வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழீழ விடுதலைப் போராட்டம்: விடுதலைப்புலிகளும் இசுலாமியர்களும்:- பரணி கிருசுணரஜனி


  
01. புலிகள் குற்றவாளிகளா?

‘தமிழ் – முஸ்லிம் குரோதம் எங்கே முளைவிட்டது?’ என்பதை வரலாற்றின் போக்கில் ஆராய்ந்தால் புலிகள் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம்களை தாம் தேர்தலில் வெல்வதற்கான ஒரு வாக்கு வங்கியாகத்தான் பார்த்தார்கள். முஸ்லிம்களின் வாழ்வு தொடர்பான நலனில் அக்கறை காட்டவில்லை. இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து அவர்கள் சிங்கள கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போது ‘தொப்பி பிரட்டிகள்’ என்று தூற்றப்பட்டார்கள்.
இப்படியாக முதல் விரிசலை தொடக்கி வைத்தவை தமிழ்க் கட்சிகள்தான். பிற்பாடு அதை ஊதி வளர்த்தவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகள்.


அடுத்து ஆயுதப் போராட்டம் வெடித்தவுடன் ஈசல் போல் முளைத்த இயக்கங்கள் புலிகள் போல் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அத்துடன் பணம் பறித்தல், கப்பம் அறவிடல் என்பவற்றை தமிழ் மக்களிடையே வன்முறையாக அணுகியது போல் முஸ்லிம்களிடமும் அந்த வழிமுறையைக் கையாண்டார்கள். இது அடுத்த விரிசலை உருவாக்கியது.

இதன் விளைவாக முஸ்லிம்கள் மீள வன்முறையைப் பிரயோகித்தார்கள்.

இதைச் சரியாகப் பயன்படுத்திய இன அழிப்பு அரசின் உளவுத்துறை ‘ஊர்க்காவற்படை’ என்னும் பெயரில் ஒரு வன்முறை அமைப்பை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது.

அது மட்டுமல்ல 1985 களில் மாற்று இயக்கங்களிலிருந்து திசைமாறி அலைந்து திரிந்த போராளிகளையும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களையும் இணைத்து ‘ஜிகாத்’ என்னும் அமைப்பையும் உருவாக்கியது இன அழிப்பு அரசின் புலனாய்வுத்துறை.


இவ்வமைப்பு முழுக்க முழுக்க அரசக் கூலிப்படைகளாய் இயங்கியமையால் தமிழருக்கெதிரான வன்முறைகளை பிரயோகித்தது மட்டுமல்ல இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.விளைவாக தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்கள் நிலமும் முற்றாகப் பறிபோகத் தொடங்கின.

தமிழ்,  முஸ்லிம் விரோதப் போக்கை எண்ணெய் ஊற்றி வளர்த்த இந்த ஜிகாத் தமிழ்/ முஸ்லிம்களிடையே நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்ற மூதூர்மஜித், காத்தான்குடி அகமட்லெவ்வை போன்றோரைச் சுட்டுப் படுகொலைசெய்ததை இன்று பலரும் மறந்து போனது வேதனைக்குரியது.

இந்த வரலாறுதான் பிற்பாடு அனைத்து இயக்கங்களும் அழிந்து போன நிலையில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாய் போரிட்ட புலிகள் மீதான முஸ்லிம்களின் வன்மமாக உருமாறியது.

எந்த தவறும் செய்யாமலேயே புலிகள் பழி சுமந்த வரலாறு இது.

தென்தமிழீத்தில் இந்த ஜிகாத் மற்றும் ஊர்காவல் படைகளின் அட்டுழியங்களை நிறுத்த புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களும் பிற்பாடு தவிர்க்க முடியாத பல அரசியல் காரணங்களால் முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன்று வரை எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது.

இது விரிவாக இரு தரப்பும் பரஸ்பர புரிதலுடன் பேசி தீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நந்திக்கடலின் இறுதிச் செய்தியும் அதுதான்.

அதை விடுத்து தமிழர் தரப்பிலிருந்தே ஏதோ நாம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்களாக சித்தரிக்கப்படுவதும் அதையும் தாண்டி ‘இனச்சுத்திகரிப்பில்’ ஈடுபட்டோம் என்று வரலாற்று புரிதலின்றி பேசுவதும் ஆரோக்கியமானதல்ல.

02. முஸ்லிம்களை வெளியேற்றியது ‘இனச் சுத்திகரிப்பா?

இனஅழிப்பு என்பதை நிறுவ அல்லது அதை அந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள ஒரு முன் நிபந்தனை ஒன்றை இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு அல்லது அதன் மீதான கோட்பாட்டுருவாக்கம் நம்மிடம் கோரி நிற்கிறது.

அதாவது ‘இன அழிப்பு’ என்று நாம் முன்வைக்கும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் எதிரிகளால் அதாவது அதில் ஈடுபட்ட அரசோ அல்லது ஒரு இனக்குழுவோ இன அழிப்பு ‘நோக்கங்களுடன்’ அதில் ஈடுபட்டனவா என்பதை நிறுவும் முன் நிபந்தனைதான் அது.


இந்த அடிப்படையில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இன அழிப்பு நோக்கங்களைக் கொண்டது அல்ல. எனவே அதை இனச் சுத்திகரிப்பு என்று வரையறுப்பது அடிப்படையில் தவறு.

புலிகளைப் பொருத்தவரை, புலிகள் தமது போராட்டத்தைத் தக்க வைப்பதற்காக தற்காலிகமாகச் செய்த ‘தவிர்க்கமுடியாத’
ஒரு பெரும் தவறு அது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்தவரை மறக்க முடியாத – மன்னிக்க முடியாத ஒரு கூட்டு அவலம் அது.

ஆனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதனூடாக அவர்களது உயிர் மட்டுமல்ல அடையாளம், தனித்துவம் என்பது கூட்டாகப் பேணப்பட்டது. அது எந்த சிதைவுக்கும் உள்ளாகவில்லை.

ஆனால் தொடர்ந்து புலிகளின் ஆளுகைக்குள் இருக்க நேரிட்டிருந்தால் அவர்கள் பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருப்பார்கள். அது புலிகளை ஒரு இனப்படுகொலைக் குற்றவாளிகளாக்குவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் கொண்டிருந்தன.

காரணம், ஒன்றல்ல பல நூறு. அது விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் பல நூறு தமிழர்களே, உளவு பார்த்த குற்றம்
சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். பலருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு பிரயோகிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.


ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்வை குலைத்து
அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் புலகளினால் கைது செய்ப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதென்பதும், அவர்களைக் கூட்டாகக் கொலை செய்வதென்பதும் முறையே மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை உள்ளடக்கங்களை கொண்டதாக அறியப்பட்டிருக்கும்.

போதாததற்கு பாஸ் நடைமுறையை வேறு புலிகள் கடைப்பிடித்தார்கள். அது தம்மை ஒரு தனித்த இனக்குழுமமாக கருதும் முஸ்லிம்களைப் பொருத்தவரை அது புலிகளின் ‘கட்டமைக்கப்பட்ட’ இன அழிப்பு ஒன்றிற்கான உள்ளடக்கங்களையே அடையாளம் காட்டும்.

இது ஒரு கட்டத்தில் ஒரு இன அழிப்புக் குற்றமாக அனைத்துலக சமூகத்தால் கணிக்கப்பட்டு முஸ்லிம்களை சுதந்திரமாக வெளியேற்றுமாறு ஒரு கோரிக்கைகூட வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை யாரும் மறுக்க முடியாது.

அது புலிகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கும்.

இப்படி தர்க்கரீதியாக பேச பல நூறு காரணங்கள் உண்டு.

ஆனால் அதற்காக யாரும் வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியாது. அதற்காக ‘இனச் சுத்திகரிப்பு’ என்ற தவறான வார்த்தை பிரயோகங்கள் வருவதையும் அனுமதிக்க முடியாது.

இது நடந்த இனஅழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக நமக்கு நாமே குழி தோண்டுவதாகவே அமையும்.

முஸ்லிம்களுடன் மனம் திறந்த ஒரு உரையாடலை தொடங்கவும் இது தடை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

03. இனச் சுத்திகரிப்பில் முஸ்லிம்கள்.

இந்த இடைப்பட்ட போராட்ட காலத்தில் புலிகளினால் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படவோ, அடையாள அழிப்புக்குள்ளாக்கப்படவோ இல்லை.

அவர்களது வணக்கத்தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் அழித்தொழிப்புக்குள்ளாகவில்லை. அது மட்டுமல்ல அவை எந்தவொரு அடையாள மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை.

ஆனால் சிங்களவர்களினாலும் முஸ்லிம்களினாலும் தமிழர்களின் கிராமங்கள், பாரம்பரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாள சிதைவுக்குட்படுத்தப்பட்டது மட்டுமல்ல, வணக்கத் தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் முற்றாக சிதைக்கப்பட்டு பவுத்த மற்றும் முஸ்லிம் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.


இது இனச்சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டது என்பதை தனியாகக் கூறவும் வேண்டுமா?

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றும் போது கூறியது போலவே பின்பு சமாதான காலத்தில் அவர்களை அவர்களது தனித்துவ -பண்பாட்டு அடையாளங்களுடன் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற அனுமதித்தார்கள்.

சிங்களவர்களும் , முஸ்லிம்களும் தம்மால் அடையாள அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழர் தொன்ம நிலங்களை – கிராமங்களை மீளக் கையளிப்பார்களா?

அதுவரை அது ‘இனச் சுத்திகரிப்பாகவே’ இருக்கும்.

தமிழர் தரப்பு எந்த இனச் சுத்திகரிப்பிலும் ஈடுபடவில்லை என்பதே வரலாறு. இனியும் அதை செய்யப்போவதில்லை என்பதை ‘நந்திக்கடல்’ தெளிவாகவே வரையறுத்துள்ளது.

அத்துடன் ‘நந்திக்கடல்’ முஸ்லிம்களை தனித்துவ இனக்குழுமமாக அங்கீகரித்து அவர்கள் தமிழர் நிலத்தில் தமது தனித்துவ அடையாளத்துடன் வாழும் அவர்கள் உரிமையை ஏற்றுக் கொள்கிறது.

முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய அழுத்தமான செய்தி இது.

04. முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ செய்தி.

முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த இனக் குழுமமாகக் கருதினால், அவர்கள் தமது பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர் நிலத்தில் வாழும் உரிமையை ‘நந்திக்கடல்’ முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

உலகெங்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இனக் குழுமங்கள் எதிர் கொள்ளும் சிக்கலான நெருக்கடி இது.

போராடும் இனக் குழுமங்களிடையே தம்மை ஏதோ ஒரு வகையில் வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் உபரி குழுமங்களின் தனித்துவத்தை அரச பயங்கரவாதம் தமக்கு சார்பாக பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களினூடாக சம்பந்தப்பட்ட இரு குழுமங்களையும் வேறு பிரித்து தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

ஆனால் முஸ்லிம்கள் இந்த புரிதலின்றி சக தேசிய இனம் மீது இன அழிப்பு அரசுடன் சேர்ந்து இயற்கை வளங்களையும் அழித்து/ நில ஆக்கிரமிப்பு செய்வதென்பது தமிழீழத்தில் தனித்த அடையாளங்களுடன் ஒரு இனக் குழுமமாக வாழும் முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தகைய உபரி தேசிய இனங்களின் உரிமைகள் குறித்து ‘நந்திக்கடல்’ நிறையவே அக்கறை கொள்கிறது.

கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் – தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.

ஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

எனவே முஸ்லிம்கள் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் / புலிகளையும் - குறிப்பாகத் தலைவரை இத்தகைய புரிதலுடன் அணுக வேண்டும்.

மேலதிக இணைப்பு:

முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் காடையர்கள் இன அழிப்பு அரசின் படைகளுடன் இணைந்து நடத்திய வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு “மினி முள்ளிவாய்க்கால்”.

தென் தமிழீழ மண்ணிலிருந்து தமிழர்களை வாழ்ந்த சுவடுகளே தெரியாமல் அழித்தொழிப்பு செய்து அதை முஸ்லிம் குடியிருப்புக்களாக மாற்ற நடந்த பல அழித்தொழிப்புக்களின் உச்சமாக அது நடந்தேறியது.

1990 ஓகஸ்ட் மாதம் இது நடக்கிறது.
புலிகள் இந்த அழித்தொழிப்பு நடந்து மூன்று மாதங்களின் பின்பே ஒக்டோபர் 30 முஸ்லிம்களை வட தமிழீழத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற முடிவெடுக்கிறார்கள்.

இந்த வரலாற்று செய்தியை பலர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
இதன் வழி புலிகளுக்கு ஒரு இக்கட்டான நிலை திட்டமிட்டே இன அழிப்பு அரசின் புலனாய்வு வலையமைப்பால் உருவாக்கப்படுகிறது.

வட தமிழீழத்திலும் இன அழிப்பு அரசின் உதவியுடன் இப்படியான நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அது போராட்டத்தின் போக்கையே மாற்றி விடும் அபாயாம் உணரப்படுகிறது.

விளைவு தற்காலிக வெளியேற்றம்.

இந்த வெளியேற்றத்தின் பல தர்க்க நியாயங்களை பல தடவை அடுக்கி விட்டேன். சொல்லப்படாமல் இன்னும் நிறைய இருக்கிறது.

அதில் குறிப்பான ஒன்று கீழே..

தென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட புலிகள் மவுனமாக இருப்பதென்பதும் வட தமிழீழத்தில் புலிகள் அவர்களுக்கு அரணாக இருப்பதென்பதும் ஒரு பிரதேச வாத பிரச்சினையாக தென் தமிழீழ மக்களால் பார்க்கப்படும் ஒரு போக்கு உருவாகியது.

அதை தலைமைக்கு அறிவித்ததே இதே ” பிரதேசவாத”பிரச்சினையை பின்னாளில் கையிலெடுத்து போராட்டத்தைக் கூறு போட்ட கருணாதான்.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அப்போதே பிரதேசவாத உடைப்பிற்கு புலிகள் முகம் கொடுத்து போராட்டம் நீர்த்துப் போயிருக்கலாம்.

இப்படி தவிர்க்க முடியாத பல நூறு காரணங்கள்.

ஆனால் எதையும் கணக்கில் எடுக்காமல் வரலாறு நெடுகிலும் புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்வது வேதனை.

பரணி கிருசுணரஜனி
30.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 30.04.2020 /


புதன், 29 ஏப்ரல், 2020

விடுதலைப் புலிகளும் இசுலாமியத் தமிழர்களும்: மகாராசன்

தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழத் தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதாகவே இங்குள்ள பெரும்பான்மை இசுலாமிய அறிவுஜீவிகளின் பொதுப்புத்தியாய் உறைந்து கிடக்கிறது.

அதேவேளையில், தமிழ்த்தேசிய இனத்தின் ஓர் அங்கமாய்க் கருதி, சமயப் பண்பாட்டால் இசுலாமியர்களாக இருந்தாலும், தம்மைத் தமிழராகவே கருதுகிறார்கள் பெரும்பான்மை இசுலாமியத் தமிழர்கள். இந்நிலையில், தமிழர் ஓர்மையைச் சிதைக்கும் சாதிவாத மதவாத சக்திகள் தமிழர்களிடையே இசுலாமியர்கள் எனத் தனியாக அந்நியப்படுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி வலைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆளும் அதிகார அமைப்பாலும், சுரண்டும் வர்க்கத்தாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆரிய மதவாதப் பயங்கரவாதங்களாலும், இன்னபிற அரச பயங்கரவாதங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளோடு சேர்ந்தே மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் இசுலாமியர்கள்/கிறித்துவர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக எந்த சக்திகளும் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்றுதான் அதிகார நிறுவனங்களும் மதவாத நிறுவனங்களும் பிரித்தாளும் அரசியலை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்தான், தமிழர்கள் வேறு; இசுலாமியர்கள் வேறு என்ற பிரித்தாளும் சூழ்ச்சி நுண் அரசியலை ஆரியவாதிகளும் இசுலாமியவாதிகளும் தனித்தனியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரித்தாளும் நுண் அரசியலுக்கு அவர்கள் முன்னெடுப்பதெல்லாம், ஈழத்தில் 1990 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இசுலாமியர் கட்டாய வெளியேற்ற நிகழ்வு குறித்துத்தான்.

இந்நிகழ்வை மட்டுமே முன்வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகளும், ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒட்டுமொத்த இசுலாமிகளுக்கே எதிரானவர்கள் என்கிற மதவாதக் கண்ணோட்டத்திலேயே தமிழர் மீதான வன்மங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் இசுலாமிய அறிவுஜீவிகள்.

சக இசுலாமியத் தமிழர்களின் மனப்போக்கை, சக தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கும் இந்த நுண் அரசியல் வன்மங்களையும் அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்திலேயே இந்தப் பதிவு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில், விடுதலைப்புலிகள் குறித்தும், அங்குள்ள சமூக நிலைமைகள் குறித்தும் அவதூறுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த சூழலில்தான், அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் 'ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்' எனும் நூல் எனது தொகுப்பில் 2007 இல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தால் வெளிவந்தது.

2008 இறுதிப்போர் தொடங்கி 2009 இனப்படுகொலை நிகழ்வு காலகட்டங்களிலும், அதற்குப் பிந்தியுமான காலத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த அவதூறுகள் நிறையவே வெளியாகின. இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையானவை இல்லை என்றாலும், அவற்றுக்கான பதில்கள் வெளிவரவில்லை என்றால், அவதூறுகளே உண்மையாகக் கருதப்படும். ஆகவே, இனப்படுகொலை நிகழ்வுக்குப் பின் இருந்த தமிழினத்தின் பெரும் மவுனத்தைக் கலைக்கும் நோக்கிலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கு மறுப்புரைக்கும் வகையிலும் 'அவதூறுகளை முறிபடிப்போம்: தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்' என்கிற நூல் எனது தொகுப்பில் 2010 சனவரியில் பாலை பதிப்பகத்தால் வெளிவந்தது.

மேற்குறித்த இரு நூல்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதன் அரசியலை, அதன் பங்களிப்பை வரலாற்றுப்பூர்வமாகப் பேசி இருப்பதுடன், அப்போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கும் விரிவான பதிலுரைகளையும் தந்துள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள், படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், அரசியலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் கட்டுரைத் தொகுப்புகள் அவை.

மேற்குறித்த நூலில், இசுலாமியர்களைக் குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் பல பதிவுகள் உள்ளன. இசுலாமியத் தமிழர்களின் புரிதலுக்காக அவற்றுள் சில பதிவுகள் வருமாறு:

'வட கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையும், சமூகப் பொருளாதார வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்கு சேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும்.

முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக தமது இன, மத, கலாசாரத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச் சிறந்ததாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குறைத்து, தமிழ்த்தேசிய ஒன்றியத்தைத் சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது, தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, எமது தாயக பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும் பொதுவான லட்சியங்களையும் எதிர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள், தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.'
/தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட 'சோசலிச தமிழீழம்' எனும் நூலில் பக்கம் 14, பத்தி 1, இரண்டாம் பகுதி. /

*
'யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல், விடுதலைப்புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டிலிருந்து எடுத்த நடவடிக்கை என, தான் இப்போதும் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்கவில்லை'
/இளைய அப்துல்லாஹ்,
ஊடகவியலாளர். /

*
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு சரிதானா?

'தாம் முஸ்லிம்களிடம் ஏற்கனவே மன்னிப்பு கோரி இருக்கிறோம். இஸ்லாமியர்களுக்குத் தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு'
/2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது ஆண்டன் பாலசிங்கம் அளித்த பதில். /

*
'புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர். காலப்போக்கில் முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறி அரசுடன் உறவு பேணியதால் சில உரசல்கள் ஏற்பட்டன.

முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி 'ஒன்றிணைந்து போராடுவோம்' என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தில் புலிகள், முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைச் சீர்குலைத்து பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டதையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால் முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்தியுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்துத் தமிழர்களை வேட்டையாடியதை வரலாறு கண்டது.

சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராகப் புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்துப் பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்காகப் புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறித்து வாய் திறக்காமல் மூடிக் கொள்வதற்குப் பின்னணியில், பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
/அதிரடியான்./

*
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை ஒழிக்கவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவும், இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிஹாத் அமைப்பினர் ஆயுத தாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியால் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி ஆகிவிட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரச பயங்கரவாதத்திற்கு பெரும் சிக்கலாகி உள்ளது.

என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அது (புலிகள் அழிப்பு) முடிந்துவிட்டது. இனி ஜிஹாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாகச் செயல்படாமல் ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது.'
/சூரியதீபன்./

*
'புலிகள், முஸ்லிம்களைத் துரத்தி விட்டதில் இருந்து துவங்குகிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உள்ளேயே இருக்கிறது. அதுபோல கிழக்குத் தன்னார்வக் குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கி இருக்கிறது எதிர்ப்பு இயக்கங்கள். மற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமையானது இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்து இருக்கிறது.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, தமிழர் அரசியல் பலவீனமடைந்து இருக்கும் சூழலில், இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெற்ற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம் தான். ஆனால், இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குவதன் மூலம், கிழக்கு முஸ்லிம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?
/டி அருள் எழிலன்./

*
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் இளைஞர்களையும் யுவதிகளையும் விடுதலைப் புலிகள் தமது முள்ளியவளை மாவீரர் நினைவு இல்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி இஸ்லாமிய சமாதியில் போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம்கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால், சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப்புலிகள், அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமிய போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறுவிதமாக செயல்பட்டிருக்க முடியாது.

யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் பானுவும் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினர். அதே கருணா தற்போது ஜனநாயகவாதியாக முடிசூட்டப்பட்டிருப்பது வரலாற்றின் முரண்நகை'
/ யமுனா ராஜேந்திரன்/.

'ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழர் என்ற உணர்வோடு விடுதலைப்புலிகளின் ஈகத்தை நெஞ்சில் ஏந்தி, தமிழகத்து நிலத்தில் இன உணர்வைத் தமிழர்களுக்கு விதைக்கும் நோக்கில் தீக்குளித்து மரணித்த மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தை உலகத் தமிழர்களால் வணங்கப்படுகிறது. மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தைப் பெரும்பாலான இசுலாமிய அறிவுஜீவிகள் மறைக்கவே செய்கிறார்கள்'
/ஏர் மகாராசன்/

இன்னும் விரிவான தகவல்களுக்கு..

அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்.

தொகுப்பாசிரியர்: மகாராசன்.

வெளியீடு: பாலை பதிப்பகம்
விலை: உரு 90/-
தொடர்புக்கு:
9842265884, 9487352972.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
29.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 29.04.2020. /

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நானும் மலையாளத் திரைப்படங்களும்: இயக்குநர் வெற்றி

என் இனம் தமிழினம்; என் தேசம் தமிழ் தேசம் என்பதில் உறுதி கொண்டவன் எழுதுகிறேன்.
திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறேன். என் தொழில் சினிமா எடுப்பது. அதற்காக சினிமாக்களை பார்த்து என்னை தயார் செய்து கொண்டியிருப்பேன். துல்கர் சல்மானின் வர்னே அவசிமுண்டு படத்தை இந்தப் பிரச்னை தொடங்குவதற்கு முன்பே பார்த்துவிட்டேன். முகநூலில் கூட அந்தப் படத்தை தவறாமல் பார்க்க வேண்டும் என்று பாராட்டி எழுதி இருந்தேன். அந்தப் படத்தில் இப்படியான காட்சி இடம்பெற்றதை நானும் கவனித்தேன்.

தொடர்ந்து மலையாளப்படங்கள் பார்க்கிறவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். மலையாளப் படங்களில் தமிழ் கதாபாத்திரங்கள் இழிவுபடுத்தும் விதத்தில் சித்தரிக்கப்படுவது என்பது தொடர்ந்து நடந்து வருவதுதான். இது இன்றுக்கு நேற்று நடப்பதல்ல; காலங்காலமாக நடப்பதுதான்.
தமிழில் ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேண் கண்டுகொண்டேன் படத்தில், மம்முட்டி முன்னாள் ராணுவவீரராக வருவார். போரில் ஒரு காலை இழந்த ஊனமுற்றவராக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் கோபமாக பேசும்போது அவர் இந்திய அமைதிப் படையில் பங்கேற்று இலங்கை சென்றிருக்கிறார் என்றும், விடுதலைப்புலிகள் தாக்கியதில் அவர் கால் ஊனமுற்றது என்றும் சொல்வார்.

தமிழர்களை கொன்று குவித்த அமைதிப்படையினரை வரவேற்கச் செல்லாதது மிகப்பெரிய தேச விரோத செயல்போல் அந்தக் காட்சியில் சித்தரித்திருப்பார்கள்.
இந்தப் படத்தை தயாரித்தவர் கலைபுலி தாணு. அப்போது அவர் மதிமுகவில் இருந்தார்! 
ராஜிவ் மேனன் யார் என்பதும் எதற்காக ஒரு காதல் படத்தில் வழிந்து இந்தக் காட்சியை வைத்திருப்பார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்துக்குப் பின்னும் ராஜிவ் மேனன் தமிழ்த் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இயக்கிய டெரரிஸ்ட் மற்றும் இனம் போன்ற படங்கள் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தின. ராஜிவ் மேனனும் சந்தோஷ் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்? கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்குப் பின் ராஜிவ் மேனனும், டெரரிஸ்ட், இனம் படத்துக்குப் பின் சந்தோஷ் சிவனும் தமிழ்ச் சினிமாவில் பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழ் பெண்களை கருத்த பன்றிகள் என்று வர்ணித்த நடிகர் ஜெயராமனும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார். அவர் மகன் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார்.

தமிழில் எடுக்கும் படங்களிலேயே இந்த அளவுக்கு அவர்களால் ‘செய்ய‘ முடிகிறது என்றால் அவர்கள் மொழியில் எடுக்கும் படங்களை பற்றி கேட்கவே வேண்டாம்!  தமிழர்களை கேலியாக இழிவாகப் பார்க்கும் பார்வை அவர்கள் மரபுலேயே இருக்கிறது.

மலையாளத் திரைப்படைப்பாளிகள் தொடர்ந்து சினிமா மூலமாக நம்மீது எச்சிலை துப்புகிறார்கள். அதற்கு பதிலடியாக நாம் என்ன செய்ய வேண்டும்? எதிரி என்ன ஆயுதத்தை கையில் எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நாமும் கையில் எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.. அவர்களை போல கலையம்சங்களுடன் நம்மால் சினிமா எடுக்க முடியாதா?

எவ்வித விருப்பும் வெறுப்பும் இன்றி யோசித்துப் பாருங்கள், பெரும்பாலான தமிழ்ப் படங்கள்  எப்படி இருக்கின்றன? பெரும்பாலான மலையாளப்படங்கள் எப்படி இருக்கின்றன? சமீபத்தில் தமிழில் வெளியான நல்லபடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மலையாளத்தில் பெரும்பாலான படங்கள் அழகியலோடும் கலையம்சத்தோடும் அவர்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடந்த முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை சம்பவத்தை அவர்கள்தான் டிராஃபிக் என்ற படமாக எடுத்தார்கள்.

மலையாள திரைத்துறையின் தந்தை என்று போற்றப்படும் ஜே.சிடேனியல் வாழ்க்கை வரலாறு பிரித்வி ராஜ் நடிப்பில் செல்லுலாய்ட் என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று  கடைக்கோடி மலையாள சினிமா ரசிகனுக்கும் அவன் மொழி சினிமாவின் தந்தையை தெரிந்திருக்கிறது, என்றால் இப் படம்தான் காரணம்.

தென்னிந்திய திரைத் துறையின் தந்தை தமிழரான சாமிகண்ணு வின்சென்ட். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவில் பதிவு செய்ய 100 ஆண்டு தமிழ் சினிமாவில் சிறு முயற்சி கூட எடுக்கப்படவில்லை. சினிமா பார்க்கும் தமிழர்களில் எத்தனை பேருக்கு சாமிகண்ணு வின்சென்ட் தெரிந்திருக்கும்?  அட, முதலில் சினிமாக்காரர்கள் எத்தனை பேருக்கு சாமிக்கண்ணுவைத் தெரியும்? 
அவ்வளவு ஏன்?

உலகில் உள்ள எந்த தாயை விடவும் தியாகத்தில் உயர்ந்து நிற்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கைத் துயரத்தை திரைப்படமாக எடுக்க இங்கே யாராவது முயற்சி செய்திருப்போமா?  அப்படி  செய்திருந்தால், பேரறிவாளனின் தாயின் தியாகத்தையும் பேரறிவாளன் தரப்பு நியாயத்தையும் வலியையும் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சென்றிருக்க முடியும்.  இதில் படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை. இங்கே உள்ள அரசியல் (அடிமை) சூழ்நிலை  அப்படி இருக்கிறது. கேரளாவின் பிரதான கட்சியான கம்யூனிஸ்ட்டை கட்சியை விமர்சித்து வெளியான பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டில் ஒரு லெட்டர் பேட் கட்சியைக் கூட சினிமாவில் விமர்சிக்க முடியுமா?

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு படத்தின் ட்ரெய்லர் ரீலீஸ் ஆனது. அந்த ட்ரெய்லர் பார்த்தாலே அது குப்பைப் படம் என்று தெரிந்து விட்டது. அப்படியே விட்டிருந்தால் திநகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் காலைக்காட்சியில் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே தியேட்டரை விட்டுப் போயிருக்கும்.
ஆனால் ட்ரெய்லரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அந்தப்படத்துக்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அந்தப்படம் பிரபலமாக காரணமாக இருந்தது அந்தப்படத்தின் தரமோ? அந்தப் படத்தின் நடித்தவர்களோ இல்லை. படத்தை எதிர்த்தவர்களால் மட்டுமே அப்படியொரு படம் பிரபலமானது. அந்தப்படத்தை பார்க்கும் மலையாளிகளுக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களை பற்றி என்னமாதிரியான மதிப்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இன்று அந்தப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெருமை அந்தப் படத்தை எதிர்த்த நம் தோழர்களையே சேரும். ஊரங்கு உத்தரவால் ஒரு பக்கம் மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க, நாம் மதுவந்தியின் முட்டாள் தனமான வீடியோவை நக்கல் நையாண்டி செய்து கொண்டிருந்தோம்.  நாம்  கிண்டலடித்துக் கொண்டும் நையாண்டி செய்து கொண்டிருக்கும் ஆட்களின் வீடுகளுக்கு நம் முதல்வரே பால் பாக்கெட் கொண்டு போய்  போடுகிற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நடந்து கொண்டால், மலையாளிகள் அல்ல, யார்  வேண்டுமானாலும் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.
விஷயத்துக்கு வருகிறேன்.
நாடி நரம்பெல்லாம் தமிழர் வெறுப்பு கலந்துள்ள மலையாள சினிமாவுக்கு  பதிலடியாக நாமும் கலையம்சங்களுடன் நம் பெருமையை பேசும் படங்களை எடுக்க முடியும்.
என் ஆவணப்படத்தின் திரையிடலின் போது, விடுதலைப் புலிகளின் நியாயத்தை பேசும் படங்கள் தமிழில் எடுக்கப்படவில்லை என்று நான் வருத்தப்பட்டு குறிப்பிட்டதற்கு காற்றுக்கென்ன வேலி, படத்தை இயக்கிய புகழேந்தி தங்கராஜ் அவர்களின் நண்பர்கள் சிலர் கோபித்துக் கொண்டதாக அறிந்தேன்.

காற்றுக்கென்ன வேலியை ஒரு திரைப்படமாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. (நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரைத்தவர்கள் நாம் என்பதை மறந்து விடக்கூடாது)

இறுதிக்கட்டப் போரின் போது புகழேந்தி தங்கராஜ், சத்யராஜ் சீமான் போன்றோரை வைத்து இயக்கிய இன்னொரு படமும் (பெயர் ஞாபகம் இல்லை) என்ன லட்சணத்தில் இருந்தது என்று மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள்.

விடுதலைப்புலிக்கு எதிராக மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இருக்கும் அழகியலும்  கலையம்சமும் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படங்களில் இல்லையே, ஏன்?
தமிழில் ஆகச்சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களால் எடுத்திருக்க முடியும்? ஏனோ அவர்கள் செய்யவில்லை. அப்படியே எடுத்தால் தியேட்டரில் வெளியாகுமா? சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்பதெல்லாம் வேறு கதை?

இப்போது OTT platform வந்துவிட்டது. Youtube, Netflix, prime video, zee5, Mx Player  என்று ஏராளமாக உள்ளன.
இது வெப்சீரிஸ் காலம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையே ஒளிவு மறைவின்றி queen என்று வெப்சீரியஸாக எடுத்து (தைரியமாக) வெளியிவிட்டார்கள். யாரும் அதை எதிர்க்க முடியவில்லை. (இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்ததற்காக தியேட்டரில் வெளியான சர்க்கார் படம் கடும் எதிர்ப்பை சந்தித்ததை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பின் அந்தப் பெயர் நீக்கப்பட்டது )

புலிகள் வரலாற்றையோ, நம் தலைவர் பிரபாகரன் பற்றியோ வெப்சீரிஸ் எடுத்தால் யாரும் தடுக்க முடியாது. தரமாக இருந்தால் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி வெளியிட OTT Platforms தயாராக இருக்கின்றன. வர்னே அவசிமுண்டு படத்தைத் தியேட்டரில் பார்த்தவர்களை விட, Netflix ல் பார்த்தவர்களே அதிகம்!

உடனே நீ என்ன செய்து கிழித்துவிட்டாய் என்று கேள்வி கேட்பீர்கள். அவர்களுக்காக  சொல்கிறேன்: நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெப்சீரிஸ் எடுத்து வருகிறேன். உலகத் தமிழர்கள் மத்தியில் எங்கள்  வெப்சீரிஸ்க்கு (கால்கட்டு, கஞ்சா) நல்ல வரவேற்பு உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பின்புலமாக வைத்து உண்மையை சம்பவங்களின் தழுவலில் திரைக்கதை அமைத்து OTT platform ஐ அணுகினேன்.  திரைப்படங்கள் இயக்கிய அனுபவம் உள்ள இயக்குநர்களை வைத்துதான் நாங்கள் வெப்சீரிஸ் தயாரிப்போம் என்று சொல்லி, என் கதையை மட்டும் தந்துவிடச் சொன்னார்கள்.

புலிகள் பற்றிய கதையை மற்றவர்கள் கையாலும் போது,  தவறாக சித்தரிக்க வாய்ப்பு இருப்பதால் கதையைக் கொடுக்க மறுத்து விட்டேன்.  என்னை விடுங்கள், வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் நல்ல படைப்பாளிகளை அணுகி நம் பெருமை பேசும் தமிழ்ப் படங்களை கலையம்சத்துடன் உலகத் தரத்தில் எடுக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நம் எதிரிகளுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்கும்.

குறிப்பாக, நான் சொல்ல  விரும்புவது இரண்டே விஷங்கள் தான்.

ஒன்று, மலையாள திரைப்படைப்பாளின் தமிழர் விரோத போக்கை உங்களால் தடுக்க முடியாது. இந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் இன்னும் தீவிரமாவார்கள்.

இரண்டு, அவர்களுக்கு பதிலடி கொடுக்க கலையம்சங்களுடன் கூடிய படங்களை நாமும் செய்து நம் பெருமையை நிலைநாட்ட என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். OTT platform ஐ
நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், வேற எவனாவது வந்து விடுதலைப்புலிகள் பற்றி  வெப்சீரிஸ் அல்லது படம் எடுக்கிறேன் என்று அவர்களை இழிவு படுத்தி வைப்பான். நாமும் வேறு வேலைகளை விட்டுவிட்டு அவனை திட்டித்தீர்த்துக் கொண்டிருப்போம். காலம் பூராவும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது வினை ஆற்றப்  போகிறோமா? சிந்திப்போம்.

நிறைவாக. கலையம்சம் உள்ள படங்கள் எந்த மொழியில் வந்தாலும் சினிமாக்காரனாக பார்க்கவே செய்வேன். அதை எதன் பொருட்டும் யாரும் தடுக்க முடியாது. அதற்காக நீங்கள் ஆத்திரப்பட்டு என் மேல் சேற்றை வாரி இரைத்தாலும் எனக்குக் கவலை இல்லை.

தமிழ் வாழ்க.
நன்றி
வெற்றி (28.4.2020)
#blackpasanga #Kaalkattu

/ ஏர் இதழ் வெளியீடு / 28.04.2020 /

திங்கள், 27 ஏப்ரல், 2020

தமிழகக் கிறித்துவமும் சாதியப் பாகுபாடுகளும்: முனைவர் அ.இராமலிங்கம்

நம் நாட்டில் எண்ணற்ற சாதிகள் உள்ளன. அத்தனைச் சாதிகளையும் மனுதர்மம் தன் வசதிக்காக வரையறுத்துள்ளது. அனைத்துச் சாதிகளையும் நான்கு பிரிவுகளில் உள்ளடக்கியது தான் மனுதர்மம். பிராமணன், வைசியன், சத்திரியன் மற்றும் சூத்திரன் போன்றவற்றுக்குள் நாமெல்லாம் அடங்குவோம். தீண்டாமையைத் தூக்கிப்பிடிக்க இந்த வர்ணாசிரமக்கோட்பாடு தேவைப்பட்டது. வர்ணாசிரமத்தில் கீழுள்ள பிரிவினரின் உழைப்பைச் சுரண்டி மேலுள்ள வர்க்கம் சுகமான வாழ்க்கையை நடத்தியது. தொழில்கள் அடிப்படையில் வர்ணாசிரமம் வரையறுக்கப்படவில்லை. வர்ணாசிரமப்பிரிவுகளை அமைத்த பிறகே தொழில்கள் பிரித்தளிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில உயர்சாதியினர் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எல்லாத் தொழில்களும் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் மதங்களின் பங்கு பெரிதாக இருந்திருக்காது. ஏனென்றால், மனுதர்மம் நான்கு பிரிவுகளைச் சொன்னாலும் இந்து மதம் ஒன்றே பிரதானமாகவும் அனைவரும் கடைப்பிடிக்கும் மதமாகவும் இருந்திருக்கிறது. அப்படியானால், ஒரே மதம், ஒரே கடவுளே வழிபடு பொருளாக இருந்த போதிலும் மேலோர், கீழோர் என்ற அப்பட்டமான பாகுபாடுகளும் அடக்குமுறைகளும் அரங்கேறிவந்தன. குறிப்பிட்ட சில பிரிவினரை மிருகங்களை விடக் கேவலமாக நடத்தியிருக்கிறார்கள். எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்து மதப்போர்வையில் எண்ணிலடங்காக் கொடுமைகள் நடந்தேறின. கீழ் நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியத்திருநாட்டில் மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 79.8 விழுக்காடும் இசுலாமியர்கள் 14.2 விழுக்காடும் கிறித்தவர்கள் 2.3 விழுக்காடும் சீக்கியம் 1.7 விழுக்காடும் பௌத்தம் 0.7 விழுக்காடும் ஜெயின் 0.37 விழுக்காடும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரும்பான்மை மதமாக இந்து மதம் மட்டுமே இருந்து வருகிறது. நாளடைவில் இந்தியாவில் பிறந்த சீக்கியம், பௌத்தம் மற்றும் ஜெயின் போன்ற மதங்களும் மேற்சொன்ன கணக்கீட்டின்படி குறைவான எண்ணிக்கையிலான மக்களையே கொண்டிருந்தன. இந்து மதத்திற்கு அடுத்தடுத்த வரிசையில் இருக்கும் இசுலாமியம் மற்றும் கிறித்தவ மதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.

இந்தியாவில் கிறித்தவ மதம்  கேரளாவிலுள்ள முசுரிசு என்ற இடத்தில் புனித தோமையார் என்ற அப்போஸ்தலர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கிறித்தவ மதத்தைத் தழுவியவர்கள் புனித தோமையார் கிறித்தவர்கள் என்றும் நாளடைவில் சிரியன் கிறித்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் கிறித்தவம் இந்தியாவில் பதினாறாம் நூற்றாண்டில் தான் விரிவாக்கம் கண்டது. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கமும் பிரித்தானிய கிறித்தவ எதிர்ப்பிரிவினரும் (Protestant) அமெரிக்க மதப்பிரசங்கிகளும் (Missionaries) பதினெட்டாம் நூற்றாண்டில்தான்  வருகை தந்தனர்.

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இசுலாமிய மதம் ஏழாம் நூற்றாண்டில் கேரளாவில் மலபார் கடற்பகுதியில் அரபு வணிகர்களின் நுழைவின் மூலம் வந்தது. ஆனால், தில்லி சுல்தான் (1206-1526) காலத்திலும் மொகலாயப் பேரரசின் ( 1526-1858) காலத்திலும் தான் வேகமாகப் பரவியது.

இந்து தவிர இந்தியாவில் தோன்றிய மற்ற மதங்களின் வளர்ச்சிப்க்ஷபெறாத நிலையில் இசுலாமியமும் கிறித்தவமும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு மக்கள் தொகையில் முன்னேறின. பரம்பரை பரம்பரையாக இந்துக்களாக இருந்தவர்கள் உயர்சாதி இந்துக்களின் நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தாய் மதத்திலிருந்து மதம் மாறி இசுலாத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடம் பெயர்ந்தனர். பிறப்பால் இந்துவாக இருப்பினும் மனுதர்ம அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சியால்  தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி கொடுமைகளுக்கு ஆளான மக்களுக்குத் தங்கள் துன்பத்தைப் போக்க வழி கிடைத்ததுதான் மதம் மாற்றம் என்ற ஓர் ஆயுதம். கணிசமான எண்ணிக்கையில் இசுலாத்திற்கும் கிறித்தவத்திற்கும் அடிமைப்பட்ட இந்துக்கள் மதம் மாற்றம் செய்துகொண்டார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவம் முக்கியத்துவம் பெற்றது. மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக ஏராளமான நிறுவனங்களும் கிறித்தவ சபைகளும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கத்தோலிக்கத் திருச்சபைகளும்(Roman Catholic) தென்னிந்தியத் திருச்சபையும் ( Church of South India) போட்டிப் போட்டுக் கொண்டு கல்வி நிறுவனங்களையும் ஆதரவு இல்லங்களையும் அதிக அளவில் தோற்றுவித்தன. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கல்வி வளர்ச்சிப் பெற்றதற்குக் கிறித்தவ மதம் ஓர் இன்றியமையாக் காரணமாகிறது. வர்ணாசிரமக் கோட்பாட்டின் படி கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இக்கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் கோயில்களாகத் தெரிந்தன. அவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூர்வீக மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்துக்கு மாறினர். எது எப்படியோ மதமாற்றம் செய்தவர்க்கும் தாய் மதத்தில் இருந்தவர்களுக்கும் சேர்த்து நல்ல கல்வி,  வேலைவாய்ப்பு கிடைத்து சமூக,  பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதில் கிறித்தவ நிறுவனங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.

வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லோருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று  நிலைக்காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். எந்தச் சாதியும் மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதே நிலைதான் மதம் மாறிய கிறித்தவர்களிடமும் காணப்படுகிறது.

அடிமைப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், உயர்சாதி இந்துக்களிடமிருந்து விடுதலைப்பெற்று ஆதரிக்கத் கூடிய மற்றும் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதிக்கின்ற மதம் என்று எண்ணியே மதமாற்றம் நடந்தேறியது. கிறித்தவமும் இதைத் தான் சொல்கிறது.

குறிப்பாக,  தீவிரத் தீண்டாமையை அனுபவித்த தாழ்த்தப்பட்ட மக்களின் கிறித்தவ மதம் மாற்றம் மிகுந்த ஏமாற்றத்தையேத் தந்தது. மதம் மாறிய பிறகும் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை சமூகம் உயர்வான நிலையில் வைத்து அழகு பார்க்கவில்லை. பொதுவெளியில் தாழ்த்தப்பட்ட இந்துக்களை என்ன கண்ணோட்டத்தில் பார்த்தார்களோ அதே பார்வையைத் தான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களையும் சமூகம் பார்த்தது. சாதி இந்துக்களுக்கு மதம் மாறியவர்களும் இந்து மதத்தில் இருப்பவர்களும் ஒன்றாகவேத் தெரிந்தார்கள். திருச்சபைகளுக்குள்ளே கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமபங்கு அங்கீகாரமோ  அதிகாரமோ தரப்படவில்லை. மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதையாகிப்போனது. மதம் மாறிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. இதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பங்களில் ஒரு சிலர் மட்டுமே மதம் மாற்றம் செய்ததும் கூட  காரணமாக இருக்கலாம். மதம் மாறாத பெரும்பான்மை இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடுகளே தான் நீடித்தன.

கிறித்தவத் திருச்சபைகளில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அன்று ஆங்கிலேயர் விட்டுச்சென்ற  இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று அரசு உதவி பெறுபவைகள். இவைகள் அனைத்தும் கிறித்தவத்துக்குள்ளே பெரும்பான்மை பெற்ற சாதியினரின் கைவசங்களிலே தான்  இருக்கின்றன.  இந்த கல்வி நிறுவனங்களில் கல்விச் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புப் பெறுவதென்பது திருச்சபை உறுப்பினர்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களுக்கு எட்டாக்கனிகள்தான். கத்தோலிக்கத் திருச்சபை உடையார், முதலியார் மற்றும் வெள்ளாளர்  கைகளிலும் தென்னிந்தியத் திருச்சபை நாடார்கள் கைகளிலும் இருப்பதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக மேற்கண்ட உயர்சாதிக் கிறித்தவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் மதம் மாற்றத்திற்கு முன்பாக உயர்சாதி இந்துக்களிடம் பட்ட தீண்டாமைத் துன்பங்களை மறந்து அதிகாரப் போதையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவே ஒதுக்கி வைக்கிறார்கள். பாவம், வந்தவளும் சரியில்லை வாய்த்தவளும் சரியில்லை என்ற கதையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாய் இந்து மதத்திலும் தீண்டாமைக்கொடுமை மதம் மாறி வந்த இடத்திலும் தீண்டாமைக்கொடுமை என்றால் என்ன செய்வார்கள்? ஒரே கடவுள் ஒரே வேதாகமம் ஆனால் வழிநடத்துதலில் வேறுபாடு. இதில் தவறில்லையா?

இசுலாமிய மதத்திலும் சில விடயங்களில் பாகுபாடு இருக்கலாம்.  தலித் இசுலாமியர்களுக்கு ஜமாத்களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், ஒரு தலைமுறை வரை வேண்டுமானால் பிரிவினைவாதம் இருக்கலாம். அடுத்த தலைமுறைகள் வரும்போது தலித் இசுலாமியம் என்ற பாகுபாடு மாறி இசுலாமியர்கள் என்ற ஒற்றைச் சொல்லில் பார்க்கப்படுகிறார்கள். காரணம், வரும் நாட்களில் அவர்களின் மூலச்சாதி  மறக்கப்படுகிறது. இது இசுலாமியத்தின் தனிச்சிறப்பு தான். மேலும் இசுலாமியத்தில் மதமும் சாதியும் ஒன்று தான்.   ஆனால், கிறித்தவத்தில் மூலச்சாதிகளும்  வர்க்கப்பேதங்களும் நின்று நிலைத்து பரம்பரை பரம்பரையாக அடையாளம் காட்டப்படுகின்றன. தலித் கிறித்தவர்கள், நாடார் கிறித்தவர்கள், வெள்ளாளர் கிறித்தவர்கள், உடையார் கிறித்தவர்கள், முதலியார் கிறித்தவர்கள் போன்ற பாகுபாடுகள் திருச்சபைகளின் ஏடுகளில் வாழையடி வாழையாக எழுதப்பட்டே வருகின்றன. ஆகவே, பேராயர், பாஸ்டர், உபதேசியார், பாதிரியார், பங்குத்தந்தை போன்ற பதவிகளுக்கு தலித் கிறித்தவர்களால் போட்டிப் போடக் கூட முடிவதில்லை. உயர்சாதிக் கிறித்தவர்களின் உட்பிரிவுகளுக்குள்ளே மேற்சொன்ன பதவிகளுக்கு அடித்துக் கொள்கிறார்கள். எனவே, தலித் கிறித்தவர்கள் போட்டிக்கு வருவதே பெரும்பாடாகிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களில் எந்த சாதி அதிகளவில் இருக்கிறார்களோ அந்த சாதியைச் சேர்ந்த பாதிரியார் தான் பங்குத்தந்தையாக வரவேண்டும் என்பதில் சண்டை கூட வருகிறது. இந்த சாதி பாதிரியார்களின் வழியாக ஏனைய சாதியினர் செபித்த செபங்கள் ஆண்டவரால் கேட்கப்படுமா? இந்த வகைப் பாதிரியார்களிடம் ஏனைய சாதியினர் கேட்ட பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவங்கள் ஆண்டவரால் மன்னிக்கப்படுமா? போன்ற சந்தேகங்கள் நமக்குத் தோன்றுகின்றன.

திருமணக் காரியத்தைப் பொறுத்தவரை சாதி பாராமல் நடப்பது அரிதிலும் அரிது. சாதாரணமாகவே சாதிகளால் பிரிக்கப்பட்டு திருச்சபை நிகழ்வுகள் நடக்கும்போது திருமணத்தில் சாதி பாராமல் இருப்பார்களா? மத போதனை செய்யும் மதப்போதகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், பெந்தகொஸ்து சபைகளில் ஒப்பீட்டளவில் சாதி பாராமல் சில திருமணங்கள் நடைபெறுகின்றன. அதற்கும் சில காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, கத்தோலிக்க மற்றும் தென்னிந்தியத் திருச்சபைகளில் உள்ள உறுப்பினர்களை விட பெந்தகொஸ்து சபைகளின் உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். பெந்தகொஸ்து சபைகளில் சாதி பாராமல் திருமணக் காரியங்கள் நடப்பது இந்த குறைவான பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. மதப்பிரச்சாரம் மற்றும் தேவ செய்தி அளித்து வருகின்ற தேவ ஊழியர்கள் பல இடங்களில் திருச்சபைகளில் பொறுப்பளிப்பதிலும் திருமண ஏற்பாடுகளிலும் உள்ள சாதியப் பாகுபாடுகளைப் பேசியும் பிரசங்கம் செய்தும் வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தப்பலனும் இல்லை.
அதேநேரத்தில், இசுலாமியத்தில் திருமண ஒப்பந்தம் மிகச்சிறப்பாக இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. எந்த சாதியினரும் தங்கள் பெண்களை மணமுடிக்க விரும்பினால் இசுலாமியர்கள் சாதி பாராமல் குடும்பத்தை மட்டும் பார்த்துப் பெண் கொடுக்கிறார்கள். தலித்துகள் ஏராளமான இசுலாமியப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். இசுலாமியர்களுக்குத் தேவை அவர்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்பதே. அவர்களின் மதத்தின் மார்க்கத்தைக் கட்டிக்காக்கவே இந்த முடிவு. சாதி இந்துக்கள் இசுலாமியர்களை மாமா என்றும் மச்சான் என்றும் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைக்கப்படுகிற இசுலாமியர்கள் சென்ற தலைமுறையில் தலித்தாகக் கூட இருந்திருக்கலாம். சாதி இந்துக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தலித் மக்கள் இசுலாமிய மதத்திற்கு மதம் மாறிய பின்னர் அதே சாதி இந்துக்களுக்கு மாமனாகவும் மச்சானாகவும் தெரிகிறார்கள். அப்படியானால் இசுலாமியம் பாராட்டுதலுக்குரியதுதானே. இசுலாமியர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களல்ல. நேற்று தலித்தாகவோ பிற்படுத்தப்பட்ட வராகவோ இருந்தவர்கள் தானே. அதிலும் தென்தமிழகத்தில் பள்ளர்களும் மறவர்களும் பெருமளவில் இசுலாமியத்துக்கு மதம் மாறியதாக ஒரு கருத்தாடலும் உண்டு.

இந்து மதக்கோட்பாடுகள் தவறானவைதான்.  மனுதர்மத்தையும் வர்ணாசிரமத்தையும் உபநிடதங்கள் வழியாகச்சொல்கின்றன. மேல்தட்டு இந்துக்களுக்கு அவர்களின் மதக்குறிப்புகளே சாதியப் படிநிலைகளைச் சொல்வதால் அவைகளைக் கை காட்டி சாதியப்பிரிவுகளைக் கட்டிக்காப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால், அனைவரும் ஒன்று, சாதி பார்ப்பது தவறு என்று வேதமும் வேதாகமும் சொல்கின்ற கிறித்தவ மதத்தில் சாதியப் பாகுபாடும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பவை சரிதானா?

ஓர் ஊரில் ஒரு பெருமாள் கோயில், ஒரு சிவன் கோயில் உள்ளன. ஆனால், ஒரே ஊரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிறித்தவத் தேவாலயம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கிறித்தவத் தேவாலயம் உள்ளதே. ஏசுநாதர் எங்கே வருவார்? இன்னும் ஒரு சிலர் ஏசுநாதர் தச்சுத்தொழில் செய்ததால் அவர் எங்கள் சாதிதான் என்று சொல்கிறார்களே. இதைவிட நகைச்சுவை வேறென்ன இருக்கப்போகிறது? இந்நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்து மதம் பரவாயில்லை என்பதைப் போலல்லவாத் தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கிறித்தவ ஊழியர் ஒருவரே மனமுடைந்து தமிழ்நாட்டில் சாதிய முறைகளில் எந்தெந்த ஊர்களில் எத்தனை கிறித்தவத் தேவாலயங்கள் இருக்கின்றன என்று முகநூலில் வெளிப்படுத்தியிருந்தார்.  இதுபோன்று சாதிக்கொரு தேவாலயம் அமைப்பது ஆண்டவரை நிந்தனை செய்யும் செயலாகாதா?

இதற்கு ஒரு படி மேலே போய், கத்தோலிக்கத் திருச்சபையில் சாதிச்சங்கங்கள் இருக்கின்றன. கிறித்தவ வெள்ளாளர் சங்கம், கிறித்தவ உடையார் சங்கம், கிறித்தவ முதலியார் சங்கம், கிறித்தவ நாடார் சங்கம் போன்ற பல சங்கங்கள் உள்ளன. இது எதைக் காட்டுகிறது? கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தகொஸ்து சபைகள் போன்ற கிறித்தவப்பிரிவுகளைத் தாண்டி கிறித்தவ சாதிச்சங்கங்கள் பரிணாம வளர்ச்சியடையக் காரணங்கள் எவை? இதன் மூலம் நீங்கள் உண்மைக்கிறித்தவ விசுவாசிகளுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? இவற்றின் மூலம் என்ன சமத்துவத்தைக் கடைப்பிடிப்பீர்கள் என்பதை எளிய மனிதர்களால் கூட யூகிக்க முடிகிறதே.

திருச்சபைகளுக்குள்ளே தில்லுமுல்லுகள் ஒருபுறம் என்றால் அரசியல் தில்லுமுல்லுகளும் நம்மை திகைக்க வைக்கின்றன.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிற்படுத்தப்பட்ட கிறித்தவர்கள் (Backward Class Christians) முற்பட்டப்பிரிவில் (Forward Class) வைக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிறித்தவத்தில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் தான் வைக்கப்படுவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் அரசாணையின் மூலம் அரசால்  கொண்டுவரப்பட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றம் தான். ஏனென்றால், பிற்படுத்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் சமூக, பொருளாதார நிலையில் முற்பட்ட சமூகத்தினருக்கு இணையான முன்னேற்றம் பெறவில்லை. இத்தனை காலம் முற்பட்ட வகுப்பில் வைத்திருந்ததே  மிகப்பெரிய வரலாற்றுப்பிழை தான். ஆனால், அதே அரசு தான், தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் வைக்கப்படாமல்  பிற்படுத்தப்பட்ட பிரிவில் தான் வைக்கப்படுவர் என்று அரசாணை வெளியிட்டு இன்றும் இந்நிலைத் தொடர்கிறது. பிற்படுத்தப்பட்ட கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மட்டும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பினர் இல்லையா? மதம் மாறிய போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்படாத சமூக, பொருளாதார முன்னேற்றம் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் மட்டும் கிடைத்துவிடுகிறதா? இல்லை திருச்சபைகளில்,  தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களைத் தங்களுக்கு இணையான பிற்படுத்தப்பட்டவர்களாகப் பார்க்கிறார்களா? எவ்வளவு பெரிய வரலாற்றுப்பிழையாகி  தொடர்ந்து நடந்து வருவதைப் பாருங்கள்.

தலித் கிறித்தவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைத்திருப்பது சரியா தவறா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசால் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கைகளும் அரசிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கைகளில் தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக, பொருளாதார நிலைக்கு முன்னேறவில்லை என்றும் இதர தலித் இந்துக்களுக்குச் சமமான சமூக பொருளாதார நிலையில் தான் உள்ளனர். மதம் மாற்றம் அவர்களுக்கு எவ்வித சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளன. இருப்பினும் தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் வைக்க அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. கிறித்தவர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள உறுதியாக இருக்கும் திருச்சபைகளோ தலித் கிறித்தவர்கள் மீது ஏவப்பட்ட அரசியல் இருட்டடிப்பை எதிர்த்து பெரிய முன்னெடுப்பு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்த பிரச்சினைக் குறித்து திருச்சபைகள் வழக்காடு மன்றங்களுக்குக்கூட செல்லவில்லை. கேரளாவில் சில தலித் கிறித்தவ அமைப்புகள் தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளன. அவைகள் இன்னும் பாழ் கிணற்றில் எறிந்த  பாறாங்கற்களாகக் கிடக்கின்றன. இதுபற்றி  திருச்சபைகள் கூடி எவ்வித வழக்குகளையும் தாக்கல் செய்து போராடவில்லை. தலித் கிறித்தவர்களின் வலி  அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தேவை கிறித்தவர்களின் எண்ணிக்கையைத் தக்க வைப்பதில் மட்டும்தானே. உயர்சாதி கிறித்தவர்கள் திருச்சபைகளின் பலன்களையும் பெற்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான அரசின் சலுகைகளையும் பெற்று  வரும்போது தலித் கிறித்தவர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை தானே. ஒருவேளை அவர்களை முற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றாமல் சலுகைகள் மறுக்கப்பட்டிருந்தால் களத்தில் இறங்கிப் போராடியிருப்பார்களோ என்னவோ?

திருச்சபைகளில் உள்ள பாதுகாப்பின்மையாலும் தங்களின் கோரிக்கைகளை அரசுகளின் செவிமடுக்காமையாலும் தலித் கிறித்தவர்கள் இரு தலைக்கொள்ளி எறும்பாக இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக, தலித் கிறித்தவர்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைப்படுத்துதலில்  பேரினம் மற்றும் சிற்றினம் என்ற இரு பெயர்களைக் கொண்ட இரு பெயரிடுமுறைக் (Binomial Nomenclature) கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினர். கிறித்தவத் தேவாலயங்களில் ஒரு கிறித்தவப் பெயரும், கல்விச் சான்றுகளில் மற்றொரு பொதுப்பெயர் அல்லது இந்துப்பெயரும் வைத்து கிறித்தவத்தையும் விடமுடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில் அரசின் சலுகைகளையும் விடமுடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.  அரசின் ஏடுகளில் இந்து என்று இருந்தாலும் உள்ளத்தில் கிறித்தவம் தான் இருக்கும். இந்த இருபெயரிடுமுறை திருச்சபைகளுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும். இவைகள் தங்களின் சுயநலத்திற்காக இந்த இருபெயரிடுமுறையைக் கண்டுகொள்வதில்லை. காரணம், சிறுபான்மை நிலையில் உள்ள திருச்சபைகள் தங்களின் கிறித்தவ மக்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டியதுள்ளது. ஆகவே, தலித் கிறித்தவர்களின் பெயர்ப்பதிவுகள் தேவைப்படுகின்றன.  இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் போலியாக மதம் மாற்றம் நடந்தாலும் பதிவேட்டின்படி இந்துவாக இருந்தால் இந்துக்களின் பெரும்பான்மையை ஏட்டளவிலாவது தக்க வைக்கலாம் என்று அரசும் நினைக்கிறது.

ஒரு தலித் இந்துவாக இருந்தால் தாழ்த்தப்பட்டவர், அவரே கிறித்தவ மதத்திற்கு மாறினால் பிற்படுத்தப்பட்டவர்.  ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் எந்த மதத்திற்கு மாறினாலும் சாதி மாறாது. இது சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தலித் மக்களுக்குப் பலத்தப்பாதிப்பு தானே.  இதன் காரணமாகவே தலித்துகள் கிறித்தவ மதத்திலிருந்து தாய் மதமான இந்துமதத்திற்கு மாறுகின்றனர். பெரும்பாலும் இவர்கள் மனதளவில் இந்து மதத்தைப் பின்பற்றுவது இல்லை. இது அரசுக்கும் தெரியும். இருப்பினும் அரசின் சட்டத்தின் படி மதமாற்றம் செய்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறலாம் என்ற ஒரு வாய்ப்பை அரசு தருகிறது. இந்த மதம் மாற்றம் மூலம் தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கு வந்துவிடுகின்றனர். இதற்கு நேரடியாக தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வைக்க அரசு ஆணைப் பிறப்பிக்கலாமே. அப்படியில்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலுள்ள இந்த சித்து விளையாட்டு தேவைதானா?

சில தலித் கிறித்தவர்கள் ஆரம்பத்திலேயே திருச்சபைகளில் ஒரு பெயரை வைத்து கிறித்தவராகவும் கல்வி நிறுவனங்களில் மற்றொரு பெயரை வைத்து இந்துவாகவும்  இருக்கின்றனர். சிலர் ஆரம்பத்திலிருந்து ஒரே பெயரை  திருச்சபைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் வைத்து கிறித்தவத்தில் அதீத பிடிப்பு ஏற்பட்டு கிறித்தவராகவே இருந்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் திருச்சபைகளின் போக்குப்பிடிக்காமலும்  தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததாலும் இடைப்பட்ட காலத்தில் கிறித்தவப்பெயரை மாற்றிவிட்டு இந்து பெயரை வைத்து தங்களது வேதனைகளை வெளிப்படுத்துகின்றவர்களும் உள்ளனர்.  திருச்சபைகளில் நமக்கு கல்வி, வேலைவாய்ப்பு  போன்றவைகளில் வாய்ப்பில்லாத போது அரசின் உதவியாவது கிடைத்து முன்னேறலாம் என்ற எண்ணமும் மதம் மற்றும் பெயர் மாற்றங்களுக்கு ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.

நான் இங்கு என்னைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஊராரைச் சொல்லிவிட்டு என்னைப்பற்றிச் சொல்லாமல் விட்டால் அது நியாயமில்லையே. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த எனது தாத்தா  ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்திலிருந்து தென்னிந்தியத் திருச்சபைப் பிரிவைச் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு மாறினார். உடன்பிறந்தவர்களின் வாரிசுகள் இன்றளவும் இந்து மதத்திலேயே இருக்கின்றனர். எனது அப்பா இந்து மதத்திலுள்ள எனது அம்மாவைத் திருமணம் செய்தார். எனது பெற்றோருக்கு சில குழந்தைகள் இறந்த நிலையில் எஞ்சியுள்ள குழந்தைகள் எட்டு பேரில் நானும் ஒருவன். என்னுடன் பிறந்தவர்கள் யாரும் சரியாகப் படிக்கவில்லை. நான் மட்டும் தட்டுத்தடுமாறிப் படித்து வந்தேன். ஆரம்பத்தில் நான் ஒரு கிறித்தவன். திருச்சபையிலும் பள்ளிச் சான்றிதழிலும் ஒரே பெயரைக் கொண்ட கிறித்தவன் தான். நான் இருபெயரிடுமுறையைப் பின்பற்றாதவன். உயர்நிலைக் கல்வி பயிலும் போது திருச்சபை மீது வெறுப்புக் கொள்ள நேர்ந்தது.

ஏராளமான கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்த தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தில் திருச்சபைக்கான நிறுவனங்களில் தலித் கிறித்தவர்களுக்கு மூப்புரிமை அடிப்படையில் கல்விச் சேர்க்கைகளோ வேலைவாய்ப்புகளோ வழங்கப்படுவதில்லை. திருமண்டலப் பொறுப்பாளர்களுக்கானப் பதவிகளுக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி நிலவும். தலித் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதேயில்லை. ஆனால், சர்வ அதிகாரம் பெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்புகளில் அதிக முன்னுரிமை இருக்கும். அநேக கத்தோலிக்க மற்றும் தென்னிந்தியத் திருச்சபைத் திருமண்டலங்களிலும் இதே நிலைதான். இவை போன்ற திருச்சபைகளின் தில்லுமுல்லுகளைக் கண்டு வந்த எனக்கு திருச்சபை மீது வெறுப்பு ஏற்பட்டு நாளடைவில் கிறித்தவமும் பிடிக்காமல் போனது. ஆகவே, ஒழுங்காக ஆலயம் சென்று வந்த நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கிறித்தவத்தை வெறுத்தேன். ஆலயம் செல்வதை நிறுத்தினேன். ஆனால், பெயர் மாற்றம் மற்றும் மதம் மாற்றம் செய்யவில்லை. அதற்கான வழிமுறைகள் அப்போது எனக்குத் தெரியவில்லை. கல்லூரிப் பட்டப்படிப்பு வரை கிறித்தவப் பெயர் தொடர்ந்தது. பிறகு, இந்து மதத்திற்கு மாற ஏற்பாடு செய்தேன். எனது தாத்தாவின் பழைய இந்துப் பெயரைச்  சார்ந்த  பெயர் தரித்து முறைப்படி இந்துவாக மாறினேன். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவருக்கான மரியாதை என்ன என்பது என் மரபணுவிலேயேப் பொதிந்து விட்டதுதான். ஆனாலும், எனது எண்ணமெல்லாம் கிறித்தவ மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஒன்று தான். மேலும், கிறித்துவத்திலிருந்து வெளியேற ஒரு மதம் தேவைப்பட்டது. அப்போதைக்கு எனது எண்ணத்தில் விரைவாகவும் எளிதாகவும் தோன்றியது இந்து மதம் தான். ஆகவே, இந்து மதத்திற்கு மாற வேண்டியதாயிற்று.

இந்து மதம் எனது தாத்தாவால் வெறுக்கப்பட்ட மதம். கிறித்தவம் என்னால் வெறுக்கப்பட்ட மதம். ஆகவே, இன்று ஏட்டளவில் இந்துவாக இருக்கும் நான் எந்த மதத்தின் மீதும் பிடிப்பில்லாமல் இறைநம்பிக்கையின்றி இருந்து வருகிறேன். தெளிவான கடவுள் மறுப்புக்கொள்கையில் இருக்கிறேன். ஆனாலும், கடவுள் மறுப்பு இயக்கத்தில்  இன்னும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதாவது பட்டப்படிப்பு வரை நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மேல் சாதி. மதம் மாறிய பிறகு பட்டமேற்படிப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கீழ் சாதி. பொதுவாக சாதியை யாரும் மாற்றமுடியாது மதத்தை வேண்டுமானால் மாற்றலாம் என்பார்கள். ஆனால், தலித்துகளைப் பொறுத்தவரை இந்தக் கூற்று தவறு. தலித்  நினைத்தால் கீழ்சாதி யாகவும் இருக்கலாம் இல்லை மேல்சாதியாகவும் இருக்கலாம். வேறு எந்த சாதிக்கும் இந்த இழிநிலை இல்லை. எத்தனைக் கொடுமையானது இந்த அரசியல் சட்டம். அரசியல் சட்டங்கள் பல திருத்தப்படுகிற போது இதற்கான சட்டத்திருத்தம் செய்வதற்கு எது தடையாக இருக்கிறது? இதுபற்றிய நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு என்ன / யார் காரணம்?

சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தலித் மக்கள் மனதால் கிறித்தவர்களாகவும் பொதுவெளியில் இந்துவாகவும் இரட்டை வேடம் பூண்டு வலம் வருவதற்கு வேடிக்கையான அரசின் மதம் மாற்றம் தொடர்பான சட்டங்கள் தானே காரணம்.  இது போன்ற சட்டங்கள் திருத்தப்பட்டு பிறப்பால் தலித்துகளான மக்கள் மற்ற சாதிகளைப்போல எந்த மதத்திற்கு மாறினாலும் தலித்துகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலையை அரசுகள் உருவாக்க வேண்டும். சிறுபான்மையிலும் சிறுபான்மை மக்களான தலித் கிறித்தவ மக்களின் தேக்கமடைந்த உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள வழக்குகளும் விரைவாக நியாயமானத் தீர்ப்புகளாக்கப்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுவரை தலித் கிறித்தவர்களின் எதிர்காலம் இருண்ட காலம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கிறித்தவத் திருச்சபைகளே! அரசுகளின் நியாயமானச் சட்டத்திருத்தங்களும் நீதிமன்றங்களின் நேர்மறையானத் தீர்ப்புகளும் வரும் வரையிலாவது அருள்கூர்ந்து தலித் கிறித்தவர்கள் மீது கருணை கொள்ளுங்கள். அவர்களின் குலசாமிகள் அவர்களைக் காப்பாற்றவில்லை. அவர்களின் காவல்தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை. ஆகவே, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்புக் கிடைக்கும் என்றெண்ணி தேவனைத் தேடித் திருச்சபைகளுக்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை இரட்சியுங்கள். அவர்களுக்கும் உங்கள் சமாதானத்தைத் தாருங்கள். இல்லை, தலித் கிறித்தவர்களை வழக்கமான வெறுப்புணர்வோடு ஒதுக்கித் தள்ளுவீர்களேயானால், "ஆண்டவரே இவர்கள் இன்னதென்று அறியாது செய்கிறார்கள் இவர்களை மன்னியும்" என்று உங்களுக்காக அவர்கள் இறைவனிடம் மன்றாடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

முனைவர் அ.இராமலிங்கம்,
இணைப் பேராசிரியர்.
26.04.2020.

ஏர் இதழ் வெளியீடு.

மலையாளத் திரைப்படங்களும் தமிழர் விரோதச் சித்தரிப்புகளும்: இயக்குநர் சாம்ராஜ்


இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான்.
தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன.
80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன்.
யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின.
வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன்.
(நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.)

பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார்.
“சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்.
இதை நான் வெளியே சொல்லமுடியாது.
சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று.
பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு.
மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.

கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு.
சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன்.
தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம்.
ஒருபாடு படங்கள்.

80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.
துல்லியமான middile cinema உருவாகியிருந்தது.
ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,

எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.

மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே.
திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு.
கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன்.
லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன்.
பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.

20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.
அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம்.
(கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.)

கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன்.
முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை.

மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள்.

மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது.
தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள்.
அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான்.

பொள்ளாச்சி கவுண்டராக
உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார்.
பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு,
மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி
“வேண்டாம் மோனே தினேஷா”
என மாரில் ஏறி மிதிப்பார்.

பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா?
(கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்)

தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார்.
அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.
இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.
மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷநாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார்.
மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள்.
நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது.
அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள்.
அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும்
”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள்.
(இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.)
கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா…..?
சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.)
இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு.
தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள்.
கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள்.
திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு.
இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள்வாங்கவில்லை.
கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”.
வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள்.
(ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது.
தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா
அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.

அரசியல், முல்லை பெரியாறு அணை, தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள்.
அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா
மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும்.
நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை.
தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர்.
தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு.
எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.
அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது.
இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே.
கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே.
மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள்.
இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும்,
கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு.
தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை.

பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.

எனக்குத் தெரிந்து மலையாளப்படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான்.
81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)
அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார்.
அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை.
கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார்.
அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை.

ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத்திரையில் தென்படுவதுண்டு.

பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான்.
பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.

இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார்.
இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை.
அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள்.
பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.

அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள்.
ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.

இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை.
பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள்.
உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள்.
பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே.
ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்).
அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே.
இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே.
பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே.
அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார்.
முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது.
சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.

ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை.
மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே.
கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”.
இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை.
ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது.
சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது.
மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார்.
முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது.
சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே.
எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள்.
திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார்.
இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர்.
எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள்.
தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.

இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார்.
என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா.
இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது.
வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக்.
அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.

சரி கேரளத்துக்குத் திரும்புவோம்.
சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.
பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.

”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது.
ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது.
சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே.
அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.

இந்தப் பாண்டிகளின் தலைநகரில்தான் மலையாள் நடிக, நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர்.
மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன்.
மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது.
ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது.
ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது.  தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’.
ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார்.
ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார்.
அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன.
காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர,
"பாவம் இந்தப் பாண்டிகள்" என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள்.

கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது.
திரையரங்கம் சூறையாடப்படும்.
ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம்.
தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே.
உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.
எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார்.
மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள்.
வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.

நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு.
கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே.
இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது.
மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம்,
”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு.
அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம்.
ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும்,
’சொப்பன சுந்தரிகளும்’
’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு.
அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு.
(மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள்.
நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்).
கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக்கூடியவர்கள்.
வாதிடக்கூடியவர்கள்.
அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு.
”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது.
(முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1. நாடோடிக் காற்று-
மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986

3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987

4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983

5. சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989

6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990

7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987

8. வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991

9. மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

10. விஷ்ணு – மம்முட்டி - - 1993

11. கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997

13. மழவில் காவடி – ஜெயராம் – 1990

14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990

15. ஐட்டம் –மோகன்லால் - 1985

16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994

17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008

18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006

19. தாழ்வாரம் – பரதன் – 1987

20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005

21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000

22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998

23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008

24. பிளாக் – மம்முட்டி – 2004

25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006

26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004

27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005

28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006

29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007

30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009

31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003

32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999

33. நரன் – மோகன்லால் – 2005

34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002

35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001

36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005

37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005

38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002

39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003

40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000

41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998

42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000

43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999

44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006

45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001

46.ஏகேஜி – 2007

47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998

48. பகல் பூரம் – முகேஷ் – 2000

49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992

50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003

இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும்.

மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.

எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது.

மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .
தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் "இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார்.

M.G.R ன் விரிவாக்கம் அதுவே..
அவர் ராமசந்திரன் அல்ல ராம்சந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன்.
அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.
1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார்.
சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார்
…….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்)
ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது.
சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.
நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.
நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .
மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர்.
எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.
சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நாம்?.
நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.

இயக்குநர் சாம்ராஜ்.

புதன், 22 ஏப்ரல், 2020

இட ஒதுக்கீடு யாருடைய நலனுக்கானது? : முனைவர் அ.இராமலிங்கம்


இந்தியா போன்ற நாடுகளில் வர்க்க பேதங்கள் நிரம்பி வழியும் சமூகத்தில் சமூக, பொருளாதார நிலையில் பல்வேறு படிநிலைகளைப் பல நூற்றாண்டுகளாக கண்டுவருகிறோம்.

குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் சில பூர்வகுடிகளைக் கீழ்நிலையிலும் சில சமூகங்களை உயர்ந்த நிலையிலும் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம்.  சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பார்ப்பனியத்தை ஒன்றுசேர்ந்து எதிர்த்த இடைநிலைச் சாதிகள் இன்று நவீன பார்ப்பனியக்கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கின்றன. இவர்களுக்குச் சாதியப் படிநிலைகளில் கடைநிலையின் கடைசியில் நின்றுவிடக்கூடாது என்று நினைத்து வசதியாக நவீனப் பார்ப்பனியத்தைக் கையிலெடுத்துக் களமாடி வருகிறார்கள். உண்மையான பழமையானப் பார்ப்பனியம் உண்மையை உணர்ந்ததால் என்னவோ சமூகத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாகரீகமாக நவீனப் பார்ப்பனியத்தின் நையாண்டி வேலைகளை ஓர் ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ   என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தில் கோலோச்சி வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவித்த பெருந்தன்மையோடு இதுவரை நன்கு வாழாமல் விட்டவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டுமே என்ற உண்மை உணர்வுகளோடு ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் கண்டு மாற்றுக்கருத்துக் கூறாமல் ஊமையாய் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் இட ஒதுக்கீட்டின் அவசியமும் இன்னும் பிற சலுகைகளும் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்குத் தேவை என்று.

ஆனால், இட ஒதுக்கீட்டின் பலனையும் இன்னும் பிற சலுகைகளையும் அனுபவித்து வருகிற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு மற்றும் இலவச சலுகைகள் பற்றித் தவறானப் புரிதலோடு அல்லது மற்ற சமூகங்களைச்சாட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொய்ப் பிரச்சாரம் செய்து நடுநிலையானவர்களையும் குழப்பி வருகிறார்கள்.
காலம் காலமாக இட ஒதுக்கீடு பற்றித் தவறான கண்டிக்கத்தக்கச் செய்திகளும் கருத்துகளும் முகநூல் பதிவுகளும் இன்றளவும்  வந்து கொண்டிருப்பது வேதனையளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.  ஆகவே, இட ஒதுக்கீடு பற்றி இக்கட்டுரையில் பேச வேண்டியதாயிற்று. 

இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக முற்பட்ட சமூகத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமை. நன்றாகக் கவனிக்க வேண்டும்,  அடிமைப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்தே உள்ள உரிமை தான் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள். ஒரு பாதி காலத்தில் ஒரு சமூகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது என்றால் மறுபாதியில் மற்ற சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் அடிப்படை உரிமைகளைப் பெற அவசியமும் உரிமையும் உண்டு தானே. ஆதலால், இப்போது பெற்றுவரும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையேயன்றி யாசகம் அல்ல.

அன்று இலவசத் தொகுப்பு வீடுகளை வைத்து அது ஊரா சேரியா என்று வேறுபடுத்த முடிந்தது. ஆனால், தற்போது பல வருடங்களாக அனைத்து சாதியினருக்கும்  பசுமை வீடு, பிரதமர் வீடு போன்ற இலவச வீடுகளை அரசுகள் அளித்து வருகின்றன. இந்த திட்டம் சாதிகளை இன்னும் சமப்படுத்தவில்லையே?

அந்தக் காலத்தில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இலவசப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இப்போது இலவசப்பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை மட்டுமல்ல இலவசக் குறிப்பேடுகள், புத்தகப் பை, எழுதுபொருட்கள் அனைத்தும் இலவசமாக அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் சமநிலை இல்லையே?

இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவந்த தனித்துவமான சலுகைகள் அனைத்தும் பொதுவுடமை ஆக்கப்பட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தில் சமநிலை ஆகாததற்குக் காரணம் யார்? என்னைப் பொறுத்தவரை சமூக, பொருளாதார நிலையில் சமநிலை அடையும் வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகளைப் பொதுவுடமையாக்கி ஏனைய பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான். நிலைமை இப்படியிருக்க, அனைத்து சலுகைகளையும் சமமாகப் பெற்றுவரும் இடைநிலைச் சாதிகளான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தான் இலவசங்களைப் பெறுகிறார்கள் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அவர்களின் அறியாமையேயன்றி வேறொன்றுமில்லை.

சமூகச் சமநிலை என்பது பொதுவெளியில் மரியாதையோடு நடத்துவது மட்டுமல்ல மாறாக தொழில் வியாபாரம் போன்றவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்பை உறுதிசெய்வதை உள்ளடக்கியதுமாகும். அப்படியானால், நான் ஏற்கனவே சொன்னது போல பொது வெளியில் சமூகச் சமநிலை இல்லாத நிலையில் பொதுவான அரசு சலுகைகள் அளிப்பது முறையற்றது தானே. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட சலுகைகள் அளிப்பது முறையானதும் தானே. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பட்ட சலுகைகள் அனைத்தும் சமமாக்கிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அரசின் இலவசங்களும் இட ஒதுக்கீடுகளும் இருப்பது போலச்சொல்லி நாடகமாடுவதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

இட ஒதுக்கீடு பற்றி சமீபகாலமாக முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீட்டை எவ்வித இடர்பாடின்றி அனுபவித்து வரும் அறிவு ஜீவிகள் தவறான கருத்துகளையும் பொய்ப்பிரச்சாரங்களையும் புரிதலின்றி அல்லது தவறான நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். உதாரணமாக, இட ஒதுக்கீடு இன்னும் தேவையா? இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வேண்டுமா இல்லை பொருளாதாரத்தின் அடிப்படையில் வேண்டுமா?  இவைபோன்ற பிரச்சாரங்களை சமூக அக்கறையில்லாமல் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

சமூகநிலையைக் கணக்கில் கொண்டு தான் இட ஒதுக்கீடு தரவேண்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து. சாதியை வைத்து இட ஒதுக்கீடு அளிப்பதே சமூக நீதியாக இருக்கும். பொருளாதார நிலையில் இட ஒதுக்கீடு அளிப்பது அவ்வளவு எளிதானதல்ல. தற்போது நடுவண் அரசு கொண்டு வந்துள்ள முற்பட்ட வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு நாளடைவில் பிசுபிசுத்துப் போய்விடும். நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள். சாகும்வரை சாதி மாறப்போவதில்லை. சமூகத்தின் எண்ண ஓட்டமும் மாறப்போவதில்லை. ஆனால், பொருளாதார நிலை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது தான். இன்று ஏழை நாளை பணக்காரன். சுருக்கமாகச் சொன்னால்,  சாதிச்சான்றிதழ் சாகும் வரை செல்லும், ஆனால்  வருமானச் சான்றிதழ் ஆறு மாதத்திற்குத் தான் செல்லும். இதன் மூலம் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எப்படியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

நான் இப்போது சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீட்டுச் சலுகை இருக்கக்கூடாது என்பதை நீதிமன்ற வழக்குகளையும் தாண்டி தமிழகத்தில் அறுபத்தொன்பது விழுக்காடுவரைக் கொண்டு வந்து இன்றளவும் நடைமுறையில் இருப்பது யாருக்காகத் தெரியுமா? சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீடு பற்றி விமர்சித்து வரும் உங்களுக்காகத்தான். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு என்பது நடுவண் அரசால் தக்க வைக்கப்பட்டு நடுவண் அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டும் அங்கீகரித்து அளித்து வழங்கி வருவது தான்.  ஆனால், நடுவண் அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோரை இதர பிற்படுத்தப்பட்டோர்(Other Backward Class) என்ற பிரிவில் தான் இட ஒதுக்கீட்டில் வைத்திருக்கிறது. நடுவண் அரசு இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவே இல்லை. நடுவண் அரசால் வழங்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகளை தமிழக அரசு அளிப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது விழுக்காடு இட ஒதுக்கீடு.  இந்த அறுபத்தொன்பது விழுக்காட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பத்தொன்பது விழுக்காட்டைக் கழித்துப் பார்த்தால் எஞ்சியுள்ள ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு யாருக்கானது என்பது புரியும். இதை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? நான் சொல்கிறேன் கேளுங்கள். இட ஒதுக்கீட்டில் முப்பது விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இருபது விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தான்.  எஞ்சியுள்ள பத்தொன்பது விழுக்காடு தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு. இப்போது சொல்லுங்கள் அறுபத்தொன்பது விழுக்காட்டில் அதிக இட ஒதுக்கீட்டைப் பெறுபவர்கள் யார் என்று? சமூக ஊடகங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று வீண் விவாதம் செய்து வருகிற நீங்கள் தானே.
அப்படியானால், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று நீங்கள் முதலில் சொல்லலாமே. இட ஒதுக்கீடு என்பது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான உரிமை மற்றும் அதை வழங்குவது அரசின் கடமை.

பல நூற்றாண்டுகளாக ஆண்டனுபவித்த முற்பட்ட சமூகத்தினர்க்குக் கூட பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிற இந்த வேளையில் இட ஒதுக்கீடு பற்றிப் புரிதல் இல்லாமல் இட ஒதுக்கீட்டிலிருந்து விடுபடவா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருப்பது அறிவார்ந்த செயல் அல்ல.

இட ஒதுக்கீடு சாதிகள் அடிப்படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள உட்பிரிவுகளில் உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டு இடைச் சாதிகளால் ஒடுக்கப்பட்ட முடித்திருத்தும் மருத்துவர் சாதியினர் துணி துவைக்கும் வண்ணார் சாதியினர் நிரந்தரக்குடி இல்லாத நரிக்குறவர் சாதியினர் ஆகியோரின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளில் பங்கு போடுகிறோமே என்றெண்ணி மனச்சாட்சியோடு  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை வையுங்கள் என்று அரசை வலியுறுத்தலாமே. ஆண்ட சாதி என்று சொல்லி வரும் நீங்களும் அவர்களும் ஒரே பிரிவில் இருப்பது நியாயம் தானா? இவ்வளவு ஏன், இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்று சிந்திக்கத் தொடங்கிய தாங்கள் முற்பட்ட வகுப்பில் கூட உங்களை வைக்கச்சொல்லி சலுகைகளை மறுக்கலாமே. இத்தகைய சலுகைகளையும் பெற்றுவிட்டு இட ஒதுக்கீடு பற்றி விமர்சிப்பது நன்றாகவா இருக்கிறது?

இன்னொரு விடயம், ஒரு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு சலுகையை மற்றொரு பிரிவினர் தட்டிப் பறிக்க இயலாது. உதாரணமாக, பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே போட்டிப் போடமுடியும். வேறு ஏதாவது ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினரோ அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரோ போட்டிப் போட்டு வெற்றி பெற இயலாது. அதேபோல் எல்லா பிரிவுகளிலும் இதே நிலைதான். அதே நேரம், கல்வி வேலைவாய்ப்புப் போட்டிகளில் குறைந்த பட்ச மதிப்பெண் (Cut Off) ஒவ்வொரு பிரிவினருக்கும்  மாறுபடலாம். இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பிரிவில் உள்ள குறைந்த பட்ச மதிப்பெண்ணின் அடிப்படையில் அதே குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மற்றொருவர் தான் அந்த இடத்தைப் பெற முடியும். அதை விட கூடுதலான மதிப்பெண் பெற்றிருந்தாலும் வேறு பிரிவினர் எவரும் அந்த இடத்தைப் பெற முடியாது. இருந்த போதிலும் பொதுஇடங்களில் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் அந்த வேலை கிடைத்தது, அந்த படிப்புக்கு இடம் கிடைத்தது என்று சொல்வது தவறு. ஏனென்றால், அந்த தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்ட பிரிவின் குறைந்த பட்ச மதிப்பெண்ணை விட கூடுதலாக பெற்றிருந்தாலும் கூட பிற்படுத்தப்பட்டோருக்கான இடத்தைப் பெற இயலாது, தாழ்த்தப்பட்டவருக்கான பதினெட்டு விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள் தான் கல்விச் சேர்க்கையிலோ அல்லது அரசு வேலையிலோ அவர்கள் சேர்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கான முப்பது விழுக்காடு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இருபது விழுக்காடு இட ஒதுக்கீடுகளிலிருந்து அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்கான இட ஒதுக்கீட்டின் படி அவர் அறிவாளி, உங்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி நீங்கள் அறிவாளி. யாருடைய உரிமையையும் யாரும் பறிக்க இயலாது. இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அந்தளவுக்கு மோசமானது அல்ல. பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுகின்ற கல்விச் சேர்க்கைகளிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரைக்காட்டிலும்  தாழ்த்தப்பட்டப் பிரிவினர் கூடுதலான மதிப்பெண் பெற்று பொதுப்போட்டியில் (Open Competition) வருவதைப் பார்த்திருக்கலாம். இந்த உண்மையை அரசுக் கல்லூரிப் பேராசிரியர் என்ற முறையிலும் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் நான் பலமுறை கண்டு வருகிறேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெற்று அரசு அலுவலகங்களிலும் காவல்துறையிலும் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என்றும் அதனாலேயே மற்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன என்றும் பலர் பேசிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினர் மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைப்புத் தொடர்பாகக் கைதாகி வெளிவந்த முக்கிய நபர் ஒருவர் நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெற்று நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திலும், நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளாக இருப்பதால் என் மீது பொய்வழக்குப் போட்டு என்னை சிறையிலடைத்தனர் என்று. இது சிறு பிள்ளைத்தனமாக இல்லையா? நான் அவரிடம் கேட்க நினைப்பது,  அப்படியானால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடுகளில் தேர்வு பெற்று எந்த நாட்டில் அதிகாரிகளாக இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இல்லையா என்பதைத் தான்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் தத்துவத்தைச் சொல்கிற நான் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் உள்ள இட ஒதுக்கீடு பற்றிப் பேசவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றியும் பேசுகிறேன் கேளுங்கள். அரசியல் கட்சிகளில், ஆளுமை நிறைந்த தாழ்த்தப்பட்ட  அரசியல்வாதிகள் இருந்தாலும் கூட பொதுத்தொகுதிகளில் அவர்களைப் போட்டியிட  நிறுத்துவதில்லை. அவ்வாறு  நிறுத்தினாலும் வாக்குச் சேகரிப்பின் போது சாதியைச் சொல்லி விசப்பிரச்சாரம் செய்து தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு  தேர்தல் பணி செய்வார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமமான இட ஒதுக்கீடு இருக்கும்போது தேர்தலில் தனித்தொகுதிகள் அனைத்தும் மாறி பொதுத்தொகுதிகளாக வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில், மேற்சொன்னது போல் அரசியல் கட்சிகள் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களைப் பொதுத்தொகுதிகளில் நிறுத்திச் சாதி பாராமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கும் நிலை நம் நாட்டில் வருகின்ற வரை தனித்தொகுதி முறை நிலைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே,  இன்றைக்குத் தனித்தொகுதி தவிர்க்க இயலாததாகிவிட்டது.

இதில் என்ன ஒரு  வேடிக்கை என்றால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றவர்களை அடிமைப்படுத்தி வந்த பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட சமூகத்தினர் இன்றைக்குள்ள இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டிராத போது இட ஒதுக்கீட்டின் பலனை இன்பமாக அனுபவித்து வருகின்ற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு பற்றி விமர்சிப்பது தான்.

பார்ப்பனியம்
பார்ப்பனரிடம் மட்டும் தான் இருக்கும் என்பதல்ல. அவர்கள் பழைமைப் பார்ப்பனியத்தை விட்டு வெளியே வந்து பல ஆண்டுகளாயிற்று.
இப்போது நவீனப் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது.

மற்றவரின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உணராத மனநிலையும் நவீனப் பார்ப்பனியம் தான். மேம்பட்ட நிலையில் இருந்த பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பற்றி உண்மை உணர்ந்து  பெருந்தன்மையோடு இருக்கும் நேரத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் தவறாது போட்டிப் போட்டுப் பெற்று வருகிற இடைநிலைச் சாதிகள் இட ஒதுக்கீடு மற்றும் ஏனைய சலுகைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தான் பெற்று வருகிறார்கள் என்பதைப் போல பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முனைவர் அ.இராமலிங்கம்
22.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 22.04.2020 /

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம் பரவிய வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும்: ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்

விருதை சிவஞான யோகி அவர்களால் தமிழ் வைத்திய கழகம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தொடங்கி இன்றுடன் 100 வருடங்கள் ஆகிறது. சித்த மருத்துவச் சங்கம் மட்டுமல்லாது, முதன் முதலாக
”திருவிடர் கழகம் “ , ”பத்திவிளை கழகம்” என்ற பெயர்களில் கோவில்பட்டியில் சங்கங்கள் அமைத்து, இதன் ஒரு பகுதியாகச் சித்த மருத்துவச் சாலை ஒன்றை நிறுவி, தீர்க்க முடியாத பல பெரு நோய்களைத் தமிழ்த் சித்த வைத்தியத்தின் மூலம் தீர்த்து வைத்தவர். இவரது சம காலத்தில் தமிழ் வைத்தியத்தை பேறு பெற வைத்தவர்கள் ஒரு பைசா தமிழன் இதழ் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், கருணாமிர்த சாகரம் ஆபிரகாம் பண்டிதர், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.

திரு.வி.க. அவர்கள் விபத்தில் வலது கை முடங்கியதற்கு, பண்டிதர் அயோத்திதாசரிடம் தைல சிகிச்சை முறையில் பண்டுவம் பார்த்த முறையையும் நலம் பெற்றுத் திரும்பியதையும் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிதர் ஆனந்தம் மறைமலை அடிகளுக்குத் தமிழ் மருத்துவம் பார்த்தவர். பல தமிழ்ப் புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்தவர் ஆனந்தம் அவர்கள். இவரின் இல்லமே தென் இந்திய உரிமைகள் சங்கம் என்ற அமைப்பு உருவாக இருந்தது என்பது வரலாறு.

விருதை சிவஞான யோகியாரிடம் ஏழு ஆண்டுகள் தமிழ்ச் சித்த மருத்துவம் பயின்றவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள் கால் மூட்டு வாதத்தினால் அவதியுற்று நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அச்சமயம் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, வ.உ.சி.க்கு சித்த மருத்துவ முறையில் கடுகை அரைத்துக் கொதிக்க வைத்துப் போட்டால் உடனடி பலனளிக்கும் என்று கூற, வ.உ.சி. அதனை அப்படியே செய்து பூரண குணமடைந்தார்.

1927 சேலம் சுயமரியாதை மாநாட்டில் அரசியல் பெருஞ்சொல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய போது, தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பரவலாக மக்களிடத்தில் பொது மருத்துவமாக்கச் செய்திடத் தீர்மானம் முன்மொழிய அறைகூவல் விடுத்தவர் வ.உ.சி.

நாம் இன்று அனைத்து நோய்களுக்கும் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்தை நாடிச் சென்று விட்டோம். அன்றே வ.உ.சி. ஆங்கில மருத்துவத்தை மறுத்து சுதேசி மருத்துவம் உள்ளூர் தமிழ்ச் சித்த மருத்துவ முறையைக் கையாள வலியுறுத்தியவர். வ.உ.சியிடம் பழகிய பல்வேறு தியாகிகள் ந. சோமயஜூலு உட்பட பல்வேறு தலைவர்கள் மூலம் சித்த மருத்துவத்தின் மீது வ.உ.சி கொண்ட அபிமானம் புரிய வருகிறது.

விருதை சிவஞான யோகி தமிழ்க் சித்த வைத்திய சங்கத்தைத் தொடங்கி மதுரை, நெல்லை, சென்னை போன்ற பெரு நகரங்களில், சித்த வைத்திய மாநாடுகள், கண்காட்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தி விழிப்புணர்வு ஏற்படச் செய்தவர்.

தமிழ் மருத்துவம் நாகரீகத்திலும், அறிவு நூல்களிலும் முதற் சங்க காலமாகிய பன்னீராயிரம் ஆண்டாகச் சிறப்பு பெற்றிருக்கிற இத் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. திருமூலர் ‘அவிழுமனமுமாதியறிவுந் – தமிழ் மண்டலமைந்துந் தத்துவமாமே’ என்று தமிழ் நாட்டில் அறிவு நூல்களின் தொன்மையைச் சிறப்பித்துள்ளார்.

திருமூலர், போகர், கொங்கணர், பதஞ்சலி, தேரையர், அகத்தியர், கருவூரார், புலத்தியர், சட்டைமுனி, தன்வந்திரி, யூகிமுனி முதலியோர் இயற்றிய முதனூல், வழிநூல், சார்பு நூல் ஆகிய பல்வேறு நூல்கள் தமிழ் மருத்துவத்தைப் பறை சாற்றுகின்றன.

நோய் விலக்கு முறைகளான மூலிகை வகை, உப்பு வகை, தீநீர் வகை, உபரச வகை, உடற் பொருள் வகை, பாடாண வகை, உலோக (செந்தூரம் என்ற பஸ்பம்) வகை, சத்து வகை, இரச குளிகை (மாத்திரை) வகை, யோக (மூச்சுப்பயிற்சி) வகை எனப் பத்து வகைகளாகத் திருமூலர் பிரிக்கிறார்.

மேற்கூறிய அனைத்தையும் தமிழ்ச் சித்த நூல்கள் கூறுகின்றன. மூலிகை வகை மருந்துகளைப் பிரதானமாகக் கொண்டுள்ளது சமஸ்கிருத ஆயூர்வேத மருத்துவம்.

’உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்
அப்பானாற் கூற்றே மருந்து. என்பார் வள்ளுவர்.

தமிழர்களின் முப்பத்திரண்டு அறங்களில் ஆதுலர்க்கு சாலை, ஓதுவார்க்கு உணவு, நோய்க்கு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மருத்துவச் சாலை பெரிய தருமமாக நடந்து வந்துள்ளது. இக் காலத்தில் தமிழ் மொழி பேசுவதையே கவுரவக் குறைச்சல் என்று கருதி வரும் வேளையில், தமிழ்ச் சித்த மருத்துவத்துக்கும் அபிமானம் குறைந்து வருகிறது.

தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 21.04.1920 அன்று தமிழ் வைத்திய சங்கம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தலைமை அலுவலகம் விருதை சிவஞான யோகி அவர்களால் துவக்கப்படுகிறது.

இச் சங்கம் மூலமாகத் தமிழ் மருத்துவ நூல்கள் சீர்படுத்தி அச்சிடுதல், மருத்துவத்தைக் கற்பிக்கும் சாலைகளை அமைத்தல், தமிழ் மருத்துவப் பெருமைகளைப் பிரசங்கித்தல், தமிழ் மருந்துகளைக் கண்காட்சி வைத்தல், மருத்துவப் பயிற்சி அளித்துச் சான்றிதழ் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொண்டார். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் சித்த வைத்திய பாடசாலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டார். உலக மொழிகளுக்கும் மருத்துவத்துக்கும் தாயாக விளங்குவன ’தமிழும் தமிழ் மருத்துவமும் ’ என்ற நூல் மூலம் தமிழ் மருத்துவத்தை நிலை நாட்டியுள்ளார்.

வட சென்னையில் பொதிகைச் சித்தர் மரபு என்ற பெயரில் தமிழ் அத்வைத வேதாந்த மரபு நாராயண தேசிகர் அவர்களால் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. மனதைப் பாதுகாக்க வேதாந்த நூலறிவும், உடம்பை அனுசரிக்க தமிழ்ச் சித்த மருத்துவப் பயிற்சியும், மொழிக்கு தமிழ் இலக்கிய நூலாராய்ச்சியும் இந்த மடத்தில் சீடர்களுக்குப் பயிற்றுவித்தனர். இந்த மடத்தில் பயின்றவர்கள் அன்றைய நாளில் சென்னை நகரமெங்கும் இலவசமாகச் சித்த மருத்துவச் சாலைகள் நடத்தி பொதுமக்களுக்கு தர்மத்தின் அடிப்படையில், பிணி என வந்தவர்களுக்கு மருந்துகளை
வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் இரா. முத்துநாகு அவர்களால் எழுதப்பட்டு ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழின் மிக முக்கிய நாவல் “சுளுந்தீ’’. இந்த நாவல் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்போது ஆளப்பட்ட அரசால் தமிழ்ப் பண்டுவச் சித்த மருத்துவ முறைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும், சித்த மருத்துவ ஓலைக்சுவடி ஏடுகள் அழிக்கப்பட்ட விதமும், சித்த வைத்தியம் தெரிந்த பண்டுவர்கள் எதிர் கொண்ட மோசமான பின்விளைவுகளையும் கனகச்சிதமாக ஆவணப்படுத்தியுள்ள விவரண நாவல்.

இந்த நாவலில் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட மிக முக்கிய நோய்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் நோய் தீர்க்க வழிமுறை தந்துள்ளார். நாவலாசிரியர் சித்த மருத்துவப் பரம்பரையில் தேர்ச்சி பெற்றவர் என்பதால், பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை அருமையாக நாவலில் கையாண்டுள்ளார். பன்றிமலை, பழனிமலை, சுருளிமலை, குன்னுவராயன்கோட்டை போன்ற ஊர்கள் சித்த மருத்துவத்துடன் கொண்டுள்ள தொடர்பை நம் கண் முன் நிறுத்துகிறார். பண்டுவ மரபுடன் முடி திருத்தும் நாவிதர்களுக்குத் தமிழ்ச் சித்த மருத்துவ மரபில் காணப்பட்ட ஆழமான அறிவையும் விவரணப் படுத்தியுள்ளார் நாவலாசிரியர்.

சித்த மருத்துவக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடம் முடிவடையும் பட்சத்தில், ஏன் பண்டுவம் என்ற சித்த மருத்துவம் அழிந்தது? என்ற கேள்வி எழாமல் இருப்பது வேதனையானதே. முத்து நாகு எழுதிய நாவலிலிருந்தும் அவரிடம் பேசியதிலிருந்தும் சித்த மருத்துவத்தின் மிக முக்கியமான உப்பு சில விசயங்கள் கீழே காண்போம்.

உப்பு:
உப்பு இதுதான் பல நோய்களுக்கான அடிப்படை மருந்து.

'கடல் ஒட்டிய தேரியில் உப்பு தானா வெளஞ்சு கிடக்கும். அத கண்டுபிடிச்சு உப்பு காய்ச்சும் நுட்பத்த அறிஞ்சு, உப்பு வியாபாரம் செய்து வந்தாங்க குறவர்கள். இதனால் உப்புக்குறவர் என அவர்களுக்குப் பெயர். இந்த உப்பிலிருந்து வெடி தயாரிக்கும் நுட்பத்தை மனித சமூகம் அறிந்தது. இதன் விளைவாக 18ஆம் நுற்றாண்டில் தடை போட்டு கடுமையாக்கினார்கள். அதே போல் வெடியுப்பு என்ற மருத்துவ உப்பு, மலைகளில் தானாக விளைந்து கிடக்கும். இதைச் சுரண்டி அள்ளி வந்து காய்ச்சி வெடியுப்பு தயாரித்தார்கள். இதன் மூலம் வெடி தயாரிக்கும் நுட்பத்தைப் பிரெஞ்சில் கண்டுபிடித்தார்கள்.

தமிழகத்தில் குறிப்பாக சேலம், மதுரை, தேனி மாவட்டத்தில் இயற்கையாக விளையும் வெடியுப்பினையும் தரங்கம்பாடி, திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த பிரஞ்சுக்காரர்கள் வெடியுப்பினை ஏற்றுமதி செய்தார்கள். வெடி தயாரிக்கும் நுட்பம் தமிழகத்தில் ஆண்ட நாயக்கர் அரசுக்கும் தெரியவந்ததால், வெடியுப்பு தயாரித்த குறவர்கள் மீது கைரேகைச் சட்டம் போட்டுத் தடுத்தார்கள். இதனால் வெடியுப்பு என்ற மருந்து சித்த வைத்திய மரபில் அழிந்தது.

இதன் மூலம் வெடி தயாரிக்க முடியுனெ நமது சித்தர்களுக்கும் பண்டுவர்களுக்கும் தெரிந்தாலும், அதை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். பண்டுவர்கள் மூலம் வெடி தயாரிக்க மன்னர்கள் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். குறிப்பாக, கள்ளக்குறிச்சி, வேலூரில் இந்த வெற்றி கிடைத்தது. இதனால் கந்தகம் வெடிக்காகப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை மன்னர் ஆட்சியை எதிர்த்த மக்களும் கையாண்டார்கள். இதனை அறிந்த மன்னர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர மற்ற சித்த மருத்துவர்களைச கொன்றார்கள்.

அடுத்த முக்கியமானது, செந்தூரம் என்ற பஸ்பம். இது தயாரிக்கப் பயன்படும் கந்தகம், பூதம், தாளகம், மனோசீலை, நாவி, கௌரி பாசானம், கல்நார், லிங்கம், வீரம், பூரம், கெருட பச்சை, சீனாக்காரம், வெண்காரம், துத்தம், துருசு, பச்சை துருசு, சாதிலிங்கம், குங்கிலியம், வெடியுப்பு, இந்துப்பு, வளையுப்பு, சவுட்டுப்பு, சாம்பிராணி, தொட்டிப் பாசானன், அபினி மருந்துகள். கந்தகம் : sulphur,தாளகம்: arisenit trisulphidum trisulphuret of arsenic, வீரம் : hydrargyrum subchloride, பூரம் hydrargyrum perchloride corrosive sublimate, பாதரசம் : hydrargyrum mercury quick silver கல்மதம் : asbestos, லிங்கம்: red sulphate, மனோசிலை: arsenic disulphidum bisulphuret of arsenic realgar or red orpiment, படிகாரம் : alumen alum , துருசு : cupri sulphas அல்லது cuprum sulphar cupric sulphate இவை அனைத்தும் பண்டுவ மருந்துகள். இவைகள் தீ பிடிக்கும் வெடிக்கும் தன்மை கொண்டவை என்பதை அறிந்த பிரெஞ்சு, இதில் வெடி தாயாரித்து உலகத்திற்கு ஏற்றுமதி செய்தது.

கருணாமிர்த சாகரம் என்ற இசை நூல் எழுதிய ஆப்ரகாம் பண்டிதர் தேனி மாவட்டம் சுருளி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த சித்திரடம் செந்தூரம் தயாரிக்கும் முறையைக் கற்று அறிந்தார்.

மேல்குறிப்பிட்ட மருந்துகள் மூலம் செய்த செந்தூரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தார். பிரிட்டீஷ் அரசு இவரிடமே பாம்புக் கடிக்கும், வயிற்றுப்போக்கிற்கும் மருந்து வாங்கியது என்ற பிரிட்டீஷார் குறிப்பிலிருந்து சித்த மருத்துவத்தின் பிரமிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சித்த மருந்துகளில் அலோபதி மருந்துகள் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்த பிரெஞ்சுக்காரர்கள், தமிழகத்தில் இருந்த மருத்துவ ஓலைச்சுவடிகளைப் பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்கள் என்பதை ஒரிசா பாலு, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முருகானந்தம் போன்ற அறிஞர்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சித்த மருந்துகள் இல்லாத அலோபதி மருந்துகளே இல்லை. அப்படியானால், சித்த மருத்துவத்தை அழித்தது வியாபார நோக்கத்திற்கு மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

பிரிட்டீஷ் ஆட்சியில் சித்த மருத்துவத்தின் தேவையும், வெடியைக் கட்டுக்குள் வைக்கவும் தேவையிருந்ததால் சித்த மருந்து தயாரிப்பவர்கள் யார் யாரென அடையாளப்படுத்த வேண்டிய தேவைக்காகப் பதிவுச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

விருதை சிவஞான யோகியால் அன்று போட்ட விதை, இன்று சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரி, இம்ப்காப்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் ஆல் போல் தழைத்துள்ளது.
தமிழ் மொழியைப் பாதுகாப்பது போல், நாம் தமிழ் மருத்துவத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும். இன்றைய தி.மு.க.வின் பல அடிப்படைச் சித்தாந்தங்கள் விருதை சிவஞான யோகியாருடைய தமிழகவொழுகு மக்கட் சட்டம் என்ற நூலில் இருந்து கையாண்டுள்ளார்கள் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை. இரா.நெடுஞ்செழியன் எழுதிய தி.மு.க. வரலாறு நூலில் சிவஞான யோகியாருடைய திருவிடர் கழகம் குறித்து பதிவு செய்துள்ளார்.

இரெங்கையா முருகன்,
ஆய்வறிஞர்.
20.04.2019.

/ ஏர் இதழ் வெளியீடு / 21.04.2020 /