திங்கள், 24 செப்டம்பர், 2018

துயரம்தான் கவிதைக்கு அழகு சேர்க்கிறது : கஸல் கவிதைகள் பற்றிய அறிமுகம் :- கோ.பாரதிமோகன்


கஜல் இரண்டடி கண்ணிகளை உடையது. இரண்டடிகளிலும் சமச்சீரான வரிகளை உடையதாக இருக்க வேண்டும் என்பது அதன் இலக்கண விதி.
கஜல் - கஸல் என இக்கவிதை இருவேறாக அழைக்கப்படுகிறது.
கஸல் கவிதைகளுக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.
கஜல் ஒரு நாடோடிப் பாடல் என்பதே அதன் மூலம்.
முதன்முதலில் கஜல் கவிதைகள் அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தைப்பற்றியும் ஒட்டகத்தில் ஏறிச்சென்று அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றியனதாக இருந்தது.
பிறகு மெல்ல மெல்ல இக்கவிதை,
சூஃபிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
சூஃபிகள் வாழ்வை கொண்டாட்டமாக வாழ்பவர்கள். ஒருவகையில் இவர்கள் ஜென் துறவிகளைப் போன்றவர்கள்.
சூபியிசம் என்பது எல்லாவற்றையும் இறைவடிவாக  காண்பது.
(மன்சூர் அல்லாஹ் என்ற கவிஞர் உச்சகட்டமாக நானே கடவுள் என சொல்ல, அவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பது வேறு கதை)
ரூமி கவிஞர் கடவுளை மதுவுக்கு ஒப்பானவர் என்கிறார்.
வாழ்வின் எந்த ஒரு தடைகளுக்குள்ளும் சிக்காத சுதந்திரமானவர்கள் சூ ஃபிகள்.
இவர்களின் கையில் கஜல் புதிய பாடலாக பரிணமிக்கிறது.
சூஃபிகள் ஓர் இஸ்லாமியத் துறவிகள்.
ஆனாலும் பொதுத் துறவு கொண்டுள்ள கட்டுக்களை இவர்கள் மீறுபவர்கள்.
கஸல் என்கிற சொல், அரபு மொழியின் 'கஸலி' எனும் சொல்லின் திரிபு.
இச்சொல் 'கஸிதா' என்கிற மூலச் சொல்லிலிருந்து மருவியது.
கஸலி என்றால் அரபி மொழியில் குறிக்கொள் என்று பொருள்.
அதாவது,  இலக்கு என்றும் வைத்துக்கொள்ளலாம்.
மிகக்கடுமையான
இசையிலக்கணத்தையும் பாடுபொருளையும் கொண்ட கஜல், மனதை மயக்கும்
இசைலயத்தை உடையது.
அப்படி இப்படி என்று கஜல் ஒருவாறு காதலிடம் வந்து சேர்ந்தபிறகு அது புதுவேகம் எடுக்கிறது.
கஸல் கவிதைகளுக்கு என ஒரு  ஆன்மா இருக்கிறது.
ஆன்மாவை உரசி செல்லும் கவிதைகளே கஸல் வடிவம்.
கஸல் அரபி் மொழியிலிருந்து பாரசீகம் பயணித்து பாரசீகத்திலிருந்து  மேலும் புயல் பாய்சல் கொள்கிறது.
பிறகு  இஸ்லாமியர் வருகைவழி
இந்தியாவுக்குள் வந்த கஜல், உருது மொழியில் பாடப்பட்டு புகழின் உச்சம் தொடுகிறது.
'அமிர் குர்சோ'தான் கஸலின் இந்திய வரவின் தொடக்கம்.
உருது கஜலில் பலர் கோலோச்சியிருந்தாலும்
கவிஞர் 'மிர்சா காலிப்' தான் கஸல் கவிதைகளில் மாபெரும் சிகரமடைந்தவர்.
மிர்சா காலிப் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
காதல், அழகு, இயற்கை, தத்துவம் ஆகிய
பாடுபொருளை கொண்டிருக்கிறது கஸல்.
*
கஸலில் புகழ்பெற்ற கவிஞர்கள்
1, ஜலாலுதீன் ருமி, 2, மிர்சா காலிப், ,3, மக்பி.
ஔரங்கசீப்பின்  மகள் ஜெப்புன்னிசா . மக்பி  என்ற பெயரில் கஸல் காதல் கவிதைகளை பாரசீகம், அரேபிய மற்றும் உருது மொழியில் எழுதினார்.
இவர் சிறந்த கவிஞர்.
மக்பி,  டெல்லி ஆளுநர் மகன் அகில்கானை காதலித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தன்னைப் பற்றி் இவ்வாறு கூறுகிறார்:
'வைரங்களை விட பிரகாசமான சொற்கள் என்னிடம் இருக்கின்றன
அதை நான் உருட்டி விளையாடுகிறேன். அதுவே போதும்' என்கிறார்.
துயரமான கவிதைகளையே ஏன் அதிகம் புனைகிறாய் என கவிஞன் ரஸ்வி கேட்க..
அவள்,
'துயரம் தான் கவிதைக்கு அழகு சேர்கிறது' என்கிறாள்.
இன்றும் பாக்தாத் நகரில் கஸல் உச்சம் பெற்று விளங்குகிறது.
மிர்ஸா காலிப்
நவாப்புகளின் சபையில் அரசகவியாக விளங்கியவர்.
தன்னைக்குறித்தும் தன் கஜலைக்குறித்தும் அவர் இப்படிச் சொல்கிறார்,
     //நான் துக்கத்தால் மட்டுமே
        பாதிப்படைகிறேன்                          
       மகிழ்ச்சியின் இறுதிப்படுக்கையருகே
       அழுதுகொண்டும்
       பாடிக்கொண்டு மிருக்கிற
       துயராளியாய் என்னைத் துக்கம்
       ஆக்கிவிட்டது
      தனியனாய், வலிக்கும் என்  
      இதயத்திலிருந்து
      கஸலின் இனிய புலம்பலை எழுப்பினேன்.

      அது கஸலின் இன்னிசை சிகரத்தை
      எட்டிவிட்டது //
என்று தன் கஸலைப்பற்றி
சொல்லும் அவர்,
     "சுடர் முறையாகவே தீர்கிறது
      சோகப் புகைச்சுருளாய் 
      காதலின் பிழம்புகள்
      உடுத்திக்கொள்கின்றன
      என் மரணத்தால்
      கறுத்த துக்க ஆடை.
      அழுகிறேன்,
      காதலின் அவல முடிவுக்காக.
      அழுகிறேன்,
      காதலின் வெள்ளப் பாழுக்காக
      நான் போனபின்
      வேறெந்த இதயம் அதற்கு இடம் தரும்?"
என்று ஆழ்ந்த இதய சோகத்தை கஸலாய் முன் வைக்கிறார்.
இவர் உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் தம் கஸல் கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். மேலும் மற்ற கஜல் கவிஞர்களின் கவிதைகளை நூலாகத் தொகுத்து இருக்கிறார்
தமிழில் ஏற்கனவே கஜல் கவிதைத் தொகுதிகள் ஒருசில வந்திருந்தாலும்
முறையாய் கஜல் என்றால் என்ன என்கிற தெளிவான அறிமுகத்துடன், கஜல் கவிதைக்கான பழைய இலக்கணங்களை எல்லாம் தகர்த்துவிட்டு  ஒரு புதிய பொலிவுடன் முழுக்க முழுக்க காதலையே பாடுபொருளாய்க் கொண்ட தொகுப்பாய் தனது 'மின்மினிகளால் ஒரு கடிதம்' கஜல் கவிதைத் தொகுப்பை கொண்டுவந்தார், கவிக்கோ அப்துல் ரகுமான்.

'காதலியுடன் பேசுதல்' என்று கஜலை அறிமுகம் செய்கிறார், கவிக்கோ: -
"கஸல்' (Ghazal) அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும். அதுவும் காதலின் சோகத்தை.
கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.
3 முதல் 9 கண்ணிகள் வரை நீளும் கஜல் கவிதையில்
ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டியதில்லை"
*
இதோ கவிக்கோவின் கவிதைகள் சில...
°
     இறைவா
     நம் சங்கமத்திற்காகதான்
     பெண்ணிடம் ஒத்திகை பார்த்துக்
     கொண்டிருக்கிறேன்
°
    இந்தக் கவிதைகள்
     நீ செய்த காயங்களிலிருந்து
     வடியும் ரத்தம்
°
     காதலின் நஞ்சைக் குடித்தே
     சாகாமல் இருப்பவன் நான்
°
     என் உயிரை
     காதலில்
     ஒளித்துவைத்துவிட்டேன்
     மரணமே!
     இனி என்ன செய்வாய்?
*
மிர்சா காலிப்'பின் உருது கஜலான
'உதிர் இலைக'ளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் நீலமணியின்
'உப்புநதிகள்' நேரடி தமிழ் கஜல் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
     கல்லும் கவிபாடும்.
     இங்கொரு
     கவிதையே கல்லானதே
     தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன்
     வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது.
     அழுகையே ராகமென்றால்
     இந்த ஊரில்
     சிறந்த பாடகன் நான்தான்.
     தரையில் விழுந்தால் அழுக்குப்படுமென
     வானத்திலேயே மழை இருக்க முடியுமா?
     நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்.
     பக்தன் மனிதனாக இருக்கக்கூடாதா?
                                   - நீலமணி
                             (உப்புநதிகள்)
*
தொடர் கண்ணிகளாலான
கோ. பாரதிமோகனின் கஜல் கவிதைகள் சில...
*
     பெட்டிக்குள் அடைக்க இசைக்கும்
     மகுடியைப் போன்றது
     உன் குரல்
     பிழையொன்றுமில்லை
     அறிவதில்லை ஒருபோதும்
     விட்டில்கள் தன் சாபத்தை
     அறிந்துகொண்டேன்
     பசுமை படர்ந்த என் பாலை
     ஒளிக்குள் மறையும்
     இருள் போன்றதென
     யார்தான் இணங்க மறுப்பார்கள்
     வசீகரத்தின் கையசைப்புக்கு
     மூழ்கிப் போகிறேன் நான்
     இந்தக் காதல்
     ஒரு புதைகுழி
*
     மணலும் சுரண்டப்பட்ட நதியின் துயர்
     என் இதயம்
     நம்பவைக்கப்படும் கொலைக்கருவி
     கண்களின் சாயலிலிருந்தால்
     நானென்ன செய்வது
     அசையும் உன் ஆடையில்
     சுவாசம் பருகியவனுக்கு பரிசா இந்த
     இதயப் புற்று?
     ஆனாலும் என்ன
     இது உன் கொடைக்கான
     என் நன்றி
*
     பெருங்கருணைக்காரி நீ
     இதயத்தை பாலையாக்கி
     கண்களுக்கு வரமளித்தாய்
     காதலின் தாகத்திற்கு
     நான் கண்ணீர் ஊற்று
*
எனது 'காதலின் மீது மோதிக்கொண்டேன்' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...
     காதலே
     உனக்கான ஆடையை
     கண்ணீரால் நெய்கிறேன்
*
     உன்னை
     சொற்களில் தேடுகிறேன்
     நீயோ மௌனத்தில்
     ஒளிந்திருக்கிறாய்
*
     உன்னையும் என்னையும்
     உடுத்தி
     நிர்வாணம் களைகிறது காதல்
*
     நீ பறந்துவிட்டாய்
     அநாதையாகிவிட்டது
     என் கூடு
*
     உன்
     கூந்தலின் நுனிவரைதான்
     என்
     ஆயுளின் நீளம்
*
     உன்
     விரல்பிடித்து நடக்கையில்
     அழகாக இருக்கிறது
     மரணத்தின் பாதை

வியாழன், 13 செப்டம்பர், 2018

அசோகர் காலக் கல்வெட்டுகளும் சமக்கிருத மொழியும்: இரவிக்குமார்.

அசோகரைக் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன.

அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கின்றன.

பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்

ஆச்சர்யவசமாக சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தைத் தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார்.

வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களைப் போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை.

சந்திர குப்த மௌரியரின் காலத்தில் முதல் சமசுகிருதக் கல்வெட்டு  கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது.
அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்து கொண்டு கிடைக்கின்றது.

அணையைப் பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமஸ்கிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமஸ்கிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை என்று எளிதாகச் சொல்லி விட்டார்கள்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்.

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் ).

வாழ்த்துகளுடன்,
மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

சனி, 8 செப்டம்பர், 2018

ஆசீவகமும் தமிழர் சமய மரபும்: முனைவர் இ.முத்தையா

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆசீவகம் பற்றித் தொடர்ந்து தம்முடைய கருத்துக்களை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி வலுப்படுத்தி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் பற்றி தம் ஆய்வைத் தொடங்கி இந்தக் கணம் வரை ஆசீவகம் குறித்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய ஆய்வு முடிவுகள் இதுவரையில் நமக்கு அறியக் கிடைத்த தமிழ் இலக்கிய வரலாற்றையும் சமய வரலாற்றையும் கேள்விக்கு உட்படுத்தித் தமிழர்க்கென்று ஒரு சமய அடையாளம் என்பது ஆசீவகம்தான் என்பதை மீண்டும் புதிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வருகிறார்.

சமணம் என்பதும் ஜை(சை)னம் என்பதும் வெவ்வேறான சமயங்கள் என்கிறார். சமணம் என்பது ஆசீவக சமயத்தையே குறிக்கும் என்றும், இது பக்குடுக்கை நண்கணியார், மற்கலியன் (மற்கலி கோசலர்), பூரணர், நரிவெரூஉத்தலையார் என்ற நான்கு சிந்தனையாளர்களால் (இவர்கள் சங்கப் புலவர்களும் கூட) உருவாக்கப்பட்டது என்றும் இவர்கள் புத்தர், மகாவீரர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர்கள் எனக் குறிப்பிட்டுத் தமிழ் ஆய்வாளர்கள், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட , மேற்கொண்டு வருகின்ற ஆய்வுகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளார். சமணப் படுக்கைகள் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளங்காட்டி அவற்றில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை எல்லாம் மறுத்து அப்படுக்கைகள் அணைத்தும் ஆசீவக முனிவர்கள் உருவாக்கியவை என்றும் கல்வெட்டில் காணப்படும் கணி நந்தாசிரியன் என்பவர் ஆசீவகச் சிந்தனையாளர் என்றும் எடுத்துக் கூறி இதுவரை நமக்கு அறியக் கொடுத்த சமயவரலாற்றையும் மெய்யியல் வரலாற்றையும் தமிழர்க்கு உரியவை அல்ல என்பதை உணர்த்தி ஆசீவக சமயமும் அதன் மெய்யியலும்தான் தமிழரின் சுய அடையாளம் என்பதையும் உணர்த்துகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வரலாற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி வருகிறார். சங்கப் பாடல்களில் பதிவாகியுள்ள ஆசீவகக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கியவர் இப்போது சிலப்பதிகாரத்தையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆசீவக சமயத்திற்கு உரியவையாகக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய கருத்துக்களைத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களோ தொல்லியல் ஆய்வாளர்களோ அக்கறையான விவாதத்திற்கு உட்படுத்தாமல் கடந்து செல்கிறார்கள். இவருடைய கருத்துக்களை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மௌனம்தான் நிலவுகிறது. இந்த மௌனம் கலைக்கப்பட்டால்தான் புதிய உண்மைகள் வெளிப்படும்.

விவாதங்கள் தொடங்குமா?