புதன், 16 நவம்பர், 2022

மாவீரர் நினைவேந்தும் நடுகல் :அ.ம.அங்கவை யாழிசை


என்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான புத்தகங்கள் உண்டென்றால், அதில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது தீபச்செல்வன் எழுதிய 'நடுகல்' என்னும் புத்தகம்தான். இது எம் தமிழ் மண்ணைப் பற்றியது; எம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பற்றியது என்பதால்கூட அப்படி இருக்கலாம்.

தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைப் பதிவாக, கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மேதகு 1. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த படம் அது. ஏனெனில், எம் தலைவரைப் பற்றிய படம். ஒரு போராளி உருவான கதையைப் பேசியிருந்தது அப்படம். 

அந்தப் படத்தைப் பார்த்து முடித்த உடனே, 'ஈழத்தைப் பற்றியும் - ஈழப் போராட்டங்கள் பற்றியும் நம்மிடம் புத்தகங்கள் இருக்கிறதா?' என, அப்பாவிடம் கேட்டேன். 'ஈழம் குறித்து நிறையப் புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அதையெல்லாம் நீயும் தம்பியும் படிக்க வேண்டும்' எனக் கூறினார். 

எங்களது 'செம்பச்சை' நூலகத்தில் ஈழத்தைப் பற்றிய நிறைய நூல்கள் இருந்தாலும், ஈழத்தைப் பற்றியான வரலாற்றைக் காட்டிலும், ஈழத்து மக்களின் துயர்மிகுந்த வாழ்க்கைக் கதைகளை முதலில் படிக்க வேண்டும் எனக் கூறிய அப்பா, அடுத்த நாளே நான் படிப்பதற்காகப் பத்துப் புத்தகங்களைக் கொடுத்தார். அந்தப் பத்து நூல்களுள் இந்த 'நடுகல்' புத்தகமும் கைக்கு வந்தது. 'நடுகல்' எனும் தலைப்பைப் பார்த்தவுடனே, அதைப் படிக்க வேண்டும் எனும் தூண்டல் வந்துவிட்டது. 

ஓராண்டிற்கு முன்பு படித்த புத்தகம்தான் என்றாலும், இன்றும் அதன் கதைகளையும் வரிகளையும் அசைபோடும் போது ஈழத்தமிழர் மனத்தின் ஓலம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஈழத்தைப் பற்றியும், எம் தலைவரைப் பற்றியும், அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றியும் சிறு வயதில் இருந்தே என் தந்தையாரின் வழியாக நிறைய அறிந்திருக்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றியும் நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், இப்புதினம்தான் கண்கூடாகக் காண்பதைப் போல் காட்சிப்படுத்தியதை உணர்ந்தேன். 

இந்த நூலைப் படிக்கும்போது கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். நிகழ்வுகளை விவரிக்கும் வரிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, ஈழத் தமிழ் மக்களின் துயர்மிகு வாழ்வை வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவேன். 

பல நேரம் நூலின் வரிகளை உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. வாசிப்பதற்கே இத்தனை துயரம் ஏற்படுகிறது என்றால், அந்தத் துயரங்களையெல்லாம் நேரில் அனுபவித்த தமிழர்களின் வலிகள் மிகக் கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணத்தோடு போரிட்ட தமிழ் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் போராட்ட வாழ்வியலையும் கதை சொல்லல் வழியாகக் கட்டமைத்திருந்தது நடுகல். 

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, தந்தையின் ஆதரவு ஏதும் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாட்டை விவரிக்கிறது நடுகல்.

போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் தொன்மைப் பண்பாடுகளுள் ஒன்று. தீபச்செல்வனின் நடுகல்லானது, ஒரு போராளியைப் பற்றிய நினைவுகளைச் சுமந்திருக்கும் புதினமாய் வந்திருக்கிறது. 

அதாவது, ஈழப்போராட்டத்தில் தன் முதல் மகன் களப்போராளியாகி வீரச் சாவடைய, வீர மரணம் அடைந்த அவனை நினைவு கூற ஒரு புகைப்படம்கூட கைவசம் இல்லாத நிலையில், அவனைப் பற்றிய நினைவுகளையே நடு கல்லாய்ச் சுமந்து வருகிறாள் ஒரு தாய். மகனைப் பறிகொடுத்தவள், தன் மகனின் முகம் பார்க்க வைத்திருந்த புகைப்படங்களையும் தொலைத்த வலியோடு கதை முழுதும் பயணிக்கிறார் அந்தத் தாய்.

நேசித்தவனை இழப்பது துயரம் என்றால், அவனுடைய நிழற்படத்தையும்கூட இழப்பது மிகப்பெரும் துயரம்.

இதில், கதை சொல்லியாக வரும் இரண்டாவது மகன் வினோதன், தன் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து இருந்து ஏமாந்து விடுகிறான். அவன் அண்ணன் இல்லாமலும்,போரின் போது தங்கை மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயரும் போதும் வழிநெடுகப் போரின்போது கொல்லப்பட்ட மனித உடல்களே எங்கும் கிடந்ததைப் பற்றி வினோதன் கூறும் பகுதிகள் இரத்த சாட்சிகளாய் இருக்கின்றன. வீதிகள் முழுக்க சருகுகள் கிடக்கும் காட்சிகள் போல சனங்கள் செத்துக் கிடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

போரின் போது தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள் அனைத்தையும் மிக வேதனையோடு விவரித்திருக்கும் அந்தப் பகுதிகள் கண்ணீரும் வலியும் நிரம்பியவை.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியிலும், சாதிக்க வேண்டிய வயதில் சவப்பெட்டியிலும் இருந்த நிலைமைகள் இனி வேறு எந்த இனத்திற்கும் வரக்கூடாது.

சொந்த நாட்டில் அடிமையாகவும் அகதியாகவும் வாழும் அவல நிலையில் எம் உறவுகள் பட்ட சித்திரவதைகள்தான் என்னென்ன? அந்த மனிதமற்ற சிங்கள இராணுவ மிருகங்களின் அத்துமீறல்கள் மரணத்தைக்கூட பயமற்றதாக்கி விட்டிருந்த நிலையை என்னவென்பது?

போரில் வீரச் சாவடைந்தவர்களுக்கு மரியாதை செய்யவோ விளக்கேற்றவோ கூடாது என்று சிங்கள இராணுவம் தடை போட்டிருப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சேதப்படுத்தியிருக்கும் சிங்கள இராணுவம் செய்த பயங்கரவாதங்களை விவரிக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கின்றது. மனம் குமுறுகிறது. ஓர் ஆற்றாமை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது.

இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது மகன் வீரச் சாவடைந்த பிறகு, அவனது நினைவாக ஒரு கல்லை நட்டு, அந்தக் கல்லையே மகனாகப் பாவித்துக் கொண்டிருப்பார் அந்தத் தாய். மகனாகப் பாவித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லை சிங்கள இராணுவ வீரன் உடைத்து விடுவான். அப்போது அந்தத் தாய் கூறும்போது "எங்கட பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது". அந்தத் தாயின் உணர்வுதான் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் உணர்வாக இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் மாவீரர் நினைவேந்தல் வழிபாடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நூலின் கதையை நகர்த்திப் போவது பிரசன்னா என்ற போராளி வெள்ளையனைப் பற்றிய நினைவுகள்தான். சொல்லப்போனால், இந்த நூல் முழுக்க போராளி பற்றிய நினைவுகளே நிரம்பிக் கிடக்கின்றன. மகனை இழந்த தாயின் தவிப்பு, அண்ணனை இழந்த தம்பி மற்றும் தங்கையின் சோகம் என, உறவுகளை இழந்தவர்களின் வலியை மிகுந்த வலியோடு படைத்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன்.

போராளி வெள்ளையனின் தம்பியாக வரும் வினோதன், தன் அண்ணன் படத்தைத் தேடி கதை முழுக்கத் தேடுவான். ஆனாலும் அது கிடைக்காத போது அவன் கலங்குவது வேதனை அளிக்கும்.

வீரச்சாவடைந்த போராளி அண்ணனின் ஒளிப்படத்தைத் தேடியலையும் தம்பியின் தவிப்பும் நடுகல்லில் பரவிக் கிடக்கிறது.

நடுகல் என்றாலே, போரில் பங்கேற்ற போராளிகளின் கதைகளே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால், தீபச்செல்வனின் நடுகல் நூலானது, வீரச்சாவடைந்த போராளிகள் என்பதையும் தாண்டி, அந்தப் போராளிகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் நினைவுகளையும் தவிப்பையும் பேசியிருக்கிறது. மேலும், வீரச் சாவடைந்த போராளிகள் - போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளையும் கனவுகளையும் தொலைத்த குடும்பங்களின் கண்ணோட்டத்தில் நடுகல் எழுப்பியிருக்கிறது. அதோடு, போரினால் நிராயுதபாணியான மக்களின் துயரப் பக்கங்களையும் நடுகல்லாய்ப் பேசுகிறது. 

இன்றும் கூட உலகில் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, நடுகல் புத்தகமானது அவர்களின் கடந்த கால இன்னல்களைப் பேசும் புத்தகமாகத்தான் இருக்கும். காலங்கள் எத்தனை கடந்தாலும் அவர்களுக்கு அது என்றும் மாறாத காயங்களாகத்தான் இருக்கும்.

நினைவுகள் வலிமையானவை. ஏனெனில், அந்நினைவுகள் ஒரு காலத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்பவை. அதே நினைவுகள்தான் கசப்பான காலத்தையும் இரத்தம் படிந்த வரலாற்றையும் மாற்றி எழுதுவதற்கான உந்துதல்களைத் திரும்பத் திரும்பத் தந்து கொண்டிருக்கும். அந்தவகையில், ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் பற்றிய நினைவேந்தல்கள் வழிபாடு மட்டுமல்ல; தமிழீழத் தாயக வேட்கையை அணையாமல் காந்து நிற்கும் பேருணர்வாகும். 

மாவீரர்களை நினைக்கும்போதெல்லாம், "எவன் ஒருவனைக் கண்டு உன் எதிரி அஞ்சுகிறானோ, அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன். என்றேனும் ஒரு நாள் பழி தீர்ப்போம்; துரோகம் களைவோம்" என்ற வாசகங்கள்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அன்று என் தலைவரின் படையைக் கண்டு அஞ்சினார்கள். இன்று அவர் வாழ்ந்த நிலத்தின் செங்காந்தள் பூவும் மாவீரர் கல்லறைகள்கூட அவர்களை அஞ்ச வைக்கிறது எனில், மாவீரர்களைப் பற்றிய நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை அறியமுடியும். அந்த நினைவுகளும் இன்னொரு வகையில் நடுகற்கள்தான்.

நினைவுகளில் உறைந்து கிடக்கும் உணர்வுகளைச் சொற்களால் ஆன நடுகல்லாய் மிக நேர்த்தியான கதைசொல்லல்வழி கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன். இப்படைப்புக்காக, தீபச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களின் கனவும் ஈகமும் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்.

அ.ம.அங்கவை யாழிசை

15.11.2022


ஞாயிறு, 6 நவம்பர், 2022

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட : பேரா சே.கோச்சடை


பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் 

கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும்.அவருக்கு

 வீர வணக்கம்.

சனி, 5 நவம்பர், 2022

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி : இரா.மன்னர் மன்னன்


இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

கனத்த மனதுடன்,

- இரா.மன்னர் மன்னன்.

வெள்ளி, 4 நவம்பர், 2022

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும் : பேரா டி.தருமராஜ்


பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார். இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு. இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும். இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார். பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது. வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை; அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம். இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை. உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார். ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன. உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது. அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை. அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழ் மகனின் படைவீடு: தமிழர் ஆட்சி வீழ்த்தப்பட்ட வரலாறு பேசும் நூல் :- அ.ம.அங்கவை யாழிசை



கி.பி14ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த ஒரே தமிழ்ப் பேரரசு, சம்புவராயர்களின் படை வீடு அரசாகும். தமிழகத்தின் மாபெரும் பேரரசுகளான சேர, சோழ, பாண்டிய அரசுகள் வீழ்த்தப்பட்ட பிறகு எஞ்சியிருந்த ஒரே தமிழ்ப் பேரரசும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. 

இந்தச் சிறப்புமிக்க சம்புவராயப் பேரரசின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழ் மண்ணை அந்நியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பொறுப்புடன் போராடியதன் பின்புலம், அந்தப் பொறுப்புணர்வை அவர்கள் எப்படிச் சிறப்புறச் செய்தார்கள், அந்நியப் படையெடுப்பாளர்களால் அவர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை விரிவாகப் பேசியிருக்கும் புதினம்தான் தமிழ் மகன் எழுதிய 'படைவீடு' நூலாகும்.

சம்புவராயப் பேரரசு வீழ்த்தப்பட்ட பிறகு, சாதிப் பிரிவினையின் விபரீத விளைவுகள், தமிழ் மண்ணில் அரங்கேறிய அயலவர் பண்பாட்டுத் திணிப்பு, தமிழ்ப் பண்பாட்டுத் திரிபு, தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு பற்றிய நிறைய தரவுகள் இந்நூலில் உள்ளன. மேலும், தமிழ் மண்ணில் - தமிழர் ஆட்சியில் தமிழ் தழைத்திருந்த பொற்காலத்தைப் பற்றி விவரிக்கும் ஆகச் சிறந்த படைப்பாகப் படைவீடு உருவாகி இருக்கிறது.

தொண்டை மண்டலத்தில் தமிழ்ப் பேரரசு ஆட்சி புரிந்து வந்த வீர சம்புவராயரின் மகன் ஏகாம்பரநாதன். தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்த ஏகாம்பரநாதன், தனது ஆட்சிக் காலத்தில் காஞ்சியை மீட்டு வென்று மண் கொண்டார் என்ற பட்டம் பெற்றவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் மண்ணின் மீது தெலுங்கின விஜயநகரப் பேரரசின் முதல் படையெடுப்புத் தாக்குதல் புக்கர் தலைமையில் நடந்தது. ஆனால், தொண்டை மண்டல எல்லையைக் கூட அவர்களால் நெருங்க இயலாமல் திரும்பி விட்டனர். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புக்கரின் மகனான குமாரகம்பணன் ஒரு லட்சம் வீரர்களுடன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்து வருகிறான். விரிஞ்சிபுரத்தையும் காஞ்சியையும் ஒரே சமயத்தில் தாக்கி, காஞ்சியைக் கைப்பற்றி, பிறகு அங்குள்ள பிராமணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு படைவீடு மீது தாக்கினான். அப்போது சம்புவராயப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தவர் ஏகாம்பரநாதனின் மூத்த மகனான மல்லிநாதர் ராசநாராயணர் ஆவார். விஜயநகரப் பேரரசின் அந்தப் படையெடுப்பை ஓர் அன்னியப் படையெடுப்பாகவே அவர் கருதினார். அதற்குக் காரணம் மொழி மட்டுமல்லாது, அவர்களது சமயநெறிகளும் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, விஜயநகரப் பேரரசின் சமயநெறிகள் தமிழ் மரபிற்கு விரோதமாக இருப்பதைச் சம்புவராயர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.

சம்புவராயத் தமிழ் மன்னர் மல்லிநாதர், விஜயநகரப் படைகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு முதல்நாளில் தமது படை வீரர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறார். அதன்படி, போரில் வீழ்ந்து போகும் தருணம் வருமாயின், எதிரியின் கைகளில் ஒருபோதும் சிக்கக் கூடாது என்றும், அவர்களிடம் சிக்கி அவமானப்படுத்தப்படும் நிலை நம் வீரர்களுக்கு வரக்கூடாது என்றும், ஆகையால், அவர்களைப் பள்ளத்தாக்கில் பாய்ந்து வீர மரணம் எய்தக் கட்டளை இடுவார். அதோடு, தானும் படை வீரர்களுடன் சேர்ந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து மறைந்து விடுவார். தமிழ் மண்ணை ஆண்ட கடைசித் தமிழ்ப் பேரரசு மறைந்ததாகப் படைவீடு முடிகிறது.

இப்புதினத்தில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் போர்க் குடிகளான சம்புவராயர்கள் போரை விரும்பாதவர்கள். ஏனெனில், மக்களின் அமைதியைக் காக்க விரும்பியவர்கள். அந்த நூற்றாண்டில் நடந்தது மூன்றே போர்கள். காஞ்சியை மீட்டது, முதல் தெலுங்குப் படையெடுப்பில் புக்கரை விரட்டி அடித்தது, பிறகு அவருடைய மகனிடம் தமிழ் மண்ணை இழந்தது. இப்படியாகத் தமிழ் மண்ணில் நிறுவப்பட்ட தெலுங்கு ஆட்சி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு வழிகோலியிருக்கிறது.

தெலுங்கு ஆட்சி, அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சி தமிழ்மண்ணில் நிலைபெற்றதற்கு ஒரு முக்கியப் பங்கு வைப்பது 'சாதிக்கொரு புராணம்' என்னும் கோட்பாடு ஆகும். இது சாதி அல்லது மதத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. காஞ்சியைக் கைப்பற்றிய விஜயநகர அரசர்களுக்கு அங்குள்ள பிராமணர்கள் போதித்த கோட்பாடு இது. இந்தக் கோட்பாடுதான் சாதியை மட்டுமல்லாது, சாதி ஏற்றத்தாழ்வையும் நிலைபெறச் செய்ததும், இன்னும் செய்து கொண்டிருப்பதற்குமான பின்புலமாகும்.

இப்படைப்பை உள்வாங்கும் வாய்ப்பு, பெரும் பேறு என்றுதான் கருத வேண்டும். ஏனெனில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சம்புவராயர்கள், படைவீட்டில் இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்புலத்தோடும் அறிமுகத்தோடும் என் மனக்கண் முன் வருவார்கள் என்று எண்ணியதில்லை. இந்தப் படைப்பை முழுமையாக வாசித்த போதுதான் சம்புவராயர்கள் பற்றிய முழுமையான படைப்பாக வியக்க வைத்தது. 

சம்புவராயர்கள் மாபெரும் பேரரசாக உருவெடுத்திருந்தது பெருமையாக இருந்தது. அதேசமயம், அவர்கள்தான் எம் தமிழ் மண்ணின் கடைசித் தமிழ் ஆட்சியாளர்கள் - அரசர்கள் என்பதறியும்போது மனது இறுக்கமாகிப் போனது.

தமிழக மன்னராட்சி வரலாற்றில் இதுவரை அறியப்படாத - மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட தரவுகள் இந்தப் புதினம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் வாழ்வியல் மட்டுமல்லாது, மக்களின் வாழ்வியலையும் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இந்நூலில் நிறையவே கிடைத்தது.

சம்புவராயர்கள், தங்கள் ஆட்சியின் இறுதிவரை தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நெறிகளையும் காப்பதற்காகப் பெரும்பாடுபட்டுள்ளனர். அதுவும் பெரும் போராட்டம்தான். அது, இக்காலத் தமிழ்த் தேசியக் கொள்கை அரசியலை நினைவூட்டுகிறது. 

சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போது பிறந்த சிக்கல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் தமிழர் ஆட்சியை - தமிழரை - தமிழை வீழ்த்த வல்லதாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் வகுத்த அந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு எவ்வளவு பயங்கரமானது என்பதற்கு முழு சாட்சியாக இருக்கிறது இந்தப் படைப்பு. பிற்காலத்தில், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கும் இதுவே அடிப்படையாக இருந்திருக்கும் அல்லது இதே பிராமணர்கள்தான் அதைப் பரிந்துரை செய்திருப்பார்கள் என்ற எண்ணத்தை மறுக்க முடியவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர ஆட்சி அமைத்தால், கன்னிகாதானம் செய்யும் முறையைக் கட்டாயமாக்குவேன் எனப் பிராமணர்களிடம் சபதம் செய்கிறான் தெலுங்கு மன்னன். வரதட்சணை எனும் பெண்ணடிமைத்தனமும் இந்த ஆட்சியில்தான் தொடங்கியிருக்கிறது. 

கன்னியாதானம் என்பது, பெண் வீட்டார் செல்வத்தை ஆண் வீட்டாருக்குக் கொடுத்துத் திருமணம் செய்வது ஆகும். இது தமிழர் முறை அன்று. தமிழர்கள் முறைப்படி, ஆண் வீட்டார் தான் பெண்ணுக்குச் செல்வம் கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை இந்நூல் வழியேதான் அறிந்துகொண்டேன்.

'தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்' என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது இந்நூல். 

"எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. தோல்வி ஒரு சம்புவராயனுக்கு அல்ல… தமிழ் மண்ணுக்கு என்பதை நினைவில் வையுங்கள்! தமிழ் மண்ணின் கடைசிச் தமிழரசாக நம்முடைய ஆட்சியே இருந்தது என்பதை உணரும்போது வருந்தப்போகும் தமிழர்களை எண்ணியே வருந்துகிறேன்…" இவை, கடைசித் தமிழ் மன்னனாக வரும் மல்லிநாத ராசநாராயணனார் பேசியதாக வரும் வரிகளாகும்.

இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டது. அந்தளவுக்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. சேரர் ஆயினும், சோழராயினும், பாண்டியராயினும் சம்புவராயர் ஆயினும், இறுதியில் தோற்றது யார்? எனும்பொழுது, தமிழர்கள்தான் எனும்போது மனக்கவலை மறைய மறுக்கின்றது. அது, சம்புவராயர்களின் வீழ்ச்சி மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டின் பெரும் வீழ்ச்சியும் ஆகும்.

இப்புதினத்தில் காட்சிப்படுத்தப்படும் அரசியலுக்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும், காலத்தைத் தவிர வேறு ஒன்றும் வேறுபடவில்லை. அதே நிலைதான் இப்போதும். அது, தமிழை எப்பாடுபட்டாவது காக்க வேண்டிய நிலை.

படைவீடு புதினத்தின் மூலம் தமிழுக்குப் பெரும் பண்பாட்டுத் தரவு கிடைத்துள்ளதாக எண்ணுகிறேன். வேறு எவரும் செய்யாத பெரும் தொண்டை இப்புதினத்தின் ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். 

தமிழர் வரலாற்றில் கடைசித் தமிழராட்சியின் தோல்வியான பக்கங்கள் மிகுந்த வலியைத் தந்திருக்கிறது; கவலை அளிக்கிறது என்றாலும், அக்காலக் கட்டத்தை இருட்டிலிருந்து மீட்டுத்தந்த ஆசிரியர் தமிழ் மகன் அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய நன்றி. 

அ.ம.அங்கவை யாழிசை

01.11.2022