தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் 'இது நமக்காகது' எனப் பலரும் ஒதுங்கி விடுவார்கள். இல்லை இல்லை படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய நூல் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பறவைகள் காப்பிடங்களுக்கும் (சரணலையம்) சென்று, ஆய்விட்டு, அதன் புகைப்படங்களை (அழகிய) எடுத்து மிமினுக்கும் தாள்களில் அச்சிட்டுள்ளார்கள். இதை விட முக்கியமானது இந்தியாவிலே அதிக பறவைகள் காப்பிடமும் பெரிய காப்பிடமும் அமைந்த மாநிலம் தமிழகம் என்பதால் இது போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் இல்லாததும், இந்த நூல் அறியப்படவேண்டியதன் கட்டாயத்தை நான் உணர்கிறேன்.
'மரத்தையும், பறவையையும் தங்கையாக நினைத்து அழுத பெண் பாத்திரத்தைத் தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். கொங்கு மண்டலத்தின் 'அண்ணன்மார்' கதையின் மையப் புள்ளியே கிளி. இராமாயணத்தில் 'மான்' தானே கதையின் திருப்பம். பாலூட்டும் பன்றியைத் தனது பசிக்காக வேட்டையாடிய புலியால் பரிதவித்த பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்ட புலிக்குத் தண்டனை விதித்தான் சிவன் எனப் பக்தி இலக்கியத்திலும், பண்டை காலத்தில் உணவுக்காக வேட்டையாடுவதில் தர்மம் இருந்தது. பெண் விலங்கையும், பெண் பறவையையும் வேட்டையாடி விட்டு வருந்தி அழுத இலக்கியப் பாத்திரச் செய்திகள் புதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மானுட சமூகம் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது.
வேட்டையாடிய கூட்டு வாழ்கையாக இயற்கையோடு மனித இனக்குழுவின் ஒற்றுமையைப் பறைசாட்டி ஒன்றோடு ஒன்றாக ஒன்றியிருந்த வாழ்வை, விலங்குகளிடமிருந்து மனிதனைத் தனியாகப் பிரித்தது பிரிட்டீஷ் சட்டம்.
வாரக் கடைசி நாளுக்கு (வீக் எண்ட்) 'எங்கு போகலாம்' எனத் திட்டமிடும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பறவைகள் காப்பிடத்திடத்திற்குப் போகலாம். அந்த காப்பிடங்கள் எங்கு உள்ளன, போகும் வழி, தூரம் எவ்வளவு, என்ன விதமான பறவைகள் எந்த மாதங்களில் வரும், போகின்றவர்கள் என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும்? இது குறித்த கையேடு வேண்டுமல்லவா? அதை இந்த நூல் அருமையாகத் தந்துள்ளது.
மொரிசியஸ் தீவில் 'கல்வாரியா' மரத்தின் விதையினை 'டோடோ' என்ற பறவை சாப்பிட்டு அதன் வயிற்றில் ஏற்படும் நொதி மாற்றத்தால் சீரடைந்து, இப்பறவையின் எச்சம் மூலமே கல்வாரியா விதை முளைத்தது. இந்தப்பறவை அழிந்ததால், இந்த மரத்தின் விதைகளை உண்ண பறவையில்லை. தானாகப் பழுத்து விழும் இந்த மரத்தின் விதை முளைக்கும் திறனை இழந்து விட்டது. தற்போது மொரீஸ்யஸ் தீவில் மிஞ்சியுள்ளது ஒரே ஒரு மரம் மட்டுமே. இதனை எப்படி இனப்பெருக்கம் செய்ய வைப்பதென உலக நாடுகளெல்லாம் கூடி ஆய்வு நடந்துகிறது. ஆய்வு இன்னும் முற்றுப்பெறவில்லை என்ற செய்தியோடு, ''பறவைகள் என்பது தனித்த உயிரனம் அல்ல அது அனைத்து உயிர்களுக்குமான தொடர் சங்கிலியின் முதல் கண்ணி'' என அறிவுறுத்தலோடு துவங்கிறது இந்த நூல்.
பெரும்பாலான பறவைகள் விதைகளை மட்டுமே உண்ணும் என்பதால் விதை முளைப்பதற்கும், பரவலுக்கும் மையக்காரணி பறவைகளே என்பதை சட்டென அறிவுறுத்துகிறது.
கடல் நீர் - முன்னீர், ஆறு - நன்னீர், குடிநீர் - இன்னீர், மழைநீர் - அமிழ்தநீர் என இலக்கியங்கள் சொல்லும் செய்தியை அருமையாகப் பறவைகள் இசைபோலச் சொல்லி, குளத்தின் ஓரத்திலே பழங்காலத்தில் இறந்த மனிதர்களைப் புதைத்துள்ளார்கள். மதுரையைச்சுற்றியுள்ள ஏரிக்கரையோரங்களை ஆய்வு செய்ததில் அங்குள்ள ஏரி குளங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற அறிய தகவலைச் சான்றுடன் விளக்குகிறது இந்த நூல்.
தமிழ் இலக்கியப் பழம்பாடல்களில் 64 வகை பறவைகள் பெயர்கள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டு, பறவைகள் கூடி ஓசையிடுவதை 'ஓசனித்தல்' என்ற அழகுச் சொல்லால் நமது புலவர்கள் பதிவு செய்துள்ளதையும், அன்னம் என்ற பறவை வாத்து என்பதைத் தேடி விளக்கம் கொடுத்துள்ளது நூல். காகம் ஆக்ஸிசன் குறைந்த பகுதியில் வாழாது. காகம் இல்லாத இடத்தில் மனிதன் வாழமாட்டான் என்ற நுண்ணிய செய்தி, காகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.
பறவைகள் குறித்து யார்யாரெல்லாம் ஆய்வு செய்தார்கள், இந்தியாவின் முன்னோடி பறவையியலாலரான 'சலீம் அலி' குறித்த தகவல், சிறுவர்கள் எளிதாகப் புரிந்து படித்துக் கொள்ளும் விதமாகப் பறவைகளின் உடல் கூறுயியல், பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடு கட்டுகின்றன. கூடு கட்டுவதில் ஆண் பறவைகள் பெண் பறவையை ஈர்க்கப்"படும்பாடு" அதன் விவரிப்பு அறிவியல் பூர்வமாகக் கொடுத்துள்ளார்கள். அதே போல் பறவைகளிலே குயில் மட்டும் ஏன் கூடு கட்டுவதில்லை ஆய்வின் விடை கிடைக்காததைப் பதிவிட்டுள்ளது நூல். பறவைகள் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிடும், சில பறவைகள், மூன்றாண்டுக்கு ஒரு முறையே இனப்பெருக்கம் செய்கிறது என்ற செய்தி அருமையான பதிவு.
பறவைகள் காப்பிடங்களைவிட அதன் பெயர்க் காரணத்தை வாசகர்களுக்குக் கொடுத்திட நூலாசிரியர்கள் எடுத்த சிரத்தையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இராமநாதபுரமாவட்டம் சாயல்குடி அருகே உள்ல காஞ்சாரை என்ற காப்பிடத்தின் பெயர்க் காரணத்தை விளக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். கஞ்சாரை என்பது பண்டுவத்திற்கு (வைத்தியத்திற்கு பயன்படும் மூலிகை) என்பதைப் பண்டுவ அகராதியில் பார்த்திருந்தால் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.)
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று பிரிட்டீஷ் ஆட்சி வந்தது. நாயக்கர் குதிரைப் படைகளுக்குத் தடை போட்டனர். இதனால் குதிரைகளை வேதாரயகாடுகளில் தனித்து விடப்பட்டது. இந்தக்குதிரைகள் 'தொண்டுக் குதிரைகள்' என அழைக்கப்பட்டது. இந்தச் செய்தி போன்று மரங்களை நடவு செய்தவர்கள், பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் செய்திகளைப் பெட்டிச்செய்தியாகக் கொடுத்து அழகுற வடிவமைத்துள்ளார்கள்.
வேடந்தாங்கல் காப்பிடத்திற்குப் புதிய பறவைகள் வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் வந்து சென்ற சில பறவைகள் வராமல் நின்றது குறித்த ஆய்வு தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த நூல், காப்பிடங்கள் அனைத்துக் கண்மாய் ஏரிகள் அவைகளுக்கான நீர் வரத்துக் கால்வாய்கள் தூர்த்து கிடப்பதை விவசாயிகளுடன் சேர்ந்து தனது வருத்ததைப் பதிவிட்டுள்ளது.
இதே போல் காப்பிடச் சிக்கல் குறித்துப் பேசும் நூல் பொத்தாம் பொதுவாகத் தாவியுள்ளது. அது தனி அதிகாரம் என நினைத்தார்களோ என்னவோ? தொண்டை மற்றும் சேது மண்டலத்தில் இருந்த பல்லாயிரம் ஹெக்டர் காடுகளை அழித்த அரசு அதில் யூக்களிப்டஸ் & கொட்டை முந்திரி பயிட்டு காடுகளுக்குள்ளிருந்த குளங்களை மேவியது.
பொதுவாக சூழலியல்வாதிகள் ''மனிதனை விலங்காகவும், விலங்கை மனிதனாகப் பார்க்க வைத்தவர்கள்'' என்ற குற்றச்சாட்டு உண்டு. அதிலிருந்து சற்று வேறுபட்டு மனித குலத்தோடு இசைந்து நூலினை முழுமையாகச் செழுமைப்படுத்தியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.
இந்த நூலில் குறைபாடாகப் பார்ப்பது :
அயல் தாவரம், இயல் தாவரம் எனக்குறிப்பிட்டுள்ளது. வீட்டு விலங்காக வளர்க்கப்படும் பன்றி நாய், பூனை இவைகள் காப்பிடங்களுக்குச் செல்கிறது என்ற சொல்லாடல்கள் நமது சிந்தனைக்குள் சிக்கலை உண்டாக்குகிறது.
ஒரு விதை முளைக்கத் தேவையான காரணிகள் இருந்தாலும், அவை முளைத்து வளர்ந்திடத் தேவையான சூழல் இருந்தால் மட்டுமே அம்மண்ணில் அல்லது அவ்விடத்தில் மண்ணே இல்லாத எட்டு மாடிக் கட்டிடத்தில் கூட முளைத்த தாவரம் நிலைத்து நிற்கும். ஒவ்வொரு விதையும் தனக்குள் புரட்சி (Darwin's Theory of Evolution, and RNA, DNA Metopolism with its Mechanism phenomenon) என்ற 'வித்தை' வைத்துள்ளது என்பது இயற்கை விதி. வெளிநாட்டுத் தாவாரங்களுக்கு விசா வழங்குபவர்கள் போல் அயல் (அன்னிய) இயல் (உள்ளூர்) தாவரம் எனப் பிரித்து எழுதியதும் இந்த நூலில் பார்க முடிகிறது. பறவையோ விலங்கோ உணவுத் தேவைக்காக வலசையாக (migration) வரும், போகும். வந்த பறவைக்குச் சூழல் அதனது உடலுக்கு ஒத்துப்போனாலும் அந்த இடத்தில் அந்த விலங்கினங்கள் வாழ்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதைக் கவனிக்க மறுத்து கருத்துத் திணிப்பாக எழுதியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அதே போல் தன்னிச்சையான மரபுக்கூறு மாற்றம் (spontaneous mutation) நிகழ்வதாலே, மனிதன் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள், அதிலிருந்து பூச்சி புழு. இவைகளிலிருந்து பறவை அடுத்து மனிதன் பரிணமித்தான் என்பதை தற்போது வரை உள்ள ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.
காப்பிடங்கள் அனைத்தும் குளத்திலே அமைந்துள்ளது. குளங்கள் வேளாண்மைக்கான ஆதாரம். வேளாண்மைக் குடிகளின் வளர்ப்பு விலங்கு நாய், பூனை, உணவுக்காக பன்றிகள். இவைகள் அருகில் உள்ள காப்பிடங்களுக்குப் போகத்தானே செய்திடும். இந்த நூலின் கூற்றுப்படியே வைத்தால் காட்டுப் பன்றி, காட்டுப்பூனை, காட்டு நாயான ஓநாய் செந்நாய் இவைகள் காப்பிடங்களுக்கு வருமே இதைத் தடுக்கச் சொல்லுவார்களா. அதே போல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிர்க் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க் கருத்துவருவாக்கம் அறிவியல் பூர்வமாக நிருபனம் ஆகவில்லை. அதுவரை இவர்கள் காத்திருப்பது நியாயம் என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து, சூழலியர்கள் மனித குலத்திற்கு விஞ்ஞானத்தோடு இசைந்து கொடுத்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் இவை வெற்று முழக்கமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளப்படும் என்பதை வேண்டுகிறோம்.
அயல் இயல் என்ற சொல்லாடல்கள் ''நாட்டு மாடு'' கொள்கை போன்றதே. இவையெல்லாம் 'சாதி புனிதம்' குலதெய்வ வழிபாடுகளைக் காப்பதைப் போன்ற கொள்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் சொல்ல காரணிகள் இல்லாமல், மரபு என்ற ஒற்றைச்சொல்லைச் துணைக்கு இழுக்கிறார்கள் ஆசிரியர்கள். மனிதன் நேற்று தோன்றிய விலங்கல்ல. அவன் வேட்டைக் சமூகமாக இருந்து அதிலிருந்து பரிணமித்தவன். அவன் வேட்டைச் சமூகமாக இருந்த உற்பத்தி சமூகமாக நிலைத்து நிற்க காடுகளிலிருந்து தனக்குப் பழக்கப்படும் விலங்குகளைக் கண்டறிந்து அதிலிருந்தே வளர்ப்பு விலங்குகளை (domestic) இனம் கண்டு அவன் வளர்தான். காட்டுக்கோழி இருக்கவே கோழி வரஆடு - கேளை ஆடு - வெள்ளாடு செம்பறி ஆடு, காட்டு மாடு - உழவு மாடு, செந்நாய் ஓநாய் - நாய் இப்படி விலங்குகளைக் கண்டறிந்து வளர்த்தான் என்பது இந்த நூலாசிரியர்கள் அறியாதது அல்ல. தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக இப்படியான சொற்களைப் பயன்படுத்தி இருப்பது விஞ்ஞானத்திலிருந்து விலகி நிற்பது வருத்தமளிக்கிறது.
மனித குலம் இன்னும் வியப்பாகப் பார்ப்பது இயற்கையான மரபியல் கூறுகள் மட்டுமே (jenitic engenreing). இதற்குள் மனிதன் நுழைந்து விட்டால் அனைத்தும் மானுடன் கைவசப்படும் என்பதைச் சூழலியல் என்ற போர்வையில் விஞ்ஞானத்திற்கு எதிராக களமாடுவார்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
நூல் - தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
ஆசிரியர் - சண்முகநந்தம் &பேராசிரியர் செயக்குமார்
வெளியீடு - எதிர்
விலை - 500