வெள்ளி, 26 நவம்பர், 2021

ஒளி கொண்டு வருபவன் : சி.மோகன்

ஒளி கொண்டு வருபவன்

மீண்டும் வருவான்

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்.


நிலத்தில் பிறந்த அவன்

வளரிளம் பருவத்தில் 

நிலம் மீது கவிழ்ந்திருந்த 

இருள் கண்டான்.

நிலம் மூடிய இருள் நீங்க

ஒளி சேகரிக்கக் காடு சென்றான்.


காட்டின் பாதைகளெங்கும்

நீந்தி அலைந்தும்,

சமுத்திரப் பாதைகளெங்கும்

நடந்து கடந்தும்,

நிலத்தின் பாதைகளெங்கும்

பறந்து திரிந்தும்

ஒளி சேர்க்கும் வித்தை கற்றான்.


சேகர ஒளியோடு

அவ்வப்போது நிலத்தை

மின்னலென ஊடறுத்து

பறந்து மறைந்தான்.


கால கதியில் உள்ளும் புறமும்

சேகரமான ஒளிப் பிரவாகத்தில்

ஒளி ஊற்றென உருக்கொண்டான்,

நிலம் திரும்பினான்.


நிலமேகிய ஒளி ஊற்றில்

தகதகத்தது நிலம்.

வெளிச்சத்தின் பாதை விரிந்து படர்ந்தது.

களவாடப்பட்ட பாதைகள் கையகப்பட்டன

விபத்துகளற்ற மீட்சிப் பாதை.


எங்கும் இருந்ததில்லை

எப்போதும் இருந்ததில்லை

வெளிச்சத்தின் உக்கிரத்தில்

சில விபரீதங்களும் நிகழ்ந்தேறின.


கால மாறாட்டத்தில்

வஞ்சனையும் சூழ்ச்சியும் கவிந்த

நிலவெளி இருள் 

சக்திகளின் சதியாட்டத்தில்

அடர்திட்டுக் கருப்பு 

மீண்டும் நிலத்தில் 

அப்பிக் கொண்டுவிட்டது.


பேரிருள் கொண்டது நிலம்

பேரிடர் கண்டது இனம்

மீண்டும் காடேகினான் அவன்.


ஒளி கொண்டு வருபவன்

பேரொளி ஊற்றென

மீண்டும் வருவான்.

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்

சூரியக் குழந்தை அவன்.


- சி.மோகன்

1 கருத்து: