வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

தெற்காசிய அரசியல் சதுரங்கமும், தமிழர் தற்காப்புப் போரின் அவசியமும்: இயக்குநர் தங்கம்


எல்லாவித அடையாளங்களையும் உதறுவது தான் ஒருவனை மானுடனாக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மகா மனிதாயம்.

- பிரமிள்.

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று கவி பாடப்பட்ட நிலம்; இனி, 'வாழ்வதற்கு வக்கற்ற சுடுகாடு' என்று கவி பாடலாம். அப்படி ஒரு சீரழிவைச் சந்திக்கப் போகிறது தமிழகம். அப்படி ஒரு சீரழிவுக்கு நானும் நீங்களுமே முதன்மைக் காரணமாவோம் என்பதை முதன்மையாக ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் நமக்கு வரலாற்று விழிப்பு இல்லை. இங்கு வரலாறுதான் அரசியல். தமிழர் வரலாற்றைக் குலைப்பதும், வரலாற்றை சிதைப்பதும், வரலாற்றை திரிப்பதும், வரலாற்றை மறைப்பதும், வரலாற்றை அழிப்பதும் அரசியல். தமிழ்ச் சமூகத்தை வரலாற்று மயக்கத்திற்குள் ஆழ்த்திவிட்டுத் தமிழரை வென்று விடலாம் என்பதுதான் திட்டம். இப்படி ஒரு வரலாற்றுத் தாக்குதலுக்கு ஆட்பட்ட மக்கள் திரள், தமது எந்த அடையாளம் அழிக்கப்படுகிறதோ அந்த அடையாளத்தைப் பேணுவதற்காக, அந்த அடையாளத்தை முன்னிறுத்தி ஓராற்றலாகத் திரள்கிறது. இந்தத் திரட்சியை இன்ன வித அடையாளமாக - அதாவது தமிழர் என்ற அடையாளமாக - உலகோர் ஏற்க வேண்டும் என்று உலகோரிடம் விண்ணப்பிக்கிறது. இந்த விண்ணப்பம், குறுகின வாதமல்ல. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற விழுமியத்தை நனவிலி மனதிலிருந்தே பேணி வருகிற ஒரு மக்கள் திரளிடம் இந்த விழுமியத்தைச் சுட்டிச் சுட்டி, இந்த மக்கள் திரள் ஒன்றுதிரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கின்றன அழிவாற்றல்கள். அந்த அழிவாற்றல்களின் தந்திரத் தாக்குதல்களிலிருந்து சந்ததியைக் காப்பதற்காகத்தான் தமிழர் தம்மைத் ‘தமிழர்’ என்கின்றனர். எனவே தமிழர் என்று தம்மை அழைத்துக் கொள்வதை, குறுகின வாதம், இனவெறி என்றெல்லாம் குறிப்பிடுகிற அந்த மாய்மாலக்காரர்கள் இனிமேல் அப்படி குறிப்பிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழர் தம்மைத் 'தமிழர்' என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுதிலெல்லாம் 'நீ தமிழன் அல்ல திராவிடன்' என்று திரிக்கின்றனர். 'நீ தமிழன் அல்ல, இந்து' என்று அதிகாரம் செலுத்துகின்றனர். 'யார் தமிழர்?' என்றுவேறு வினாத் தொடுக்கிறார்கள். சப்பான் மொழி பேசும் ஒருவர் தன்னை சப்பானியர் என்று அழைத்துக்கொள்வதையும், பிரெஞ்சு மொழி பேசும் ஒருவர் தன்னை பிரெஞ்சுக்காரர் என்று அழைத்துக்கொள்வதையும் ஏற்றுக் கொள்கிறவர்கள், தமிழர் தம்மைத் 'தமிழர்' என்று அழைத்துக் கொள்ளும்போது மட்டும் பொங்கி எழுகின்றனர். 'இனவாதம்' என்கின்றனர். 'இனவெறுப்பு’ என்கின்றனர். இனவெறி' என்கின்றனர். 'குறுகிய மனப்பான்மை' என்கின்றனர்; இன்னும் என்னென்னவோ! மேற்படி சப்பான்காரரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும், இன்னபிற தேசத்தாரிடமும் சென்று இப்படித் திரித்துரைக்க இயலுமா? இயலாது. ஆனால் தமிழகத்தில் இயலும். காரணம் - கருத்தியல் மயக்கமும், வரலாற்று போதையும் தமிழரின் தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில், மிகத் திட்டமிட்டு தமிழ்ச் சமூகத்திற்குள் கருத்தியல் மயக்க மருந்துகளும், வரலாற்றுப் போதை மருந்துகளும் செலுத்தி தமிழ்ச் சமூகத்தை வரலாற்று விழிப்பற்ற மக்கள் கூட்டமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்த மக்களைக் கருத்தியல் மயக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும், வரலாற்றுப் போதையிலிருந்து தெளிவிப்பதற்குமான மாற்று மருந்துகள் தரப்படும்போதெல்லாம், ‘தமிழ்ச் சமூகத்திற்குள் நஞ்சு புகட்டப்படுகிறது’ என்கிறார்கள்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டுத் தமிழரது வரலாற்றில் , முள்ளிவாய்க்கால் இனவழிப்பு ஆண்டாகிய 2009 துவங்கி 2019 வரையிலான இந்தக் காலகட்டமானது ‘தலைமை நீக்கம் செய்யப்பட்ட’ தமிழ்ச் சமூகத்தின்’ இருண்டகாலமாகும்.

முதலில், தமிழர் தம்மைத் தமிழர் என்று அழைத்துக்கொள்வதை இனவாதம் என்றும், இனவெறுப்பு என்றும், இனவெறி என்றும், குறுகிய மனப்பான்மை என்றும் கருத்துரைப்பவர்களுக்கு ஒரு விளக்கம். தனித்துவமான இயற்கையமைப்புகள் கொண்டு விளங்கும் நிலப்பகுதி ஒன்றில், அந்த நிலத்திற்கேயுரிய தட்பவெப்பம், பருவநிலை, பயிர்கள், உயிர்கள் ஆகியனவற்றை இயற்கை வடிவமைத்திருக்கிறது. இந்த இயலொழுங்கிலிருந்து தனது வாழ்வைப் பெற்றுக் கொள்கிறது ஒரு மனிதத் திரள். தனக்கென்று ஒரு மொழியை, பல்துறை அறிவை, வாழ்வியலைக் கண்டடைந்து சந்ததிப்பெருக்கம் செய்கிறது. சந்ததிப் பெருக்கத்தின்போது எதிர்கொள்கிற வரலாற்றுச் சவால்களைச் சந்தித்து மீள்கிறது. இந்த வரலாற்றுச் சவால்கள், குறிப்பிட்ட அந்த மனிதத் திரளுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கும் பொழுதில், பிற மனிதத் திரளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொண்டு சந்ததியைத் தழைக்கப் பண்ணுவதற்காக எண்ணற்ற நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறது. இப்படிக் கற்றுக்கொண்டவற்றைக் கடைபிடிக்கிறது. கடைபிடித்தவற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்துகிறது. இந்த மரபு, வேறொரு மனிதத் திரளின் மரபிலிருந்து வேறுபட்டதாகும். இந்த வேறுபட்ட தன்மையே அந்த இனத்தின் தன்மையாகும். ('இனம்' என்ற சொல்லை விளக்கப் புகுந்தால் ஒரு நூலளவு மிகும் என்பதால் விளக்கம் நிறுத்தப்படுகிறது.) அந்தத் தன்மையைக் கொண்டு, அந்த மனிதத் திரள் தன்னை அழைத்துக் கொள்வதில் பிழையொன்றுமில்லை. ஆனால் இந்த வேறுபட்ட தன்மையை, தன்மையாக மட்டுமே புரிந்து கொள்வதை விடுத்து, கூட்டகந்தையாகவும், வக்கிரமாகவும் உருமாற்றிக் கொள்ளும்போது இனக்கேடுகள் பிறப்பிக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்காலில் பார்த்தோம். உலகெங்கும் காண்கிறோம். ஹிட்லர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஹிட்லர் என்றொரு வக்கிரம் பீடித்த மனநோயாளி செத்துப் போன பின்னர், உருவாகி வந்ததொரு உலக ஒழுங்கில் நுட்பங்கள் மிகுந்த நவீன இனக்கொலை வடிவங்களைக் கண்டடைந்தனர் இனவெறியர்கள். பூமிப்பந்து நெடுகிலும் இனவெறிக் கொலைகளை இன்னமும் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றனர் இந்த இனவெறியர்கள். நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழரை வதைத்துத் துன்புறுத்தி சிதைத்து கொன்றிருந்தது சிங்கள பௌத்தம். உண்மையில் சிங்கள பௌத்தம் என்பது வெற்று முகமூடிதான். மிதமிஞ்சிய பொருள் வேட்கையும், மேலாதிக்க அகந்தையும், இனவக்கிரமும், தாழ்வு மனப்பான்மையும் உள்ளடக்கமாகக் கொண்ட உலக வல்லாதிக்கங்களின் ரத்தக்காட்டேரி முகங்களை மறைத்துக் காத்தது சிங்கள பௌத்த முகமூடி. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்றதொரு வரலாற்று அநீதியின் மீது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரு முத்திரை பதித்து, அரசு பயங்கரவாதத்தையும், வல்லாதிக்க விரிவாக்கத்தையும், இன வக்கிரத்தையும் உலகத்தாரிடமிருந்து மறைக்க முற்பட்டனர் உலக பயங்கரவாதிகள். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நோக்கம் தமிழரின் தலைமையை அழிப்பது; தமிழரின் கூட்டாற்றலை அழிப்பது; தமிழருக்கென்று உரிமை பெற்று வரலாற்றில் உருவாகி வந்துவிட்ட பொதுவுடைமைத் தேசமொன்றைச் சுவடற்றுப்போகச்செய்வது. மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் தமிழினம் அஞ்சியஞ்சி, நடுநடுங்கி, கையாலாகாத கோழைகளாக வரலாறு நெடுக வேற்று இனத்தாருக்குக் கீழே வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றதொரு வக்கிரநோக்கமும் இதனடியில் இருக்கிறது. வேற்றினத்தாருக்குக் கீழே தமிழரை அடிமைப்படுத்துதல் வேண்டும் என்ற ஆரியத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் தமிழ்நாட்டு ஆட்சி அதிகார அரசியலில் உள்ளிழுக்கப்படுகின்றனர், தமிழரல்லாத பல புதிய ஆரியத்துவ ஆற்றல்கள். இந்த அச்சத்தை, இந்த நடுக்கத்தை, இந்த கையாலாகாத்தனத்தை, இந்தக் கோழையுணர்வை - தீவுத் தமிழனுக்குள் மட்டுமல்லாது, தீபகற்பத் தமிழனுக்குள்ளும் விதைத்திட வேண்டும் என்பது இனவெறியின் நீட்சி. இலங்கைத் தீவில், சிங்கள பௌத்தம் என்ற பதங்கொண்டு தாண்டவமாடிய இனக்கொலை வடிவமானது, இந்தியத் தீபகற்பத்தில் வளம், வளர்ச்சி என்கிற லேபிள்களை ஒட்டிக்கொண்டு தமது ஆட்டத்தை, தமிழ் நிலத்தில் நடத்தி வருகிறது. தீவுத் தமிழ் நிலத்தில் சிங்கள பௌத்தத்தால் வடிவமைக்கப்பட்ட இனக்கொலை, தீபகற்பத் தமிழ் நிலத்தில் ஆரிய இந்துத்துவத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆரிய எதிர்ப்பானது, தொல்காப்பியருக்கும் முந்தைய காலத்திலேயே தமிழ் நிலத்தில் வேர்பிடித்து, பிரிட்டிஷ் இந்தியாவில் அயோத்திதாசர், பெரியார் வழியாகத் தழைத்து 1967இல் ஆட்சியதிகாரமாக கிளை விரித்துப் படர்ந்தது. இந்த ஆரிய எதிர்ப்பை அழித்தொழிப்பதென்றால் தமிழர் மாய வேண்டும் என்பது ஆரியத்தின் கோட்பாடு. எனவேதான் அண்மைக்காலத்தில், முள்ளிவாய்க்கால் இனக்கொடுங்கொலைக்கு பின்னரான காலத்தில், தமிழினத்தின் மீதான தாக்குதல் நுண்ணிய ஆரிய வடிவெடுத்து செயலாகி வருகிறது ஆரியத்தின் அதிகார வடிவமான டெல்லியானது வளம், வளர்ச்சி என்றெல்லாம் முழங்கியபடி தமிழரது மொழி வளம், அறிவு வளம், இயற்கை வளம், பண்பாட்டு வளம், வரலாற்று வளம், தொன்ம வளம் ஆகிய அனைத்தின் மீதும் போர் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் செயற்கை மின்வெட்டை நடைமுறைப்படுத்தி, தமிழரது தொழில் துறைகளைப் பாழ்படுத்தியது. குறிப்பாகக் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் வலுக்கொண்டு நின்ற தமிழரின் தொழிற்கட்டுமானங்களைச் சீர்குலைத்தது செயற்கை மின்வெட்டு. தமிழரது தொழில் வாய்ப்புகளும், பொருளீட்டுக் கருவிகளும், தொழில் தொடர்புகளும், வணிக வழிகளும் செயற்கையான முறையில் தமிழ்நாட்டுச் சிறு முதலாளிகளிடமிருந்தும் குறுமுதலாளிகளிடமிருந்தும் வன்மத்துடன் பிடுங்கப்பட்டன. தமிழ் முதலாளி வர்க்கத்தின் மீது தாக்குதல் ஏவப்பட்ட பின்னர், தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் தாக்குதல் ஏவப்பட்டது. வேற்றினத்தார் தமிழகத்துக்குக் ‘கடத்தி’ வரப்பட்டு, தமிழ் நிலத்தின் வேலைவாய்ப்புகளில் அமர்த்தப்பட்டனர். சட்டவரையறைகளின் துணைகொண்டு, அரசுப்பணிகளில் முக்கால்வாசிக்கும் மேலே வேற்றினத்தார் அமர்த்தப்படுகின்றனர். இதற்கு உகந்தவாறு சட்ட வரையறைகள் திருத்தியமைக்கப்பட்டன. 

தமிழரின் வேலைவாய்ப்புகள் வடவரால் பறித்தெடுக்கப்படுகின்றன என்பதைக் காட்டிலும் பேராபத்து என்னவெனில், காலங்காலமாகத் தமிழர் வாழ்ந்து வந்த மரபு நிலம், தாயக நிலம் - கலப்பு நிலமாக உருமாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழரது வரலாற்றுத் தாயகத்தை அழித்து விடுவது என்ற நெடுந்திட்டம் இது. மட்டுமின்றி, மொழிக் கலப்பை உருவாக்கி, தமிழிலிருந்து புதியதொரு மொழியை - கன்னடம், தெலுங்கு, மலையாளம் போல இன்னுமொரு புதிய மொழியை - உற்பத்தி செய்து விடுவது என்பதும் நெடுங்காலத் திட்டமாகும். அப்படியென்றால் தமிழரின் இன்றைய தாயக நிலம் சுருங்கும். தமிழரது தாயக நிலத்தைக் கலப்புநிலமாக்குவது, தமிழரது தாய்மொழியைக் கலப்பு மொழியாக்குவது போன்றவற்றுக்கு அப்பால், தமிழ் மொழியையே அழித்துவிட வேண்டுமென்ற திட்டமும் இதனடியில் உண்டு. அந்தவகையில் தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் ஆகியன தமிழ்நாட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் - பிரிட்டிஷ் இந்தியாவிலேயே - ஹிந்தித் திணிப்பு என்ற தாக்குதல் முறை மூலம் தமிழ் மொழியை அழிப்பதற்காகக் காய்நகர்த்திப் பார்த்தது ஆரியம். இன்றைக்கும் அரசு அலுவல் மொழி என்றவொரு சட்டத்தை அமல்படுத்தி அரசு அலுவலகங்களில் கட்டாய ஹிந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தி, தமிழ் மொழியின் மீது தாக்குதல் நிகழ்த்திவருகிறது. தமிழரது பண்பாட்டுக்குள் வடவரின் பண்பாடுகளைக் கலப்பது என்ற திட்டமும் வெளிப்படையாக நிறைவேறி வருகிறது ‘கலாச்சார நடவடிக்கைகள்’ என்ற பெயரில். தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை அப்புறப்படுத்தாமல் தமிழரை வெல்ல முடியாது என்பதால், தமிழரின் வழிபாட்டு முறைகளின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் வடிவம்தான் ரத யாத்திரை. ராமர் கடவுளாக இருந்துவிட்டுப் போகட்டும். ஒருபோதும் அவர் தமிழ்க் கடவுள் அல்ல.

பிறப்பின் அடிப்படையில் மானுடர்களைக் கீழ்மைப்படுத்தும் வர்ணாசிரம கீதை புனித நூலாக இருந்துவிட்டுப்போகட்டும். ஒருபோதும் அது தமிழரின் புனிதநூல் அல்ல. தமிழர் என்பவர் கடவுளை மறுக்கலாம்; ஏற்கலாம்; ஏற்கிற தமிழர் எந்தக் கடவுளையும் வணங்கலாம்; எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்; எந்தப் புனித நூலையும் பின்பற்றலாம் - இதுதான் தமிழர் பண்பாடு. ‘வழிபாடு’ என்பதை இறுக்கமான சட்டமாக மாற்றுகிற மேலாதிக்கத் திமிர், தமிழரது ‘வழிபடு பண்பாட்டில்’ இல்லை. சாதியற்ற வாழ்வே தமிழரின் அடிப்படை இலக்கணம் என்றும், சமயமற்ற வாழ்வு தமிழரின் விருப்பம் என்றும் கொள்ளலாம். இந்தியத் தீபகற்பத்தில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் அடித்தளமாய் இருக்கிற இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது, இந்திய தீபகற்பத்துக்குத் தமிழர் உவந்தளித்த கொடையாகும். அதனால், தமிழரை பழிவாங்குவதற்காக ஆரியத்தால் கொண்டுவரப்பட்டதே ‘நீட்’. அது இப்போது மருத்துவக்கல்வி அளவில் மட்டுமே அல்லாமல் ஆட்சிப்பணி வரை, ஐ.ஏ.எஸ். தேர்வு வரை நீட்சி கொண்டிருக்கிறது. 

இலங்கையில் சிங்கள பௌத்தம் இதே போன்றதொரு தாக்குதலை எழுபதுகளின் துவக்கத்தில், ‘தரப்படுத்தல்’ என்ற பெயரில் ஈழத் தமிழர் மீது ஏவியது. இலங்கையில் கல்வி வாய்ப்புகளிலும், வேலை வாய்ப்புகளிலும் தமிழருக்கான பங்கினைத் தட்டி பறிப்பதற்காகச் சிங்களம் தீட்டிய நயவஞ்சகத் திட்டத்தின் சட்ட வடிவம் என்று, ‘தரப்படுத்தலை’க் குறிப்பிடலாம். வளமான எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்றுக்கொண்டிருந்த ஈழத்து இளந்தலைமுறையின் எதிர்காலக் கனவுகள் கருகின. அப்போது வெகுண்டெழுந்த மாணவர்களுள் ஒருவரான உரும்பிராய் சிவகுமாரன், பருத்திக்காட்டில் குப்பி கடித்து வீரச்சாவைத் தழுவி வீரவித்தாக விழுந்து, பிற்காலத்து ஈழ விடுதலை இயக்கப் போராளிகளாக முளைத்தெழுந்தார். அன்றைக்குத் தீவுத் தமிழ் நிலத்தில் சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தலை, இன்றைக்கு தீபகற்பத் தமிழருக்கு எதிராகக் கையாண்டு வருகிறது டெல்லி. தமிழரின் வாழ்வை பறிக்கிற சதி இது.

தமிழரது நிலத்தில் ஏராளமான கனிம வளம் புதையுண்டு கிடக்கிறது. இந்த வளத்தைப் பயன்படுத்துதல் என்கிற பெயரில் தமிழரது பூமியைக் குடைந்து, தமிழ் மண்ணை மலடாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேறிய நாடுகள் எல்லாம் இவ்வகையான மரபாற்றல் வடிவங்களைப் புறக்கணித்து, தங்களது கடந்த கால மடைமைக்காகத் துயருற்று, மரபுசாரா ஆற்றல் வடிவங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனவே நவீனப் பார்வை கொண்டவர்கள் இந்தத் திட்டங்களை எதிர்க்கிறார்கள். இந்தத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது, ‘நக்சலைட் பயங்கரவாதிகள்’, ‘தமிழ்த்தேசிய பயங்கரவாதிகள்’, ‘பிரிவினைவாதிகள்’ என்ற அடைமொழிகளை ஒட்டி, எல்லாக் கேடுகெட்ட வழிகளைக் கொண்டும் அழித்துவிட முனைப்பு காட்டுகிறது அதிகார வர்க்கம். ‘இந்தத் திட்டங்களை எதிர்க்கிற தமிழர்கள் நவீனத்தன்மை வாய்க்கப் பெறாதவர்கள்,’ என்பது போல், ஒரு பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. கனிம வளங்களுக்காக வரம்பேதுமின்றி பூமியைக் குடையலாம் என்று வாதிடுபவர்களே நவீன அறிவு வாய்க்கப்பெறாதவர்கள். கனிம வளத்தைச் சுரண்டி எடுப்பதற்காகக் காவிரியை அழிக்கிற இவர்கள்தான், குடிநீர் தேவைக்காகத் தென்னிந்திய நதிகளை இணைக்கத் திட்டமிடுவதாகப் புளுகுகின்றனர். காவிரி ஆற்றினை வற்றச்செய்து தமிழரை அப்புறப்படுத்தினால், இன்னும் ஏராளமான வளத்தை தோண்டியெடுக்கலாம். காவிரியை வற்றச் செய்யலாம் என்பது டெல்லியின் நீண்ட கால திட்டம். காவிரி வற்றினால் தமிழ் இனம் பூண்டோடு அழியும், குமரிக்கண்டத்தின் தண்பொருநை ஆற்று நாகரிகத்தையும், சிந்துநதி நாகரிகத்தையும் இழந்ததுபோல் காவிரி ஆற்று நாகரிகத்தையும் தமிழர் இழப்பர். பின்னர் நிலமிழந்த, வரலாறிழந்த, மரபிழந்த பலவீனக் குடிகளாகத் தமிழரை மாற்றி உலகெங்கும் ஏதிலிகளாக ஓடவிட வேண்டும் என்பதே டெல்லியின் அவா. தமிழருக்கு எதிராக டெல்லி நடைமுறைப்படுத்தி வருகிற இந்த வகையான வஞ்சகத் திட்டங்களைத்தான், ‘நுட்பங்கள் மிகுந்த நவீன இனக்கொலை வடிவங்கள்’ என்று நாம் விளக்கியிருந்தோம். தமிழ் நிலத்தின் மீது, தமிழினத்தின் மீது இப்படி ஒரு நுட்பமான தாக்குதலை நிகழ்த்துவதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்றொரு ராஜதந்திர விளையாட்டை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். உலக வல்லரசுகளின் ராணுவ ராஜதந்திர ஆட்டமிது.

செயற்கையறிவு கோலோச்சவிருக்கிற நாளைய உலகரசில், ஓரரசுக்காக வல்லாதிக்கங்கள் தமக்குள் மோதிக்கொள்ளும்பபொழுது, தமிழ்ப் பெருங்கடல் முக்கியப் பாத்திரம் வகிக்கப்போகிறது; அந்த வரலாற்றுத் தருணத்தில் திருகோணமலைத் துறைமுகத்தின் போரியல் பங்களிப்பு, வல்லாதிக்கங்களின் வலுச் சமநிலையைக் குலைக்கப் பண்ணுவதற்கும், நிலைக்கப் பண்ணுவதற்குமான போரியல் சிறப்பு கொண்டதாகும். கீழ்த்திசை நாடுகளுக்கும் மேற்றிசை நாடுகளுக்குமிடையே குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கடல் வணிகப் பாதையில் இயற்கை அமைத்துக் கொடுத்திருக்கும் அழகான நிலத்திட்டு ஒன்று உள்ளது; அதன் பெயர் இலங்கைத் தீவு. அந்தத் தீவில் - கிழக்கிலங்கையில் - அமைந்திருக்கிற திருகோண மலையின் வங்கு போன்ற துறைமுக அமைப்பானது, மிகச்சிறந்த கப்பற்படைத் தளமாகப் புழங்கப்படுவதற்குரியது. போரியல் அமைப்புக்கூறுகள் இயல்பாக வாய்க்கப்பெற்ற துறைமுகம். செயற்கை அறிவின் ஆட்சிக்குக்கீழ், இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறி எழும்பப்போகிற புதியவகை உலகவொழுங்குகளில், மானுடச் சட்டதிட்டங்களில், வல்லாதிக்கங்களுக்கிடையே, ‘உலக அரசு’ எவருடையது என்ற வல்லாதிக்க போட்டிதான் அனைத்தையும் தீர்மானிக்கவிருக்கிறது. இந்தத் தீவை எந்த வல்லரசு கைப்பற்றுகிறதோ, அந்த வல்லரசே தெற்காசியாவின் கட்டளைக்காரன். திருகோணமலைத் துறைமுகம் இலங்கைக்குரியது அல்ல. ஈழத்தமிழருக்கு உரியது. தமிழரின் நிலப்பகுதி. தமிழரின் சொத்து. சிங்களவர்களின் இன வித்தாகிய கலிங்கத்து விஜயனையும், விஜயனின் கூட்டாளிகளையும் சுமந்து வந்த மரக்கலம் இலங்கைத் தீவில் கரைதட்டிய காலத்திற்கு முன்னரே, சந்ததிகளை உருவாக்கி வாழ்ந்து வந்திருந்தனர் தமிழ் வேட்டுவக் குடிகள். இன்றைய ஆரிய இந்து மதத்தின் அடித்தளம் தமிழ்ச் சைவ சமயம்; சைவத்தின் தோற்றுவாய் ஆதி சைவம்; ஆதி சைவத்தின் ஊற்றுவாய் பூர்வலிங்க வழிபாடு; இந்தப் பூர்வ லிங்க வழிபாடு மேற்கொண்டிருந்த ஆதித் தமிழர்களின் தொன்மையான நிலமாகும் திருகோணமலை. தமிழரது இந்தத் தொல் நிலத்தை வெறிகொண்டு வேட்டையாட விசையுறுகின்றன உலக வல்லாதிக்கங்கள். இந்த வேட்டை வெறிகொண்ட உலக வல்லாதிக்கங்கள் தமிழர் சிங்களர் முரணைத் தமிழரிடமிருந்தும், சிங்களவரிடமிருந்தும் பிடுங்கி தமது கையில் வைத்துக்கொண்டு, ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்றொரு ராணுவ ராஜதந்திர விளையாட்டை ஆடிவருகின்றனர். மேலும், தமிழர் சிங்களர் முரணை உற்பவித்ததும் இந்த வல்லாதிக்கங்கள்தான்; சிங்களர் அல்லர்! மட்டுமன்றி, ‘தமிழர் சிங்களர் முரணை’, அந்தத் தீவின் ஆதிபத்யக் குடிகள் தமக்குள் ஒன்றிணைந்திவிடக்கூடாது என்பதற்காகவே, தீராப்பகையென மாற்றிவிட்டன இந்த வல்லாதிக்கங்கள்.

இலங்கைத் தீவின் தமிழ் நிலப் பகுதியில் ஆயுதம் தரித்து நிற்பவர் எவரோ, அவரே சதுரங்கப் பலகையின் நடுக்களத்தை ஆதிக்கம் செய்பவர். 2009 மே 17 அன்று புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தனர். எனவே அன்றைய தேதியில் இருந்து நடுக்களத்தை ஆதிக்கம் செய்து வருகிறது கொழும்பு. யாழ்ப்பாணத்தின் பத்து லட்சம் தமிழர் நடுவே இரண்டு லட்சம் சிங்களப்படையினர் ஆயுதந்தரித்து நிற்பதாகவும், இந்தப் படையணிகளின் குடும்பத்தாரை யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும்படி ஒரு திட்டம் இருப்பதாகவும், அப்படியது நிறைவேற்றப்படுமெனில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை தமிழர் துவக்கவேண்டி வருமென்றும், சிங்கள ஆயுதப் படையினரைத் தமிழரின் மரபுத்தாயகத்திலிருந்து வெளியேற்ற வேண்டிவருமென்றும், முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் கலைந்து சென்றிருக்கிற புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து தமிழ் நிலத்தை மீட்பதற்கு போராடுவார்களென்றும் அறிவித்திருக்கிறார் காசி ஆனந்தன்.

நடுக்களத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டுமொரு ‘ஆட்டம்’ துவக்கப்படுமா? அது, ஐந்தாவது ஈழப்போருக்கு வழிவகுக்குமா? ஐந்தாவது ஈழப்போரில் சிங்களத்தின் கையிலிருந்து நடுக்களத்தைப் பறித்துவிட முடியுமா - முடியாதா? தமிழர் பறித்துக்கொண்டால், தமிழரின் ஆதிக்கத்திலேயே இருக்குமா? அல்லது சிங்களரிடமிருந்து பறிப்பதை டெல்லியிடம் கைமாற்றிவிடுவரா ‘இன்றைய’ ஈழத்தமிழர்? அல்லது ‘வழமைபோல்’ நடுக்களத்தை ஈழத்தமிழரிடமிருந்து வலுவந்தமாகக் கைப்பற்ற முனையுமா டெல்லி? அல்லது, 1983ஆம் ஆண்டைய கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழ் இயக்கங்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும், பொருளும் கொடுத்து உருவாக்கியதுபோல் மீண்டுமொரு முயற்சியை முயற்சித்து பார்க்குமா‌ டெல்லி (1987 போல)? ஈழப்போர் தொடர் வரிசையில், ஐந்தாவது ஈழப்போர்தான் இறுதிப்போரா? அல்லது ஐரோப்பாவின் சிலுவைப்போர் போல நூற்றாண்டுகள் நீடிக்கிற ஆசியப் போரா ? எது எப்படியாயினும், தமிழர் வாழ்வை ஈவிரக்கமின்றிச் சிதைத்து வருகிறது வல்லாதிக்கங்களின் தெற்காசியச் சதுரங்க ஆட்டம். தமிழர் வாழ்வை மட்டுமல்ல; சிங்களர் வாழ்வையும்; சிங்களர் வாழ்வை மட்டுமல்ல; இந்தியர் வாழ்வையும்; இந்தியர் வாழ்வை மட்டுமல்ல; ஆசியாவின் அமைதியையும் சிதைக்க கூடியது வல்லாதிக்கங்களின் தெற்காசியச் சதுரங்கம்.

தெற்காசியச் சதுரங்கம் என்பது ஒரு பெருந்தொகுப்பு ஆட்டம்; ஒற்றை ஆட்டமல்ல. ‘கொழும்பு - பெய்ஜிங் கூட்டு’ என்பது ஒரு அணியாகவும், ‘டெல்லி - வாஷிங்டன் கூட்டு’ என்பது இன்னொரு அணியாகவும் ஆட்டப் பலகையை விரித்து எதிர்நிற்கின்றனர். இந்த முதன்மையணிகளின் பின்னிணைப்பாகத் துணையணிகளும் உண்டு. இலங்கைத் தீவின் தமிழ்நிலமும் இந்தியத் தீபகற்பத்தின் தமிழ்நிலமும் இணைந்த பொதுத் தமிழ்நிலமே இன்றைய ஆட்டப்பலகையாகும். அதாவது 2009 மே 17-க்கு பின்னரான ஆட்டப்பலகையாகும். பொதுவில் தமிழர் குறித்து, ஈழத்தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் என்ற முந்தைய காலவரையறுப்புகள் அழிக்கப்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நிலமும் ஆட்டப்பலகையாக விரிக்கப்பட்டிருக்கிறது. தீவுத் தமிழ்நிலம் கொழும்புவின் ஆதிக்கத்திற்குள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. பிரபாகரனின் மறைவுக்குப் பின்னரிது நிறைவேற்றம் பெற்றிருக்கிறது. தீபகற்பத் தமிழ்நிலத்தை டெல்லியால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. விடுதலைப்புலிகளை ஆற்றலிழக்கச் செய்த பின்னர்தான், தீவுத் தமிழ்நிலத்தைக் கொழும்புவால் கைப்பற்ற முடிந்தது போல, திராவிட இயக்கங்களை ஆட்சியிழக்கச்செய்த பின்னர்தான் தீபகற்பத் தமிழ் நிலத்தை டெல்லியால் கைப்பற்றமுடியும். தீவுத்தமிழ் நிலத்தைக் கைப்பற்றிவிட்டது கொழும்பு. தீபகற்பத் தமிழ்நிலத்தை கைப்பற்றுவதற்கான போரினை நடத்திக்கொண்டிருக்கிறது டெல்லி. அதுதான், ‘கழகம் இல்லாத தமிழ்நாடு’ என்ற முழக்கம். அது முழக்கமல்ல; போரியல் யுக்தி. கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை நிறைவேற்றிவிட்டது டெல்லி. 67-க்குப் பின்னர், கழகங்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆண்டன. குறைந்தபட்சம் கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போல இடதுசாரிகள் ஆட்சியமைப்பதற்காகவாவது தமிழ்நாடு இடம் கொடுத்திருந்தால் தமிழ்நாட்டை இந்திய நாட்டின் ஒரு மாநிலமாக டெல்லி கருதியிருக்கும். இடதுசாரிக் கட்சிகளும் டெல்லிக் கட்சிகள்தானே? காங்கிரசும், பிஜேபியும் வலதுசாரிய டெல்லி என்றால், இ.பொ.க(மா)வையும், இ.பொ.கவையும் இடதுசாரி டெல்லி என்று சொல்லலாம். தமிழரின் தேர்ந்தெடுப்பு வலதுசாரியமா? இடதுசாரியமா? என்பதல்ல. தமிழியமா? டெல்லியமா? என்பதே. ஆரியத்தின் தற்கால நிழல்வடிவமே டெல்லியம் என்பதைத் தமிழரின் வரலாற்று ஆழ்மனம் உணர்ந்திருக்கிறது. எனவேதான் 1967-லிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டை அண்டவொட்டாது, டெல்லியை விரட்டடியடித்துவருகிறது தமிழரின் வரலாற்றுத் தொலையுணர்வு. இந்த வரலாற்றுத் தொலையுணர்வு, துணைகண்டத்தின் எந்தவொரு தேசிய இனத்திற்கும் வாய்த்திராதவொன்று. சிந்துவெளியில் முதன்முதலாக ஆரியரும் தமிழரும் நேர்கொண்ட துவக்கத் தருணத்திலேயே தெறித்தெழுந்த பகைநெருப்புப் பொறியானது, காலச் சூறாவளியில் விசிறப்பட்டு, நெளிந்தோடும் வரலாற்றின் மீதூர்ந்து, நெருப்புப் பாம்பைப்போல் பற்றியிருந்து படர்ந்து பெருகுகிறது. எனவே தமிழருக்கு மட்டுமே இந்த வரலாற்றுத் தொலையுணர்வு வாய்த்திருக்கிறது. மேலும், உலகின் மிக மூத்த பாசிசமான ஆரியத்தோடு இடையறாது மோதி வருகிறது தமிழியம் ; இந்திய வரலாறு என்பதே, ‘தமிழியம் Vs ஆரியம்’ என்பதுதான்.

தமிழரது வரலாற்று ஆழ்மனம் மிகவும் புதிரானது. பொதுவில், ஒரு இனத்தின் தொன்மம் தாக்கப்படும்பொழுது அந்த இனத்தின் வரலாற்று ஆழ்மனம் விழிப்புறுகிறது. தனது இனப்பிறப்பு காலந்தொட்டு, நவீனகாலம் வரையிலான நினைவைப் பிழிந்து அதன் சாரத்தையுறிஞ்சி வரலாற்று ஆழ்மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது அந்த இனம். ஒரு இனத்தின் வரலாறு என்பது சில நூறு ஆண்டுகள் என்றாலும், பல்லாயிரம் ஆண்டுகள் என்றாலும் - அந்த இனத்தின் தொன்மம் தாக்கப்படும்பொழுது விழிப்புற்று, வரலாற்று ஆழ்மனதை மறுகட்டாக்கம் செய்து கொள்கிறது. தமிழரின் வரலாற்று ஆழ்மன நினைவுகள் சில நூறு ஆண்டுகள் அல்ல; பல்லாயிரம் ஆண்டுகள் கொண்டது. எனவே வரலாற்று ஆழ்மனதின் மறுகட்டாக்கம் என்பது பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் தனது வரலாற்று ஆழ்மனதை, மறுகட்டாக்கம் செய்து கொள்ளும்படியான வரலாற்றுச் சவால்களை இடையறாது எதிர்கொண்டு வருகிற இனம் தமிழினம். எனவே தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ் நிலத்திற்கு, தமிழ்த் தொன்மத்திற்கு நெருக்கடி நேருங்காலங்களிலெல்லாம் தமிழரது வரலாற்று ஆழ்மனம் விழிப்புற்று மறுகட்டாக்கம் செய்து கொள்கிறது. மேலும், எவ்வித வரலாற்று நெருக்கடியையும் நேர்கொள்ளாத காலகட்டத்தில்கூடத் தன்னியல்பில் தன்னை மறுகட்டாக்கம் செய்து கொள்ளும்படியானதொரு உள்கட்டளையை தனது இயல்நிரலில் கொண்டிருக்கிறது தமிழரின் வரலாற்று ஆழ்மனம். ‌எப்படியெனில், தமிழ் மொழிக்குள் இருக்கிறது அளவிடற்கரிய வரலாற்று ஆழ்மன நினைவுகள். தமிழின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளேயும், சொல்லின் வேர்ச்சொல்லுக்குள்ளேயும், வேர்ச்சொல்லின் ஆதி ஒலியினுள்ளேயும், ஆதி ஒலியின் விதையாகிய ஒலித்தாதுவினுள்ளேயும் தமிழரது அடையாளங்கள் உறைந்து கிடக்கின்றன. அவற்றுக்கு இளக்கம் கொடுத்து இயக்கிப் பார்த்தால், இந்த உலகின் முதல் மானுடன் பரிணாமங் கொண்ட கதைகள் சலனம் கொள்வதைக் காணலாம். எனில், தமிழரது வரலாற்று ஆழ்மன நினைவுகள் தமிழரின் சொத்து அல்ல; பூகோளச் சொத்து; உலக மானுடத்தின் சொத்து; எனவே தமிழினத்தின் மீதான தாக்குதல், தமிழ் நிலத்தின் மீதான தாக்குதல், தமிழ் மொழியின் மீதான தாக்குதல், தமிழ்த் தொன்மத்தின் மீதான தாக்குதல் என்பவை எல்லாம் ஒரே பொருளைக் கொள்கின்றன. உலக மானுடத்தின் மீதான தாக்குதல் என்ற பொருளை கொள்கின்றன. எனவே தமிழர் மேற்கொள்கிற தற்காப்புப் போர் என்பது தம் இனத்தைக் காப்பதற்கான, தம் நிலத்தைக் காப்பதற்கான, தம் மொழியைக் காப்பதற்கான, தம் தொன்மத்தைக் காப்பதற்கான போர் மட்டுமல்ல, உலக மானுட வரலாற்று நினைவுகளைக் காப்பதற்கான போரும் ஆகும். எனவேதான் வரலாறு நெடுக, போரிடும் இனமாகவே வாழ்ந்துவருகிறது தமிழினம். புறநானூறு என்றொரு இலக்கிய வகைமை தமிழிலக்கியத்தில் மட்டுமே காணக்கிடைக்கிறது. 

இன்றைய உலக வல்லாதிக்கங்கள், தங்களுக்குள் கலந்து விரிந்து கலந்து விரிந்து, இறுதியில் தம்மைத்தாமே வடிகட்டிக்கொண்டு உலகின் மிகத்திறன்வாய்ந்த ஆளும் வர்க்கம் ஒன்றை உருவாக்கவிருக்கின்றன. எதிர்காலத்தின் ‘ஓரரசு’ என்று கருத்தியல் வகையாகவும், எதிர்காலத்தின் ‘உலகரசு’ என்று புவியியல் வகையாகவும் சுட்டப்படுகிற அரசுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கப் போகின்றன. மனிதகுலம் தோற்றங்கொண்ட காலத்திலிருந்து இன்றுவரை சேகரமாகிவந்திருக்கும் நினைவுகளும், நெறிகளும், விழுமியங்களும் - உலகரசுக் காலத்தில் செல்லாப் பொருட்களாகிவிடும். ‘இப்படிப்பட்ட வளமான, தொன்மையான வரலாற்று ஆழ்மனம் கொண்டதொரு இனம், வருங்கால உலக ஒழுங்குக்கு எதிரி’ என்று கருதுகின்றன வல்லாதிக்கங்கள். செயற்கையறிவின் மனித மேலாண்மைச் சட்டங்களால் (human management law) கற்பிக்கப்படவிருக்கிற வாழ்க்கை நெறிகள் மிகப் புதுமையானவையாக இருக்கப் போகின்றன. அந்த நெறிகளை ஒழுகி வாழ்கிற மனிதக் குழுக்களை மட்டுமே, உலக அரசு வாழ்விக்கும்; அப்படியாயின், நினைவுகளற்ற மாந்தர்களே உலகரசின் தேவை. நினைவுகள் கொண்டிருக்கும் மாந்தர்குழுக்களின் நினைவுகளை அகற்றுவதற்கு உலகரசு முனையும்; நினைவுகளற்ற மாந்தர்குழுக்களாக மாற்றியமைக்கும். இந்த நிகழ்ச்சிநிரலுக்குள் பொருந்திப்போக மறுக்கிற இனம் தமிழினம் என்று கண்டிருக்கிறது உலக வருங்கால உலகரசு. எனவே தமிழருக்கு நினைவுகளை வழங்குகிற நிலம், தொன்மம், இயற்கை வளம், மொழி, ஆட்சியதிகாரம் உள்ளிட்ட யாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெடுந்திட்டத்தின் பெரு வெற்றியென்று ஈழம் வீழ்ந்ததை குறிப்பிடலாம்.

நாளைய உலகரசின் அதிகாரத்திற்காகத் தமக்குள் போரிட்டுக் கொண்டிருக்கிற உலக வல்லரசுகளின் அங்கீகாரத்துடன், ஆரியத்துவ டெல்லியின் கட்டளைப்படி, தமிழக திராவிடீயத்தின் துரோகத்தைத் துணைகொண்டு, கொழும்புச் சிங்களத்தை ஏவி - ஈழம் வீழ்த்தப்பட்டது. சீன பௌத்த தாதாவை முன்னிறுத்தி, ஈழமற்ற இலங்கையை அவசர அவசரமாக சிங்கள-பௌத்த இலங்கையாக்கிக் கொண்டிருக்கிறது கொழும்பு. பிரிட்டிஷ் இலங்கையில், ’தமிழருக்கு அதிகாரம் தரக்கூடாது’ என்று ஆங்கிலேயரிடம் அடம் பிடித்து வந்திருந்தது இலங்கை; 1947-க்குப் பின்னர் தமிழரது அதிகாரத்தைத் தட்டிப் பறித்தது.; 1957 வட்டுக்கோட்டை மாநாட்டுக்குப் பின்னர் தமிழர் மீது வன்முறையை ஏவியது; 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழரை அழித்தது; 2009க்கு பின்னர் தமிழ் அடையாளங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக் கொண்டிருக்கிறது. நூறு விழுக்காடு பௌத்த தேசமாக்குவதுதான் திட்டம். அந்தப் பணியின்னும் முற்றுப்பெறவில்லை. முற்றுப்பெறட்டுமென்று காத்திருக்கிறது டெல்லி. ஏனெனில், தமிழரது அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்படவேண்டும் என்பதுதான் ஆரியத்துவ டெல்லியின் விருப்பமும். 

ராஜபக்சே மீதான போர்க்குற்ற விசாரணையை இரண்டாண்டுகள் டெல்லி தள்ளிப்போட்டதற்கான காரணம் இதுவே. தமிழடையாளங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், தமக்கான பண்டுரிமையைத் தமிழ் மக்கள் முற்றிலுமாக அழியக்கொடுத்த பின்னர் டெல்லி தலையீடு செய்யும். ’2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு மதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது’ என்றும், ’ஒன்றரை இலட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர்’ என்றும் பன்னாட்டு அவையில் குரலெழுப்பும். ‘முள்ளிவாய்க்காலில் இந்துக்களை படுகொலை செய்த ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும’ என்று இந்தியப் பாராளுமன்றம் தீர்மானம் போடும். பன்னாட்டு அவையில் அழுத்தம் தரும். ராஜபக்சே மட்டுமல்ல, அன்றைய காங்கிரசும், திமுகவும் கூட குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவின் இருபுறமும் நிறுத்தப்பட வேண்டும் என்பது டெல்லியின் திட்டம். கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை சாத்தியப்படுத்துகிற டெல்லி. காங்கிரஸ் இல்லாத இந்தியாவையும் சாத்தியப்படுத்தும். இவ்வளவையும் நிறைவேற்ற வேண்டுமாயின், தமிழரை முதலில் ’இந்துக்களாக’ உருமாற்ற வேண்டும்; ஆனால் உருமாற மறுக்கிறது தமிழ் மரபு. எனவே வடநாட்டு ’இந்துக்கள்’ கொண்டு தமிழ் நிலத்தைச் செறிவூட்டுகிறது டெல்லி. தமிழரை இந்து மயமாக்க முடியாததால், தமிழ்நிலத்தை இந்து நிலமாக்கிக் கொண்டிருக்கிறது. வடகண்டத்து உணவுமுறை, உடுத்துமுறை, வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபடு முறைகள், கடவுள்கள், கலைகள், தொழில்கள், முதலீடுகள், மொழிகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்தும் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும். ஈழத்தைச் சிங்கள பௌத்தம் உண்டுசெரித்ததுபோல், தமிழகத்தை ஆரியத்துவ இந்துத்துவம் உண்டு செரிக்கும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பகையானது, பௌத்தத்திற்கும் இந்துத்துவத்திற்குமான பகையாக இருமுனையாக்கம் கொள்ளும். இந்திய வல்லரசோடு ஒப்பிட்டால், இலங்கை சின்னஞ்சிறு தீவுதான். ஆனால் இலங்கையுடன் மோதுவதென்பது சீனப்பேரரசோடு மோதுவதாகும். எனவே அமெரிக்காவையும், பிரிட்டனையும், ஐரோப்பிய யூனியனையும் கொண்ட அணியை அமைத்துக்கொண்டது டெல்லி. பக்கத்துணையாக சப்பான் போன்ற நாடுகளையும், சீனாவின் பிற எதிரி நாடுகளையும், கிழக்காசியாவின் பௌத்த நாடுகளையும் இணைத்துக்கொள்கிறது. தென்சீனக்கடலில் சீனத்தின் நெடுங்காலப் பகையாற்றல்களோடு நட்புறவு கொண்டு, தனது அணியில் இணைத்துக்கொள்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ’தெற்காசியச் சதுரங்கம்’ என்ற ராணுவ ராஜதந்திர ஆட்டத்தை வென்றெடுப்பதற்காக, தாங்கொணாத விலையைக் கொடுப்பதற்கும் தயாராகிவிட்டது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் போதே - தெற்காசியச் சதுரங்கத்தின் துவக்க ஆட்டத்தில், திறப்புக் காய்களை நகர்த்தியது டெல்லி. 2009இல் ஈழ நிலத்தை பிரபாகரனிடமிருந்து பிடுங்கி ராஜபக்சேவிடம் கொடுத்துவிட்ட டெல்லி, ஈழ நிலத்தை மீட்பதற்கு என்றொரு புதியவாற்றலை உற்பத்திசெய்தது. காங்கிரசின் வரலாற்றுத் தேவை நிறைவேறிய பின்னர், புதியவாற்றலை மேலெழுப்பியது; பிரபாகரனின் மறைவில் உதயமானார் நரேந்திர மோடி. தெற்காசியாவில், நீடித்த ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களைக் கொண்டிருக்கிறது டெல்லி. ‘மேக் இன் இந்தியா’, தமிழகத்தில் ராணுவத் தளவாட உற்பத்திக் கூடங்கள், போர்ப்படைகளை நகர்த்திச் செல்வதற்கு இலகுவான போக்குவரத்துக் கட்டுமானங்கள், செயற்கைக் கோள் விண்’களங்கள்’, விண்வெளியில் செயற்கைக்கோளைத் தாக்கியழிக்கும் அண்டத் தாக்குதல் வலிமை, துணைக்கண்டத்துத் தென்பகுதிக் கடல் ’வளையத்தை’ ராணுவத்திறன் கொண்டு கைப்பற்றி வைப்பதற்காக சாகர்மாலா ... 

இவ்வளவு ஆபத்துகளை எதிர்கொள்ளவிருக்கிறது தமிழகம். எனவே, தமிழர் தம்மைத் ’தமிழர்’ என்றழைத்துக்கொண்டு ஒன்றிணைவது காலக்கட்டாயம். இது இனவெறி அல்ல; இனவெறுப்பு அல்ல; இனவாதமல்ல; குறுகிய மனப்பான்மை அல்ல. தமிழர் என்ற சொல், அரசியல் பொருள் விளக்கம் பெறும்பொழுது ’தமிழ்த் தேசியர்’ என்று பரிமாணங்கொள்ளும். காலங்காலமாக இந்த மண்ணில் வேர்பிடித்து வாழ்ந்து வருகிற சந்ததியினர் தமிழர் என்றும், தமிழக எல்லைக்கு வெளியில் இருந்து குடியேறி, தமிழ்நிலத்தோடு தம்மைக் கரைத்துக் கொண்டவர்களைத் ’தமிழ்த் தேசியர்’ என்றும் குறிப்பிடலாம். இங்கு தமிழர் என்று குறிப்பிடும் பொழுது ’தமிழ்த் தேசியர்’ என்ற பொருளிலேயே குறிப்பிடுகிறேன். எனவே, அவ்வண்ணமே பொருள்கொள்ளுமாறு இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர், பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது ஐ.நா.அவை. அதில், பெரும்பாலான உலக நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவும் கைச்சாத்திட்டிருக்கிறது. அந்த பிரகடனத்தில், ஒருவரது ’தேசிய இன உரிமை’ குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. 

1. தனது தேசிய இனத்திற்குரிய நிலத்திலிருந்து குடிபெயர்ந்து வேறொரு தேசிய இனத்திற்குரிய நிலத்தில் குடியமர்ந்து விட்ட ஒருவர், இரண்டு தலைமுறைக்காலம் அந்த வேற்றுநிலத்தில் வாழ்ந்துவிட்டவர் எனில், அந்த வேற்றுநிலத்தின் தேசிய இனத்தவராகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் உரிமைபெற்றவராகிறார். ஏனெனில், அந்த வேற்று நிலத்தின் மேம்பாட்டுக்காகத் தனது இரண்டு தலைமுறைகளை ஒப்புக் கொடுத்திருக்கிறார். 

2. இரண்டு தலைமுறைக் காலம் வேறொரு தேசிய நிலத்தில் வாழ்ந்து விட்ட ஒருவர், தனது தேசிய இனம் எதுவென்று தீர்மானிப்பதற்கான தன்னுரிமை பெற்றவராகிறார். (மேலதிக விபரங்களுக்கு, பாவை சந்திரன் எழுதிய ‘இலங்கை தமிழர் போராட்ட வரலாறு’ நூலைப் படிக்கவும்)

இவ்வகையில், தமிழ் நிலத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு தமிழராகவே வாழ்ந்து வருகிற எவரும் தமிழரே. ’யார் தமிழர்’? என்று குதர்க்கமாகக் கேள்விகேட்டு, தமிழ்த்தேசியத்திற்குள் பகைமூட்ட எண்ணுகிற பகைவர்களைத் தள்ளி - நிறுத்துவோம்; தமிழகத்தைக் காப்போம். டெல்லிக் கூட்டணிகளையும், வேடந்தரித்து வருகிற ஆரியத்துவக் கூட்டங்களையும் புறக்கணிப்போம். 1967 ல் டெல்லிக் கட்சிகளை தமிழகத்திற்கு வெளியே விரட்டியடிப்பதற்கான காரணங்கள் என்று எவையெவை இருந்தனவோ அவையெல்லாம் இன்றும் இருக்கின்றன. அன்றைய ஆபத்தை விட, ஆபத்தான ஆபத்தை இன்றைக்கு எதிர்நோக்கியிருக்கிறது தமிழகம். “தீவுத்தமிழ் நிலத்தையும், தீபகற்பத் தமிழ் நிலத்தையும் வல்லாதிக்கங்களின் ஆடுகளமாக்க அனுமதிக்க வேண்டாம்.

திரு தங்கம் தங்கம் அவர்களது பதிவிலிருந்து ...