நம் நாட்டில் எண்ணற்ற சாதிகள் உள்ளன. அத்தனைச் சாதிகளையும் மனுதர்மம் தன் வசதிக்காக வரையறுத்துள்ளது. அனைத்துச் சாதிகளையும் நான்கு பிரிவுகளில் உள்ளடக்கியது தான் மனுதர்மம். பிராமணன், வைசியன், சத்திரியன் மற்றும் சூத்திரன் போன்றவற்றுக்குள் நாமெல்லாம் அடங்குவோம். தீண்டாமையைத் தூக்கிப்பிடிக்க இந்த வர்ணாசிரமக்கோட்பாடு தேவைப்பட்டது. வர்ணாசிரமத்தில் கீழுள்ள பிரிவினரின் உழைப்பைச் சுரண்டி மேலுள்ள வர்க்கம் சுகமான வாழ்க்கையை நடத்தியது. தொழில்கள் அடிப்படையில் வர்ணாசிரமம் வரையறுக்கப்படவில்லை. வர்ணாசிரமப்பிரிவுகளை அமைத்த பிறகே தொழில்கள் பிரித்தளிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில உயர்சாதியினர் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எல்லாத் தொழில்களும் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் மதங்களின் பங்கு பெரிதாக இருந்திருக்காது. ஏனென்றால், மனுதர்மம் நான்கு பிரிவுகளைச் சொன்னாலும் இந்து மதம் ஒன்றே பிரதானமாகவும் அனைவரும் கடைப்பிடிக்கும் மதமாகவும் இருந்திருக்கிறது. அப்படியானால், ஒரே மதம், ஒரே கடவுளே வழிபடு பொருளாக இருந்த போதிலும் மேலோர், கீழோர் என்ற அப்பட்டமான பாகுபாடுகளும் அடக்குமுறைகளும் அரங்கேறிவந்தன. குறிப்பிட்ட சில பிரிவினரை மிருகங்களை விடக் கேவலமாக நடத்தியிருக்கிறார்கள். எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்து மதப்போர்வையில் எண்ணிலடங்காக் கொடுமைகள் நடந்தேறின. கீழ் நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியத்திருநாட்டில் மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 79.8 விழுக்காடும் இசுலாமியர்கள் 14.2 விழுக்காடும் கிறித்தவர்கள் 2.3 விழுக்காடும் சீக்கியம் 1.7 விழுக்காடும் பௌத்தம் 0.7 விழுக்காடும் ஜெயின் 0.37 விழுக்காடும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரும்பான்மை மதமாக இந்து மதம் மட்டுமே இருந்து வருகிறது. நாளடைவில் இந்தியாவில் பிறந்த சீக்கியம், பௌத்தம் மற்றும் ஜெயின் போன்ற மதங்களும் மேற்சொன்ன கணக்கீட்டின்படி குறைவான எண்ணிக்கையிலான மக்களையே கொண்டிருந்தன. இந்து மதத்திற்கு அடுத்தடுத்த வரிசையில் இருக்கும் இசுலாமியம் மற்றும் கிறித்தவ மதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
இந்தியாவில் கிறித்தவ மதம் கேரளாவிலுள்ள முசுரிசு என்ற இடத்தில் புனித தோமையார் என்ற அப்போஸ்தலர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கிறித்தவ மதத்தைத் தழுவியவர்கள் புனித தோமையார் கிறித்தவர்கள் என்றும் நாளடைவில் சிரியன் கிறித்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் கிறித்தவம் இந்தியாவில் பதினாறாம் நூற்றாண்டில் தான் விரிவாக்கம் கண்டது. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கமும் பிரித்தானிய கிறித்தவ எதிர்ப்பிரிவினரும் (Protestant) அமெரிக்க மதப்பிரசங்கிகளும் (Missionaries) பதினெட்டாம் நூற்றாண்டில்தான் வருகை தந்தனர்.
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இசுலாமிய மதம் ஏழாம் நூற்றாண்டில் கேரளாவில் மலபார் கடற்பகுதியில் அரபு வணிகர்களின் நுழைவின் மூலம் வந்தது. ஆனால், தில்லி சுல்தான் (1206-1526) காலத்திலும் மொகலாயப் பேரரசின் ( 1526-1858) காலத்திலும் தான் வேகமாகப் பரவியது.
இந்து தவிர இந்தியாவில் தோன்றிய மற்ற மதங்களின் வளர்ச்சிப்க்ஷபெறாத நிலையில் இசுலாமியமும் கிறித்தவமும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு மக்கள் தொகையில் முன்னேறின. பரம்பரை பரம்பரையாக இந்துக்களாக இருந்தவர்கள் உயர்சாதி இந்துக்களின் நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தாய் மதத்திலிருந்து மதம் மாறி இசுலாத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடம் பெயர்ந்தனர். பிறப்பால் இந்துவாக இருப்பினும் மனுதர்ம அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சியால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி கொடுமைகளுக்கு ஆளான மக்களுக்குத் தங்கள் துன்பத்தைப் போக்க வழி கிடைத்ததுதான் மதம் மாற்றம் என்ற ஓர் ஆயுதம். கணிசமான எண்ணிக்கையில் இசுலாத்திற்கும் கிறித்தவத்திற்கும் அடிமைப்பட்ட இந்துக்கள் மதம் மாற்றம் செய்துகொண்டார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவம் முக்கியத்துவம் பெற்றது. மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக ஏராளமான நிறுவனங்களும் கிறித்தவ சபைகளும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கத்தோலிக்கத் திருச்சபைகளும்(Roman Catholic) தென்னிந்தியத் திருச்சபையும் ( Church of South India) போட்டிப் போட்டுக் கொண்டு கல்வி நிறுவனங்களையும் ஆதரவு இல்லங்களையும் அதிக அளவில் தோற்றுவித்தன. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கல்வி வளர்ச்சிப் பெற்றதற்குக் கிறித்தவ மதம் ஓர் இன்றியமையாக் காரணமாகிறது. வர்ணாசிரமக் கோட்பாட்டின் படி கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இக்கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் கோயில்களாகத் தெரிந்தன. அவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூர்வீக மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்துக்கு மாறினர். எது எப்படியோ மதமாற்றம் செய்தவர்க்கும் தாய் மதத்தில் இருந்தவர்களுக்கும் சேர்த்து நல்ல கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்து சமூக, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதில் கிறித்தவ நிறுவனங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.
வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லோருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று நிலைக்காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். எந்தச் சாதியும் மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதே நிலைதான் மதம் மாறிய கிறித்தவர்களிடமும் காணப்படுகிறது.
அடிமைப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், உயர்சாதி இந்துக்களிடமிருந்து விடுதலைப்பெற்று ஆதரிக்கத் கூடிய மற்றும் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதிக்கின்ற மதம் என்று எண்ணியே மதமாற்றம் நடந்தேறியது. கிறித்தவமும் இதைத் தான் சொல்கிறது.
குறிப்பாக, தீவிரத் தீண்டாமையை அனுபவித்த தாழ்த்தப்பட்ட மக்களின் கிறித்தவ மதம் மாற்றம் மிகுந்த ஏமாற்றத்தையேத் தந்தது. மதம் மாறிய பிறகும் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை சமூகம் உயர்வான நிலையில் வைத்து அழகு பார்க்கவில்லை. பொதுவெளியில் தாழ்த்தப்பட்ட இந்துக்களை என்ன கண்ணோட்டத்தில் பார்த்தார்களோ அதே பார்வையைத் தான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களையும் சமூகம் பார்த்தது. சாதி இந்துக்களுக்கு மதம் மாறியவர்களும் இந்து மதத்தில் இருப்பவர்களும் ஒன்றாகவேத் தெரிந்தார்கள். திருச்சபைகளுக்குள்ளே கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமபங்கு அங்கீகாரமோ அதிகாரமோ தரப்படவில்லை. மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதையாகிப்போனது. மதம் மாறிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. இதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பங்களில் ஒரு சிலர் மட்டுமே மதம் மாற்றம் செய்ததும் கூட காரணமாக இருக்கலாம். மதம் மாறாத பெரும்பான்மை இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடுகளே தான் நீடித்தன.
கிறித்தவத் திருச்சபைகளில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அன்று ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று அரசு உதவி பெறுபவைகள். இவைகள் அனைத்தும் கிறித்தவத்துக்குள்ளே பெரும்பான்மை பெற்ற சாதியினரின் கைவசங்களிலே தான் இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் கல்விச் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புப் பெறுவதென்பது திருச்சபை உறுப்பினர்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களுக்கு எட்டாக்கனிகள்தான். கத்தோலிக்கத் திருச்சபை உடையார், முதலியார் மற்றும் வெள்ளாளர் கைகளிலும் தென்னிந்தியத் திருச்சபை நாடார்கள் கைகளிலும் இருப்பதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக மேற்கண்ட உயர்சாதிக் கிறித்தவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் மதம் மாற்றத்திற்கு முன்பாக உயர்சாதி இந்துக்களிடம் பட்ட தீண்டாமைத் துன்பங்களை மறந்து அதிகாரப் போதையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவே ஒதுக்கி வைக்கிறார்கள். பாவம், வந்தவளும் சரியில்லை வாய்த்தவளும் சரியில்லை என்ற கதையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாய் இந்து மதத்திலும் தீண்டாமைக்கொடுமை மதம் மாறி வந்த இடத்திலும் தீண்டாமைக்கொடுமை என்றால் என்ன செய்வார்கள்? ஒரே கடவுள் ஒரே வேதாகமம் ஆனால் வழிநடத்துதலில் வேறுபாடு. இதில் தவறில்லையா?
இசுலாமிய மதத்திலும் சில விடயங்களில் பாகுபாடு இருக்கலாம். தலித் இசுலாமியர்களுக்கு ஜமாத்களில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், ஒரு தலைமுறை வரை வேண்டுமானால் பிரிவினைவாதம் இருக்கலாம். அடுத்த தலைமுறைகள் வரும்போது தலித் இசுலாமியம் என்ற பாகுபாடு மாறி இசுலாமியர்கள் என்ற ஒற்றைச் சொல்லில் பார்க்கப்படுகிறார்கள். காரணம், வரும் நாட்களில் அவர்களின் மூலச்சாதி மறக்கப்படுகிறது. இது இசுலாமியத்தின் தனிச்சிறப்பு தான். மேலும் இசுலாமியத்தில் மதமும் சாதியும் ஒன்று தான். ஆனால், கிறித்தவத்தில் மூலச்சாதிகளும் வர்க்கப்பேதங்களும் நின்று நிலைத்து பரம்பரை பரம்பரையாக அடையாளம் காட்டப்படுகின்றன. தலித் கிறித்தவர்கள், நாடார் கிறித்தவர்கள், வெள்ளாளர் கிறித்தவர்கள், உடையார் கிறித்தவர்கள், முதலியார் கிறித்தவர்கள் போன்ற பாகுபாடுகள் திருச்சபைகளின் ஏடுகளில் வாழையடி வாழையாக எழுதப்பட்டே வருகின்றன. ஆகவே, பேராயர், பாஸ்டர், உபதேசியார், பாதிரியார், பங்குத்தந்தை போன்ற பதவிகளுக்கு தலித் கிறித்தவர்களால் போட்டிப் போடக் கூட முடிவதில்லை. உயர்சாதிக் கிறித்தவர்களின் உட்பிரிவுகளுக்குள்ளே மேற்சொன்ன பதவிகளுக்கு அடித்துக் கொள்கிறார்கள். எனவே, தலித் கிறித்தவர்கள் போட்டிக்கு வருவதே பெரும்பாடாகிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களில் எந்த சாதி அதிகளவில் இருக்கிறார்களோ அந்த சாதியைச் சேர்ந்த பாதிரியார் தான் பங்குத்தந்தையாக வரவேண்டும் என்பதில் சண்டை கூட வருகிறது. இந்த சாதி பாதிரியார்களின் வழியாக ஏனைய சாதியினர் செபித்த செபங்கள் ஆண்டவரால் கேட்கப்படுமா? இந்த வகைப் பாதிரியார்களிடம் ஏனைய சாதியினர் கேட்ட பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவங்கள் ஆண்டவரால் மன்னிக்கப்படுமா? போன்ற சந்தேகங்கள் நமக்குத் தோன்றுகின்றன.
திருமணக் காரியத்தைப் பொறுத்தவரை சாதி பாராமல் நடப்பது அரிதிலும் அரிது. சாதாரணமாகவே சாதிகளால் பிரிக்கப்பட்டு திருச்சபை நிகழ்வுகள் நடக்கும்போது திருமணத்தில் சாதி பாராமல் இருப்பார்களா? மத போதனை செய்யும் மதப்போதகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், பெந்தகொஸ்து சபைகளில் ஒப்பீட்டளவில் சாதி பாராமல் சில திருமணங்கள் நடைபெறுகின்றன. அதற்கும் சில காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, கத்தோலிக்க மற்றும் தென்னிந்தியத் திருச்சபைகளில் உள்ள உறுப்பினர்களை விட பெந்தகொஸ்து சபைகளின் உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். பெந்தகொஸ்து சபைகளில் சாதி பாராமல் திருமணக் காரியங்கள் நடப்பது இந்த குறைவான பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. மதப்பிரச்சாரம் மற்றும் தேவ செய்தி அளித்து வருகின்ற தேவ ஊழியர்கள் பல இடங்களில் திருச்சபைகளில் பொறுப்பளிப்பதிலும் திருமண ஏற்பாடுகளிலும் உள்ள சாதியப் பாகுபாடுகளைப் பேசியும் பிரசங்கம் செய்தும் வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தப்பலனும் இல்லை.
அதேநேரத்தில், இசுலாமியத்தில் திருமண ஒப்பந்தம் மிகச்சிறப்பாக இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. எந்த சாதியினரும் தங்கள் பெண்களை மணமுடிக்க விரும்பினால் இசுலாமியர்கள் சாதி பாராமல் குடும்பத்தை மட்டும் பார்த்துப் பெண் கொடுக்கிறார்கள். தலித்துகள் ஏராளமான இசுலாமியப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். இசுலாமியர்களுக்குத் தேவை அவர்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்பதே. அவர்களின் மதத்தின் மார்க்கத்தைக் கட்டிக்காக்கவே இந்த முடிவு. சாதி இந்துக்கள் இசுலாமியர்களை மாமா என்றும் மச்சான் என்றும் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைக்கப்படுகிற இசுலாமியர்கள் சென்ற தலைமுறையில் தலித்தாகக் கூட இருந்திருக்கலாம். சாதி இந்துக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தலித் மக்கள் இசுலாமிய மதத்திற்கு மதம் மாறிய பின்னர் அதே சாதி இந்துக்களுக்கு மாமனாகவும் மச்சானாகவும் தெரிகிறார்கள். அப்படியானால் இசுலாமியம் பாராட்டுதலுக்குரியதுதானே. இசுலாமியர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களல்ல. நேற்று தலித்தாகவோ பிற்படுத்தப்பட்ட வராகவோ இருந்தவர்கள் தானே. அதிலும் தென்தமிழகத்தில் பள்ளர்களும் மறவர்களும் பெருமளவில் இசுலாமியத்துக்கு மதம் மாறியதாக ஒரு கருத்தாடலும் உண்டு.
இந்து மதக்கோட்பாடுகள் தவறானவைதான். மனுதர்மத்தையும் வர்ணாசிரமத்தையும் உபநிடதங்கள் வழியாகச்சொல்கின்றன. மேல்தட்டு இந்துக்களுக்கு அவர்களின் மதக்குறிப்புகளே சாதியப் படிநிலைகளைச் சொல்வதால் அவைகளைக் கை காட்டி சாதியப்பிரிவுகளைக் கட்டிக்காப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால், அனைவரும் ஒன்று, சாதி பார்ப்பது தவறு என்று வேதமும் வேதாகமும் சொல்கின்ற கிறித்தவ மதத்தில் சாதியப் பாகுபாடும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பவை சரிதானா?
ஓர் ஊரில் ஒரு பெருமாள் கோயில், ஒரு சிவன் கோயில் உள்ளன. ஆனால், ஒரே ஊரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிறித்தவத் தேவாலயம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கிறித்தவத் தேவாலயம் உள்ளதே. ஏசுநாதர் எங்கே வருவார்? இன்னும் ஒரு சிலர் ஏசுநாதர் தச்சுத்தொழில் செய்ததால் அவர் எங்கள் சாதிதான் என்று சொல்கிறார்களே. இதைவிட நகைச்சுவை வேறென்ன இருக்கப்போகிறது? இந்நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்து மதம் பரவாயில்லை என்பதைப் போலல்லவாத் தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கிறித்தவ ஊழியர் ஒருவரே மனமுடைந்து தமிழ்நாட்டில் சாதிய முறைகளில் எந்தெந்த ஊர்களில் எத்தனை கிறித்தவத் தேவாலயங்கள் இருக்கின்றன என்று முகநூலில் வெளிப்படுத்தியிருந்தார். இதுபோன்று சாதிக்கொரு தேவாலயம் அமைப்பது ஆண்டவரை நிந்தனை செய்யும் செயலாகாதா?
இதற்கு ஒரு படி மேலே போய், கத்தோலிக்கத் திருச்சபையில் சாதிச்சங்கங்கள் இருக்கின்றன. கிறித்தவ வெள்ளாளர் சங்கம், கிறித்தவ உடையார் சங்கம், கிறித்தவ முதலியார் சங்கம், கிறித்தவ நாடார் சங்கம் போன்ற பல சங்கங்கள் உள்ளன. இது எதைக் காட்டுகிறது? கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தகொஸ்து சபைகள் போன்ற கிறித்தவப்பிரிவுகளைத் தாண்டி கிறித்தவ சாதிச்சங்கங்கள் பரிணாம வளர்ச்சியடையக் காரணங்கள் எவை? இதன் மூலம் நீங்கள் உண்மைக்கிறித்தவ விசுவாசிகளுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? இவற்றின் மூலம் என்ன சமத்துவத்தைக் கடைப்பிடிப்பீர்கள் என்பதை எளிய மனிதர்களால் கூட யூகிக்க முடிகிறதே.
திருச்சபைகளுக்குள்ளே தில்லுமுல்லுகள் ஒருபுறம் என்றால் அரசியல் தில்லுமுல்லுகளும் நம்மை திகைக்க வைக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிற்படுத்தப்பட்ட கிறித்தவர்கள் (Backward Class Christians) முற்பட்டப்பிரிவில் (Forward Class) வைக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிறித்தவத்தில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் தான் வைக்கப்படுவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் அரசாணையின் மூலம் அரசால் கொண்டுவரப்பட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றம் தான். ஏனென்றால், பிற்படுத்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் சமூக, பொருளாதார நிலையில் முற்பட்ட சமூகத்தினருக்கு இணையான முன்னேற்றம் பெறவில்லை. இத்தனை காலம் முற்பட்ட வகுப்பில் வைத்திருந்ததே மிகப்பெரிய வரலாற்றுப்பிழை தான். ஆனால், அதே அரசு தான், தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் வைக்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட பிரிவில் தான் வைக்கப்படுவர் என்று அரசாணை வெளியிட்டு இன்றும் இந்நிலைத் தொடர்கிறது. பிற்படுத்தப்பட்ட கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மட்டும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பினர் இல்லையா? மதம் மாறிய போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்படாத சமூக, பொருளாதார முன்னேற்றம் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் மட்டும் கிடைத்துவிடுகிறதா? இல்லை திருச்சபைகளில், தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களைத் தங்களுக்கு இணையான பிற்படுத்தப்பட்டவர்களாகப் பார்க்கிறார்களா? எவ்வளவு பெரிய வரலாற்றுப்பிழையாகி தொடர்ந்து நடந்து வருவதைப் பாருங்கள்.
தலித் கிறித்தவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைத்திருப்பது சரியா தவறா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசால் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கைகளும் அரசிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கைகளில் தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக, பொருளாதார நிலைக்கு முன்னேறவில்லை என்றும் இதர தலித் இந்துக்களுக்குச் சமமான சமூக பொருளாதார நிலையில் தான் உள்ளனர். மதம் மாற்றம் அவர்களுக்கு எவ்வித சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளன. இருப்பினும் தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் வைக்க அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. கிறித்தவர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள உறுதியாக இருக்கும் திருச்சபைகளோ தலித் கிறித்தவர்கள் மீது ஏவப்பட்ட அரசியல் இருட்டடிப்பை எதிர்த்து பெரிய முன்னெடுப்பு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்த பிரச்சினைக் குறித்து திருச்சபைகள் வழக்காடு மன்றங்களுக்குக்கூட செல்லவில்லை. கேரளாவில் சில தலித் கிறித்தவ அமைப்புகள் தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளன. அவைகள் இன்னும் பாழ் கிணற்றில் எறிந்த பாறாங்கற்களாகக் கிடக்கின்றன. இதுபற்றி திருச்சபைகள் கூடி எவ்வித வழக்குகளையும் தாக்கல் செய்து போராடவில்லை. தலித் கிறித்தவர்களின் வலி அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தேவை கிறித்தவர்களின் எண்ணிக்கையைத் தக்க வைப்பதில் மட்டும்தானே. உயர்சாதி கிறித்தவர்கள் திருச்சபைகளின் பலன்களையும் பெற்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான அரசின் சலுகைகளையும் பெற்று வரும்போது தலித் கிறித்தவர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை தானே. ஒருவேளை அவர்களை முற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றாமல் சலுகைகள் மறுக்கப்பட்டிருந்தால் களத்தில் இறங்கிப் போராடியிருப்பார்களோ என்னவோ?
திருச்சபைகளில் உள்ள பாதுகாப்பின்மையாலும் தங்களின் கோரிக்கைகளை அரசுகளின் செவிமடுக்காமையாலும் தலித் கிறித்தவர்கள் இரு தலைக்கொள்ளி எறும்பாக இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக, தலித் கிறித்தவர்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைப்படுத்துதலில் பேரினம் மற்றும் சிற்றினம் என்ற இரு பெயர்களைக் கொண்ட இரு பெயரிடுமுறைக் (Binomial Nomenclature) கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினர். கிறித்தவத் தேவாலயங்களில் ஒரு கிறித்தவப் பெயரும், கல்விச் சான்றுகளில் மற்றொரு பொதுப்பெயர் அல்லது இந்துப்பெயரும் வைத்து கிறித்தவத்தையும் விடமுடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில் அரசின் சலுகைகளையும் விடமுடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். அரசின் ஏடுகளில் இந்து என்று இருந்தாலும் உள்ளத்தில் கிறித்தவம் தான் இருக்கும். இந்த இருபெயரிடுமுறை திருச்சபைகளுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும். இவைகள் தங்களின் சுயநலத்திற்காக இந்த இருபெயரிடுமுறையைக் கண்டுகொள்வதில்லை. காரணம், சிறுபான்மை நிலையில் உள்ள திருச்சபைகள் தங்களின் கிறித்தவ மக்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டியதுள்ளது. ஆகவே, தலித் கிறித்தவர்களின் பெயர்ப்பதிவுகள் தேவைப்படுகின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் போலியாக மதம் மாற்றம் நடந்தாலும் பதிவேட்டின்படி இந்துவாக இருந்தால் இந்துக்களின் பெரும்பான்மையை ஏட்டளவிலாவது தக்க வைக்கலாம் என்று அரசும் நினைக்கிறது.
ஒரு தலித் இந்துவாக இருந்தால் தாழ்த்தப்பட்டவர், அவரே கிறித்தவ மதத்திற்கு மாறினால் பிற்படுத்தப்பட்டவர். ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் எந்த மதத்திற்கு மாறினாலும் சாதி மாறாது. இது சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தலித் மக்களுக்குப் பலத்தப்பாதிப்பு தானே. இதன் காரணமாகவே தலித்துகள் கிறித்தவ மதத்திலிருந்து தாய் மதமான இந்துமதத்திற்கு மாறுகின்றனர். பெரும்பாலும் இவர்கள் மனதளவில் இந்து மதத்தைப் பின்பற்றுவது இல்லை. இது அரசுக்கும் தெரியும். இருப்பினும் அரசின் சட்டத்தின் படி மதமாற்றம் செய்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறலாம் என்ற ஒரு வாய்ப்பை அரசு தருகிறது. இந்த மதம் மாற்றம் மூலம் தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கு வந்துவிடுகின்றனர். இதற்கு நேரடியாக தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வைக்க அரசு ஆணைப் பிறப்பிக்கலாமே. அப்படியில்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலுள்ள இந்த சித்து விளையாட்டு தேவைதானா?
சில தலித் கிறித்தவர்கள் ஆரம்பத்திலேயே திருச்சபைகளில் ஒரு பெயரை வைத்து கிறித்தவராகவும் கல்வி நிறுவனங்களில் மற்றொரு பெயரை வைத்து இந்துவாகவும் இருக்கின்றனர். சிலர் ஆரம்பத்திலிருந்து ஒரே பெயரை திருச்சபைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் வைத்து கிறித்தவத்தில் அதீத பிடிப்பு ஏற்பட்டு கிறித்தவராகவே இருந்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் திருச்சபைகளின் போக்குப்பிடிக்காமலும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததாலும் இடைப்பட்ட காலத்தில் கிறித்தவப்பெயரை மாற்றிவிட்டு இந்து பெயரை வைத்து தங்களது வேதனைகளை வெளிப்படுத்துகின்றவர்களும் உள்ளனர். திருச்சபைகளில் நமக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளில் வாய்ப்பில்லாத போது அரசின் உதவியாவது கிடைத்து முன்னேறலாம் என்ற எண்ணமும் மதம் மற்றும் பெயர் மாற்றங்களுக்கு ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.
நான் இங்கு என்னைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஊராரைச் சொல்லிவிட்டு என்னைப்பற்றிச் சொல்லாமல் விட்டால் அது நியாயமில்லையே. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த எனது தாத்தா ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்திலிருந்து தென்னிந்தியத் திருச்சபைப் பிரிவைச் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு மாறினார். உடன்பிறந்தவர்களின் வாரிசுகள் இன்றளவும் இந்து மதத்திலேயே இருக்கின்றனர். எனது அப்பா இந்து மதத்திலுள்ள எனது அம்மாவைத் திருமணம் செய்தார். எனது பெற்றோருக்கு சில குழந்தைகள் இறந்த நிலையில் எஞ்சியுள்ள குழந்தைகள் எட்டு பேரில் நானும் ஒருவன். என்னுடன் பிறந்தவர்கள் யாரும் சரியாகப் படிக்கவில்லை. நான் மட்டும் தட்டுத்தடுமாறிப் படித்து வந்தேன். ஆரம்பத்தில் நான் ஒரு கிறித்தவன். திருச்சபையிலும் பள்ளிச் சான்றிதழிலும் ஒரே பெயரைக் கொண்ட கிறித்தவன் தான். நான் இருபெயரிடுமுறையைப் பின்பற்றாதவன். உயர்நிலைக் கல்வி பயிலும் போது திருச்சபை மீது வெறுப்புக் கொள்ள நேர்ந்தது.
ஏராளமான கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்த தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தில் திருச்சபைக்கான நிறுவனங்களில் தலித் கிறித்தவர்களுக்கு மூப்புரிமை அடிப்படையில் கல்விச் சேர்க்கைகளோ வேலைவாய்ப்புகளோ வழங்கப்படுவதில்லை. திருமண்டலப் பொறுப்பாளர்களுக்கானப் பதவிகளுக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி நிலவும். தலித் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதேயில்லை. ஆனால், சர்வ அதிகாரம் பெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்புகளில் அதிக முன்னுரிமை இருக்கும். அநேக கத்தோலிக்க மற்றும் தென்னிந்தியத் திருச்சபைத் திருமண்டலங்களிலும் இதே நிலைதான். இவை போன்ற திருச்சபைகளின் தில்லுமுல்லுகளைக் கண்டு வந்த எனக்கு திருச்சபை மீது வெறுப்பு ஏற்பட்டு நாளடைவில் கிறித்தவமும் பிடிக்காமல் போனது. ஆகவே, ஒழுங்காக ஆலயம் சென்று வந்த நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கிறித்தவத்தை வெறுத்தேன். ஆலயம் செல்வதை நிறுத்தினேன். ஆனால், பெயர் மாற்றம் மற்றும் மதம் மாற்றம் செய்யவில்லை. அதற்கான வழிமுறைகள் அப்போது எனக்குத் தெரியவில்லை. கல்லூரிப் பட்டப்படிப்பு வரை கிறித்தவப் பெயர் தொடர்ந்தது. பிறகு, இந்து மதத்திற்கு மாற ஏற்பாடு செய்தேன். எனது தாத்தாவின் பழைய இந்துப் பெயரைச் சார்ந்த பெயர் தரித்து முறைப்படி இந்துவாக மாறினேன். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவருக்கான மரியாதை என்ன என்பது என் மரபணுவிலேயேப் பொதிந்து விட்டதுதான். ஆனாலும், எனது எண்ணமெல்லாம் கிறித்தவ மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஒன்று தான். மேலும், கிறித்துவத்திலிருந்து வெளியேற ஒரு மதம் தேவைப்பட்டது. அப்போதைக்கு எனது எண்ணத்தில் விரைவாகவும் எளிதாகவும் தோன்றியது இந்து மதம் தான். ஆகவே, இந்து மதத்திற்கு மாற வேண்டியதாயிற்று.
இந்து மதம் எனது தாத்தாவால் வெறுக்கப்பட்ட மதம். கிறித்தவம் என்னால் வெறுக்கப்பட்ட மதம். ஆகவே, இன்று ஏட்டளவில் இந்துவாக இருக்கும் நான் எந்த மதத்தின் மீதும் பிடிப்பில்லாமல் இறைநம்பிக்கையின்றி இருந்து வருகிறேன். தெளிவான கடவுள் மறுப்புக்கொள்கையில் இருக்கிறேன். ஆனாலும், கடவுள் மறுப்பு இயக்கத்தில் இன்னும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதாவது பட்டப்படிப்பு வரை நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மேல் சாதி. மதம் மாறிய பிறகு பட்டமேற்படிப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கீழ் சாதி. பொதுவாக சாதியை யாரும் மாற்றமுடியாது மதத்தை வேண்டுமானால் மாற்றலாம் என்பார்கள். ஆனால், தலித்துகளைப் பொறுத்தவரை இந்தக் கூற்று தவறு. தலித் நினைத்தால் கீழ்சாதி யாகவும் இருக்கலாம் இல்லை மேல்சாதியாகவும் இருக்கலாம். வேறு எந்த சாதிக்கும் இந்த இழிநிலை இல்லை. எத்தனைக் கொடுமையானது இந்த அரசியல் சட்டம். அரசியல் சட்டங்கள் பல திருத்தப்படுகிற போது இதற்கான சட்டத்திருத்தம் செய்வதற்கு எது தடையாக இருக்கிறது? இதுபற்றிய நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு என்ன / யார் காரணம்?
சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தலித் மக்கள் மனதால் கிறித்தவர்களாகவும் பொதுவெளியில் இந்துவாகவும் இரட்டை வேடம் பூண்டு வலம் வருவதற்கு வேடிக்கையான அரசின் மதம் மாற்றம் தொடர்பான சட்டங்கள் தானே காரணம். இது போன்ற சட்டங்கள் திருத்தப்பட்டு பிறப்பால் தலித்துகளான மக்கள் மற்ற சாதிகளைப்போல எந்த மதத்திற்கு மாறினாலும் தலித்துகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலையை அரசுகள் உருவாக்க வேண்டும். சிறுபான்மையிலும் சிறுபான்மை மக்களான தலித் கிறித்தவ மக்களின் தேக்கமடைந்த உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள வழக்குகளும் விரைவாக நியாயமானத் தீர்ப்புகளாக்கப்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுவரை தலித் கிறித்தவர்களின் எதிர்காலம் இருண்ட காலம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
கிறித்தவத் திருச்சபைகளே! அரசுகளின் நியாயமானச் சட்டத்திருத்தங்களும் நீதிமன்றங்களின் நேர்மறையானத் தீர்ப்புகளும் வரும் வரையிலாவது அருள்கூர்ந்து தலித் கிறித்தவர்கள் மீது கருணை கொள்ளுங்கள். அவர்களின் குலசாமிகள் அவர்களைக் காப்பாற்றவில்லை. அவர்களின் காவல்தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை. ஆகவே, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்புக் கிடைக்கும் என்றெண்ணி தேவனைத் தேடித் திருச்சபைகளுக்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களை இரட்சியுங்கள். அவர்களுக்கும் உங்கள் சமாதானத்தைத் தாருங்கள். இல்லை, தலித் கிறித்தவர்களை வழக்கமான வெறுப்புணர்வோடு ஒதுக்கித் தள்ளுவீர்களேயானால், "ஆண்டவரே இவர்கள் இன்னதென்று அறியாது செய்கிறார்கள் இவர்களை மன்னியும்" என்று உங்களுக்காக அவர்கள் இறைவனிடம் மன்றாடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
முனைவர் அ.இராமலிங்கம்,
இணைப் பேராசிரியர்.
26.04.2020.
ஏர் இதழ் வெளியீடு.