சனி, 25 மே, 2019

வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வும் சாவும்தான் சூழ் எனும் பெருங்கதை :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா.தொ.ப. வாசகர் வட்டம்


கண்மாயிற்கு நீர் வரத்து இல்லை.வேலிக்கருவை கண்மாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அரசு கருவையை வெட்டும் (தூரோடு பிடுங்க அல்ல) உத்தரவு தருகிறது. ஊரில் இருந்து பெருந்தலைகள் அரசு விடுக்கும் வெட்டு ஏலத்தை எடுத்து வருகிறார்கள். ஒரு நல்ல! வெட்டு மர நிறுவனத்திற்கு கண்மாயின் வேலிக்கருவையை பெரிய தொகைக்கு கைமாற்றி விடுகிறார்கள். பிறகு வந்த பெரிய தொகையில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி ஊரின் வாயைத் தைத்து விடுகிறார்கள். எஞ்சியிருக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கிக் கொள்கிறார்கள்.
அத்தி பூத்தார் போல கண்மாயில் நீர் சேகரமாகிறது. மடை பராமரிப்பு இல்லை. வாய்க்கால் இல்லை. தண்ணீர் வேண்டுமெனில் எண்ணெய் எந்திரம் வைத்து நீர் எடுத்துக் கொள் என்கிற நிலை.கடைமடை சம்சாரிக்கு நீர் போய் சேராது. எந்திரம் வைத்திருப்பவரே நீர் எடுத்துக் கொள்வார். நீர் பாய்ச்ச மணிக்கு இத்தனை ரூபாய் என பணம் கட்டுகிற நிலை இருக்கிறது. இப்படி கண்மாயின் மீது உரிமை இழந்து கையறு நிலையில் நிற்கின்ற என்னைப் போன்ற சம்சாரிகள் நிற்கின்ற இடத்தை தீர்க்க தரிசனமாக தொட்டு சூல் பெருங்கதை நிறைவு பெறுகிறது.
உருளைக்குடி எனும் ஊரினில், எட்டையபுர மன்னர் தொட்டுத் தந்த மண்வெட்டியை வைத்து சாமிக்கு பூசை செய்து விட்டு கண்மாய் கரையை மடைக் குடும்பன் வெட்ட, கண்மாயிலிருந்து ஊரார் கரம்பை மண்ணை எடுத்து செல்வதில் ஆரம்பித்து, மக்களரசு கண்மாயிற்கு அமர்த்திய கண்மாய் காவலரிடம் (watchman) மடைக் குடும்பன் மடையின் சாவியையும் மண்வெட்டியையும் ஒப்படைப்பதோடு முடிகிறது. உழைக்கும் உழுகுடி மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாடுகளையும் இயல்பாக நம் கண் முன் நிறுத்துகிறது சூல் பெருங்கதை.
கண்மாய் :
----------------
“முதல் எனப்படுவது நிலம்”  என்கிறது தொல்காப்பியம். நிலத்தின் மீதான உரிமை தான்  உழைப்பின் மீதும் உழவின் மீதும் ஒரு உயிர்ப்பான உறவை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஏர் மகாராசன். எனினும் அந்த உரிமைக்கு மூலமாய், நிலத்திற்கு மூலமுதலாய் இருப்பது நீர். அந்த நீரினை சேகரம் செய்கின்ற ஏந்தல், தாங்கல், ஏரி,கண்மாய்,ஊரணி,குளம்,குட்டை என அனைத்து நீர்நிலைகளை ஒரு குமுகம் எவ்வாறு காத்து வந்தது என்பதற்கு சூல் ஒரு உதாரணம். ஆசிரியர் கண்மாயை நிறைமாத சூலிக்கு ஒப்பிடுவார். என்ன ஒரு கவித்துவமான ஒப்பீடு! நிறை மாத சூலி போல கண்மாயின் வயிறு தண்ணீரால் வீங்கி இருக்கிறது. கண்மாய்களுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளை ஆணின் குறி என்றும், மழை தான் இயற்கையின் விந்து என்றும் கண்மாய் தான் பெண்ணின் யோனி என்றும் கர்ப்பப்பை என்றும் உருவகப்படுத்துகிறார். இவை உருவகங்கள் மட்டும் அல்ல., உண்மையும் கூட. கண்மாய் நீரில் வாழும் மீன்களான விரால்,விலாங்கு,அயிரை,கெண்டை,கெளுத்தி,
கொறவை என பல வகையான மீன்களுக்கு ஆதாரமாய் நிற்கிறது. வலசை வரும் பறவைகள் கண்மாயின் நடுவே வீற்றிருக்கும் மரங்களில் தஞ்சமடைகின்றன. கரைக்கு அப்பால் இருக்கும் வயல்களை பச்சையம் போர்த்திட நீர் தந்து சம்சாரிகளை காக்கின்றது.
சிறகி,உள்ளான்,நாமக்கோழி,மீன்கொத்தி என பல பறவைகளுக்கு மீன்களையும்,நத்தை,நண்டு என உணவு தந்து பறவைகளை குதியாளம் போட வைக்கின்றது.நீர் வறட்சியே நம்பிக்கையின் வறட்சி என ஆசிரியர் குறிப்பிடும் பொழுது உருளைக்குடி மக்கள் நம்பிக்கை வறட்சி காணாத வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என பதிவு செய்கிறார். கண்மாய் பல்லுயிரியம் பேணுகிறது, கரையில் ஓரமாய் நிற்கும் அய்யனாரையும் சேர்த்து...
பனையும் கரையும் :
-------------------------------
மண் அரிப்பு ஏற்பட்டு கண்மாய்க் கரை உடைந்து போகாது காப்பது கரையில் நெடிந்தோங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களின் வேர்களும் பனை மரத்தோடு சேர்ந்து கரை முழுக்க விரவிக் கிடக்கும் காட்டுக் கொடிகளும் தான். கூடவே தெய்வமாகிப் போன மடைக் குடும்பனும் அவனை துணைக்கு கூட்டிக் கொண்ட அய்யனாரும் கரையில் அமர்ந்து கண்மாயை காக்கிறார்கள். அவரவருக்கு அவரவர் வயிறு. ஊருக்கு கண்மாய் தான் வயிறு. “வீட்டுக்கு கும்பா,ஊருக்கு கண்மாய்,சித்தனுக்கு திருவோடு” என ஊருக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரம் தான் கண்மாய் என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து கண்மாய் மீதான் பிடிப்பை உணர முடிகிறது.
மடைக் குடும்பன் :
----------------------------
நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீரை மேலாண்மை செய்கிறவர்கள் மடையர்கள். அன்றைய குமுகத்தில் மடைக் குடும்பன் என்பது ஒரு மதிப்புமிக்க பதவியாகும்.(high esteemed designation).மரபு வழிப்பட்ட தொழிலாக மடை நிர்வாகம் இருந்ததாலும் ஊரில் உள்ள சம்சாரிகள் அத்தனை பேருக்கும் சரி சமமாக நீர் பாய்ச்சும் நேர்மை கொண்டதாலும் இவர்கள் செல்வாக்கு மிகுந்து இருந்தார்கள்.உருளைக்குடி ஊரில் நீர்பாய்ச்சி மடைக் குடும்பன் ஒருவன் கையில் தான் மொத்த சம்சாரிகளின் வாழ்வாதாரமும் இருந்து வந்தது. கண்மாய் நீரை திறந்து விட்டதும் நிலம் முழுக்க பச்சையம் போர்த்தி நிற்பதைப் பார்ப்பதும் தான் மடைக் குடும்பனுக்கு பெருமிதம். கரையில் பரவிக் கிடந்த சங்கச் செடியில் இருந்த பூக்களை பிடுங்கிச் சென்ற கிழவியின் வீடு தேடிச் சென்று விசாரணை நடத்தி எச்சரிப்பதில் தெரிகிறது கண்மாயின் மீது மடைக் குடும்பனுக்கு இருக்கின்ற அக்கறை.
நாம் ஒருவரை இழித்து பழிப்பதற்கு ‘மடையா’ என்ற சொல்லை என்றைக்கு  பயன்படுத்தினோமோ அன்றே நாம் நம்முடைய நீரின் மீதும் நீர்நிலைகளின் மீதும் இருந்த உரிமையை இழந்து விட்டோம். மடைக் குடும்பன் மடை திறக்கவோ அல்லது அடைப்பு எடுக்கவோ நீருக்குள் முக்குளித்து அடியாலத்திற்கு செல்கின்ற பொழுது அவனும் ஒரு நீர் வாழ் உயிரினமாக மாறி விடுகிறான். அப்படியொரு அடைப்பு எடுக்க நீரில் பாய்ந்து இறந்து போன மடைக் குடும்பனின் பாட்டன் தான் சாமியாகி கரையில் கருப்பன் சாமி என்ற பெயர் தாங்கி நிற்கிறான்.கரணம் தப்பினால் மரணம் என்ற தொழில் மடை காப்பது.எனினும் மரபு வழிப்பட்டு வந்த தொழிலை போற்றி வந்திருக்கின்றனர்.மடையர்கள் கண்மாயை விட்டு பிரிந்தார்கள்; நீரும் கண்மாயை விட்டுப் பிரிந்தது.
தெய்வங்களும் மக்களும் :
-----------------------------------------
உருளைக்குடியில் தெய்வங்களும் மக்களும் பிண்ணிப் பிணைந்து கிடந்திருக்கிறார்கள். இந்த மக்கள் தெய்வங்களை கொண்டாடுகிறார்கள், தூற்றுகிறார்கள்,பகடி செய்கிறார்கள்,சாட்சியாக வைத்துக் கொள்கிறார்கள். தெய்வத்தின் மீது பயம் இருக்கிறது.பக்தி இல்லை.ஏன் இவர்கள் தெய்வங்களோடு இவ்வளவு இணக்கமாக இருக்கிறார்கள்?ஏனெனில் நேற்றைய மனிதர்கள் இன்றைய தெய்வங்கள். நடுகல் நினைவேந்தலின் தொடர்ச்சி தானே தெய்வ மரபு. ஊருக்காக செத்துப்போன மடைக்குடும்பன் கருப்பன் சாமியாகவும் நிறைமாத சூலியாக செத்துப்போன மாதாயியும் தெய்வங்களாகி உருளைக்குடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை எவரையும் பாதிக்கவில்லை. ஏனெனில் அறிவுத்திமிர் உருளைக்குடியில் குடியேறாத காலம். மழையை வழி அனுப்பி வைக்கும் சடங்கிற்காக தோரணங்கள் கட்டப்படுகின்றன. “இன்ன தேதில சடங்கு சார்த்த போறோம்னு ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரியும்.அப்புறம் ஏன் தோரணம் கட்டனும்?”  என்ற கேள்விக்கு “நமக்குத் தெரியும்.நம்ம சாமிக்கு தெரிய வேண்டாமா? நம்மள மாதிரி அதுவும் சுத்த பத்தமா இருக்க வேண்டாமா? நம்மள மாதிரி தான் நம்ம சாமியும்., இங்க இருக்குற பொம்பள சாமி பக்கத்துக்கு ஊருல இருக்குற ஆம்பிள சாமிகூட தொடுப்பு வச்சிருக்கும். அதெல்லாம் இல்லாம கொஞ்ச நாளைக்கு சாமிகளும் சுத்த பத்தமா இருக்கணும்னு சொல்லித் தான் தோரணம் கட்டி சாமிக்கு அறிவிக்கிறது”  என ஊருளைகுடி மக்கள் சொல்கின்ற பதிலில் இருந்து மக்களும் தெய்வங்களும் இரண்டறக் கலந்து கிடந்தார்கள் என்ற செய்தி கிடைக்கிறது. இந்த தனித்த ‘மக்கள்-தெய்வம்’ உறவு புரியாமல் முற்போக்காளர்களும் வலது சாரிகளும் இந்த மக்களை தன்வயப் படுத்திட நினைத்து தோல்வியே அடைகின்றனர் என்பது என் கருத்தாகும். பெருந்தெய்வ கடவுளான சிவன் பார்வதியை வைத்து ஒரண்டை இழுக்கும் கிளைக்கதை ஒன்று இந்த மக்கள் பெருந்தெய்வ கோயில்களிடம் இருந்து அந்நியப்பட்டிருந்ததை சொல்கிறது. தெய்வங்கள் சூழ் மனிதர்கள்! நீர் சூழ் ஊர்! தெய்வங்கள் கண்மாயை காக்கிறதோ ? கண்மாய் தெய்வங்களை காக்கிறதோ?
அறம் காத்தவர்கள் :
------------------------------
அறம் என்றால் என்ன? அதை எப்படி காப்பது?
செவ்வியல் இலக்கியமான மணிமேகலை
“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்;
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” 
என அறம் என்பதற்கு பொருள் தருகிறது.
கரிசல் இலக்கியமான சூல் பெருங்கதையில் வருகின்ற கொப்புலாயி ஒற்றை வரியில் அறம் என்பதற்கான பொருளை போகிற போக்கில் நெற்றியில் அடித்தாற் போல சொல்கிறாள்.
“கல்லுலையும் சோறு; கத்தாழையிலையும் சோறு; தொண்டைக்கு அங்கிட்டு போனா  நரகலு”.
கொப்புலாயி மட்டும் அல்ல, உருளைக்குடி உழுகுடி மக்கள் அனைவருமே அறம் காத்தவர்கள் தான். ஊருக்கு வழிப்போக்கரோ, ஆண்டியோ,சித்தனோ,வித்தைக்காரர்கள் என நாடோடிகள் எவர் வந்தாலும் பசியோடு படுக்கப் போக மாட்டார்கள். ஊரின் இளவட்டங்கள் அவர்களாகவே வீடுகளுக்கு சென்று சோறு எடுத்துக் கொண்டு வந்து வந்தவரை பசியாற வைப்பர். இன்றைக்கும் சில ஊர்களில் இந்த பழக்கம் இருந்து வருகிறது. உழுகுடிகள் வறியவருக்கு வேண்டும் என்கிற மட்டிற்கும் உணவு கொடுத்துப் பழகியவர்கள். பிறரை பிச்சை கேட்க அனுமதிக்காமலே அவர்களாகவே உணவு அளித்திருக்கிறார்கள். இங்கு உபரி உற்பத்தி நடக்கிறது. எனினும் ஊர் அறம் காக்கிறது. கண்மாய் மூலக் காரணமாய் நிற்கிறது.
“நீரும் சோறும் விற்பனைக்கு அல்ல” என்பது தமிழரின் அறம் என தொ.ப சொல்கிறார். உருளைக்குடி போன்ற எண்ணற்ற ஊர்கள் அப்படியானதொரு அறம் காத்து வந்திருகின்றன.
மானாவாரிக் காட்டில் விதைத்திருக்கும் குருதவாலிக்கும் கேப்பைக்கும் காவல் யாருமில்லை.மினுதாக் குடும்பன் என்ற ஒற்றை மனிதன் தவசங்களை மொட்டப்பாறையில் வந்து அமரும் பறவைகளுக்காக வீசினான். பறவைகள் தவசங்களை இறையெடுப்பதை கண்டு மகிழ்ந்தான்.அவன் போல ஊராரும் அவ்வாறே தவசங்களை மொட்டப்பாறையில் வீசினார்கள்.பறவைகள் நாளடைவில் உருளைக்குடிவாசிகளாகி விட்டது. தனி மரம் தோப்பானது! நாம் இவைகளுக்கு உணவு தரவில்லை எனில் எவர் தருவார்? நம்மையெல்லாம் கஞ்சப்பயலுக என்று இந்த பறவைகள் நினைத்து விடாதா? என அவர்கள் எழுப்பும் கேள்விகள் அறங்காவலர்கள் என்ற சொல்லுக்கு பொருள் தருகிறது. 
குமுக உறவுகளும் உற்பத்தியும் :
---------------------------------------------------
உழுகுடிகள் உழுது வேளாண்மை செய்கிறார்கள். உருளைக்குடியும்  நிலவுடைமைச் சமூகம் கொண்ட ஊராக இருக்கிறது. நாயக்கமார்களிடம்,பிள்ளைமார்களிடம் நிலம் இருக்கிறது. அவர்கள் நிலத்தில் வேலை(பண்ணையாள்) பார்க்க ஊர் கூடி குலுக்கல் முறையில் அருந்ததியர்களை வேலைக்கு தெரிவு செய்துகொள்கிறார்கள்.சமூக நிதி பற்றி சிந்தித்திடாத காலம்.ஆனாலும் சமூக இணக்கங்கள் கொண்ட காலமாக இருக்கிறது. ஆண்டான்-அடிமை வர்க்க பேதம் உருளைக்குடியிலும் நிலவுகிறது. எனினும் நெகிழ்வுத் தன்மை இருக்கிறது. பண்ட மாற்று மட்டுமே அறிந்து பழகியவர்களாக இருக்கிறார்கள். வேளார் குமுகத்தினர் மண்பாண்டங்களை கொடுத்து நெல்லும் தவசங்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆசாரி குமுகத்தினர் கலப்பைகளை செப்பனிடுவது,உழவு மாடுகளுக்கு லாடம் கட்டுவது என உழவு நிமித்தமான வேலைகளை பூர்த்தி செய்கிறார்கள். பனையேறிகள் கள் இறக்கி பனையடிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தற்சார்பு நிறைந்த ஊராக இருக்கிறது. மிகை உற்பத்தி எட்டயபுர ஜமீனுக்கே சென்றிருக்க வேண்டும். விளைச்சல், கூலி நிர்ணயம்,அளவை மதிப்பீடு போன்ற கூடுதல் செய்திகள் சொல்லப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஊருக்கென கட்டுப்பாடு இருக்கிறது.மீறினால் தண்டனை. தண்டனை என்பது தவறை மனத்தால் வருந்துகின்ற நிலையை ஏற்படுத்தும் அளவிற்கே இருக்கிறது. குழு மனப்பான்மையோடு இயங்கினார்கள்.புராதான பொதுவுடைமைச் சமூகத்தின் எச்சமாக இருந்தார்கள். ஊரில் கண்மாய் இருக்கிறது.கண்மாயில் நீர் இருக்கிறது.எல்லோர் வீட்டிலும் இன்பம் இருக்கிறது. 
அறிகுறிகளும் சடங்குகளும் :
---------------------------------------------
  தன்னை இயற்கையோடு ஒரு அங்கமாக கருதியிருந்த குமுகத்தை கொண்டிருந்தது உருளைக்குடி. சொலவடைகள்,சொல்லாடல்கள் எல்லாமே நீரையும் மழையையும் ஒட்டியே அவர்களின் வழக்காறுகளாய் அமைந்திருக்கிறது.மழை வேண்டி ஒரு சடங்கு. மழையை அனுப்பி வைக்க ஒரு சடங்கு. உழுகுடிகள் வாழும் நிலத்தில் சடங்குகளுக்கு பஞ்சம் இருக்காது.
சடங்குகளே ஒரு குமுகத்தின் பண்பாட்டினை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. குமுக நினைவுகளின் தொகுப்பே (social memoirs) வரலாறாகும் என பேரா.ஆ.சி முன்வைக்கிறார். சடங்குகள் வழியே நினைவுகளை மீட்கிறார்கள். சடங்குகளே மரபறிவின் கூடாகவும்(shell) இருக்கிறது. சடங்குகளில் ஏற்பன ஏற்று துறப்பன துறந்திட வேண்டும். சடங்குகள் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் அறிவைக் கடத்த(knowledge transfer) பயன்படுத்திய ஒரு ஊடகம்(medium) அன்றி வேறொன்றும் இல்லை. ஆகச் சிறந்த உதாரணம் : மொளைப்பாரி சடங்கு. விதை நேர்த்தி செய்வதிலிருந்து விதைத்து அறுவடை செய்கின்ற வரை சடங்குகள், சடங்குகள், சடங்குகள்..... எத்தனை சடங்குகளோ அத்தனை பட்டறிவு!!!!
மழையை வழி அனுப்பி வைக்க மாவினை கையில் எடுத்து வானத்தை நோக்கி வீசும் முன்னர் வேண்டுமா எனக் கேட்கின்றனர். வேண்டாம் சாமி என சொன்னதும் மாவினை வானத்தை நோக்கி தூக்கி வீசி மழை வேண்டாம் என்று உரக்க கத்தி உறுதி செய்கின்றனர். மாவின் மீதும் மழையை ஏற்றி சடங்கு சார்த்தப் படுவதால் தொத்து சடங்கு என இதை வகைப்படுத்தலாம்.
நாமக்கோழியின் வருகை, தூக்கணாங்குருவிக் கூட்டின் வாசல் திசை, அது கட்டப்பட்டிருக்கும் இடம்,எறும்புகளின் நகர்வு, மீன்கள் தட்டுப்பாடு என இவற்றை எல்லாம் கணித்து மழையின் வரத்தை கணித்துக் கொண்ட உருளுக்குடியினருக்கு எந்த காலேஜ்காரனும் (விவசாயக் கல்லூரி முகவர்கள் – கோவை வட்டாரத்தில் காலேஜ்காரன் என விளிப்பார்கள்) இவற்றை எல்லாம் சொல்லித் தரவில்லை.
வேதக் கோயிலும் விஞ்ஞானமும் :
----------------------------------------------------
வெள்ளையடித்த வேதக்  கோயில்களின் வரவு, உருளைக்குடி பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளி இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டாலும் புதிதாக வேதத்தில் சேர்ந்தவர்களிடம்  ஊரார் சற்று தள்ளியே இருந்திருக்கின்றனர். வெள்ளையர்கள் கொண்டு வந்த புகைவண்டியை பார்த்து மிரண்டு போய் அது எந்த நேரத்திலும் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் இருப்பதாக எண்ணி ஊரை காலி பண்ணிய செய்தியும் இந்த பெருங்கதையில் வருகிறது. வெள்ளையர்கள் கள்ளிச் செடியை அழிப்பதற்கு அந்து பூச்சியை கள்ளிச் செடியில் ஏற்றி ஒரு வருடத்தில் மொத்த கள்ளிச் செடியையும் காலி செய்கிறார்கள்.எனில் இவர்கள் நெல்லை என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மன்னராட்சி X மக்களாட்சி :
--------------------------------------------
கரிசல் இலக்கியம் என்றால் கட்டபொம்மன் இல்லாமலா என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளையர்கள் வருகிறார்கள். எட்டயபுரம் வெள்ளையர்களுக்கு பணிந்து விட்டது. பாஞ்சாலங்குறிச்சி முரண்டு பிடிக்கிறது. உருளைக்குடி எட்டயபுர ஜமீனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் மன்னரின் முடிவே மக்களின்  முடிவாக இருக்கிறது. அரண்மனை மீது அவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள். அரண்மனையும் மக்களை சீண்டுவதில்லை. ராஜ துரோக செயல்களுக்கு மட்டுமே அரண்மனை ஆட்கள் ஊருக்குள் வருகிறார்கள். கட்டபொம்மனுக்கு உதவி செய்த ஆசாரியும் பணியேறியும் அவர் கொடுத்த தங்கபரிசை புதைத்து வைத்து அனுபவிக்க முடியாமல் இரண்டு தலைமுறைகள் அழிந்து போகிறது. இந்த புதையல் விவரணை கொஞ்சம் அதிகமாக நீடித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.
குஞ்ஞான் எனும் மந்திரவாதி மன்னராட்சியின் வீழ்ச்சியை, சர்வாதிகார போக்கை, ஏக ஆதிபத்தியத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வருகிறான் என்றால் குப்பாண்டிச்சாமி மக்களாட்சியில் கேட்பாரற்று இந்த குமுகம் சீரழிந்து போகுமே என்று தன்னுடைய தீர்க்க தரிசனங்களை முன் வைக்கிறான். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடும் சூழல் மக்களாட்சியில் இருப்பதால் அது மன்னாராட்சியை விட பெரும்பாதகங்களையும் விளைவித்து விடுமே என அஞ்சுகிறான் குப்பாண்டிச் சாமி எனும் சித்தன்.
மக்களாட்சி அமைந்தவுடன் அதிகாரிகள் மகிழ்வண்டியில் வந்து போக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கண்மாய் கரையோரம் இருந்த பனைகளை  வெட்டுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் அனர்த்தங்கள்.பஞ்சாயத்து தலைவர் பொறம்போக்கு நிலத்தை தன் பெயரில் பட்டா போட்டு மடையை மாற்றி தன் நிலத்தில் நீரை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் ஓட்டைகள்.
மக்களாட்சி கண்மாயில் கிடந்த அயிரை,கெளுத்தி,விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் துவம்சம் செய்து விட்டு ஜிலேபி கெண்டையை இறக்குமதி செய்கிறது, நாளடைவில் கண்மாயில் நாட்டு மீன்கள் இல்லாது போய்விடுகிறது. நிழல் தரும் வேப்ப மரங்களை வெட்டி விட்டு பஞ்சாயத்து அலுவலகம் கட்டி வானொலிப் பெட்டியை வைத்து மக்களுக்கு உரம் போடுவது,மருந்தடிப்பது,டிராக்டர் வைத்து உழுவது என விவாசாயப் பாடம் நடத்தியது.
கரம்பை அடித்து, குப்பை அடித்து, உழுது, விதைத்து அறுவடை செய்து தற்சார்பாய் வாழ்ந்த ஒரு குமுகத்தை நுகர்வுப் பிராணிகளாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் கண்மாயின் உரிமையை பிடுங்கியதிலிருந்தே தொடங்குகிறது.
கோழியும் சேவலும் சேராமலே முட்டைகளை உருவாக்கி சாதனை என உருளைக்குடி மக்களை நம்ப வைத்தது மக்களாட்சி. “இன்றைக்கு கோழிகள் நாளைக்கு நீங்கள்”  என குப்பாண்டிச் சாமி சொல்கிறார். இன்றைக்கு தெருவெங்கும் மகப்பேறு மையங்கள்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண் – திருக்குறள்.
கண்மாயில் கிடந்த மணி நீர்(செம்புலப் பெயல் நீர்), வளமான மண்ணைக் கொண்ட வயல் வெளிகள், கொப்புலாயி, காட்டுப்பூச்சி போன்ற அறங்காவலர்கள் உருவாக்கிய நந்தவனங்கள்(அணிநிழற்காடு) மலை கொண்டு வந்து சேர்த்தும் பருவ மழை என இவைகள் தாம் உருளக்குடி எனும் குடியரசின் அரண்கள்.இப்படியான ஒரு குடியரசை நாம் காண இயலாது. தான் பார்த்து கேட்டு வாழ்ந்த குமுகத்தை கண் முன்னே காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.நூலின் பின்னட்டையில் ஜெயமோகன் இந்த நூல் ஆவணத் தன்மை கொண்டதல்ல என்று சொல்லியிருக்கிறார். என் பார்வையில் இந்த நூல் சர்வ நிச்சயமாக ஓர் ஆவண நூல் தான். இனி வரும் தலைமுறைக்கு கண்மாயும்,அதன் உயிரோட்டமும் அதனை ஒட்டி வாழ்ந்த மக்களின் வாழ்வியலை குமுக உறவுகளை உணர்ந்து கொள்ள சூல் – பெருங்கதை நல்லதொரு ஆவணமாக பயன்படும்.
மேலோட்டமாக பார்க்கின் மன்னராட்சியே தேவலாம் போல என்ற மாயை உருவாகும்.உண்மை என்னவெனில் உழைக்கும் உழுகுடிக்கு  மன்னராட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி விடிவு காலம் பிறக்கவே இல்லை. மன்னராட்சி நிலபிரபுத்துவ முறையில் உழுகுடிகளுக்கு சலுகை வழங்கி வந்தது என்றாலும் உழைப்பை திருடியது. மக்களாட்சி முதலாளித்துவத்திற்கு முகவராக உருமாறி உழுகுடிகளை சுரண்டி கொழுத்தது. இறுதியாக உழுகுடிகள் “அல்லும் பகலும் நிலத்திலே உழன்று கிடந்த உழவர்களின் நிலம்,அதிகாரம் சார்ந்தவர்களுக்கு கை மாறிய போதும் வெள்ளந்தியாய் உழைத்தே கிடந்திருக்கிறார்கள்” என ஏர் மகாராசன் பதிவு செய்கிறார். அப்படி ஒரு வெள்ளந்தி ஊரான  உருளைக்குடி எனும் குடியரசின் வாழ்வும் சாவும் தான் சூல் எனும் பெருங்கதை!
பார்வை நூல்கள் :
---------------------------
ஏறு தழுவுதல் – ஏர் மகாராசன்,
பண்பாட்டு அழகியலும் அரசியலும் –
ஏர் மகாராசன்,
மந்திரங்களும் சடங்குகளும் –
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
வரலாறும் வழக்காறும் -
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
பண்பாட்டு அசைவுகள் – பேரா.தொ.பரமசிவன் .

திங்கள், 20 மே, 2019

நந்திகிராம் பாசிஸ்ட்டுகள் சொல்கிறார்கள் பிரபாகரன் பாசிஸ்ட் என்று.. :- சிலம்புச் செல்வன்

நான் திமுக வினரை விமர்சனம் செய்து பதிவிட்டது யாருக்கு உறுத்துகிறதோ இல்லையோ சிபிஎம் மினருக்கு எரிகிறது. தோழர் முகமது சிராஜூதீன் என் பதிவிற்கு ஒரு கவிதை பின்னூட்டமிடுகிறார். என்னவென்று "பிரபாகரன் ஒரு நாய்" என்று...

            அவருக்கு எவ்வளவு காழ்ப்புணர்வு, வன்மம், குரூரம் இருந்தால் இப்படி எழுதுவார். ஒருவரை கொள்கை ரீதியாக தாக்குவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் தாக்குவது வேறு. சிராஜூதீன் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்.

         அவர் ஏற்கனவே "காத்தான்குடி இஸ்லாமியர் படுகொலை" குறித்து எழுதியபோதே பொதுவாக சிறு விமர்சனம் ஒன்றை நிலைத்தகவலாக பதிவு செய்தேன். அதற்கு மதுரை இரவிக்குமார் (ஸ்ரீ ரசா) பின்னூட்டம் ஒன்றை இட்டார். உங்களால் மறுக்க முடிந்தால் மறுங்கள் என்று எழுதியிருந்தார்.

              நான் அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றேன். காரணம் கம்யூனிச தோழமைச் சக்திகளை அளவுக்கு மீறி விமர்சனம் செய்வது சரியானதாக இருக்காது என்று நினைத்தேன்.

            என்னால் அதற்கு பதிலளிக்க முடியாமல் அல்ல. எதிரி பலமானவனாக இருக்கும் போது நாம் தோழமைச் சக்திகளுடன் விமர்சனம் என்ற பெயரில் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கருதியே.

         ஆனால் சிராஜூதீன் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு விமர்சனம் செய்துள்ளார். இனிமேலும் எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்தால் அது எங்களை நாங்களே இழிவு படுத்திக் கொள்வதாகும்.

           கொள்கை விமர்சனம் என்று வந்து விட்டால் நண்பன் எதிரி என்று நான் பார்ப்பதில்லை. எனக்கு சரி என்ற வகையிலேயே விமர்சனங்களை முன்வைப்பவன்.

           அவ் வகையிலேயே கூறுகிறேன் "பிரபாகரனை பாசிஸ்ட் " என்றும் 'நாய்' என்றும் கூறுகிற தகுதி சிபிஎம் முக்கு இருக்கிறதா? ஆர். எஸ்.எஸ் சுக்கு இணையாக இந்தியாவை காப்பாற்றத் துடிப்பவர்கள் பாசிஸ்டுகள் அல்லாமல் வேறென்ன?

          நந்திகிராம் படு கொலைகள்தான் சிபிஎம்மின் அரசு பாசிசத்தையும், கட்சி பாசிசத்தையும் ஒரு சேர வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பின்புதான் மேற்கு வங்கத்தில் சிபிஎம் தூக்கி எறியப்பட்டது. அதே பாசிசத்தனமான நடவடிக்கைதான் தமிழ்நாட்டிலும் சிபிஎம் செய்கிறது. என்ன கருத்தியல் பாசிசமாகவே இது பெரும்பாலும்  உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கார்தான் பிரபாகரனை நாய் என்கிறார். பாசிஸ்டுகள் எப்போதும் பிறரை பாசிஸ்ட்டுகள் என்பார்கள். அதன் தப்பாத பிரதிநிதியாக சிபிஎம் உள்ளது.

ஞாயிறு, 12 மே, 2019

சுளுந்தீ: மருத்துவ மரபணு கொண்டவரால் மட்டுமே தொகுக்க முடியும் :- சித்த மருத்துவர் கீதா.

அருமையான எழுத்துக்கோர்வை....
எழுவதற்கு மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்...
எதை ஈர்க்கிறோமோ அதை அடைய முடியும்...
என் தேடலில் உங்க நாவலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு....
சின்ன சின்ன விடயங்களை எவ்வளவு அழகாக கதையாக சொல்கிறீர்கள்...
இலக்கிய நயத்தோடு இடையிடேய வட்டார மொழியில்... வார்த்தைகளையும் நிறைய நுட்பங்களையும் இது நாவல் அல்ல ஆய்வுக்கட்டுரை போல உள்ளது....
சேராங்கொட்டையில் இருந்து சாயம் எடுக்கும் முறை அப்பப்பா வியந்து தான் போயிருக்கேன்....
புளியரையும் தேனும் சித்தரின் உணவு என்ன ஒரு ஆராய்ச்சி...
ஒரு மருத்துவ மரபணு மட்டுமே இப்படி தொகுக்க முடியும்...
குழித்தைலம் இறக்கும் முறை...
ராசபிளவைக்கு கருஞ்சித்திரமூல தைலம்... என்ன ஒரு மருத்துவ அறிவு...
வாழ்வியலாக மருத்துவம் பார்த்தவர்களுக்கே உரிய நடை....
கூடவே இனக்குழுக்களுக்கு நேரும் ஆபத்து...
முல்லை நில மக்களின் வாழ்வாதாரம் பற்றிய குறிப்பு நீண்டுகொண்டே போகிறது ஐயா...
விரைவில் புத்தக வாசிப்பை முடித்து விட்டு தொகுக்கிறேன் நன்றி....

தமிழர் சமூக வரலாற்று நெருப்பைக் காத்து நிற்கும் சுளுந்தீ :- வழக்கறிஞர் பா.அசோக்.


பொதுவாக நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை.
சுஜாதாவோடு அது மறந்து விட்டது.

சாருவையும் எஸ்ராவையும் படிக்கும் மனநிலை இப்போது ஏனோ வருவதில்லை. இத்தனைக்கும்
சாருவின் தீவிர வாசகன் நான்.

 ஒருகாலத்தில் அவருடைய பிளாக்கை காலையும் மாலையும் இரவு என மூன்று நேரமும் திறந்து பார்ப்பவன். சாருவின் பதிவுகள் வராவிட்டால் ஏதோ இழந்தது போலிருக்கும். பின்னர் அவருடைய அதீதமான self boasting என் மனநிலையை பிறழ வைத்து விடுமோ என பயமே வந்துவிட்டது. விக்கியும் கூகுளாண்டவரும் அவருக்கு நிறைய அருள் புரிந்துள்ளனர் என தெரிந்த பிறகு சாரு  பூசாரியை விடுவது இயல்பு தானே.

2017 இல் அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் கைகளில் இருந்ததால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தேன். வித்தியாசமான நாவல் பரபரப்பான ஆங்கில நாவல் மாதிரி வெகு இயல்பான சுயநல மனிதர்கள் வியாபார உத்திகள் என நகர்ந்தது.

பின்னர் Shankar A வினுடைய தொடர் நாவல். விறுவிறுப்பான ஒன்று.

மிக நீண்ட நாள் கழித்து
வழக்கறிஞர் Suthakaran Inthiran புண்ணியத்தால் இரண்டு மூன்று நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பரிந்துரை தவிர்த்து நான் தொட்டது பாலகுமாரனின் உடையார் ..
கைசுட்டது தான் மிச்சம்.
மீண்டும் தெனாலிராமனின் பூனையானது போலிருந்தது.

சுதாகரனிடம் நான் கேட்டது ஏர்மகராசனின் தமிழ் எழுத்துகள் பற்றிய நூல் ஒன்று. ஆனால் அவர் தருவித்தது

     சுளுந்தீ.

புத்தகம் வந்த இரண்டு மூன்று நாட்கள் வாசிக்கவேயில்லை . தமிழ் இந்து.. Lakshmi Gopinathan ஆகியோரின் நூல் விமர்சனங்கள் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

நேற்று வீட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். அதன் பிறகு கீழே வைக்கவில்லை.  வைக்க முடியவில்லை. எவ்வளவு செய்திகள். டாவின்சி கோடுக்கு பிறகு ஒரே நாளில் வாசித்த நூலிது.

பன்றி மலை சுவாமிகள் பற்றி செவிவழி  செய்திகள் தான் அறிந்துள்ளேன். இதில் அவரும் ஒரு பாத்திரம்.

அல்கெமி, அரபு நாடுகளின் வேதியல் வெளிப்பாடு என்றால் வெடியுப்பும் கந்தகமும் தமிழ் சித்த மருத்துவத்தின் பிள்ளைகள்.

பாஷாணம் எனும் விஷப்பொருளை மருந்தாக்க தெரிந்தவன் தமிழன்.

மேலை நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள் flora's and faunas களை தொகுக்கும்  போது ஒரு தமிழ் மருத்துவ சமுதாயத்தை சார்ந்த நபர் துணை நின்றது மறந்த வரலாறு. அவர் பெயரும் இராமன் என்றே நினைக்கிறேன்.

சுளுந்தீயில் தான் எத்தனை செய்திகள்..
தமிழ் இந்துவில் வந்த விமர்சனத்தில் தொ.பரமசிவன் நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல என எழுதியிருந்தார்கள்.

அதில் ஒரே ஒரு திருத்தம்

 தொ.பரமசிவனும் ஆ.சிவசுப்பிரமணியனும்
இணைந்து எழுதிய நாவல் என கண்டிருப்பதே சரி என்பது என் கருத்து.

வெங்கம்பய என்பது நம் காதுகளில் அவ்வப்போது விழும் வசைச்சொல் அதன் பொருள் புரியாமல் பலபேரும் பயன் படுத்தி வருகிறோம். இந்த நாவல் வாசித்த பிறகு தான் பொருள் தெரிந்தது.
Necrophilia என எதிராளிக்கு தெரிந்தால் நம் பாடு என்ன ஆகும்.

நிலவியல்.. வானியல்.. மருத்துவம் .. வேதியல்.. வாய்மொழி வரலாறு.. சாதிய வேறுபாடு .. போர்முறைகள்.. சமூக பொருளாதாரம் என எல்லா களங்களையும் தொட்டுவிட்டு போகிறார் நூலாசிரியர் இரா. முத்துநாகு.

நீ சிரைக்க தான் லாயக்கு என எவரையும் திட்டிவிட முடியாது. சிரைப்பதில் கூட எவ்வளவு நுணுக்கங்கள்.

உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நாவல்களில் ஒன்று. நாவல் படிப்பதில் ஒரு அறிவும் கிட்டாது அவை வெறும் உணர்ச்சி குவியல்களே என எண்ணும் என் போன்றவர்களின் கருத்தை சுக்கு நூறாக்கி விட்டுப்போன நூலிது.

காப்பியடித்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி நாவல் எழுதி அதையும் அரசியல் ரீதியாக புரமோட் செய்து  அகா "டம்மி " விருது வாங்குவோர் மத்தியில் தனது உச்சபட்ச உழைப்பை அறிவை கொட்டியிருக்கும் முத்துநாகுவின் அரும்பணி போற்றுதலுக்குரியது.

வாசித்துவிட்டோம் என வெறுமனே கடந்து போகமுடியவில்லை .
எத்தனை மரபார்ந்த அறிவை இழந்திருக்கிறோம் என்ற பெருஞ்சுமை மனதில் ஏறுகிறது.

மாடனின் குதிரையாகவே ...
நாவல் தந்த எண்ணங்களை சுமந்து அலைகிறது மனம்.

கொட்டும் மழையில் கூட அணையாது நிற்பது சுளுந்துக்குச்சியின் தீ.

காலமழை எத்தனை பெய்யினும்
தமிழர் சமூக வரலாற்று நெருப்பை காத்து நிற்கும் சுளுந்தீ.

வியாழன், 9 மே, 2019

சுளுந்தீ :அறிவுத்தீக்கான வரலாற்றுச் சித்த மருந்து. :- இலட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர்.

ஒரு நாவலிற்கான கருவையும் கதைக் களத்தையும் தேர்வு செய்தபின்னர் அந்த நாவல் முழு வடிவம் பெற்று வாசகனை அடைவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிற நாவல்.  சில நூல்களைத்தான் நாம் காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி எனக்குத் தோன்றிய நாவல் இது.

மதுரைக்கு அருகே உள்ள கன்னிவாடி கிராமமும் ஏனைய மதுரை மாவட்டத்தின் நிலப்பரப்பையும் அதைச் சுற்றிய வரலாற்றையும் பேசுகிறது இந்த நாவல். நாயக்கர் ஆட்சிக்காலம். மன்னருக்கு அடுத்தபடியாக குறுகிய எல்லையில் அதிகாரம் கொண்ட அரண்மனையாரின் ஆட்சியிலும், ஆட்சிக்காகவும் நடக்கும் சம்பவங்களே கதை.
சின்ன கதிரியப்ப நாயக்கரான அரண்மனையார், அந்த எல்லையில் வாழ்ந்து அங்குள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற சித்தர், அவரின் சீடராக வரும் நாவிதரும் பண்டுவருமான ராமன், அவரது மகன் மாடன், ராமனையும் மாடனையும் பழிவாங்கத் துடிக்கும் தளபதி, இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள்.

நாவலின் முதல் பகுதி ஒரு  சித்த மருத்துவக் களஞ்சியம். ராஜபிளவு எனச் சொல்லப் படுகிற நோயில் தொடங்கி, அறுந்த காதை ஒட்டவைக்கும் வைத்தியம், காது வளர்க்கும் வகை, பெண்களுக்கு வரும் பெரும்பாடு எனும் கரு சம்பந்தமான நோய், வெட்ட வாய்வு நோய், பசிப்பிணி, மூல நோய், ஓரண்ட வாயு எனும் ஆண்களுக்கு வரும் நோய், குழந்தை பிறப்பிற்கு என கிட்டத்தட்ட நம் சமகாலத்தில் நாம் சந்தித்து வரும் எல்லா நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகள் சித்தர் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் வாசிக்கும்போது நாம் ராமனாக மாறி சித்தருக்கு சீடராக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கித் தவிக்கிறது. சித்தர் பொடவிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் நம் மனமும் பொடவை பக்தியோடும் பணிவோடும் நோக்கி நிற்கிறது. நம் மருத்துவ அற்புதங்களைக் கொன்று புதைத்துவிட்டு மூக்கிலும் நரம்புகளிலும் ஊசிகளை சொருகிக் கொண்டு கை நிறைய பலவண்ண மாத்திரைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

சித்தர் சமாதியானதும் தான் ராமனின் கதை தொடங்குகிறது. சித்தரே ராமனை சீடனாக அறிவித்தாலும் கூட, பந்த பாசம் கொண்ட ராமனால் சித்தராக வாழ முடியவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. தனது மகனை எப்படியாவது அரண்மனைப் படையில் வீரனாக சேர்த்துவிட வேண்டும் என்பதே நாவிதரான ராமனின் கனவாக இருக்கிறது. ஆனால் பிறப்பால் நாவிதரான ராமனின் மகனால் அரண்மனை வீரனாக முடியவே முடியாது என்பதே யதார்த்தம். குலத்தொழிலே கட்டாயம். ஆனாலும் ராமன் தன் மகனை மிகச் சிறந்த வீரனாக வளர்க்கிறார். படைவீரனாகும் கனவையும் அவனுக்குள் விதைக்கிறார். அரண்மனையாரின் மிகுந்த மரியாதைக்குரியவராய் இருந்தும் ராமனால் தன் காலத்தில் தன் மகன் மாடனை அரண்மனை வீரனாக்க இயலவில்லை. அதே நேரம் தன்னுடைய குலத்தொழிலான நாவிதத்தின் நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் தன் மகனுக்குக் கற்றுத் தருகிறார் ராமன். இந்த இடத்தில் நாவிதத்தின் மகிமைகளை ராமன் சொல்லும்போது நம் சடங்குகளைப் பற்றிய பல செய்திகள் நமக்குத் தெரிய வருகிறது.

ராமன் திடீரென மறைந்துவிட மாடனை வீரன் கனவு துரத்துகிறது. ஒரு வீரனாவதற்காகவே வளர்க்கப்பட்டவனால் குடிமக்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் குழைந்து பிழைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நல்லவனாக இருந்தாலும் கூட, மாடன் ஊராறால் வெறுக்கப் பட்டு சதியால் கொலை செய்யப் படுகிறான். இதுதான் கதை.

இந்தக் கதைக் களத்தில் எத்தனை எத்தனை வார்த்தைகளுக்கான காரணங்களோடு கூடிய அர்த்தங்கள். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகளான ஈத்தரப்பய போன்ற வார்த்தைகளுக்கான பின்புலங்கள் தெரிய வரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. செந்தூரம் எனப்படுகிற பாஸ்பரஸ் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருந்து. அதிலிருந்து வெடி தயாரிக்கப்பட்டதால் வெடிமருந்து என்கிற பெயர் புழக்கத்திலிருக்கிறது என்கிற விளக்கம். என ஏகப்பட்ட நமக்கு அறியாத விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூல் முழுவதும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நம் சமூகம் கண்டு பயப்படும் சித்து வேலை, பில்லி சூனியம் ஆகியவற்றின் பின்னால் உள்ள சூட்குமங்கள் பற்றிய எளிய விளக்கங்கள் அந்தந்த கதை மாந்தர்களை வைத்தே விளக்கப் பட்டுள்ள விதம் மிக மிக அருமை. அதில் கொஞ்சம்கூட பகுத்தறிவின் பிரச்சார நெடி இல்லை.
நாவலின் இறுதிப் பகுதியை வாசிக்கையில் எங்கே நாம் சாப்பிட்டு வருவதற்குள் மாடனைக் கொன்று விடுவார்களோ என்கிற பதற்றத்தில் சாப்பிடக்கூட பொறுமையில்லாமல் பரபரவென வாசிக்க வைக்கிற கதையின் ஓட்டம்.
இது புதினமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து செய்திகளும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பதால் ஆசிரியரின் உழைப்பின் தீவிரம் நமக்குப் புரிகிறது. குலநீக்கம் என்பதின் பின்னால் உள்ள சூழ்ச்சி மற்றும் குல நீக்கம் செய்யப் பட்டுள்ளவர்களின் வேதனைகளையும் மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.
ஆனந்தா வருடப் பஞ்சம் பற்றிய பகுதி வரும்போது மனசு துக்கப் படத்தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் பஞ்ச காலத்தைப் பற்றி எழுதும்போதுகூட சோகத்தை எழுத்தில் வலிந்து திணிக்காமல் மிக மிக யதார்த்தமாய் பஞ்சத்தின் இயல்பையும் அதைக் கடந்து வர மக்கள் செய்த நடவடிக்கைகளையும் பஞ்சத்தைக் கடக்க கிணறு வெட்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகிற பூதம் புறப்பட்ட விதத்தையும் ஆசிரியர் எதியிருக்கிற விதம் நமக்கு வாழ்வின்  மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. முழுமையாக எழுதினால் சுளுந்தீ பற்றிய விமர்சன நூலே எழுதலாம். ஆசிரியர் திரு.முத்து நாகு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வி,பி.பி.யில் வரவழைத்து உதவிய அன்புத் தம்பி சுதாகருக்கு அன்பும் நன்றியும்.

சுளுந்தீ - அறிவுத்தீக்கான வரலாற்று சித்த மருந்து.

சுளுந்தீ- நாவல்
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
VPPயில் புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 99948 80005-திரு.முரளி

புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

சுளுந்தீ : அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ! :- மூ.செல்வம்


மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
    முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
     இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
     கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது.  நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
     புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
    வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ  இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என்  வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
     நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
     சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
     கற்றது கடலளவு சொன்னது கையளவு!

மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.