை அனுப்பியதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும்  உணவு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

உணவு அளிக்கப்பட்டு போராடியதால் தொழிலாளர்களை அக்கால காலணிய பிரிட்டீஸ் அரசாங்கத்தாரால் அவர்கள் நினைத்த மாதிரி தொழிலாளர்களை திசை திருப்ப முடியவில்லை. போராட்ட காலங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர் குடும்பத்தினருக்கும்  உணவு அளிப்பதென்ற முடிவு என்பது மிகவும் முக்கியமானது. இப் போராட்டத்திற்காக பொதுமக்களிடமும் வசூல் செய்து மீதிசெலவை வ.உ.சி. தனது பொருளாதார இருப்பில் இருந்து சமாளித்துள்ளார். இதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.

இப் போராட்டத்தின் விளைவாக நாவிதர்கள் பிரிட்டீஸ் அதிகாரிகளுக்கு உடந்தையாக செயல்படும் ஆட்களுக்கு சவரம் செய்ய மறுத்தனர். துணி துவைக்கும் வண்ணார் சமூகத்தவர் துணிகளை துவைக்க மறுத்தனர். பொதுமக்களும் அவரவர் அளவில் வழக்கறிஞார்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பலர் பொதுபுறக்கணிப்பு செய்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி கண்டது.

இந்திய அளவில் பம்பாயில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை குறிப்பிடும் வரலாற்று ஆய்வாளார்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற உணர்ச்சி மிகுந்த போரட்டத்தை வசதியாக குறிப்பிட மறந்து விடுகின்றனர்.

13.03.1908 ல் வந்தேமாதரம்  இதழில் அரவிந்தர் எழுதிய தூத்துக்குடி போராட்ட வெற்றி குறித்து எழுதியது பின்வ்ருமாறு

“தூத்துக்குடி கோரல் மில் போராட்டம் வெற்றி பெற்றது. மகத்தான மக்கள் பெற்ற வெற்றியாகும். வேலை நிறுத்தம் செய்தோரின் ஒவ்வொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரிட்டீஷ் முதலாளித்துவம் பரிதாபத்துக்குரிய நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்துள்ளது. தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அற்புதமாக வெற்றியைத் தேடி தந்த அஞ்சா நெஞ்சத் தலைவர்களைப் பற்றி தேசியம் உள்ளபடியே மிக்க பெருமை கொள்ளலாம்.

சிதம்பரம், பத்மநாப ஐயங்கார், சிவா ஆகியோர் ஒரு சில் மில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்திற்காகவும், நியாயத்திற்காகவும் சிறை செல்லவும், நாடு கடத்தப்படவும் முன் வந்தனர். படித்த வர்க்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிணைப்புதான் சுயராஜ்யம் பெறுவதற்கான வழிமுறைகளில் மகத்தான வழிமுறையாகும்.

வங்காளத்திலும் பல தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அச்சகத்தார் வேலை நிறுத்தத்தை தவிர வேறு எந்த வேலை நிறுத்தமும் வெற்றி பெறவில்லை.

தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்.

கோரல் மில் தொழிலாளர்களின் குறைகள், அவர்களுக்கு உற்ற துன்பங்கள் முதலானவற்றோடு அனைத்து இந்திய நலன்களும் இணைந்துள்ளன.

பட்டாபி சீதாராமையாரால் எழுதப் பெற்ற அதிகாரப் பூர்வமான காங்கிரஸ் சபை வரலாற்று நூலின் காங்கிரசின் சிறு சிறு போராட்டத்தைக் கூட குறிப்பிடும் பக்கங்களில்  வ.உ.சி.யின் தூத்துக்குடி போராட்டம் குறித்து ஒரு வரி கூட குறிப்பிட வில்லை என்பதுதான் எவ்வளவு வேதனையான விசயம்.

சிறைவாசத்திற்கு பின்பு வ.உ.சி. 1913 வாக்கில் சென்னையில் வந்து தங்கினார். பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உடன் பணியாற்றிய அனுபவமும் வாய்க்கப் பெற்றார் தனது துயரமான  வறுமை வாட்டிய நிலையிலும் திரு.வி.க. அவர்களோடு சேர்ந்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சங்கம் கண்டார். தபால் ஊழியர்களுக்காக பெரம்பூரில் வ.உ.சி.யின் முயற்சியில் அவர் கண்ட சங்கமே பழமையான சங்கம்.

31.01 1919 ல் டிராம்வே யூனியன் கூட்டத்தில் வ.உ.சி. பேசிய பொழுது தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியை திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சகிக்க முடியாத நிலை உருவாகும் பொழுதுதான் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அரசாங்கம் முதலாளிகளுக்கு உதவும். தொழிலாளர்களுக்கு உதவாது என்றும் எடுத்துரைத்தார். 

11. 10.1921 ல் சென்னை விவசாய கைத்தொழில் சங்கத்தை துவக்கி வைத்து வ.உ.சி. முக்கிய தொலை நோக்கு விசயங்களை கையாளவேண்டும் என்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

உழவர், தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தரல்

உழவும் கைத்தொழிலும் நவீன காலமுறைப்படி வளர்ச்சி பெறச் செய்தல்

சோப்பு, மெழுகுவர்த்தி, பித்தான் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது

சென்னை மாகாண தரிசு நிலங்களை வாங்கி விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ய உழவர்களுக்குப் பயிற்சியளித்தல் .

இன்றும் வடசென்னை நகரங்களில் வ.உ.சி. பெயர்களில் ஏராளமான தெருப் பெயர்கள் அமைந்திருக்கிறது என்றால் ம.பொ.சியின் முன்னெடுப்பும் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் குழுமிய பகுதி. நன்றியை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

17.12. 1919ம் வாக்கில் திலகர் சென்னைக்கு வருகை தந்தார். அச் சமயம் வ.உ.சி. திலகரிடம் தைரியமாக ஒரு வேண்டுகோள் வைத்தார்.

‘’ இப்பொழுது தொழிலாளர் காலம்’’. தாங்கள் பணக்காரர்களின் பங்களா வீடுகளில் தங்க கூடாது. அப்படி  தாங்கள் தங்கினால் ஏழைகளாகிய தொழிலாளர்கள் உங்களை சந்திக்க இயலாமல் போய்விடும். ஆகையால் ஏழை தொழிலாளர் மக்கள் உங்களை இயல்பாக சந்திக்கும் விதமாக தொழிலாளர் இயக்க காரியதரிசிகளின் யாருடைய வீட்டிலாவது தங்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். ‘சிதம்பரம் ! எனக்கா விண்ணப்பம்? எனக்கு எந்த குடிசையாயிருந்தாலென்ன? என்றார். உடனடியாக “தேசபக்தன்’’ லிமிடெட் காரியதரிசி சுப்பராய காமத’ வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கோரல் மில் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி அடைய வ.உ.சி.யின் அணுகுமுறை முக்கியமானது. இதனால் கோரல் மில் நிர்வாகம் வ.உ.சி.யின் மீது தீரா கோபம் வாழ்நாள் வரை கொண்டிருந்தது. ஏ.பி.சி.வீரபாகு ஒரு சம்பவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

“வ.உ.சி. என்ற பெயரால் தூத்துக்குடியில் கல்லூரி ஒன்றை அமைக்கும் பணி விடுதலைக்கு பின் 1950 ல் தொடங்கிய போது அதற்காக நிதி திரட்டினர். அந்த நகரில் பல்வேறு அறப்பணிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி வரும் ஹார்வி மில் நிர்வாகத்திடம் கல்லூரி கட்ட நிதி கேட்ட பொழுது அவர்கள் கூறிய பதில் “வ.உ.சி.யின் பெயரால் அமையும் எந்த நிறுவனத்திற்கும் உதவி செய்வதில்லை என்பது கொள்கை முடிவு. இந்த மறுப்புரை வ.உ.சி.யின் இறப்பிற்கு பிறகும் கிடைத்த உண்மையான புகழாரம் ஆகும்.

முதல் செங்கொடி ஏற்றிச் சிறப்பித்த சிந்தனை சிற்பி சிங்கார வேலர்,
“1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் சென்னையில் தோழர் சிங்காரவேலு செட்டியார் அவர்கள் இந்தியாவில் ஒரு கொடியை ஏற்றி வைத்தார்

இந்தியாவின் முதலாவது மே தினம் கொண்டாடப்பட்டது அந்த மே தினத்தில்  சிங்காரவேலர்  முயற்சியில் தொழிலாளர் விவசாய கட்சி உருவாக்கப்பட்டது சென்னையில் இரண்டு மேதினப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது கடற்கரையிலும் வட சென்னை உயர்நீதிமன்ற கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் சுப்பிரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் கலந்து கொண்டனர் இந்த கூட்டங்களில் பாட்டாளிகள் சுயராஜ்யம் அடைய இந்திய மக்களுக்கு அறைகூவல் விடப்பட்டது.

சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவித்த குத்தி கேசவ பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், சக்கரை செட்டியார், வாடியா, இ.எல்.அய்யர், செல்வபதி செட்டியார், இராமனுஜலு செட்டியார்,, கஜபதி, என்.தண்டபாணி பிள்ளை, எம்.சி.இராஜா, தேசிகாச்சாரி, ஜார்ஜ் ஜோசப், த.வே.முருகேசனார் மற்றும் பலரையும் மே தினத்தில் நினைவு கூர்ந்திடுவோம்.

ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

/ ஏர் இதழ் வெளியீடு / 01.05.2020 /