புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக