மகாராசனின்
|
கீழிருந்து
எழுகின்ற வரலாறு : நூல் மதிப்புரை.
_ சுந்தர்
வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. "ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்" என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்” என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.
நூலாசிரியர் மகாராசன் அவர்கள் "இங்குள்ள கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழிக்கூறுகள், அரசியல் பொருளாதாரம், ஊடகங்கள் யாவும் ஒடுக்குண்டவர்களுக்கு ஆனதாக இல்லை என்கிற போது... கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் இந்நூல் அடித்தளம் குறித்த சில பதிவுளை முன்வைக்க முயலுகிறது" என்று தன் முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் சரியாக உள்ளது. அதற்காக அவர் "கல்விப்புல, பொது அரங்குகளில் முன் வைக்கப்பட்ட கட்டுரைகளையும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் விரிவாக்கிச் செப்பம் செய்த 9 கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார். கடினமாக உழைத்து இந்நூலைப் படைத்துள்ளார்.
முதல் 2 கட்டுரைகளும் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதப்பட்டவை. சமுதாயத்தின் படிநிலையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் வேறுபாட்டினை அடையாளம் காட்டுவதோடல்லாமல், தொல்காப்பியம் காலந்தொட்டு உள்ள இலக்கண நூல்கள் உயர்ந்தோரைச் சார்ந்தே இயங்குகின்றன என்று முதல் கட்டுரையில் கூறுகிறார். 2-வது கட்டுரை "தொல்காப்பியத்தில் பெண்-ஆண் பற்றிய கருத்தாக்கம்." அதில் ஆணாதிக்கச் சிந்தனைகள் எவ்வளவு மோசமாக உளளன என்பதைக் குறிப்பிடுகிறார்.
"கீழிருந்து எழுகின்ற வரலாறு" கட்டுரையில "சமூகத்தின் வரலாறு மேல்தளத்திலிருந்து
தொடங்காமல், கீழ்த்தளத்திலிருந்து தொடங்க வேண்டும்... அதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும்" என்று கூறும் ஆசிரியர் "மக்களின் சொலவடைகள் விடுகதைகள், சொல்லாடல்கள் முதலியவற்றையும், மக்களிடம் இருந்து கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வு முறைகள், அனுபவங்கள் என மக்களிடமிருக்கும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டு வரலாறு எழுதப்படவேண்டும்" என்று கூறுகிறார். "நிறுவன சமய மரபுகளைப் பொறுத்தவரையில், அவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களின் சமய மரபுகள் யதார்த்தமானவை. வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவை. வாழ்க்கையை எதிரொலிப்பவை" என்பதுடன் "இந்துத்துவ எதிர்நிலைப் பண்பாட்டு மரபுக் கூறுகளைக் கொண்டிருப்பவை" என்று கூறுகிறார்.
"தனக்குச் சாதகமானவற்றைப்
புனிதம் எனவும், பிறவற்றை எல்லாம் தீட்டு எனவும் வகைப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனீயம். இத்தகைய மேலாதிக்கச் சிந்தனைதான் சமூகத்தின் அடிஆழம் வரை பரவியிருக்கிறது. "நாட்டார் மரபு" என்றழைக்கப்பெறும் வாய்மொழி மரபு ஒரு புறமும், செவ்வியல் என்றழைக்கப்பெறும் எழுத்து மரபு இன்னொரு புறமும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, பாலின ரீதியாக ஒடுக்குண்டு கிடக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாழ்வியல் நியதிகள், பட்டறிவு வெளிப்பாடுகள் போன்றன எல்லாம் இழிவானவை, தரம் குறைந்தவை, மதிப்பில்லாதவை, குறைவானவை, சிறப்பில்லாதவை எனக் கருத்தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது... அதே போல தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் விரவிக் கிடக்கும் பாடல்களுக்கும் அங்கீகாரம் கிடையா" என்று தமிழ்க் கவிதை எழுத்தின் அரசியல் என்ற கட்டுரையில் குறிப்பிடும் ஆசிரியர் "வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" எனும் சங்ககாலக் காதல் கவிதையில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டுகிறார். நிலவுடைமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவம் வந்த பிறகு, மரபுக் கவிதைத் தளத்திலிருந்து, புதுக்கவிதைத் தளத்திற்கு மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்.
"இந்திய தேசம்: வேர்களும், கிளைகளும்" என்ற கட்டுரையில், ஆங்கிலேயர் மீதான பெருவாரி மக்களின் எதிர்ப்புணர்வை
"இந்திய விடுதலைப் போராட்டம்" என்கிற பெயரில் திரட்டிக் கொண்டு, இந்துத்துவம் கோலோச்சும் பார்ப்பனிய தேசமாகக் கட்டமைத்து விடும் முயற்சியில் ஒரு பொய்யான தேசத்தைப் பல புனைவுகளைக் கொண்ட கற்பிதங்களால் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம். அவர்களின் இந்திய தேசம் என்பது இந்துப் பார்ப்பனிய தேசம்தான் என்கிறார்.
திருவள்ளுவர் காலந்தொட்டு பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதைச் சுட்டும் ஆசிரியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பனியம் இச்சமூகத்தில் தன் வேர்களைப் பரப்பியிருந்தாலும், அவ்வேர்களின் முனைகள் ஆபத்தானவை என்பதை அடையாளம் காட்டிய போக்குகள் பிற்காலத்தில்தான் வெளிப்படுகின்றன. பூலே, அயோத்திதாசர் (Ayothidasar), பெரியார் (Periyar), அம்பேத்கர் (Dr.Ambedkar) போன்றவர்கள் பார்ப்பனீயத்தைத் தோலுரித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர்கள் என்கிறார் ஆசிரியர். பெரியார் இந்திய தேசத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கே ஒழிய, மொழி வழித் தேசிய இனங்கள் குறித்த பார்வையினால் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
("கீழிருந்து எழுகிற வரலாறு" ஆசிரியர் - மகாராசன், வெளியீடு: பரிசல், எண்1. இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, சூளை மேடு, சென்னை - 94. விலை ரூ.50
நன்றி:
தமிழ் கூடல்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக