தமிழின் தனித்தன்மையை உலகம் கொண்டாடும் வேளையில், தெய்வ நாயகம் போன்ற அற்பர்கள் திருவள்ளுவருக்குக் கிறித்தவச் சமயச்சாயம் பூசுவது காலத்தின் கொடுமை.
சமகாலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றுவதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியுள்ளது.
வள்ளுவர் தோற்றம் பற்றிய தோராயக் கருதுகோளைக் கொண்டுதான், தெய்வ நாயகம் போன்றவர்கள் தான்தோன்றித் தன்மையோடு வள்ளுவரின் படைப்புகளுக்குச் சமயச்சாயத்தை அள்ளி வீசுகின்றனர்.
பொதுவாக, ஆண்டுக் கணக்கீட்டைக் கிறித்துவுக்கு முன், பின் என்ற மேற்கத்திய ஆய்வாளர்கள் வரையறை செய்ததன் விளைவால் இது போன்று அவர் பதிவு செய்கிறார்.
பறங்கி தோமா வந்து இறங்கியதாகக் கருதப்படும் காலத்தில், இந்நிலத்திற்கு இந்தியா என்ற பொதுப்பெயர் இல்லை. இந்து தேசம் என்ற அடையாளப்பெயரும் இல்லை.
நாவலம் பொழில் என்று அழைக்கப்படும் பகுதி குமரிக்கண்டத்தின் நீட்சி என்று இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன.
மொழியின் தோற்றம் பற்றிய புரிதல் இல்லாமல் கிறித்தவ சமயத்திற்குத் தமிழ் அடையாளம் வேண்டி இது போன்ற ஒவ்வாமைக் கருத்துக்களைத் திணிக்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான திருக்குறளை, குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக நிறுவுவதன் மூலம் தமிழர்களிடத்தில் தனித்த சிந்தனை மரபு இல்லை என்பதாகக் கட்டமைப்பதற்கு முயற்சிகள் செய்கிறார்.
இது போன்ற கருத்துத் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் தமிழர்கள் கடந்து செல்கின்றனர்.
சாதி சார்ந்து இயங்குவதால்தான் தெய்வநாயகம் போன்ற இரண்டகர்கள் தமிழுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர்.
தமிழருக்கு மதம் அடையாளமும் இல்லை; சாதி அடையாளமும் இல்லை!தமிழ் மட்டுமே தமிழருக்கு அடையாளம் என்பதே வரலாற்று உண்மை.
செ.தமிழ்நேயன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக