புலிகள் இயக்கம் குறித்து முழுமையாக அறிந்த ஒரு நபர் என்றால் அவர் தலைவர் மட்டும்தான்.
ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அவர்கள் போராட்டத்தில் இணைந்த காலப்பகுதி, வகித்த பதவி, இயக்கத்தில் நீடித்த காலப் பகுதியை பொறுத்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அது முழுமையானது கிடையாது.
இயக்கத்திலிருந்தவர்களின் நிலையே இது என்ற போது நம் போன்று வெளியிலிருந்தவர்களின் கதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புலிகளின் பலம் என்பதே அவர்களின் இரகசியம் பேணும் இந்த முறைமைதான்.
துரதிர்ஷ்டவசமாக 2009 இற்குப் பிறகு அது எமக்குப் பலவீனமான ஒரு அம்சமாகப் போய் விட்டது.
காரணம், யாரிடமும் முழுமையான தரவு இல்லை. ஆவணம் இல்லை.
ஆவணப்படுத்தலில் புலிகள் போன்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் இதுவரை தோன்றியதில்லை.
ஆனால் அவற்றை நாம் முள்ளிவாய்க்காலில் இழக்க வேண்டியதாயிற்று.
எமது நீதிக்கான பயணத்திற்கு மட்டுமல்ல தொடர்ந்து போராடவும், இன அழிப்பை எதிர்கொள்ளவும் புலிகளின் முழு வரலாறு நமக்குத் தேவைப்படுகிறது.
கூடவே இந்த மனித குலம் புலிகளிடம் இருந்து கற்க நிறையவே இருக்கிறது.
அது ஒரு இயக்கம் அல்ல மனித குலத்திற்குக் கிடைத்த பொக்கிசம். இப்போது இது கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் இதற்கான தெளிவான பதிலை ஒரு நாள் வரலாறு எழுதும்.
நாம் புலிகளை கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியில் இருப்பதால் புலிகளைத் தொடர்ந்து கற்று வருகிறோம்.
தினமும் ஏதோ ஒரு விடயம் எம்மை வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருக்கிறது.
அதிலிருந்தே மேற்படி எதிர்வு கூறலை முன் வைக்கிறோம்.
அதில் ஒன்றுதான் இந்த 'சிங்கள மொழி, கலாச்சார கல்வி நிலையம்'.
இது குறித்து 2009 இற்கு முன்பே எமக்குத் தெரியும். ஆனால் எந்த வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இதை வெளிப்படையாக எழுத முடியாத இக்கட்டு.
காரணம், எதிரிகளை விடுவோம். நம்மவர்களே வந்து ' யாருக்கு கதை விடுகிறீர்கள், ஆதாரம் இருக்கா? ஸ்கிரீன்சொட் இருக்கா?' என்று கிளம்பி விடுவார்கள்.
நடைமுறையில் இதைத் தினமும் அனுபவித்து வருகிறோம்.
இந்த சின்னத் துண்டுப் புகைப்படம் கூட நேற்று எதேச்சையாக முகநூலில் சிக்கியது
இது கூட புலனாய்வுத்துறையிடம் இந்தக் கட்டமைப்பு இருந்த போது எடுத்த படம்தான்.
இந்தக் கட்டமைப்பு குறித்து நிறைய எழுதலாம். அதற்கு இங்கு இடம் காணாது. மீதியை சம்பந்தப்பட்ட சாட்சிகள்தான் எழுத வேண்டும்.
நமக்குத் தேவையானதும் எதிரிகளுக்கும், இந்த உலகத்திற்கும் சொல்ல வேண்டிய செய்திதான் முக்கியம்.
தமது நிலத்தை ஆக்கிரமித்து மொழி, பண்பாடு, கலாச்சார அழிப்பை மேற்கொள்ளும் ஒரு இன அழிப்பு அரசின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கற்கவும் அதைப் பாதுகாக்கவும் ஒரு கட்டமைப்பை உலகில் யாராவது நிறுவுவார்களா?
ஆனால் புலிகளால் அது முடிந்திருக்கிறது. இவர்களுக்குத்தான் இந்த உலகம் பயங்கரவாதப் பட்டம் சூட்டியுள்ளது.
அன்று மட்டுமல்ல இன்றும் மிகத் தீவிரமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினூடாகத் தமிழ் நிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசிற்கு யோக்கியன் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது இந்த கேடு கெட்ட உலக ஒழுங்கு.
ஆனால் அறத்துடனும், நேர்மையுடனும் மானுட குலத்திற்கே முன்னுதாரணமாக இப்படியான பன்மைத்துவ கட்டமைப்புக்களை உருவாக்கியதன் வழி இந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்ய புகுந்ததன் விளைவாகவே புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதுதானே இதன் மறுவளமான உண்மை.
எனவே இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
புலிகள் எமது மீட்பர்கள் மட்டுமல்ல இந்த இனத்தின் பெருமிதம், கர்வம், செருக்கு எல்லாமுமே அவர்கள்தான்.
வரலாறு புலிகளை விடுவிக்கும்.
Paranii Krishna Rajani அவர்களது முகநூல் பதிவிலிருந்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக