சனி, 25 நவம்பர், 2023

குப்பி கடித்த புலிப்பல் - அறிவுமதி கவிதை


குப்பிக் கடித்த மகனோடு
ஒரு தாய்
பேசுகிறாள்:

குப்பி கடித்தாயாமே மகனே!
கேள்விப்பட்டேன்.
விழிக் குடிசைகளின்
ரோமக் கூரைகளில்
உப்பு மழைத்துளிகள்
ஒழுக
ஒழுக
உனக்காக
அழவேண்டும் என்று
எதார்த்தம்
விரும்புகிறது
மகனே !
ஆனால்
உனது கனவுகள் வந்து
என் கண்ணீரைத்
துடைத்து விடுகின்றன.
இது உனக்கு
இறந்த நாளா?
இல்லை மகனே…
மரணம்
என்பது
உண்மையான வீரனுக்கு
இரண்டாவது
பிறந்த நாள்
ஆம்…
அவ்வளவுதான் மகனே !
உன்னைப்
பெற்றெடுத்த நாட்களில்
வளர்ந்து
ஆளாகி
உனது கைகளால்
ஒரு
பெண்ணின்
கழுத்தில் நீ
தாலி கட்ட
அதைப் பார்த்து மகிழ வேண்டும்
என்று
அம்மா நான்
ஆசைப்பட்டது
உண்மைதான்
மகனே !
உண்மைதான்.
ஆனாலும்
உனக்கு
நீயே
மரணத் தாலி
கட்டிக் கொண்டதைப்
பார்த்த
நாளில்
அதைவிடவும் அதிகமாய்
மகிழ்ந்தேன்
மகனே !
மகிழ்ந்தேன்.

நாட்டிற்குள்
பெருமாள்களாய்
வாழ்வதைக் காட்டிலும்
காட்டிற்குள்
பி*ர*பா*க*ர*ன்*களாய்
கிட்டுகளாய்
வாழ்ந்து
போராடுகிறீர்கள்
என்பதில்தான்
மகனே
நான் இன்னும்
மகிழ்ந்தேன்.
ஆம்…
நாட்டிற்குள் தான்
வாழ்கிறேன்
ஆனால்
மிருகங்களுக்கு
மத்தியில்.
நீ
காட்டிற்குள்தான்
வாழ்ந்தாய்
ஆனால்
மனிதர்களுக்கு
மத்தியில்.

சிங்கப் பல்
தெரிய
நீ
சிரித்த
அழகையெல்லாம்
சேகரித்துப்
பார்க்கிறேன் மகனே…
அவற்றையெல்லாம் விட
அதே
சிங்கப் பல்
இன்று
சயனைட்
குப்பிகடித்து
புலிப் பல்லாக
மாறிப் போன
செய்தி
கேட்டு
குளிர்ந்தேன்.
எனது மார்புகளில்
பால்
குடித்த
நாட்களில்
முதல்
பல்லால் நீ
கடித்தபோது
ஏற்பட்ட
இன்ப
வேதனையை விடவும்
அதே
பல்லால் நீ
குப்பி
கடித்தாய் என்கிற
செய்தி கேட்டு
அடைந்த
துன்ப மகிழ்ச்சி
இனிமையானது
மகனே!
இனிமையானது !

விழுந்த பல்
முளைக்கவில்லை
என்று
உன் மாமன்
நெல்லால்
கீறிவிட்ட பொழுது
கசிந்த
இரத்தம் பார்த்து
என்
கண்கள்
பனித்தன மகனே!
கண்கள்
பனித்தன.
இன்று
குப்பி கடிக்க நீ
ரத்தம் கசிய
கண்கள் மூடினாய்
என்று
கேள்விப் படுகையில்
கண்களும்
சிரித்தன மகனே !
கண்களும்
சிரித்தன.

சின்ன வயதில்
நான் கொடுத்த
வெல்லக் கட்டிக்காக
போட்டி
போட்டுக்கொண்டு
நீயும்
உனது
தம்பிகளும்
காக்காய்க் கடி
கடித்துப்
பங்கிட்டுக் கொள்வதைப்
பார்த்து
மகிழ்ந்த உன் தாய்
மகனே…
இன்று
இயக்கம் தந்த
குப்பியை
நீயும்
உனது
தோழர்களும்
புலிக்கடி கடித்து
மரணத்தைப்
பங்கிட்டுக்
கொண்டதைக்
கேட்கக்
கேட்கக்
மகிழ்கிறேன்
மகனே !
மகிழ்கிறேன்.

பெற்றெடுத்த
மகன்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தமில்லை
மகனே.
ஈழவிடுதலையைப்
பெற்றெடுக்காமல்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தம்தான்
எனக்கு.
ஆனாலும்…
நம்பிய
தலைவனை
நம்பிய
இயக்கத்தைக்
காட்டிக்
கொடுக்கமாட்டேன்
என்கிற
உறுதியோடு
குப்பி கடித்த
என் செல்ல மகனே!
உன்னை
இழந்தாலும்
என்னை
அம்மா
அம்மா
என்றழைக்க
ஆயிரமாயிரம்
புலிகள்
அணிவகுத்துக் கொண்டே
இருக்கிறார்கள்
மகனே !
அவர்கள்
பெற்றுத்தரப் போகிற
தமிழீழத்தில்
சின்னஞ் சிறுசுகள்
நாளை
சிரிக்கிற போது…
குப்பி கடித்த
உனது பல் ஞாபகமாக
அன்று
கண்ணீர் வடிப்பேன் மகனே!
அன்று
வடிப்பேன்
ஆனந்தக் கண்ணீர்!
இனியும்
தமிழச்சிகள்
வீரர்களைப் பெற்றுத்தருகிற
வெறும்
கர்ப்ப இயந்திரங்களாக மட்டும்
இருக்க மாட்டார்கள்.
அவர்களே…
வீராங்கனைகளாக
மாறுவார்கள்.
மாறிக்கொண்டும்
இருக்கிறார்கள்.
ஆயுதங்கள்
ஏந்துவார்கள்.
ஏந்திக் கொண்டும்
இருக்கிறார்கள்..

எழுதியவர்: 
கவிஞர் அறிவுமதி.

சனி, 4 நவம்பர், 2023

தமிழ் அறிவு மரபும், அறிஞர் க.நெடுஞ்செழியன் எனும் தனித்துவ மரபும்.

தமிழ் அறிவுச் செயல்பாட்டின் மரபாகவும் நீட்சியாகவும் இருந்து, தமிழ் அடையாள மீட்பின் அறிவுக் கொடையை வழங்கிய ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் புகழ் வணக்கம்.

அறிஞரின் தமிழ் ஆய்வுப் பண்பு குறித்தும், வாழ்வும் போராட்டமும் குறித்தும் பேராசிரியர்கள் டி.தர்மராஜ், சே.கோச்சடை, ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது 3 கட்டுரைகள் ஒருங்கே தரப்பட்டுள்ளன. அய்யாவின் புகழ் நீடு வாழ்க.

ஏர் மகாராசன்

*

1.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும்.

:பேரா டி.தருமராஜ்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர்.  அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார்.  இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு.  இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும்.  இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார்.  பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று  - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.  ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது.  வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை;  அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன.  பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை.  ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம்.  இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை.  உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார்.  ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன.  உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது.  அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை.  அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_4.html

*

2.

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.

: இரா. மன்னர் மன்னன்.

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_5.html


*

3.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட.

:பேரா சே.கோச்சடை.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும். அவருக்கு வீர வணக்கம்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_6.html


*

நன்றி:

பேரா டி.தர்மராஜ்,

பேரா சே.கோச்சடை,

ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது பதிவுகள்.


ஏர் மகாராசன்

வியாழன், 2 நவம்பர், 2023

அறிஞர் ஒரிசா பாலுவின் கடற் பயணமும் தமிழ் ஆய்வும்: பேரா. அரங்க மல்லிகா




கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு அவர்கள் தமிழக வரலாற்றைத் தமிழ் இலக்கியத்திலிருந்து தேடுவதைப்போல  கடலிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டும்  என்பதைத் தன்னுடைய ஆய்வு முடிவாகத் தந்தவர். தருகிறார் .  

  குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்ததென விரிவாகக் கடலுக்குள் பயணப்பட்டு பேசி இருக்கிறார்.சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகை ஆற்றங்கரை நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பைக் கடலில் மூழ்கிய கட்டிடங்கள், வாழ்வியல் முறைகள், பழங்கற்கால நாகரிகம்  ஆகியவற்றை வைத்துத் தொடர்புபடுத்துகிறார்.

தொடக்ககாலத்தில் இது லெமூரியா கோட்பாடாக(1863) இருந்தது.பிறகு குமரிக்கண்ட ஆய்வாக( 1864) த் தொடர்ந்ததும் 1898 இல் தமிழ் இலக்கியத்தையும் லெமுரியா ஆய்வையும் கொண்டு நரசிம்மப்பிள்ளை ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். பிறகு அது (1940) இல் கடல் கொண்ட தென்னாடு என மாறியது. இந்தக்காலக் கட்டத்தில் தான் தன்னுடைய ஆய்வு தொடர்ந்தது என்பதை விரிவாகப்பேசுகிறார்.

அவருடைய ஊடகப் பேட்டிகளில் ஆய்வுகளின் மூலத்தைக்  கடலுக்குள் அழிந்துபோன நகரங்களைக் கொண்டு விரிவான தரவுகளுடன்  அவர் பதிவு செய்திருக்கிறார் .தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் வரலாற்றையும் தமிழருக்கும் வணிகத்திற்கும் உள்ள  தொடர்பையும் எடுத்துக்காட்டிய  ஒரிசா பாலு அவர்கள் மிக முக்கியமாகத் தன் ஆய்வில் ஆமைகளை ஆய்வு செய்ததில் தனக்கென ஓர் இடத்தை வரலாறாக மாற்றுகிறார்.தமிழரின் நாகரிகத்தை , பண்பாட்டை ஆய்வு செய்யும் ஆளுமைகளில் ஆமை ஆய்வில்தான் மிக முக்கியமான ஆய்வாளராக  ஒரிசா பாலு அவர்கள் அறியப்படுகிறார்.அவருடைய கடலாய்வின் மூலமாக குமரிக்கண்டம் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையைக்கொண்டது என உறுதிபடுத்துகிறார்.

  குறிப்பாக கடலில் ஆமைகள் நீந்தி வருவதை, திரும்பிச்செல்லும் வழியை, முட்டையிடும் முறையை ,குஞ்சு பொரிக்கும் அழகை யாவும் அறிகிறார். கடல் உள்வாங்குவது ஏன் என்பதை , குமரிக்கண்டம் இந்தோபசிபிக் ஆய்வின் மூலம்  வெளிப்படுத்துகிறார்.

       வரலாறு ஒரு நாகரிகத்தின் அடிப்படை. அதனால் வரலாற்றிலிருந்து ஆய்வைத்தொடர வேண்டும் என்பது அவர் அவா.தமிழ் மொழியைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம் .குறிப்பாக 125 நாடுகளில் தமிழ் மொழி, பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூறுகிறார் .எடுத்துக்காட்டாக தொழிலதிபர் வெர்ஜின் ஏர்லைன்ஸ் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சிஸ், மாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டை த் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு உலக நாடுகளில் பேரும் புகழும் பெற்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் அவர் உலக நாகரிகத்திற்கான தொடக்கம் வைகறை நாகரிகத்தில் இருக்கிறது .அதனைக் கீழடி என்ற  ஒற்றைச் சொல்லால் அடக்கி விட முடியாது என்று ஆணித்தரமாக ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். 

   2005 முதல் குமரிக்கடலில் ஆய்வு செய்யச் சென்ற அவருடைய அனுபவம் அதன் மூலமாக குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் தொடங்கி  மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் ஆய்வின் மூலமாக அவர் உறுதிப்படுத்துகிறார்.

 174 நாடுகளில் அவர் தமிழர்களுடன்   தொடர்புடையவராக இருந்து கொண்டிருந்தார் என்பது தான் தமிழ் மீதும் தமிழ் மொழி மீதும்  தமிழர்கள் மீதும்  அவர் கொண்டிருந்த தொடர்புக்கு சாட்சியாகும்.

  தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமல்ல தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டாலும் பழக்கத்தில்  மொழிப்பயன்பாடு  இல்லாதவர்கள் வாழ்வதையும் சுட்டிக்காட்டி  பல்வேறுபட்ட தமிழர்களுடைய நிலையையும்  வணிகத்தொடர்பையும் ஒவ்வொரு ஊடக உரையாடல்களிலும்  பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.

வணிகத்தில் தமிழரே முதன்மையானவர்கள் என்பதை மணிமேகலை காப்பியத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

     முதன்முதலாக மருத நில நாகரிகத்தை உலக நாடுகளில் கொண்டு சேர்த்தவர்கள் தமிழர்கள்.அதற்கு குறிப்பாக தேவேந்திரக் குல வேளாளர்கள் வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.அவர்களின் மேம்பாட்டிற்கு அந்த இனத்தினரோடு  சேர்ந்து பல பணிகளைச்செய்திருக்கிறார்.விவசாயம் தேவேந்திர குல வேளாளர்களின் அடிப்படை தொழில் என்பதால் அவர்கள் உலகம் முழுவதும் அதைக்கொண்டு சேர்த்திருக்கிறார்கள் எனச்சொல்கிறார்.பழவேற்காடு தென்பெண்ணை ஆறு பாலாறு போன்ற இடங்களில் ஆய்வு  இன்னும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் .

  17 ஆற்றங்கரை நாகரிகங்கள் ஆய்விற்கு உட்பட்டு இருக்கின்றன என்றாலும் கூட உலக நாகரிகத்திற்கான தொன்மம் தமிழிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் உறுதிபடச்சொல்லுகிறார். 

2015 இல் நடந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு பெரிய மாற்றத்தை , பண்பாட்டு மாற்றத்தைத் தமிழரின்  அடையாளத்தை வெகுவாக எடுத்துக்காட்டும் என்றாலும் கூட அவை இன்னும் வெளிவராத சூழலில்,  குமரிக் கடலில் ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக அவர் பல கருத்துக்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் , மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்த நிலம் ,கச்சத்தீவு போன்ற பகுதிகளில் உறுதி செய்வதற்கான தரவுகள் எனப் பல்வேறு செய்திகள் புதியனவாக இருக்கின்றன .சான்றாக அவர் உளி பானை ரசவாதம் வேதியியல் தாவரவியல் பற்றிய சிந்தனைகளில்  கடலுக்குள் வாழ்ந்த அந்த பகுதிகளிலும்  நிறைய சான்றுகளைக் காட்டுகின்றார். தமிழர்கள்  வாழ்ந்த நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றார் .

    பல்வேறு திறம்வாய்ந்த மக்கள் வணிக நுட்பம் தெரிந்த மக்கள்  திரைகடல் ஓடி திரவியம் தேடிய இந்த தமிழர்கள் மிகச்சிறந்த திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வரலாறு என அவர் சுட்டிக் காட்டுகிறார் . தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் தேடுவதைக் காட்டிலும் கடலாய்வை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .குமரிக்கண்டத்தை மீட்டவர்கள் கடல் மீன் பிடிப்பவர்கள் என்று ஆழமாகக் கூறுகிறார் .அவர்களைத் திரைமீளர் என்று  சொல்கிறார். இந்தச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்திய ஓர் ஆய்வாளராக ஒரிசா பாலு அறியப்படுகிறார் .தமிழர்கள் பெயராகவோ அல்லது உறவுகளின் பெயராகவோ பல நாடுகளில் வரலாறாகி இருக்கிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டுகிறார் .

   அறுபது வருட சுழற்சியில் தமிழ் வருடப்பெயர்கள் எங்கும் இல்லை என்பதைக் கவனப்படுத்துகிறார். தமிழ் மொழியோடு தொடர்புடையவர்களாகவும் தமிழ் வரலாற்றைக் கல்வெட்டுகளின் மூலமாக நாம் தமிழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட ஏன்  60 வருட பெயர்கள் சுழற்சி முறையில் தமிழ்ப் பெயராக இல்லை என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறார். 

அதனால் அவருடைய கோட்பாடு என்பது  தமிழ் மொழியினுடைய நிலை என்ன என்பதை உணரச் செய்தல் ,தமிழ் வரலாறு பண்பாடு அறியச்செய்தல், உலகம் முழுவதுமாக ஏன் தமிழர்கள் சென்றார்கள்?  வணிகத்தை, தமிழைக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களாக இருக்கும்போது ஏன் தமிழ் மொழி பின்னுக்குத்தள்ளப்படுகிறது?. அவர்களுக்குத் தான் வணிக நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லி  மீண்டும் ஒரு மீள்கட்டமைப்பை அதாவது தமிழர் பண்பாட்டை உணர்தலை  மீள் கட்டமைப்புச் செய்தலை ஆய்வாளர்களுக்குச் சொல்லிச்சென்றிருக்கிறார். 

  உலக நாடுகளில் தமிழ் இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கின்றது என்றாலும் கூட சமஸ்கிருதம் இந்தியாவில் அதிகமாக வழிபாட்டு மொழியாக மாறி தமிழ் மொழியைச்சிதைத்து தமிழின்  முதன்மையை அதனுடைய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னெடுத்த ஆரியர்களுடைய வருகையையும்   சூழ்ச்சியை யும் அவர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். 

    தமிழர் பண்பாட்டை திரை மீளர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் தென்புலத்தார் என்ற ஒரு குழுமத்தையும் அமைத்தார். ஐயை என்ற ஒரு  குழுமத்தை அமைத்து அதன்மூலமாக  உலக நாடுகளில் இருக்கக்கூடிய பெண்களை ஒன்றிணைத்திருக்கிறார் .

அந்தக் குழுவில் இருக்கக்கூடிய பெண்கள் அதிகம் படித்தவர்களாக மிகப்பெரிய பணியில் இருப்பவர்களாக மிகப்பெரிய தொழில் அதிபர்களாக கட்டிடக்கலை நுண்ணியல்வாதியாக பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக படைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட வீட்டில் இருந்து கொண்டு சமையல் செய்யக்கூடிய குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களையும் கூட அவர் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைத்திருக்கிறார் .அவர்களுடைய சிறு குறு தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறார் .

இன்றைக்கு அந்த  குழுவின் மூலமாக அவர் விட்டுச் சென்றிருக்கக் கூடிய உறவுகள் என்று பார்த்தால் ஏறத்தாழ 174 நாடுகளிலிருந்து பெண்கள் அந்த குழுவில் இணைந்து இருக்கிறார்கள் .ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகம் முழுக்க இருக்கக்கூடிய தமிழர்களை , தமிழச்சிகளை ஒன்றாக இணைத்த பெருமை திரு ஒரிசா பாலு அவர்களுக்கு இருக்கின்றது .

      எனக்கும் திரு ஒரிசா பாலு அவர்களுக்குமான தொடர்பு என்பது எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நான்  பேராசிரியராக இருந்த பொழுது ஒரு கருத்தரங்கத்திற்கு  அழைத்து அவரைச் சிறப்பு செய்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கடல் ஆய்வு குமரிக்கண்ட ஆய்வைப் பற்றி மிக விரிவாகப் பேசினார் .மருத்துவத்திலும் அவருக்கு ஆழமான அறிவு இருப்பதையும் சுட்டிச் சென்றார் .அந்த அறிமுகம் பிறகு அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ப்பேசி உரையாடி மகிழ பல தருணங்களை வழங்கியது.

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு அவரை நான் சென்று சந்தித்தேன்.

 அந்த சந்திப்பில் மணிமேகலை ஆய்வில் குறிப்பாக கடைசி நான்கு காதைகளை' அக்கா அரங்க மல்லிகா !நீங்கள் தான் அதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்'  என்ற ஒரு வேண்டுகோளை வைத்தார். நோய்வாய் பட்டு இருந்தாலும் கூட  பேச முடியாமல்  பேசினார்.

ஆனாலும்  சோர்வாக இருந்த அவர் என்னைப் பார்த்ததும்  ஏறத்தாழ 2 மணி நேரம் மணிமேகலை பற்றியும் மணிமேகலை எந்தெந்த நாடுகளில் பயணப்பட்டு இருக்கிறாள், இலங்கைக்கும் தமிழுக்குமான தொடர்பு என்ன ,மணிமேகலை காப்பியத்தின் மூலமாக மணிமேகலை கடலில் நீந்தி சென்ற முதல் பெண் என்றெல்லாம் விரிவாகப்பேசினார்.

 பௌத்த தத்துவ மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அவர் குறிப்புகளின் மூலமாக ஒரு பெரிய உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதை நான் அடுத்த ஆய்வு நூலாக எழுத  இருக்கின்றேன்.

 ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சரியாக அவருக்கு மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தங்களுடன் பதிவு செய்தார்..

அன்றைக்கு இருந்த  தமிழக அரசின் செயலாளருக்கு  நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் .அதில் மிகச்சிறந்த கடல் ஆய்வாளர் குமரிக்கண்ட ஆய்வாளர் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் மாபெரும் பங்களிப்புச்செய்தவர் திரு .ஒரிசா பாலு அவர்கள். 

அரசு  அவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் .அவரும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தார். என்றாலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் அவரைத் தரையில் அமர வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு பாலு அவர்கள் என்னிடம் பதிவு செய்ததைக்கேட்டுக் கலங்கினேன்.

  தமிழ் ஆய்வுக்காக கடலில் மூழ்கி கடலாய்வு செய்த ஒரு மாபெரும் தமிழருக்குத் தமிழக அரசு உரிய மரியாதை செய்திருக்க வேண்டும் என்று மிகுந்த வேதனையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன். 

         1966 முதல் தமிழ் மாநாடு நடத்திய பெருமையைத் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக பார்க்கக்கூடிய ஒரிசா பாலு அவர்கள் 2010 வரையில்  உலகச் செம்மொழி மாநாடு வரையில் நடந்த  தமிழ் மாநாடுகளைச் சுட்டிக்காட்டி உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஒன்றைத்  தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்திருக்கிறார் . அதில் பன்னாட்டுத்தமிழர்களுக்கான ஒரு பதிவேடு அவசியம் எனச்சுட்டிக்காட்டுகிறார்.

           எப்படி கேட்வே டெல்லியில் இருக்கிறதோ, எப்படி  இந்தியா கேட்  மும்பையில் இருக்கிறதோ கேட் வே ஆஃப் வேர்ல்ட்  ஒன்று குமரிக்கடல் அருகே அமைக்கவேண்டும்  என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசின் கவனத்திற்கு இங்கே நான் இதைப் பதிவுசெய்கிறேன்.

கட்டுரையாளர்:
பேரா.அரங்கமல்லிகா
தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி)
எத்திராஜ் மகளிர் கல்லூரி ,சென்னை