கருத்தரங்க விவாதப் பொருள் என்ற நிலையிலிருந்து இன்று களப் போரட்ட முழக்கமாகத் தமிழ்த் தேசியம் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சிக்கலிலும், இது குறித்துத் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வாழ்க்கை என்னும் உரைகல்லில் தமிழ்த் தேசியம் அடிக்கடி உரசிப் பார்க்கப்படுகிறது. போற்றியோ தூற்றியோ தமிழ்த் தேசியம் குறித்துப் பேச வேண்டிய தேவை வலுப்பெற்றுள்ளது. புற நிலையிலும் அக நிலையிலும் தமிழ்த் தேசியத்தின் தேவை முனைப்புற்று வருகிறது.
உணர்வெனும் வகையிலும், கருத்தியலெனும் வகையிலும், இயக்கமெனும் வகையிலும் தமிழ்த் தேசியம் தமிழக அரசியலில் தவிர்க்கவொண்ணாத ஆற்றலாக எழுந்து வரும் இந்நிலையை அது திடீரென்று எட்டி விடவில்லை. அதற்கொரு வரலாறு உண்டு. இந்த ஆறு பல ஓடைகள் கொண்டது. அந்த ஓடைகள் சேர்ந்தும் பிரிந்தும் ஒட்டியும் வெட்டியும் பாய்ந்தோடித் தமிழ்த் தேசியத்தின் பல்கிளைத் தடமாகின்றன.
தமிழ்த் தேசியம் என்பது முதலாவதாக நாம் தமிழர்கள் என்ற உணர்வைக் குறிக்கும். இனவுணர்வு, ஓர்மை, தமிழ்ப் பண்பாடு என்று பலவாறு உரைக்கப்பெறும் தமிழ்த் தேசிய உணர்வு வளர்ந்து முழுமை பெற்றுக் கருத்தியலாக மலர்வது வெறும் அகவய நிகழ்ச்சிப்போக்கு மட்டுமன்று. அது உரிய புறவய நிலைமைகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் இயங்கியல் உறவு கொண்டிருப்பதாகும்.
தமிழ் மக்கள் ஒரு மொழிவழிக் குமுகாயமாக அமைந்து எல்லைகள் வரையறுக்கப்பட்ட புலத்தில் வாழ்ந்தமைக்கான இலக்கிய வரலாற்றுச் சான்றுகளாக தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் திகழ்கின்றன. தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தமிழ்நாடு என்றும் இந்த இலக்கியங்கள் தமிழ் மக்களின் தாயகத்தைக் குறிப்பிடுகின்றன.
தமிழ்ப் பண்பாட்டையும் அந்தப் பண்பாட்டின் முற்போக்கான கூறுகளையும் சுட்டும் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்பல. இவ்வகையில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் தொடங்கி, சித்தர்கள், வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வேர்களைக் காண முடியும்.
சமற்கிருதம், ஆங்கிலம், உருது, பாரசீகம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அயல்மொழிகளின் ஊடுருவலைத் தடுத்துத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கதாகும். தேவநேயப் பாவாணர் கூறுவது போல், தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார், அதனை மரமாக வளர்த்தடுத்தவர்கள் பாவாணறும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும். ஆய கலைகள் அனைத்துக்கும் ஏற்ற திறன் கொண்ட மொழியாகத் தமிழை வளர்த்திட உழைப்பவர்களில் முதலாமவர் சொல்லாய்வறிஞர் அருளியார். இவர்கள் எல்லாம் முன்னெடுத்த, இன்றளவும் முன்னெடுத்து வருகிற தனித்தமிழ் இயக்கத்தின் முயற்சிகளில் எதிரொலித்த தமிழர் மறுமலர்ச்சியை தமிழ்த் தேசியத்தின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாகக் கருத வேண்டும்.
அயல்மொழிப் படையெடுப்புக்கெதிராகத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டத்தில் தனித் தமிழியக்கத்தின் பங்கு மதிக்கத்தக்கது. பாவாணரும் பாவலரேறுவும் தனித் தமிழுக்காக மட்டுமல்ல, தனித் தமிழ்நாட்டுக்கவும் முழங்கியவர்கள். இன்றளவும் உயிர்ப்போடியங்கி வரும் தென்மொழி உள்ளிட்ட இதழ்களையும் இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சரியாகச் சொன்னால், தமிழ்த் தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்து விட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்து, தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல்-கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்குத் தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று. தமிழ்த் தேசத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வரலாற்று-இயங்கியல் உறவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியரின் (சிறிதளவுக்கு பிரெஞ்சியர், போர்த்துகேயர், டச்சியர் ஆகியோரின்) காலனியாதிக்கத்துக்குள் வராமற் போயிருந்தால் ஐரோப்பாவில் போலவே தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் -- உரிய திருத்தங்களோடுதான் என்றாலும் -- மொழிவழித் தேசியங்களின் இயல்பான படிமலர்ச்சி பற்பல தேச அரசுகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்திருக்கக் கூடும்.
வல்லரசியத்தின் குறுக்கீடும் அதனால் மேலிருந்து திணிக்கப்பெற்ற முதலியமும் மொழிவழிக் குமுகாயங்களில் தாக்கங்கொண்டு தேசியங்கள் வளர்வதற்கு முதலில் தடை ஆயின என்றாலும், பிறகு அவை விழித்தெழச் சுற்றடியாக வழிவகுத்தன.
இந்தியத் துணைக்கண்டத்தில் மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்குக் காலனியாதிக்கம் போலவே மற்றொரு தடையாக அமைந்தது இந்துக் குமுகமாக அறியப்படும் வர்ண சாதிக் கட்டமைப்பு.
இந்தியத் தேசியத்துக்கு இணையாகவே மொழிவழித் தேசியங்களும் வளர்ந்தன. ஒரு வகையில் இந்தியத் தேசியத்தின் வளர்ச்சியே கூட மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது எனலாம். இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமே தவிர நேர்வகைத் தேசியமன்று என்றாலும், அது இந்துத்துவப் பழைமையிலிருந்து ஊட்டம் பெறத் தயங்கியதில்லை என்றாலும், வல்லாதிக்கத்துடன் முரண்பட்ட வரை குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம் கொண்டிருந்தது. வரம்புக்குட்பட்ட அளவில் என்றாலும் வல்லாதிக்கக எதிர்ப்புக்கு மக்கள் பெருந்திரளை அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்காக மக்கள்மொழியில் பேசவும் மக்கள்மொழியில் கலை இலக்கியம் படைக்கவும் வேண்டியிருந்தது. ஆகவேதான் இந்தியத் தேசியம் வளர்ந்த போதே தமிழ்த் தேசியமும் வளர்ந்தது. இரண்டுக்குமான முரண்பாடும் முட்டல் மோதலும் அப்போதே வெளிப்பட்ட போதிலும் ஒன்றையொன்று ஒழித்துக் கட்டும் பகைமையாக முற்றவில்லை. இந்த உறவுமுறையை வரலாற்றுப் பகைமையும் அரசியல் நட்பும் என்று குறிப்பிடலாம்.
இந்தியத் தேசியப் பாவலர் பாரதியிடம் தமிழ்த் தேசியமும் இருந்தது. கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த சிதம்பரனாரின் இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்தை மறுதலிக்கவில்லை. அது எல்லா வகையிலும் தமிழ்த் தேசியத்தின் வித்துகளைச் சூல்கொண்டிருந்தது. பாவேந்தர் பாரதிதாசன் இந்தியத் தேசிய மண்ணிலிருந்துதான் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலராக மலர்ந்தார்.
மொழிவழித் தேசியத்தின் மலர்ச்சிக்கும் இந்தியத் தேசியத்துக்குமான இடையுறவை விளங்கிக் கொள்ள வங்காளத்தின் வரலாறு நமக்கு உதவும். 1905 வங்கப் பிரிவினைக்கு எதிரான எழுச்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சியான சுதேசி இயக்கத்துக்கு வழிகோலிற்று என்றால் இராசாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்றவர்களின் சமூக சீர்திருத்த இயக்கம் இந்தியத் தேசியக் கருத்தியல் வளர்ச்சிக்குத் துணை செய்தது. இலக்கியத் துறையில் பக்கிம்சந்திரரும் இரவீந்திரநாத் தாகூரும் வங்கத் தேசியத்துக்கும் இந்தியத் தேசியத்துக்கும் பாலம் அமைத்தவர்கள். வந்தே மாதரம் பாடலில் போற்றி வணங்கிய வங்க அன்னையைத்தான் இந்தியத் தாயாக மாற்றிக் கொண்டார்கள். நம் பாரதியார் இந்தப் பாடலில் இடம்பெறும் ஏழு கோடியை முப்பது கோடியாக மாற்றிக் கொண்டது வெறும் மொழிபெயர்ப்பு அன்று, தேசியப் பெயர்ப்பு! இந்த வகையில் வங்கத்தையும் தமிழகத்தையும் ஒப்பாய்வு செய்தால் கருத்துக்குரிய பார்வைகள் கிடைக்கும்.
தமிழ்த் தேசியம் என்ற உணர்வும் கருத்தியலும் வெறும் கோட்பாட்டுச் செயல்வழிகளால் மட்டும் வந்து கிடைப்பவை அல்ல, அவை பெருந்திரள் மக்கள் இயக்கங்களின் வழி மலரக் கூடியவை. இவ்வகையில் தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் போக்கு இந்தியத் தேசிய அரசியல் எனும் உதிரத்தில் உதித்ததென்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இவ்வகையில் (மீண்டும் இவ்வகையில்தான்) இந்தியத் தேசியத்தின் இயங்கியல் நிலைமறுப்புதான் தமிழ்த் தேசியம்.
தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரும் தடையான வர்ண சாதிக் கட்டமைப்பையும் அதனை ஆளும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து சமூகநீதிக்காக நடைபெற்றுள்ள இயக்கங்கள் யாவும் உள்ளியலாகவும் உள்ளடக்கத்திலும் தமிழ்த் தேசியத்துக்கான நன்முயற்சிகளே – அவை தம்மை அப்படி அழைத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும்! இந்தக் கோணத்தில் பார்க்குமிடத்து திருவள்ளுவர் தொடங்கி சித்தர்கள் வழியாக வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வரலாற்று வேர்களுக்கு நீர் பாய்ச்சியவர்கள் என்று சொல்லலாம்.
தந்தை பெரியார் குடியரசு ஏட்டைத் தொடங்கியது சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது மட்டுமன்று, வரலாற்று வழியில் தமிழ்த் தேசம் தன்னைத்தான் இனங்காணும் செயல்வழியின் தொடக்கத்தையும் குறித்தது. பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பும் சமூகநீதிக்கான குரலும் வெளிப்படையாக ஒலித்தன என்னும் அதேபோது, இது தமிழ்த் தேசிய வளர்ச்சியில் ஒரு முக்கியக் கட்டத்தைக் குறித்தது. பின்னர் வந்த முதல் மொழிப்போரில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் முதன்மைப் பங்கு வகித்தது தற்செயலன்று.
இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்ச்சராகப் பொறுப்பேற்று இந்தித் திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் தந்தை பெரியாரும் அறப்போர் தொடுத்ததும் (1938) இந்தியத் தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது. இந்த மோதலின் உச்சத்தில்தான், தமிழ்நாடு தமிழருக்கே! என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முழக்கம் பிறந்தது. சரியாகப் பொருள் கொண்டால், இது தமிழ்த் தேசியத் தன்தீர்வுரிமைக்கான (சுயநிர்ணய உரிமைக்கான) முழக்கம் ஆகும். இந்த உரிமையை ஆளும் அரசு அறிந்தேற்க வேண்டும் என்பதற்கான சட்டவாத முழக்கமன்று. இது நம் தேசத்தின் பிறப்புரிமை என்பதறிந்து இந்த உரிமையைப் பயன்படுத்தி விடுதலை கேட்பதற்கான முழக்கம் ஆகும்.
இடைக்காலத்தில் இந்த முழக்கத்தின் திரிபுற்ற வடிவமாக திராவிட நாடு திராவிடருக்கே! என்று முழங்கினாலும் மொழிவழி மாநில அமைப்புக்குப் பின் தமிழ்நாடு தமிழருக்கே! என்று மீண்டு விட்டது. பெரியார் தமிழ் நாட்டின் முழு விடுதலைக்கான முழக்கமாகவே இதனைக் கூறி வந்தார்.
தமிழ்நாடு தமிழருக்கே! என்பதை இறுதி மூச்சு வரை வலியுறுத்தியவர் பெரியார். ஆனால் இந்த முழக்கத்தை மெய்ப்படச் செய்வதற்கான விடுதலை அரசியலை அவர் கைக்கொள்ளத் தவறினார். விடுதலைக் கருத்தியலைப் பேசிக்கொண்டே பல நேரம் சிற்சில சீர்திருத்தங்களை முன்னிறுத்தி விடுதலையின் பகைவர்களுக்குத் துணைபோகும் நடைமுறை அரசியலைக் கடைப்பிடித்தார். தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாக அமைந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவும் அரசு அடக்குமுறைக்கு ஆதரவாகவும் பெரியார் எடுத்த நிலைப்பாடு ஒரு பெரிய சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியாரிடமிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணா தமிழ்த் தேசியத்துக்கு முரணான திராவிட நாடு என்னும் பொருந்தாக் கோரிக்கையைப் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாவின் திராவிட நாட்டுக்குத் தெளிவான வரையறையும் கிடையாது. 1956 – 61 காலத்தில் இந்தக் கோரிக்கையை மோசடி என்று சாடி, தனித் தமிழ்நாடுதான் சரி என்று பரப்புரை செய்தவர் பெரியார்.
1961இல் பிரிவினைத் தடைச் சட்டம் வரப்போவதைக் காட்டி அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைகழுவினார். அமைப்பைக் காக்கக் குறிக்கோளைக் கைவிடும் வேடிக்கையான முடிவை மேற்கொண்டார். திராவிட நாட்டுக்கு மாற்றாக மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் கைகொண்டார். அதுவும் வெறும் தேர்தல்வழிப் பதவி அரசியலுக்கான முழக்கமாகச் சுருங்கிப் போயிற்று. தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டுவதை விடவும் தேர்தல் அரசியலுக்கான கட்சி ஒன்றைக் கட்டுவதிலேயே குறியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றார். இந்தியத் தேசியத்தோடு இணங்கிப் போவதற்குப் பொருத்தமாகவே திமுகவும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்கின்றன.
அண்ணாவின் திராவிடக் கருத்தியல் தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்ப் பற்று, தமிழுணர்வு. இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் அண்ணா தலைமையிலான திமுக வகித்த பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சியாக அமைந்த 1965 மொழிப் போராட்டத்துக்கான களத்தைச் செப்பனிட்டதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொய்யான அரசியல் அதிகாரத்தின் மீதான மயக்கமும் நாட்டமும் வளர வளர திமுகவின் ‘தமிழ்த் தேசியம்’ சிதைந்து சீரழிந்து போயிற்று. இது தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பாடம்.
இத்தனைக் குறைபாடுகளும் இருந்தாலும் தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி வரலாற்றில் திராவிட இயக்கத்துக்கு ஒரு முகாமைப் பங்கு உண்டு. அவ்வியக்கத்தின் குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம், அதன் சமூக இயைபு, வரலாற்று வேர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படிச் சொல்கிறோம். தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி என்பது வெறும் கோட்பாட்டுப் படிமலர்ச்சி மட்டுமன்று, மக்கள் இயக்கம் என்ற வகையிலான படிமலர்ச்சியும்தான் என்றால் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கக் கட்டத்தையும் கடந்தே வந்திருக்கக் காணலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சி கண்டவர் ஈ.வெ.கி. சம்பத். திராவிடத்தை உதறி தமிழினத்தின் தன்தீர்வுரிமையை (சுய நிர்ணய உரிமையை) குறிக்கோளாக அறிவித்தார். ஆனால் காங்கிரசு எதிர்ப்பை விடவும் திமுக எதிர்ப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும், இந்தியப் பணநாயகத்தை சனநாயகமாகவே நம்பித் தேர்தல் அரசியலில் மூழ்கிப் போனதும் அவரைப் பகைமுகாமில் கலக்கச் செய்தன.
சி.பா. ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், ம.பொ.சி. தலைமையிலான தமிழரசுக் கழகம் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகளாக மதிக்கத்தக்கவை ஆகும். ஈழம் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசுக் கனவு கண்டவர் ஆதித்தனார். ஆனால் இவை முனைப்பான குழுக்களாக இயங்கினவே தவிர, இவற்றால் பெருந்திரளான மக்களை அணிதிரட்ட இயலாமலே போயிற்று.
ஆதித்தனாரின் தமிழ்ப் பேரரசுக் குறிக்கோள் தேசிய இனச் சிக்கல் தொடர்பான சமூக அறிவியலுக்கு மாறுபட்டு, வெறும் அகநோக்கியல் குறிக்கோளாகவே அமைந்து விட்டது. புதுமைக் காலக் கண்ணோட்டங்களை விடவும் பழம்பெருமைப் பார்வையே அதில் மிகுந்திருந்தது. ஆனால் அவரது கருத்தியல் இந்தியத் தேசியத்துடன் விட்டுக் கொடுக்காத ஒரு போக்கை மேற்கொண்டது. தமிழீழ மக்களுடன் தமிழக மக்களின் தோழமைக்கு ஆதித்தனார் ஒரு முன்னோடியாகவே இருந்தார். ஆதித்தனார் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் நாட்டம் கொண்டு குடியரசு ஏட்டிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சி. பா. ஆதித்தனாரின் முதன்மைப் பங்களிப்பு அவரது இதழியல் பணிதான். 1942 நவம்பர் மாதம் தினத் தந்தி தொடங்கினார். அதற்கு முன்பே தமிழன் என்ற வார ஏட்டைத் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களிடையே செய்தித் தாள் படிக்கும் வழக்கத்தைப் பரவலாக்கியது தினத் தந்தி. தில்லிக்கும் இந்திக்கும் எதிரான விழிப்பைத் தூண்டுவதில் தினத் தந்தியின் பங்கு மகத்தானது. தமிழீழ ஆதரவை வளர்ப்பதிலும் ஆதித்தனார் தொடங்கிய ஏடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் இயக்கம் பெரிய கட்சியாக வளராத போதும் பல போராட்டங்கள் நடத்தியது. 1956க்குப் பின் ஆதித்தனார் தனித் தமிழ்நாட்டுக்கான போராட்டத்தில் தந்தை பெரியாரோடு சேர்ந்து நின்றார். பெரியாரைப் போலவே அவரும் திராவிட நாடு கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார்.
தமிழக சட்டமன்ற மேலவையிலோ பேரவையிலோ விட்டுவிட்டு உறுப்பினராக இருந்து வந்த ஆதித்தனார் 1967 பொதுத் தேர்தலுக்குப் பின் பேரவைத் தலைவராகவும், அண்ணா மறைவுக்குப்பின் கலைஞர் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பதவி அரசியலில் நாட்டம் கொண்ட பின் தமிழ்த் தேசியத்துக்கான அவரது போர்க்குணம் நீர்த்துப் போனதாகத்தான் கருத வேண்டியுள்ளது.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யாக அறியப்பட்ட ம.பொ. சிவஞானம் 1946ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்த படியே தமிழரசுக் கழகம் நிறுவினார். 1954ஆம் ஆண்டுதான் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காகவும், தமிழ்வழிக் கல்விக்காகவும் திருப்பதியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகவும், சென்னையை ஆந்திரத்திடம் இழந்திடாமல் தடுப்பதற்காகவும் மபொசியன் தமிழரசுக் கழகம் தொடர்ந்து போராடியது. வடக்கே திருப்பதியை இழந்த போதும் திருத்தணிகையை மீட்கவும், தெற்கே தேவிகுளம் பீர்மேட்டை இழந்த போதும் குமரியை மீட்கவும் எல்லைப் போராட்டங்கள் உதவின. தமிழ்த் தேசியத் தாயகத்தை உறுதி செய்வதற்கான இந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய மீட்பியக்கத்தில் முகாமையனதொரு பகுதியாகும்.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் இந்தியத் தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்தையே வலியுறுத்தி வந்தது என்றாலும் தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் சிறப்பான பங்கு வகித்தது. தேசியத்தின் இன்றியமையாக் கூறாகிய தாயக உரிமைக்கான போராட்டத்தில் ம.பொ.சி.யின் வரலாற்றுப் பங்களிப்பு மதிக்கத்தக்க ஒன்று.
ம.பொ.சி.யின் செங்கோல் ஏடு தமிழ்த் தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது. மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்து அச்சுக் கோப்புத் தொழிலாளியாக இருந்து தமிழ் இலக்கியங்களோடு பழக்கமானவர் என்றாலும் அவரது இலக்கியப் பங்களிப்பு செறிவானது. சிலப்பதிகாரம், திருக்குறள், வள்ளலார், பாரதியார், வ.உ. சிதம்பரனார் குறித்தெல்லாம் ஏராளமாய் எழுதியுள்ளார்.
ஆதித்தனார் போலவே ம.பொ.சியும் இறுதிக் காலத்தில் பதவி அரசியலில் நாட்டம் கொண்டு அதற்கேற்ப மாறிப் போனார். 1987 இராசீவ் காந்தி–ஜெயவர்த்தனாவின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் இந்திய அமைதிக் காப்புப் படையையும் ஆதரித்து விடுதலைப் புலிகளைத் திட்டிப் பேசுவதில் சோ இராமசாமியுடனும் செயகாந்தனுடம் சேர்ந்து கொண்டது மபொசிக்கு ஏற்பட்ட இறுதி வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
மார்சல் நேசமணி தலைமையிலான குமரி விடுதலைப் போராட்டமும், மங்கலங்கிழார் கட்டி வளர்த்த வடக்கெல்லைப் போராட்டமும், சென்னையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்க வரலாற்றில் முகாமையானவை. இந்தப் போராட்டங்கள் முழு அளவிலான தாயக உரிமைப் போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வில்லை. பெரும்பாலான இந்தப் போராட்டத் தலைமைகளை உள்வாங்கி உட்செரிப்பதில் இந்தியத் தேசியம் வெற்றி கண்டது. அதற்கொரு கருவியாகத் தேர்தல்வழிப் பதவி அரசியல் பயன்படுத்தப்பட்டது.
ஈ.வெ.கி. சம்பத், ஆதித்தனார், ம.பொ.சி. எல்லாரும் பதவி நாட்ட அரசியலில் மூழ்கித்தான் மூச்சடங்கினர். தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தேர்தல்வழிப் பதவி அரசியல் வண்டியோட்ட நினைப்பவர்களுக்கெல்லாம் இவர்களின் பட்டறிவு ஒரு தெளிவான எச்சரிக்கை.
தமிழன் என்ற பெயரிலேயே ஏடு நடத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழகத்தின் தலித்தியக்க முன்னோடிகள் பலரும் தமிழ்ப் பற்றும் குடியாண்மை உணர்வும் மிக்கவர்கள். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தில் தலித்து இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது. இவ்வகையில் தமிழர் ஓர்மைக்கும் ஒற்றுமைக்குமான போராட்டத்தில் தலித்து இயக்கத்தின் இந்தப் புறவயப் பங்கு கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அதேபோது தலித்து இயக்கத்தின் ஒரு பகுதியை இன்றளவும் பீடித்துள்ள இந்தியத் தேசிய மாயையும் பதவி நாடும் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) அரசியலும் சமூகநீதிப் போராட்டத்துக்கும், ஆகவே தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கும் தடைகளாக உள்ளன.
தமிழகத்தில் தமிழீழ ஆதரவு என்பது எப்போதும் தமிழ்த் தேசிய எழுச்சியின் ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 1967 தேர்தலுக்குப் பின் மங்கிப் போன தமிழ்த் தேசிய உணர்வெழுச்சியை ஒரளவு மீட்டது 1983 கறுப்பு யூலைதான். அது முதல் ஏற்றவற்றங்களின் ஊடேதான் என்றாலும் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு என்பது தமிழ்த் தேசிய அரசியலின் அடையாள முத்திரை ஆயிற்று.
இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப் படையின் பெயரால் இந்தியா நிகழ்த்திய வன்படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பின் ஈழ ஆதரவு என்பதே பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்றாகி விட்டது. 1991 இராசீவ் கொலையின் விளைவு தமிழ்த் தேசியத்துக்கு ஒரு பின்னடைவையே குறித்தது என்றாலும், தமிழீழப் போராட்டத்துக்குரிய உறுதியான ஆதரவுத் தளம் குலைந்து போய் விடவில்லை.
நீறுபூத்த நெருப்பாய் இருந்த ஈழ ஆதரவை 2008-09 காலத்திய இறுதிப் போர் ஊதி விட்டது. போரை நிறுத்து என்ற முழக்கம் அனைத்துப் பிரிவு தமிழக மக்களையும் களத்தில் இறக்கியது. அரசியலை எட்டியும் பார்க்காத பல பிரிவினரை அது போராடச் செய்தது. சிங்களப் பேரினவாத அரசுக்கு உடந்தையான இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. வீரத் தமிழன் முத்துக்குமார் முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த தீக்குளிப்புகள் தமிழகத்தின் கொந்தளிப்பை உணர்த்தின.
முள்ளிவாய்க்கால் இனக்கொலை (2009) ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் அனைத்துப் பகுதித் தமிழ் மக்களிடையேயும், குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடையே, தமிழ்த் தேசியம் புத்தெழுச்சி பெறத் தூண்டுதலாகியுள்ளது. ஈழத் தமிழர் ஈடுசெய் நீதிக்கான போராட்டம் பெரும்பாலும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாகவே இருந்து வந்த தமிழீழ ஆதரவை ஓரளவு அறிவுசார்ந்த ஒன்றாக மற்ற உதவியுள்ளது 2013 மாணவர் போராட்டம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழக ஆற்றுநீர் உரிமைக்கான போராட்டத்தில் கோரிக்கைகளையும் போராட வழிகளையும் வகுப்பதில் போராடும் தமிழ்த் தேசிய ஆற்றல்கள் வீரியமிக்க செயலூக்கியாக பங்கு வகித்துள்ளன.
கூடங்குளம்-இடிந்தகரை, நெடுவாசல், கதிராமங்கலம், நியூட்ரினோ போராட்டங்கள் தமிழ்த் தேசியத்தை செழுமைப்படுத்த உதவியுள்ளன. பசுமைத் தமிழ்த் தேசியம் இயல்பாக மலர்ந்து மணம் வீசுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் முறையான தொழிற்சங்க இயக்கம் முகிழ்த்தது தமிழ் மண்ணிலேதான். தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளிடம் தமிழும் பொதுமையும் சமூகநீதியுமான நோக்குகள் முனைந்து மிளிர்ந்தன. அவர்களால் அந்தக் கட்டத்திலேயே இந்தியத் தேசியக் கூட்டினை உடைத்து வெளிவர முடியவில்லை என்பதைக் குற்றமாகச் சொல்ல முடியாது.
தேசிய இனச் சிக்கல் குறித்து மார்க்சிய-இலெனினியம் தந்த சரியான புரிதல் இருந்த போதிலும் பொதுமைக் கட்சித் தலைமையால் சிந்தனை-சொல்-செயலளவில் இந்தியத் தேசியக் கருத்தியலை விட்டு வெளிப்பட முடியவில்லை. இந்த இயலாமையால்தான், குறிப்பாகத் தேசியஇனச் சிக்கலில் இந்தியத் தேசியக் காங்கிரசின் இடதுசாரி வாலாகவே அது பிற்காலத்தில் சீர்கெட்டது. தேசிய இனச் சிக்கலில் இந்தியாவின் சட்டவாதப் பொதுமை இயக்கத்தின் பெருஞ்சரிவு காசுமீரத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.
இந்தியாவின் பல்வேறு தேசங்களிலும் மார்க்சிய-லெனினியக் குழுக்கள், அமைப்புகள் வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்கித் தங்கள் சர்வதேசியக் கொள்கையின் செயலார்ந்த வடிவமாகத் தத்தமது மொழிவழித் தேசியத்தை அறிந்தேற்று, தேசியக் கோரிக்கைகளுக்காகப் போராட முன்வந்திருப்பது காத்திரமானதொரு வளர்ச்சிப் போக்காகும். இந்தப் போக்கு தமிழ்நாட்டிலும் வளர்ந்து வருவது தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் திசைவழியையும் செழுமை செய்யும் என்பதில் ஐயமில்லை. போராடும் தமிழ்த் தேசியத்துக்கு இணையாகவே வாயாடும் தமிழ்த்தேசியமும் வளர்ந்துள்ளது. இனவாதம், சாதியம், பதவி வேட்டை, குடியாண்மை மறுப்பு, பொதுவிய எதிர்ப்பு, தனிமனித வழிபாடு, வெற்றுப் பகட்டு அரசியல் என்ற வழிகளில் இளைஞர்களின் தமிழ்த் தேசிய உணர்வும் உழைப்பும் வீணாகி விடுமோ என்று கவலைகொள்ள வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுத் தடத்தைப் பயின்று வெற்றிகளிலிருந்து வீரம் பெற்று தோல்விகளிலிருந்து பாடம் பெற்று தமிழ்த் தேசியத்தின் குறிகோள்களை அடைவதற்கான அறிவுத் தெளிவும் உணர்வெழுச்சியும் அணிதிரட்டலும் வளரப் பாடாற்றுவோம்.
• தியாகு, 28/03/2018
thozharthiagu.chennai@gmail.com
ஓவியம்:
இரவி பேலட்