மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது. நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என் வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
கற்றது கடலளவு சொன்னது கையளவு!
மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக