வெள்ளி, 11 டிசம்பர், 2015

அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி :- திருவிருப்போன்


அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி 
                                                                      : திருவிருப்போன்
ஆண்டிக் குடும்பனுக்கும், மாரி வண்ணானுக்கும் இடையில் மலரும் நட்பில் தொடங்குகிறது வரலாறு. ‘வண்ணாரப் பயலுடன் சேருவதற்காக அடியும் உதையும் வாங்கும் ஆண்டியால் மாரியைப் பிரிந்திருக்க முடிவதில்லை. ‘ரெண்டுபேரும் ஒரு குண்டியிட்டுப் பேலுறவுகள்’ என்று ஊரே எளக்காரம் பேசுகிறது. ஓடைச் சேற்றுச் சகதியில் மாட்டிக் கொள்ளும் ஆண்டியைக் காப்பாற்றும் மாரி கடைசிவரை ஆண்டியின் மனதைவிட்டு அகலுவதில்லை. அவர்கள் போடும் பேச்சுப்பழக்கமும் விளையாடும் விளையாட்டுக்களும் உண்ணும் தின்பண்டங்களும் நம்மை கலிங்கலூருணிக்குள் இழுத்துவிடுகின்றன.
ஆண்டியும் மாரியும் வளர்ந்து கலியாணம் செய்துகொண்டு, குடும்பங்கள் வளர்ந்து பெருகி ஊர் தழைத்து – வரலாறு விரியத் தொடங்குகிறது. ரெண்டு குடும்பங்களுக்கிடையே விடாத தொந்தம் தொடர்கிறது. சம்சாரிக் குடும்பர்களின் வாழ்வும், வண்ணார்களின் பிழைப்பும் ஓவியமாகத் தீட்டப்படுகின்றன. மெதுவாக, பனையேறி சண்முகத்தின் பாடு கதைக்குள் நுழைகிறது. பனைமரத்தின்மேல் அண்ணன்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்து வீழ்ந்து மாள்வதிலிருந்து அவனது பயணம் தொடங்குகிறது. ஆண்டியின் குடும்பத்துடன் வந்து இணைகிறது சண்முகத்தின் குடும்பம். இந்த பந்தமும் கடைசிவரை தொடர்கிறது.
தாது வருசப் பஞ்சம் தலைகாட்டி கலிங்கலைக் கலக்கி ஊரையே மயானமாக்குகிறது. மாரிக்கு தீர்க்க முடியாத வியாதி வந்து, பஞ்சத்திற்கு முன்னமேயே இறந்துபோகிறான். அவன் குடும்பம் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு வெளியேறுகிறது. பஞ்சத்தில் ஆண்டியின் குடும்பத்திலும் சண்முகம் குடும்பத்திலும் உயிர்கள் பலியாகின்றன.
‘பனையேறி’கள் ‘நாடார்’களாகி வளர்ந்த வரலாறு துல்லியமாக எழுந்துவருகிறது. ‘வளர்ந்த’ பின் அவர்களால் ‘கீழ்ச்’சாதியாக வாழ முடியாமல் போகிறது. மேல் சாதிக்காரர்களின் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடத் தோன்றுகிறது. வரலாற்றின் பிரச்சினை இங்கே தொடங்குகிறது.
நாயன்மார் கதையும், அருகர்களின் கதையும் தலைகாட்டுகின்றன. எட்டப்ப வமிசம் பரவிய கதை, கட்டபொம்மு கதை, ஊமைத்துரை, மருது சகோதரர்கள் வெள்ளைக்காரர்களுடன் போரிட்ட கதை என நீண்டு, எட்டையபுரத்து சமீன் விவகாரங்கள், இந்துக்கள் வேதத்துக்கு மாறிய பின்னணி, நாடார்கள் கழுமலைக்கோயில் ரத வீதிகளில் பல்லாக்கில் போகப் போராடியது, மறவர்களும் பிறரும் சேர்ந்து நடத்திய சிவகாசிக் கொள்ளை எனப் பல சம்பவங்கள் தொடர்கின்றன. நாடு விடுதலை பெற்றபோது நடந்த அக்கிரமங்கள் முதல் இந்திரா காந்தி சுடப்பட்டது வரை .. ஸ்… அஞ்ஞாடி…. நிறைய தகவல்கள். அதிலும் நாடார்களின் ஆலய நுழைவுப் பிரச்சினை அநியாயத்துக்கு நீண்டுகொண்டே போகிறது – 300 பக்கங்களுக்கு மேலாக. சில இடங்களில் ‘போதுமே’ என்று அசர வைக்கிறது. நிறைய ஆவணங்களிலிருந்து மேற்கோள்கள் வேறு. பூமணி, நாவலுக்காக தான் செய்த ஆய்வில் கிடைத்தவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் வாசகனுக்குக் கடத்தியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் போலும்.
ஒரு பெரிய சுற்றுச் சுற்றி வந்து கலிங்கலுக்குத் திரும்புகிறது. சண்முகத்தின் மகன் தங்கையாவை சிவகாசிக் கலகத்தில் பறிகொடுத்துவிட்டு மகனுடன் கலிங்கலுக்கு வருகிறாள் தங்கையாவின் மனைவி தெய்வானை. அவள் குடும்பம் வளரும் கதையாகத் தொடர்கிறது. சிவகாசி, முத்துநகர் என்று ஊர் ஊராகச் செல்கிறது. புதிது புதிதாக மனுசர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது உறவுமுறைப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. (எப்படித்தான் இத்தனை மனுசப் பெயர்களை அடுக்க முடிந்ததோ! இதற்கே தனி ஆராய்ச்சி பண்ணியிருக்கணும் போல!) ஊரில் பிற குடும்பங்களின் கதைகள் ஒட்டிப் பிணைந்து தொடர்கின்றன. பின்னால் அறிமுகமாகும் மாடப்பன் எல்லாம் துறந்து ஏகாந்த மனுசனாய் மலைநோக்கி நடப்பதுடன் ‘அஞ்ஞாடி’ முற்றுப்பெறுகிறது.
குடும்பன் சேற்றில் மாட்டிக் கொள்வதில் தொடங்கும் கதை, பள்ளன் துறவு கொண்டு விடுதலையாகிச் செல்வதில் முடிகிறது. இடையில்தான் எத்தன லொம்பலப்பட்ட பெழப்பு! கும்மரிச்சம், குதியாளம், இழவு, பகை, கொலை, கொள்ளை. மனிதன் பேலுவது, மோளுவது, சோற்றுக்கலைவது எதையும் மறைத்துப் பேச முயலவில்லை இவ்வரலாறு. எந்த வேஷமும் போடத் தேவையில்லாத மனுஷ வாழ்வில் யதார்த்தமாய் நடக்கும் அனைத்தையும் எந்த ஒப்பனையுமில்லாமல் சொல்லிச் செல்கிறது. ‘ஆஹா இது உசந்தது’ என்றோ ‘சை இது அபத்தம்’ என்றோ எதையும் வகைப்படுத்துவதில்லை. வாசகன் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளட்டும் என்றுகூட எதிர்பார்ப்பதில்லை. அச்சு அசல் பூமணி முத்திரை!
பொதுவாக, பூமணியின் கதைகள் அவை நிகழும் இடங்களால், சூழல்களால் சொல்லப்படும் தோற்றத்தை அளிக்கும். கதைசொல்லியோ, கதாபாத்திரமோ பேசாமல், அந்த இடமே கதை சொல்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்தும். ‘அஞ்ஞாடி’ அப்படியில்லாமல் காலவெளியே தன்னுள் நிகழ்வதைச் சொல்லிச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் வரலாறு!
வரலாறும் புனைவும் ஒன்றையொன்று சொகமாகத் தழுவிச் செல்லும் கதையோட்டம். இதைச் சொல்ல பூமணி கையாண்டுள்ள மொழி கிறங்கச் செய்கிறது. ‘சின்னனந்தி விடியக்காலக் காளானாகப் பூத்து பெரியமனுசி’யாகிறாள். ‘ரெண்டுபேரும் பேச்சுப்போட்டால் லேசுக்குள்’ தீருவதில்லை. ‘கழுதையைக் கூட்டிப்போய் பின்புறமிருந்து சன்னஞ் சன்னமாகத் தள்ளி’ ஓடைக்குள் இறக்குகிறான். சம்பவங்களோடும், மனுசர்களோடும் நம்மை நெருக்கமாக உணரச்செய்கிறது இந்த மொழி.
பனையேறி சகோதரர்கள் ஒருவரையொருவர் மரத்திலேயே வெட்டிக்/குத்திக் கொல்லும் காட்சி, ஊமைத்துரை செயிலில் இருந்து தப்பித்த வைபவம், வெள்ளைக்காரன் ஊமைத்துரையுடன் போடும் சண்டை, கழுகுமலையில் நிகழும் கலவரம், திருவிழா/தேர்க் காட்சிகள், சிவகாசிக் கொள்ளை போன்றவை பதிவுசெய்யப்பட்டுள்ள நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த ஒளிப்பதிவாளனின் கைவரிசையை எழுத்தில் பார்க்க முடிகிறது.
கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் நடக்கும் மூல சிகிச்சை, மதுரை மீனாட்சி கோயிலில் நுழைந்ததற்காக அடிவாங்கும் இரு குடும்பர்களின் பழிவாங்கும் படலம், குளுவனின் சவுரி முடி ரகசியம் போல சில அதிரவைக்கும் இடங்களும் உண்டு. ஆனால், பூமணி பொதுவாகவே வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எல்லாம் நம்புவதில்லை. ‘இன்னின்ன மாதிரி நடந்ததப்பா’ என்று கோடிக் காட்டிவிட்டு மறைந்துவிடுவார். கூறிச் செல்லும் சம்பவங்களும் மனுசர்களுமே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பார்கள் – சிறிது சிறிதாக தன் வீரியத்தை வெளிப்படுத்தும் மருந்துபோல. அஞ்ஞாடியிலும் ரெம்ப விசயங்கள் அப்படித்தான். படித்துச் செல்லும்போது ‘இதும் இப்பிடியா’ என்று எங்கேயும் நாம் திகைத்து நிற்பதில்லை. ஆனால், அசைபோடும்போது ஒவ்வொன்றாய் நம்மைத் திகைப்பில் தள்ளும்.
நிசமாய் நடந்தது போல் சொல்லப்படும் புளுகுணிக் கற்பனைகள் (குறிப்பாக மாரியின் எல்லையில்லா கற்பனைகள்), கனவுகள் (மேரி மாதாவும் முருகப்பெருமானும் சந்திப்பது முக்கியமானது), கேள்விப்படாத புராணங்கள் (க்ருஷ்ணனுக்கும் சப்தகன்னிகைகளுக்கும் பிறக்கும் ஏழு பிள்ளைகள்), உலக நடப்புகளை திருமாலின் கருடனும், சிவனின் பாம்பும் சேர்ந்து பார்வையிட்டு விவாதிப்பது, நாடு விடுதலை பெற்றதை விலங்குகள் பேசிக் கொள்வது, சாமியாருடன் பேசும் நாய், ஆண்டி, கருப்பி, அவர்களது மகள் மூவரும் சவக்குழியிலிருந்து வெளியே வந்து பேச்சுப்பழக்கம் போடுவது – இவை கதைக்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுக்கின்றன.
அஞ்ஞாடியை வெறும் தகவல் தொகுப்பு என்று சொல்லி சிலர் ஒதுக்கலாம். ஆமாம், இது ஒரு தகவல் களஞ்சியமே. இந்தக் களஞ்சியத்திலிருந்து என் தந்தைதந்தை தம் மூத்தப்பன் காலத்தில், என் நிலத்தில் வாழ்வு எப்படி இருந்தது என்பதை நான் கண்டுகொள்கிறேன். இன்றைய நிலையை நாம் எப்படி வந்தடைந்தோம் என்று தெளிகிறேன். என்றோ, விதிவசத்தால் அரசுரிமை பூண்டவர்களின் வாழ்வு பற்றிய வரலாற்றிலிருந்து நான் எதையும் பெற வாய்ப்பில்லை. என் பாட்டன் பூட்டனின் வாழ்வே என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எதன் நீட்சி நான் என்று தெரிந்துகொள்ளும்போது பல திறப்புகள் உண்டாகின்றன. இதற்காகவே நான் ‘அஞ்ஞாடி’யைக் கொண்டாடுவேன்.
இத்தனை மனுசர்களும், இடங்களும், சம்பவங்களும் ஒரு நாவலில் தேவையா? நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன் – ஒரு தேன்கூட்டை எடுத்துக்கொண்டு அதை விளக்குவதற்கு முற்படுகிறார் பூமணி. அந்தக் கூட்டின் வாழ்வு என்பது அதில் உள்ள தேனீக்களின் கூட்டுச் செயல்பாடே. ஒவ்வொரு தேனீக்கும் பேர் சூட்டுகிறார். ஒவ்வொரு அறையையும் பெயர் சொல்லி அழைக்கிறார். கூட்டில் நிகழ்பவற்றை பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார். தேனீக்கள் மூலம் கூட்டில் சேரும் தேனை வேண்டுவோர் எடுத்துக் கொள்ளலாம், சப்புக்கொட்டி சுவையை அசைபோடலாம்.
ஆண்டிக் குடும்பனை உயிர் நண்பனான மாரி வண்ணான் ‘நீங்க’ என்று மரியாதையுடன் அழைக்கிறான். ஆண்டியின் மனைவி கருப்பி ‘ஏ இவனே’ என்றுதான் விளிக்கிறாள். கதையில் ஆண்டி கடைசிவரை அவன் இவன் என்றுதான் சுட்டப்படுகிறான். ஆனால், ‘நாடான்’ பயல்களெல்லாம் வளர்ந்து ஒரு ‘மேனத்து’ வந்ததும் அவர் இவர் என்றாகிவிடுகிறார்கள்.
வெவ்வேறு சாதிகளுக்கிடையேயான உறவு, கீழ்ச்சாதிக்காரன் பொருளாதார ரீதியாக முன்னேறியபின் மேல் சாதிக்காரனுடன் தொடுக்கும் போராட்டம், எப்படியானாலும் கீழ்ச்சாதிக்காரனை மட்டந்தட்டியே வைத்திருக்கவேண்டும் என்ற மேல்சாதி மனப்பான்மை, இந்தக் கொடுமையெல்லாம் வேண்டாம் என்று வேதத்திற்கு மாறினால் அங்கேயும் துரத்தும் பகை – எல்லாம் சரடாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆண்டியும் கருப்பியும் கழுகுமலைக்கு சாமிகும்பிடப் போகும் காட்சி அலாதியானது. விரதமிருந்து கஷ்டப்பட்டு நெடுந்தூரம் நடந்து போனால் கோயிலுக்குள் சென்று சாமியைப் பார்க்க முடியாதாம். வீதியில் பவனி வரும் சாமியைப் பார்த்துவிட்டுப் பரவசமாவதோடு சரி. அன்றைய மேல்சாதிக்காரனைப் போய் ‘செருப்புட்டு’ அடிக்கவேண்டும் என்ற ஆத்திரம் நம்மை பற்றிக்கொள்கிறது. உடனேயே, ஆண்டி சொல்லும் இரு குடும்பர்களின் கதையைக் கேட்டு ‘வக்காளி, நல்லா வாங்கினான்டா பழி’ என்று ஆறுதல் கொள்ள முடிகிறது.
சண்டீராகித் திரியும் கருத்தையன், அவன் சேக்காளி நொண்டியன், குஷ்டரோகத்தால் அவதிப்பட்டாலும் கர்த்தர் மீது கீர்த்தனங்கள் இயற்றி அவர் புகழ் பரப்பும் உபதேசியாராக அலைந்து திரியும் மரியான், கணவனை இழந்தபின் உடல்பசிக்காளாகி கருக்கலைத்துக் கொள்வதையே தொழிலாகக் கொள்ளும் ஆண்டாள், புத்திசாலிக் கிறுக்கன் கோயிந்தன், சாமியாராகியும் அல்லல்படும் சுந்தர நாயக்கர் – பல பேர் கொஞ்ச நேரம் தலைகாட்டினாலும் மறக்க முடியாதவர்கள்.
மாரியின் வண்ணான் பாட்டிலிருந்து, சுந்தர நாயக்கர் பாடும் பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் வரை சுவையான பாடல்கள் அங்கங்கே அஞ்ஞாடிக்கு இசை சேர்க்கின்றன. வெள்ளாமையும் வியாபாரமும் தீப்பெட்டி ஆபிசுக்கும் வேட்டு யேவாரத்துக்கும் வழிவிட்ட கதைபோல, தெம்மாங்கும் ஒப்பாரியும் எம்சியார் படப்பாடல்களுக்கு இடம்கொடுத்து ஒதுங்கிக்கொண்டதும் பதிவாகியிருக்கிறது. குடுமியிலிருந்து கிராப்புக்கு வந்த கதையும், காட்டித்திரிந்த ‘அடுப்பி’லிருந்து அண்ட்ராயருக்கு வந்த வகையும்தான்.
‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார்
நன்றி: திருவிருப்போன் வலைத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக