சனி, 21 ஆகஸ்ட், 2021

பெண்களின் புரட்சிகர வாழ்வும் தேவையும்: பாரீஸ் கம்யூனில் பெண்கள் நூல் மதிப்புரை :- க.நாகராசு

 



நிழல் வண்ணன் ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்த்த 'பாரிஸ் கம்யூனில் பெண்கள்' என்ற புத்தகம், பெண்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்வை அறிந்து கொள்ளவும், பெண்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தேவையையும் உணர்த்தும் மிக முக்கியமான நூலாகும். 

கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது என, 1917இல் ரஷ்யப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். 

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. இதில் மனிதன் தலைமையானவன். இயற்கை தன்னுடைய சேவையினை அனைத்து உயிர்களுக்கும் வாரி வழங்குவதில் எந்தவிதமான தர அளவுகோலையும் வைத்து வேறுபடுத்துவதில்லை. இயற்கையே சமத்துவத்திற்கான உச்சம். அதாவது, இயற்கையின் சமத்துவத்தைப் பற்றிப் பேசும்பொழுது வேறுபாடு பார்ப்பதில்லை. உதாரணம், மழைப் பொழிவில் வேறுபாடு இல்லை; வெயில் அடிப்பதில் வேறுபாடு இல்லை; புயலடிப்பதிலும் வேறுபாடு இல்லை; வறட்சி ஏற்படுவதிலும் வேறுபாடு இல்லை; பெரும் நோய்த் தொற்று உருவாவதிலும் வேறுபாடில்லை. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அனைத்து உயிரினங்களுக்குமான  பிறப்பு முதல் இறப்பு வரை எந்த வேறுபாடும் இருப்பதில்லை மனிதனைத் தவிர்த்து.  

மனிதன் வாழும் இவ்வுலகில் இனம், மொழி, சாதி, மதங்கள் இதனோடு கூடவே  வர்க்க வேறுபாடுகளையும் அவன் உருவாக்கினான். அதுவே அவனுக்குப் பெரும் தடைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. இத்தடைகள் அனைத்திற்கும் அவனே உரிமையாளன். 

இவை ஒருபுறமிருக்க, மானுட சமூகத்தின் பகுதிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெண்களின் நிலையோ பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உட்பட்டதாகப்  பல ஆண்டுகள் இருந்து வருகிறது. இன்றைக்குப் பெண்கள் சாதிக்காத துறையே இல்லை என்ற அளவிற்கும், அவர்கள் ஆண்களுக்கு இணையான உரிமையினை முழுவதுமாக அனுபவிக்கும் ஒரு முன்னேற்றமான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும் ஒரு கசப்பான  வரலாறு இருப்பதனைப் போன்று, பெண்களின் உடைமைக்கும் உரிமைக்கும் போராடிய ஒரு  வரலாறு இருக்கிறது.  இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள்,  புரட்சிகள், துன்பங்கள், துயரங்கள் ஏராளம் ஏராளம். அதனால், அவர்களுக்கு  உடல்ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் பட்ட காயங்கள் ஆறினாலும், அவற்றின் வடுக்கள் இன்னும்  ஆறவில்லை. 

இவை மேற்கத்திய நாடுகளில் நடந்த போதிலும், உலக முழுவதிலும் உழைக்கும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளோடு பெரிதும் தொடர்புடையவை. 

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வர்க்க ரீதியாக அதாவது பாலின ரீதியாகப் பார்க்கப்பட்டனர் ஆளும் வர்க்கத்தினரால். மேலும், அவர்கள் அனைத்து நிலைகளிலும் பன்னெடுங்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு உரிமைகள் அற்ற சமூகமாகவும், சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டவர்களாகவும் பெண்கள் இருந்தனர்.  

அவர்கள் இயற்கையளித்த  வாழும் உரிமைக்குக்கூட போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணமான பழமைவாத அதிகார வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுப்பதோடும் மட்டுமல்லாமல், களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். 

அவர்களின் கோரிக்கைகளில் பிரதானமானவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை, சொத்துரிமை, கல்வி உரிமை, கருக்கலைப்பு உரிமை, மணவிலக்கு உரிமை, வேலைவாய்ப்பு, பொதுவெளியில் தன்னுடைய உரிமைக்காகப் போராடுதல், சங்கங்களை அமைத்துப் போராடுதல், சமவேலைக்குச் சம ஊதியம். ஆக, ஒட்டுமொத்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற எண்ணினார்கள்.  

இவைகளை மீட்டெடுக்க வேண்டுமானால், வெறுமனே குரல் எழுப்பிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. இறங்கிப் போராட வேண்டும். இதனை நிறைவேற்றவே பாரிஸ் கம்யூன் உருவாக்கப்பட்டது. 

1870ஆம் ஆண்டு பிரங்கோ பிரஷ்யன் போரில் பிரான்சு முழுமையாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவு, பிரான்சை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர அனைத்து வலிமையான முயற்சிகளையும் பிரஷ்யாவும் பிரான்ஸிலிருந்த பழமைவாத அரசும் பெரும் முயற்சி மேற்கொண்டது. இதனை உடைத்தெறியும் விதமாக அதிகார வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்தினர் கம்யூன்( உலகின் முதலாவது தொழிலாளர் குடியரசின்) ஏற்படுத்தினார்கள். இதில் பெண்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஆயுதங்களைக் கொண்டு புரட்சியினை முன்னெடுத்தார்கள். 'எங்களுடைய தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய உச்சக்கட்ட தருணத்திற்கு நாங்கள் வந்து விட்டோம். இனிமேலும் பலவீனம் இல்லை. இனிமேலும் தயக்கமில்லை. அனைத்துப் பெண்களும் ஆயுதம் ஏந்துவோம். அனைத்துப் பெண்களும் கடமை ஆற்றுவோம். வெர்செயில்சைத் துடைத்தெறிவோம்' என்ற இடிமுழக்கமிட்டார் நதாலிலே மேலி. 

மேலும், இவர் பாரிஸ் கம்யூனில் பங்கேற்று தற்காப்பு மற்றும்   காயமடைந்தோருக்கு உதவும் பெண்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அன்று பாரிஸ் பெண்களைப் போராட தூண்டியது ரொட்டியே(உணவு). இது வெறும் உணவு மட்டுமல்ல, இவை அவர்களை உயிருடன் வைத்திருக்கும் உயிர்க் காற்றைப் போன்றவை. இதனை உறுதி செய்யத் தவறிய ஒரு அரசு இருப்பதைவிட, அதனை அழிப்பதே சாலச் சிறந்ததாகும் என்ற தீர்மானகரமான  முடிவினைப் பெண்கள் எடுத்தனர். அதனை முன்னெடுத்த பாரிஸ் பெண்கள் பழைமைவாத அரசினைத் தூக்கி எறிவதற்கு புரட்சியை உருவாக்கி ஆயுதம் கொண்டு தாக்கினார்கள். அவர்களிடம் இவை போர்க்குணத்தைத் தூண்டியது. இருந்தபோதிலும், இதனைச் சிறுமைப்படுத்தும் நோக்கோடு அங்குள்ள புருதோனின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களோ பெண்களைப் பற்றியான கீழான எண்ணம் கொண்டிருந்தார்கள். 

அதாவது, பாரிஸ் பெண்களுக்குச் சரியான இடம் வீட்டில் மனைவியாக இருப்பது அல்லது பாலியல் பணி செய்வதுதான் என்றார்கள். 

இவை எவ்வளவு பெரிய கொச்சைத்தனமானவை. இதனையெல்லாம் கிழித்தெறிய வேண்டாமா என்று பெண்களே பெண்களை உற்சாகப்படுத்தினார்கள். மேலும், உணர்ச்சி மிகுதியுள்ள பெண்கள் இவ்வரசினை வெறுத்துக் கூறும்போது,  இப்படியாகக் காலம் காலமாக இவை அதிகார வர்க்கத்தின் மனநிலையாக இருப்பதனை வன்மையாகக் கண்டித்ததோடு அதைனைப் பொய்த்துப் போகச் செய்யவே பாரிஸ் கம்யூனில் பெண்கள் புரட்சிகரமாகப் பங்கெடுத்து போராடினார்கள். 

மேலும் அவர்கள் கூறும் பொழுது, இரத்தம் சிந்தும் நிலைமையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் சட்டமன்றத்திற்குப் பழைய அரசாங்கம் இனிமேலும் அதிகாரமில்லை. அரசின் அதிகார மையம் என்று அறிவித்து வெர்செயில் நகரத்து அரண்மனை நோக்கி அணிவகுத்தனர். 

பெண்கள் புரட்சியினை இன்னும் தீவிரப்படுத்தினார்கள். பிரான்சின் பிற்போக்கு தலைவனான அபால்ப் தி யர்ஸ் தொழிலாளர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயற்சி செய்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் , புரட்சிகரப் பெண்கள் அவர்களைச் சுட்டுத்தள்ளவும் செய்தார்கள். 

கம்யூனின் பெண் தலைவராக இருந்த லூயி மிச்செல் அவர்கள், புரட்சியின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கும் அயராது உழைத்தார். உழைக்கும் பெண்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க எலிசபெத் திமித்திரியும் பெண்களின் சங்கத்தை நிறுவினார். மேலும், அரசின் அதிகார கோமகன்கள் 'பெண்கள் என்றாலே கணவனுக்கு நம்பிக்கையான மனைவியாக இருந்து கொண்டு பிள்ளை பெற்றெடுக்க வேண்டும்' என்றார்கள். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். பாலியலுக்கு உள்ளாக வேண்டும். தங்களின் உரிமைக்காக வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது வெளியில் இறங்கி தங்கள் உரிமைக்காகப் போராடக் கூடாது. சங்கங்கள் அமைக்கக்கூடாது என்றெல்லாம் இருந்த பழமைவாத கெட்டி தட்டிப் போன எண்ணங்களுக்குப் பாரிஸ் பெண்கள் சாவுமணி அடிக்கத் தொடங்கினார்கள். 

மேலும், பிற்போக்குப் படைகள் பாரிசின் கோட்டைச் சுவர்களைத் தாக்குமானால் உச்சகட்ட அபாயத் தருனத்தில் பாரிஸின் அனைத்து தடையரண்களிலும்  கோட்டைக்காவல் பகுதிகளிலும்  தாங்களும் தங்களுடைய சகோதரர்களைப் போல, கம்யூனின் அதாவது மக்களின் வெற்றிக்காகவும் பாதுகாப்புக்காகவும்  தங்கள் இரத்தத்தையும் உயிரையும் எப்படித் தருவது என்பதனைப் பாரிசின் பெண்கள் பிரான்சுக்கும் உலகுக்கும்கூட நிரூபிப்பார்கள் என்று அப்பெண்கள் அறிவித்தார்கள்.  இக்கூற்று புரட்சிகரப் போர்களத்தில் பெண்களின் துணிவையும் திறனையும் சந்தேகிக்கும் மற்றும் கீழான எண்ணங்கள் கொண்டிருக்கிற அனைவரின் முகத்திலும் எச்சிலைக் காரி உமிழ்வதனைப் போன்று உள்ளது. 

புரட்சிகரப் பெண்கள் இதோடு நின்றுவிடாமல், இம்மானுட சமூகத்தில் வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும், தாங்கள் இரண்டாம் நிலைக்கும் அதாவது கடைசி நிலைக்கு ஆளாக்கப்படுவதனைத்  தீவிரமாகவும் எதிர்த்தார்கள். மேலும், அவர்கள் இயற்கை உண்மையினைப் பேசத் தொடங்கினார்கள். அதிகார வர்க்க ஆண்கள் எப்படி கருவுற்றுப் பிறந்தார்களோ, அதேபோன்றுதான் நாங்களும் பிறந்தோம். அவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள்? அப்படியேதான் நாங்களும் சுவாசிக்கிறோம். அவர்கள் எப்படி உடல் உபாதைகளைத் கழிக்கிறார்களோ அதே போன்றுதான் நாங்களும் கழிக்கிறோம். என்ன உடல் உறுப்புகளில் மட்டுமே ஒரு சிறிய வேறுபாடு அவ்வளவே. இவை இயற்கையின் உருவாக்கம். இதில் தலையிடுவதற்கு ஏதுமில்லை. 

இந்த அதிகாரத் திமிர் பிடித்த வர்க்கம் மட்டும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். அதனைப் போன்று தாங்களும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவதாகப் பாரிஸ் பெண்கள் தங்களுடைய வேதனையினையும் ஆத்திரத்தினையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால், அதிகார வர்க்கம் இவர்களின் ஞாயமான கோரிக்களை ஏற்க மறுத்தது. இதன் விளைவாகவே புரட்சிகரப் போராட்டத்தில் பாரிஸ் பெண்கள் போராடினார்கள்; அப்படியே வெற்றியும் பெற்றார்கள். 

உதாரணம், என்னதான் புவியின் மேற்பரப்பு கடும் பாறையினால் இறுகிக் கெட்டி தட்டிப் போயிருந்தாலும், பூகம்பம் ஏற்படும்போது  தனக்கான பாதையில்  எவை இருந்தாலும் அதனைத் தகர்த்தெறியத் தயங்குவதில்லை. அதனைப் போன்றுதான் இப்பெண்களும் என்னதான் அவர்களை அதிகார பலம்  தடுத்து இருத்தி வைத்திருந்தாலும், அவர்கள் அதனைப் புரட்சியின் மூலமாக உடைத்தெறிந்தார்கள். 

புரட்சி என்று வந்துவிட்டால் அதில் பாதிக்கப்படுபவர் அவர் இவர் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், அதே சமயத்தில் அதில் பங்கேற்பதற்குக் குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தவிர்த்து அனைவரும் ஒட்டுமொத்தமாகப் புரட்சியில் பங்கெடுக்கும்போது மட்டுமே அப்புரட்சி கண்டிப்பாக வெற்றி அடைந்தே தீரும் என்றனர். 

புரட்சிகர பாரிஸ் பெண்கள், புரட்சியின்போது பாரிஸில் உள்ள டி வில்லா  உணவு விடுதியினைக் கோடாரி, கடப்பாரைகள் கொண்டு அதனை உடைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், புரட்சியினைப் பெண்கள் பாதுகாத்தார்கள். இதன் விளைவு, பெண்கள் ஆண்களை ஆதரித்தார்கள். அவர்கள் செயல்படவும் ஊக்குவித்தார்கள். பிரபலமான சங்கங்களின் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்தார்கள். தெருக்களையும் அவர்களுடைய சொந்த அரசியல் வெளியையும் உருவாக்கிக் கொண்டார்கள். இதில் சேனஸ் நியூ லோடங்கள் பெண்களின் உரிமைக்காகத் தீவிரமாகக் களம் கண்டவர். 

பாரிஸ் கம்யூன் உழைக்கும் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அவை குறிப்பாக ஒட்டுமொத்த  உலகப் பெண்களுக்குமான வாழ்வியல் போராட்டமும் கூட. இங்கு அனைத்துப் பெண்கள் என்பது, மேல்தட்டுப் பெண்களையும்கூடச் சாரும். 

ஏனெனில், அவர்களும் தன்னுடைய அதிகாரத் திமிரில் உள்ள ஆளும் வர்க்கக் கணவனை மீறி அவர்களால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது. இந்த கம்யூனின் புரட்சியின் மூலம் இதுவரை இருந்த மூட நம்பிக்கையான பெண்கள் வீதியில் இறங்கிப் போராட மாட்டார்கள்; வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பார்கள் என்பதனைப் பொய்த்துப் போகச் செய்தது. 

மேலும், உலகில் நடைபெற்ற பல்வேறு பெண்கள் போராட்டத்தை இங்கே விவரிக்கலாம். இன்னும் பெண்களின் பிரதானமான கோரிக்கைகளான சொத்துரிமை, வாக்குரிமை, குடும்ப அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, கருக்கலைப்பு உரிமை, கல்வி, வீட்டுவசதி, சம வேலைக்குச் சம ஊதியம் ஆகியவற்றிற்காகவும்  போராடினார்கள். 

இப்போராட்டத்தில் குறிப்பாகத் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காகப் பொதுவுடைமைத் தத்துவத்தின் மெய்ஞ்ஞானியான காரல் மார்க்ஸ் அவர்கள் புதல்வியான எலியானா மிகவும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 

ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியிலான அரசு அமைய வேண்டுமானால், அங்கு வாழும் தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால், இதுதான் சமத்துவம், உண்மையான ஜனநாயகம் ஆகும். ஆனால், இந்த வாக்குரிமை தகுதியுள்ள பெண்களுக்குப் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டது. என்றைக்கு இவை மறுக்கப்பட்டதோ அன்றே இந்த சமத்துவமும் ஜனநாயகமும் செத்துப் போய்விட்டன. இருந்தும், இங்கிலாந்துப் பெண்கள் தங்களின் தொடர்ப் போராட்டத்தின் மூலமாக அவர்கள் வாக்குரிமை பெற்றார்கள்.1918ஆம் ஆண்டு 30 வயதிற்கு மேற்பட்ட பிரிட்டிஷ் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். அதற்குப் பெண்களின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய சில்வியா பங்குர் ஸ்ட்டின் பங்கு மிக முக்கியமானது. 

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, அன்றும் இன்றும்  பெண்களுக்கான  முழு விடுதலை பற்றிய கோரிக்கைகள்  எழுந்த வண்ணமே இருக்கின்றன. மேலும், இவை பன்னெடுங்காலமாக  ஒருசிலவைகளைத் தவிர்த்துப் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமலே ஏட்டளவிலேயே இருந்தன. 

உதாரணம், பெண்கள் மீதான குடும்ப வன்முறை பல ஆண்டுகளாக நீடித்திருந்த ஒரு பெரும் பிரச்சினை. 1917 போல்ஸ்விக் புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில் தனது மனைவியை அடிப்பதற்கு கணவனுக்குச் சட்டப்பூர்வ உரிமை இருந்தது. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு போல்ஸ்விக் புரட்சி ஒரு முடிவு கட்டியது. மேலும், குடும்ப வேலைகளைப் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு குறுகிய மன நிலை பன்னெடுங்காலமாக அதிகார வர்க்க ஆண்கள் மத்தியில் இருந்து வருகிறது. பெரும்பாலான  ஆண்கள் மத்தியிலும் இந்தப் பொதுப்புத்தி இருக்கிறது. ஏன், வீட்டு வேளைகளைப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்ன? ஆண்களுக்கு இதில் பொறுப்பில்லையா? 

ஒரு ஆண் தன்னுடைய மனைவியைக் கீழான நிலையில்  நடத்துகிறான் என்றால், அதே போன்றுதான் அக்குடும்பத்தில் வளரும் பெண் குழந்தையின் நிலைமையும் எதிர்காலத்தில் இருக்கும். அன்றைக்கு மட்டும் தன்னுடைய பெண் அவளுடைய கணவனிடத்தில் படும் கொடுமையைக் கண்டு ஐயகோ என்று புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?. என்பதனை அதிகார வர்க்க ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

குடும்பப் பெண்களின் நிலைமை பற்றி ஏங்கல்ஸ் அவர்கள், குடும்பத்தில் உள்ள ஆண், அதிகாரத்தை எடுத்துக் கொண்டான். பெண் தாழ்த்தப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டாள். அவள் ஆணின் காமத்திற்கும் அடிமையாகவும், குழந்தைகளைப் பெறும் கருவியாகவும், ஆனால் மனைவியின் கற்பை உறுதிப்படுத்துவதற்காக அதன் மூலம் தனது குழந்தைகளின் பெற்றவனாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவள் கணவனின் அதிகாரத்தால் நிபந்தனையின்றி விடப்பட்டாள். அவன் அவளைக் கொன்றால், அது அவன் தனது உரிமையை நிலை நாட்டுவதாகும் என்பார். இதில் கடைசி வரியை வாசிக்கும் பொழுது மனதினைக் கூடுதலாகவே அழுகிறது. 

இதனை வாசிக்கும் போதே இவ்வளவு பாரத்தை ஏற்படுத்துகிறது என்றால், இக்கொடுமைகளை அன்று அனுபவித்த பெண்களின் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். 

அப்படி என்னதான் பெண்கள் குற்றத்தைச் செய்தார்களாம். 1917 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு மனைவியை அடிப்பது சட்டப்படியான உரிமை என்கிறது. இங்கு அவளைக் கொலை செய்வது கணவனின் உரிமை என்கிறது. என்ன இது  பெண்களாகப் பிறந்தது பெரும் குற்றமா? பெண்கள் இல்லாமல் இவ்வுலகில் ஆண் சமூகம் எப்படி வாழ முடியும்? பெண்கள் இல்லையேல் இவர்களுக்கு ஏது உடல்ரீதியான ஆசை? கல்யாணம்? குழந்தை குட்டிகள் பெற்றுக் கொள்வது, குடும்பம், சமூகம், வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை. இன்னும் சொல்லப்போனால், இந்த அதிகார வர்க்கம் கொண்ட ஆண்கள் தன்னை ஆண் மகன் என்று நிரூபிக்க வேண்டுமானால், இந்தப் பெண்கள் அவசியம் தானே. இல்லையென்றால் அவர்களாகவே எப்படி தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க முடியும். அவர்கள் தனக்குத்தானே பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொள்ள முடியுமா? இல்லையே. பின் ஏன்  பெண்களுக்கு எதிராக அதிகார வர்க்க ஆணாதிக்கச் சமூகம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறது? 

மேலும், ஒருதார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கு என்ற குறிப்பான பண்புடன் முத்திரை பதிக்கப்பட்டதாக இருந்து வருகிறது. பெண்கள் தரப்பில் கற்பு நெறி தவறும் செயல்கள் கண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஆண்களிடம் ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. அல்லது இன்னும் ஒரு மோசமாக அவன் உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறு ஒழுக்கக் குறைபாடாகக் கருதப்படுகிறது. 

அது எப்படி ஆண்களுக்கு என்ன பாலியல் உணர்வு இருக்குமோ, அதே போன்றுதான் பெண்களுக்கும் இருக்கும். இதில் ஆண்கள் மட்டும் தன்னுடைய செயலினை எப்படி பெருமையாகக் கருதலாம். இவை முரணனவை. இவை பாலியல் தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல. பெண்கள் என்றைக்கு அவள் ஆணுக்குள் அடங்கியவள் அல்லது அடக்கப்பட்டவள் என்ற அதிகாரத் திமிர் கொண்ட என்ணத்தினால் விளைந்தவை. ஒருவேளை அன்றைய நிலையில் பெண்ணானவள் பெரும் அதிகாரத்தோடு பண பலத்தோடு இருந்தாலும், ஆண்களைப் போன்று இந்தக் கேவலமான நிலையில் நடந்து கொண்டால் அல்லது முயற்சி செய்தால் ஒரு சாதாரண கடைநிலைப் பெண்ணுக்கு என்ன ஒரு அவமானம் ஏற்படுமோ அதே அவமானம்தான் அந்த அதிகாரத்தில் உள்ள பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்கும். 

பெண்களின் இப்படிப்பட்ட வன்முறையினை வி.ஐ.லெனின்  குடும்ப அடிமைமுறை என்று சாடுகிறார். பொதுவாக ஆண்டான் அடிமை என்பது அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இங்கு இதே போன்று குடும்பத்தில் இருப்பதனை வி.ஐ.லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

கணவன் முதலாளியாகவும் மனைவி அவனுக்குத் தொழிலாளியாகவும் எந்தவிதமான எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிசெய்து கிடைக்க வேண்டும் என்பதனையே விரும்புகிறான்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்த ட்ராட்ஸ்கி, வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு அவற்றைப் பெண்களின் கண்களால் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான சுரண்டலினை என்றைக்காவது இந்த ஆணாதிக்கம் கொண்ட சமூகம் பெண்கள் கண்கொண்டு பார்த்து இருந்தால் மட்டுமே தெரியும், அவர்களின் வலியும் வேதனையும் என்னவென்று.

பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் சிரமங்களுக்கு எல்லையில்லை. குறிப்பாக, பெண்கள் பருவ வயதை எட்டும் பொழுதே அவளுடைய உடல் உபாதைகள் தொடங்க ஆரம்பிக்கின்றன. இவை இயற்கையானவையாக இருந்தாலும் அவை அவளுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உபாதையாகவே இருக்கிறது. மேலும், கருவுற்ற பின்பு குழந்தையைச் சுமப்பது, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது அவள் படும் உச்சக்கட்ட வேதனை. அதாவது, அதனைப் பெற்று எடுப்பதற்குள் மரணத்தின் எல்லையைத் தொட்டு விட்டு வருகிறாள். சில நேரங்களில் அவள் அங்கேயே மடிந்து போகிறாள். இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியே நடமாடும் பொழுது மோசமான எண்ணம் கொண்டவர்களின் காமக் கொடூரங்களுக்கும், பாலியல் ரீதியான தொல்லைகளுக்கும்  ஆட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், வீட்டு வேலைகளான துணி துவைப்பது, பராமரிப்பது, குழந்தைகளைப் பாதுகாப்பது, கால்நடைகளைப் பராமரிப்பது போன்ற அத்தனை வேலைகளுக்கு  மத்தியில் அவள் தன்னை நிலைநிறுத்தம் செய்யவேண்டியிருந்தது.

இந்த நிலையினை ஒவ்வொரு ஆணும் குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரமாவது செலவழித்துப் பெண்கள் கண்கொண்டு பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு சவால்களையும் தாண்டி, பெண்கள் அதனை எதிர்த்துப் போராடி புரட்சி செய்து வெற்றி பெற்றிருப்பதை உலக நாடுகளில் பெண்களுக்கான வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தையும் பெண்கள் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக சில்வியா பங்குர் ஸ்ட் செயல்பட்டார். ஆண்களைவிட குறைவான சம்பளமே இவர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டதோடு அவர்களுடைய உழைப்பு முழுவதுமாக முதலாளிகளால் சுரண்டப்பட்டது. அதாவது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை; வாரத்திற்கு  48 மணி நேரம் வேலை. மேலும், பெண்கள் தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்துடன் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். குறிப்பாக, பெண்கள் சுரங்கத் தொழிற்சாலையிலும், வெடிமருந்துத் தொழிற்சாலைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். குறிப்பாக, முதலாம் உலகப் போரின்போது அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். காரணம், ஆண்கள் போருக்குச் சென்றதன் விளைவு. முதலாளிகளின் தொழிற்சாலைகள் உற்பத்தியும் அவர்களின் மூலதனப் பெருக்கத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. ஆண் தொழிலாளர்கள் இல்லாததால் இதனை ஈடு செய்வதற்காகவே பெண்கள் தொழிற்சாலைகளில் அதிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளமும் மிகமிகக் குறைவு. இதனோடு கூடவே ஜெர்மனியின் நாஜிக்கள் பெண்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களைத் தாய்மை காக்கும் பணியில் இருக்க வேண்டும் என்றும், மேலும், நாஜிக்கள் திருமணமாகி 5 ஆண்டுகள் வரை குழந்தைகள் இல்லாமல் இருந்த இணையர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டனர். மேலும் 4 அல்லது 5 குழந்தைகள் பெற்றவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. இன்னொருபுறம் நாடோடிகளுக்கும் இனச்சிறுபான்மையினருக்கும் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது .

இதனையும் தாண்டி, பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தொழிற்சாலைகளில் ஆபத்தான இயந்திரங்களுக்கு மத்தியிலும் பல்வேறு நோய்த் தொற்றுக்களை உருவாக்கும் சூழலிலும் அவர்கள் வேலை செய்தார்கள்.

அங்கு நடைபெற்ற கொடுமைகளை 1813 ஆம் ஆண்டு கம்பிரியாவில் வொயிட் ஹேவன் சுரங்கத்தில் பெண்கள் வேலை செய்வதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்.

பெண்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாக இருந்தனர். கரிப்புழுதியில் கருத்துப்போய் இருந்தனர். மனித இனத்தில் இருந்து தோன்றிய ஒரு இழிந்த அருவருப்பான பிறவிகள் போலத் தோன்றினர். அவர்களுடைய கால்களும் முதுகு வளைந்து போய் துன்புற்றனர்.  வயிற்று வலி மற்றும் நுரையீரல் நோய்களால் துன்புற்றனர். அவர்கள் கருத்தரித்தரிந்த நேரங்களில் மிகவும் மோசமான சிக்கல்களையும் எதிர்கொண்டனர் என்கிறார்.

மேலும், பெண்கள் அதிக அளவில் ஜவுளி தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தனர். அங்கு வேலை பார்த்த பெண்களில் கருவுற்றவர்களில் 30% குழந்தைகள் கருவிலேயே அழிந்து போயின. வேலை போய்விடும் என்ற அச்சத்தால் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் குழந்தை பிறந்த மூன்று வாரங்களில் வேலைக்குத் திரும்பினர். சில நேரங்களில் குழந்தைகளைத் தொழிற்சாலைகளுக்கே கொண்டுவந்து இடைவேளையின்போது பாலூட்டினார்கள். சில பெண்கள் தொழிற்சாலைகளிலேயே குழந்தை பெறும் வரை வேலை செய்தனர். வீட்டில் விட்டுவிட்டு வரப்பட்ட குழந்தைகள் அமைதியாகத் தூங்குவதற்கு அபினி (போதைப்பொருள்) கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடுமைகளைப் பெண்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இதனை எதிர்த்து மிகத்தீவிரமான போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றிகளை நோக்கிப் பயணித்தார்கள்.

இதன் விளைவு, 1885இல் தொழிற்சங்கப் பேராயம் பெண்களின் ஊதிய உயர்விற்கான தீர்மானத்தினை இயற்றியது. 1936 இல் இரவு நேர வேலை ஒழிக்கப்பட்டது. 1962இல் போர்டு நிறுவனத்திற்கு எதிரான ஊதிய உயர்வு பெறும் வெற்றி பெற்றனர். 1975இல் பாலினப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இரட்டைச் சுமை (வீடு மற்றும் வேலைக்குச் செல்லுதல்) எதிரான கடுமையான எச்சரிக்கையைப் பெண்கள் முன்னெடுத்தார்கள். இருந்தாலும், முதலாளி வர்க்கம் பாலின அடிப்படையில் பிரித்தாலும் கொள்கையை எப்போதுமே பின்பற்றி வருகிறது என்றார்   பார்பரா கம் ஃபீரிஸ்.

ஆம், இந்தப் பிரிவினைகளைத் தோற்கடிக்கப்பட வேண்டுமானால், அவர்களுக்கு கம்யூனிசத்துடன் கூடிய பகுத்தறிவினை, அதாவது மெய்ஞான அறிவினைக் கொண்டு பயிற்றுவிக்க வேண்டும். மேலும் எங்கெல்லாம் அரசாளும் வர்க்கங்கள் ஒற்றுமையாக இருக்கிறதோ, அந்தத் தேசங்கள் எல்லாம் வர்க்கப் பிரிவினையான ஆண்கள் பெண்கள் முதலாளிகள் தொழிலாளிகள் மேலும் கீழும் என்ற வர்க்க வேறுபாடுகள் கண்டிப்பாக இருக்கும்.  அதே வேளையில், எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் இந்த வேறுபாடுகள் இருப்பதற்கு எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை. மேலும், இப்படிப்பட்ட அரசாங்கத்தின் கீழ் வர்க்கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்துடன் உறுதியாக இணைக்க வேண்டியது அவசியமாகும். இது தான் வெற்றிக்கான ஒரு சாத்தியமான பாதையாகும்.

இறுதியாக, ஆளும் வர்க்கத்தை வேறு எந்த வழியிலும் தூக்கி எறிய முடியாது என்பதால் மட்டுமல்ல, அதைத தூக்கி எறியும் வர்க்கம் ஒரு புரட்சியால் மட்டும் தான்  பழைய கழிவுகள் அனைத்தையும் கைவிட்டு, சமுதாயத்தைப் புதியதாக நிறுவுவதற்குப் பொருத்தமானதாக ஆக்க முடியும் என்பதாலும், புரட்சி இன்றியமையாததாகும் என்று வாதிட்டார் மார்க்ஸ்.

இனஸ்ஸா அர்மான்ட் கூறியதைப் போன்று, கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது என்பது எதார்த்த உண்மையாகிறது. இதை இயற்கையின் அனைத்திற்குமான விடுதலையினையும் உரிமைகளையும் நினைவுபடுத்துவதாக உள்ளது.

இங்கு, ஏன் பெண்களின் விடுதலை அவசியமாகிறது எனும்போது அங்கு பொதுவுடமை தேவைப்படுகிறது. அதாவது, தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பதனைப் போன்று.

கம்யூனிசம் அனைத்துலக ஒடுக்கப்பட்ட - அடக்கி வைக்கப்பட்ட - சுரண்டலுக்கு உள்ளானவர்களுக்கான ஆயுதமாக, குறிப்பாகப் பெண்களின் விடுதலைக்கான தேவையாக இருக்கிறது. இவர்களுக்கான விடுதலையைப் பிடித்து வைத்திருக்கும் இருத்தல் தன்மை கொண்டவர்கள்  யார் என்னும்போது அதிகார வர்க்கமான ஆளும் வர்க்கம் தான் என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்தது.

இந்தத் தனியுடைமை கொண்டோரின் சுதந்திரமும் உயர்வும் மேன்மையும் உழைக்கும் வர்க்கத்தினரின் சுரண்டலின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிமைத்தனம் வெகுகாலம் நீடிக்கவில்லை. எந்த ஆயுதத்தைக் கொண்டு சக மனிதனை அடிமைப்படுத்தியதோ, அதே ஆயுதத்தைச் கொண்டு உழைக்கும் வர்க்கம் குறிப்பாக பெண்கள் பாரிஸ் கம்யூன் மூலம் வீழ்த்தி வெற்றி கண்டார்கள்.

மேலும், எவையெல்லாம் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு சுரண்டலுக்கு உள்ளான அனைத்தும் இந்த பொதுவுடைமைச் சிந்தனை கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வெற்றிகளைப் பெற்றன.

இந்தக் காலனியத்தின் தொடக்கம் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புவியியல் கண்டுபிடிப்பே காரணம். இக்காலனிய ஆதிக்கத்திலிருந்து  விடுதலை பெற்ற தேசங்கள் விடுதலையைத் தன் நாட்டிலுள்ள அனைவருக்குமான விடுதலையாகப் பார்க்கத் தவறியது. குறிப்பாக, பெண்கள் விடுதலையை. இங்கு ஏன் பெண்கள் விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது என்றால், அது அவர்கள் வாழும் தேசத்தில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்படும் போது இவை எழுகிறது.

குறிப்பாக, மன உரிமை, மணவிலக்கு உரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, குடும்ப வன்முறையில் இருந்து விடுதலை. இந்தக் குடும்ப வன்முறை பற்றி லெனின் அவர்கள் கூறும் பொழுது, இவை குடும்ப அடிமைத்தனம் என்கிறார். மேற்சொன்ன உரிமைகளை இது நாள் வரை அதனைக் காலனியமாகக் கொண்டவனிடம் கோர முடியாது. அவர்கள் தன்னுடைய தோல்வியைத் தழுவிய அன்று தங்களுடைய கூடாரத்தினை அத்தேசத்திலிருந்து காலி செய்துவிட்டனர்.

இங்கு பெண்களுக்கான விடுதலை என்பது தன்னுடைய தேசத்தில் உள்ள  ஆட்சியாளர்களைச் சார்ந்தது. இதற்காக அவர்கள் தங்களுடைய விடுதலை பெறுவதற்காக இரண்டாவது விடுதலைப் போரினை அதாவது சாத்வீகமான முறையில் நடத்தப்பட வேண்டியிருந்தது. இதனையும் இந்தப் பொதுவுடமை முன்னெடுத்து அவர்களுக்கான விடுதலையினையும், உரிமைகளை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றன.

இந்தப் பொதுவுடைமை சிந்தனை தான் அனைத்துக் காலனியத்திற்குமான விடுதலைக்கு வித்திட்டது. இல்லையேல், அவைகள் இன்னும் காலம் காலமாக அடிமைத்தளையில் அடையாளமாகவே நீடித்திருக்கும். அதேபோன்றுதான் பெண்களின் விடுதலையும் ஆகும்.

கண்டிப்பாக, வர்க்கமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ அரசினாலோ, முதலாளித்துவ ஜனநாயக அரசினாலோ, போலியான ஜனநாயக அரசினாலோ கண்டிப்பாக உருவாக்கித்தர முடியாது. ஏனெனில், பெண்களுக்கான விடுதலையினை இறுக்கிப் பிடித்து வைத்திருப்பது இவைகள்தான். அதனால், பொதுவுடைமை என்னும் மெய்ஞான விஞ்ஞானத் தத்துவத்தின் மூலம் மட்டுமே பெண்களுக்கான பரிபூரண விடுதலையும், அவர்களுக்கான  ஆரோக்கியமான வாழ்வியல் சூழ்நிலையும் ஏற்படுத்தித் தர முடியும்.


நூல்:
பாரிஸ் கம்யூனில் பெண்கள்.

கட்டுரையாளர்கள்:
கிறிஸ்டினா கிரிட்லி-கரோலின் கெம்ப், ஆலன் உட்ஸ், பார்பாரா ஹம்ஃபிரீஸ், ஷெரான் ஸ்மித்

ஆங்கிலம் வழித் தமிழில்:
நிழல் வண்ணன்.

வெளியீடு:
விடியல் பதிப்பகம், கோவை.
முதற்பதிப்பு, மே 2016.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

எங்கெல்சின் அநாகரிக நிலையும் நாகரிக நிலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு




பிரெடரிக் ஏங்கல்ஸ் அவர்கள் எழுதிய 'அநாகரிக நிலையும் நாகரீக நிலையம் என்ற நூலினை அண்மையில் வாசித்தேன். இந்நூல்  மனித சமூகத்தின் பல்வேறு அடிப்படை விடயங்களை மெய்யான ஆராய்ச்சியின் மூலமும் தெளிவான ஆதாரங்களுடன் விளக்குகிறது.

முதலாவதாக, அன்றைய சமூகமானது பொதுவுடமைத் தன்மை கொண்டது என்பதனையும், 

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினையின் இயற்கைத்தோற்றம் பற்றியும், 

மூன்றாவதாக, கால்நடை வளர்ப்பும், அவை எப்படி பரிமாற்றுப் பண்டமாக உருவானது என்பதனையும்,

நான்காவதாக, பயிர்த்தொழிலிளிருந்து கைத்தொழில் எவ்வாறு உருவானது என்பதனையும், 

ஐந்தாவதாக, உழைப்புச் சக்தியின் தேவை எப்படி அடிமைகளைப் பெற்றெடுத்தது என்பதனையும், 

ஆறாவதாக, இரும்பு எப்படி வேளாண்மையையும்  போரினையும்  ஊக்கப்படுத்தியது என்பதனையும் தெளிவான விளக்கங்களுடன் விளக்குகிறார்.

முதலாவதாக, அன்றைய இனக்குழுவானது தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தது. அங்குள்ள அனைத்து உடைமைகளும் பொதுவானதாகவே இருந்தது. அதனால், அவை  பொதுவுடமைச் சமூகமாகத் தனித்தன்மை பெற்று விளங்கியது. இருந்தபோதிலும் ஒரு குழுவினுடைய ஊடைமையினை இன்னொரு குழு அபகரிப்பது இயல்பாக இருந்தது. இதன் விளைவு போர்.  இனக்குழுக்களுக்கிடையே  கடுமையான சண்டைகள் நடைபெறும். இப்போரில் ஒரு இனக்குழு அடியோடு அழிந்து போகுமே தவிர அடிமைப்படாது என்கிறார் ஏங்கல்ஸ். அப்படி என்றால், அக்காலத்தில் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது. அன்றைய சமூகத்தில் தனி உடைமை என்ற ஒன்று இல்லாததால் ஆள்வோரும் இல்லை; ஆளப்படுவோரும் இல்லை. இன்றைய நிலைமையோ இதற்கு முற்றும் முரணாக இருக்கிறது. அதாவது தனியுடமை அதிகார வர்க்கம் என்ற ஒரு கொலைகாரத் தன்மையினைப் பெற்றெடுத்தது. இவை, மேலும் வர்க்கப் பிரிவினையை உருவாக்கியதோடு, பல்வேறு சாதி மதங்களின் தோற்றத்தற்கு வழிகோலியது. இதில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதிகாரமற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குரல்வலைகள் முற்றிலுமாகப் பலவகைகளில் நெரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள  நாம் இக்கொடுமையினைக் கானாத நொடியே இல்லை எனலாம்.

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினை பற்றி பேசுகிறார். உழைப்புப் பிரிவினை என்பது இயற்கையின் வளர்ச்சியே என்கிறார் எங்கெல்ஸ். ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது உணவுகளைச் சேகரிப்பதும் தனக்கான பாதுகாப்பான இருப்பிடத்தை அமைப்பது மட்டுமே பிரதானமாக இருந்தது. இதில் ஆண்களும் பெண்களுமாகச் சரிசமமாக ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், காட்டு விலங்குகளை வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்திய போது இதனைப் பராமரிப்பதிலும், குழந்தைப் பேரினைப் பெற்றெடுப்பதிலும் அதனைப் பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டிய நிலையிலும் பெண்கள் தான்  ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது இயற்கையாகவே உருவானது. அதனோடு கூடவே  கால்நடைகளிடமிருந்து பால் கறப்பது, அதிலிருந்து பால் பொருட்களைத் தயாரிப்பது போன்றவைகளையும்  பெண்களே மேற்கொண்டனர்.

இன்னொன்று மிக முக்கியமானது, தொடக்கத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை உற்பத்திச் செய்வதற்காகவே தொடங்கப்பட்ட வேளாண்மை, பின்பு அவை மனிதனுக்கு உணவினை உற்பத்தி செய்யக்கூடிய வேளாண்மையாக மாறியது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது, கால்நடைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வீட்டில் இருக்கும் பெண்களைச் சார்ந்தது என்றால், இந்த வேளாண்மையையும் தொடக்கத்தில் மேற்கொண்டது பெண்கள் தான் என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. இதனை மேம்படுத்துவதில் தங்களுடைய பங்களிப்பை ஆண்கள் செலுத்தியிருக்கலாம் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் உணவு உற்பத்திக்கான வேளாண்மையினைக் கண்டுபிடித்தது பெண்களே. ஒரு நாகரிகத்தின் முதன்மை அடையாளமே இந்த வேளாண்மையே தான். அதுதான் உணவு உற்பத்தி. இதுவே நாடோடி வாழ்க்கைக்கு முடிவுகட்டியது. அப்படி என்றால், நாகரீகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் இந்தப் பெண்கள் தான் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆண்கள் காட்டில் வீட்டில் பெண்கள் என்கிறார் ஏங்கெல்ஸ்.

மேலும், அவர் ஆண் தன்னுடைய துறையில் எஜமானனாக இருந்த மாதிரி பெண் தன்னுடைய துறையில் எஜமானியாக இருந்தார் என்கிறார்.  இதில் அதிகாரம் உள்ளவர், அதிகாரமற்றவர் என்ற பிரிவினையே கிடையாது. இருவரும் சமமானவர்கள் தான். இருந்தாலும் தனியுடைமையின் மோசமான விளைவுகளால் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது வெட்கக் கேடானது. இன்றைய எதார்த்த உலகில் இந்த இருவருக்குமான வேறுபாடானது இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் தான், இன்னும் பெண்களுக்கு முழு உரிமை வழங்க வேண்டும் என்ற பலமான முழக்கங்களை கேட்டுக் கொண்டேயிருக்க முடிகிறது. காரணம், பெண்கள் இன்னும் ஆண்களுக்குச் சமமான உரிமையினை முழுமையாகப் பெறவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இதனை எப்படி விளங்கிக் கொள்வதென்றால், உதாரணம் பெண்களுக்குச் சமமான உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தினை யாராவது பேசியோ அல்லது எழுதியோ பார்க்க முடிகிறதா? இல்லையே. அப்படி என்றால் பெண்கள் இன்னும் ஆனாதிக்கச் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

மேலும், அன்றைய  திருமண முறை இணை மண முறை  என்கிறார் ஏங்கல்ஸ். அதாவது, பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டுமே தெரியும், இது யாருடைய குழந்தை என்று. ஆனால், தகப்பனுக்கு அவ்வளவு எளிதாகத் தெரிவதில்லை. அதனால் தான், தொடக்ககாலச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தாயே முதன்மையானவளாக இருந்தாள். அன்று ஆண்கள் அனைவரும் கணவன்மார்கள், பெண்கள் அனைவரும் மனைவிமார்கள் என்ற நிலைதான் இருந்தது. பன்னெடுங்காலத்திற்குப் பின்புதான் ஒருதார மணமுறை உருவானது. இவை காலப்போக்கில் தகப்பன் குலத்தினைப் பெற்றெடுத்தது. அவை இன்றுவரை தொடர்நது கொண்டே வருகிறது.

மூன்றாவதாக, அநாகரிகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன என்கிறார் ஏங்கல்ஸ். அவர்   எழுதும் பொழுது பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றதுதான் சமுதாயத்தில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை என்கிறார். ஆம் உண்மைதான் பன்னெடுங்காலமாக உணவுக்காக அலைந்து திரிந்த  இந்தக் கூட்டமானது,  கால்நடைகள் மூலமாக முதன்மைத் தேவையான உணவுத் தேவையினை நிறைவேற்றிக் கொண்டது. மேலும், கால்நடைகள் என்ற பண்டமோ  மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவதற்கான பண்டமாக ஆயிற்று என்றும், மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவாதற்குரிய பண்டமாக  ஆயிற்று. அது எங்குமே மறுப்பில்லாமல் பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், அன்று யாரிடம் அதிகமான கால்நடைகள் இருக்கிறதோ அவர்கள்தான் அனைத்து நிலைகளிலும்  தன்னிறைவு பெற்ற குழுக்களாக இருந்திருக்கிறார்கள். அன்று கால்நடைகள் தான் முதன்மையான செல்வமாக இருந்திருக்கிறது. கால்நடைகளைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் போர்கள் நடந்தேரின. இந்திய வரலாற்றில் வேத காலத்தில் கால்நடைகளைக் கைப்பற்றுவதற்குப் பெரும் போரே நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், சங்ககாலத்தில் ஆநிரை கவர்தல் என்பதன் மூலமும் கால்நடைகள் எந்த அளவிற்கு  அதி முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்தக்  கால்நடைகளில் பசுமாடு தான் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இவைதான் அன்றைய மனிதர்களுக்கு அனைவருக்குமான உணவு தேவைகளைப் பூர்த்தி செய்தது. அதேநேரத்தில்  இன்னொன்றினையும் புரிந்துகொள்ளவேண்டும். பசுமாட்டிற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் காளை மாட்டிற்குப் பெரிய அளவில் கொடுக்கப்படுவதில்லை. இவை ஏனோ முற்றும் முரணாக உள்ளது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுமாடு கன்றுகளை ஈன்றெடுப்பதற்கும், உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால்  காளை மாடு அவசியம். காளை இல்லையேல் பசு இல்லை, பசு இல்லையேல் காளைகள்  இல்லை என்பது தான் உண்மை.  இருந்த போதிலும் காளையின் முக்கியத்துவத்தை தமிழ்ச்சமூகம் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறது.  

காளைகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதோடு அவைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அதனுடைய வலுவினை வெளிப்படுத்தும் விதமாக காளையர்கள் காளைகளுடன் கட்டித்தழுவும் ஏறுதலுவுதல் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இதனை முனைவர் ஏர் மகாராசனின் ஏறு தழுவுதல் என்ற நூலில் கானமுடிகிறது. இவை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பொங்கலை முன்னிட்டு  நடத்தப்படுகிறது. 

மேலும், கால்நடைகளில் செம்மறி ஆடுகள் அவசியம் அதி முக்கியமானவை. அக்காலகட்டத்தில் பனிப்பிரதேசத்தில் இனக்குழுக்கள் வாழ்வதற்கு அச்சாணியே இந்த செம்பரி ஆடுகள் தான். அவை அவனுக்கான உணவினைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவனுக்கான ஆடையினையும் கொடுத்தது. அதாவது அதன் ரோமங்கள் ஆடையாகவும் கம்பளி தயாரிக்கவும் பயன்பட்டது.இவை  அவர்களை பனிப்பிரதேசத்தில் வாழும் சூழலினை ஏற்படுத்திக்கொடுத்தது. பனிப்பிரதேசத்தில் வாழும் இக்லு குழுவை உதாரணம் காட்டலாம்.

 நான்காவதாக, உழைப்பினால் உற்பத்தியினை அதிகப்படுத்துவதனைப் பற்றி எழுதுகிறார். அன்றை காலகட்டத்தில் உழைப்பு மட்டுமே அவனுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் முதன்மைத் தன்மை கொண்டதாக இருந்தது. தனியுடைமை வலிமையடைந்ததன் விளைவு இன்னும்  கூடுதல் உழைப்பு சக்தி தேவைப்பட்டது. அதனை தன்னிடமுள்ள குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை வைத்து நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு ஏராளமான ஆட்கள் தேவை. இந்த ஏராளமான ஆட்களைப்பெற வேண்டுமானால் இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று, தன் இனத்தில் கூடுதலான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இதற்கு நெடுங்காலம் பிடிக்கும். அதனால் இவை இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. மற்றொன்று, மற்ற குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போரின் மூலமாக  வென்று அவர்களை அடிமைகளை  மாற்ற வேண்டும். இதில் இரண்டாமானவையினைத் தேர்ந்தெடுத்தது. போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கி, அவர்களின் உழைப்பினை தன்னுடைய தேவைக்கும் மீதமான உழைப்பினைப் பல்வேறு உற்பத்திக்காக மடைமாற்றம் செய்தனர். விளைவு, உற்பத்தி அதிகமானதும் தன்னுடைய தேவைக்குப் போக மீதியினை  வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவு வணிகம் உருவானது. மேலும், வணிகத்தின் மூலம் அபரீதமான பொருளாதாரத்தினைப் பெற்றெடுத்ததின் விளைவு, அதற்கு  மீண்டும் மீண்டும் உழைப்புச் சக்தியின் தேவை அதிகமாகி கொண்டே சென்றதால் அடிமைகளுக்கான தேவையும் அதிகமாக கொண்டே சென்றது. அதற்காகக் கொலைகார யுத்தங்கள் நடந்து கொண்டே இருந்தன. இதில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று உண்டு. அதாவது, அன்றைய அரசாட்சிகள் செல்வச் செழிப்போடு மின்னியது என்றால், அவைகள் அனைத்துமே இந்த அடிமைகளின் உழைப்பினால் விளைந்தவையே. அதாவது சாலை போடுவது, அரண்மனை கட்டுதல், கால்வாய் வெட்டுதல், வேளாண்மை செய்வது,  போருக்கான குதிரைகள் யானைகள் பராமரிப்பது ஆகியவைகளில் அடிமைகளின் உழைப்பை காணமுடிகிறது. மேலும்  இன்றைய அனைத்து நினைவுச் சின்னங்களிலும் லட்சக்கணக்கான அடிமைகளின் உழைப்பினைக் காண முடியும்.  அரசரும் அவருடைய ஆட்சியும்  உச்சத்தில் இருந்தது என்றால், அடிமைகளின் உழைப்பு உச்சபட்சமாக வழிந்து பெறப்பட்டது.

ஐந்தாவதாக, ஏங்கல்ஸ் அவர்கள் அநாகரிக நிலையினை நாகரீக நிலைக்கு மாற்றுவதில்  இரும்பு முதன்மையான பங்கினை வகித்தது என்கிறார். இரும்பின் பயன்பாடு  அளப்பரியது. காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றுவதற்கும் போர் ஆயுதங்களைச் செய்வதற்கும் இன்னும் பலவகைகளில் இரும்பு உலோகம் பயன்படுத்தப்பட்டது.

இறுதியாக, பொதுவுடைமை சிதைந்து, தனி உடைமை உருவானதினை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்தத் தனியுடைமை தான் மானுட சமூகத்தின் முதன்மையான எதிரி. பண்டைய பொதுவுடைமைச் சமூகம் என்பது அடர்ந்த வனத்தைப் போன்றது. அது அத்தனை உயிர்களுக்குமான உயிர்நாடி; அனைத்து உயிரினங்களுக்கும் உணவினைக் கொடுக்கிறது; இருப்பிடத்தை கொடுக்கிறது; மனிதனுக்கு உணவோடு கூடவே பொருளாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கிறது. இயற்கை சமநிலையைப் போற்றி பாதுகாக்கிறது; மழை பொழிவைத் தருவிக்கிறது; மண் அரிமானத்தைத் தடுக்கிறது; பிராண வாயுவினைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது, இப்படியாக எண்ணிலடங்கா நன்மைகளை இந்தக் காடுகள் செய்துகொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட காட்டினை அழிக்க நினைப்பது  கொடுமையிலும் கொடுமை தான். இதேபோன்றுதான், மானுடத்தினை முதன்மையான உச்சத்தில் வைத்திருந்த பொதுவுடமை தனியுடைமையினால் சிதைந்தது. இந்தத் தனியுடைமை அதிகாரத்தினைப் பெருக்கியதோடு ஆயுதங்களையும் உற்பத்தி செய்தது, அதோடு கூடவே கொடும் போர்களையும் வழிந்து ஏற்படுத்தியது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் செயலினை வார்த்தெடுத்தது. நாட்டினைத் தன் வசமாக்கி, தன்னுடைய செங்கோலில் அனைத்து குடிகளின் உயிரையும் பிடித்து வைத்திருந்தது. விளைவு புரட்சி, போராட்டம். இவைகள் அனைத்துமே மேலே உள்ளவைகளுக்கு முடிவு கட்டினாலும், மீண்டும் அதிகார வர்க்கம் புதுமையான வடிவத்தில் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. உழைப்பின் மூலமாகப் பொருளாதாரத்தைப் பெற முடியும் என்ற நிலை மாறி, கொள்ளையடிப்பதில் மூலமாக அதனைப் பெற முடியும் என்பதனை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

பொதுவுடைமை மலரும்.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.

09.08.2021

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காலனியம் வீழட்டும்; சுதந்திரம் மலரட்டும் : நுக்ருமாவும் ஆப்பிரிக்க விடுதலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு


அண்மையில், அமில்கர் கப்ரால் எழுதிய  'நுக்ருமாவும் ஆப்பிரிக்கா விடுதலையும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இந்நூல் ஆழமான படிப்பினை உலகிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு நாடு எவ்வாறு போராடி வெற்றிப் பெற்றது என்பது தான் அது. 

கானா என்ற நாடு ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பக்கமுள்ள ஒரு சிறிய நாடு. இந்நாடானது காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்தக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டினுடைய புரட்சியாளர் க்வாமோ நுக்ருமா என்பவர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அதிபராகவும் ஆனார். அவர் தன்னுடைய நாட்டிற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதுடன் நில்லாமல், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுதந்திரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமான விடுதலை உணர்வு கொண்டிருந்தார். அதாவது அடிமைத்தனத்தை பெற்றெடுக்கும் காலனியாதிக்கத்தினை என்ன விலை கொடுத்தேனும் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி வென்றவர் நுக்ருமா. 

கானாவின் அதிபராக இருந்த பொழுது, தொடக்கத்தில் சனநாயகத்தை நிலைநாட்டியவர். பிற்காலத்தில்  தன்னுடைய தவறான தேசியக் கொள்கையினால் அதற்கு எதிராகத் திரும்பினார். ஒரு கட்டத்தில் தனக்கும் தன்னுடைய ஆட்சிக்கும் பாதுகாப்பினைப் பெறுவதற்கு ராணுவத்தை நம்பி இருந்தார் என்ற செய்தி துயரமாக இருந்தது. 

எந்த ஒரு நாடு அந்நாட்டின் நல் ஆட்சிக்கு ராணுவத்தை நம்பியிருக்கிறதோ, அந்நாடு சனநாயகத்திற்கு எதிரான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நிலைக்குத்தான் நுக்ருமாவும் தள்ளப்பட்டார். அதாவது, சனநாயகத்தைத் தொடக்கத்தில் நிலைநாட்ட வந்த ஒருவர், அதிபரான பின்பு அதனைக் கொலை செய்யும் விதமாக நடந்து கொண்டார். இவை,  தான் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்ட நேர்மையான, உண்மையான நோக்கத்திற்கு விரோதமானது. முக்கியமாக அவர் தன்னைத் தானே ஒஸாஜி ஃபோ  அல்லது மீட்பர் என்று அழைத்துக்கொண்டார். 

அவருடைய ஆட்சி முட்டாள்கள், பைத்தியக்காரர்கள் விமர்சிக்கக் கூடிய அளவிற்குச் சகிப்புத்தன்மையற்ற விதத்தில் இருந்தது. அவருடைய தேசியக் கொள்கை எந்த அளவிற்குத் தன் நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக  இருந்தது என்பதனைக் காணமுடிகிறது. இருந்தாலும், அவருடைய தொடக்ககாலப் போராட்ட வெற்றியான நாட்டினை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்பட்டதினை யாராலும் மறுக்க முடியாது.

மேலும், அவர் ஒன்றுபட்ட ஆப்பிரிக்காவின் அரசுக்குக் கானா அரசு தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் என்று கானா அரசின் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அவர் எழுதினார் எனும் பொழுது, இவர் உண்மையிலேயே ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களின் மீது எவ்வளவு பெரிய மதிப்பு மரியாதை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நான்,என்னுடைய தேசம் என்று குறுகிய எண்ணமே கொண்டிருக்கும்  தலைவர்களுக்கு மத்தியில், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் முழு சனநாயக விடுதலை, அதாவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் காலனியாதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். 

அனைத்து மக்களும் தனக்கான சுயமான தேசத்தில் சுயமான அரசு உருவாக்கித்தர வேண்டும் என்ற நோக்கம் அவரை அறிஞராக, புரட்சிவாதியாக, சிந்தனையாளராக, பெரும் தத்துவவாதியாக, அடிமைத்தனத்தின் முதல் எதிரியாக இருப்பவர் நுக்ருமா என்ற நிலை உருவானது.

அதே நேரத்தில், கானாவின் குடியரசுத் தலைவர் செகோவ் டூரே அடிக்கடி கூறுவதைப் போல 'மக்களும், மனித குலமும் எல்லைகள் அனைத்தையும் கடந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது, ஒரு மனிதன் எம்மாத்திரம்' என்கிறார். அப்படியென்றால், நுக்ருமாவின் சாதனைகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அவர், ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மக்களுக்கு வீரத்தின் அதாவது சுதந்திரத்தின் விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவருடைய பெருமைகள் அதாவது, ஒரு கை எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், அதனால் வானத்தை மறைக்க முடியாது என்ற பழமொழிக்கு ஒப்பாகும். 

அதேபோன்று, அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது அவரை இந்த மோசமான நிலைமைக்குத் தள்ளி துரோகம் செய்தவர்களை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது. அவருக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கு ஏற்படும். அதாவது, வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் அது முகத்திலே தான் விழும் என்ற பழமொழியைப் போன்றது. 

இறுதியாக, நுக்ருமாவின் புகழ் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல  உலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்.

குவாமோ நுக்ருமாவுக்குப் புகழ் அஞ்சலி.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.