பொதுவாக நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை.
சுஜாதாவோடு அது மறந்து விட்டது.
சாருவையும் எஸ்ராவையும் படிக்கும் மனநிலை இப்போது ஏனோ வருவதில்லை. இத்தனைக்கும்
சாருவின் தீவிர வாசகன் நான்.
ஒருகாலத்தில் அவருடைய பிளாக்கை காலையும் மாலையும் இரவு என மூன்று நேரமும் திறந்து பார்ப்பவன். சாருவின் பதிவுகள் வராவிட்டால் ஏதோ இழந்தது போலிருக்கும். பின்னர் அவருடைய அதீதமான self boasting என் மனநிலையை பிறழ வைத்து விடுமோ என பயமே வந்துவிட்டது. விக்கியும் கூகுளாண்டவரும் அவருக்கு நிறைய அருள் புரிந்துள்ளனர் என தெரிந்த பிறகு சாரு பூசாரியை விடுவது இயல்பு தானே.
2017 இல் அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் கைகளில் இருந்ததால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தேன். வித்தியாசமான நாவல் பரபரப்பான ஆங்கில நாவல் மாதிரி வெகு இயல்பான சுயநல மனிதர்கள் வியாபார உத்திகள் என நகர்ந்தது.
பின்னர் Shankar A வினுடைய தொடர் நாவல். விறுவிறுப்பான ஒன்று.
மிக நீண்ட நாள் கழித்து
வழக்கறிஞர் Suthakaran Inthiran புண்ணியத்தால் இரண்டு மூன்று நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பரிந்துரை தவிர்த்து நான் தொட்டது பாலகுமாரனின் உடையார் ..
கைசுட்டது தான் மிச்சம்.
மீண்டும் தெனாலிராமனின் பூனையானது போலிருந்தது.
சுதாகரனிடம் நான் கேட்டது ஏர்மகராசனின் தமிழ் எழுத்துகள் பற்றிய நூல் ஒன்று. ஆனால் அவர் தருவித்தது
சுளுந்தீ.
புத்தகம் வந்த இரண்டு மூன்று நாட்கள் வாசிக்கவேயில்லை . தமிழ் இந்து.. Lakshmi Gopinathan ஆகியோரின் நூல் விமர்சனங்கள் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.
நேற்று வீட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். அதன் பிறகு கீழே வைக்கவில்லை. வைக்க முடியவில்லை. எவ்வளவு செய்திகள். டாவின்சி கோடுக்கு பிறகு ஒரே நாளில் வாசித்த நூலிது.
பன்றி மலை சுவாமிகள் பற்றி செவிவழி செய்திகள் தான் அறிந்துள்ளேன். இதில் அவரும் ஒரு பாத்திரம்.
அல்கெமி, அரபு நாடுகளின் வேதியல் வெளிப்பாடு என்றால் வெடியுப்பும் கந்தகமும் தமிழ் சித்த மருத்துவத்தின் பிள்ளைகள்.
பாஷாணம் எனும் விஷப்பொருளை மருந்தாக்க தெரிந்தவன் தமிழன்.
மேலை நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள் flora's and faunas களை தொகுக்கும் போது ஒரு தமிழ் மருத்துவ சமுதாயத்தை சார்ந்த நபர் துணை நின்றது மறந்த வரலாறு. அவர் பெயரும் இராமன் என்றே நினைக்கிறேன்.
சுளுந்தீயில் தான் எத்தனை செய்திகள்..
தமிழ் இந்துவில் வந்த விமர்சனத்தில் தொ.பரமசிவன் நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல என எழுதியிருந்தார்கள்.
அதில் ஒரே ஒரு திருத்தம்
தொ.பரமசிவனும் ஆ.சிவசுப்பிரமணியனும்
இணைந்து எழுதிய நாவல் என கண்டிருப்பதே சரி என்பது என் கருத்து.
வெங்கம்பய என்பது நம் காதுகளில் அவ்வப்போது விழும் வசைச்சொல் அதன் பொருள் புரியாமல் பலபேரும் பயன் படுத்தி வருகிறோம். இந்த நாவல் வாசித்த பிறகு தான் பொருள் தெரிந்தது.
Necrophilia என எதிராளிக்கு தெரிந்தால் நம் பாடு என்ன ஆகும்.
நிலவியல்.. வானியல்.. மருத்துவம் .. வேதியல்.. வாய்மொழி வரலாறு.. சாதிய வேறுபாடு .. போர்முறைகள்.. சமூக பொருளாதாரம் என எல்லா களங்களையும் தொட்டுவிட்டு போகிறார் நூலாசிரியர் இரா. முத்துநாகு.
நீ சிரைக்க தான் லாயக்கு என எவரையும் திட்டிவிட முடியாது. சிரைப்பதில் கூட எவ்வளவு நுணுக்கங்கள்.
உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நாவல்களில் ஒன்று. நாவல் படிப்பதில் ஒரு அறிவும் கிட்டாது அவை வெறும் உணர்ச்சி குவியல்களே என எண்ணும் என் போன்றவர்களின் கருத்தை சுக்கு நூறாக்கி விட்டுப்போன நூலிது.
காப்பியடித்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி நாவல் எழுதி அதையும் அரசியல் ரீதியாக புரமோட் செய்து அகா "டம்மி " விருது வாங்குவோர் மத்தியில் தனது உச்சபட்ச உழைப்பை அறிவை கொட்டியிருக்கும் முத்துநாகுவின் அரும்பணி போற்றுதலுக்குரியது.
வாசித்துவிட்டோம் என வெறுமனே கடந்து போகமுடியவில்லை .
எத்தனை மரபார்ந்த அறிவை இழந்திருக்கிறோம் என்ற பெருஞ்சுமை மனதில் ஏறுகிறது.
மாடனின் குதிரையாகவே ...
நாவல் தந்த எண்ணங்களை சுமந்து அலைகிறது மனம்.
கொட்டும் மழையில் கூட அணையாது நிற்பது சுளுந்துக்குச்சியின் தீ.
காலமழை எத்தனை பெய்யினும்
தமிழர் சமூக வரலாற்று நெருப்பை காத்து நிற்கும் சுளுந்தீ.
எளிமை அருமை.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு