சென்னைத் துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் கட்டுமானங்கள் கடலியல் சூழலிலும், கடற்கரை பரப்புகளிலும், மீனவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய விளைவுகள் என்ன..என்பதையெல்லாம் ஆராயும் போது, அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரிகின்றன” என்கிறார் கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின்!
உலகக் கடல்கள் ஒரு பேரியக்கம். நகர்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம். காற்று, அலை, ஓதம், நீரோட்டம், மேல்நோக்கிய பெயர்வு (upwelling) என்பதாக விரியும் இவ்வியக்கமே கடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் பல்லுயிர்த் திரட்சிக்கும், அங்கிருந்து பெறுகிற மீன்வளத்துக்கும் இதுவே ஆதாரம். கரையில் நாம் பார்க்கிற கடல், பெருங்கடலல்ல, கடலின் குளம். குடா, வளைகுடா, கரைக்கடல் எனப் பலவாறாக நாம் அழைக்கும் இப்பகுதியில் அலையும் ஓதமும் தவிர, கரைக்கடல் நீரோட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது.
பெருங்கடல் நீரோட்டங்களால் கொண்டு வரப்படும் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பருவம் தவறாமல் கரைக்கு வந்து சேர கரைக்கடல் / நெடுங்கரை நீரோட்டம் (Longshore current) அடிப்படையானது. அதன் ஒரு பகுதியாக மணல் நகர்வு நிகழ்கிறது. உலகின் 3,12,000 கிலோமீட்டர் கடற்கரைகளைத் தழுவிக்கிடக்கும் கரைக்கடலிலும் இந் நகர்வு ஊடறுப்பற்றும், சுழற்சியாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பருவம் தோறும் கரையில் நிகழும் மணல் குவிப்பும் மணல் அரிமானமும் இந் நகர்வின் விளைவுகள்.
இப்படிக் கரையில் குவிகிற மணலின் ஒரு பகுதி, காற்றினால் நகர்த்தப்பட்டு, மணல் குன்றுகளாக மாறுகின்றன. அடிப்படையில், கரையோர மணல் பகிர்மான இயக்கத்தின் (coastal sand sharing system) அடிப்படைக் காரணி இந்த நெடுங்கரை நீரோட்டமே. மனிதக் குறுக்கீடு எழாத வரை கடற்கரை தன்னைப் பராமரித்துக் கொள்ளும். ஆனால், நெடுங்கரை நீரோட்டத்துக்குக் குறுக்காக ஒரு கட்டுமானத்தை அமைத்தால், அதன் இருபுறமும் உள்ள கடற்கரைப் பகுதிகள் சிதையத் தொடங்கும்.
தமிழ்நாட்டில் துறைமுகக் கட்டுமானங்களால் கடற்கரை விளிம்புகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதைக் காலவாரியான செயற்கைக்கோள் தொலையுணரி வரைபடங்களில் தெளிவாய்ப் பார்க்கலாம். முக்கியமாக, கரைக்கடல் மணல் நகர்வில் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள்.
1908இல் சென்னைத் துறைமுகத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், மெரினா என்னும் செயற்கை மணல்வெளி உருவாகக் காரணமானது. ஆனால், துறைமுகத்துக்கு விலையாக வடக்கில் நிறையக் கடற்கரைகளைக் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. மெரீனாவின் ஒரு பகுதி சமாதிகளால் நிரம்பிக் கொண்டிருப்பது கடல் சூழலியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தலைவர்கள் நம் மதிப்புக்குரியவர்கள் தான், சந்தேகமேயில்லை. அவர்கள் பெயரைச் சொல்லிக் கடற்கரைகளையும் கடலையும் காயப்படுத்த நமக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் கேள்வி. ஒரு காலத்தில் சூழலியல் புரிதல் இல்லாதிருந்தோம். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. கருணாநிதியின் சமாதிக்கு நேராக கடலுக்குள்ளே ஏறத்தாழ 360மீட்டர் தொலைவில் ஒரு பாதை உட்பட 8,452சதுரமீட்டர் பரப்பளவில் திட்டமிடப்படுவதாய்ச் சொல்கிறார்கள். நினைவுச் சின்னத்தின் அடித்தளம் கரைக் கடல் நீரோட்டத்தை மறித்து நிற்கும் கட்டுமானமாகும்.
சென்னை துறைமுகத்தால் உருவானதே மிகப் பெரிய மெரீனா கடற்கரை!
சென்னைத் துறைமுகம் தென்புறம் மெரினாக் கடற்கரையை உருவாக்கிவிட்டு, வடபுறத்துக் கடற்கரைகளை விழுங்கத் தொடங்கியது. எண்ணூர் காமராசர் துறைமுகமும் நிறுவப்பட்ட பிறகு, அதன் வடக்காக அமைந்துள்ள கிராமங்களை காணாமலாக்கிவிட்டுள்ளது.
மெரினா உருவாகுமுன், அக்கடற்கரைகள் எப்படியிருந்தன? மீனவர்களுக்கே உரிய தொழில்தள, வாழிடமாகவும் இருந்தவை அப்பகுதிகள். துறைமுகமும் மெரீனாவும் அக் குப்பங்களுக்குப் புதிய சிக்கல்களைக் கொணர்ந்தன.
எம்ஜிஆர் ஆட்சியில், 1985- ல் மெரீனாவை அழகுபடுத்துவதற்காக நொச்சிக்குப்பம் பகுதியில் இரவோடு இரவாக மீனவர்களின் படகுகள் அப்புறப்படுத்தப்பட்டபோது மீனவர்கள் போராடினர். சில உயிர்கள் பலியாயின. பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2003இல் மலேஷியத் தூதரகம் அமைக்க அப்பகுதியைக் கையகப்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியும் மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டன. பிறகொரு கெடுவிதியின் நாளில் விசாலமான அவர்களின் வாழிடங்கள் அடுக்ககங்களாய்ச் சுருக்கப்பட்டன. தையெழுச்சியின்போது நடுக்குப்பம் மீனவர்கள் காவல்துறையினரால் காரணமின்றித் தாக்கப்பட்டனர். பரம்பரைக் குற்றவாளிகள்போல் சித்திரிக்கப்பட்டனர்.
பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்படும் கடுமையான கடலரிமானத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட மெரீனா லூப் ரோடு என்னும் அதிவிரைவுச் சாலை, நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத மதில்சுவராய் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் அச் சாலை பொதுப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுவிட்டது.
எழில்மிகு சென்னைக்கு கடற்குடிகளின் வாழ்நிலம் தேவைப்படுகிறது. விளைவாக கடற்குடிகள் சிறுத்து, காணாமலாகிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பத் திறனற்றுப்போன அவர்களுக்கான சமநீதி விலகியே நிற்கிறது.
பட்டினப்பாக்கமும் அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைகளிலும் நேர்ந்துவரும் கடலரிமானமும் துறைமுகத்தின் தாக்கமே. கருணாநிதி நினைவுச்சின்னம் அமையும் தளத்துக்கு இருபுறமாகவும் கரைக்கடல் நீரோட்டம் திசைதிரும்பி மணல்நகர்வைத் தீவிரமாக்கும் அபாயமும் உண்டு
கடந்த 50 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகள் கடுமையான அரிமானத்துக்கு உள்ளானதற்குப் பல காரணங்கள் உண்டு: 1978இல் விழிஞம் மீன்பிடி துறைமுகம் நிறுவப்பட்ட போது நீரோடி முதல் குறும்பனை வரையுள்ள கடற்கரைகள் அழிவுக்குள்ளாயின. ஏறத்தாழ அதே காலத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குமரிமுனையில் நிறுவிய போக்குவரத்துப் படகுத் துறையினால் கன்னியாகுமரி- சின்னமுட்டம் கடற்கரை பாதிக்கப்பட்டது. நீரோட்டத்துக்குச் செங்குத்தாக ஏராளமான தடுப்புச் சுவர்களை (vertical groynes) அமைத்தார்கள். 2010களில் அமைக்கப்பட்ட தேங்காய்ப் பட்டணம் துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவர் பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர்துறை, இராமன்துறை உள்ளிட்ட கடற்கரைகளில் பெரும் கடலரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவரின் மிகையான நீட்சியால் அழிக்கால் கிராமத்தை மணல் மூடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதக் கடல் சீற்றத்தின் போது அக் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.
குமரி முனையில் திருவள்ளுவர், விவேகானந்தர் நினைவிடங்கள் பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் காலம் தொட்டு கடல் தரையின் தன்மையைத் தழுவி கரைக் கடல் நீரோட்டங்கள் அவற்றின் வழியைத் தீர்மானித்து விட்டிருக்கின்றன என்பதால் இக் கட்டுமானங்களால் சிக்கலில்லை. இருப்பினும், 2004 சுனாமியலை திருவள்ளுவர் சிலைக்கு மேலாக உயர்ந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கடற்கோளை எதிர்கொள்ள என்றுமே நாம் தயாராயில்லை.
குமரி முனையில் பூம்புகார்க் கப்பல்துறையின் படகுத்துறை சூழலியல் சிக்கலை ஏற்படுத்தியது. சிறு கடல்பாலங்கள் கூட பாதிப்பை ஏற்படுத்துபவைதான். குளச்சலில் அவ்வாறான ஒரு கடல் பாலம் இருக்கிறது. அது ஓர் இயற்கைத் துறைமுகம் என்றாலும் கூட கடலரிமானத்தில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்புச் சுவரின் கிழக்கு நோக்கிய நீட்சியினால் அரிமானம் மேலும் கடுமையாகியுள்ளது. அதானியின் 10,000 ஏக்கர் காட்டுப்பள்ளி துறைமுகக் கட்டுமானத்தின் பின்னால் குரலற்ற மக்களின் துயரக்கதை உள்ளது. விழிஞம் அதானி துறைமுகம் கேரள அரசியலைக் கொதிநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை கடலரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்கெனப் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர், வடக்குப் பகுதியில் அரிமானத்தை வேகப்படுத்துகிறது. வட சென்னைக் கடற்கரை நெடுக எழும்பிவரும் தொழில் கட்டுமானங்களால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நேர்ந்து போன சிதைவை சமவெளிச் சமூகம் கவனிக்கவேயில்லை. எண்ணூர் விரைவுச் சாலை, துறைமுகம் அமைப்பதற்காக இருப்பிடம் பறிக்கப்பட்ட மீனவர்கள் அலைகுடிகள் ஆகியிருக்கிறார்கள்.
வடசென்னை நிகழ்காலத்தின் துயர காவியம்.
சென்னையின் ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சியின் கழிவுச் சுமையை அக் குரலற்ற எளிய மனிதர்களின் தலையில் ஏற்றி வைத்துவிட்டோம். 2014-2018இல் தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம் தொடங்கி கூனன்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில் மீனவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது வறண்டுபோன முகங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை முற்றாக இழந்திருப்பதைப் பார்த்தேன்.
“வளர்ச்சியைச் சொல்லி அவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும், வாழ்வாதாரமான கடலையும், கழிமுகங்களையும் பறித்துக்கொண்டு, அங்கு அனல் மின் நிலையச் சாம்பல் கழிவுகளையும் கொதி நீரையும் கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கான சமூக நீதியை மறுத்து வந்திருக்கிறோம். அதைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் நமக்கு இல்லை.” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளார் நித்தியானந்த் ஜெயராமன். சென்னை, திருவள்ளூர்க் கடற்கரைகள் ‘வளர்ச்சியின் காயங்களை’ச் சுமந்துகொண்டிருக்கின்றன.
‘காசிமேட்டுக்கும் எண்ணூருக்கும் இடையில் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம் என்றொரு மீனவர்களின் பெரிய குப்பம் 2017 வரை இருந்தது’ என்கிறார் ஊடகர் தயாளன்:
“இன்று அந்த ஊர் நடைமுறையில் இல்லை. ஆவணங்களிலும் இல்லை. அந்த மக்கள் தூக்கி வீசப்பட்டு விட்டார்கள். காசிமேட்டிலிருந்து தொடர்ச்சியாக ஏராளமான ஊர்களின் பட்டா நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன. ஒரு பெரிய கோவில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இவை எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து போன மாற்றங்கள். மெரினா கடற்கரையும், பெசண்ட் நகர் கடற்கரையும் செயற்கையாக உருவானவை. இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையும் செயற்கையானதே. ஏன்? என்ற கேள்விக்கு பதில் தேடினால் கடலுக்குள் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று புரியும்.”
சென்னை துறைமுகம்
இராணுவம், துறைமுகம் போன்ற சில கட்டுமானங்களை அனுமதிப்பதால் கூட கடற்கரையோர வாழிடங்களுக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாதிப்புகள் எழவே செய்கின்றன. அவை நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத் தேவைகள் என்கிற அளவில் சூழலியல், சமூகவியல் தாக்கங்களைக் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்து, பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு வாழும் பாரம்பரியத் திணைக் குடிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை நிறுவுவதை உறுதி செய்து கொள்வதும் பொறுப்பார்ந்த அரசின் கடமை.
‘‘நகராட்சி எல்லைக்குள் கடற்கரையில் ஒரு பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, ஒரு வணிக மையம் அமைப்பதற்கு, கடற்கரை மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு பெரும் கெடுபிடி செய்யும் கடற்கரை ஒழுங்காற்று / சுற்றுச்சூழல் ஒழுங்காற்று விதிகள் பெரும் கட்டுமானங்களை அனுமதிக்கும் என்றால் சட்டம் யாருக்கானது?’’
2013- ல் நேர்காணல் செய்தபோது மேனாள் குளச்சல் நகராட்சித் தலைவர் ஜேசையா எழுப்பிய கேள்வி இது!
கடலுக்குள் நினைவுச் சின்னம் எழுப்பும் இப்போதைய முயற்சியின் அரசியல் நீட்சி என்னவாக இருக்கும்? அது ஒரு கொடுங்கனவு. இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிற பல புள்ளிகளுக்கும் இம்மாதிரி ஆசை முளைத்து, அவர்களின் வாரிசுகளும், ஆதரவாளர்களும் தமிழ்நாட்டுக் கடல் நெடுக இது போன்ற பலப்பல கட்டுமானங்களைக் கொண்டு வரலாம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைச் சிலாகித்து வேறொரு தரப்பினர் கடலுக்குள் ஒரு ஸ்க்ரூ டிரைவரை நிறுவலாம்; சமய நினைவிடங்களை நிறுவலாம். அந் நாளுக்காக வாய்பிளந்து காத்திருக்கின்ற தரப்புக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுகிற வாய்ப்பு. அரசின் கருவூலம் கரையும்; அல்லது, தகுதியுள்ள மக்களுக்கு வந்துசேர வேண்டிய நிதிச் சேகரங்கள் விதிமீறலாக மடைமாற்றம் ஆகும். பட்டேல் சிலை நிறுவுவதற்கு 2,880 கோடி பணம் அவ்வழியில் திரட்டப்பட்டதே. கெடுவிதியாக, அந்த நிதி ஓக்கி (2017) கேரளப் பெருவெள்ளம் (2018) போன்ற பேரிடர்களின் போது நிவாரணத்துக்குக் கையேந்தி நின்ற மக்களுக்கு உதவவில்லை.
உள்ளூர்ச் சிக்கல்களின் கதை ஒரு புறம் இருக்க, கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அபத்தமாக, வளர்ந்த நாடுகள் கீழை நாடுகளின் மீது பழி போடுகின்றன. பருவநிலை நடவடிக்கைக் குழு என்னும் ஓர் அமைப்பு, அதன் அண்மைக்கால ஆய்வுகளில் அச்சமூட்டும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால் கடல்தொட்டுக் கிடக்கும் சென்னைப் பெருநகரத்தின் பல கிலோமீட்டர் தொலைவு வரை கடலுக்குள் மூழ்கிப் போகும் என்கிறது ஒரு குறிப்பு. எம்.ஜி.ஆர், கருணாநிதி சமாதி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை 2050 இல் கடல் மூழ்கடித்து விடும் என்கிறது இன்னொரு குறிப்பு. கடல் மட்டம் உயர்தலின் முதல் பாதிப்புகளில் ஒன்று நிலத்தடிநீர் உவர்ப்பாகும் நிலைமை. கழிமுகங்களின் சிதைவும் உவர்நீர் இறால் பண்ணைகளின் பெருக்கமும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகக் கடற்கரை இயல்பிலேயே செழிப்பானது, வனங்களும், நன்னீர் நிலைகளும் நிறைந்தது. இன்று ஏறத்தாழ எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். கிண்டி, திருமறைக்காடு வனங்கள் மட்டுமே இன்று மீந்திருக்கின்றன.
2015 சென்னை, கடலூர் பெருவெள்ள நிகழ்வு வெறும் இயற்கைச் சீற்றமல்ல, கடலையும் கடற்கரையையும் இனிமேல் கவனமாய் அணுக வேண்டும் என்னும் இறுதி எச்சரிக்கை மணி.
சேது சமுத்திரம் என்கிற பெயரில் திமுக பங்கேற்ற மைய அரசு 2005 ஏப்ரலில் தொடக்கிவைத்து சற்றொப்ப 2000 கோடி பணத்தைக் கடலில் கொட்டி கோப்பை மூடிவிட்டது. அந்தத் திட்டம் நிற்காது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இன்று போல அன்றைக்கும் சூழலியலாளர்கள் சொன்னார்கள். தொழில்நுட்ப- வணிக அளவிலும், சூழலியல் – வாழ்வாதார அளவிலும் அது பெருந்தோல்வியைச் சந்தித்ததைத் தமிழ்நாடு அறியும்.
இன்றைக்கு அத் திட்டத்தை மீண்டும் துவங்க மாநில, மைய அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. மன்னார்க் குடாவில் 10,500 சதுர கிலோமீட்டர்ப் பரப்பைக் கடலுயிர்க்கோளம் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் மாநில அரசு கடந்த செப்டம்பரில் பாக் நீரிணை பகுதியில் 458ச.கி.மீ பரப்பை கடற்பசு சேமப் பகுதியாக அறிவித்து, கடலைப் பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியது. அதே அரசு இன்று கரைக்கடலில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னத்தை நிறுவ முயல்கிறது. இயற்கைச் சீற்றம் பேரிடர்களாய் மாறுவது மனிதர்களால் தான். சில பேரிடர்கள் மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்றன. சேதுக் கால்வாய்த் திட்டம் அண்மைக்கால சான்று.
மாநில அரசு சென்னை நகரைப் பெருவெள்ளத்திலிருந்து பாதுகாப்பது எப்படி என்று அறிஞர் குழுவை அமர்த்தி ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையின் பெருவெள்ள மேலாண்மையில் பக்கிங்ஹாம் கால்வாய், கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகியவற்றுக்கும் மாமுனி ஏரி, புழல், செம்பரம்பாக்கம், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் போன்ற நன்னீர் நிலைகளுக்கும் பங்குண்டு. 2004 சுனாமியிலிருந்து சென்னை நகரத்தைக் காத்தது பக்கிங்ஹாம் கால்வாய். நிலமோ, கடலோ- நீரின் வழமையான தடங்களை இடைமறிப்பது, பேரிடரை நம் வரவேற்பறைக்குள் கொண்டு வரும் மடமையே.
மெரீனா என்னும் உலகின் இரண்டாவது நீளமான மணல்வெளியை உருவாக்கிய கடலின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மெரீனாவைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் அப் பெருமணல்வெளியின் அழகியலைத் தாண்டி கடலின் பேராற்றல் குறித்த அச்சமே விஞ்சி நிற்கிறது. சென்னை மீனவர்களைத் துயர் மேகம் சூழ்ந்திருப்பதாக உள்ளுணர்வு எச்சரிக்கிறது. பேனா திட்டமிடப்படும் இடத்துக்கு வடக்காக சிறு தொலைவிலேயே கூவம் கழிமுகம் கடலில் இணைகிறது. நினைவுச் சின்னத்தின் முதற்பலி கூவம் கழிமுகம் ஆகும் அபாயமுண்டு. சிக்கல் நினைவுச் சின்னம் அல்ல, அதைக் கடலுக்குள் அமைப்பதுதான்.
பேரிடர்கள் அரசியல் நில எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. அமெரிக்காவோ, ஆரியமோ, கிழக்கோ- எதையும் அவை சட்டை செய்யாது. பருவநிலை மாற்றமும் கடல்மட்ட உயர்வும் உடனடியாய் முகம் கொடுத்தாக வேண்டிய நிகழ் பேரிடர். ஒரு பொறுப்பான அரசு தன் நிலத்தையும் மக்களையும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை ஆய்ந்து, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை நம் நிலத்துக்கு அரணாய் நிற்பது. நிலத்தைப் பாதுகாப்பதன் தொடக்கம் கடற்கரையையும் கரைக்கடலையும் பாதுகாப்பது.
மரம் இல்லையேல் மானுடம் இல்லை!
சூழலியலாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற ஒரு தோற்ற மாயை கார்ப்பொரேட்டுகளால் உருவாக்கப்படுகிறது. அவர்களால் பொய்களை எளிதாக மக்களிடம் விற்க முடிகிறது. ஊடகம் அவர்கள் கையில் இருக்கிறது. மக்கள் பகுத்துப்பார்க்கவும் விவாதிக்கவும் நேரமற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன. கண்களை விற்று ஓவியம் வாங்குவானேன் என்பதுதான் காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பாவைப் போன்றவர்கள் முன்வைக்கும் பார்வை. உடனடி நன்மைகளின் பகட்டு வெளிச்சம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரிருளை மறைத்து விடுகிறது. தனிமங்களின் மீதான பேராசையால் வடகிழக்கில் வனங்களை அழித்தபோது எழுந்த அதே எச்சரிக்கைக் குரல் இன்று கடலின் அழிவு குறித்து எச்சரிக்கிறது. நாட்டுப் பற்றையும் வளர்ச்சியையும் அம்பானிகளின், அதானிகளின் கண்கள் வழியாய்ப் பார்ப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
‘கடல் மட்டம் உயர்தல்’ உலகளாவிய சிக்கல். அதிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் முயற்சியெடுக்க வேண்டிய நேரத்தில் உள்ளூரில் புதிய சிக்கல்களை ஏற்படுத்துவது நன்றன்று. கடலை நோண்டினால் அது நம்மைத் தோண்டி வீசி விடும். அதன் இயல்பான இடத்தையும் இயக்கத்தை நாம் மதிக்கவேண்டும். தவறினால், லூதர் பியுரோங்க் சொன்னது போல, ‘நமக்கு நாமே கொடுந்தீர்ப்பு எழுதிக் கொள்கிறவர்கள் ஆவோம்’.
கட்டுரையாளர்:
வறீதையா கான்ஸ்தந்தின்,
பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்,
தொடர்புக்கு: vareeth2021@gmail.com
நன்றி: அறம் இணைய இதழ்.